பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு - பிற்சேர்க்கை - 1

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு - பிற்சேர்க்கை - 1

ஈஸ்வரனின் வீடு

ஈஸ்வர, ஆடி 19 - ஆகஸ்ட் 10, 2417

னைவரும் கல்லாய்ச் சமைந்து அமர்ந்திருக்கின்றனர். ஈஸ்வரனின் முன்னால் தங்கச்சுருள் விரிக்கப்பட்டுக் கிடக்கிறது. மேலே தொடர்ந்து படிக்க ஒன்றும் இல்லை. கிட்டத்தட்ட முந்நூறு ஆண்டுகளாகப் பலராலும் எழுதப்பட்டிருந்த தமிழின் வரலாறு ஆயிரத்துநூறு ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென்று நிறுத்தப்பட்டிருக்கிறது. அதற்கான காரணத்தையும் அதிலேயே கடைசியாகப் பதிந்துவிட்டுப் போயிருந்தார் சதாசிவ சாஸ்திரி.

கங்கைகொண்ட சோழபுரத்தில் பெருவுடையார் கோவில் இரகசிய அறையில் வைத்துவிட்டு, அதற்குச் செல்லும் வழியையும் சூழ்ச்சிப்பொறிமூலம் (booby-trap) அழிக்கப்போவதாகவும், இறைவன்தான் பிரிந்துசெல்லும் மூவரின் வழித்தோன்றல்கள் ஒன்றுசேரும்போது தங்கச்சுருள் கிடைக்க அருள்புரிய வேண்டும் என்றும், அவர்கள் பிற்காலத்தில் ஒருவரையொருவர் அறிந்துகொள்வதற்காகக் செல்லாமல் ஆக்கிய சோழப்பேரரசின் இலச்சினையைக் கொடுத்தாகவும் எழுதியிருந்தவர், அது எப்படியிருக்கும் என்று குறிப்பிட்டிருந்ததும் ஈஸ்வரனைத் திடுக்கிட வைக்கிறது.

தன் கழுத்தில் தொங்கும் பதக்கத்தை எடுத்துப்பார்க்கிறான். இது… இது… சோழப்பேரரசின் இலச்சினை அல்லவா?! அப்படியென்றால்? அப்படியென்றால்? தான் சிவாச்சாரிய பிரம்மராயரின் வழித்தோன்றலா?! அவனது நெஞ்சு விம்முகிறது. தன் முன்னோர் முந்நூறு ஆண்டுகளாகப் பதிவு செய்த தங்கச்சுருளையல்லவா இறைவன் தங்கள் கையில் சேர்த்திருக்கிறான்?!

அப்படிச் சேர்த்த இறைவன், மற்ற இருவரையும் கட்டாயம் ஒன்று சேர்த்திருக்கத்தானே வேண்டும்? எங்கோ பிறந்து வளர்ந்து வந்த அரசகுமாரியின் வழிவந்த நிமிஷாவும் அல்லவா தங்களுடன் வந்து இணைந்திருக்கிறாள்! இறுதியில், பிரம்மராயரின் அவா - அவரது பரம்பரையும், வங்க அரசகுமாரி மினோத்தியின் பரம்பரையும் இணைய வேண்டும் என்ற அவா, தன்-நிமிஷாவின் திருமணத்தின் மூலமாகத்தானே நிறைவேறியிருக்கிறது!

அழகேசன் பக்கம் திரும்பிய ஈஸ்வரன், “அழகேசண்ணா, நமக்கு இந்தத் தங்கச்சுருள் கிடைச்சதோ, நம் முன்னோர் விடாப்பிடியாய் நமக்குத் தமிழ் கற்றுக்கொடுத்ததோ, நீங்கள், நான், ஏகாம்பரம் மூவரும் ஒன்றுசேர்ந்து இக்குழலைக் கண்டு, சுருளில் எழுதியிருப்பதைப் படித்தறிந்ததோ - தற்செயலான நிகழ்வு என்று நினைக்க முடியலை. என் கழுத்திலிருப்பது சோழப்பேரரசின் இலச்சினை. அதில் சந்தேகமே இல்லை. சுருளில் எழுதியிருக்கும் விளக்கப்படிதான் என் பதக்கம் அமைந்துள்ளது” என்று பரப்பரப்புடன் கூறுகிறான்.

சொல்லமுடியாத பெருமிதம் அவன் முகத்தில் ஒளிர்கிறது.

ஆவலுடன், “உங்கள் கையில் கட்டியிருப்பது பாண்டிய மெய்காப்பாளரின் தாயத்து என்றுதான் நினைக்கிறேன். கடவுள்தான் நம்மைத் தஞ்ஜூ என்ற தஞ்சையில் இணைத்திருக்கிறார். தமிழன்னைதான் அவளது வரலாறு அடங்கிய தங்கச்சுருளை நிலமகளின் நடுக்கத்தின் உதவியுடன் நம் கண்ணில் காட்டிச் சேர்ப்பித்திருக்கிறாள். ஆகவே, உங்களிடமும், காமாட்சி அல்லது ஏகாம்பரத்திடமும் என்னிடம் இருப்பதைப் போன்ற ஒரு வட்டவடிவமான இலச்சினை உள்ளதா என்று சோதனை செய்து பாருங்கள்” என்று உற்சாகத்துடன் கேட்கிறான். ஆர்வமும் தொனிக்கிறது.

தலையைச் சொறிந்துகொண்ட அழகேசன் ஒன்றும் சொல்லாமல் எழுந்து சென்றுவிடுகிறான்.  மற்றவர்கள் அவனது செய்கைக்கு விளக்கம் தெரியாது திகைக்கிறார்கள்.

காமாட்சியின் நெற்றியில் கேள்விக்கோடுகள் எழுகின்றன. அவளும் எழுந்து செல்கிறாள்.

“ஈஸ்வரண்ணா, நீங்க என்ன கேட்டீங்கன்னு இவங்க ரெண்டு பேரும் எழுந்து போறாங்க?” என ஏகாம்பரம் வினவுகிறான்.

“தெரியலை ஏகாம்பரம்; ஏதோ முக்கியமான விஷயத்துக்குத்தான்னு நினைக்கறேன்.”

ஏகாம்பரநாதன் எழுந்து வந்து தங்கச்சுருளை மெல்லத் தடவிப்பார்க்கிறான். அவன் முகத்தில் அமைதி கலந்த பரவசம் தாண்டவமாடுகிறது.

“அண்ணா, இந்தச் சுருளை கருவூர்த்தேவர், ராஜராஜச் சக்ரவர்த்தி, சிவாச்சாரிய பிரம்மராயர் - இப்படி எத்தனை பேர் தொட்டிருக்காங்க! என்னவெல்லாம் கனவு கண்டிருப்பாங்க? கடைசீல அவங்க கனவெல்லாம் கலைஞ்சு போயி, தமிழ்நாட்டிலேயே தமிழை யாரும் பேசாமப்போயி, தமிழைப் பேசறக் கொஞ்ச பேரும் எடுபிடிகளா ஆயுடுவாங்கன்னு அவங்க நினைச்சாவது பார்த்திருப்பாங்களா? அதை நினைச்சுப் பார்த்தாத்தான் ரொம்ப வருத்தமா இருக்கு.”

அவன் குரல் கம்முகிறது.

“தமிழ் என் தாய்மொழி இல்லதான். ஆனா, இந்தச் சுருள்ல எழுதியிருக்கறதை நீங்க படிச்சுக் கேட்டதும் எனக்கே என்னவோ மாதிரி இருக்கு. ஒரு பெரிய சாம்ராஜ்ஜியமே அண்ணன்-தம்பி சண்டையால இருபது வருசங்களில் அழிஞ்சுபோச்சே” என்று நிமிஷா, ஏகாம்பரநாதனின் மனவோட்டத்தைப் பகிர்ந்துகொள்கிறாள்.

இவர்கள் பேசுவதைக் கேட்டு, ஈஸ்வரனின் தந்தை சங்கரன் மேல் துண்டால் தன் கலங்கிய கண்களைத் துடைத்துக்கொள்கிறார். அவர்களின் பேச்சில் கலந்துகொள்ளாவிடினும், ஈஸ்வரன் படித்து வந்த தமிழின் வரலாற்றை, அதன் திருப்பணி தேய்ந்து மறைந்த கதையைக் கேட்டுத்தான் வந்திருக்கிறார். பெரியதொரு பரம்பரையில் தான் பிறந்திருப்பது அவருக்குப் பெருமையாகத்தான் உள்ளது. ஆனால், வரலாற்றைத் தெரிந்துகொண்டு இவர்கள் என்னதான் செய்யப்போகிறார்கள் என்பதை நினைத்தால் உள்ளத்தில் வருத்தமும் தோன்றுகிறது.

அவர்களது ஆற்றாமையை இந்த வரலாறு இன்னும் பெரிதாக்கிவிடாமல் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொள்கிறார்.

அழுக்கடைந்த துணியினால் இறுகக் கட்டப்பட்ட முடிச்சை அழகேசன் எடுத்து வருகிறான்.  அவர்கள் முன் அமர்ந்து நிதானமாகத் தன்னிடமுள்ள கத்தியை எடுத்து, அந்த முடிச்சின் துணியைக் கிழித்தெடுக்கிறான். அதன் உள்ளே பளபளப்பான பதக்கம் தென்படுகிறது.

ஒன்றும் பேசமால் அதை ஈஸ்வரன் முன்பு வைக்கிறான்.

அதைப் பார்த்த மற்றவரின் கண்கள் பெரிதாக விரிகின்றன. தன் மார்பில் தொங்கும் பதக்கத்துடன் அதை ஒப்பிட்ட ஈஸ்வரன், பொங்கும் மகிழ்ச்சியுடன் அழகேசனின் கழுத்தைக் கட்டிக்கொள்கிறான்.

“அழகேசண்ணா, இறைவன் நம்மை ஒன்றுசேர்த்துவிட்டார். நீங்கள் பாண்டிய மெய்காப்பாளர் வழிவந்தவர்தான். இது சோழ இலச்சினைதான். இது எங்கே கிடைச்சுது?”  ஈஸ்வரனின் உற்சாகம் அனைவரையும் தொற்றிக்கொள்கிறது.

“இது என் அரைஞாண் கயித்துல கட்டியிருந்தது. என்னோட ஆத்தாதான், ‘அளகு, இது நம்மைக் காப்பத்தற தெய்வப் பதக்கமுடா! இது ஒன் இடுப்பில இருக்கறவரை ஒனக்கு எந்தக் கொறச்சலும் வராதுடா’ அப்படீன்னு எங்கிட்ட அடிக்கடி சொல்லுவாங்க. ஒரொரு தபா சண்டைக்குப் போறத்துக்கு முன்னாலயும் இந்தத் துணிக்கட்டைத் தடவிப் பாத்துக்குவேன்.  ஒடம்புல வெறி ஏறும். சண்டை போடறதுக்குன்னே பொறந்தவன்னு என் மனசுல தோணும். என்னை யாராலும் தோக்கடிக்க முடியாதுன்னு மனசுக்குள்ளே சொல்லிப்பேன். அப்பறம், என்னை எதுத்து எவன் சண்டைபோட்டாலும், அவன்பாடு திண்டாட்டம்தான்!” என்று அழகேசன் பெருமிதத்துடன் கூறுகிறான்.

“நல்லவேளையா ஞாபகம் வந்துச்சு, இதைப் பாருங்க!” என்றபடி காமாட்சி அங்கு வேகமாக வருகிறாள். அவள் கையில் சிவப்புக் கயிற்றில் கோர்த்த கருப்பான வட்டப் பட்டயம் இருக்கிறது.

அதை ஈஸ்வரனிடன் நீட்டியபடி, “இதுல ஒரு மந்திர சக்தி இருக்குதுன்னு எங்க அப்பா ஏகாம்பரம் கழுத்தில கட்டிவிட்டாரு. உடம்பு சரியில்லாம இருந்த அவனை, நிமிசா வீட்டுக்குக் கூட்டி வந்தப்ப, கயிறு அறுந்துபோச்சு. அதுனால, அதை எடுத்துப் பத்திரப்படுத்தி வைச்சேன். நிமிசா எங்களைக் கூட்டிவந்துட்டா. எல்லாம் மாறிப்போச்சு; எனக்கும் இதைப் பத்தின நெனப்பும் மறந்துபோச்சு. இதைப்பார்த்து என்னான்னு சொல்லுங்க” என்கிறாள் காமாட்சி.

ஈஸ்வரன் அதை வாங்கிப் புரட்டிப் பார்க்கிறான். அந்த வட்டப் பட்டயத்தின் மேலே மெல்லிய வெள்ளித் தகடு சுற்றப்பட்டிருக்கிறது. நாள்பட்டுக் கன்னங் கருப்பாகியிருக்கிறது.  நாள்களென்ன, ஏன் பல ஆண்டுகளாக அப்படியே விடப்பட்டதால் கறை ஏறியிருக்கிறது.

“அழகேசண்ணா, இந்தத் தகட்டை எடுக்க முடியுமான்னு பாருங்க.  உள்ளே இருக்கறது என்னதான்னு பார்த்துடுவோம்” என்று அதை அழகேசனிடம் கொடுக்கிறான் ஈஸ்வரன். ஆவல் அனைவரின் மூச்சையும் நிறுத்தி விடுகிறது.

கத்தியை எடுத்து, வெள்ளித் தகட்டை வெட்டியெடுத்து, உள்ளே இருப்பதைப் பார்த்த அழகேசனின் பெரிய கண்கள் இன்னும் பெரிதாக விரிகின்றன.

“ஈஸ்வரா, இதுவும் நம்ம பதக்கம் மாதிரித்தான் இருக்கு” என்று அவனிடம் நீட்டுகிறான்.

“அப்படியா!” அனைவரும் ஒரே குரலில் வியப்பொலி எழுப்புகின்றனர்.

“அதேதான்! சந்தேகமே இல்லை. இதுவும் சோழ இலச்சினையே! விதிதான் நம் மூன்று குடும்பங்களையும் இணைத்துள்ளது. நாம் இணைந்தவுடன், தங்கச்சுருள் அடங்கிய குழலைக் கடவுளே நமக்கு அளித்திருக்கிறார்!” என்று உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும், வியப்புடனும் கூறுகிறான்.

“அதுக்கு என்ன அர்த்தம்? கடவுள் நம்மகிட்ட கொடுத்தாரு. நாம எல்லா விசயத்தையும் தெரிஞ்சுக்கிட்டோம். மேல என்ன செய்யப்போறோம்?” என்ற கேள்வியை ஏகாம்பரநாதன் எழுப்புகிறான்.

“நல்ல கேள்வியைத்தான் கேக்கறே, ஏகாம்பரம். அதுக்கு என்ன பதிலை உடனே சொல்லறதுன்னு எனக்குத் தெரியலை.  நாம எல்லோரும் சேர்ந்து அதைப் பத்திப் பேசுவோம்.  அப்பா, நீங்களும் கலந்துக்குங்க” என்று ஈஸ்வரன், சங்கரனை அழைக்கிறான்.

“ஈஸ்வரா, நானும் எல்லாத்தையும் கேட்டுகிட்டுத்தான் இருந்தேன். இது கனவா, இல்லே நனவானு நம்பமுடியல. என்னையே ஒரு தடவை கிள்ளிப் பார்த்துட்டுத்தான், இது நிஜமாவே நடக்குதுங்கற முடிவுக்கு வந்தேன். நீங்க இப்ப உற்சாகத்துல இருந்தாலும், களைச்சுப் போயிருக்கீங்க. போயி ஓய்வெடுத்துக்குங்க. நாளைக்குக் குளிச்சுச் சாப்பிட்டுட்டு, நிதானமாப் பேசுவோம்” என்று அனுப்புகிறார் சங்கரன்.

மனதே இல்லாமல் ஒருவர் பின் ஒருவராகச் செல்கிறார்கள். சங்கரனும் பலவிதமான எண்ணங்களுடன் தன் வேலையைக் கவனிக்கச் செல்கிறார்.

ஈஸ்வரனின் வீடு

ஈஸ்வர, ஆடி 20 - ஆகஸ்ட் 10, 2417

வலுடன் காலையில் வீட்டு வாசலில் இருக்கும் மர நிழலில் அனைவரும் மீண்டும் அமர்கின்றனர். சங்கரனும் அவரது மனைவி பெரியநாயகியும்கூட அவர்களுடனேயே அமர்ந்திருக்கிறார்கள். இனிய தென்றல் வீசுகிறது. சற்றுத்தள்ளி, கன்றுடன் ஒரு பசுவும் இன்னொரு மர நிழலில் அசைபோட்டுக்கொண்டிருக்கின்றன. தூரத்தில் ஒரு அக்காக்குருவி ஓரிரு முறை ‘அக்கோவ், அக்கோவ்’ என்று கூவுகிறது.

சங்கரன்தான் பேச்சை ஆரம்பிக்கிறார்: “தங்கச்சுருளில் எழுதியிருந்ததை ஈஸ்வரன் படிச்சதை உங்களுடன் சேர்ந்து நானும் கேட்டேன். நீங்கள் நினைப்பதுபோல இது முக்கியமான இறை நிகழ்ச்சி என்றுதான் எண்ணுகிறேன். நமக்கோ நிறைய நேரம் இருக்கிறது. ஒவ்வொருவரும் உங்கள் மனதிலிருப்பதைச் சொல்லுங்கள்.”

முதலில் ஏகாம்பரநாதன் கையைத் தூக்குகிறான்.

“தமிழைப் பரப்பரத்துக்கு ஆதரவு கிடைக்காதுன்னு ஆயிரத்துநூறு வருசத்துக்கு முன்னால, இந்தத் தங்கச்சுருளை மறைச்சு வச்சுட்டாங்க. அதுக்கப்பறம் என்ன ஆச்சு?  நாம ‘எடுபிடி’யா எப்படி ஏன் ஆனோம்? யாருக்காவது தெரியுமா?”

அவனது கேள்வியில் ஏக்கம் தொனிக்கிறது.

“எனக்கு ஸ்கூல்ல இருநூறு வருஷம் முன்னாலேந்து நடந்ததத்தான் சொல்லிக் கொடுத்தாங்க. ‘எம்பது வருஷங்களுக்கு முன்னாலதான் எடுபிடிச் சட்டம் கொண்டு வந்தாங்க. அப்பத்தான் இந்தி தெரியாம தமிழ் மட்டுமே பேசறவங்களுக்கு டிரான்ஸ்லேட்டரைக் கொடுத்து எடுபிடி ஆக்கினாங்க’னு சொல்லித் தந்தாங்க. அவ்வளவுதான். வேற ஒண்ணும் எனக்குத் தெரியாது” என்று உண்மையை உடைத்துச் சொல்கிறாள் நிமிஷா.

“எங்க தாத்தாவுக்குத் தாத்தா நூறு வயசு இருந்தார்னு சொல்லுவாங்க. வாலிபனா வளர்ற வரைக்கும் அவரைப் பார்த்திருக்கேன். அவர் சின்னப்பையனா இருந்தபோது டிரான்ஸ்லேட்டரே கிடையாதுன்னு சொல்லியிருக்காரு. ‘எங்கிட்டோ ஆறாயிரம் மைலுக்கு அப்பால ஒரு சின்னத் தீவுல இருந்து வந்த வெள்ளைக்காரங்க நம்ம நாட்டை ஆட்சி செஞ்சாங்க; அதுக்கப்பறம் சுதந்திரம் கிடச்சுது. காலம் போகப்போக, இந்தியைக் கத்துக்கிட்டாத்தான் பொழைக்க முடியுங்கற நிலைமை வந்தது. அதுனால, நிறையப் பேரு இந்தியைக் கத்துக்கிட்டுத் தமிழை மறந்துபோனாங்களாம். இந்தியையும், வெள்ளைக்காரங்க பாஷையான இங்கிலீஷையும் கலந்து பேச ஆரம்பிச்சாங்களாம். நம்ம முன்னோர்கதான் தமிழை மறக்கக் கூடாதுன்னு விடாப்பிடியாத் தமிழைப் பேசிக்கிட்டு இருந்தாங்களாம். டிரான்ஸ்லேட்டர் வந்ததும், நம்ம கையில் அதைக் கொடுத்துட்டு அவுக இந்தியிலும், நாம தமிழ்ல பேசினா ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கவும் வழிசெஞ்சாங்களாம். அப்பறம் நிறைய மாறுதல் வந்து நாம எடுபிடியா மாறிப்போயிட்டோம்,’ அப்பிடீன்னு எங்கிட்டச் சொல்லியிருக்காரு. அப்ப எதுவும் எனக்குச் சரியாப் புரியாது. வீட்டில பெரியவங்க சொன்னபடி தமிழைக் கத்துக்கிட்டேன். வளர வளர, நம்ம கதி இவ்வளவுதான்னு விட்டுப்பிட்டேன்” என்று தெளிவுபடுத்துகிறான் சங்கரன்.

“அப்படீன்னா, வெள்ளைக்காரங்கதான் நம்ப நாட்டை ஒண்ணாச் சேர்த்தாங்களா?” என்று ஏகாம்பரநாதனிடமிருந்து கேள்வி பிறக்கிறது.

“எனக்குத் தெரியாதப்பா. நீ சொல்லறபடிகூட நடந்திருக்கலாம். தனித்தனியா ராசாங்கம் பண்ணிக்கிட்டு இருந்த ராஜாக்களை அவங்க அடக்கிப் பாரத தேசம் முழுக்கத் தங்கள் கீழே வைச்சுக்கிட்டு இருந்தாலும் இருந்திருக்கலாம். தன்னாட்சி வேணும்னு நம்ம நாட்டுக்காரங்க போராடி அவங்களை விரட்டியிருக்கலாம்” என்று தனக்குத் தெரிந்த விளக்கத்தை அளிக்கிறார் சங்கரன்.

“அப்ப தமிழ்நாட்டுக்காரங்க ஏன் போராடி தமிழ்நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கலே?”

இது காமாட்சியின் கேள்வி.

“உன் கேள்விக்கு நான் என்னம்மா பதில் சொல்றது?  ஒண்ணா இருந்துடுவோம்னு தமிழ்நாட்டுக்காரங்க முடிவெடுத்திருக்கலாம்.”

“அதுதான் நமக்கு எதிரா ஆகிட்டது போல!” வாயைத் திறக்கிறான் அழகேசன்.

“இல்லை, அழகேசண்ணா. நமக்குள்ளே ஒற்றுமை இல்லாததுதான் நமக்கு எதிராப் போனது” என்று ஈஸ்வரனிடமிருந்து பதில் வருகிறது.

“எப்படிச் சொல்றே ஈஸ்வரா?”

“இந்தி படிச்சா வேலை கிடைக்குதுன்னு எல்லாரும் இந்தியைப் படிச்சுட்டு, தமிழை மறந்துட்டாங்கன்னு நிமிஷாவும், அப்பாவும் சொல்றாங்க. தமிழ்நாட்டுல ரொம்பப் பேரு தமிழை மறந்ததுபோல - நிமிஷாவும் அவ அம்மாவும் அவங்க பூர்வீகத் தாய்மொழியான பெங்காலியை மறந்துபோயிட்டாங்க இல்லையா? அதை விடு.  அது பின்னால வந்தது.

“இந்தத் தங்கச்சுருள் என்ன சொல்லிச்சு? சோழரும், பாண்டியரும் ஒரே மொழியான தமிழைப் பேசினலும், ஒரே கடவுளர்களான சிவபெருமானையும், மீனாட்சியையும் கும்பிட்டாலும், ஜென்ம விரோதியா ஒருத்தரை ஒருத்தர் அழிச்சுக்கிட்டாங்கன்னுதானே படிச்சோம்?  மூணாவது குலோத்துங்க ராஜா மதுரையைக் கொளுத்தி, கழுதைகளால் உழச் சொன்னதுனாலதானே, மாறவர்மன் சுந்தரபாண்டியன் பழிவாங்க உறையூரையும், தஞ்சாவூரையும் கொளுத்தினாரு? அதோட நின்னுச்சா? பகை தொடரத்தானே செஞ்சுது? போசளங்க உதவியோடத் திரும்பச் சண்டை போட்டதுனாலதானே, சடையவர்மன் சுந்தரபாண்டியரும், அவருக்குப் பின்னால குலசேகரபாண்டியரும் சோழரே இல்லாம நிர்மூலமாக்கினாங்க?”

ஈஸ்வரனின் சொற்கள் அனைவரின் இதயத்திலும் ஈட்டியாகப் பாய்கின்றன. மீண்டும் தொடர்கிறான் ஈஸ்வரன்: “அதோட போச்சா? உலகமே மெச்சும்படி இருந்த மதுரை என்ன ஆச்சு? எங்கோ இத்தாலியிலேந்து வந்த மார்க்கோ போலோங்கற பயணிகூட மதுரை ஒரு சொர்க்கபூமின்னு எழுதிவைச்சாருன்னுதானே படிச்சோம்? அப்படியிருந்தும், அண்ணன்-தம்பி பங்காளிச் சண்டைனாலேதானே அன்னியன் தில்லியிலேந்து வந்து மதுரையை அழிச்சுட்டுப் போனான்? நாம் ஒற்றுமை இல்லாம இருந்தோம். அதுனாலதான் நம்ம நாடு, சுதந்திரம் எல்லாத்தையும் காவு கொடுத்தோம்! இப்ப நம்ம மொழியையும் இழந்துட்டு, ‘எடுபிடி’யா நிக்கறோம். வேற என்ன சொல்ல முடியும்?”

ஈஸ்வரனின் குரலில் ஆற்றாமை, கோபம், கழிவிரக்கம் - இவையெல்லாம் ஒருங்கே ஒலிக்கின்றன.

சிறிது நேரம் யாருமே பேசவில்லை. “அதெல்லாம் சரிதான். ராஜராஜசோழச் சக்ரவர்த்தியின் தமிழ்த்திருப்பணியை அவரோட மகன் ஏன் முன்வந்து செய்யலை? எல்லாம் தெரிஞ்சிருந்தும், சிவாச்சாரி பிரம்மராயர் திருப்பணியை ஏன் மும்முரமா முனைஞ்சு முடிக்கலை? மத்த சோழர்கள் ஏன் திருப்பணியை விட்டுட்டாங்க? மாறவர்மன் சுந்தரபாண்டியன் நீலகண்ட தீட்சிதருக்கு ஆதரவு கொடுத்தும், ராஜராஜ சக்ரவர்த்தியோட திருப்பணியைப் பத்திப் அவரிடம் பேசி, தமிழைப் பரப்ப ஏன் முயற்சி செய்யலே? எனக்கு ஒரே குழப்பமா இருக்கு. யாராவது சொல்லுங்களேன், ஏன் இப்படி நடந்துது?” என்று ஏகாம்பரநாதன் கேள்வி மேல் கேள்வி தொடுக்கிறான்.

“ஏண்டா ஏகாம்பரம், சும்மாச் சும்மா கேள்வி கேட்டுகிட்டே இருக்கியே? நீதான் யோசிச்சு பதிலைச் சொல்லேன் பார்ப்போம்” என்று அவனைச் சாடுகிறாள் காமாட்சி.

“இந்தா பிள்ளே, காமாட்சி! நீ கொஞ்சம் சும்மா இரு. தம்பி நல்ல நல்ல கேள்வியாத்தானே கேக்குறான்? அவன் கேள்வியிலதான் நம்ம கஷ்டத்துக்கு விடிவு இருக்குதுன்னு எம் மனசு சொல்லுது. இன்னும் நல்லாக் கேள்வி கேளுப்பா ஏகாம்பரம்” என்று காமாட்சியை அடக்கி, ஏகாம்பரநாதனை உற்சாகப்படுத்துகிறான் அழகேசன்.

“ஐயாவுக்கு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’னு நெனைப்பு. என் வாயை மூடச் சொல்றாரு.  நீங்களே பதிலச் சொல்லறதுதானே?” அழகேசனை முடுக்கிப் பார்க்கிறாள் காமாட்சி.

“அக்கா, நீங்க ஏன் அழகண்ணனைக் கோவிச்சுக்கிறீங்க? தமிழை இப்பத்தான் கத்துக்கிட்டேன். இருந்தாலும், தங்கச்சுருள்ல எழுதியிருந்ததை இவரு படிச்சுச் சொன்னதும், தமிழ் மேல எனக்கே அலாதி மதிப்பு வந்திடுச்சு. ராஜராஜச் சக்ரவர்த்தி விரும்பின மாதிரித் தமிழை நாடு பூராவும் பரப்பினா என்னன்னு எனக்கே தோணுது. எல்லாம் போயி, ஒத்தை மரமா நான் நின்னபோது, தமிழ் பேசற நீங்கதான் என்னை உங்களோட சேர்த்துச் சொந்தக்காரி ஆக்கிக்கிட்டீங்க. இந்திக்காரி, வங்காளக்காரி, உரிமைக்குடிமகள்னு தள்ளிவைக்கல. இப்பத் தமிழ்நாடு நான் புகுந்த வீடாகிட்டுது. அந்த மாதிரி, நல்ல எண்ணம் உள்ளவங்க எனக்குக் கொடுத்த தமிழ் - தமிழ்நாடு முழுக்க மட்டும் இல்லாம – பாரத தேசம் முழுக்கப் பரவணும்னு நினைக்கறேன். அப்படி நடக்கணும்னா, ராஜராஜச் சக்ரவர்த்தியின் தமிழ்த்திருப்பணி - அவரோட தமிழ்க்கனவு - ஏன் நின்னுபோச்சு, எப்படி நடந்திருந்தா அது நிறைவேறியிருக்கும்னு யோசிக்கணும். அதுக்கு முதல்கட்டமாத்தான் ஏகாம்பரத்தோட கேள்வி இருக்குது. இப்ப இவ்வளவுதான் எனக்குத் தோணுது” என்ற நிமிஷா, ஈஸ்வரனைப் பார்த்து, “ஏங்க, இங்கே நல்லா யோசிக்கறது நீங்கதான். ஏகாம்பரத்துக்குப் பதில் சொல்லப் பாருங்க. பின்னால, நாங்களும் எங்களுக்குத் தோணறதைச் சொல்லறோம்” என்றவுடன், அவளை மற்ற அனைவரும் வியப்புடன் நோக்குகின்றனர்.

(அடுத்த பகுதியில் நிறையும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com