பொன்னியின் செல்வனின் தமிழ்க் கனவு – அறிமுகம்

பொன்னியின் செல்வனின் தமிழ்க் கனவு – அறிமுகம்

அறிமுகம்

டி.எஸ்.மகாதேவன் (ஒரு அரிசோனன்) பற்றி…

மிழ்நாட்டில் காரைக்குடியில் பிறந்த D.S.மகாதேவன் (ஒரு அரிசோனன்) அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் [B.E] பட்டம் பெற்று, இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் [ISRO] தும்பாவிலும், ஸ்ரீஹரிகோட்டாவிலும் பணியாற்றினார். அமெரிக்கா சென்று, மேல்நிலைப் பொறியியல் பட்டம் [M.S. in Mechanical Engineering] பெற்றார். கலிபோர்னியாவில் இன்டெல் [Intel], அரிசோனா மாநிலத்திலுள்ள மோட்டரோலா நிறுவனத்தில் பணியாற்றினார். இணைய பத்திரிகைகளில் தமிழில் கட்டுரைகளும், சிறுகதைகளும் எழுதி வருகிறார். தற்பொழுது அமெரிக்காவில், அரிசோனா மாநிலத்தில், ஃபீனிக்ஸ் பெருநகர் பகுதியில், மேசா என்னும் நகரில் வசித்து வருகிறார்.

''பொன்னியின் செல்வன் ராஜராஜன் தன் பேரரசு முழுவதும் தமிழைப் பரப்பக் கனவு கண்டு, அதற்கான திட்டத்தைத் தீட்ட எண்ணி, சீரும் சிறப்புடன் கோலோச்சிய காலத்தில், வீறு நடைப் போட்டுக்கொண்டிருந்த தமிழன்னையுடன் பயணித்து, அந்தத் திட்டம் எதிர்காலத்துத் தமிழருக்குக் கிடைத்த சமயம் அவர்கள் என்ன செய்வார்கள் என்ற கற்பனைப் பிணைப்பே இந்தப் புதினத்தை எழுதக் கருவாகவும், தூண்டுதலாகவும் அமைந்தது" என்கிறார் 'ஒரு அரிசோனன்.'

ஓவியர் செந்தமிழ் பற்றி…

மரர் கல்கி அவர்களின், 'அலையோசை' தொடருக்கு கல்கியில் டிஜிட்டல் ஓவியம் வரைந்தவர். முதல்வர் ஸ்டாலின் அவர்களின், 'உங்களில் ஒருவன் 1' சுயசரிதை புத்தகத்திற்கு கருத்து ஓவியங்கள் வரைந்தவர். 'எழுத்தாளர் தேவன் அறக்கட்டளை' சார்பாக 2022க்கான தேவன் விருதை பெற்றுள்ளார். அனைத்து முன்னணி வார, மாத இதழ்களில் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறார். பத்திரிகைகளுக்கான நேர கால கெடுபிடிகளைப் புரிந்துகொண்டு சிறப்பாகப் பணியாற்றுபவர் என்பதால், பத்திரிகை நிறுவனங்களும் பதிப்பகங்களும் இவரை அதிகம் நாடுகின்றன என்பது சிறப்பு. தமது கடின உழைப்பால் மிகக் குறுகிய காலத்தில் பல உயரங்களை எட்டியவர்.

"ஏராளமான சமூகக் கதைகளுக்கு எண்ணற்ற ஓவியங்களை வரைந்துள்ள நான், இந்த சரித்திர நாவலுக்கு ஓவியம் தீட்டுவதைப் பெருமிதமாகக் கருதுகிறேன்"என்கிறார் ஓவியர் செந்தமிழ்.

தமிழன்னையுடன் பயணிப்போம்!

மிழ்க் கல்வி நலிவினால் ஏற்படப்போகும் விளைவு பற்றியும், பண்டைக்காலத் தமிழ் மன்னர்களின் பொற்காலம் பற்றியும், எப்படிப்பட்ட சூழ்நிலைகள் அவர்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தன என்பது பற்றியும் இந்தப் புதினம் சுற்றிச் சுழல்கிறது. அதற்கு முன்னர் தமிழ் மொழி பற்றிய சிறு விழிப்புணர்வு நமக்கு அவசியம்.

இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மெரீஷியஸ் நாடுகளில் பலராலும் தமிழ் தாய்மொழியாகப் பேசப்படுகிறது. ஆறு கோடியே எண்பது லட்சம் பேர்களுக்குத் தாய்மொழியாகவும், மொத்தம் எட்டு கோடி மக்களால் அறியப்பட்ட மொழியாகவும், உலக அங்கீகாரம் பெற்றுத் திகழும் மொழியாகவும் இருக்கிறது.

லகத்திலேயே ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பேசப்பட்டுவரும் மொழிகளில் ஒன்றான மொழி, தமிழ். அதன் தனித்தன்மைக்காகவும், இலக்கிய மேன்மைக்காகவும், இந்திய அரசு இந்திய மொழிகளிலேயே முதன்முதலாகத் தமிழைச் செம்மொழியாக அறிவித்துச் சிறப்பித்திருக்கிறது. அதற்கென்று தனியான இலக்கணம் உள்ளது. அதன் இலக்கியச் செறிவுக்கு அளவே இல்லை.

பண்டைத் தமிழ் மன்னர்கள் தென்னிந்தியாவுடன், இலங்கை அந்தமான் நிக்கோபார் மற்றும் லட்சத் தீவுகள் இவற்றை ஆட்சி செய்து வந்தார்கள். இன்றைய இந்தியக் கடற்படை உருவாகும் வரை, பேரரசன் இராஜேந்திரனது கடற்படையே இந்தியாவிலேயே பெரிய கடற்படையாக விளங்கி வந்தது. அவனது செல்வாக்கு இந்தியாவின் ஒரிசா, வங்காள மாநிலங்கள் மட்டுமன்றி; மலேசிய தீபகற்பம், சுமத்ராவிலும் பரவி இருந்தது. பண்டைத் தமிழ் மன்னர் காலத்தில் சீனாவுடன் தமிழர்கள் வர்த்தகம் செய்து வந்தனர். சமீபத்தில் சீனாவிலும், இந்தோனேசியாவிலும் தமிழர்கள் கட்டிய கோயில்கள் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டன. சீனாவில் இருக்கும் கோயிலில் தமிழ்க் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.

உரோமானிய, கிரேக்க, அராபிய வணிகர்கள் தங்களது நாவாய்களைக் கொற்கை, தொண்டி, முசிறி, காவிரிப்பூம்பட்டினம் போன்ற துறைமுகங்களுக்கு அனுப்பி வணிகத்தைப் பெருக்கி வந்தனர். புகழ் பெற்ற பயணிகளான மெகஸ்தனிஸ், ஹுவான் சுவாங், பாஹியான், மார்க்கோ போலோ முதலானோர் தமிழ்நாடு, அதன் செழிப்பு, தமிழ் மக்கள் இவற்றைப் பற்றி எழுதியுள்ளனர்.

ஆயினும், தமிழ் மன்னர்களின் ஆட்சி பதினான்காம் நூற்றாண்டில் முடிவை எய்தியது. அதற்குப் பிறகு தமிழ் மன்னர்கள் தன்னாட்சி செய்யவில்லை.

இந்த நாவலுக்கு உருக்கொடுப்பதற்கு வரலாற்று நாயகர்களையும், வரலாற்று நிகழ்ச்சிகளையும் துணைகொண்டிருக்கிறேன். இந்த நாவலின் கதாநாயகி, தமிழன்னைதான். மற்ற மனிதர்கள் அல்ல. இந்த நாவலை வடிக்கும்போது நாயகன் – நாயகியை மட்டும் மையமாகக் கொண்டு அவர்களின் பார்வையில் புதினத்தின் போக்கை நடத்தாமல், பாத்திரங்கள் அனைவரின் பார்வையிலிருந்தும் அவர்கள் மன ஓட்டங்களின் கோணங்களிலிருந்தும் எழுதி இருக்கிறேன்.

தமிழ்க் கல்வியின் நலிவு தொடர்ந்தால், எதிர்காலத்தில் தமிழின், தமிழர்களின் நிலை எவ்வாறு இருக்கும் என்ற அச்சம் நாவலின் தொடக்கமாக வரையப்பட்டிருக்கிறது. பண்டைய தமிழ் மன்னர்கள் தமிழின் முன்னேற்றத்திற்கு எப்படிப் பாடுபட்டார்கள்?

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நின்று அவர்களின் புகழைப் பறைசாற்றும் அளவுக்கு – தமிழரின் கலை நுணுக்கம் நிறைந்த நினைவுச் சின்னங்களை எழுப்பி – விரிந்து பரந்த பேரரசைக் கட்டி ஆண்டவர்கள் – எதனால் மறைந்துபோனார்கள்? அவர்களின் கனவு என்னாயிற்று? அவர்கள் நிறுவிய பேரரசுகள் ஏன் வெடித்துச் சிதறின? இவற்றை இப்புதினம் படம் பிடித்துக் காட்டுகிறது.

இந்த நாவல் தமிழன்னை நடந்து வந்த அடிச்சுவடுகளைப் பின்பற்றி – பண்டைத் தமிழர்களின் பொற்காலத்திற்கும் – இக்காலத்தில் நிகழும் தமிழ்க்கல்வி நலிவு நீடித்தால் – அவள் எப்படிப்பட்ட எதிர்காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்லக்கூடும் என்ற கற்பனைப் பயணத்திற்கும் அவளுடன் பறந்து பயணிக்கிறது. தமிழன்னையின் எதிர்காலப் பயணத்திற்கும் அவளுடைய பழைய பொற்காலத்திற்கும் என்னுடன் சேர்ந்து பயணிக்குமாறு வாசகர்களைப் பணிவன்புடன் அழைக்கிறேன்.

தற்காலத்தில் வேலை வாய்ப்பு கருதியும், எளிதாக மதிப்பெண்கள் பெறுவதற்காகவும் தமிழ்க்கல்வி பின்னுக்குத் தள்ளப்படும் நிலை கண்டு பல தமிழறிஞர்களும் கவலை தெரிவித்து வருகிறார்கள். எனினும், அது நிகழாது, நிகழலாகாது என்ற என் அக்கறையே இந்த நாவலாய் வடிவம் எடுத்துள்ளது.

தமிழ்கூறும் நல்லுலகம் இப்புதினத்தினை வரவேற்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன்.

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!!

இனி கதை…
(நாளை)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com