பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -நான்காம் பாகம்-அத்தியாயம் 9

குலசேகரபாண்டின்
குலசேகரபாண்டின்

ஒரு அரிசோனன்

உறையூருக்குப் பதினைந்து கற்கள் மேற்கே

தாது, ஆடி 18 - ஜூலை 15, 1216

பீறிட்டுக்கொண்டு காவிரியில் சுழித்தோடும் வெள்ளத்தை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறான் மாறவர்மன். சோழர்களின் தென்மேற்குத் தலைநகராக விளங்கும் உறையூருக்கு பதினைந்து கற்கள் மேற்கில் காவிரியும் கொள்ளிடமும் பிரியும் இடத்தில் (தற்பொழுதைய முக்கொம்பு) ஒரு மணற்குன்றில் அமர்ந்து, சுழித்தோடும் வெள்ளத்தைத் தனது திட்டத்திற்குத் துணையாக எப்படி உபயோகிப்பது என எடைபோடுகிறான்.

அங்கு ஒரு துளி மழைகூட இல்லாதபோதிலும், எங்கோ குடகில் பெய்த மாரிக்கால மழை காவிரியில் கரைபுரண்டோடச் செய்த வெள்ளப்புனல், மதுரை மீனாட்சி அம்மனே அவனுக்கு அனுப்பி வைத்த வரப்பிரசாதம் என அவனது மனதுக்குத் தோன்றுகிறது. அவன் இதழ்களில் புன்னகை தவழ்கின்றது.

குலசேகரபாண்டின்
குலசேகரபாண்டின்

இப்பொழுது உறையூரை தான் தாக்கினால் வடக்கிலிருந்து சோழப் படைகள் உதவிக்கு வர இயலாது. எனவே, இயற்கையும் தன் பக்கம் சேர்ந்து செயல்படுகிறது என்பதை எண்ணும்போது அவனுக்கு மிகவும் மகிழ்வாக இருக்கிறது. பதினொரு ஆண்டுகளுக்கு முன்பட்ட அவமானத்திற்குப் பழி தீர்க்கும் பணி ஓரிரு நாள்களில் துவங்க உள்ளதை நினைத்தால் நெஞ்சு பூரிக்கிறது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தன் தமையனார் சடையவர்மன் குலசேகர பாண்டியனின் இறுதி மூச்சு நின்ற நிகழ்வையும், அச்சமயம் அவர்களுக்குள் நடந்த உரையாடலும் அவன் மனக்கண் முன்பு விரிகிறது…

…மதுரைக்கு ஏற்பட்ட சிறுமையை நினைத்து நினைத்து, அதைத் தடுக்க இயலாத நிலையில் தான் இருந்ததையும் எண்ணியெண்ணி, தன்னையே உருக்கிக்கொண்டான் குலசேகரபாண்டின். அதனால் அவன் உடல்நலம் நலிந்து குலைந்தது. பெயரளவுக்கு ஒருங்கிணைந்த பாண்டிநாட்டின் தலைவனாக இருந்தாலும், தன் தம்பியான மாறவர்மனிடமே எல்லாப் பொறுப்பையும் விட்டுவிட்டான். ஆனாலும், ஒரு விஷயத்தில் மட்டும் தன் முடிவை மாற்றிக்கொள்ளவே இல்லை.

சோழருடன் போருக்குச் செல்வது பற்றி ஒவ்வொரு முறை மாறவர்மன் கேட்கும்போதும், “மாறா, நான் உயிருடனிருக்கும் வரை மீண்டும் சோழருடன் போர் என்ற பேச்சுக்கே இடமில்லை. எனக்குப் பிறகு என்ன நடக்க வேண்டுமோ, அது நடந்துவிட்டுப் போகட்டும்!”  என்று மறுத்துச் சொல்லிவந்தான். மாறவர்மன் அதற்குமேல் பேச்சைத் தொடராமல் சென்று விடுவான்.

மனநலிவு உடலையும் உருக்கித் தள்ளவே, குலசேகரன் படுத்தபடுக்கையாகி விட்டான். அவன் உலகில் இருக்கப்போகும் நாள்கள் சிலதான் என்று மருத்துவரும் கெடு வைத்துவிட்டார்.  அச்சமயம் தமையனைப் பார்க்கச் சென்ற மாறவர்மன், வழக்கம்போலச் சோழருடன் போர் தொடுப்பது பற்றிக் கேட்கவே, வழக்கமாகச் சொல்லும் பதிலே குலசேகரனிடமிருந்து வந்தது.

குலசேகரனின் முடிவு நெருங்கிவிட்டது என்று மருத்துவர் அறிவித்ததாலும், தமையனின் பிடிவாதத்திற்குக் காரணம் அறிந்துகொள்ளவேண்டும் என்ற விருப்பத்தாலும், என்றும் பதில் பேசாமல் சென்றுவிடும் மாறவர்மன், அன்று மட்டும் வழக்கத்திற்கு மாறாக, “ஏன் இப்படியே சொல்லி வருகிறீர்கள் தமையனாரே?” என்று கேட்டான்.

இதுவரை தன்னுடைய முடிவை எதிர்த்துப் பேசாத அவன் அப்படிக் கேட்டதும், அவனைக் குலசேகரன் தன் படுக்கையின் அருகில் அழைத்தான். எழுந்து அமர முயற்சி செய்த குலசேகரனைத் தடுக்க முயன்றான் மாறவர்மன்.

மறுத்துத் தலையாட்டியபடி மீண்டும் எழுந்து உட்கார முனையவே, குலசேகரனை கவனமாக மஞ்சத்தின் தலையணைகளில் அமர்த்தினான் மாறவர்மன். எழுந்து உட்காருவதே குலசேகரனுக்கு பெருமுயற்சியாக இருந்தபடியால், மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.  ஒவ்வொரு சொல்லும் வெளிவருவதே சிரமமாகத்தான் இருந்தது.

குலசேகரன் மெல்லிய குரலில் பேசத் தொடங்கினான்: “உன் கேள்விக்குப் பதில் சொல்லும் தருணம் வந்துவிட்டது மாறா! நான் சிவபதம் எய்தும் நாள்களை எண்ணிக்கொண்டுதான் இருக்கிறேன். நீ கேட்காமலேயே, உன் வினாவுக்கு நானாகவே விடையளிப்பதாகத்தான் தீர்மானித்திருந்தேன். ஏதோ ஒரு தயக்கம், மனதுக்குள். நீயே கேட்டது எனது தயக்கத்தைப் போக்கி விட்டது.”

சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, மீண்டும் பேசத் தொடங்கினான். “மாறா! நான் அவசரப்பட்டு முடிவெடுத்துச் சோழர்களுடன் நடத்திய போரில் படுதோல்வியைத் தழுவியதோடு மட்டுமின்றி, மதுரைக்கு மீளா அவக்கேட்டையும் உண்டாக்கி விட்டேன். காலம் காலமாக நம் பாண்டிய மன்னர்கள் முடிசூடும் அரசாணி மண்டபம் அழிந்தது; மதுரை சூறையாடப்பட்டது; கழுதைகளால் உழப்பட்டது; எருக்கஞ்செடிகளாலும், முட்புதர்களாலும் சூழப்பட்டுக் களையிழந்தது. இதற்கெல்லாம் நான் ஒருவனே, என் அவசர புத்தியே காரணம்.  அத்துடன் பாண்டிய மாவீரர்களின் நன்மதிப்பையும் இழந்து தவிக்கிறேன். முதலில் ஒருமுறை என்னை நம்பிப் போரிட்டதால் மதுரைக்கு எக்கதி ஏற்பட்டது என்பது அவர்கள் அறியாத ஒன்றா? ஆகையால், இப்பொழுது நான் ஆணையிட்டால், எதை நம்பித் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போரிடுவார்கள்?

“மற்ற பாண்டி மன்னர்களையும், நாட்டையும் ஒருங்கிணைத்தது நானல்ல, எனது பெயரைச் சொல்லி மேற்கொண்ட உன் முயற்சிதான் அது. உன் சொல் வன்மைக்கும், வீரத்திற்கும், அவர்களுக்கு நீ விட்ட சவாலுக்கும்தான் கட்டுப்பட்டனர். ஒரு ஒப்புக்காகத்தான் நான் தலைவனாக்கப்பட்டேன் என்பதை அவர்களும் நன்கறிவர். பாண்டிநாட்டை நீதான் வழிநடத்தப்போகின்றாய், தலைமை தாங்கி நீதான் சோழர்பால் போர் தொடுக்கப் போகின்றாய் என்பதையும் அவர் அறிவர். உன் மீது அவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.”

தொடர்ந்து வந்த இருமல் குலசேகரனைக் குலுக்கி எடுத்தது. அவன் முதுகை ஆதரவாக நீவி விட்டான் மாறவர்மன். அவனைக் கையமர்த்திவிட்டு மேலே விளக்கினான் குலசேகரன்:

“நான் ஒப்புக்கொண்டிராவிட்டால் தலைமைப் பொறுப்பு நெல்லைப் பாண்டியனிடம்தான் சென்றிருக்கும். அவனும் என்னைப்போல் - என்னைப் போலென்ன, என்னை விட அவசரப்புத்திக்காரன். அவனது மூளை தலையிலில்லை, அவனது வாள் முனையில்தான் உள்ளது. உன்னிடமுள்ள தொலைநோக்கு அவனிடம் இல்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் அவன் உள்பட, அனைத்து மன்னரும் உன் திறமையை நன்கறிந்துகொண்டனர். எனக்குப் பிறகு உன்னைத்தான் தலைவனாகத் தேர்ந்தெடுப்பர். இதுவரை அமைதியாக இருந்து திறை செலுத்தியதால்தான் குலோத்துங்கனும் நம்மைத் தொந்தரவு செய்யாமல் விட்டு வைத்திருக்கிறான். மதுரைக்கு தான் ஏற்படுத்திய சேதத்தால் நாம் மனம் கலங்கிவிட்டோம் என்று தப்புக்கணக்குப் போட்டிருக்கிறான். நீ அவன் முன் நடத்திய நாடகத்தை நம்பி மயங்கி விட்டான். எனக்குப் பிறகும் நீ அடிபணிந்து திறை செலுத்துவாய் என்று பகற்கனாக் காண்கிறான். அதை நிறைவேற்றுவதுபோல நீயும் ஒவ்வொரு ஆண்டும் திறைப்பொருள்களுடன் கங்கைகொண்ட சோழபுரம் சென்று வருகிறாய்.

“மாறா! மதுரைக்கு ஏற்பட்ட சிறுமை என் நெஞ்சைச் சிறிது சிறிதாகக் கறையானாக அரித்து வருகிறது. நான் விடும் ஒவ்வொரு மூச்சிலும் என் உயிர் சிறிது சிறிதாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. என் நெஞ்சை எரிக்கும் அவமதிப்புக் கனல் என் உடலையும் உள்ளூரச் சுட்டெரித்துக் கருக்குகின்றது. தினமும் உயிரைக் கையில் பிடித்தவாறு, உன்னையும் தடுத்துவரும் காரணங்கள் இரண்டு. ஒன்று, பாண்டிய மன்னரின் நன்மதிப்பைப் பெற்று,
நீ அவர்தம் தலைவனாக வேண்டும். இரண்டு, சோழர்களை அடியோடழிக்கும் அளவுக்குப் படைகளையும், படைக்கலங்களையும் திரட்டி, மதுரையின் கோட்டைகொத்தளங்களைப் பலப்படுத்த வேண்டும். அதை எப்படிச் செவ்வனே செய்து வருகிறாய் என்ற தகவலும் எனக்கு வந்தவாறே உள்ளது. சொல்லு மாறா, சொல்லு. உன் திட்டம் எந்த அளவில் உள்ளது?” குலசேகரனின் குரலில் ஆவலும், நம்பிக்கையும் சேர்ந்து ஒலித்தன.

“அது நிறைவேறிச் சில திங்கள் ஆகிவிட்டன தமையனாரே! தங்களது அனுமதிக்குத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன்” மாறவர்மன் கணீரென்று பதிலிறுத்தான்.

குலசேகரனுக்கு மூச்சு வாங்கியது. களைப்பில் கண்கள் தாமாகவே மூடின. அவன் முகத்தில் பலவிதமான உணர்ச்சிகள் - துயரம், அவலம், கோபம், பச்சாதாபம், ஆற்றாமை என மாறிமாறித் தோன்றி மறைந்தன. கடைசியில் ஒருவிதமான நிம்மதி அவனை ஆட்கொண்டது. கண்களை மெதுவாகத் திறந்தான். அவற்றில் ஆனந்தக் கண்ணீர் பொங்கித் திரையிட்டது.

“மாறா! இன்னும் சில நாள்கள்தான் நீ காத்துக்கொள்ள வேண்டியிருக்கும். மருத்துவர் எனக்குத் தெரியாது என எண்ணுகிறார். எனது மூச்சுகளின் எண்ணிக்கை மிகக் குறைவு என எனக்கு நன்றாகவே தெரியும். அதனாலேயே, தொண்டிக்குச் சென்றிருந்த உன்னை அவசரமாகச் செய்தி சொல்லி அழைத்திருக்கிறார் என்பதையும் அறிவேன். எனவே, நெல்லைப்பாண்டியன் உட்பட அனைவருக்கும் உடனே செய்தி அனுப்பியுள்ளேன். எனக்குப் பிறகு நீயே ஒருங்கிணைந்த பாண்டிநாட்டின் தலைவன் ஆக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளேன். அதற்கு அனைவரிடமிருந்து ஒப்புதலும் வந்துவிட்டது. கண்ணை மூடுவதற்குள் உனக்கு முடிசூட்டிப் பார்த்துவிட விரும்புகின்றேன். உனது பட்டப்பெயரையும் நீயே தேர்ந்தெடுத்துக்கொள்.  முடிசூட்டிய மறுகணத்திலிருந்து உன் விருப்பப்படி போர் முரசம் கொட்ட ஆரம்பிக்கலாம்.  தடையேதுமில்லை. கடைசியாக நீ எனக்கு உதவியொன்று செய்ய வேண்டும்!” அதற்குமேல் அவனால் பேச இயலவில்லை.

“ஆணையிடுங்கள் தமையனாரே! எதுவானாலும் நிறைவேற்றுகிறேன்!” கரகரப்புடன் பதிலளித்தான் மாறவர்மன்.

“எங்கு திருநங்கைகளை விட்டு, பாண்டிய அரசுக்குக் கொடும்பாவி கட்டி எரியூட்டினார்களோ, அதே இடத்தில் எனது இறுதிச் சடங்குகளைச் செய்து, என் உளுத்த உடலுக்கு எரியூட்டு.  மதுரைக்கு என்னால் நேர்ந்த அவமதிப்பு ஒருவிதத்தில் துடைக்கப்படட்டும். மறுக்காமல் இதைச் செய். அதற்குமுன், என் நெஞ்சில் நெருப்பை வைக்குமுன், குலோத்துங்கன் உனக்கு அளித்த வாளால் என் நெஞ்சைக் கீறி, வீர சுவர்க்கம் செல்ல வழிவகுத்துக் கொடு!26 இதைச் செய்யாவிட்டால் என் நெஞ்சு வேகாது. கோழைகள் செல்லும் கடைநரகத்தைத்தான் நான் அடைவேனடா!” உருக்கத்துடன் வேண்டினான் குலசேகரன். அவனது விரல்கள் மாறவர்மனின் கையை இறுகப் பற்றிக்கொண்டன.

தன்னுள் பொங்கியெழுந்த உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு, “உங்கள் விருப்பப்படியே அனைத்தும் நடந்தேறும்” என உணர்ச்சியற்ற குரலில் பதிலளித்தான் மாறவர்மன்.

குலசேகரனின் கண்கள் மலர்ந்தன. முகத்தில் நிம்மதி கலந்த மகிழ்ச்சி நிலவியது. அவனது விரல்கள் மெல்லத் தளர்ந்து நழுவின. அவனது இறுதி மூச்சும் வெளியேறியது.

காலடிச் சத்தம் கேட்டுத் திரும்புகிறான் மாறவர்மன். செந்தில்நாதன் அவனருகில் வந்து நிற்கிறான்.

“அரசே! மாலை மயங்கும் நேரமாகிவிட்டது. நீங்கள் தன்னந்தனியாக எத்தனை பொழுதைத்தான் கழிப்பீர்கள்? இன்னும் ஒரு நாழிகைக்குள் உணவருந்தப் பாசறைக்குச் செல்ல வேண்டுமே!”

“வருகிறேன் செந்தில் வருகிறேன். நன்கு உணவுண்டால்தானே பகைவர்களைத் தாக்கியழிக்கும் தெம்பு உண்டாகும்! இன்னும் சிறிது நேரம் என்னைத் தனிமையில் இருக்க விடு” என்று கையை அசைக்கிறான்.

“தங்களது தனிமைக்கு ஊறு வராது அந்த மரத்தடியில் காத்திருக்கிறேன் அரசே! தாங்கள் ஆயத்தமாகும்போது என்னை அழையுங்கள்!” என்று செல்கிறான் செந்தில்நாதன்.

------------------------------------

[26. ஔவையார், அதியமானை குறித்துப் பாடிய வரிகளில், “அவனுடைய படையை எதிர்த்து நிற்க அஞ்சிய பகை அரசர் நோய்வாய்ப்பட்டு இறந்தபோது, போரில் வாளால் விழுப்புண் ஏற்று இறக்காத குற்றம் நீங்குவதற்காக, நான்மறை கற்ற அந்தணர் அவரை தருப்பைப் புல்லில் கிடந்தி, வாள்முனையால் கீறி அப்பழி நீங்கச்செய்வர்” என்று குறிப்பிட்டிருக்கிறது.  இங்கு குலசேகரன் அதையே குறிப்பிடுவதாகப் புனைந்துள்ளது. 

‘தார்காங்குதலு மாற்றார் வெடிபட் டொடன் மரீஇய பீடின் மன்னர்

நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக் காதன் மறந்தவர் தீதுமருங் கறுமார்

அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புற் பரப்பினர் கிடப்பி

மறங்கந்தாக நல்லமர் வீழ்ந்த நீள்கழன் மறவர் செல்விழிச் செல்கென

வாள்போழ்ந் தடக்கலு முய்ந்தனர் மாதோ’]

எப்போதும் தன்னை அவன் கண்ணிலிருந்து மறைய விடமாட்டான் என்பதை நன்கறிந்த மாறவர்மன் மனதுக்குள் சிரித்துக்கொள்கிறான். அவன் மனம் தன் தமையனின் மறைவுக்குப் பிறகு நடந்த நிகழ்ச்சிகளுக்குத் திரும்புகிறது…

ற்ற பாண்டிய மன்னர்கள் எவ்வளவு வற்புறுத்தியும் மாறவர்மன் முடிசூட மறுத்துவிட்டான்.

“மதுரைக்கு இழைக்கப்பட்ட அநீதி துடைக்கப்பட்டு, நம் பரம்பரைச் சொத்து மீட்கப்படும் வரை மதுரையில் பாண்டிய மன்னனாக முடிசூட என் மனம் ஒப்பவில்லை. அது பாண்டிநாட்டுக்கும், மதுரைக்கும் இழைக்கும் துரோகமாகவே நான் கருதுகிறேன்.”

“மாறா, நீ சொல்வது வியப்பாக உள்ளது. இதுவரை மதுரைக்கு மன்னன் இல்லாமல் இருந்ததே இல்லை. மன்னனில்லாத தலைநகர் கைம்பெண்ணுக்கு நிகரல்லவா? நீ இப்படிச் சொன்னால் எப்படி? ஒருங்கிணைந்த பாண்டிநாட்டுக்கு உன்னைத் தலைவனாக்க விருப்பம் தெரிவித்திருந்தார் மூத்த தமையனார். நாங்கள் அனைவரும் அதற்குச் சம்மதித்து ஒப்புதலும் அளித்துள்ளோம். நீ தகராறு செய்வது சரியல்ல. எங்களுக்காக இல்லாவிடினும், நமது தமையனாரின் விருப்பத்தினை நிறைவேற்றவாவது நீ முடிசூடத்தான் வேண்டும்” என்று நெல்லைப்பாண்டியன் வறுபுறுத்தியதை மற்றவரும் ஆமோதித்தனர்.

“தமையனாரே! உடன்பிறப்புகளே! தங்கள் யாரையும் நான் மறுத்துப்பேசவில்லை. ஒருங்கிணைந்த பாண்டிநாட்டுப் பாதுகாப்புத் தலைமைப் பொறுப்பேற்று, பாண்டிநாட்டின் படைகளை நடத்திச் செல்லும் படைத்தலைவனாக, மதுரைக்குக் காவலனாகப் பணியாற்றச் சம்மதிக்கிறேன். இவை அனைத்தையும் முடிபுனையாமலே செய்கிறேன். நமது பரம்பரைச் சொத்து நம் வசமானவுடனேயே பாண்டிய மன்னனாக முடிசூடுவேன். மதுரைக்கும் மன்னனாவேன். அப்பொழுது ஒரு பட்டத்தையும் சூட்டிக்கொள்வேன். இல்லையேல், அம்முயற்சியில் என் உயிரைப் பாண்டிமண்ணுக்கு அர்ப்பணிப்பேன். அதுவரை, நெல்லைத் தமையனாரை மதுரை மன்னராக இருக்கும்படி தாள்பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.”

மாறவர்மனின் உருக்கமான, உறுதியான வேண்டுதலைப் புறக்கணிக்க எவருக்கும் மனம் வரவில்லை. ஒரு எளிமையான நிகழ்ச்சியில் மதுரை மன்னராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் நெல்லைப்பாண்டியர்.

குலசேகரனின் இறுதிச் சடங்குகள் முடிந்த கையுடன் படையெடுப்புக்கான திட்டத்தில் தீவிரமாக இறங்கினான் மாறவர்மன். எதிலும் இரகசியமாகச் செயல்படுவதே தலையான ஒன்றாக மதிக்கப்பட்டது. எனவே, படை வீரர்களுக்கோ, சிறிய படைத் தலைவர்களுக்கோ திட்டத்தைப் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவே இல்லை. சிறிது சிறிதாக, சிறு சிறு குழுக்களாக, படைவீரர்கள் இரவில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு மாற்றப்பட்டனர். நெல்லைப்படை கடற்கரை ஓரமாகவே தொண்டி வரை நடத்திச் செல்லப்பட்டது. நெல்லைப்படை தொண்டி வந்து சேருவதற்கு முன்னதாகவே, தொண்டியிலுள்ள படைகள் கடற்கரை ஓரமாகவே நாவாய்களில் திருமறைக்காட்டை (வேதாரண்யம்) வந்தடைந்தன.

திருமறைக்காடு சோழநாட்டின் பகுதியானதால், ஊர் மக்கள் கண்ணில் படாமல் இரவோடிரவாக வந்துசேரப் பெருமுயற்சி எடுத்துக்கொள்ளப்பட்டது.

அங்கிருந்த சோழப்படைகள் நாகைப்பட்டினத்திற்குத் தகவல் அனுப்பு முன்னரே, அவர்களில் பெரும்பாலோர் தாக்கிக் கொல்லப்பட்டனர். மற்றவர் சிறைப்பிடிக்கப்பட்டனர். இரவில் தாக்குதலை எதிர்பார்க்காததால், எண்ணிக்கையில் மிகவும் குறைந்த சோழப்படைகள், பாண்டிய வீரர்களின் ஆவேசமான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க இயலவில்லை.

இப்படி நடந்த முதல் கைகலப்பை நடத்திச்சென்ற மாறவர்மனின் தலைமை, பாண்டிவீரர்களுக்கு வீராவேசத்தையும் உற்சாகத்தையும் கொடுத்தது.

பொங்கிவரும் ஆற்று வெள்ளத்தால் கரையிலிருக்கும் மரங்கள் வீழ்வதுபோல, தாக்குதலை எதிர்நோக்காத சோழப்படை அழிந்து ஒழிந்தது.

வெற்றி பெற்ற பாண்டிய வீரர்களை திருமறைக்காட்டில் ஓய்வெடுக்க விட்டுவிட்டுப் பொன்னமராவதியை நோக்கி விரைந்தான் மாறவர்மன். அதற்குள் மதுரைப்படை அங்கு வந்திருந்தது.

அதேசமயம், பொன்னமராவதிப் படை மாறவர்மனின் திட்டப்படி உறையூரை அடைந்து அரைவட்டமாகச் சூழ்ந்துகொண்டன.27

கடந்த நான்கு ஆண்டுகளாகச் சோழ ஒற்றர் குழாமை ஊடுருவி வந்த பாண்டிய ஒற்றர், பாண்டியப் படைகளின் நடமாட்டம் தெரியாதவாறு பார்த்துக்கொண்டனர்.

இதற்குள் குடகில் பெய்த பருவமழை, காவிரியில் வெள்ளத்தை அதிகரிக்கவே, உறையூர் தனிமைப்பட்டது. தாங்கள் தனிமைப்பட்டதைக்கூட உறையூரிலிருந்த சோழப் படை அறிந்துகொள்ளவில்லை. ஏனெனில், உறையூருக்கு வந்து போகவேண்டிய போக்குவரத்து இடையூறின்றி நடந்து வந்ததே அதற்குக் காரணம்.

உறையூரிலிருந்து வெளியே சென்ற சோழர்கள், பாண்டியரால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.  அவருக்குப் பதிலாக பாண்டியர் மாறுவேடமணிந்து உட்புகுந்தனர்.

அவர்கள் கொண்டுவந்த வண்டிகளில் நிறைய படைக்கலன்கள், ஆயுதங்கள் மறைத்துக் கொண்டுவரப்பட்டன. உறையூரில் திட்டமிட்ட இடங்களில் அவற்றை மறைத்துவைத்து, வணிகர் போல ஊர் நிலவரங்களைப் பற்றிய செய்தியைப் பாண்டியப் படைத்தலைவர்கள் மாறவர்மனுக்கு ஒற்றர் மூலம் அனுப்பி வந்தனர்.

உறையூர் மக்களும், அங்கு தண்டூன்றியிருந்த சோழப் படைகளும் தங்களைச் சுற்றிச் சுருக்குக் கயிறு இறுகுவதை அறியாமலே இருந்து வந்தனர்.

இதே நிலைதான் தஞ்சையிலும் நிலவியது. தொண்டிக்கு வந்த நெல்லைப்பாண்டிய சேனை, திருமறைக்காடு விழுந்துவிட்ட செய்தி கிட்டியடவுடனேயே தஞ்சைக்கு விரைந்தது. மேற்குப் பகுதியைத் தவிர, மற்ற எல்லாப் பகுதிகளிலும் தஞ்சை பாண்டியப் படையால் சுற்றி வளைக்கப்பட்டது. உறையூரைப் போல தஞ்சைக்குள்ளும் வணிகர் வேடத்தில் பாண்டியர் நுழைந்து விட்டனர். ஆனால், ‘உறையூரையும் தஞ்சையையும் தாக்க வேண்டாம், காத்திருக்கவும்’ என்று மாறவர்மனிடமிருந்து வந்த உத்திரவுதான் அனைவரையும் குழப்பியது. போர்த்தந்திரம் அறிந்த மாறவர்மனின் சொல்லுக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கக்கூடும் என்றுணர்ந்த நெல்லைப் பாண்டியர், தஞ்சைப் பாசறையில் காத்திருந்தார்…

…இனி, திட்டத்தை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று மனதுக்குள் பலமுறை நினைவுபடுத்திக்கொண்ட மாறவர்மன், எழுந்து பாசறையை நோக்கி நடக்கிறான். அவனுடன் சேர்ந்துகொள்கிறான் செந்தில்நாதன்.

உறையூருக்குப் பதினைந்து கற்கள் மேற்கே

தாது, ஆடி 20 - ஜூலை 23, 1216

புன்னகை மலர்கிறது மாறவர்மனின் முகத்தில். உறையூரிலிருந்து வந்த பாண்டிய ஒற்றர்கள் கொணர்ந்த செய்தி, அவன் எதிர்பார்த்ததற்கும் மேலாக, அவர்களுக்குச் சாதகமாகவே அமைந்திருக்கிறது. கோட்டை வாயில்களில் பாண்டிய வீரர்கள் அவனது ஆணையை எதிர்பார்த்து மறைந்துள்ளனர். நகரின் உள்ளேயும் இரண்டாயிரம் வீரர்கள் குழப்பம் விளைவிக்கச் சித்தமாக உள்ளனர் என்று வணிகர் வேடம் பூண்டுவந்த ஒற்றர்கள் தெரிவிக்கிறார்கள்.

---------------------------------------------------

[27. போர் நடக்கும் முறை முற்றிலும் கற்பனையே. போரின் விளைவுகள் மட்டுமே வரலாற்றைத் தழுவி எழுதப்பட்டுள்ளது. படைகள் களைப்படையா வண்ணம், அவற்றுக்கு ஓய்வு கொடுத்து நடத்திச்செல்லும் திறனையும், முன்னேற்பாடும் திட்டம் தீட்டி மாறவர்மன் செயல்படுத்தவதாகவும் காண்பிக்கப்பட்டுள்ளது.]

காவிரியில் வெள்ளப்பெருக்கும் உச்சநிலையை அடைந்துள்ளது. கொள்ளிடத்திலும் வெள்ளம் அளவு கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை மாறவர்மன், தானே நேரில் கண்டு வந்திருக்கிறான்.

அங்கு மணற்குன்றில் அமர்ந்துதான் தாக்குதலை எப்படி நடத்துவது என்று மனதில் திட்டம் தீட்டியதுடன், எவ்வப்போது என்னென்ன செய்ய வேண்டும், எம்மாதிரித் தாக்குதலை நடத்த வேண்டும் என்று படைத்தலைவர்களுக்கு ஆணையும் பிறப்பித்திருக்கிறான். அவர்களும் இரவோடிரவாகத் தத்தம் பாசறைகளுக்குச் சென்று, ஆயத்தமாக இருப்பதாகச் செய்தியும் அனுப்பியுள்ளனர்.

இரவுச் சாமங்கள் மூன்று கழிகின்றன. தாக்குதலைத் துவங்க ஆணை பிறப்பிக்கிறான் மாறவர்மன். உடனே, பாசறைக்கு வடக்கில் அரைகல் தொலைவிலிருக்கும் இரண்டு மொட்டைப் பனை மரங்களுக்கு நெருப்பு பற்றவைக்கப்படுகிறது. அந்தச் சைகைக்காக உறையூரில் காத்திருக்கும் பாண்டிய வீரர்கள், பனை மர நெருப்பைக் கண்டு தாங்கள் தங்கியிருக்கும் குடிசைக்குத் தீயிடுகின்றனர்.

எண்ணெயூற்றிய, எளிதில் எரியக்கூடிய குப்பை குடிசைக்குள் குமிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொன்றாகக் கிட்டத்தட்ட நூறு குடிசைகள் எரியூட்டப்படுகின்றன. தீ செந்நிற நாக்குகளை நீட்டிக் கொழுந்துவிட்டு எரிந்து, அருகிலிருக்கும் குடிசைகள், கட்டடங்களில் பற்றிக் கொள்கின்றது. இதைக் கண்டு, உறையூரை நோக்கி நடைபோடுகிறது பாண்டியப் படை.  மாறவர்மன் தன் படையை மேற்கிலிருந்து கிழக்காக நகர்த்துகிறான். குடிசைகள் எரிவதால் ஏற்படும் கண்ணைக்கூசும் ஒளியும், குழப்பமும், கூக்குரலும் பாண்டியப்படை உறையூரை அணுகுவதை அறியாவண்ணம் மறைக்கிறது.

உறையூரைச் சுற்றி வளைத்த பாண்டிய வில்லாளர், நெருப்பூட்டிய அம்புகளை கோட்டை மதிலைத் தாண்டிச் செல்லும்படி எய்கிறார்கள். உள்ளே செல்லும் அம்புகள் குழப்பத்தையும், உயிர்சேதத்தையும் விளைவிக்கின்றன. போதாததற்கு, எரியும் அம்புகள் புதிதாகத் தீப்பற்ற வைத்துப் பரப்புகின்றன. குடிசைகள் வீடுகளில் பற்றிக்கொண்டு எரியும் தீ, பீதியை விளைவிக்கிறது. தீ அம்புகள் வரும் என்பதை முன்னமேயே அறிந்திருந்த உறையூரிலிருக்கும் பாண்டிய வீரர்கள் பாதுகாப்பான இடங்களில் பதுங்கி விடுகின்றனர்.

ஒரு நாழிகைக்குப் பிறகு, தீ அம்புகளின் தாக்குதல் நின்றுபோகிறது. மக்கள் அச்சத்துடன் பதுங்கிய இடங்களிலிருந்து வெளிவந்து இங்குமங்கும் அலைகிறார்கள். தங்கள் சொத்துகளைப் பாதுகாக்க மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறுகிறார்கள்.

இதைப் பயன்படுத்த, வணிக வேடம் அணிந்த பாண்டிய வீரர்கள், படைக்கலன்கள் உள்ள மூட்டைகளுடன் கோட்டை வாயிலுக்கு அருகிலும், காவல் மாடங்கள் இருக்கும் இடங்களுக்கும் செல்லுகின்றனர்.

சோழ வீரர்களின் கவனம், உறையூரின் உள்ளே எரியும் தீயில் இருப்பதால், பாண்டியப் படையின் யானைகள் முன்னேறி வருவது கோட்டைக் காவலர்களுக்குத் தெரியாமல் போய்விடுகிறது. பீப்பாய் பீப்பாயாகச் சாராயத்தை உறிஞ்சிக் குடித்திருந்த யானைகள், புயல் வேகத்தில் முன்னேறுகின்றன. அவற்றின் மத்தகத்தில் உலோகத்தால் செய்யப்பட்ட, கூரிய குழிழ்கள் பதித்த தகடுகள் கட்டப்பட்டிருக்கின்றன.

தாக்கும்போது வலி தெரியாமலிருக்க, வைக்கோல் வைத்துத் தைத்த மெல்லிய மெத்தை இரும்புத் தகடுக்கும், யானையின் மத்தகத்திற்கும் இடையே கட்டப்பட்டுள்ளது. அம்பாரியும் மெல்லிய இரும்புத் தகடுகளினாலேயே செய்யப்பட்டிருக்கிறது. அம்பாரிக்கு உள்ளே அமர்ந்திருக்கும் வில்லாளர்கள் சிறிய ஓட்டைகளிலிருந்து அம்புகளை எய்ய ஆயத்தமாகின்றனர். ஈட்டி எறியும் வீரர்கள் அம்பாரிக்குப் பின்னர் மறைந்திருக்கின்றனர்.

இதற்கிடையில், கோட்டையினுள்ளே இருக்கும் பாண்டியர்கள், கோட்டை வாயிற் காப்போர்களைத் தாக்கி வீழ்த்துகின்றனர். சோழர்கள் அகழிப் பாலத்தை உயர்த்திவிடாது தடுப்பதே அவர்தம் நோக்கம். அடுத்தடுத்து வந்த பாண்டிய வீரர்கள் அகழிப் பாலத்தை உயர்த்தும் பொறிகளைத் தாக்கி உடைப்பதில் தங்கள் உயிரைக் கொடுத்தும் வெற்றி பெறுகின்றனர்.

சில யானைகள் தங்கள் துதிக்கைகளில் பெரும் இரும்பு உலக்கைகளை ஏந்தி வருகின்றன.  வந்த வேகத்தில் உலக்கைகளால் கோட்டைக் கதவுகளை இடிக்கின்றன. எந்த இடத்தில் இடித்தால் கோட்டைக் கதவுகளுக்கு அதிகச் சேதம் விளைவிக்கலாம் என்று ஒற்றர் மூலம் தகவல் வந்திருந்ததால், யானைப் பாகர்கள் அந்த இடங்களை தங்கள் யானைகளை உலக்கைகளால் இடிக்கச் செய்கிறார்கள்.

இடிக்கும் வேகத்திலும், வலிமையிலும் கோட்டைக் கதவுகள் அதிருகின்றன. இடித்த மறுகணம் அந்த யானைகள் திரும்புகின்றன. அவற்றின் பின்னல் வரும் யானைகள் தம் உலக்கையால் இடிக்கின்றன. இப்படிப்பட்ட தாக்குதலை எதிர்பார்க்காததால், சோழர்கள் முன்னதாகவே, கோட்டைக் கதவுகளுக்கு எல்லாத் தாழ்ப்பாள்களையும் போட்டு, கதவைப் பலப்படுத்திக்கொள்ள இயலவில்லை. அதனால், யானைகளின் தாக்குதலைத் தாங்க இயலாது, கோட்டைக் கதவுகள் உடையத் தொடங்குகின்றன.

செந்தில்நாதன்
செந்தில்நாதன்

உடைத்த கதவை வீழ்த்திய யானைகள் உட்புகுந்த வேகத்திற்கு எதிராக எவராலும் எதிர்த்து நிற்க இயலவில்லை. அவற்றின் காலில் மிதிபட்டும், உலக்கைகளால் அடிபட்டு இறப்பவரும், படுகாயமுறுவோரும் ஏராளம், ஏராளம்.

யானைகளின் பின்னால் பாண்டியக் குதிரை வீரர்கள் தங்கள் கைகளில் ஈட்டிகளையும் வாள்களையும் ஏந்திக்கொண்டு உட்புகுகிறார்கள். அவர்கள் அமர்ந்து வரும் குதிரைகள், அரபு நாட்டிலிருந்து இறக்குமதியானவை. ஆகவே, நாட்டுக் குதிரைகளை விட உயரமாகவும், விரைந்தும் செயலாற்றுகின்றன. இவர்களை எதிர்த்துப் போரிடும் கோட்டைக் காவலர்களூம், ஏனைய சோழ வீரரும் எமனுலகுக்கு அனுப்பப்படுகிறார்கள். இரவில் நடக்கும் இத்தாக்குதல் யாரால், ஏன் எதற்கு நடக்கிறது என்று தெரியாமல் உறையூர் மக்கள் குழம்பித் தவிக்கின்றனர்.

விழித்தெழும் சோழப் படைத்தலைவர்கள், வீரர்களை ஒருங்கிணைத்து எதிர்த் தாக்குதலை அமைப்பதற்குள் கதிரவன் கிழக்கில் உதிக்கிறான். வெளியில் ஆயிரக்கணக்கான குதிரை வீரர்களும், காலாட்களும் அணிவகுத்து நிற்கிறார்கள். ஆங்காங்கு மீனக்கொடிகள் பறக்கின்றன. தலைமைதாங்கி நிற்கும் மாறவர்மனைச் சுற்றி அவனது மெய்காப்பாளர்களின் முதல்வனான செந்தில்நாதனும் மற்ற படைத்தலைவர்களும் குதிரையில் அமர்ந்திருக்கின்றனர்.

உறையூரிலிருந்து புகைமண்டலம் கிளம்பி விண்ணை முட்டும் காட்சியை மாறவர்மன் கண்டு இரசிக்கிறான். அவனது நினைவில் பதினொரு ஆண்டுகளுக்கு முன் தான் கண்டு மனம் வெதும்பிய, மதுரையிலிருந்து கிளம்பிய புகை மண்டலத்தின் காட்சி நினைவுக்கு வருகிறது. அவன் முகம் சினத்தில் சிவந்து துடிக்கிறது.

உரத்த குரலில் தன் படைத்தலைவர்களிடம் கூறுகிறான்: “இதுவரை நாம் ஆவலுடன் எதிர்நோக்கிய தருணம் வந்திருக்கிறது. இன்று மாலைக்குள் உறையூரில் நமது மீனக்கொடி பறக்க வேண்டும். அதற்குப் பிறகு உங்களது முதல் வேலை உறையூரிலிருக்கும் அனைத்து அரசு மாளிகைகள், கட்டடங்கள், அரசு அதிகாரிகளின் வீடுகள் இவையனைத்தையும் இடித்துத் தள்ளுவதுதான். இதை எதிர்க்கும் எவரையும் வெட்டிச் சாயுங்கள். உறையூர் எரிந்து கருக வேண்டும். மதுரை பட்ட சிறுமைக்கு முதல் பலி, உறையூராக விளங்க வேண்டும்.  கரிகாலன் காலத்திலிருந்து சோழர்களின் தலைநகராகச் சிறப்புடன் செயல்பட்ட கோழியூரான இந்த உறையூர் இனிமேல் தலைதூக்கக்கூடாது. சோழர்களால் திரும்ப எழுப்ப இயலாத அளவுக்கு உறையூரைச் சிதைக்க வேண்டும். உறையூர் அழிந்தால் சோழர் குலமே அழிந்துபோகும். உறையூருக்கு நாம் கொடுக்கப்போகும் இந்த அடி, சோழருக்கு நாம் கொடுக்கும் முதல் மரண அடியாக விழ வேண்டும்.

“ஆனால், கோவில்கள் பள்ளிகள், தொழிற்கூடங்கள், மறை ஓதும் இடங்கள் இவற்றை விட்டு விடுக! முதியோர், பெண்டிர், சிறுவர், மறையோர், ஓதுவார், தமிழாசிரியர், உழவர் - இவர்களுக்குத் தீங்கிழைக்காதீர். கைவினைஞர்களான கருமார், கொல்லர், தச்சர், சிற்பிகள், கொத்தர் முதலானோரையும், அவர்தம் குடும்பத்தோருக்கும் பாதுகாப்புக் கொடுத்துத் தனிமைப்படுத்துக. அவர்களைத் துன்புறுத்த வேண்டா. அவர்கள் அனைவரும் பாண்டிநாட்டுக்குக் குடியேறி பாண்டிநாட்டின் முன்னேற்றத்திற்காக வியர்வை சிந்தி உழைக்க வேண்டும்.”

அவன் சொற்களை ஆமோதித்துத் தலையாட்டி வீரக்குரல் கொடுக்கின்றனர் படைத் தலைவர்கள்.

“புறமுதுகுக் காட்டி ஓடுகின்றார் எனக் கருணை காட்ட வேண்டா. அப்படி ஓடுபவர் மீண்டு வந்து நம்மைத் தாக்கும் வாய்ப்புள்ளது. எனவே, அவரைத் துரத்திப் பிடித்து, போரிடச் செய்து, எமனுலகுக்கு அனுப்புக. படுகாயமுற்றோரையும், ஊனமுற்றோரையும் விட்டுவிடுக. அவர்கள் பிழைத்தாலும், நம்மைத் தாக்க இயலாது. சோழப்படைத் தலைவர் எவரும் உயிர் தப்பக் கூடாது. தலை இருந்தால்தான் உடல் செயல்படும். ஆகவே, அவர்களைப் பிடித்து, பாண்டிநாட்டுக்கு எதிராகச் செயல்பட்டார் என மக்கள் முன் அறிவித்த பின், அவர்தம் தலைகள் பொதுமேடையில் துண்டிக்கப்படவேண்டும். எத்தனைக்கெத்தனை படைத்தலைவர் பிடிக்கப்பட்டு மக்கள் முன் தண்டிக்கப்படுகின்றார்களோ, அத்தனைக்கத்தனை உறையூரின் வீரம் மண்ணோடு மண்ணாகும்.

“சுருங்கச் சொன்னால், உறையூர் போர் முடிந்தபின் போரிட ஒரு சோழ வீரனும் இருக்கக்கூடாது. வெற்றி நமதே! மதுரை மீனாட்சியை நினைத்துக்கொள்க! அவளது அருள் நமக்கு இருக்கிறது. வீராங்கனையான அவள் நம் வாளில் அமர்ந்து அனைவரையும் சின்னாபின்னமாக்குவாள். வெல்வோம்! எதிரியின் குருதியைப் பெருக்குவோம். அதில் நீராடி மதுரைக்கு ஏற்பட்ட களங்கத்திற்கு பரிகாரம் தேடுவோம். பாண்டியர் பொங்கி எழுந்தால் எவரும் எதிர்கொள்ள இயலாது என்று இந்தப் பாருக்குப் புரிய வைப்போம். போர்!  போர்!!  போர்!!!” என்று முழங்குகிறான் மாறவர்மன்.

அவனது வலது கரம் உயர்த்திப் பிடித்த குலோத்துங்கன் கொடுத்த வாளில், உதிக்கும் கதிரவனின் செஞ்சாந்துக் கதிர் பட்டு குருதி படிந்தாற்போன்ற தோற்றத்தை உண்டாக்குகிறது.

அவனது உயர்ந்த வாள் போர் தொடங்குகிறது என்பதை அறிவிக்கவே, போர் முரசம் ஒலிக்கிறது. குதிரைகள் விரைந்து உறையூரை நோக்கிப் பாய்கின்றன. காலாட்படை அவற்றின் பின் ஓடுகின்றது.

பல மாதங்களாகத் திட்டமிட்டு, எங்கே எப்படித் தாக்க வேன்டும் என முடிவெடுத்து, அதன்படி வெறித்தனமாகத் தாக்கிச் செயல்படுத்தும் பாண்டியர் முன் சோழர்களின் எதிர்ப்பு, பொங்கிவரும் கடலலையைத் தடுக்கக் கட்டப்படும் மணல் சுவராகக் கரைத்து போகிறது.

மூன்று பக்கம் பாண்டியரும், நான்காவது பக்கம் சுழித்தோடும் காவிரி வெள்ளத்தாலும் தடுக்கப்பட்ட சோழ வீரர்களுக்கு எண்ணிக்கையில் அதிகமாக உள்ள பாண்டியர் கையால் மடிவதைத் தவிர, வேறு வழியேதும் கிட்டவில்லை.

நன்கு தூங்கியெழுந்து, போருக்கு ஆயத்தமாகக் கவசமும், கேடயமும் அணிந்து - யானை, குதிரைப் படைகளின் உதவியுடன், உற்சாகமாகப் பழி தீர்க்கும் வெறியுடன் போரிடும் பாண்டிய வீரர்களுக்கு முன், தூக்கக் கலக்கத்தில் திடுக்கிட்டு எழுந்து குழப்பத்துடன் போரிடத் துவங்கும் சோழ வீரர்களுக்குக் களத்தில் வீழ்வதுதான் பரிசாகக் கிடைக்கிறது.

மாறவர்மன் எல்லா இடங்களிலும் சோழ வீரர்கள் முன் தென்படுகிறான். அவனது அரபு நாட்டுக் கருப்புக் குதிரையின் முகத்திலும், கால்களிலும் தாக்குதலிலிருந்து பாதுகாக்கப்படுவதற்காக இலேசான தகடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அக்குதிரை உதைத்துத் தள்ளிக் கீழே விழுந்து காயமுற்றவரின் எண்ணிக்கையும் அதிகம். ஒரு குதிரை இப்படிப் போரிடுவதை எதிரிகள் கண்டு வியந்ததால், மாறவர்மன் காலனைப் போலத்தான் சோழர்கள் கண்ணில் தென்படுகிறான். அவனது போர்த்திறமையைக் கண்ட பாண்டியருக்குப் புத்துணர்வு பீரிட்டெழுகிறது. பொழுது சாய்வதற்குள் மாறவர்மனின் வாளுக்குப் பல நூறு பேர் பலியாகின்றனர். சுருங்கச் சொன்னால் உறையூரில் நடப்பது போராக இல்லை, படுகொலையாகத்தான் தோன்றுகிறது.

வெல்லப்பட இயலாதவர்கள் - போரில் பசுவுக்கு முன் உள்ள பசியெடுத்த புலியைப் போன்றவர்கள் - தோல்வியின் வாயிலிருந்து வெற்றியைத் தோண்டி எடுப்பவர் என்று பெயரெடுத்த சோழ வீரர்கள் சரியான எதிர்ப்பு எதையும் காட்டாமல் படுதோல்வியைத் தழுவுவது பண்டிய வீரருக்கு மதுவுண்ட மயக்க வெறியை ஏற்றுகிறது. மிகுந்த வெறியுடனும், அதனால் ஏற்பட்ட புய வலிமையுடனும் வாளைச் சுழற்றிச் சுழற்றிப் போரிடுகின்றனர்.

சோழர்கள்தம் தலைகள் நெற்கதிர்களாக அறுவடையாகின்றன. உறையூர் வீதிகளில் எடுத்த குருதிப் பெருக்கு வழிந்தோடி காவிரி வெள்ளத்தில் கலக்கிறது. இதற்கிடையில் யானைகள் தம் துதிக்கைகளில் பிடித்திருக்கும் பெரிய உலக்கைகளாலும், கூரிய இரும்புக் குமிழ்கள் கட்டப்பட்ட மத்தகங்களாலும் மாளிகைகளை இடித்துத் தள்ளுகின்றன. எங்கும் போரொலியும், புழுதியும், புகையும் உறையூரைச் சூழ்ந்து மறைக்கின்றன.

கள்ளருந்துபவன் போல இந்நிகழ்ச்சியைக் கண்களால் மாந்தி மயங்கிக் கிறங்கி நிற்கும் மாறவர்மன் முன்பு திமிறிக்கொண்டே வரும் ஒரு மறையவரைப் பாண்டிய வீரர்கள் இழுத்து வருகின்றனர்.

“என்ன இது? மறையவர்களை ஒன்றும் செய்யக்கூடாது என்று சொல்லியிருக்கிறேனே! ஏன் இவரைத் துன்புறுத்தி இழுத்து வருகிறீகள்?” என்று சினத்துடன் அதட்டுகிறான் மாறவர்மன்.

“அரசே! இவர் ஒரு சோழ அரசு அதிகாரி. இவர் மாளிகையைத் தகர்க்க முயன்றபோது எங்களை வாளெடுத்து எதிர்க்க முற்பட்டார். அதை ஒரே தட்டாகத் தட்டிவிட்டு, இவரை இழுத்து வந்தோம். அங்கேயே இவரை எமனுலகுக்கு அனுப்பியிருப்போம். இவர் மறையவராக இருப்பதால், தகுந்த தண்டனையைத் தாங்களே கொடுக்க வேண்டும் என்று இங்கு இழுத்து வந்தோம்” என்று பதில் வருகிறது.

அந்த மறையவரை மாறவர்மன் உற்று விழித்து நோக்குகிறான். மறையவரும் அவனது பார்வையைத் தயங்காமல் சந்திக்கிறார். இதைக்கண்டு படை வீரர்கள் மலைக்கிறார்கள்.  மாறவர்மன் பார்வையைச் சந்திக்கும் துணிவு இதுவரை யாருக்கும் இருந்ததில்லை.  மறையவர் கதி, அதோகதிதான் என முடிவுகட்டுகின்றனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, மாறவர்மன் இதழ்களில் இலேசான புன்னகை மலர்கிறது.

“மறையவரே! உமது வீரம் எனக்குப் பிடித்திருக்கிறது. எம்மைக் கண்டு அஞ்சி நடுங்கி ஓடாமல், எமது பார்வையை நேருக்கு நேர் சந்திக்கும் துணிவுமிக்க ஒருவர் இந்தப் பழம்பெரும் சோழத் தலைநகரான உறையூரில் இருப்பது எமக்கு மகிழ்ச்சியே! நீர் ஒரு சோழ அதிகாரி என்பதால் எமது வீரர்கள் உம் மாளிகையைத் தகர்க்க முற்பட்டிருக்கிறார்கள். அது போகட்டும். எம்மைக் கண்டு அச்சம் கொள்ளாது, யாம் சந்தித்த முதல் சோழ வீரரான உமது உயிருக்கு எம்மால் ஆபத்து வராது. நீர் யார்? தயங்காமல் பதில் கூறும்.”

மாறவர்மனின் வினா கோடையிடியாக ஒலிக்கிறது. அவனது பெரிய சிவந்த விழிகள் மறைவரின் இதயத்தை ஊடுருவிப் பிளக்க முயல்கிறது.

தாம் மாறவர்மனை பார்க்கும் பார்வையைச் சற்றும் தளர்த்தாமல், “நான் குலோத்துங்க சோழரின் தமிழ்க்காரியஸ்தன். சோழவள நாட்டில் தமிழை வளர்ப்பது எனக்கு அளிக்கப்பட்ட பணி. எனவேதான் நான் சோழ அதிகாரிக்கான மாளிகையில் சில நாள்களாகத் தங்கியுள்ளேன். எனவே, அதைக் காக்கும் கடமையும் எனக்கிருக்கிறது” என்று அமைதியான குரலில் பதில் சொல்கிறார் அம்மறையவர் - நீலகண்ட தீட்சிதர்.

***

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com