0,00 INR

No products in the cart.

பொன்னியின் செல்வனின் தமிழ்க் கனவு – முதல் பாகம் – அத்தியாயம் 1

முக்கிய இடங்களும் கதாபாத்திரங்களும்
காலம் : 25ம் நூற்றாண்டு

பாரத ஒருங்கிணைப்பு : இருபத்தைந்தாம் நூற்றாண்டில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான். நேபாளம், பூடான், மயன்மார் (பர்மா).
இலங்கை, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா இவற்றை உள்ளடக்கிய
பகுதி.

தக்கன்கண்ட் : பாரத ஒருங்கிணைப்பின் ஒரு மாநிலம். (இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் தமிழ்நாடு,)

ஷெனாய் : தக்கன்கண்ட் மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் (இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் சென்னை)

தஞ்ஜு : தக்கன்கண்ட் மாநிலத்தின் தலைநகர். (இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் தஞ்சாவூர்)

மத்ரா : தக்கன்கண்ட் மாநிலத்தில் ஒரு பெரிய நகரம் (இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் மதுரை)

கோட்கல் : தக்கன்கண்ட் மாநிலத்தில் ஒரு மலைவாழிடம் (இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் கொடைக்கானல்)

காரைகட் : தக்கன்கண்ட் மாநிலத்தில் ஒரு நகரம் (இருபத்திஒன்றாம் நூற்றாண்டின் காரைக்குடி)

உரிமைக் குடிமக்கள் :

நிமிஷா : ஷெனாயில் வாழும் ஒரு இளம் பெண்.

ஷிஃபாலி : நிமிஷாவின் தாய். ஒரு சீனக் கம்பெனியின் ஷெனாய்க் கிளையில் பணி செய்பவள்.

ஸஹஜா : கொட்கல் விண்நோக்கு நிலையத்தில் பணி செய்யும் விஞ்ஞானி.

சோம்காந்த் : ஸஹஜாவின் மேலதிகாரி. காரைகட் விண் ஆராய்ச்சி மையத்தில் ஒரு வல்லுநர்.

எடுபிடிகள் :

காமாட்சி : ஷிஃபாலி வீட்டில் வேலை செய்யும் இளம்பெண். (நிலவுமொழி பரம்பரையில் வந்தவள்)

ஏகாம்பரநாதன் : காமாட்சியின் தம்பி.

ஈஸ்வரன் : தஞ்ஜூவில் பணி செய்பவன். இந்தி தெரிந்தவன் (சிவாச்சாரி பரம்பரையில் வந்தவன்)

சங்கரன் : ஈஸ்வரனின் தந்தை.

அழகேசன் : மத்ராவில் வாழும் ஒரு மல்லன் (வெற்றிமாறன் பரம்பரையில் வந்தவன்)

முதல் பாகம்
அத்தியாயம் 1

ஷிஃபாலியின் குடியிருப்பு, ஷெனாய்
பிரபஜாற்பத்தி, ஆனி 20 – ஜூலை 4, 2411

மெல்லத் தமிழினிச் சாகும், அந்த
மேற்கு மொழிகள் புவிமிகை ஓங்கும்
என்றந்தப் பேதை உரைத்தான், ஆ!
இந்த வசையெனக் கெய்திடலாமே?

– அமரகவி சுப்பிரமணிய பாரதியார்

ன்னையின் குரலைக் கேட்கவே முடியாமல் நிமிஷாவின் கவனம் எங்கோ இருக்கிறது. தரையில் ஒளிரும் பலவண்ணக் கட்டங்களில் உடலை வளைத்து வளைத்து நடனமாடிக் கொண்டிருக்கிறாள்.

“நிமிஷா, ஹைஃபை கோ கம் கர்க்கே ஸீ. மேக்ஸ் ஜ்யாதா கட்பட்! (ஹைஃபையை மெதுவாக வைத்துப் பார். நிறையச் சத்தம் போடுது!)” என்று இந்தியும் ஆங்கிலமும் கலந்த மொழியில் தன் மகளைப் பார்த்து இறைகிறாள் ஷிஃபாலி.

“நிம்ஸ்” என்று செல்லமாக அழைப்பதை விட்டுவிட்டு, “நிமிஷா” என்று கோபத்துடன் கூப்பிடுவதைக்கூட அவள் காதில் வாங்கவில்லை. பதினாறு வயது இருந்தாலும் வயதை மீறிய செழிப்பான உடம்பு. முகத்தில் பாதியை மறைத்தவாறு ஒரு பெரிய கருப்புக் கண்ணாடி – காதுகளைச் சுற்றி மூடிக்கொண்டிருக்கிறது. அந்த ஹாலில் டிவி எதுவும் தென்படவில்லை. இசையும் கேட்கவில்லை. ஆனால், எங்கிருந்தொ பூம், பூம் என்ற அதிர்வு மட்டும் கேட்கிறது. சற்று உற்றுக் கவனித்தால் அந்தக் கண்ணாடிகூட ஒளி ஊடுருவ முடியாத மறைப்பாகத்தான் இருக்கிறது.

பின் எப்படி அவள் கொஞ்சம்கூடத் தடுமாறாமல் ஆடிக் கொண்டிருக்கிறாள்? அவள் மாட்டிக்கொண்டிருக்கும் கண்ணாடிதான் அவளது தனிப்பட்ட டி.வி. ஹைஃபை அல்லது ஹோலோக்ராஃபிக் புராஜெக்டர் என்னும் முப்பரிமாணக் கருவியின் மூலம் நேரில் பார்ப்பதுபோல முப்பரிமாண நிகழ்ச்சிகளை அவளால் பார்த்து உணர முடிகிறது. காதைச் சுற்றி வளைத்திருக்கும் அமைப்பு, நிகழ்ச்சிகளின் ஒலி அலைகளை அவளுக்கு உணர வைக்கிறது.

கிளப்புக்கே போகாமல் டிஸ்கோ நடனம் ஆடும் நிறைவை அந்தக் கருவியும், வண்ணக் கட்டங்களும் அவளுக்கு அளித்துக்கொண்டு இருக்கின்றன. சுவர்களிலும், கூரைகளிலும் பதிக்கப்பட்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத ஒலிபெருக்கிகள் – அலைபரப்பிகள் – அவள் காதில் அணிந்து இருக்கும் ஹோலோ புரொஜெக்டருக்கு டிஸ்கோ டிரம்களின் பெரிரைச்சலை, கீழ்வரிசை அலைகளை கனகச்சிதமாகத் தந்து கொண்டிருக்கின்றன. அந்த அதிர்வுதான் ஷிஃபாலிக்குத் தலைவலியைத் தருகிறது.

”நிம்ஸ், ஏ கைஸா? லிஸன். காம்ஸ் ஆனே டைம் கம். ஸ்டாப் யே ஷைத்தான்! (ஏன் இப்படி? கேள். காம்ஸ் வரும் நேரம். இந்த சைத்தானை நிறுத்து!)” என்ற செல்லமான முரட்டுத்தனத்துடன் நிமிஷாவின் ஹைஃபையை அவள் காதிலிருந்து கழட்டி அதிலிருந்த ஒரு பொத்தானை எரிச்சலுடன் அமுக்குகிறாள் ஷிஃபாலி.

உடனே நிமிஷா நடனமாடிக்கொண்டிருந்த வண்ணக் கட்டங்கள் அணைந்து தரையின் டிசைனுக்கு மாறுகின்றன. அந்தக் கட்டங்கள் இருந்தனவா என்று வியக்கும் அளவுக்கு ஒரு தடயமுமே இல்லை. ஓடிக்கொண்டிருந்த வண்டி திடீரென்று நின்றுபோனால் எப்படிக் குலுங்கி விழுவார்களோ அப்படி
நிலைதடுமாறுகிறாள், நிமிஷா.

“யே க்யோன் மா? (இது ஏன் அம்மா)” என்று ஷிஃபாலியை முறைக்கிறாள், நிமிஷா.

(இனி, இந்த பன்மொழி உரையாடல்களை மொழிமாற்றம் செய்யாமல் எல்லாப் பேச்சுகளையும் தமிழிலேயே தருவோம்.)

“தஞ்ஜூ, மத்ராவிலிருக்கும் என் ஃப்ரென்ட்ஸ்கூட எவ்வளவு உற்சாகமா புது டிஸ்கோ ஆடிக்கிட்டிருந்தேன்? அவங்க என்னை எப்படி மிஸ் செய்வாங்க தெரியுமா? கெடுத்திட்டியே!” என்று குறைப்பட்டுக்கொள்கிறாள்.

“ஸ்கூல் லீவு விட்டா இப்படித்தான் டிஸ்கோ, டிஸ்கோன்னு கூத்தடிப்பாயா, நிம்ஸ்? சீனாவிலேந்து சீஃப் மானேஜர் வராரு. நான் ரெண்டு நாள் தஞ்ஜூவுக்குப் போகணும். அதனால உனக்குத் துணையா காம்ஸ் இங்க இருப்பா. உனக்குத் தேவையானதை அவ கவனிச்சுப்பா. அவளை ரொம்பப் படுத்தாதே! கவர்ன்மென்ட்கிட்ட நான் கெஞ்சிக் கூத்தாடி அவளைத் தனிப்பட்ட முறையில வேலை செய்ய வச்சிருக்கறதுனாலதான் நினைச்சபோதெல்லாம் உன்னை நம்பிக்கையா இங்க விட்டுட்டுப் போக முடியுது” கனிந்த குரலில் கண்டிக்க முயல்கிறாள்.

காம்ஸ் என்றதும் முகத்தைச் சுளிக்கிறாள் நிமிஷா.

“காம்ஸா அம்மா? அவளுக்கு நான் பேசறது புரியாது, எனக்கு அவள் பேசறது புரியாது. எப்பவும் டிரான்ஸ்லேட்டரைக் (மொழிமாற்றுக்கருவி) காதில் மாட்டிக்கணும். சரியான காட்டுமிராண்டி. எப்பப் பார்த்தாலும் நான் பண்றதை வெறிச்சு வெறிச்சுப் பார்ப்பா…”

“டிரான்ஸ்லேட்டரை உபயோகப்படுத்தறதுல என்ன கஷ்டம்? ஹைஃபையைவிட சுலபம்தானே! நானும் சைனாக்காரங்ககிட்ட பேசறதுக்கு அதைத்தானே உபயோகப் படுத்தறேன். யாரு இப்ப எல்லா பாஷையையும் கத்துக்குவாங்க?” மகளுக்குச் சமாதானம் சொல்கிறாள் ஷிஃபாலி.

“சும்மாச் சும்மா டிரான்ஸ்லேட்டரைக் காதில மாட்டிக்க ரொம்பக் கஷ்டமா இருக்கு. இந்தக் காம்ஸ் ஏன் நம்ம பாஷையைக் கத்துக்க மாட்டேங்கறா?”  அலுத்துக்கொள்கிறாள் நிமிஷா.

“நிம்ஸ்! நீ ஹிஸ்ட்ரி பாடத்தை மறந்துட்டியா? எடுபிடிகள் நம்ம பாஷையைக் கத்துக்கக் கூடாதுன்னு படிக்கலை?” என்று குரலை உயர்த்துகிறாள் ஷிஃபாலி.

“எதையும் சொல்ல விடமாட்டியே! பாடத்தை நான் மறக்கலை. நூத்தைம்பது வருஷத்துக்கு முன்னால டிரான்ஸ்லேட்டர்ஸ் வந்துட்டதுனால இந்தி தெரியாதவங்ககூட அதை வச்சே பேசிக்கலாம். எழுபத்தைஞ்சு வருஷத்துக்கு முன்னால எடுபிடிச் சட்டம் (மினியன் ரூல்) கொண்டு வந்தாங்க. வெறும் கூற்றுமொழி (டயலக்ட்) மட்டுமே தெரிஞ்சவங்களை எடுபிடின்னு சொன்னாங்க. அவங்க நாம போற பள்ளிக்கூடத்துக்குப் போகக்கூடாது, அவங்களுக்கு யாரும் இந்தி கத்துக்கொடுக்கக் கூடாது. அவங்க உடல் உழைப்பு மட்டுமே செய்து பிழைப்பு நடத்தணும். அதுமட்டுமில்லை, அப்படி ஒரு சட்டம் வந்ததுகூட அவங்களுக்குத் தெரியாது. ஏன்னா அவங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவங்களுக்கு ஓட்டுரிமையும் கிடையாது. இதெல்லாம் எனக்குத் தெரியும்மா! ஒரு அலுப்பில சொன்னா, பிலுபிலுன்னு பிடிச்சுக்கறியே!”

காலிங் பெல் ஒலிக்கிறது. கதவில் “காம்ஸ்” என்று அவர்களால் அழைக்கப்பட்ட காமாட்சியின் நிழற்படம் தெரிகிறது. காதில் மொழிமாற்றுக் கருவியை (ப்ளூடூத் போல இருக்கும் ஒரு குமிழான அமைப்பு) அணிந்துகொண்டு, “கதவைத் திற!” என்று சுவற்றில் இருந்த ஒரு சதுரச் சல்லடை மாதிரி இருந்த அமைப்பைப் பார்த்துச் சொல்கிறாள், ஷிஃபாலி.

உடனே கதவு தானாகத் திறக்கவே, உள்ளே நுழைகிறாள் காமாட்சி. அவள்தான் அவர்களால் எடுபிடி என்று அழைக்கப்பட்டவள். நூறு வருடங்கள் முன்பு வரை தமிழ்நாடு என்று அழைக்கப்பட்ட “தக்கண்கண்ட்” மாநிலத்தில் – தற்பொழுது “ஷெனாய்” என்னும் சென்னையில் வாழ்ந்து வரும் – ஆயிரக்கணக்கான, தமிழ் மட்டுமே பேசும் எடுபிடிகளில் அவளும் ஒருத்தி.

நிமிஷாவை விட இரண்டு வயதுதான் அவளுக்கு அதிகமாக இருக்கும். ஆனால் வயதை மீறிய ஒரு பொறுப்பு அவள் முகத்தில் தெரிகிறது. நடை, உடை பாவனையில் அவளுக்கும் நிமிஷாவுக்கும்தான் எத்தனை மாறுபாடு? உடலை ஒட்டிய உடைகளை (சட்டை, பாண்ட்) நிமிஷா அணிந்திருந்தால், புடவை அணிந்திருக்கிறாள் காமாட்சி.

கழுத்தை ஒட்டியபடி தலைமுடியை வெட்டிவிட்டு, புசுபுசுவென்று வானவில்லின் நிறங்களில் வரிவரியாக நிமிஷா வண்ணம் தீட்டியிருந்தால் – எண்ணெயிட்டு, இழுத்து வாரிப் பின்னிக்கொண்டு திலகமிட்டுக்கொண்டிருக்கிறாள், காமாட்சி. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறது இருவருக்குள்ளும்.

அவர்களைப் பார்த்து வெள்ளை வெளேரென்ற பற்கள் தெரிய புன்னகைத்த காமாட்சி, “வணக்கம் அம்மா!” என்று நல்ல தமிழில் சொல்கிறாள். அது மற்ற இருவரின் காதுகளிலும், “ப்ராணாம் மாதாஜி!” என்று இந்தியில் ஒலிக்கிறது. அவள் காதிலும் ஒரு மொழிமாற்றுக்கருவி.

“சரியான நேரத்துக்கு வந்துட்ட, காம்ஸ். நீ ஒரு லைஃப் ஸேவர்! நான் தஞ்ஜூவுக்குக் கிளம்பிக்கிட்டிருக்கேன். திரும்பி வர ரெண்டு நாளாகும். நீ நிம்ஸுக்குத் துணையா இருக்கணும். இங்கயே விருந்தாளி அறையில தங்கிக்க!” ஷிஃபாலியின் குரல் உத்தரவாகத்தான் இருக்கிறது.

“ரெண்டு நாளா?” காமாட்சியின் முகம் சுருங்குகிறது.

அதைக் கவனித்த ஷிஃபாலி, “ஆமாம். அதற்கு என்ன?” என்று அதட்டலாகக் கேட்கிறாள்.

“என் தம்பிக்கு உடம்பு சரியா இல்லை. நான்தான் வீட்டுக்குத் திரும்பிப் போயி அவனைக் கவனிச்சுக்கணும். என் அப்பாவும் அம்மாவும் உங்க மாதிரி பெரிய மனுஷர் ஒருத்தர் வீட்டுக் குழந்தைகளைக் கவனிச்சுக்கறதுக்காக அங்கே தங்கி இருக்காங்க. என் தம்பியை நான்தான் கவனிச்சுக்கணும்!” என்று தயக்கத்துடன் இழுத்து இழுத்துப் பதில் சொல்கிறாள், காமாட்சி. அவள் குரலில் பயமும் கலந்திருக்கிறது.

“அதற்காக நிம்ஸைத் தனியா விட முடியுமா? நான் சொல்றதைக் கேக்கப் போறியா இல்லை, காப்பாளி ஆஃபீசரிடம் உன்னைப் பத்தி புகார் செய்யவா?” என்று பயமுறுத்துகிறாள், ஷிஃபாலி.

இந்தியா, நேப்பாளம், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, பர்மா, மலேஷியா, சிங்கப்பூர், இந்தோனேசியா எல்லாம் இணைந்து நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் உருவாகிய “பாரத ஒருங்கிணைப்பி”ல் (இந்தியன் ஃபெடரேஷன்) எல்லாக் குழந்தைகளின் உடலிலும் பிறந்த உடனேயே கணிணி நுண்ணணுகள் (கம்ப்யூட்டர் சிப்) பதிக்கப்பட்டு விடுகின்றன. அதிலேயே எடுபிடிகள், உரிமைக் குடிமக்கள் (மினியன், எலீட் சிட்டிசன்) என்று பதிந்து விடுகிறார்கள்.

உடனேயே ஒவ்வொரு எடுபிடிக்கும் ஒரு காப்பாளி நியமிக்கப்படுவார். அவர்தான் அவர்களைக் கண்காணிப்பார். அந்த அதிகாரிதான் அவர்கள் என்ன வேலை கற்றுக்கொள்ள வேண்டும், எங்கு வேலை செய்ய வேண்டும் என்றும் தீர்மானித்து, அந்த வேலையைக் கற்றுக்கொடுக்கும் பள்ளியையும் தேர்ந்தெடுப்பார். வேலை சரியாகச் செய்யவில்லை என்ற புகார் வந்தால் அந்த எடுபிடியின் பாடு படுதிண்டாட்டம்தான்.

“காப்பாளி ஆபீசரா, வேண்டாம்மா! என்னை அப்புறம் திருத்தும் பள்ளிக்கு (கரெக்க்ஷன் ஸ்கூல்) அனுப்பிச்சுடுவாங்க. என் அப்பா, அம்மா, தம்பி இவங்க எல்லோரையும் ஒரு மாசம் பார்க்க முடியாம போயிடும்” என்று நடுங்குகிறாள் காமாட்சி.

அவள் மனம் ஷிஃபாலியையும், அவளைப் போன்ற இரக்கமில்லாத எஜமானர்களையும் வெறுக்கிறது. என்னவோ புரியாத மொழியில் பேசிக்கொண்டு கொத்தடிமையாக அல்லவா நடத்துகிறார்கள்?!

“மம்மி… பாவம் மம்மி காம்ஸ்! தம்பிக்கு உடம்பு சரியில்லைன்னா அவனைத் தனியா வீட்டில விட்டுட்டு எப்படி என்கூட இருக்க முடியும்? காம்ஸ், நீ ஒண்ணு பண்ணு. உன் தம்பியை ஆஸ்பத்திரியில காட்டிட்டு, அங்கே விட்டுட்டு வா! ரெண்டு நாள் அவன் அங்கேயே இருக்கட்டும்!” அவள் பக்கம் பேசுகிறாள் நிமிஷா.

“நீங்க நல்லா இருப்பீங்க, நிமிசாம்மா. என் தம்பிப் பையனை டாக்டர் ஐயாகிட்ட காண்பிச்சுட்டு எங்கூடவே இங்கேயே வைச்சுக்கறேன் நிமிசாம்மா. உடம்பு சரியில்லாத சின்னப் பையன் ஆஸ்பத்திரியில எப்படீம்மா தனியா இருப்பான்?” தன் பக்கம் பரிந்து பேசும் நிமிஷாவை நிமிசாம்மா, நிமிசாம்மா என்று அழைத்துக் கெஞ்சுகிறாள் காமாட்சி. ஷிஃபாலியுடன் பேச அவளுக்குப் பயமாக இருக்கிறது.

ஷிஃபாலி பேச வாயெடுப்பதற்கு முன், “ஓகே காம்ஸ்! இங்கேயே கூட்டி வா. எங்க குடும்ப டாக்டர்கிட்ட ஓவர்-த-வேவ்ஸ் (அலைபரப்பு மூலம்) காட்டலாம்!” என்று காமாட்சிக்கு அனுசரணையாகப் பேசுகிறாள்.

அவளே முடிவெடுப்பதால் ஷிஃபாலியால் ஒன்றும் பேச முடியவில்லை.

“அஞ்சு நிமிஷத்துல தம்பியைக் கூட்டியாந்திடறேம்மா!” என்று விரைகிறாள் காமாட்சி.

அவள் சென்ற பிறகு மகள் மீது வெடிக்கிறாள் ஷிஃபாலி. “நிம்ஸ், நீ ரொம்ப இரக்க குணத்தோட இருக்கே! எடுபிடிகளுக்கு இரக்கம் காட்டினா அவங்க நம்மை எடுபிடிகளாக்கிடுவாங்க. எப்பதான் இதை நீ தெரிஞ்சுக்கப் போறியோ?

“எனக்கு இருக்கும் இன்ஃப்ளூயன்ஸுக்கும், பணவசதிக்கும் நான் கல்யாணம் செய்துக்கிட்டு ஹஸ்பன்டோட வாழ முடியும். இருந்தாலும் நிறையச் சாதிக்கணும்னு இந்த நாட்டில் இருக்கற பாதிப்பெண்கள் மாதிரி நானும் கல்யாணமே செய்துக்கலை. அதுபடி எப்படி சாதிச்சுட்டு வரேன், தெரியுமா? அதுக்காக உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கிட்டு அறிவை மட்டுமே உபயோகிச்சு வாழ்க்கையில முன்னேற எத்தனை முடிவுகள் எடுத்திருக்கேன் தெரியுமா? என் மகளாப் பிறந்துட்டு, நீ உணர்ச்சிகளுக்கு அடிமையா இப்படிக் கோழையா இருக்கறது எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கலை!”

“மேடம் ஷிப்ஸ்! நீங்கள் கிளம்பும் நேரம் வந்துவிட்டது!” என்று ஒரு குரல் ஒலிக்கிறது.

“வரேன் கண்ணு!” என்று செல்லமாக நிமிஷாவின் கன்னத்தைக் கிள்ளிவிட்டுக் கிளம்புகிறாள், ஷிஃபாலி.

கதவு சாத்திக்கொண்டவுடனே முப்பரிமாண தொலைக்காட்சிக் கருவியை மாட்டிக்கொண்டு நடனமாட ஆரம்பிக்கிறாள் நிமிஷா.

ன் தம்பியையும் அழைத்துக்கொண்டு நிமிஷாவின் வீட்டை நோக்கி விரைகிறாள் காமாட்சி. உலகத்தின் முதல் வல்லரசுகளில் ஒன்றான பாரத நாட்டின் கடைசித் தட்டுக்குடிமகள் அவள். பிறக்கும்போதே அவளை இந்த நாடு எடுபிடி என்று வரிசைப்படுத்திக் கணிணித் துகள்களில் பதிவுசெய்து வலது கையிலும், இடது தோளிலும் பதித்து, தக்கண்கண்ட்டின் பெரும் கணினியில் சேர்த்து வைத்திருக்கிறது என்பதைக்கூட அறியாதவள் அவள். அவளுக்கு அடிமை என்று பட்டம் கொடுக்கவில்லையே தவிர, அவள் வாழ்க்கை ஒரு அடிமை வாழ்க்கைதான்.

காரணம்…. அவளது முன்னோர்கள் நூற்றைம்பது ஆண்டுகளாக விடாமல் தமிழைப் பேசிக்கொண்டிருப்பதுதான். இருபத்தொன்றாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் சிறப்பாகக் கல்வி கற்பிக்கும் பள்ளிகளில் தமிழ்க்கல்வி நின்றுபோக ஆரம்பித்தது. சிறிது சிறிதாக மற்றக் கல்வி நிறுவனங்களும் அதைப் பின்பற்றத் தொடங்கின. இருநூற்றைம்பது ஆண்டுகளில் தமிழைக் கற்பிப்பது அறவே நின்றுபோய்விட்டது. பாரத நாடு வல்லரசாகி வரும்பொழுது இந்தியும், ஆங்கிலமும் தெரிந்தால் மட்டுமே நல்ல வேலை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு மாறிவிட்டது.

வாழ்க்கையின் மேல்தட்டுக்கு ஏறத் தெரிந்தவர்கள், அந்த இரு மொழிகளையும் மட்டும் கற்றுக்கொண்டார்கள். எனவே, தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் தமிழ் பேசுவதே குறைந்து வந்தது. இருப்பினும், ஆங்காங்கு தமிழ்ப் பற்றுள்ள பெற்றோர்கள் மட்டும் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பித்தார்கள். எழுதப் படிக்கவும் கற்றுத் தந்தார்கள். சிறு சிறு கிராமங்களில்தான் தமிழ் பேசுபவர்கள் இருந்தார்கள்.

எல்லாத் தொழில்களும் மிகவும் இயந்திரமயமாக்கப்பட்ட பின்னர், உடலுழைப்பு மட்டுமே செய்பவர்கள் எடுபிடி வேலை செய்யும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார்கள். என்னதான் ரோபாட்கள் இருந்தாலும், மனிதக் கவனிப்பு முக்கியமாக இருந்தது.

இருபதாம் நூற்றாண்டிலேயே மனம் வெதும்பி, மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்று பாடி வைத்துப்போன அமரகவி பாரதியாரின் வாக்கு மெல்லமெல்ல உண்மையாகிக் கொண்டிருந்தது. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த தமிழன்னை தன் இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருந்தாளோ என்றும் தோன்றியது.

ஷிஃபாலி சொல்லிய டிரான்ஸ்லேட்டர் என்ற மொழிமாற்றுக் கருவி நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவர் பேசும் மொழியை மற்றவர் தங்கள் மொழியில் கேட்க வசதியான கருவி. அது முக்கியமாக ஒரு நல்லதையும், ஒரு கெட்டதையும் உண்டாக்கியது.

நூறு ஆண்டுகளாக இந்திய – சீன நல்லுறவை உறுதிப்படுத்தி அந்த இரு நாடுகளையும் இரட்டை மாட்டு வண்டிகளில் பூட்டப்பட்ட காளைகள் போலச் சேர்த்து தங்கள் பொருளாதார முன்னேற்றத்தை உலகத்தில் முதலாவதாக உயர்த்த அந்தக் கருவி உதவியது.

அதற்கும் முன்னாலேயே நில எண்ணெயை நம்பி வாழும் சூழ்நிலையை மாற்றி, மாற்றுச் சக்தியைக் கண்டுபிடித்து, மையக்கிழக்கு எண்ணெய் நாடுகளின் பொருளாதாரக் கிடுக்கிப்பிடியை உடைத்துப் போட்டு – வன்முறையையும், அதனால் ஏற்படும் மதக் கலவரங்களும் மறைந்துபோக வைத்திருந்தன இந்தியாவும், சீனாவும்.

வல்லரசான இந்தியாவுடன் அண்டை நாடுகள் இணைந்து பெரிய இந்திய இணைப்பாக மாறவும் முடிந்தது. இது மொழிமாற்றுக்கருவி செய்த நன்மை. அதனால் ஏற்பட்ட தீமை – அது, மக்களிடையே நல்லுறவை இணைப்பதற்குப் பதிலாக பிரித்தது.

இந்தி அறிந்தவர்கள் தமிழைக் கற்றுக்கொள்ளாமலேயே உடலுழைப்பு வேலை மட்டுமே செய்யும் – தமிழ் மட்டும் தெரிந்தவர்களுடன் இந்தியிலேயே உரையாடிப் புரிய வைக்கத் துணை செய்தது. அதனால் இந்தி கற்காதவர்களுக்கு இந்தி கற்க வேண்டிய தேவை இல்லாது போய்விட்டது. இறுதியில், தமிழ் ஒரு கூற்றுமொழியாகிப் போனது.

எனவே, தமிழ் பேசுபவர்கள் எடுபிடிகளாகப் பிரிக்கப்பட்டார்கள். இந்தி தெரிந்தவர்கள் உரிமைக் குடிமக்கள் ஆக்கப்பட்டார்கள். எடுபிடிகள் இந்தி கற்றுக்கொண்டு உரிமைக் குடிமக்கள் ஆகிவிட்டால், எடுபிடிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று அஞ்சி அவர்களுக்கு இந்தி கற்றுக்கொடுக்கக் கூடாது என்றும் (நிமிஷா தன் அன்னையிடம் குறிப்பிட்ட) சட்டம் இயற்றப்பட்டது.

இப்படியொரு சட்டம் இருப்பதைப் பற்றியே தெரியாத அவர்கள், ஓட்டுரிமையைப் பறிக்கும் இச்சட்டத்தை எதிர்த்து எப்படிப் போராடுவார்கள்? ஓட்டுரிமை இல்லாததால் எந்த அரசியல்வாதிகளும் அவர்களின் உரிமையைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை.

இருந்தபோதிலும், காமாட்சியின் முன்னோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழை எழுதப் படிக்கக் கற்றுத் தருவதைத் தலையாய கடமையாகப் பேணி வந்தனர். எனவே, காமாட்சிக்கு தமிழ் மட்டும் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தது.

ஆனால், அவளுக்கோ, அவளது பெற்றோர்களுக்கோ – தாங்கள் தமிழைப் பரப்ப ராஜராஜசோழச் சக்ரவர்த்தியின் மகள் குந்தவைக்குத் துணையாகவும், அங்குள்ள ஆந்திரப் பெண்களுக்குத் தமிழ் கற்பிக்கவும், வேங்கை நாட்டிற்கு (வெங்கி) அனுப்பப்பட்ட நிலவுமொழியின் பரம்பரை என்பதோ – தமிழைக் காக்க உறுதிமொழி எடுத்த வீரப் பரம்பரையின் குருதி தங்கள் உடலில் ஆயிரத்து அறுநூறு ஆண்டுகள் ஆயினும் – இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது என்றோ அறிய நியாயம் இல்லைதான்.

வேர்க்க விறுவிறுக்க நிமிஷாவின் வீட்டை அடைந்து, அவர்கள் வீட்டுக்
காலிங் பெல்லை அமுக்குகிறாள் காமாட்சி. அவள் கையைப் பிடித்தபடி பயந்தவாறே உடன் நிற்கிறான் அவளது தம்பி ஏகாம்பரநாதன். அவன் தன் வாழ்நாளில் இதுவரை உரிமைக் குடிமக்களின் குடியிருப்பின் உள்ளே நுழைந்து பார்த்ததே இல்லை. அதுவரை போவானேன், இரண்டு அறைகள் மட்டும் உள்ள கடைசித்தட்டு மக்களின் குடியிருப்பை விட்டு அவன் வெளியே வந்ததும் இல்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுபிடிப் பள்ளிக்குச் சென்று வந்து கொண்டிருக்கிறான். அவனுக்குக் கலை நுணுக்கம் அதிகம். மேல்தட்டு மக்கள் தூக்கி எறியும் சாமான்களை எடுத்துவைத்து விதவிதமாகப் பொம்மைகள் செய்யத் தெரியும். அட்டையோ, பிளாஸ்டிக் துண்டுகளோ கிடைத்தால் விடவே மாட்டான். காமாட்சி அவனுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் எழுத்துக்கள் சொல்லித் தருகிறாள். அவன் தனக்குக் கிடைத்த அட்டைகளில் சிறிதும் பெரிதுமாகத் தமிழ் எழுத்துக்களை வடிவமைத்து வெட்டி எடுப்பான். தம்பியின் சாதனையைப் பார்த்து மனமகிழ்ந்து அவனைச் சேர்த்து அணைத்துக்கொண்டு ஆசையுடன் முத்தமாரி பொழிவாள் காமாட்சி.

“கமான் காம்ஸ், டான்ஸ் ஆடி ஆடி எனக்குப் பசி ஜாஸ்தியாகிவிட்டது. எனக்கு ஏதாவது சாப்பிடச் செய்து தா!” என்று அவளை உள்ளே அழைத்த நிமிஷா, ஏகாம்பரநாதனை வைத்தகண் வாங்காமல் வெறித்துப் பார்க்கிறாள். அவன் அவளுடைய நடை, உடை பாவனையைப் பார்த்து அசந்துபோகிறான். அவனுடைய அக்காவுக்கும் இவளுக்கும்தான் எத்தனை வெறுபாடு? அவனுக்கு மொழிமாற்று கருவி தரப்படவில்லை. எனவே, நிமிஷா பேசியது என்னவென்று அவனுக்குப் புரியவே இல்லை.

அழகான தன் பெயரைச் சுருக்கி ‘காம்ஸ்’ என்று அவள் அழைப்பது காமாட்சிக்குக் கொஞ்சமும் பிடிப்பதில்லை. ஆனாலும் என்ன செய்வது? ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ என்று ஒருகாலத்தில் புரட்சி நடிகர் பாடியதுபோல இப்பொழுது எல்லோரும் தங்கள் பெயரை மூன்றெழுத்தாகச் சுருக்குவது காமாட்சிக்குப் புரிய நியாயமில்லைதான். அதனால்தான் நிமிஷா, நிம்ஸ் என்றும் ஷிஃபாலி, ஷிப்ஸ் என்றும் அழைக்கப்படுகிறார்கள் என்பதையும் அவள் உணர்ந்துகொள்ளவில்லை. இருந்தபோதிலும் நிமிசாம்மா, சிபாலிம்மா என்றுதான் அவர்களை அழைத்து வந்தாள், அவர்கள் அப்படி அழைக்காதே என்று அவளைக் கண்டித்தபோதிலும். “நிமிசாம்மா, இதுதான் என் தம்பி. இவனுக்குத்தான் உடம்பு சரியில்லை. ஒரே சுரம். ரொம்பச் சோர்ந்து சோர்ந்து போகிறான்!” என்று தன் தம்பியைக் காமாட்சி நிமிஷாவுக்கு அறிமுகப்படுத்துகிறாள்.

ஏகாம்பரநாதனைப் பார்த்த நிமிஷாவுக்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது. மெலிந்த தேகம், எலும்பும் தோலுமான உடம்பு, சுருள் சுருளான பரட்டைத்தலை, கருகருவென்ற துருதுருப்பான கண்கள். தொளதொளவென்ற அரை டிராயரும், சாயம் போன பெரிதான சட்டையையும் அணிந்து கொண்டிருக்கிறான். அவளை வைத்த கண் வாங்காமல் வாயைப் பிளந்து பார்க்கிறான்.

“எலே ஏகாம்பரம், நான் சொன்னேனே, அந்த நிமிசாம்மாடா இவங்க. இவங்க வூட்டுலதான் ரெண்டு நாள் இருக்கப்போறோம். வணக்கம் சொல்லிக்கடா!” என்று அவனை மெதுவாக இடிக்கிறாள் காமாட்சி.

“வணக்கம், நிமிசாக்கா!” கைகூப்புகிறான் ஏகாம்பரநாதன்.

அவன் கண்களில் ஒரு நன்றியுணர்வு பளிச்சிடுவதைக் காண்கிறாள் நிமிஷா.

“நிமிசாக்கா!” என்பது தன்னைத்தான் என்று உணர்ந்து கொண்ட அவள் அவனைக் கனிவுடன் பார்க்கிறாள்.

“உன் பேர் என்ன?”

அவன் பேசும் தமிழ், மொழிமாற்று கருவி மூலம் நிமிஷாவுக்கு இந்தியாகப் புரிகிறது. ஆனால், அவளுடைய இந்தி அவனுக்குப் புரியவில்லை. விழிக்கிறான்.

“ஏகாம்பரநாதன், நிமிசாம்மா, ஏகாம்பரம்னு நாங்க கூப்பிடுவோம்.” என்று அவன் சார்பில் பதிலளிக்கிறாள் காமாட்சி.

“பேர் ரொம்பப் பெரிசா இருக்கு. நான் ஏக்ஸ்னுதான் கூப்பிடப்போறேன். இரு இரு, நான் டாக்டரோட இவனை செட்டப் செய்து என்ன ட்ரீட்மென்ட்னு கேட்கிறேன்!” என்று அங்கு தென்புறச் சுவற்றில் பதித்திருக்கும் ஒரு பச்சைப் பொத்தானை அமுக்குகிறாள். சுவரில் ஒரு மருத்துவரின் முப்பரிமாண உருவம் (ஹோலோகிராம்) தோன்றுகிறது.

“ஹாய், நிம்ஸ்! என்னம்மா வேணும் உனக்கு? உடம்பு சரியாக இல்லையா?” என்று கனிந்த குரலில் விசாரிக்கிறார்.

“ஐ ஆம் ஆல்ரைட் டாக்டர். இந்த மினியன் பையனுக்குத்தான் உடம்பு சரியில்லை. நீங்கதான் கொஞ்சம் ஹெல்ப் செய்யணும்” என்று கொஞ்சுகிறாள் நிமிஷா.

“அவனை ஹூக்கப் செய், நிம்ஸ்” என்கிறார் மருத்துவர்.

ஏகாம்பரத்தின் வலது புறங்கையின் மேல் ஒரு பட்டையைக் கட்டுகிறாள் நிமிஷா. அதிலிருந்து ஒரு கம்பி துருத்திக் கொண்டிருக்கிறது. அது ஏகாம்பரத்தின் கணினி எண், அவனது உடல் நிலை பற்றி மின்னலைகள் மூலமாக மருத்துவருக்குச் செய்தி அனுப்புகிறது. அவர் சில நிமிடங்கள் தன் கணினியில் கவனமாகக் கவனிக்கிறார்.

“நிம்ஸ், இந்தப் பையனுக்கு பசியின்மைதான் குறை. நிறைய சத்துணவு கொடுத்தால் போதும்… தேறிவிடுவான். என்ன மருந்து கொடுக்க வேண்டும் என்று உனக்குத் தகவல் அனுப்புகிறேன். இரண்டு நாளில் சரியாகி விடும்” என்று சொல்லிப் புன்னகை செய்கிறார். அத்துடன் அவரது நிழற்படம் சுவரில் மறைந்துவிடுகிறது.

(தொடரும்)

3 COMMENTS

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு – இரண்டாம் பாகம் – அத்தியாயம் 1

ஒரு அரிசோனன் தஞ்சாவூர் சோழர் அரண்மனை சாதாரண, 28 - பொது ஆண்டு 1010 ஐந்து பாணர்கள் யாழை மெல்ல இசைத்துக்கொண்டிருக்கின்றனர். திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ சோழத்தேவர் கண்களை மூடி அதை இரசித்துக் கொண்டிருக்கிறார். அவர் ஈழப்...

பொன்னியின் செல்வனின் தமிழ்க் கனவு – இரண்டாம் பாகம் – இடைச்செருகல் தொடர்ச்சி….

ஒரு அரிசோனன் இடைச்செருகல் தொடர்ச்சி…. ஆ. கீழக் கடம்பூர் மாளிகை சுக்கில, ஐப்பசி 8 - அக்டோபர் 23, 9696 . . . வீரபாண்டியனின் தலையை ஈட்டியில் சொருகிக்கொண்டு சென்று அதை வெற்றி ஊர்வலமாக தஞ்சைக்கு எடுத்துச்சென்றது...

பொன்னியின் செல்வனின் தமிழ்க் கனவு – இரண்டாம் பாகம் – திருப்பணித் துவக்கம்

ஒரு அரிசோனன் திருப்பணித் துவக்கம் இரண்டாம் பாகத்தின் முக்கிய இடங்களும், கதாபாத்திரங்களும் இடங்கள்: சோழப் பேரரசு: தென்னிந்தியாவில் துங்கபத்திரை நதியிலிருந்து கலிங்கம் (ஒரிசா) வரை வடக்கிலும், குமரி வரை தெற்கிலும், வட இலங்கையும் அடங்கியது. தஞ்சாவூர் (தஞ்சை)...

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு – இரண்டாம் பாகம் – திருப்பணித் துவக்கம்

ஒரு அரிசோனன் அறிமுகம் ஆசிரியன் குறிப்பு:  எனது முகநூல் நண்பர்களும், வாட்ஸ் அப் குழும உறுப்பினரும், இன்னும் சிலபலரும் என்னுடன் தொடர்பு கொண்டு சில கேள்விகளைக் கேட்டார்கள்.   அவர்களுக்குக் கொடுத்த விளக்கத்தை உங்களுக்கும் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். ...

பொன்னியின் செல்வனின் தமிழ்க் கனவு – முதல் பாகம் [நினைவூட்டல்] – பொது ஆண்டு 2411

ஒரு அரிசோனன் ஆசிரியனின் குறிப்பு: சரித்திரப் புதினம் என்று பழந்தமிழ் மன்னரின் வரலாற்றை எதிர்பார்த்து, முதல் பாகம் இறுதிவரை படித்த ஒரு சிலருக்கு, ‘என்னது, இது ஒரு விஞ்ஞானப் புதினமாக (Science Fiction) மலர்ந்து வந்திருக்கிறதே,’...