0,00 INR

No products in the cart.

பொன்னியின் செல்வனின் தமிழ்க் கனவு – முதல் பாகம் – அத்தியாயம் 4

ஒரு அரிசோனன்

ஷிஃபாலியின் குடியிருப்பு, ஷெனாய்

பிரஜோற்பத்தி, ஆடி 1 – ஜூலை 15, 2411

யத்துக்கு மெருகேற்றித் தடவியதுபோல, நிமிஷா அணிந்திருந்த உடை பளபளக்கிறது. “உனக்குப் பிடித்திருக்கிறதா காம்ஸ்?” என்று அவள் கேட்ட கேள்விக்கு காமாட்சி பதில்சொல்ல விரும்பவில்லை.

ஒவ்வொரு தடவையும் அதிர்ச்சி தருகிற மாதிரிதான் நிமிஷா உடை அணிந்துகொள்கிறாள். இந்த லட்சணத்தில் அந்த உடையை அணிந்து காட்டும்படி காமாட்சியையும் வற்புறுத்துகிறாள். காமாட்சிக்கு இந்தமாதிரி உடுப்புகளைப் பார்க்கக்கூடப் பிடிக்காது. அப்படியிருக்க இம்மாதிரி உடைகளை அணிந்துகொள்வதைப் பற்றிக் கனவில்கூட நினைக்க விரும்பவில்லை. இருந்தாலும் சிரித்துக்கோண்டே மழுப்பி, மறுத்து வருகிறாள்.

“என்ன காம்ஸ், நான் கேட்டதுக்குப் பதிலே சொல்ல மாட்டேங்கறே?” என்று அவளை உசுப்புகிறாள், நிமிஷா.

அதற்கு வெறும் புன்னகையைப் பதிலாகத் தருகிறாள், காமாட்சி.

“நீங்க எதைப் போட்டுக்கிட்டாலும் நல்லாத்தான் இருக்கும், நிமிசாம்மா! எனக்கு இதைப்பத்தி என்ன தெரியுமின்னு என்னைக் கேக்குறீங்க? நான் என்ன கண்டேன், உங்க உடுப்பைப் பத்தி? எனக்குத் தெரிஞ்சதெல்லாம் புடவையும், ரவிக்கையும்தாம்மா!” என்று சமையல் செய்வதில் முனைகிறாள்.

அவள் தம்பி ஏகாம்பரநாதன் பளபளக்கும் பிளாஸ்டிக் காகிதங்களைத் தான் செய்த தேரில் ஒட்டிக் கொண்டிருக்கிறான். முதல்நாள் இரவு காமாட்சி சொன்ன கதையில் வந்த தேரின் வர்ணனையை நினைவுபடுத்தி உருவாக்கிக் கொண்டிருக்கிறான். அவனது இந்த முயற்சி நிமிஷாவுக்கு மிகவும் பிடித்திருப்பதால், தன்னிடமிருக்கும் வழவழப்பான வண்ணக் காகிதங்கள், துணிகள், நுரை அட்டைகள் (thermacole foam boards) இவற்றை அவனுக்குத் தாராளமாக எடுத்துத் கொடுத்திருக்கிறாள். அதனாலேயே ஏகாம்பரநாதனுக்கு நிமிஷாவை மிகவும் பிடித்துப்போகிறது.

“எப்பவும் நீ இப்படித்தான், காம்ஸ்! நான் என்ன கேட்டாலும் ஒழுங்காகப் பதில்சொல்லவே மாட்டே! நான் போட்டிருக்கிறது நல்லா இருக்கா இல்லையான்னு எப்படித்தான் தெரிஞ்சுக்கறதாம்?”

பொய்க் கோபத்துடன் காமாட்சியை அதட்டுகிறாள், நிமிஷா.

கடந்த பத்து நாள்கள் ஒன்றாகத் தங்கியதில் நிமிஷாவுக்கு அவர்கள் இருவர்மீதும் ஒரு ஒட்டுதல் ஏற்பட்டு இருக்கிறது. அதுவும் ஏகாம்பரநாதன்மீது அவளுக்கு ஒரு அலாதியான பாசம் உண்டாகிவருவதை உணர்கிறாள். அவள் கண்டபடி இரைத்துவிட்டுச் செல்வதையெல்லாம் அவன் அழகாக அடுக்கிவைப்பான்.

இதுதவிர, அவள் வேண்டாம் என்று எறிவதையெல்லாம் கலைப்பொருள்களாக மாற்றிவிடுவான். அட்டைகள், கொண்டை ஊசிகள், ஜிகினாத் தாள்கள், தகடுகள், நூல்கள், இப்படி எது கிடைத்தாலும் சரி, அவன் கண்களுக்கு அவை ஒரு கலைப் பொருளின் ஒரு பகுதியாகத்தான் தெரியும். அவன் அப்படிச் செய்து தனக்குத் தந்து வரும் கலைப் பொருள்களைத் தன் நண்பர்களுக்குப் பரிசாகவும் அளித்துவருகிறாள், நிமிஷா.

சமையல் முடிந்து எல்லாவற்றையும் காமாட்சி மேசையில் நடுவில் எடுத்து வைக்க ஆரம்பிக்கிறாள். கேட்காமலேயே காமாட்சிக்கு உதவி செய்ய ஆரம்பிக்கிறான், ஏகாம்பரநாதன்.

அக்காளுக்கும், தம்பிக்கும் இடையே நடக்கும் இப்படிச் சொல்லற்ற செய்கைகள் நிமிஷாவுக்கு வியப்பை ஊட்டுகின்றன. இந்தமாதிரி தனக்கும் தன் அன்னைக்கும் இடையும் ஏன் ஒருபொழுதும் நிகழ்வதில்லை என்று எண்ணிப் பார்க்கிறாள் அவள். இது எதனால் நடக்கிறது?

“காம்ஸ், உன்னை நான் ஒண்ணு கேப்பேன், மழுப்பாம எனக்குப் பதில்சொல்றியா?” என்று கனிந்த குரலில் கேட்கிறாள், நிமிஷா.

இவ்வளவு கனிவாகத் தன்னுடன் நிமிஷா இதுவரை பேசியது கிடையாது என்பதை உணர்ந்த காமாட்சி, சட்டென்று அவளைத் திரும்பிப் பார்க்கிறாள். அவள் புருவங்கள் வில்லாய் வளைந்து ஏனென்று கேட்கின்றன.

“நான் பத்து நாளா உன்னையும், ஏக்ஸையும் பாத்துக்கிட்டு வரேன். சில சமயம் நீங்க ரெண்டு பேரும் பேசிக்கவே மாட்டேங்கறீங்க. ஆனாலும், பேசிக்கிட்ட மாதிரி காரியத்தை மட்டும் செய்யறீங்களே, அது எப்படி?” நிமிஷாவின் கேள்வி காமாட்சிக்கு வியப்பூட்டுகிறது.

இந்த மாதிரி ஒரு கேள்வியை நிமிஷாவிடமிருந்து அவள் எதிர்பார்க்கவே இல்லை. தன்னையும் தன் தம்பியையும் எப்படி உன்னிப்பாக கவனித்திருக்கிறாள் என்பதைப் பற்றி சிந்தித்தால் அவளால் நம்ப முடியவில்லை. எடுபிடிகளான தங்களிடம் இருக்கும் ஒரு பழக்கத்தை அறிந்துகொள்ள மேல்தட்டைச் சேர்ந்த இவளுக்கு விருப்பமா?

காமாட்சிக்கு மனது நெகிழ்ந்துபோகிறது.

“இப்படி நடந்துக்கறதை குறிப்பறிஞ்சு செய்யறதுன்னு எங்க அம்மாவும், அப்பாவும் சொல்வாங்க. எப்பவும் நம்மைச் சுத்தி இருக்கவறங்களைக் கவனிச்சுக்கிட்டு இருக்கணும்னு சொல்லுவாங்க. அதோட மட்டுமில்ல, அவங்களுக்கு என்ன வேணும்னும் கவனிக்கணும்பாங்க. நான் சமையலை முடிச்சிட்டேன். எல்லாத்தையும்கொண்டு வந்து மேசைல வைக்கறத என் தம்பி பாத்துக்கிட்டுத்தானே இருக்கான்! அக்கா தனியா இம்புட்டு வேலையச் செய்யவேணாம்புட்டுதான் எனக்கு ஒதவியா சித்துவேலை செய்யவே கூடவந்துட்டான். இதே மாதிரிதான் நீங்க கீழே போட்டுட்டுப் போறதை எடுத்து அடுக்கிவைக்கறான். ஒங்களுக்கு என்ன வேண்டாம்னு தெரிஞ்சிக்கிட்டு, அதை எடுத்து பொம்மைங்க செய்யறான். இதெல்லாம் எங்களுக்கு ரத்தத்துலேயே ஊறிப்போன விசயம்மா. நீங்களும் அதே மாதிரி ஒங்க அம்மாவைக் கவனிச்சுப் பாத்தீங்கன்னா அவுங்களுக்கு என்ன வேணும்னு தெரிஞ்சுக்கிட முடியும். அவுங்களும்…”

சொல்ல வந்ததைச் சொல்லாமல் நிறுத்திக்கொள்கிறாள், காமாட்சி.

“ஏன் நிறுத்திட்ட, காம்ஸ்?”

“ஒண்ணுமில்ல, நிமிசாம்மா. எதுவரைக்கும் பேசணும்னு தெரியாமக் கொஞ்சம் மேலேயே பேசிப்புட்டேன். மன்னிச்சுக்கிடுங்கம்மா.” பேசாமடந்தையாகிவிடுகிறாள், காமாட்சி. அதன் பொருள் தெரியாமல் குழம்புகிறாள் நிமிஷா.

“எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டேன். சாப்பிட வாங்கம்மா!” என்று அழைப்பு வருகிறது.

நாற்காலியில் அமர்ந்து சாப்பாட்டைக் கொறிக்க ஆரம்பித்த நிமிஷா, “ஏக்ஸ், நீயும் என்னோட சாப்பிட வா!” என்று அழைக்கிறாள்

ஏகாம்பரநாதன் மாட்டேன் என்று தலையை ஆட்டுகிறான்.

“காம்ஸ், ஏக்ஸை என்னோட ஒக்காந்து சாப்பிடச் சொல்லு, மாட்டேங்கறான் பாரு,” என்று காமாட்சியை உதவிக்கு அழைக்கிறாள் நிமிஷா.

“நிமிசாம்மா, அவனைக் கட்டாயப் படுத்தாதீங்கம்மா. யாரு, யாரோட ஒக்காந்து சாப்பிடறதுன்னு ஒரு வரைமுறை இருக்கு. அதை நாங்க மீறாம இருக்கறதுதான் எங்களுக்கும் நல்லது. ஒங்களுக்கும் அழகு.” என்று அறிவுரை கூறும் குரலில் பதில் கிடைக்கிறது.

புரியாமல் காமாட்சியை ஏன் என்று கண்களால் வினவுகிறாள்.

“ஒங்களுக்கு ரொம்ப நல்ல மனசு, நிமிசாம்மா. அப்படியே அதைப் புரிஞ்சுக்கிட்டு இருக்கறவரைக்கும் இருந்துட்டுப் போயிடறோம்மா. இதுக்கு மேலே என்னை எதுவும் கேக்காதீங்கம்மா. அதுக்கு ஒங்களுக்குப் புரியறபடி நான் பதில்சொல்லறது நல்லா இருக்காதும்மா.”

மேலே ஒன்றுமே பேசாமல் நிமிஷாவுக்குப் பரிமாறி முடித்துவிட்டு, அங்கிருந்து தம்பியை அழைத்துச் செல்கிறாள், காமாட்சி.

காமாட்சி கடைசியாகச் சொல்லிவிட்டு நிறுத்திக் கொண்டதின் பொருள் நிமிஷாவுக்கு விளங்கவே இல்லை.

புரியாத குழப்பத்துடன் சுவையான அந்தச் சாப்பாட்டை ரசித்துச் சாப்பிட ஆரம்பிக்கிறாள் நிமிஷா.

*          *          *

விண்வெளி ஆராய்ச்சி மையம், காரைகட்

பிரஜோற்பத்தி, ஆடி 1 – ஜூலை 15, 2411

காரைகட் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் “இ” பிரிவு மிகவும் பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதன் தலைவரான சோம்காந்த் தன்னிடம் வேலைபார்க்கும் நிபுணர்களோடு மட்டுமல்லாது, மற்ற பிரிவுகளிலுமுள்ள சிறந்த வானியல் ஆராய்ச்சி நிபுணர்களையும் தன் “இ” பிரிவுக்கு வரவழைத்திருக்கிறார். மற்றபடி சீனா, மற்றும் பல நாடுகளிலிருக்கும் வானியல் ஆராய்ச்சி நிபுணர்களும் கலந்துரையாடலில் பங்குபெற இணையத்தின் மூலம் இணைக்கப்பட்டிருந்தனர். விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் பெரிய அரங்கத்தில் (auditorium) குழு கூடியிருக்கிறது.

மேடையில் சோம்காந்த், சஹஜா, மற்றும் சில நிபுணர்கள் அமர்ந்திருக்கின்றனர். அனைவரும் ஒருவிதமான எதிர்பார்ப்புடன் மெதுவான குரலில் கசமுசவென்று தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கின்றனர். இத்தனை பேரையும் அவசர அவசரமாக ஒருமணி நேரத்திற்குள் கலந்துரையாடலுக்கு அழைத்திருப்பதன் காரணம் என்ன என்ற துடிப்பு அனைவருக்குள்ளும் ஒரு பரபரப்பைத் தூண்டுகிறது.

“க்ளிங், க்ளிங்” என்று மணி அடிக்கிறது. உடனே பேச்சுக் குரல்கள் அடங்கி அரங்கத்தில் அமைதி நிலவுகிறது.

சோம்காந்த் தன் இருக்கையை விட்டு எழுந்திருக்கிறார்.

“என் அருமை நட்பு நிபுணர்களே! இதுவரை நாம் எதிர்கொள்ளாத ஒரு நிகழ்ச்சியைக் காண இருக்கிறோம். நாம் இதுவரை காணாத அளவுக்கு நிகழப்போகும் சூரியக் கதிர்வீசல் மட்டுமல்ல, இன்னும் ஒரு புரியாத நிகழ்ச்சியும் அதனோடு சேர்ந்து நிகழும் வாய்ப்பும் இருக்கிறது. தயவுசெய்து அனைவரும் ஹோலோ ப்ரொஜக்‌ஷன் கண்ணாடியை அணிந்துகொள்ளுங்கள். நான் விளக்கத்தை ஆரம்பிக்கிறேன்.” என்று அழைப்பு விடுக்கிறார்.

அரங்கத்தில் அனைவரும் ஹோலோ-ப்ரொஜக்‌ஷன் கண்ணாடியை அணிந்துகொள்கிறார்கள். அவர்கள்முன் சூரியனின் மேற்பரப்பில் தோன்றிய குழப்பங்களும், சூழலும் கதிர்களும் தோன்றுகின்றன.

“சாதாரணமாக ஒரு ஆண்டில் சூரியக் கதிர்வீசல்கள் நிமிஷத்திற்கு நூறு நானோ-டெஸ்லாவுக்கும் (NanoTesla/minute) குறைவான பூகாந்தப் புயல்கள் (Magnetic Storms) நாலிருந்து ஐந்தைத் தோற்றுவிக்கின்றன என்பதும், அவைகள் விண்வெளி ஒலிபரப்பைச் சிறிது பாதிக்கும் என்பதும் நீங்கள் நன்கு அறிந்ததே!

“நானூறு ஆண்டுகளுக்கு முன்பு நிமிஷத்திற்கு 348 நானொ டெஸ்லா அளவுக்கு வீசிய பூகாந்தப் புயல் மின்சாரக் கம்பிகளில் புவி தூண்டிய மின்சாரத்தை (Geo induced current or GIC) ஏற்படுத்திச் சில அதிக-மின்னழுத்த டிரான்ஸ்ஃபார்மகளைச் (EHVTransformers) சேதப்படுத்தியது. அந்தமாதிரி ஒரு டிரான்ஸ்ஃபார்மரின் விலை அந்தக் காலத்திலேயே ஐம்பது லட்சத்திலிருந்து இரண்டரைக் கோடி ரூபாய்வரை இருந்தது. அதனால் அந்தக் காலத்திலேயே பலநூறு கோடிக்கணக்கான ரூபாய்கள் இழப்பும், மின்வெட்டும் ஏற்பட்டன.

“பெரிய பூகாந்தப் புயல்களால் எப்படிப்பட்ட தொந்தரவுகள், பொருளாதார இழப்புகள் வரும், அதை எப்படிச் சமாளிக்கலாம் என்பது பற்றி அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஆராய்ச்சிகளும் ஏற்பாடுகளும் செய்துவந்தன. ஆனால் எதிர்பார்த்த அளவுக்குப் பூகாந்தப் புயல்கள் நிகழவில்லை. எனவே அந்தவிதமான ஆராய்ச்சிகளும் மிகவும் குறைந்துவிட்டன.

“இப்பொழுது நாம் பார்க்கும் சூரியக் கதிர்வீசல் அதைவிடப் மிகமிகப் பெரிய பூகாந்தப் புயலை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. கணக்கிட்டால் நிமிஷத்திற்கு 1500 நானோ-டெஸ்லாவுக்கும் அதிகமான பூகாந்தப் புயலை அது ஏற்படுத்தும் என்று அஞ்சுகிறேன். இந்த மாதிரியான பூகாந்தப்புயல் லட்சத்து ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஏற்படக்கூடும் என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இப்படிப்பட்ட புயல் விண்வெளித் தொடர்பு மட்டுமன்றி டிரான்ஸ்ஃபார்மர்களுக்கு அளவிடமுடியாத சேதங்களை ஏற்படுத்தக்கூடும்.

“பொதுவாக பூகாந்தப் புயல்களின் தாக்கம் வட ஐரோப்பிய, வட அமெரிக்க, மற்றும் வட சைபீரிய நாடுகளில் மட்டுமே ஏற்பட்டுவந்தன. ஆனால் இந்தமுறை இதன் தாக்கம் அந்தப் பகுதிகள் மட்டுமன்றி, சீனா, இந்தியாவுடன் உலகம் முழுவதும் பரவலாம் என்று தோன்றுகிறது. இதன் விளைவு மிகவும் பயங்கரமாக இருக்கக்கூடும்.”

இதைச் சொல்லிவிட்டு, சில கணங்கள் அமைதியாக அரங்கத்தில் உள்ளவர்களின் பதில் உணர்வுக்காகக் காத்திருக்கிறார், சோம்காந்த்.

“ஓ!” என்ற முனகல் மெதுவாக ஆரம்பித்துப் பலமாகத் தொடர்கிறது.

முதல்நாள் சோம்காந்த் எப்படி முனகினாரோ, அப்படி அரங்கமே முனகுவதுபோல ஸஹஜாவுக்குத் தோன்றுகிறது.

இவ்வளவு மோசமான விஷயத்தை நான்கு நாட்கள் மறைத்துவிட்டோமே என்று நினைக்கும்போது இதயத் துடிப்பே ஒரு விநாடி நின்று விட்டுத் தொடங்குகிறது.

உடனேயே பல குரல்கள் கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பிக்கின்றன. அரங்கத்தில் ஒரே கூச்சலாக இருக்கிறது.

சோம்காந்த் கையை உயர்த்தி அமைதியை வேண்டுகிறார். மெல்ல இரைச்சல் குறைந்து அமைதி நிலவுகிறது.

“இன்னும் நான் சொல்ல வந்ததைச் சொல்லி முடிக்கவில்லை. எனக்கு இன்னும் கொஞ்சநேரம் கொடுங்கள். நான் முடித்துவிடுகிறேன். பிறகு கலந்துரையாடலைத் துவக்கலாம்.” என்று தொடர்கிறார்.

“பட்ட காலிலேயே படும் என்பதுபோல, இப்பொழுது இன்னும் ஒரு நிகழ்ச்சியையும் நமது கொட்கல் விண்வெளி ஆராய்ச்சிநிலையம் கண்டுபிடித்திருக்கிறது.”

இதைச் சொன்னதும் ஸஹஜா பயத்துடன் எழுந்துநிற்கிறாள். அரங்கத்தில் மட்டுமல்ல, இணையம் மூலம் தொடர்புகொண்டிருக்கும் அத்தனை பேர்களுடைய கண்களும் அவள்மீது நிலைக்கின்றன. அது ஸஹஜாவின் உடம்புக்குள் நடுக்கத்தை உண்டாக்குகிறது. அனைவருக்கும் கைகூப்பி வணக்கத்தைத் தெரிவித்து விட்டு அமர்கிறாள்.

“இப்பொழுது சூரியனைச் சுற்றியிருக்கும் பலவிதமான சுழலும் கதிர்களையும் இவைகள் ஒருவகையான ஒளியைப் பரப்புவதையும் கவனியுங்கள். அவைகளின் வடிவமைப்பு, அசையும் விதம் – இவற்றை பார்க்கும்போது இவை சூரிய மண்டலத்திற்குச் சொந்தமானவை அல்ல என்றே தோன்றுகிறது. இவற்றை இரண்டாம் நிகழ்ச்சி (second phenomenon) என்று குறிப்பிடுவோம். சற்றுப் பொறுங்கள்!” என்று கூறி தன் கையில் ஒரு கோலை எடுத்து சில சைகைகள் செய்கிறார்.

உடனே சூரியன் மிகச் சிறியதாக ஆகிவிடுகிறது. சூழலும் கதிர்கள் எங்கோ தொலைவில் இருப்பதுபோலத் தெரிகின்றன. அவை வடிவம் பெரிதாகிச் சுழலுகின்றன. இப்பொழுது அந்தக் கோடுகளுக்குள் உள்ளவை தெரிய ஆரம்பிக்கின்றன.

அவற்றின் உள்ளே ஏதோ கொதித்துக் கொண்டிருப்பதுபோலத் தோன்றுகிறது. அப்படிக் கொதிக்கும் திரவம் அவ்வப்போது கதிர்களுக்கு வெளியில் சிதறுகிறது. அப்படிச் சிதறும் சமயம் வெளியேறும் துளிகள் வெடித்துப் பலவிதமான வண்ணங்களுடைய ஒருவிதமான அச்சமூட்டும் ஒளியைப் பரப்புகின்றன.

“நண்பர்களே! இந்த அமைப்புகள் நமது சூரிய மண்டலத்தைநோக்கி விரைந்து வருகின்றன. இவை எந்த விதமான கதிர்வீசல்களைப் பரப்பும், இவை மனித இனத்திற்குக் கெடுதல்செய்யுமா, இதனால் தீமையா, நன்மையா என்று தெரியவில்லை. இந்தத் ‘தெரியாமையின் அச்சம்’தான் (Fear of the unknown) என்னைக் குழப்புகிறது.”

சோம்காந்த் மேலும் தொடருகிறார். “நான் மேலிடத்திற்கு இந்நிகழ்ச்சியைப் பற்றித் தெரிவித்துவிட்டேன். நாம் ஒன்றுசேர்ந்து இரண்டாவது நிகழ்ச்சியைப் பற்றி ஆராய்ச்சிசெய்து, அதன் விளைவு என்ன என்பதைக் கண்டுபிடித்தாக வேண்டும். நேரம் என்பது நமக்குக் கிடைக்காத ஒரு ஆடம்பரமாகும். கோட்கல் மூலம் கிடைத்த விபரங்கள் உங்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை ஆராய என்னைத் தலைவனாக மேலிடம் நியமித்துள்ளது. ஆகவே, உங்கள் கண்டுபிடிப்புகளையும், ஆராய்ச்சி முடிவுகளையும் எனக்கு அவ்வப்பொழுது அனுப்புங்கள். எவ்வளவு சிறிய விஷயமாக இருந்தாலும் விட்டுவிடாதீர்கள்! எனக்கு நேரடி உதவியாக இங்கு பதினைந்து நிபுணர்களும் கொட்கல் ஆய்வாளர் ஸஹஜாவும் இருப்பார்கள்.

“இந்திய, சீன மேலிடம், மற்றும் அனைத்து அரசாங்கங்களுக்கும் இந்நிகழ்ச்சியைப் பற்றி தகவல் அனுப்பி உள்ளோம். அரசாங்கம் இந்நிகழ்ச்சிகளுக்கு எப்படிப்பட்ட பாதுகாப்பு, மற்றும் பதில் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று தீர்மானித்துவருகிறது. நீங்கள் இந்தக் கூட்டத்தைப் பற்றியோ, அல்லது இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்பதைப் பற்றியோ எவருக்கும் – உங்கள் குடும்பத்திற்கும்கூடத் தெரிவிக்கக்கூடாது.

“கடைசியில் என் கவலை வீண் கவலையாக ஆனாலும் ஆகக்கூடும். அப்படி ஆகவேண்டும் என்றுதான் நான் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொண்டு வருகிறேன். இனிமேல் பேச ஒன்றும் இல்லை. எனக்குத் தெரிந்த அளவுக்கு உங்கள் எல்லோருக்கும் தெரிந்தாகிவிட்டது. உங்கள் கூட்டுறவு, உதவி மிகவும் தேவைப்படுகிறது. உங்கள் இருப்பிடத்திற்குச் சென்று உடனே ஆராய்ச்சியைத் தொடங்குங்கள். குட்லக்.”

கண்ணாடியைக் கழட்டி விட்டு மேடையை விட்டு இறங்குகிறார் சோம்காந்த். ஸஹஜாவும் அமைதியாக அவரைப் பின் தொடர்கிறாள்.

([1]   சோம்காந்த் கொடுக்கும் விளக்கங்கள் சென்ட்ரா டெக்னாலஜி (CENTRA Technology.) நிறுவனத்தால், அமெரிக்க ஐக்கிய நாட்டின், உள்நாட்டு பாதுகாப்பு இலாகாவுக்குக் கொடுத்த “பூகாந்தப் புயல்கள் (Geomagnetic Storms)” என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டன.)

*          *          *

ஷிஃபாலியின் அலுவலகம், மத்ரா

பிரஜோற்பத்தி, ஆடி 1 – ஜூலை 15, 2411

ன் முன்னால் கைகட்டி நின்ற அழகேசனை ஏற-இறங்கப் பார்க்கிறாள், ஷிஃபாலி. அவன் கைகட்டி நின்றிருந்தாலும் அதில் இருக்கும் கம்பீரம் அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மாநிறத்திற்கும் ஒரு மாற்று கருப்பாக இருந்தாலும், அவன் முகத்தில் ஒரு தனிக்கவர்ச்சி இருக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக மல்யுத்த வீரனாக இருந்து, சில நாள்களுக்கு முன்னால் அந்தத் தொழிலே வேண்டாம் என்று விட்டுவிட்டான் என்பதை அவளுக்குத் தெரிவிக்கிறான் அவன்.

“அம்மா, எனக்கு சண்டைபோடப் பிடிக்காமல் போயிட்டுதும்மா. அதுதான் வேறவேலை செய்யலாம்னு கிளம்பிட்டேன்,” என்றவனை உற்றுப் பார்க்கிறாள்.

“ஏன், பயமா?” என்றவுடன், கோபத்துடன் இடைமறித்து, “அது எங்க பரம்பரைலேயே கிடையாதும்மா! இன்னொரு தடவை இந்தமாதிரி கேட்டா எனக்கு புடிக்காதுங்க,” என்று பதிலளிக்கிறான்.

“என்னப்பா இது? கேள்வி கேட்டா உனக்கு இப்படி மூக்குக்குமேல கோபம் வருது? நல்லா விசாரிச்சுத்தானே வேலைக்கு எடுத்துக்க முடியும்? அஞ்சு வருஷமா செஞ்சுக்கிட்டிருந்த வேலையை, அதுவும் நல்லாப் பணம் கிடைக்கற வேலையை, உடம்புக்கு ஒண்ணும் ஆகாதபோது திடும்னு விட்டுட்டேனு சொன்னா கேள்வி கேக்கமாட்டாங்களா? உனக்கு வேலை வேணுமா, வேணாமா? இப்படி எதுக்கெடுத்துக்கெல்லாம் கோவிச்சுக்கற ஆளை எப்படி வேலைக்கு எடுத்துக்கமுடியும்?” என்று பட்டென்று கேட்கிறாள், ஷிஃபாலி.

“அம்மா. எனக்கு வேலை கொடுக்கறதும், கொடுக்காததும் உங்க இஷ்டம். அதை நான் கட்டுப்படுத்த முடியாது. ஒரு ஆளை வேலைக்கு எடுத்துக்கறத்துக்கு முன்னால நீங்களும் நல்லா விசாரிக்க வேண்டியதுதான். நானும் அதுக்கு நல்லாப் பதில்சொல்ல வேண்டியதுதான். வேலைய வுட்டதுக்கு என்ன காரணமுன்னு கேட்டுருந்தா அதுக்குப் பதில்சொல்லாம இருப்பேனா?

“நாக்குமேல பல்லைப்போட்டுப் பயமான்னு எப்படிக் கேட்டுப்புட்டீங்க? என் கன்னத்துல நீங்க அறைஞ்சாக்கூட எனக்குக் கோவம் வராதும்மா, ஏன்னா, இத்தனை நாளும் தினந்தினம் அடிவாங்கறதுதான் எம்பொழப்பா இருந்துச்சு. பயப்படற மனுசன் எப்படிம்மா காவக்காரன் வேலைக்கோ, புள்ளைகளப் பாத்துக்கற வேலைக்கோ போகமுடியும்? அப்படிப்பட்டவனை நீங்க வேலைக்கு எப்படிம்மா எடுக்கமுடியும்?

“என்னைய வேலைக்கு எடுத்தா, என்னைப் போகச்சொல்லற வரைக்கும் உங்க பாதுகாப்புக்கு என் உயிரைக்கூடக் கொடுப்பேம்மா. நாளைக்கி சோறு துண்ணணுமே, அதுனால எனக்கு வேலை கண்டிப்பா வேணும்மா. நீங்க ஏன் வேலைய விட்டேன்னு கேட்டதுக்கு பதில் இதுதாம்மா – மத்தவங்களோட பொழுதுபோக்குக்காக மனுசனை மனுசன் எதுக்கு அடிச்சுக்கறது அப்படீன்னுதான் வுட்டுப்புட்டேங்க.

“ஏண்டா, அந்தப் புத்தி இத்தனை நாளா வல்லையான்னு கேட்டா, ஆமான்னுதான் சொல்லணும்மா. இப்பத்தான் அந்தப் புத்தி வந்துதும்மா!” ஏதோ ஒரு அருவறுப்பான செயலைச் செய்துவந்ததுபோல மனம் குன்றிய, வருத்தத்துடன் மடைதிறந்த காட்டாற்று வெள்ளம்போலப் பேசிவிட்டு அமைதியாகிவிடுகிறான், அழகேசன்.

அவன் சொன்ன காரணத்தை அவள் மனம் ஏற்றுக்கொள்கிறது.

“குட். நீ சொல்லறது எனக்குப் புரியுது. நீ பதில்சொன்ன விதமும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. உன் பேரு, அதை என்னால படிக்கக்கூட முடியலை. சுருக்கமா எப்படி உன்னைக் கூப்பிடறது சொல்லு.”

“அழகுன்னு கூப்பிட்டாச் சரிதாங்கம்மா!”

“அழுக். ஓகே, ஓகே!” என்று ஷிஃபாலி சொன்னதும் சிரிக்கிறான், அழகேசன்.

அவன் பற்கள்தான் எவ்வளவு வெள்ளையாக இருக்கின்றன? மல்யுத்தக்காரன் எப்படி பற்களை உடையாமல் பாதுகாத்துக்கொண்டான்?

அவனது சிரிப்புக்குக் காரணம் தெரியாது அவள் விழிப்பதைப் பார்த்தவுடன், “அம்மா, நீங்க சொல்லறதைப் பாத்தா என்னை அழுக்குன்னு சொல்லறாப்பல இருக்கு. நான் அழுக்காவாம்மா இருக்கேன்?” சிரித்தபடி கேட்கிறான், அழகேசன்.

“அப்ப இன்னும் சுருக்கமா கேஷ்னு கூப்படறேன். சுலபமா இருக்கும்.”

“சரிம்மா. அப்ப என் வேலை என்னம்மா?”

சிரித்தவாறே, “நான் உன்னை வேலைக்கு எடுத்துக்கிட்ட மாதிரி இல்ல கேட்கறே?” எனக் கேட்கிறாள், ஷிஃபாலி.

“ஏம்மா, என்னை வேலைக்கு எடுக்கணும்னு நீங்க முடிவு செய்யாட்டா, என்னை எப்படிக் கூப்பிடறதுன்னு ஏம்மா கேக்கப்போறீங்க?” பதிலுக்குச் சிரிக்கிறான், அழகேசன்.

“பரவாயில்லை, ரொம்ப கெட்டிக்காரனா இருக்கே, அது எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு. இன்னும் மூணுநாள் கழிச்சு நீ தஞ்ஜூ வரணும். அங்கே என் பெண்ணும் வருவா. நான் ஒரு வாரத்துல சீனா போயிடுவேன். திரும்பி வர மூணு மாசம் ஆகும். நான் சீனா போனதும், நீ அவகூட ஷெனாய் போகணும். நான் திரும்பிவர்ற வரைக்கும் என் பெண்ணையும், அவகூடத் துணையா இருக்கப்போற ஒரு எடுபிடிப் பெண்ணையும், அவள் தம்பியையும் பத்திரமா பாத்துக்கணும். அவங்க சொல்ற வீட்டுவேலையைச் செய்யணும்.  கூட ஒத்தாசையா இருக்கணும். அவங்களை உன் உயிர்மாதிரி பாத்துக்கணும். ஏன்னா, என் பொண்ணுதான் என் உயிரு.”

வேலையைப் பற்றி விவரிக்க ஆரம்பிக்கிறாள் ஷிஃபாலி.

‘பெண்தான் உயிர் என்றால், உயிரை விட்டுவிட்டு ஏன் மூணுமாசம் வெளிநாடு போகணும்?’ என்று நினைத்துக்கொள்கிறான் அழகேசன்.

இருந்தாலும் அவள் வெளிநாடு செல்வதால்தானே தனக்கு வேலை கிடைக்கிறது என்ற நினைவும் கூடவே வருகிறது. எனவே தன்னுள் எழுந்த அந்த எண்ணத்தை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, ஷிஃபாலி சொல்வதில் கவனம் செலுத்துகிறான்.

“நான் தஞ்ஜூவில் ஹோட்டல் சாம்ராட் ராஜ்ராஜில் இருபத்தைந்தாவது மாடியில் 2518 நம்பர் அறையில் இருப்பேன். ஹோட்டல் ரிஷப்ஷனில் என் பெயரைச் சொல்லிக் கேள். நீ என்னைப் பார்க்கத்தான் வந்திருக்கேன்னு கடிதமும் எழுதித் தர்றேன். உன்னை என் ரூமுக்குக் கூட்டிவருவாங்க. நீ ரொம்பத் துணிமணி எடுத்துட்டு வரவேணாம். உனக்கு யூனிஃபார்ம் நானே எடுத்துக் கொடுத்திடறேன். உனக்கு சம்பளமா கம்பெனில என்ன சொல்றாங்களோ, அதுக்கு மேலேயே போட்டுத் தருவேன். சரிதானே!” என்று கேட்கிறாள், ஷிஃபாலி.

“ஏம்மா மூணுநாள் கழிச்சு வரச் சொல்றீங்க? எனக்கு இங்கே வேறவேலை எதுவும் இல்லை. நீங்க இங்கேந்து போறவரைக்கும் உங்களுக்கு ஏதாவது வேலை செய்யணும்னா அந்த வேலையையும் செய்துட்டுப் போறேன். ஊட்டுக்குப் போயி எங்க ஆத்தாகிட்டயும், அக்காகிட்டயும், புதுவேலை கிடைச்சுருக்குன்னு சொல்லிட்டு ஓடியாந்துடறேங்க.” என்று பணிவுடன் சொல்கிறான், அழகேசன்.

“அதில்லை, கேஷ். நான் இன்னிக்கு ராத்திரி தஞ்ஜூக்குப் புறப்படறேன். அங்கே எனக்கு ஆபீஸ் வேலை ரொம்ப ஜாஸ்தி. அதுனால ஒங்கிட்ட ஒரு நிமிஷம்கூட பேசமுடியாமத்தான் இருக்கும். மூணுநாள் கழிச்சு நீ வந்தா என் பொண்ணும் வந்திருப்பா, எனக்கும் நிறைய நேரம் இருக்கும். இந்த மூணுநாளுக்கும் சம்பளம் நான் கொடுத்திடறேன். அதைப்பத்தி நீ கவலைப்படாதே. உன் அம்மாவோட மூணுநாள் இருந்துட்டுத்தான் வாயேன்.” என்று புன்னகையுடன் சொல்கிறாள் ஷிஃபாலி.

“சரிங்கம்மா. வேலை செய்யாம இருக்கறதுக்கு எனக்கு நீங்க எதுக்கும்மா சம்பளம் கொடுக்கணும்? நான் தஞ்ஜுவுக்கு வந்தப்பறம் சம்பளம் வாங்கிக்கறேம்மா!” என்கிறான், அழகேசன்.

“பரவாயில்லை, கேஷ். நான் கொடுக்கற காசுல உன் அம்மாவுக்கும், அக்காவுக்கும் நான் கொடுத்ததா ஏதாவது வாங்கிக் கொடேன். நீ வேலையை ஒப்புக்கிட்டேன்னு எனக்கும் திருப்தியா இருக்கும். சரிதானா?” என்று கேட்கிறாள், ஷிஃபாலி.

அழகேசன் நெகிழ்ந்துபோகிறான்.

உரிமைக் குடிமக்களுடன் அவன் நேருக்குநேர் அதிகம் பழகியது கிடையாது. எப்பொழுதும் தங்களை அடக்கி, வருத்தி, அதில் மகிழ்ச்சி அடையும் மிருகங்கள் என்றுதான் அவர்களைப் பற்றி நினைத்துவந்திருக்கிறான். அவன் இதுவரை செய்துவந்த தொழிலும் அந்த எண்ணத்தைத்தான் வலுப்படுத்தி வந்திருக்கிறது. அவனுக்காக என்று இதுவரை எந்த உரிமைக் குடிமக்களும் எதுவும் செய்தது கிடையாது.

ஆனால், அவனுடன் முகம்கொடுத்துப் பேசிய முதல் மேல்தட்டுப் பெண் ஷிஃபாலிதான். உன் அம்மாவுக்கும், அக்காவுக்கும் ஏதாவது வாங்கிக்கொடு என்று அவள் சொன்னது அவன் மனதைத் தொட்டுவிடுகிறது.

நாம் ஒட்டுமொத்தமாக எல்லா உரிமைக் குடிமக்களையும் பற்றித் தவறாக முடிவு எடுத்திருக்கிறோமோ என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்கிறான்.  எது எப்படி இருந்தாலும் இவர்கள் நமக்குக் கூலி கொடுக்கிறார்கள், இவர்களுக்கு நாம் உண்மையாக வேலைசெய்ய வேண்டும், அதுதான் ஆத்தா நமக்குச் சொல்லிக்கொடுத்தது என்ற முடிவுக்கு வருகிறான்.

“சரிங்கம்மா! நீங்க சொன்னாப்பல செய்துடறேங்க!” என்று பதில்சொல்கிறான், அழகேசன். ஷிஃபாலி, மேசையிலிருந்து ஒரு உறையை அவனிடம் நீட்டுகிறாள். அதைப் பணிவுடன் வாங்கிக்கொள்கிறான்.

“இதில் என் லெட்டர், உன் வேலைக்கான ஆர்டர், பணம், தஞ்ஜூ வருவதற்கான டிக்கெட் இருக்கு. வேலைக்கான ஆர்டர் காப்பி இன்னொன்னும் இருக்கு. அதை உன் கம்பெனிக்கு கொடுத்துடு.  தஞ்ஜூவில் பார்ப்போம்.”

*          *          *

(தொடரும்…)

2 COMMENTS

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 8

ஒரு அரிசோனன் சோழர் அரண்மனை, ஜயங்கொண்ட சோழபுரம்  காளயுக்தி, கார்த்திகை 16 - டிசம்பர் 2, 1018  சற்று நேரம் வாளாவிருந்த சிவாச்சாரி, தொண்டையைச் செருமிக் கொண்டு மெல்லிய குரலில் விளக்கம் தரத் தொடங்குகிறான்: “ராஜா, போரில்...

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 7

ஒரு அரிசோனன் தென்பாண்டி நாடு  காளயுக்தி, வைகாசி 16 - ஜூன் 2, 1018  கொற்கையிலிருந்து நெல்லைக்குச் செல்லும் வழியில் அக்குதிரைகள் விரைந்து கொண்டிருக்கின்றன. ஒரு வணிகனைப் போல உடையணிந்திருக்கிறான், மாறுவேடத்தில் இருக்கும் விக்கிரமபாண்டியன். வேலையாள் போல...

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 6

ஒரு அரிசோனன் ஜயங்கொண்ட சோழபுரம்  காளயுக்தி, சித்திரை 8 - ஏப்ரல் 21, 1018  கேட்பதற்கு இனிமையாக மங்கள இசை ஒலித்துக் கொண்டிருக்கிறது. அது மற்றவர்கள் பேசும் தேவையற்ற சொற்களை முழுகடிக்கிறது. வேதங்கள் ஓதப்படுகின்றன. தேவார, திருவாசகப்...

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 5

ஒரு அரிசோனன் ஜயங்கொண்ட சோழபுரம்  பிங்கள, வைகாசி 24 - ஜூன் 9, 1017  கூரைக்கு மேலே வண்டுகள் ரீங்காரமிட்ட வண்ணம் இருக்கின்றன. முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் சிவாச்சாரி சொல்வதை காதுறுகிறான், இராஜேந்திரன்.  அவனது மனம்...

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 4

ஒரு அரிசோனன் சுந்தர சோழரின் பொன் மாளிகை நள, சித்திரை 15 - ஏப்ரல் 30, 1016 சிவிகை கீழ ரத வீதியைக் கடந்து பராந்தக சோழரின் பொன் மாளிகையை அடைகிறது. நிலவுமொழிக்கு இன்னும் தான் அருள்மொழிநங்கையுடன்தான்...