0,00 INR

No products in the cart.

பொன்னியின் செல்வனின் தமிழ்க் கனவு -முதல் பாகம் – அத்தியாயம் 3

ஒரு அரிசோனன்

சுந்தர் பாண்டி அரங்கம், மத்ரா

பிரபஜோற்பத்தி, ஆனி 30 – ஜூலை 14, 2411

ரும்புபோல இறுகி இருந்த தன் தோள் தசைகளைத் தட்டிப் பார்த்துக்கொள்கிறான், அழகேசன். இன்னும் இரண்டு நிமிஷங்களில் மல்யுத்தத்திற்குத் தயாராக வேண்டும். வலது கையை முறுக்கி, தோளுக்கு மேல் உயர்த்தி, உள்ளங்கையை இறுக மூடிமூடி அழுத்துகிறான்.

புஜத் தசைகளின் மேல் பகுதிகள் அலை அலையாக எழுந்து ஆர்ப்பரிக்கின்றன.

“ம், போகலாம்.” என்று உறுமுகிறார், அவனது காப்பாளி. அவரை ஏற இறங்கப் பார்த்துவிட்டு அரங்கத்திற்குப் போகும் நடைபாதையில் துள்ளி ஓடுகிறான், அழகேசன். இந்த இறுதிப் போட்டியில் வென்றுவிட்டால் ஒரு வாரத்தை நிம்மதியாகக் கழிக்கலாம்.

அவன் ஓடி வரும்பொழுது அரங்கமே அதிருகிறது. இரண்டு காளைகள் முட்டிச் சண்டையிடும்போது பெருகவிருக்கும் ரத்தத்தைக் குடிக்க எதிர்பார்க்கும் நரிகள்போல, அரங்கத்தில் அமர்ந்திருக்கும் கூட்டம் ஊளையிடுகிறது.

அந்த ஊளைச் சத்தத்தைக் கேட்டதும் அழகேசனின் உடம்பில் வெறி கிளம்புகிறது.

இந்த ஆக்கமில்லாக் கூட்டத்தின் பொழுதுபோக்குக்காக ‘எடுபிடி’களான தாங்கள் ஒருவரை ஒருவரை ரத்தக்களரியாகும் வரை தாக்கிக்கொள்வது அவனுக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லைதான்.

ஆனாலும் ஓரொரு வெற்றியின் போதும் – ஓரொரு தடவை வெற்றி பெறும்போதும் கிடைக்கிறதே அந்த கரகோஷம் – எடுபிடியாக இருந்தாலும் தன்னைப் பாராட்டி உரிமைக் குடிகளால் எழுப்பப்படுகின்ற அந்தக் கரகோஷம் – தன்னை எடுபிடி என்று ஏளனமாகப் பார்க்கும் அந்த உரிமைக்குடிகள் தனக்காக எழுப்புகின்ற அந்த கரகோஷம் – ‘அழ்க், அழ்க்’ என்று கால்களைத் தரையில் தட்டியும், கைகளால் டமாரங்களைத் தட்டியும் எழுப்புகின்ற அந்த கரகோஷம் – அதுதான் அவனது எடுபிடி வாழ்க்கைக்கு மயக்கம் தரும் மதுபானம்.

அவனுக்கு அந்த கரகோஷம் வெறியைத் தந்தாலும் – அது இன்னொரு எடுபிடியின் துயரத்தில் விளைகிறது என்பது அழகேசனுக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்துகொண்டிருக்கிறது.

அதுவும், பெரும்பாலும் தான் பேசும் தமிழ் மொழியைப் பேசத்தெரிந்த இன்னொரு எடுபிடியின் ரத்தத்தைச் சிந்தி அக்கரகோஷத்தைப் பெற வேண்டியிருக்கிறதே என்பது மிகமிக அவன் மனதைப் பாதிக்கிறது.

ஓரொரு தடவை வெற்றிபெறும்போதும் தன்னுள் இருக்கும் மனிதாபிமானம் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக் கொண்டிருப்பதை அவன் அறிந்துகொண்டுதான் இருக்கிறான்.

சில சமயம் தமிழ்தெரியாத எடுபிடிகள் அவன் கையில் வந்து மாட்டிக்கொள்வர். அவர்களுடன் மல்யுத்தம் செய்யும்பொழுது ‘உரிமைக்குடி’களாக அவர்களைக் கற்பனை செய்துகொள்வான். அவ்வளவுதான் – அவனை எதிர்க்கும் அந்த எடுபிடிகள் அவனுடைய வெறிக்கு ஈடுகொடுக்க முடியாமல் குற்றுயிரும் குலையுயிருமாகத்தான் அரங்கத்திலிருந்து தூக்கிச் செல்லப்படுவர்.

என்னதான் எடுபிடிகள் ஆனாலும், அவர்களின் உயிருக்கோ, உரிமைக்கோ அதிக மதிப்பு இல்லையென்றாலும், அகண்ட பாரதத்தில் இந்த மாதிரி கேளிக்கைச் சண்டைகளில் யாரும் சாகக்கூடாது என்ற விதி உண்டு. ஆகவே, இந்த மல்யுத்தங்களில் யாரும் சாவது கிடையாது. ஆனால் கை, கால்கள் முறிவுகள் சர்வ சாதாரணம்.

“மீனாட்சித் தாயே, மாரியம்மா, காளியாத்தா! எனக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துங்கம்மா!” என்று உரக்கக் கத்திக்கொண்டே அரங்கத்தின் மேடையில் துள்ளிக் குதிக்கிறான், அழகேசன்.

அவனது ஐந்தடி பதினோரு அங்குல உயரத்திற்கும், அதற்கேற்ற பருமனுக்கும் சவால் விடுவதுபோல — பரட்டைத் தலையுடனும், முறுக்கிய மீசையுடனும், கன்னங்கரேலன்று, பல சண்டைகளில் அடிபட்டு உடைந்து ஆறிய மூக்குடன் அழகேசனுக்கு எதிராகச் சண்டையிட ஒருவன் நின்றுகொண்டிருக்கிறான்.

நடுவர் – அவரும் ‘காப்பாளி’தான் – இருவருக்கும் நடுவில் நிற்கிறார். அவர் பேச ஆரம்பித்ததும், அழகேசனின் காதிலிருக்கும் மொழிமாற்றுக் கருவியில் தமிழ் ஒலிக்கிறது.

“ஒழுங்காகச் சண்டையிடுங்கள்! எங்கு வேண்டுமானாலும் அடிக்கலாம், குத்தலாம், உதைக்கலாம், மிதிக்கலாம். ஒருவரை ஒருவர் கடிப்பதோ, பிராண்டுவதொ, கண்களை நோண்டுவதொ, முறை தவறாகச் சண்டைபோடவோ கூடாது. அப்படிச் செய்தால் மின்சார கம்பியினால் உங்களை நான் அடிக்க வேண்டியிருக்கும். இச்சண்டையில் உங்களுக்கு ரத்தப் பெருக்கு ஏற்படலாம், எலும்பு முறியலாம். அதற்கெல்லாம் தயார் என்று நீங்கள் கட்டைவிரல் ரேகையைப் பதிந்து கொடுத்திருப்பதால்தான் இச்சண்டையில் கலந்துகொள்ள அனுமதி. இது இறுதிப் போட்டி என்பதால் உங்களில் யாராவது ஒருவர் நினைவை இழந்தால்தான் இச்சண்டை நிறுத்தப்படும். சண்டை நின்றவுடன் உங்களுக்கு மருத்துவ உதவி அளிக்கப்படும். மீண்டும் சொல்கிறேன். மொழிமாற்றக் கருவியைக் கழட்டி வைத்துவிட்டு ஒழுங்காகச் சண்டையிடுங்கள். ஒன்று.. இரண்டு.. மூன்று.. சண்டை துவங்குகிறது!” நடுவர் அவர்களை விட்டு நகருகிறார்.

இருவரும் காதில் இருக்கும் மொழிமாற்றக் கருவியைக் கழட்டி வீசுகின்றனர்

உடனே பாய்ந்துவந்த பரட்டைத் தலையன், “உன் எலும்புகளை உடைத்து மாலையாக அணிந்துகொள்கிறேன், வா!” என்று அழகேசன்மீது எச்சில் துப்புகிறான்.

அது தன்மீது படாமல் அழகேசன் அமைதியாக விலகிக்கொள்கிறான்.  சண்டையிடும்போது பேசாமலிருப்பது அவனது வழக்கம்.

அது எதிரிகளுக்கு எரிச்சல் மூட்டுவது மட்டுமின்று, அவர்களை நிதானம் இழக்கவைக்கும் என்று அனுபவம் மூலம் தெரிந்துகொண்ட உண்மை. நிதானம் தவறும்போது, எதிராளி தவறுசெய்வான். தவறு செய்பவனை வீழ்த்துவது எளிது – அவனது ஒவ்வொரு வெற்றிக்கும் எதிராளி செய்யும் தவறுதான் பெரிய காரணமாகும் என்பதை அறிந்திருந்ததால் பரட்டைத் தலையன் செய்யப்போகும் தவறுகளைக் கண்டுபிடிக்கத் தன் கண்களைக் கூர்மையாக்கிக்கொள்கிறான்.

பரட்டையனின் மூக்கு உடைந்திருக்கிறது. எனவே, சண்டையின் பொழுது அவன் தன் முகத்தைச் சரியாகப் பாதுகாத்துக் கொள்வதில்லை என்று தீர்மானித்தபடி வலம்வருகிறான் அழகேசன்.

இப்படி அவன் தன்னைச் சுற்றிச்சுற்றி வருவது பரட்டையனுக்கு பிடிக்கவில்லை.

“நீ என்ன என்னை அழகு பார்த்துக் கொண்டிருக்கிறாய்? நீ என்ன பெண்ணா? நான் உன்னைத் தொட்டால் உன் கற்பு அழிந்து விடுமா? நீயாக வந்து அடிவாங்கிக்கொண்டு கீழே விழு. இல்லாவிட்டால் உன் எலும்புகளை நொறுக்கிவிடுவேன்!” என்று கர்ஜிக்கிறான் பரட்டையன். இருவரும் குத்துகளைப் பரிமாறிக்கொள்கின்றனர்.

பரட்டையனுக்கு பதில்சொல்லாமல் அவனது அசைவுகளைக் கவனிக்கிறான் அழகேசன். பரட்டையன் பொறுமையை இழப்பது நன்றாகத் தெரிகிறது. எந்தக் கணத்திலும் அவன் தன்மீது பாய்வான் என்று ஊகித்து அதற்குத் தன்னைத் தயார் படுத்திக்கொள்கிறான். அவன் ஊகம் சரி என்பது அடுத்த கணமே தெரிகிறது.

“ஏ பெண்ணே, உன் கற்பை அழிக்கிறேனா இல்லையா, பார்!” என்று கத்திக் கொண்டே பரட்டையன் அவன்மீது பாய்கிறான். சடேன்று விலகிக்கோண்டு, அவன் விலாவில் ஓங்கிக் குத்துகிறான் அழகேசன்.

பரட்டையன் அதைக் கொஞ்சம் எதிர்பார்க்கவில்லை. அவன் முகத்தில் சிறிது வியப்பு தெரிகிறது; அவனது மூச்சு திணறுகிறது.

ஒரே கணத்தில் அதைச் சமாளித்துக்கொண்டு, “வெட்கப் படாதே கண்ணு.  அத்தானிடம் ஓடிவா! உன்னைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கிறேன்!” என்று உட்கார்ந்து எழுந்து பறக்கும் உதை கொடுக்க முயலுகிறான், பரட்டை.

அவன் உடல் மேடையைவிட்டுக் கிளம்பியவுடன் தரையில் மல்லாக்க விழுந்து, இரண்டு கால்களையும் மடித்து, உயர்த்தி உதைக்கிறான், அழகேசன். பரட்டையனின் தலையையும், கழுத்தையும் அவனது கால்கள் வேகத்துடன் தாக்குகின்றன. இதைச் சிறிதும் எதிர்பார்க்காததால் ,பரட்டையனால் எதிர்த் தாக்குதல் எதுவும் செய்ய முடியவில்லை.

அழகேசனின் வேகம் அவனுக்கு அதிர்ச்சியைத் தருகிறது. அவனது கழுத்து எலும்புக்குக் கீழே பலமான அடி – மேலும் உதையினால் அவனது கழுத்து வேகமாக முன்னுக்குச் சென்று பின்வாங்குகிறது. இது ஒரு விநாடிக்குள் நடக்கிறது. பொத்தென்று சாக்கு மூட்டையாய்க் கீழே விழுகிறான், பரட்டையன். அவனுக்கு வலி உயிர் போகிறது. கண் இருட்டுகிறது.

உதைத்த வேகத்தில் அழகேசன் குட்டிக்கரணம் அடித்து எழுந்திருக்கிறான். தரையில் மல்லாக்க விழுந்து கிடந்த பரட்டையன் எழுந்திருப்பதற்குள் இரண்டு முழங்கால்களையும் மடித்து அவன் மார்பில் வயிற்றுக்குச் சற்றுமேலாகக் குதிக்கிறான். அவன் முழங்கால்கள் பட்டு, பரட்டையனின் சில விலா எலும்புகள் முறியும் சத்தம் அவனுக்கு இன்னிசையாகக் கேட்கிறது. உடனே உருண்டு எழுந்திருக்கிறான்.

வலி பொறுக்காமல் உருண்டு உருண்டு துடிக்கிறான், பரட்டையன். அவன் முழங்கைகள், தோள்கள் என்று மாறிமாறி முழங்கால்களால் தன் முழுவேகத்தையும் காட்டிக் குதிக்கிறான் அழகேசன். பரட்டையனின் மூட்டுகள் நொறுங்கும் சத்தம் கேட்கிறது. பரட்டையன் மல்லாந்து கிடக்கும் சாக்குமூட்டையாகத் துடிக்கிறான்.

அழகேசன் கண்களுக்கு அங்கு பரட்டையன் தென்படவில்லை, தன் இனத்தை ‘எடுபிடி’யாக அடக்கி வைத்திருக்கும் உரிமைக்குடிமக்களின் பிரதிநிதியே தென்படுகிறான்.

அது அவனது வெறியை இன்னும் அதிகமாக்கியதால், வெறித்தனமான கோபத்துடன் பரட்டையனின் தொடைகளில் குதிக்கிறான். அவன் தொடை எலும்புகள் முறியும் சத்தம் கேட்கிறது.

பரட்டையன் வீறிடுகிறான்.

“என்னைச் சித்திரவதை செய்யாதே! என் கழுத்தில் குதித்து என் கேவலமான வாழ்க்கையை முடித்துவிடு..  நண்பா!”

பரட்டையனின் உரத்த கேவல் அழகேசனுக்கு அதிர்ச்சியைத் தருகிறது. அவனது வெறி தணிகிறது. அங்கு அடிபட்டு வீரிடும் பரட்டையன் – உரிமை இல்லாத — ஓட்டுரிமை இல்லாத தமிழ்ச் சமுதாயமாக அவன் கண்ணில் காட்சியளிக்கிறான்.

உரிமைக் குடிமக்களின் கொண்டாட்டத்திற்குத் துணைபோகும் ஒரு கருவியாகவே தன்னை உணர்கிறான்.

தன் மீதே அவனுக்குக் கொஞ்சம் வெறுப்பு பிறக்கிறது.

“அழ்க், அழ்க், அழ்க்!”

கூட்டம் கால்களால் தரையைத் தட்டிப் பேரொலி கிளப்புகிறது.

பரட்டையன் தரையில் கிடப்பதும் அதை அழகேசன் பார்த்துக் கொண்டிருப்பதும்தான் கூட்டத்திற்குத் தெரிகிறது. நிறையநேரம் சண்டை நடக்கும் என்று எதிர்பார்த்த கூட்டத்திற்கு மேடையில் என்ன நடக்கிறது என்று சரியாகத் தெரியவில்லை.

அங்கே ரத்தம் வழியவில்லை, பெரிதாக ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளவில்லை, சண்டை ஆரம்பித்து ஓரிரு நிமிஷங்கள்கூட ஆகவில்லை! மேடையில் என்னதான் நடக்கிறது? பொறுமையில்லாமல் கூட்டம் ஊளையிடுகிறது.

“நண்பா! என்னால் கைகளையோ, கால்களையோ அசைக்க முடியவில்லை. வலி உயிர்போகிறது. எத்தனை நாள் நான் ஆஸ்பத்திரியில் கிடந்து, சிகிச்சை பெற்று மீண்டும் போராட வரமுடியும்? இந்த நாய்ப் பிழைப்பு அலுத்துவிட்டது, நண்பா! என்னைக் கொன்றுவிடு, நண்பா! உன்னைக் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்கலாம்னா அதுகூட முடியலை!” கதறுகிறான் பரட்டையன்.

அவன் கண்களில் தாரைதாரையாகக் கண்ணீர் வழிகிறது.

அழகேசன் மெல்லக்குனிந்து அவனருகில் மண்டியிடுகிறான். தான் எவ்வளவு பெரிய ஊனத்தைப் பரட்டையனுக்கு விளைவித்திருக்கிறோம் என்று அவனுக்குப் புரிகிறது. நுணுக்கமான அழிவுக் கருவியாக மாறி அவனை அழித்திருக்கிறோம். இனி பரட்டையன் எழுந்து நடமாட மாதக்கணக்காகும் என்று எண்ணும்போது அவன் நெஞ்சில் ஏதோ அடைக்கிறது.

“நண்பா, நண்பா,” என்று பரட்டையன் கதறுவது இதயத்தைப் பிழிகிறது.

சுரீரென்று அவன் உடம்பில் மின்சாரம் பாய்கிறது.

நடுவர் அழகேசனை மின்கம்பியினால் தாக்குகிறார். அவன் கோபம் திடுமென்று அவர்மீது பாய்கிறது.

அவனது தற்காப்பு அனிச்சைச் செயல் அவரைத் தாக்க விழைகிறது. அவன் தன்மீது பாயப் போவதை உணர்ந்த நடுவர், அவனை மீண்டும் மின்கம்பியினால் தாக்கிவிட்டு அவனுக்கும் தனக்கும் நடுவில் மின்கம்பியை நீட்டுகிறார்.

மேலே தொடர்ந்து தாக்கும்படி அழகேசனுக்குச் சைகைசெய்கிறார். கூட்டமே அரங்கம் அதிரும் அளவுக்கு ஊளையிடுகிறது.

“முட்டாளே, அவன் இன்னும் நினைவை இழக்கவில்லை, அவனைத் தொடர்ந்து தாக்கிச் சண்டையை முடி!” என்று அவர் இந்தியில் இரைவது அவனுக்குப் புரியாவிட்டாலும், அவர் தன்னை என்ன செய்யச் சொல்கிறார் என்று அழகேசனுக்கு நன்றாகத் தெரிகிறது.

முடியாது என்று தலையாட்டுகிறான்.

நடுவர் அவனை மின்கம்பியால் அடித்து அடித்துச் சண்டையைத் தொடருமாறு பணிக்கிறார்.

திடுமேன்று அழகேசனுக்குள் ஒரு வெறி பொங்குகிறது. தங்களை அலைக்கழிக்கும் உரிமைக் குடிமக்கள் சமுதாயத்தின் மொத்த உருவாக அவன்முன் தோற்றமளிக்கிறார் அவர்.

“இனிமேல் அவன் அடித்தால் அவன் இறந்துவிடுவானடா, மடையா” என்று இரைந்தபடி மின்கம்பியை அவர் கைகளிலிருந்து பிடுங்குகிறான்.

இந்தச் சண்டையைத் தடுக்க வந்த மற்ற காப்பாளிகளையும் தள்ளிவிட்டு, அவர் காதிலிருக்கும் மொழிமாற்றுக் கருவியைப் பறித்துத் தன் காதில் அணிந்துகொண்டு அறிவிப்பாளரின் மேடைக்கு விரைந்து அவரது மைக்கைப் பிடுங்கிக்கொண்டு உரக்கக் கத்துகிறான்.

“என் எதிராளி கைகள், தோள் மூட்டுகள் உடைந்து, விலா எலும்புகள் பொடியாகி, இரண்டு தொடைகளும் உடைந்து – அசைய முடியாத நொண்டியாகக் கீழே கிடக்கிறான். தன் கழுத்தில் மிதித்துக் கொல்லு, என் வாழ்க்கையை முடித்துவிடுன்னு என்னைக் கெஞ்சுகிறான். இப்படி என்னை எதிர்க்கமுடியாமல் மரணபயம் இல்லாமல் வாழ்க்கையை முடித்துக்கொள்ள விரும்பும் இவனை எப்படி மீண்டும் அடித்து நினைவிழக்கச் செய்ய என்னால் முடியும்?

“யாராவது ஒருவர் நினைவு இழந்துதான் இந்த சண்டை முடிய வேண்டும் என்றால் – காப்பாளியை மின் கம்பியினால் என்னைத் தாக்கி நினைவு இழக்கச் சொல்லுங்கள். சண்டை முடிந்து நீங்கள் சந்தோஷமாக வீட்டிற்குத் திரும்பச் செல்லலாம்!”

தன் கையில் இருந்த மைக்கையும், காதில் இருந்த மொழிமாற்றி கருவியையும் தூக்கி எறிகிறான்.

பரட்டையன் அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்துகொள்கிறான் — இராஜராஜ சோழரின் அண்ணனாகிய ஆதித்தகரிகால சோழனின் கையால் மடிந்த வீரபாண்டியன் முதல், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், பாண்டியரின் வஞ்சம் தீர்க்க சோழத் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தைத் தரைமட்டமாக்கிச் சோழர் பரம்பரையையே நிர்மூலமாக்கிய சடையவர்மன் சுந்தரபாண்டியன், இறுதியில் திருவரங்கக் கோவிலைக் காப்பாற்ற மாலிக் காஃபூரிடம் போரிட்ட சுந்தரபாண்டியன், அவன் உடன்பிறப்பு வீரபாண்டியன்இவர்களுக்கெல்லாம் மெய்காப்பாளர்களாகவும் படைத் தலைவர்களாகவும் நெருங்கியிருந்துஉயிரைக்கொடுத்தாவது மன்னரைக் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் பணியாற்றிய வீரர்களின் வழித்தோன்றலானஅழகேசன்.

அரங்கத்தில் மரண அமைதி நிலவுகிறது. பிறகு மெதுவாக ஆரம்பித்த கைதட்டல் அரங்கத்தைப் பிளக்கிறது.

நடுவர் சண்டை வெற்றி தொல்வியின்று முடிந்ததாக அறிவிக்கிறார்.

*       *       *

கோட்கல் விண்வெளி நோக்குநிலையம்

பிரஜோற்பத்தி, ஆனி 30 – ஜூலை 14, 2411

ஹஜாவுக்கு அந்த ஏ.சி. அறையிலும் வியர்த்துக் கொட்டுகிறது. மீண்டும் மீண்டும் தன் முன்னால் தோன்றிய புள்ளி விவரங்களைப் பார்க்கிறாள். இதுவரை சரித்திரத்திலேயே காணமுடியாத சூரியக் கதிர்வீசல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதுவும் சில நாள்களிலேயே அப்படி ஏற்படலாம் என்று அவளது புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. அது மட்டுமல்லாமல், சில நாள்கள் முன்னால் தெரிந்த கோடுகள் இப்பொழுது நேர்கோடுகளாக இல்லாமல் பலவிதமாக வளைந்தும், வட்டமாகவும் காணப்படுகின்றன. அவை வேகமாகச் சுழன்றுகொண்டு வருகின்றன. அவைகளிலிருந்து ஒருவிதமான ஒளி பெருக்கிடுகிறது.

ஸஹஜாவின் தலை சுற்றுகிறது.

அவளும், ஸாத்விக்கும் அனுப்பிய மின்னஞ்சலுக்கு இன்னும் பதில் வரவில்லை.

ஸாத்விக் பேசியதைக் கேட்டுநடந்தது மிகவும் தப்பு என்று மனது அரித்துப் பிடுங்குகிறது. சோதனையாக இன்று ஸாத்விக் வேலைக்கும் வரவில்லை. நிலைமை தன் கையை மீறிப்போய்விட்டது. இனிமேலும் பொறுத்துக்கொண்டு இருப்பது எதற்கும் நல்லதற்கல்ல என்று அவளுக்குப் படுகிறது.

உடனே தனக்கு மேலே உள்ள நிபுணர்களைக் கலந்து ஆலோசிப்பது என்று முடிவு எடுக்கிறாள். அடுத்தகணம் அவள் காரைகட்டில் உள்ள தனாது மேலதிகாரியும், நிபுணருமான சோம்காந்த்தைக் கூப்பிடுகிறாள்.

மிகமுக்கியம் என்று அவள் அழைத்ததால் உடனே சோம்காந்த்துடன் தொடர்பு கிடைக்கிறது. “ஸஹ்ஜ், என்ன விஷயம்? திடுமென்று ஏன் என்னைக் கூப்பிட்டாய்? இன்னும் ஐந்து நிமிஷத்தில் என் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குப் போகவேண்டும். சீக்கிரம் சொல்லு,” என்று அவசரப்படுத்துகிறார்.

“சோம்த் ஸார், ஐ ஆம் வெரி ஸாரி. ஒரு நிமிஷம்தான் வேணும். இந்த முக்கியமான நிகழ்ச்சி என்னை மிகவும் குழப்புது. சூரியக் கதிர்வீச்சு மிகவும் பலமாக இருக்கப்போகிறது என்று தகவல் கிடைச்சுருக்கு. அதற்கும் மேலே இந்தக் கோடுகளைப் பாருங்க. நாலு நாள்கள் முன்னால் இந்தக் கோடுகள் சின்னதாக இருந்தன. இப்ப சுற்றிச்சுற்றி சுழன்று வருகின்றன. தவிரவும் பலவிதமான நிறங்களும் தென்படுகின்றன.”

மடமடவென்று விஷயங்களைச் சோம்காந்த்துக்குத் தெரிவிக்கிறாள், ஸஹஜா.

ஸஹஜா காட்டிய படங்களையும் புள்ளி விவரங்களையும் பார்த்துவிட்டு, “ஓ ஈஸ்வரா!” என்று முனகுகிறார் சோம்காந்த். அவரது முனகல் ஸஹஜாவின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. அவள் மனம் ஆயிரம் தடவை ஸாத்விக்கைத் திட்டுகிறது.

சோம்காந்த் ‘ஓ ஈஸ்வரா’ என்றால் அனைவரும் நடுங்குவார்கள். அது எதிராளிக்கு நல்லதே அல்ல. அவள் பயந்தமாதிரியே பூகம்பமாக வெடிக்கிறார், சோம்காந்த்.

“ஏன் நாலுநாள் ஆறப்போட்டாய்? உனக்கு எதிலாவது சந்தேகம்னாலோ, அல்லது முக்கியமான விஷயம்னாலோ, எனக்கு உடனே தகவல் சொல்லணுமா, இல்லையா? மேலிடத்திற்கு பதில்சொல்லப் போறது நீயா, நானா? சுந்தரேச சாஸ்திரி உன் முதுகுத் தோலையா உரிக்கப்போறார்? இப்படிப்பட்ட உதவாக்கரைகளை என் தலையில் ஏன் கட்றாங்களோ, தெரியலை!”

காரைகட்டில் வெடிக்கும் எரிமலை, கோட்கல்லில் இருக்கும் ஸஹஜாவை சுட்டுப்பொசுக்குகிறது.

சுந்தரேச சாஸ்திரி காரைகட் ஆராய்ச்சி மையத்தின் தலைவர். அவரிடம் இந்த விஷயம் போகப் போகிறது என்றால்..

“அட கடவுளே! நான் தொலைந்தேன்! என்னை உயிரோடு கடித்துத் தின்று, எலும்புகளை உமிழ்ந்து விடுவார்கள்!” என்று மனதிற்குள் நடுங்குகிறாள், ஸஹஜா.

“வெரி வெரி ஸாரி, ஸார். நான் உடனே உங்களிடம் விஷயத்தைச் சொல்லணும்னுதான் சொன்னேன். ஆனால் ஸாத்விக்தான் உங்களுக்குத் தகவல் அனுப்பவிடாமல் நேராக மேலிடத்திற்கு அனுப்பச் சொன்னான்..” என்று ஆரம்பித்தவளை உடனே இடைமறிக்கிறார், சோம்காந்த்.

“உடனே எமர்ஜன்ஸி ஹெலிகாப்டரில் இங்கே வா. வர்றதுக்கு முன்னால எல்லாப் புள்ளி விபரங்களையும் என் கம்ப்யூட்டருக்கு அனுப்பிட்டு, நீயும் கையில் அதோட காப்பியைக்கொண்டு வா. இன்னும் ஒரு மணி நேரத்தில நீ காரைகட்டில் இருக்கணும். உடனே எமர்ஜன்ஸி ஹெலிகாப்டருக்கு அனுமதி அனுப்பறேன். இணைப்பை ராம்ஸுக்கு (RAMS) மாத்து! அந்த திருட்டுப் பயல் ஸாத்விக்கின் குடலை உருவி மாலையாகப் போட்டுக்காம விடமாட்டேன்!” என்று பொறிந்து தள்ளுகிறார்

அப்படியே செய்துவிட்டு ஒரு நிமிஷம் இடிந்துபோய் உட்கார்ந்த ஸஹஜா, பரபரப்புடன் ஆவணங்களை சோம்காந்துக்கு அனுப்புகிறாள். அதேசமயம் தன் விரலில் அணிந்திருக்கும் மோதிரத்தைக் கழற்றி கம்ப்யூட்டரின் தட்டில் இருக்கும் ஒரு குச்சியின்மேல் சொருகுகிறாள். அந்த மோதிரத்திலுள்ள சேமிப்புத் துகளுக்குத் (storage chip) தகவல் ஏற்றப்படுகிறது.

பதட்டத்துடன் மோதிரத்தைத் தன் கையில் அணிந்துகொண்டு ஹெலிபாடிற்குப் புறப்படுகிறாள். வெளியில் வீசும் சில்லென்ற காற்றுகூட அவளது வியர்வையைக் குறைக்கவில்லை. சோம்காந்த் இவ்வளவு தூரம் கொதிப்புடன் பேசி அவள் கேட்டதே இல்லை.

அப்படியானால் தான் கண்டது என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? யோசிக்க யோசிக்க அவள் மூளைதான் குழம்புகிறது.

*       *       *

தஞ்ஜுவுக்கும் மத்ராவுக்கும் நடுவே

பிரஜோற்பத்தி, ஆனி 30 – ஜூலை 14, 2411

காமாட்சி என்னதான் கவனமாகப் பார்த்துக் கொண்டாலும், ஷிஃபாலிக்கு அவளை நம்பி மூன்று மாதங்கள் நிமிஷாவைத் தனியாக விட்டுச்செல்ல மனம் துணியவில்லை. அவளுக்கும் காமாட்சிக்கும் வேறு ஒரு காவல்துணை வைத்தால் நன்றாக இருக்கும் என்ற நினைப்பு தோன்றுகிறது.

 

எனவே, உடனுக்குடனாக இவ்வகைத் துணையாட்களை ஏற்பாடுசெய்யும் கம்பெனியுடன் தொடர்புகொள்கிறாள். மிகவும் நம்பகமான, மூன்று அல்லது நான்கு மாதங்கள் தன் வீட்டில் இருந்து கவனித்துக் கொள்ளக்கூடிய ஆள் வேண்டும் என்று கேட்கிறாள். தவிர அந்த ஆள் நல்ல பலசாலியாகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறாள். மத்ராவில் (மதுரை) அந்த மாதிரி ஒரு ஆள் இருக்கிறான் என்று அவளுக்கு உடனே பதில் வருகிறது.

எப்படியும் தன்னுடைய திட்டத்திற்கு தேர்ந்தேடுக்க வேண்டிய உதவியாளர்கள் மத்ராவில்தான் இருக்கிறார்கள். எனவே, முடிவெடுப்தேற்குள் அவர்களையும் நேரில் சந்தித்தது மாதிரி இருக்கும், அப்படியே, இந்த ஆளை நேர்முகத் தேர்வும் செய்துவிடலாம் என்று தீர்மானிக்கிறாள். உடனே உதவியாளரைக் கூப்பிட்டு மத்ராவுக்குச் செல்லும் விரைவுவண்டியில் டிக்கட் வாங்கச்சொல்கிறாள். ஆறு மணி நேரத்திற்குள் எல்லா விஷயங்களையும் முடித்துக்கொண்டு திரும்பி வந்துவிடலாமே!

இருநூறு கி.மீ வேகத்தில் விரைந்து கொண்டிருக்கும் விரைவு வண்டியில் அமர்ந்தபடி அவள் மனம் தஞ்சைப் பெரிய கோவிலில் நிகழ்ந்த எதிர்பாராத நிகழ்ச்சியை அசைபோடுகிறது . .

. . .. அந்த எடுபிடி இந்தியில் பேசியதும் அதிர்ந்துதான் போனாள். இந்தி பேசத் தெரிந்தவன் எப்படி எடுபிடியாக இருக்கமுடியும் என்றும் தோன்றியது. எனவே அவனிடம் தொடர்ந்து பேசினாள். ஈஸ்வரனும் தன் கதையைத் தட்டுத் தடுமாறியவாறு, தனக்குத் தெரிந்த இந்தியில் அவளீடம் சொல்ல ஆரம்பித்தான்.

அவன் பேசத்தொடங்கிய சில நிமிஷங்களுக்குள்ளேயே அவனை விரட்டியபடி ஒரு காப்பாளிஅங்கு வந்தாள். ஆனால் ஷிஃபாலியைக் கண்டவுடன் கொஞ்சம் தயங்கினாள்.

நான் இவனுடன் சிறிதுநேரம் பேசியாக வேண்டும். இதை நீ தடுத்தால் உன்மீது எடுபிடிச் சட்டத்தை மீறியதாகப் புகார் கொடுப்பேன்,என்று மிரட்டியவுடன் காப்பாளி பயந்துபோனாள்.

ஷிஃபாலியின் கம்பீரமான தோற்றம் அவளைக் கொஞ்சம் மிரளச் செய்தது. ஒருவேளை புதிதாக நியமிக்கப்பட்ட மேலதிகாரியோ என்று பயப்பட்டாள்.

சரி, சரி, சீக்கிரம் பேசிவிட்டு இவனை விட்டுடுங்க. இவனுக்குத் தலைக்குமேல் வேலை காத்துக் கிடக்குது,என்று சொல்லிவிட்டு ஆடிஆடி அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.

பத்து நிமிஷங்களில் தன் கதையையும், கல்வெட்டுகள்மீது சாந்து பூசப்படுவதை எதிர்த்துக் குரல்கொடுத்ததால் தன் சலுகைகள் எல்லாவற்றையும் இழந்து, கடைநிலைக்கும் கடைநிலைக்குத் தள்ளப்பட்டதையும் விவரித்தான், ஈஸ்வரன்.

எடுபிடி ஒருவன் தானாக இந்தி கற்றுகொள்வது என்பது இதுவரை சரித்திரத்திலேயே நடக்காத விஷயம். அப்படி இருக்கும்போது, அவனை எடுபிடித் தட்டிலிருந்து உயர்த்தாமல் இப்படிப் பதவி இறக்கம் செய்திருப்பது அவளுக்குப் பொறுக்கவில்லை.

அதே சமயம் எடுபிடிகளெல்லாம் இந்தி கற்றுக்கொண்டு முன்னேறிவிட்டால் எடுபிடி வேலைகளை யார் செய்வது என்றும் அவளுக்குத் தோன்றியது.

ஆனாலும் ஈஸ்வரனின் அறிவு ததும்பும் முகம், நிமிஷாவுடன் தான் மகிழ்ச்சியாக நடந்துகொள்ளவேண்டும் என்று சொன்னபோது அவன் முகத்திலிருந்த கனிவு, தன் சீனப் பயணம் இனிது நடக்க அவன் வாழ்த்திய வாழ்த்துஇவையெல்லாம் அவள் மனதில் அவன்பால் பாசத்தைப் பொங்கவைத்தது.

அவனுக்கு உதவிசெய்வதாக வாக்களித்து, விவரங்களை வாங்கிக் கொண்டாள்.

தஞ்ஜூ கோவில் சுற்றுலாக்குழுத் தலைவருடன் அடுத்த நாள் தொடர்புகொண்டு தன் செலவில் தஞ்ஜூவிலேயே பெரிய ஹோட்டலில் மதிய உணவுக்கு அழைத்தாள்.

 அவள் குரலில் இருந்த குழைவு அவரைச் சம்மதிக்கவைத்தது. அவர் போதும் போதும் என்று சொல்லும்வரை அவரை உணவு உண்ணவைத்தாள்.

தான் எங்கு வேலை பார்க்கிறோம் என்றும், தனக்கு உள்ள செல்வாக்கு பற்றியும் அவ்வப்போது அவருக்குத் தெரிவித்தாள். அவர் நல்ல மனநிலைக்கு வந்தவுடன் மெதுவாக ஈஸ்வரனைப் பற்றி பேச்சுக்கொடுத்தாள்.

உடனே அவர் முகம் மாறியது.

அவர் முகத்தில் பயம் கலந்த கோபம் தோன்றியது. வக்கில்லாத எடுபிடிக்கு வக்காலத்து வாங்குவதற்கு இப்படி ஒருத்தியா, அதுவும் நல்ல பசையுள்ள, செல்வாக்குள்ள ஒருத்தியா? எடுபிடிகளுக்கு எங்கு போய்ப் புகார் கொடுக்கவேண்டும் என்றுகூடத் தெரியாது. ஆகவே, எடுபிடிகள் விஷயத்தில் உரிமைக் குடிமக்களுக்கு கொலை செய்துகூட தப்பித்துக்கொள்ளும் வாய்ப்பு இருந்தது. ஆனால் செல்வாக்குள்ள இவள் தன்னைப்பற்றி புகார்கொடுத்தால், விசாரணை அல்லவா வைத்துவிடுவார்கள்!

என்னதான் எடுபிடிச் சட்டம் மேல்தட்டு மக்களுக்குச் சலுகையை வாரிவழங்கினாலும், எடுபிடிகளின் உரிமைகளைப் பறித்தாலும், அவர்களுடைய அடிப்படை உரிமையை யாரும் பறிக்கமுடியாமல் தடுத்துக்கொண்டுதான் இருந்தது.

அதுவும் தானாகவே இந்தி கற்றுகொண்ட எடுபிடி என்றால் அவனுக்கு மேலும் பல சலுகைகள் தானாகவே கிடைத்துவிடும். இவர்மீது நடவடிக்கையும் எடுக்கப்படலாம்

என்னடா கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதை மாதிரி இருக்கிறதே என்று பயப்பட்டார். தன்னைச் சுதாரித்துக்கொண்டு பிகுசெய்துகொள்வதுபோல நடிக்கத் துவங்கினார்.

மேடம், அவன் தேவபாஷையான சமஸ்கிருதத்தைப் பழித்தான். அவனுக்கு வக்காலத்து வாங்குகிறீர்களே! உங்களை மாதிரி நாலுபேர் இப்படிச் செய்தால் நமது கலாசாரத்தை இந்த எடுபிடிகள் அழித்துவிடுவார்கள். பிறகு இவர்களின் பாஷையைக் கற்றுகொள்ளும்படி ஆகிவிடும்!” என்று தன் செய்கை நியாயமானதே என்று கட்சிகட்டினார்.

ஷிஃபாலி முத்துப் பற்கள் தெரியச் சிரித்தாள். அதில் சொக்கினார். சுற்றுலாக்குழுத் தலைவர்.

ஸார், உங்கள் பக்கம் உள்ள நியாயம் எனக்கு நன்றாகத் தெரியுது. நீங்கள் சொல்வதை நூற்றுக்குநூறு ஒப்புக்கொள்றேன். அவன் தேவபாஷையைப் பழித்தது மிகவும் தவறுதான். அதற்காக அவனை மன்னிப்புக் கேட்கச் சொல்றேன். அவன் தனது விருப்பத்தைப் பற்றிப் பேசவேண்டியதுதானே தவிர, ஸம்ஸ்கிருதத்தைப் பழித்திருக்கக்கூடாது. இருந்தாலும், கடைசி முடிவு உங்களிடம்தானே இருக்கிறது? அவனைக் கடுமையாகத் திட்டிவிட்டு, உங்க முடிவை நீங்கள் நிறைவேற்றிவிட வேண்டியதுதானே! அதற்காக முயற்சி எடுத்து, நம் பாஷையைத் தானாகத் தெரிந்துகொண்டவனுக்கு நீங்க கொஞ்சம் கருணை காட்டியிருக்கலாமே!” அவருக்குப் பரிந்து பேசுவதுபோல ஆரம்பித்து, தன் பக்கத்து வாதத்தை நிலைநிறுத்தினாள்.

அதனால் சுற்றுலாக்குழுத் தலைவர் சிறிது கீழே இறங்கிவந்தார்.

மேடம், உங்களை மாதிரி காருண்யவாதிகள் இருப்பதால்தான் நாட்டில் சுபிட்சம் நிலவுகிறது. இவ்வளவுதூரம் நீங்கள் எடுத்துச்சொல்வதால் உங்கள் கோரிக்கையை நான் பரிசீலிப்பது பற்றி யோசனை செய்கிறேன்.” என்று நழுவ முயன்றார்.

ஷிஃபாலிக்கா அவரது போக்கு புரியாது? இப்படிப்பட்ட எத்தனை ஆட்களைத் தன் வேலையில் சந்தித்திருக்கிறாள்? சிரித்துக்கோண்டே மறுத்துத் தலையாட்டினாள்.

நை நை ஸாப். நான் இன்னும் ஒரு வாரத்தில் சீனா போகணும். ஆகவே, திரும்பத் திரும்ப உங்க விலைமதிப்பில்லாத நேரத்தை இந்த எடுபிடிக்காக வீணாக்க விரும்பலை. அது உங்களுக்குத் தேவை இல்லாத தலைவலி. அவன் பொறுமை இழந்து உங்க மேலிடத்திற்குப் புகார் செய்தால்…”

தன் குடுமி இந்தப் பெண்ணிடம் சரியாகச் சிக்கிவிட்டதை உணர்ந்து கொண்டார் சுற்றுலாக்குழுத் தலைவர்,

சரியானவில்லிதான் இவள்! அவள் சொல்வதைக் கேட்காவிட்டால், என்னைப் பற்றி புகார் செய்யப்போவதை எவ்வளவு நாசூக்காகச் சொல்கிறாள்! கேவலம், ஒரு எடுபிடிக்காக அப்பழுக்கில்லாத என் ஆவணத்தில் களங்கம் ஏற்படுத்திக்கொள்வதா?” என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டார்இருந்தாலும் அவள் இன்னும் கொஞ்சம் அவரைக் கெஞ்சவேண்டும் என்று தோன்றியது.

மேடம், எந்த எடுபிடிக்கும் அந்த தைரியம் வராது. இவன் மேல் நான் காப்பாளியிடம் எத்தன விதமான புகார் செய்யலாம்? உடனே அவனை உள்ளே போட்டுவிடுவார்கள். பின்னால் அவன் எப்படி என்மேல் புகார்செய்ய முடியும்?” என்று ஆழம் பார்த்தார்.

மயிலே, மயிலே இறகு போடு என்றால் வேலை நடக்காது, கொஞ்சம் விரட்டினால்தான் நடக்கும் என்று புரிந்துகொண்ட ஷிஃபாலி. “ஓகே சார், உங்கள் நேரத்தை இனிமேலும் நான் வீணடிக்க விரும்பவில்லை,” என்று எழுந்தாள்.

தான் ஜெயித்துவிட்டோம் என்று கொஞ்சம் இறுமாந்த முனைவருக்கு உடனே அடி விழுந்தது.

நான் இப்பொழுதே மனிதாபிமான அதிகாரி அலுவலகத்திற்குச் சென்று புகார் கொடுத்துட்டுப் போறேன். இதுவரை நாம் பேசியதும் என் ரிகார்டரில் பதிவாகி இருக்கு. நீங்கள் வீண்பழி சுமத்தி ஒருவனின் வாழ்வை வீணாக்கவும் தயாராக இருக்கீங்கன்னு புகார்செய்துட்டுப் போறேன். அதுக்கப்பறம் உங்க பாடு, அவன் பாடு!

சுற்றுலாக்குழுத் தலைவர் வெலவெலத்துப் போய்விட்டார்.

இந்தப் பெண்ணிடம் விறைத்துக்கொள்ள முடியாது பொலிருக்கிறதே! ஓய்வு பெறுவதற்கு இன்னும் பத்து மாதங்கள்தான் இருக்கின்றன. அதற்குள் புகார், விசாரணை என்று படி ஏறி இறங்க வேண்டுமா? அதுவும் ஒரு எடுபிடிச் சனியனிடம் தகராறு செய்துகொண்டு? எப்படி அந்த எடுபிடி இந்தப் பெண்ணைப் பிடித்தான்?என்று மனதிற்குள் பொறுமினார்.

எதற்கு மேடம் இந்த அளவுக்குக் கோபப்படறீங்க? போயும் போயும் ஒரு எடுபிடிக்காக நாம் இந்த நல்ல நேரத்தில் தகராறு செய்துகொள்ளணுமா? உங்களுக்காக அந்த நாயை நான் மன்னித்து விட்டுவிடறேன். ஆனால் நீங்க சொன்னபடி அந்த நாய் என்னிடம் மனந்திருந்தி மன்னிப்புக் கேட்டுக்கொண்டாத்தான் நான் இரக்கம் காட்டமுடியும்.” என்று குழைந்தார்.

அந்த ஆளைப் பார்க்கவே ஷிஃபாலிக்கு ஒருபக்கம் அருவறுப்பாகவும், இன்னொரு பக்கம் எரிச்சலாகவும், மற்றோரு பக்கம் பரிதாபமாகவும் இருந்தது.

அவள் என்றுமே எடுபிடிகளுக்கு பரிந்து பேசியதில்லை. அவர்கள் தங்களுக்கு பணிபுரிவதற்கு என்றே பிறப்பெடுத்தவர்கள் என்று நம்பி வந்தவள்தான். ஆனாலும் இந்தி தெரிந்திருந்ததால் ஈஸ்வரனுக்கு ஒரு விதிவிலக்கு கொடுத்தாள்.

சரி சார். நீங்களே இவ்வளவு தூரம் சொல்லும்பொது நான் ஏன் உங்களைப் பற்றிப் புகார் செய்யப் போகிறேன்? இப்பவே, நீங்கள் உங்கள் ஆபீசுக்குத் தகவல் சொல்லுங்க. நான் அந்த எடுபிடிப் பையனை உங்களிடம் மன்னிப்புக்கேட்க அனுப்பிவைக்கறேன். இன்னும் ஒரு விஷயம். இவள்தான் சீனா போய்டுவான்னு அந்த எடுபிடியைப் பின்னால் அதட்டி உருட்டமாட்டீங்கங்கற என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.”

மீண்டும் ஒரு கொக்கியைப் போட்டு அவர் குடுமியைத் தன்கையில் வைத்துக் கொண்டிருப்பதாக மறைமுறைமாக அவரிடம் எச்சரித்ததபடி, அவர் சொல்வதற்குச் சம்மதம் தெரிவித்தாள்.

அவர் தன் அலுவலகத்துடன் தொடர்புகொண்டு, ஈஸ்வரனின் பதவி நீக்கத்தை ரத்துசெய்தவுடன் ஷிஃபாலி எழுந்து வந்து அவருடன் கைகுலுக்கினாள்.. . .

. . . .“மத்ரா வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் இறங்குவதற்குத் தயார் செய்துகொள்ளுங்கள்!” என்று ஒரு இனிய பெண்குரல் ஷிஃபாலியை நிகழ்காலத்திற்குக் கொணர்கிறது.

*          *          *         

(தொடரும்)

 

2 COMMENTS

  1. யாராவது ஒருவர் நினைவு இழந்துதான் இந்த சண்டை முடிய வேண்டும் என்றால் – காப்பாளியை மின் கம்பியினால் என்னைத் தாக்கி நினைவு இழக்கச் சொல்லுங்கள். சண்டை முடிந்து நீங்கள் சந்தோஷமாக வீட்டிற்குத் திரும்பச் செல்லலாம்!”- Nicely put . The crowd also responded for this “true” words. Very touching.

  2. அம்பாகப் பறக்கும் விரைவுத் தொடரி போல கதை சீறிப்பாய்கிறது.. ஷிபாஃலியிடம் காணும் எடுபிடிக்கு ஆதரவான மனிதநேயம் வியக்க வைக்கிறது..

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு – இரண்டாம் பாகம் – அத்தியாயம் 1

ஒரு அரிசோனன் தஞ்சாவூர் சோழர் அரண்மனை சாதாரண, 28 - பொது ஆண்டு 1010 ஐந்து பாணர்கள் யாழை மெல்ல இசைத்துக்கொண்டிருக்கின்றனர். திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ சோழத்தேவர் கண்களை மூடி அதை இரசித்துக் கொண்டிருக்கிறார். அவர் ஈழப்...

பொன்னியின் செல்வனின் தமிழ்க் கனவு – இரண்டாம் பாகம் – இடைச்செருகல் தொடர்ச்சி….

ஒரு அரிசோனன் இடைச்செருகல் தொடர்ச்சி…. ஆ. கீழக் கடம்பூர் மாளிகை சுக்கில, ஐப்பசி 8 - அக்டோபர் 23, 9696 . . . வீரபாண்டியனின் தலையை ஈட்டியில் சொருகிக்கொண்டு சென்று அதை வெற்றி ஊர்வலமாக தஞ்சைக்கு எடுத்துச்சென்றது...

பொன்னியின் செல்வனின் தமிழ்க் கனவு – இரண்டாம் பாகம் – திருப்பணித் துவக்கம்

ஒரு அரிசோனன் திருப்பணித் துவக்கம் இரண்டாம் பாகத்தின் முக்கிய இடங்களும், கதாபாத்திரங்களும் இடங்கள்: சோழப் பேரரசு: தென்னிந்தியாவில் துங்கபத்திரை நதியிலிருந்து கலிங்கம் (ஒரிசா) வரை வடக்கிலும், குமரி வரை தெற்கிலும், வட இலங்கையும் அடங்கியது. தஞ்சாவூர் (தஞ்சை)...

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு – இரண்டாம் பாகம் – திருப்பணித் துவக்கம்

ஒரு அரிசோனன் அறிமுகம் ஆசிரியன் குறிப்பு:  எனது முகநூல் நண்பர்களும், வாட்ஸ் அப் குழும உறுப்பினரும், இன்னும் சிலபலரும் என்னுடன் தொடர்பு கொண்டு சில கேள்விகளைக் கேட்டார்கள்.   அவர்களுக்குக் கொடுத்த விளக்கத்தை உங்களுக்கும் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். ...

பொன்னியின் செல்வனின் தமிழ்க் கனவு – முதல் பாகம் [நினைவூட்டல்] – பொது ஆண்டு 2411

ஒரு அரிசோனன் ஆசிரியனின் குறிப்பு: சரித்திரப் புதினம் என்று பழந்தமிழ் மன்னரின் வரலாற்றை எதிர்பார்த்து, முதல் பாகம் இறுதிவரை படித்த ஒரு சிலருக்கு, ‘என்னது, இது ஒரு விஞ்ஞானப் புதினமாக (Science Fiction) மலர்ந்து வந்திருக்கிறதே,’...