பொன்னியின் செல்வனின் தமிழ்க் கனவு – முதல் பாகம் – அத்தியாயம் 6

பொன்னியின் செல்வனின் தமிழ்க் கனவு – முதல் பாகம்  – அத்தியாயம் 6

ஒரு அரிசோனன்

ஹோட்டல் சாம்ராட் ராஜ்ராஜ், தஞ்ஜூ

பிரஜோற்பத்தி, ஆடி 6 – ஜூலை 21, 2411

ஞ்சலில் ஆடிக்கொண்டே பாடுகிறாள், நிமிஷா.  அதேசமயம் அவளது ஊஞ்சல் மேலும் கீழும் ஏறி இறங்குகிறது.  அவளது உடை பலவண்ணப் பிளாஸ்டிக் துணிகளால் செய்ததுபோல் மிளிருகிறது.  அவள் முகத்தில் அதுபோலவே பலவண்ணங்களில் சிறியதாகப் பறவைகள், இனம்தெரியாத அமைப்புகள் பச்சைகுத்தியதுபோல இருக்கின்றன.  முன்பு அவள் அதை ஒட்டிக்கொள்வதைப் பார்த்த ஏகாம்பரநாதனுக்குச் சிரிப்பு வருவதைப் பார்த்ததும் காமாட்சி அவனைக் கண்களினாலே கண்டித்திருந்தாள்.

அவன் தன்னை வெறித்துவெறித்துப் பார்ப்பதைக் கண்ட நிமிஷா, அவனுக்கும் சிறிதாக இரண்டு பச்சைகளை அவன் கன்னங்களில் ஒட்டிவிட்டுத்தான் தன் விருந்துக்கு வந்திருக்கிறாள்.  அவளின் விருந்தைப் பார்க்கவேண்டும் என்று ஏகாம்பரநாதன் தன் தமக்கையின் காதைக் கடிப்பதைப் பார்த்த நிமிஷா, அவனைக் கூட்டிச்செல்வதாகக் சொன்னபோது அதை மறுப்பதா, இல்லை சம்மதிப்பதா என்று குழம்பிய காமாட்சிக்கு ஷிஃபாலிதான் விடையளிக்கிறாள்.

"காம்ஸ், கேஷும் ஈஸ்வும் கீழேதான் நிம்ஸுடன் இருப்பாங்க.  நீயும் அவங்களுக்கு உதவிக்குப் போகணும்.  நிம்ஸ் இஷ்டப்படறா.  அதனால் உன் தம்பியும் வந்துட்டுப் போகட்டும்!  தனியா ரூம்ல இருந்து என்ன பண்ணப்போறான்?"  என்று ஏகாம்பரனை அழைத்துச்செல்ல அனுமதி என்ற உத்தரவை இடுகிறாள்.

அப்பொழுதுதான் தானும் கீழே போகவேண்டும் என்று காமாட்சிக்குத் தெரிகிறது.

அவர்களுடன் ஏகாம்பரநாதன் குதித்துக்கொண்டு கிளம்புகிறான்.  ஈஸ்வரனுக்கும், அழகேசனுக்கும் தமிழ் தெரியும் என்பதால் அவர்களுடன் வாய் ஓயாமல் பேசித் தன் ஆசையைத் தீர்த்துக்கொள்கிறான்.

கடைசியில், அவர்களே தங்களுக்கு வேலை இருப்பதாகவும், விருந்தில் நடக்கும் ஆட்டங்களை உட்கார்ந்து ரசிக்கும்படியும் சொல்லி, அவனை உட்கார்த்திவைக்கிறார்கள்.

ஈஸ்வரனுக்கு உதவியாகக் காமாட்சி சாப்பாடு ஏற்பாடுகளைக் கவனிக்கிறாள்.  அதற்காக ஹோட்டல் சாம்ராட் ராஜ்ராஜின் பண்டைத் தமிழ்ப்பெண் உடையை அவள் அணியவேண்டியிருக்கிறது.  இல்லாவிட்டால் அவள் அங்கு பரிமாறவோ, சாப்பாடு ஏற்பாடுகளைக் கவனிக்கவோ விடமாட்டார்கள் என்று ஈஸ்வரன் தெரிவிக்கிறான்.

அரைமனத்துடன் அவளது நிறமுள்ள ரவிக்கையின்மேல் மார்புக் கச்சைகளை அணிந்து, கீழாடைகளைக் காமாட்சி உடுத்திக்கொள்கிறாள்.  இருப்பினும், கவர்ச்சியான உடையணிந்து நடமாட வெட்கமாக இருக்கிறது. அதனால் மறைந்து மறைந்து இங்குமங்கும் செல்லும் காமாட்சி, நிமிஷாவின் வயதையொத்த நண்பர்கள் மட்டும்தானே கலந்துகொள்வர் என்று மனதைச் சமாதானப் படுத்திக்கொள்கிறாள்.

இயல்பாகவே அவளுக்கு அடர்த்தியாக இருந்த கருங்கூந்தலை அள்ளிமுடிந்து கொண்டையிட்டுக்கொண்டது மேலும் கவர்ச்சியைக் கூட்டுகிறது.

அங்கு பணியாற்றும் ரஷ்யப்பெண்கள் அந்த ஹோட்டல் முகப்பில் வரையப்பட்டிருக்கும் பாவைவிளக்கு ஓவியம் போலக் காமாட்சி இருப்பதாகச் சொல்லி, அவளைப் புகழ்கிறார்கள். அவர்களின் புகழ்ச்சி காமாட்சியை இன்னும் நாணவைக்கிறது.

காவலர்களுக்கான உடுப்பை அணிந்த அழகேசன் அங்கு வரும் நிமிஷாவின் நண்பர்களை மிடுக்காக வரவேற்று, அவர்களின் தேவைகளையும், அவர்கள் அணிந்துகொள்வதற்கான சிறப்பு ஆடைகளையும் எடுத்துக்கொடுத்து, அவர்களை உடைமாற்றும் இடத்திற்கு அனுப்பிவைக்கிறான்.

அவனது மிடுக்கைக் கண்டு, காமாட்சி அவன்பால் ஈர்க்கப்படுகிறாள்.

நிமிஷா பாடுவது ஏகாம்பரநாதனுக்குப் புரியாவிட்டாலும், அது எந்தமொழி என்று அறியாதுபோனாலும், அந்த இசையின் தாளத்தைச் சுருதியை அவனால் புரிந்துகொள்ள முடிகிறது.  அதில் நடுநடுவில் கலந்துவரும் அபஸ்வரங்களையும் கவனிக்கிறான்.

அவனது கைகளும் கால்களும் அந்த இசைக்குத் தகுந்தபடித் தாளமிடுகின்றன.

திடுமென்று நிமிஷா உடகார்ந்திருக்கும் ஊஞ்சல் குலுங்கிநின்று மூன்றிலிருந்து நான்கு அடிகள் தொப்பென்று கீழிறங்குகிறது.  அதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத நிமிஷா, கெட்டியாக ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்தவாறு வீறிடுகிறாள்.

அறையிலிருக்கும் விளக்குகள் சிலநொடிகள் அணைந்து மீண்டும் ஒளிருகின்றன.

என்னவோ, ஏதோவென்று பயந்து ஓடிவந்த ஈஸ்வரன், நிமிஷாவைப் பிடித்துக்கொள்கிறான்.  அவன் அப்படி ஓடிவந்தது அவளுக்கே வியப்பாக இருக்கிறது.  தன்னைச் சமாளித்துக்கொண்டு அவனுக்கு நன்றிதெரிவிக்கிறாள்.

முதலில் பயந்த அனைவரும் ஊஞ்சல் விழுந்ததும், விளக்குகள் அணைந்து மீண்டும் எரிந்ததும் விருந்தின் சிறப்பான ஏற்பாடு என்றெண்ணிக் கைதட்டி ஆரவாரிக்கின்றனர்.

"ஒன்ஸ் மோர், ஒன்ஸ் மோர்!" என்ற கூச்சல் எழுகிறது.

ஐந்து நிமிடங்களில் மீண்டும் மும்முறை அவ்வாறு நிகழ்கிறது.

இதை எதிர்பார்க்காத நிமிஷாவுக்குச் சிறிது அச்சமாகிவிடுகிறது. இம்மாதிரி ஏன் நிகழ்கிறது என்று அழகேசனை விசாரிக்கச் சொல்கிறாள்.  பயமுறுத்தும் நிகழ்ச்சிகள் தன் விருந்தில் நடப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை.

விசாரிக்கும் அழகேசனிடமும், ஈஸ்வரனிடமும் மின்துண்டிப்புக்குக் காரணம் தெரியாதெனக் கைவிரிக்கிறார்கள்.  தஞ்ஜூ மின்மையத்திற்குப் புகார்கொடுத்திருப்பதாகவும், இதுபோன்ற மின்துண்டிப்பு கடந்த இருநூறு ஆண்டுகளாக நிகழ்ந்ததே இல்லை என்றும் சொல்கிறார்கள்.  அதுமட்டுமில்லாமல், தானியங்கி மின்கலங்களும் (ஆட்டோமாடிக் பாட்டரிகளும், ஜெனரேட்டர்களும்) வேலைசெய்யாதது அவர்களுக்கே வியப்பாக உள்ளது.  ஆகவே, அந்த மின்கலங்களைச் சோதிக்க ஆளனுப்பிருப்பதாகத் தகவல் கிடைக்கிறது.

இதனால் நிமிஷாவையும் அவளது கூட்டாளிகளையும் ஊஞ்சலில் ஆடவேண்டாமென்று அழகேசன் தடுத்துவிடுகிறான்.

அது நிமிஷாவுக்குப் பிடிக்காதபோதிலும், ஷிஃபாலி அதை ஆமோதித்ததால், ஊஞ்சல்கள் நிறுத்தப்படுகின்றன.

அனைவரும் உடலை வளைத்துவளைத்துப் பாம்புபோல் ஒரு நாட்டியம் ஆடுகின்றனர்.

அதைப் பார்க்கும் ஏகாம்பரநாதனுக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வருகிறது.  அவனும் தான் இருக்குமிடத்திலேயே நின்றுகொண்டு, வளைந்துவளைந்து ஆடுகிறான்.

தன் தம்பியின் ஆட்டத்தைப் பார்த்துப் பொங்கிப் பூரித்த காமாட்சி, அனைவருக்கும் பழச்சாறும் திண்பண்டங்களும் சாப்பாடும் கொடுத்தவண்ணம் பணியாற்றுகிறாள்.

அப்போது ஏகாம்பரநாதன் தமக்கையின் உதவிக்கு வருகிறான்.

"ஏகாம்பரம், நீ சும்மா இருடா. என் தலையெழுத்துதான் இப்படிப்பட்ட உடுப்பை மாட்டிக்கிட்டு அலைய வேண்டியிருக்கு.  நீ எல்லாத்தையும் நல்லாச் சாப்பிட்டுட்டு இவங்க ஆடறதைச் சந்தோசமா பார்த்துக்கிட்டிரு." என்று தம்பியைத் தடுத்துநிறுத்துகிறாள்.

தன் தமக்கையை ஏற இறங்கப் பார்த்தவாரே, "அக்கா, உன்னைப் பார்த்தா ஒரு தேவதை மாதிரி இருக்கு, அக்கா. இந்த ஓட்டல் வாசல்ல வச்சுருக்கற பொம்மை மாதிரி அழகா இருக்கே, அக்கா. தினமும் இந்த உடுப்பைப் போட்டுக்க!" என்று உள்ளன்புடன் சொல்கிறான்.

காமாட்சிக்கு மனம் நெகிழ்ந்துவிடுகிறது.

"இந்தக் கண்ராவி உடுப்பைத் தினமும் மாட்டிக்கணுமா?" என்று செல்லமாக அவன் கன்னத்தில் கிள்ளுகிறாள்.  விருந்து தொடர்கிறது.

*         *       *

விண்வெளி ஆராய்ச்சி மையம், காரைகட்

பிரஜோற்பத்தி, ஆடி 7 – ஜூலை 22, 2411

ண்களைக் கசக்கியவாறே ஃபிலிப்பீன்ஸிலிருந்து வரும் கிரகண ஒளிபரப்பை மீண்டும் உற்றுநோக்குகிறார், சோம்காந்த். ஒரு பெரிய கண்ணாடித் திரையில் அந்தக் காட்சி ஒளிருகிறது. காரைகட் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தொலைக்காணும் அரங்கத்தில் அதிகாலையிலேயே எழுந்து இந்தக் காட்சியைப் பார்த்து ஆராயத் தன் உதவியாளர்களுடனும், நிபுணர்களுடனும் அமர்ந்திருக்கிறார்.. கிட்டத்தட்ட முப்பத்தைந்து பேர் அவருடன் இருக்கிறார்கள்.

கிரகணம் ஆரம்பிக்க ஆரம்பிக்க அனைவரது ஆர்வமும் அதிகமாகிறது. மறையாமல் மிச்சமிருக்கும் சூரியத்துண்டின் நிறம் ஒருவிதமான திகிலை அளிக்கும் விதமாக மாறுகிறது. இதுவரை அவர்கள் கண்டிராத மாற்றமாக இருக்கிறது அது.

சூரியனின் வண்ணம் நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கோண்டே இருக்கிறது. பளிச்சென்றிருந்த சூரிய வட்டத்தில் பலவிதமான கறுப்புப் புள்ளிகள் (black sun spots) அவர்களுக்குத் தெரிகின்றன.

இதுவரை தெரியாமலிருந்தவை இப்பொழுது திடீரென்று தோன்றுவது எப்படி என்று அவர் சிந்திக்கிறார். அந்தக் கறுப்புப் புள்ளிகளை பெரிதாக்கும்படி ஸஹஜாவைக் கேட்டுக்கொள்கிறார்.

புள்ளிகளைச் சிறிது சிறிதாகப் பெரிதாக்குகிறாள், ஸஹஜா. புள்ளிகள் விரிந்து பலவிதமான வடிவங்களை அடைகின்றன. அவற்றிற்குள்ளிலிருந்து இளம்பச்சை நிறத்தில் ஒளிப்புகை வருவது தெரிகிறது.

"ஸஹ்ஜ்! நேற்று நாலைந்து தடவை மின்சார வெட்டு வந்ததே! எனவே இந்த ஒளிபரப்பு தடையில்லாமல் இருக்க ஏற்பாடு செய்தாகிவிட்டதா?" என்று கேட்கிறார்.

ஆமென்று தலையாட்டுகிறாள் ஸஹஜா. "சோம்த், மின் ஜெனரட்டர்களை ஏற்கனவே இணைச்சாச்சு. அவை ஓடிக்கோண்டிருக்கின்றன. இப்ப நமக்கு வர்ற மின்சாரம் ஜெனரேட்டர் மூலமாகத்தான் வருது. ஒரு விநாடிகூட மின்துண்டிப்பு இருக்க வாய்ப்பே இல்லை!" என்று பெருமையுடன் கூறுகிறாள்.

"வெரிகுட்! இப்படித்தான் இருக்கணும்! இனிமே நாம நிம்மதியா எல்லாத்தையும் பார்த்துக் கணிக்கலாம்." என்று உற்சாகமாக ஆரம்பித்து, ஒரு பெருமூச்சுடன் முடிக்கிறார்.

கடந்த ஒரு வாரமாக நிழல்போல் அவருடன் இருந்ததால் ஸஹஜாவால் அவரை நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

அவர் மனதில் இருக்கும் ஒரு மிகப்பெரிய சுமையை அவள் நன்றாகப் புரிந்துகொள்கிறாள். அவர் என்னதான் மறைத்தாலும் அவர் உள்ளூர ஏதோ ஒன்றை தங்கள் அனைவரிடமிருந்தும் மறைக்கிறார் என்ற அளவுக்குப் புரிகிறது. அது என்னவாக இருக்கும் என்று யோசிக்க யோசிக்க அவளுக்கு ஒருவிதமான திகில்தான் ஏற்படுகிறது. எனவே, தன் மனதில் வரும் அந்த எண்ணங்களை வலுக்கட்டாயமாக ஒதுக்கிவிட்டு ஒளிபரப்புக் கண்ணாடியில் தன் கவனத்தைச் செலுத்துகிறாள்.

கிரகணம் ஆரம்பித்துப் பதினைந்து நிமிடங்கள் ஆனதும் அவர்களால் தங்கள் கண்களையே நம்பமுடியாத அளவுக்கு ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. சந்திரனின் நிழல் மறைக்கப்படும் தருணத்தில் ஒரு சூரியப் புள்ளி வெடித்துச் சிதறுவதுபோல மிகவும் பிரகாசமாகத் தெரிகிறது. ஓரத்தில் சிவப்பும் நடுவில் வெள்ளையும் கலந்த கண்ணைக் கூசும் வெளிச்சம் சூரியத்துண்டை மறைப்பது தெரிகிறது. பின்னர் ஒரே இருட்டு!!!

"என்ன ஆச்சு? மின்சாரம் போய்விட்டதா?" என்று இறைகிறார் சோம்காந்த்.

ஸஹஜாவுக்கு என்ன பதில்சொல்வது என்றே தெரியவில்லை. சுற்றுமுற்றும் பார்க்கிறாள். அவள் முன்னால் இருக்கும் மேசையில் இருக்கும் 'கன்ட்ரோல் பானலி'ல் இருந்து வெளிச்சம் தெரிகிறது. மற்றும் அரங்கத்தின் ஓரத்தில் இருக்கும் நடைவிளக்குகளின் ஒளியையும் அவள் கண்கள் கவனிக்கின்றன.

"இது மின்வெட்டு இல்லை, சோம்த். வேறு ஏதோ ஒண்ணு. பிலிப்பீன்ஸிலிருந்து வரும் ஒளிபரப்பு நின்றுவிட்டமாதிரி தெரிகிறது," என்று பதில்சொல்லிவிட்டுத் தன் முன்னால் இருக்கும் மைக்கில் இருக்கும் பொத்தானை அழுத்திக்கொண்டு பிலிப்பீன்ஸ் விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் தொடர்புகொள்ள முயற்சிக்கிறாள்.

ஆனால் 'உஸ்ஸ்ஸ்..' என்ற காற்றுச் சத்தம்தான் கேட்கிறது.

"பாங்காக் மையத்திற்குத் தொடர்பை மாத்து. வேறு சாட்டலைட்டுக்கும் தொடர்பை மாத்து. பின்னால் பிலிப்பீன்ஸில் என்ன ஆச்சுன்னு பாத்துக்கலாம்," என்று உத்தரவிடுகிறார் சோம்காந்த். அவர் குரலில் ஒரு பரபரப்பு தெரிகிறது.

"இப்பொழுதுதான் பாங்காக்கில் சூரிய கிரகணம் ஆரம்பிக்கப் போகிறதாம். இதொ, அங்கிருந்து தொடர்பு கிடைத்துவிட்டது," என்று இணைப்புக் கொடுக்கிறாள் ஸஹஜா.

ஒளிபரப்புக் கண்ணாடியில் சூரியன் மீண்டும் தெரிகிறது. அதன் நிறமே மங்கிமங்கிப் பளிச்சிடுகிறது. வானம் கொஞ்சம் கருநீலமாகத் தெரிகிறது. பாங்காக்கில் கிரகணம் தொடங்குகிறது.

"சுர்ஸ், வெளியில் வானம் நிஜமாகவே கருநீலமாகத் தெரிகிறதா என்று பாங்காக் மையத்தைக் கேள்.  ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துச் சொல்லச்சொல்லு. அப்ஸ், நீ வெளியே போய் வானம் எந்த நிறத்தில் இருக்கு, சூரியன் எப்படி இருக்கு என்று பார்த்து எனக்கு அவ்வப்போது செய்தி அனுப்பு.  இரு, இரு, வெளியே ஒரு காமிராவை வைச்சு, இங்கே ஒளிபரப்ப ஏற்பாடுசெய்" என்று சுரேஷ், அப்ஸர் என்னும் தன் உதவியாளர்களுக்கு உத்தரவிடுகிறார்.

உடனே காரைகட் மையத்தின் தலைவருடன் தொடர்புகொள்கிறார். அவர் முக்கியமான கூட்டத்தில் இருப்பதாகவும், அவரைத் தொந்தரவு செய்யமுடியாதேன்றும் பதில் கிடைக்கிறது.

"மூர்ட், உடனே ஸோஹன்லாலின் ஆபீஸுக்குப் போ.  தலைபோகிற விஷயம்; நான் அவருடன் பேசவேணும்னு சொல்லு. எப்படியாவது அவரை நீ சம்மதிக்கவைக்கணும். போ, போ, போ!" என்று விரட்டுகிறார்.

எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கிறார் என்று புரியாமல் வெளியே செல்கிறான், மூர்ட் என்று அழைக்கப்பட்ட மூர்த்தி.

ஸஹஜாவுக்கு சோம்நாத்தின் பதட்டம் புரிகிறது.  கூடவே அடிவயிற்றில் ஒரு உணர்வும் பிறக்கிறது. அவர் முகம் பேயறைந்த மாதிரி மாறிவருவதைப் பார்க்கிறாள். மெதுவாக அவர் அருகில் சென்று அவரது கைவிரல்களுடன் தன் கைவிரல்களைப் பின்னிக்கொள்கிறாள். அவளைத் திரும்பிப் பார்த்த சோம்நாத் மெதுவாகப் புன்னகை புரிகிறார்.

மெதுவாக அவள் காதுகளில் மட்டுமே கேட்கும்படியாக, "மிக்க நன்றி ஸஹ்ஜ். நான் சமாளிச்சுக்குவேன். நீ உன் இடத்துக்குப் போ. அதுதான் இப்ப எனக்கு ரொம்ப உதவியா இருக்கும்." என்று அவள் கைகளைப் பற்றி அமுக்குகிறார்.

அவரது நன்றி உணர்வு அந்த அமுக்கல்மூலம் தன் உடல் முழுவதும் பரவுவதை உணர்கிறாள் ஸஹஜா. அவளுள் அவரிடம் ஒரு தந்தைப் பாசம் பொங்குகிறது. மீண்டும் தன் இருப்பிடத்திற்கு வந்து அமர்கிறாள்.

"கிரகணம் ஆரம்பித்தவுடன் பாங்காக்கில் வானம் கருநீலமாக ஆகிக்கொண்டுதான் இருக்கிறது." என்று தகவல் வருகிறது. பிலிப்பீன்ஸ் தொலைநோக்கு மையத்தை இணைக்கும் தகவல் அனுப்பும் வான்-கோள் (Satellite) திடுமென்று செய்தி அனுப்பாமல் நின்றுவிட்டதால்தான் அவர்களால் செய்தி அனுப்பமுடியவில்லை என்றும், நுண்ணலை, வான்வழித் தொடர்பு அனைத்தும் நின்றுவிட்டதாகவும், கடலடிக் கம்பி மூலம் மட்டும்தான் வெளியிடத்திற்குத் தொடர்புகொள்ள முடிகிறது என்றும் தகவல் வருகிறது.

"நான் சந்தேகப்பட்டபடி நடக்க ஆரம்பித்துவிட்டது. ஈஸ்வரா! இது ஃபிலிப்பீன்ஸில் ஏற்பட்ட தனி நிகழ்ச்சியாக மட்டும் இருக்கட்டும்" என்று தனக்குள் முணுமுணுக்கிறார், சோம்காந்த்.

கிரகணம் மேலும் தொடர ஆரம்பிக்கிறது. சூரியன் கால்வாசி மறைய ஆரம்பித்ததும் சூரியப் புள்ளிகளைக் கண்காணிக்க ஆரம்பக்கிறார்.

முன்பு தெரிந்ததைவிட அதிகமாக பச்சைப்புகை தெரிகிறது. அதோடு மட்டுமில்லாமல் சில புள்ளிகளிலிருந்து எரிமலை பொங்குவதுபோல சிவப்பு, வெள்ளை நிறக்கலவைகள் பீச்சி அடிக்கின்றன. சூரியனிலிருந்து நெருப்புப் பொறிகள் வெடித்துப் பறப்பதுபோன்ற தோற்றம் தென்படுகிறது. கருநீல வானத்தில் அவை மின்னல் கொடிகளாகப் பரவுகின்றன.

"ஸஹஜ், உடனே அந்தமான் அருகிலிருக்கும் நிகோபார் தீவு தொலைநோக்கு மையத்தின் ஒளிபரப்பைத் தயாராக்கு. நான் நினைப்பது சரியானால் இன்னும் பத்து நிமிடங்களில் நமக்கு பாங்காக்கிலிருந்து தகவல் வருவது நின்றுபோக வாய்ப்பிருக்கு." என்று எச்சரிக்கிறார், சோம்காந்த். அவரது குரலில் தொலித்த லேசான நடுக்கம், ஸஹஜாவின் ரத்தத்தை உறையவைக்கிறது.

சோம்காந்த்மீது ஸோஹன்லால் மிகவும் கோபமாக இருக்கிறார் என்றும், காதில் கேட்கக்கூடாத வார்த்தைகளைச் சொல்லிச் சோம்காந்த்தைத் திட்டினார் என்றும் மூர்த்தியிடமிருந்து தகவல் வருகிறது.

இது எதையும் காதில் வாங்காமல் தான் ஸோஹன்லாலுடன் பேசவேண்டும் என்று வற்புறுத்துகிறார், சோம்காந்த். சிறிது நேரத்திற்குப் பிறகு தனியிடத்தில் அவருக்குத் தொடர்பு கிடைக்கிறது.

"சோம்த், என் பொறுமையை நீ மிகவும் சோதிக்கிறாய். நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் டெல்லி செல்லும் பிளேனில் இருக்கணும். உனக்கு ஒரு நிமிஷம் தறேன். நீ சொல்ல வேண்டியதைச் சொல்லு."

ஸோஹன்லாலின் உறுமல் ஒலிக்கிறது.

எச்சிலை விழுங்கிக்கொண்டு, "சார், தயவுசெய்து பிளேனில் போகாதீங்க! உங்க செல்வாக்கை உபயோகிச்சு இன்னும் ரெண்டு மணி நேரத்திற்கு, அதாவது சூரிய கிரகணம் முடியறவரை எல்லா விமானப் போக்குவரத்தையும் நிறுத்தும்படியும், பறக்கற எல்லா விமானங்களையும் உடனே தரையிறங்கும்படியும் அதிரடி உத்தரவுபோடச் சொல்லுங்க. இது மிகமிக முக்கியம்!" என்று கெஞ்சுகிறார் சோம்காந்த்.

எரிமலையாக வெடிக்கிறார், ஸோஹன்லால்.

"உனக்குப் பைத்தியம்தான் பிடிச்சிருக்கு, சோம்த்! எவ்வளவு முக்கியமான கலந்துரையாடலுக்கு நான் டெல்லி போறேன் தெரியுமா?" என்றவரை சோம்காந்த் இடைமறித்து, "சார், ஒரு நிமிஷம் நான் காட்டும் சூரிய கிரகண ஒளிபரப்பைப் பாருங்க. ஃபிலிப்பீன்ஸ்ல எல்லா வைர்யலெஸ் டிரான்ஸ்மிஷன்களும் நின்னு போச்சு. ஸாடலைட் பழுதாயிடுத்து. நமக்கு அங்கேர்ந்து தகவலே கிடைக்கல. பாங்காக்லேர்ந்து வர்ற டிரான்ஸ்மிஷனைப் பார்க்கும்பொது, பயங்கரமான சூரியக் கதிர்வீசல் வந்து எல்லா ஸாடலைட்ஸும் பாதிக்கப்பட்டு, விமானங்கள்…"

சோம்காந்துக்கும், ஸோஹன்லாலுக்கும் இடையே இருக்கும் தொடர்பு துண்டிக்கப்படுகிறது.

நாற்பது விநாடிகளில் மூர்த்தியிடமிருந்து தகவல் வருகிறது – அவரை தாற்காலிக வேலைநீக்கம் செய்து, விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து உடனே கிளம்பும்படி ஸோஹன்லால் உத்திரவிட்டுவிட்டு, 'கான்க்காத்' (பழைய கானாடுகாத்தான்) விமானநிலையத்திற்கு ஹெலிகாப்டரில் கிளம்பிவிட்டதாக தகவல் வருகிறது.

"ஈஸ்வரா!" என்று சொல்லிக்கோண்டே தலையில் கைவைத்தபடி இடிந்து உட்கார்ந்துவிடுகிறார், சோம்காந்த்.

*          *          *

தஞ்ஜு விமான நிலையம்

பிரஜோற்பத்தி, ஆடி 7 – ஜூலை 22, 2411

பாங்காக் வழியாக ஷாங்ஹை செல்லும் விமானம் தஞ்ஜூ ஸாம்ராட் ராஜ்ராஜ் பன்னாட்டு விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு வானில் எழும்புகிறது. அதேசமயம் ஷிஃபாலியின் மனம் பின்னோக்கிச் சென்று நிகழ்ச்சிகளை அசைபோடுகிறது . . .

. . . ஷிஃபாலி கிளம்பும் சமயம் நிமிஷாவின் கண்கள் மிகவும் கலங்கிவிட்டன. மூன்று மாதங்கள் தனது தாயை நேரில் காணமுடியாது என்பது அப்பொழுதுதான் அவளுக்கு உரைக்க ஆரம்பித்தது. என்னதான் துணிவுடன் சொல்லியிருந்தாலும், தாயைப் பிரிந்து இருக்கப்போவது அவளுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அழுது தாயைக் கலங்கவைக்க வேண்டாம் என்று புன்னகை செய்யப்பார்த்தாள். இருப்பினும், கலங்கும் கண்கள் அவளது உள்ளத்தை ஷிஃபாலிக்குக் காட்டிக்கொடுத்தன. தாயை இறுக அணைத்துக்கொண்டவள், அவளை விட மனமில்லாது அப்படியே நின்றுவிட்டாள்.

மெதுவாக அவளது உடும்புப் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டாள் ஷிஃபாலி.

"நிம்ஸ், நான் தினமும் உன்னோட பேசுவேன். உனக்கு துணையா காம்ஸும், ஏக்ஸும் இருக்காங்க இல்லையா? உனக்கு என்ன சாப்பிடனும்னாலும் காம்ஸ் செஞ்சு தருவா. வேற எதுன்னாலும் கேஷைக் கேளு. உன்னை எங்கே வேணும்னாலும் அவன் கூட்டிப்போவான்எதுவும் வாங்கி வருவான்நீ அழுதா எனக்கு சீனாவில வேலையே ஓடாது. சந்தோஷமா எனக்கு டாட்டா சொல்லு."

அவள் குரல் நிமிஷாவைக் கெஞ்சியது.

"ஓகேம்மா. என்னைப் பத்தி கவலைப்படாமப் போய்ட்டு வா. என்னை இவங்க கவனிச்சுக்குவாங்க. நான் பாடங்களை நல்லாப் படிப்பேன். உனக்கு தினமும் அதைப் பத்திச் சொல்றேன். பத்திரமா சீனா போயிட்டு வா!" என்று பதிலளித்தாள்.

ஹோட்டலின் வாயிலில் ஷிஃபாலியின் குழு அவளுக்காக சிறு பஸ் ஒன்றில் காத்திருந்தது. ஷாங்ஹையில் இறங்கியவுடன் ஓட்டல் அறையில் இருந்து அவர்களுடன் தொடர்பு கொள்வதாகச் சொல்லி, அந்த பஸ்ஸில் ஏறிக்கொண்டு, மகளுக்கும், அவளுடன் நிற்கும் காமாட்சி, ஏகாம்பரநாதன், அழகேசன்இவர்கள் அங்கே இருப்பதைப் பார்த்துவிட்டு வந்த ஈஸ்வரனுக்கும் கையசைத்தாள்

அடுத்தநாள் அழகேசன் அவர்களை ஷெனாய்க்கு அழைத்துச் சென்றுவிடுவான், பிறகு ஒவ்வொரு நாளும் அவர்களுடன் முப்பரிமாணத் தொடர்புகொள்ளலாம். நிமிஷாவும் தான் இல்லாத குறையை உணரமாட்டாள் என்று நினைத்தபடி சாம்ராட் ராஜ்ராஜ் பன்னாட்டு விமான நிலையத்திற்குப் பயணித்தாள்.

என்னதான் தக்கண்கண்டிலேயே ஷெனாய் பெரிய நகரமாய்ப் பரிணமித்திருந்தாலும், அலுவலக வசதியை முன்னிட்டும், மாநிலத்திற்கு நடுவில் இருக்கிறது என்பதாலும், தக்கண்கண்ட்டின் தலைநகரம் 2300லேயே ஷெனாயிலிருந்து தஞ்ஜூவுக்கு மாற்றப்பட்டது. ஒரு மாநிலத்தின் தலைநகரம் என்பதால் அதன் உள்நாட்டு விமானநிலையம் பெரிதாக விரிவுபடுத்தப்பட்டு, பெரிய பன்னாட்டு விமான நிலையமாகவும் ஆக்கப்பட்டுவிட்டது . . .

. . . "அனைவரையும் வரவேற்கிறோம். இந்த வானப் பயணத்தில் ஒரு சிறப்பு இருக்கிறது. நாம் நிறைய நேரம் முழு சூரிய கிரகணத்தின் வழியில் செல்வதால் அது பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். பாதி கிரகணத்தின் பொழுது நீங்கள் வெறுங்கண்ணுடன் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக நிழற் கண்ணாடிகள் வைத்திருக்கிறோம். ஜன்னலோரம் இருக்கை இல்லாதவர்களுக்காக முப்பரிமாணக் கண்ணாடி இருக்கிறது. அதை அணிந்துகொண்டு கிரகணத்தைக் கண்டு அனுபவியுங்கள். அந்தமான் தீவுகளைத் தாண்டும்பொழுது கிரகணம் உச்சக்கட்டத்தை அடையும். அப்பொழுது வானமே இருட்டாகிவிடும். அந்தப் பயங்கலந்த இருட்டை ரசித்துப் பாருங்கள்! உங்கள் தேவையைக் கவனிக்க விமான உபசரிப்பாளர்கள் இருக்கிறார்கள்! இப்பொழுது ஓய்வுடன் பயணத்தைத் தொடருங்கள்."

தலைமை விமானியின் அறிவிப்பு ஷிஃபாலியின் கவனத்தை நிகழ்காலத்திற்குக்கொண்டுவருகிறது.

அவளது இருக்கை ஜன்லைருகில் இருந்தாலும், அவள் கணிணியை எடுத்துக்கொண்டு அலுவலக வேலைகளைக் கவனிக்க ஆரம்பிக்கிறாள். பதினைந்து நிமிஷங்கள் ஆனதும் ஜன்னலுக்கு வெளியே நிகழும் ஒன்று அவளது கவனத்தைத் திருப்புகிறது.

ஜன்னல் வழியே வெளியே பார்த்தவள் திடுக்கிடுகிறாள். வானம் கருநீலமாக ஆகிக்கொண்டிருக்கிறது. வானமெங்கும் சிவப்பும், வெளுப்புமாகப் பொறிகள் சூரியனிடமிருந்து பறந்து கொண்டிருக்கின்றன. பொறிகள் கண்ணைப் பறிக்கும் அளவுக்கு பிரகாசமாக இருக்கின்றன. நிலவின் நிழலால் முழுவதும் மறைக்கப்படாத சூரியன் விட்டுவிட்டுப் பிரகாசிக்கிறது. இதுவரை பார்க்காத நிகழ்ச்சியாக இருக்கிறதே என்று ஷிஃபாலி நிழற்கண்ணாடியை அணிந்துகொண்டு கவனிக்கிறாள்.

அவளது நெஞ்சைக் கலக்குகிறது அந்தக் காட்சி.

பழைய புராணங்கள் சொல்லுமே, சூரியனைப் பாம்புகளான ராகுவும் கேதுவும் விழுங்கித் துப்புவதுதான் கிரகணம் என்று – அது ஒருவேளை உண்மைதானோ என்பதுபோல – வளைந்து நீண்ட மேகத்திரளின் நுனியில் தெரியும் அரைகுறையான சூரியன் பாம்பின் வாயில் துடிப்பதுபோல இருக்கிறது. ஒரு கணம் மிகவும் பிரகாசமாகவும், அடுத்த கணமே மிகவும் மங்கலாவும் சூரியன் தெரிகிறது.

அச்சமயம் அதனிடமிருந்து சிவப்பும் வெள்ளையுமாக ஒளித்தெறிப்புகள் வெடித்துச் சிதறுகின்றன. கருநீல வானத்தில் அவை தீபாவளி வாணவேடிக்கையாகப் பரிணமிக்கின்றன. வசியப்பட்டமாதிரி அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஷிஃபாலியை விமானத்தின் குலுக்கல்கள் திடுக்கிடவைக்கின்றன.

தொப்பென விமானம் கீழிறங்கி, அவளது குடலை இரைப்பைக்கு கொண்டுவருகிறது. அதே சமயம் விமானிகளின் அறையில் பதட்டம் நிலவுகிறது. இதுவரை கண்டிறாத கருநீல வானத்தில் எழுகின்ற வாணவேடிக்கைகளையும், ஒளித்தெறிப்புகளைச் சிதறவிடும் சூரியனையும் ரசித்தவாறு ஓட்டிக்கோண்டிருந்த விமானிகளை செயற்கைச் கோள் வழிகாட்டும் கருவிகள் (satellite guidance systems) திடுமென மங்கி, இருளடைந்து திண்டாடவைக்கின்றன.

விமானத்தின் 'தானியங்கி விமானி' (Auto pilot) தன் பிடியை நழுவ விட்டுவிடுகிறது. தலைமை விமானி எத்தனை தடவை முயன்றும் அது வேலைசெய்ய மறுக்கிறது. எனவே அவர் விமானத்தின் சுக்கானைப் பிடித்து ஓட்ட ஆரம்பிக்கிறார்.

தானியங்கி விமானி வேலைசெய்யாததால் அந்தமானில் தரையிறக்கத் தீர்மானிக்கிறார். உடனே ஆபத்து என்று அந்தமான் வீர்ஸாவர்க்கர் விமானநிலையத்திற்கு ஒலிபரப்பு செய்யும்படி உதவி விமானிக்குக் கட்டளையிட நினைக்கும்பொது, "காப்டன், ரேடியோ வேலை செய்யவில்லை. நம்மாலும் எந்த அலைவரிசைகளிலும் ஒலிபரப்பைக் கேட்கமுடியவில்லை!" என்று பதட்டத்துடன் அவருக்குத் தகவல் கொடுக்கிறார், உதவி விமானி.

"என்ன ஆயிற்று? விமானமே வேலைசெய்ய மறுக்கிறதே! அந்தமானில் தரையிறக்கவேண்டும்! தேவைப்பட்டால், தண்ணீரில் விமானத்தை இறக்கவும் தயாராக இருப்போம்! ஜி.பி.எஸ். (செயற்கைக்கோள் வழிகாட்டி) இல்லாததால் நாம் திசைகாட்டியின் (Compass) உதவியுடன் விமானத்தைச் செலுத்தி, அந்தமானில் தரையிறக்க முயற்சிப்போம். நான் பயணிகளுக்கு அறிவிக்கிறேன்" என்று ஒலிவாங்கியைக் (microphone) கையில் எடுத்து அறிவிக்க ஆரம்பிக்கிறார்.

ஆனால் விமானத்தின் ஒலிபெருக்கிகள் வேலை செய்யவில்லை. அவருக்கு சட்டைக்குள் வியர்க்க ஆரம்பிக்கிறது.

விமானத்தில் ஒருபொழுதும் மொத்த வேலைசெய்யாமை (total failure) ஏற்படாது. எத்தனையோ முறை சில கருவிகள் வேலை செய்யாமல் சிமிலேட்டரில் விமானத்தை ஓட்டப் பயிற்சி எடுத்திருந்தாலும், இம்மாதிரியான ஒரு நிலைமை அவருக்குச் சொல்லித் தரப்படவில்லை. எனவே, அவரது அதிர்ச்சிக்கு அளவே இல்லை.

கதவைத் தட்டிக்கொண்டு தலைமைப் பணிப்பெண் ப்ரீதி உள்ளே வருகிறாள். "காப்டன், உள்ளே அனைவரும் மிகவும் பயந்துபோய் இருக்கிறார்கள். என்ன ஆகிறது என்று தெரியவில்லை. உங்களிடமிருந்து ஒரு அறிவிப்புமே இல்லையே?"

"ப்ரீத், நாம் மிகவும் பெரிய சங்கடத்தில் இருக்கிறோம்! என் மைக் வேலை செய்யலை. அந்தமானில் தரையிறங்கப் போறோம். உடனே, நீ எல்லோரையும் அதற்காகத் தயார்செய். கலவரப்படுத்தாதே. என் மைக் வேலை செய்யாட்டாலும் ஒருவேளை வெளியில் இருக்கும் மைக்குகள் வேலை செய்யலாம். உடனே போ!" என்று அவளை விரட்டுகிறார்.

கதவைச் சாத்திக்கொண்டு பரபரப்புடன் செல்கிறாள் தலைமைப் பணிப்பெண், ப்ரீதி.

"காப்டன், வலதுபக்க எஞ்சின் தடுமாறுகிறது. அதன் சக்தி குறைந்துகொண்டே வருகிறது!" என்று அறிவிக்கிறார் துணை விமானி. சில கணங்களில் வலதுபக்க என்ஜின் நின்றுவிடுகிறது.

சூரிய கிரகணத்தை முப்பரிமாணத்தில் பார்த்த பயணிகளுக்கு காட்சி நின்றுபோய் இப்பொழுது கருமை மட்டுமே தெரிகிறது. காதில் கேட்ட ஒலிகளும் நின்றுவிடுகின்றன. எஞ்சின்களின் ஒலியும், சமனப்படுத்திய காற்றும் நின்றுவிட்டதால் விமானத்திலுள்ளே அமைதி நிலவுகிறது.

அடிக்கடி விமானம் கண்டபடி குலுங்கிக் குலுங்கி விழுந்து விழுந்து செல்கிறது. ஒலிபரப்புக் கருவிகள் வேலைசெய்யாததால் சரியான நேரத்தில் அறிவிப்பு கொடுக்க இயலாமல் போய்விடுகிறது. பெல்ட் அணியாத பயணிகள் குலுக்கி எடுக்கப்படுகிறார்கள். நின்றும், நடந்து கொண்டிருக்கும் பயணிகள் தூக்கி எறியப்படுகிறார்கள். உள்ளே ஒரே கூச்சல் எழுகிறது.

பெல்ட் அணிந்து கொண்டிருந்ததால் ஷிஃபாலி தூக்கி எறியப்படாவிட்டாலும், அவளது கணினி தூக்கி எறியப்படுகிறது. விமானத்தின் நிலை அவளை நடுங்கவைக்கிறது. இருக்கையின் கைகளை இறுகப் பற்றிக்கொள்கிறாள். விமானம் சுழன்றுகொண்டே கிடுகிடுவென்று கீழே இறங்குவது தெரிகிறது.

விமானம் பலமாகக் குலுங்குகிறது. திடுமென்று ஒரு பக்கம் சாய ஆரம்பிக்கிறது.

அதைச் சரிசெய்ய முயல்கிறார், தலைமை விமானி. திடுமென்று எல்லாக் கருவிகளும் இருண்டுபோகின்றன. இடதுபக்க எஞ்சினிலிருந்து வரும் சத்தமும் குறைந்து அதுவும் நின்றுவிடுகிறது. விமானத்தின் மூக்கு கீழிறங்க ஆரம்பிக்கிறது.

கீழே அந்தமான் தீவுகள் புள்ளிபோலத் தெரிந்து பெரிதாக ஆரம்பிக்கின்றன. எல்லா விளக்குகளும் மங்கி அணைந்துபோகின்றன. கருவிகள் வேலைசெய்யாததால் எவ்வளவு உயரத்தில் விமானம் பறக்கிறது என்றும் தெரியவில்லை. அவர் சுக்கானை இறுகப் பிடித்து விமானத்தை நிலைப்படுத்த முயல்கிறார்.  அவரது முயற்சிக்கு விமானம் கட்டுப்பட மறுக்கிறது.

எல்லா விமானங்களும் கம்பி மூலம் பறப்பதால் (Flown by wire controls) மின்சாரம் இல்லாமல் அவை வேலை செய்யாது. ஆகவே, அவசரத் தேவைக்காக மின்கலங்கள் இருக்கும். ஆனாலும் அவைகளும் வேலை செய்யாததால் சுக்கானால் விமானத்தின் இறக்கைகளை இயக்கமுடியாது போகிறது. விமானத்தை சமநிலைப் படுத்தவோ, அதன் மூக்கை நிமிர்த்தித் தண்ணீரில் இறக்கவோ முடியாது என்று உணர்கிறார், தலைமை விமானி.

வெளியே மிகப் பெரிதாகத் நிலம் தெரிய ஆரம்பிக்கிறது. சுழன்று சுழன்று கீழே இறங்கும் விமானம் சில விநாடிகளில் தரையைத் தாண்டிச் சென்று கடலில் விழுந்து நொறுங்குகிறது.

*          *          *

ஹோட்டல் சாம்ராட் ராஜ்ராஜ் , தஞ்ஜு

"ம்மாவிடம் அவ்வளவு தைரியமாகப் பேசினீங்களே, நிமிசாம்மா! ஏன் இப்ப இப்படி அழறீங்க? இதோ பாருங்க, நீங்க இப்படி அழக்கூடாது. இன்னும் கொஞ்ச நேரத்துல அழகேசனும், ஈஸ்வரனும் வந்துடுவாங்க. நாம பெரியகோவிலைப் பார்த்துட்டு வரலாம். நேத்தி ராத்திரி முழுக்க என்னமா ஆட்டம் ஆடினீங்க, ரொம்பக் களைப்பா இருக்கும் உங்களுக்கு! ஓய்வு எடுத்துக்குங்க. வேணும்னா கொஞ்சநேரம் தூங்குங்க. நான் உங்களுக்கு நல்ல சாப்பாடு கொண்டுவரச் சொல்லியிருக்கேன். அதைக்கொண்டு வரத்துக்கு ஈஸ்வரனும், ஏகாம்பரமும் கீழே போயிருக்காங்க," என்று நிமிஷாவைத் தேற்றிக்கொண்டிருக்கிறாள், காமாட்சி.

அவள் கண்கள் கண்ணாடிச் சுவருக்கு வெளியே தெரியும் கருநீல வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன, கைவிரல்கள் நிமிஷாவின் முதுகை வருடுகின்றன.

"பாரு காம்ஸ், மம்மிக்குத் தன்னோட வேலைதானே முக்கியமாப் போச்சு, என்னைத் தனியா விட்டுட்டுப் போயிட்டாங்க!" என்று பொங்கிப்பொங்கி, விம்மிவிம்மி அழுகிறாள் நிமிஷா. அவளது கண்ணீர் தலையணையை நனைக்கிறது.

"நிமிசாம்மா, இப்படி அழுதா உடம்புக்கு ஆகாது. நீங்கதானே அம்மாவை சிரிச்சுக்கிட்டே வழி அனுப்பி வைச்சீங்க? இப்ப அவங்கமேலே ஏன் குறை சொல்லறீங்க?" என்று கேட்கிறாள், காமாட்சி.

அவளுக்கு நிமிஷாவின் மனது புரிந்தாலும், ஏதோ ஒரு குறை அவள் மனதை அரிக்கிறது என்று மட்டும் நன்றாகத் தெரிகிறது.

"காம்ஸ், நான் சிரிச்சாலும், அழுதாலும் எங்கம்மா சீனாவுக்குப் போய்த்தான் இருப்பாங்க. நான் சிரிச்சதுனாலதான் நீயும், ஏக்ஸும் எங்கூட இருக்கீங்க. நான் அழுது ஆர்ப்பாட்டம் செஞ்சிருந்தா, மம்மி என்னை ஏதாவது கர்ல்ஸ் ஹாஸ்டல்ல தள்ளியிருப்பாங்க. அதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை. நீயாவது துணைக்கு இருக்கே. நீயும் ஏக்ஸும்கூட இருக்கறது எனக்கு எவ்வளவு ஆறுதலா இருக்கு தெரியுமா? எப்பவும் நான் தனியாகத்தான் வீட்டில இருப்பேன்.

"முதல்ல உன்னை எனக்குப் பிடிக்காது. உன்னை என்கூடத் துணைக்கு விட்டுட்டு தஞ்ஜூ போறேன்னு மம்மி சொன்னதுக்குக்கூட நான் வேண்டாம்னுதான் சொன்னேன். அப்புறம்தான் — நீங்க என்கூட இருக்க இருக்கத்தான் — கொஞ்சம் கொஞ்சமா உங்கமேலே எனக்கு ஒரு பாசம், அன்பு வர ஆரம்பிச்சுது. அதுவும் ஏக்ஸ் என்கிட்ட எவ்வளவு பாசமாப் பழகறான்னு பார்த்தவுடன்தான், இப்படித் தனியா இருக்கோமே, ஒரு அக்கா, தம்பி இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்னு அடிக்கடி தோண ஆரம்பிச்சுது. அதுனாலதான் மம்மி சீனா போறேன்னு சொன்னவுடன், நீயும், ஏக்ஸும் என்கூட இருக்கணும்னு பிடிவாதம் பிடிச்சேன். அவங்களும் ஒத்துக்கிட்டாங்க. அவங்களைப் பத்தி உனக்குத் தெரியாது. வேலை முன்னேற்றம்தான் முக்கியம்னு என் அப்பா பேரைக்கூட எனக்குச் சொல்ல மாட்டேங்கறாங்க.." பெரிதாக அழ ஆரம்பித்துவிடுகிறாள், நிமிஷா.

என்ன சொல்வதென்று தெரியாமல் அவளைத் தன்னுடன் அணைத்துக்கொள்கிறாள், காமாட்சி. கொஞ்சநேரம் அழுதுவிட்டுத் தானாகவே சிறிதுசிறிதாக விம்மலைக் குறைத்து நிறுத்துகிறாள் நிமிஷா. பிறகு கடகடவென்று சிரிக்கிறாள்.

"உன்னைப் பயமுறுத்திட்டேனா, காம்ஸ்? ஏதோ என்னையும் அறியாம அழுகை வந்திடுச்சு", என்று மெதுவாகத் தன்னை அவளிடமிருந்து விடுவித்துக்கொள்கிறாள்.

"இதென்ன, ஏதாவது திருவிழாவா? ஏன் இப்படி வாணவேடிக்கை நடக்குது? வானம் ஏன் ஒருமாதிரியா இருக்கு?" என்று அவள் கேட்டதும் காமாட்சி திரும்பிப் பார்க்கிறாள்.

கருநீல வானத்தில் சிவப்பும் வெள்ளையுமாக மின்னல் கொடிகள் பறந்துகொண்டிருக்கின்றன. அறையின் கண்ணாடிச் சுவர் மேற்குப் பக்கமாக இருந்ததால் அவர்களால் சூரியனைப் பார்க்கமுடியவில்லை. நிமிஷா தன் கட்டிலருகே உள்ள சிறு மேசையில் உள்ள பொத்தானை அமுக்குகிறாள். பதில் வந்தவுடன், "வானம் ஏன் கருநீலமாக இருக்கிறது. வாணவேடிக்கை நடக்கிறதே, என்ன விழா நடக்கிறது?" என்று கேட்கிறாள்.

"சூரிய கிரகணத்தினால் அவ்வாறு நடக்கிறது, ஒளிபரப்பைப் பார்த்தால் சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம்," என்று பதில் வருகிறது.

உடனே அடுத்த பொத்தானை அமுக்குகிறாள் நிமிஷா. சுவர்க் கண்ணாடியில் தெரிந்த நீலவானமும், தஞ்சைப் பெரியகோவிலும், வாணவேடிக்கைகளும் மறைந்து, ஒளிபரப்பு தொடங்குகிறது.

"இதுவரை சூரியகிரகணத்தில் இந்தமாதிரி நிகழ்ந்ததே இல்லை. சூரியனே வெடித்துச் சிதறுவதுபோல இருக்கிறது! பார்வையாளர்கள் நன்றாகப் பார்க்க வேண்டும் என்பதற்காக நாங்கள் காரைகட் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இணைப்பு கொடுத்திருக்கிறோம். மையத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் சோம்காந்த் இப்பொழுது வரமுடியாத நிலையில் உள்ளதால் அவருடைய உதவியாளர் ஸஹஜா நம் கேள்விகளுக்கு பதில்சொல்வார்."

ஒளிக்காட்சி பாதி சூரிய கிரகணத்தையும், பாதி ஸஹஜாவையும் காட்டுகிறது. ஸஹஜாவின் முகத்தில் ஒருவிதமான கலவரம் இருப்பதும், அவள் அதை மறைத்துக்கொண்டு பேசுவதும் உன்னிப்பாகக் கவனித்தால் தெரிகிறது. பேட்டியாளரின் முகமும் தெரிகிறது.

"ஸஹஜா, நீங்கள் இந்த சூரியகிரகணத்தைப் பற்றியும், வானம் கருநீலமாயிருப்பதைப் பற்றியும், வாணவேடிக்கை நடப்பது மாதிரி ஆகாயம் முழுவதும் மின்னல் கொடிகள் தெரிவதைப் பற்றியும் விளக்கிச் சொல்கிறீர்களா?" என்று கேள்வி பிறக்கிறது.

"இது சூரியனின் மேல்பரப்பில் ஏற்படும் புதுவிதமான கதிர்வீசலால் ஏற்படுகிறது என்று நினைக்கிறோம். சூரியன் கிரகணத்தில் மறையும் போது பொதுவாக வானம் கருக்கும். சூரியனின் ஒளிக்கதிர் நிலவின்மீது பட்டுச் சிதறி, மின்காந்தப் புயலுடன் சேர்ந்து பூமியின் காற்று மண்டலத்தில் ஊடுருவதால் இப்பொழுது கருநீலமாகத் தெரிகிறது என்றும் நினைக்கிறோம். சூரியனின் மின்காந்தக் கதிர்வீசலே இப்படிப்பட்ட வாண வேடிக்கையாகத் தெரிகிறது. மழை, புயல் அடிக்கும் போது இடியுடன் மின்னல் மின்னுவதில்லையா, அதுமாதிரிதான்!"

திடுமென்று அவள் முகம் மாறுகிறது. காமிரா அவளுக்கு வலது பக்கம் திரும்புகிறது. சோம்காந்த், அங்கு ஓடிவருகிறார். அவரைத் துரத்திக்கொண்டு சில காவலாளர்களும் அவர் பின்னால் வருகிறார்கள்.

சோம்காந்தைக் கண்டதும் ஸஹஜாவின் முகத்தில் ஒரு நிம்மதி பிறக்கிறது. மைக்கிற்காகக் கைநீட்டுகிறார் அவர். அவரிடம் அவசர அவசரமாகத் தன் மைக்கை நீட்டுகிறாள் ஸஹஜா.

"இந்த உலகத்திற்பக மாபெரும் விபத்து காத்திருக்கிறது! உலகின் பல பாகங்களிலிருந்து நமக்கு சாடலைட் டிரான்ஸ்மிஷன் வருவது நின்றுவிட்டது. நீங்கள் யாரும் எங்கும் பயணம் செய்யவேண்டாம்! வெளியே வராதீர்கள்! சூரியினிடமிருந்து கிளம்பிய மிகப்பெரிய மின்காந்தப் புயல் இன்னும் எட்டு நிமிஷங்களில் பூமியைத் தாக்கப்போகிறது. அதன் விளைவு மிகமிகப் பயங்…"

இதற்குள் காவலர்கள் அவரிடமிருந்து மைக்கைப் பிடுங்கிவிடுகிறார்கள். சோம்காந்த் சொல்வது அதற்கு மேலே கேட்கவில்லை. ஒரு காவலர் ஒளிபரப்புக் காமிராவின் முன்னால் வந்து மறைத்துக்கோண்டு நிற்கிறார். அதனால் அங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. சில விநாடிகளுக்குப் பிறகு 'தடங்கலுக்கு வருந்துகிறோம்' என்ற ஒரு அறிவிப்பு மட்டுமே தெரிகிறது.

அதே சமயம் நிமிஷாவும், காமாட்சியும் இருக்கும் அறையின் விளக்குகள் அணைந்து அணைந்து எரிகின்றன. சிறிது நேரத்தில் விளக்குகள் ஒரேயடியாக அணைந்துபோகின்றன. சுவற்றில் தெரியும் ஒளிபரப்பு மறைந்து கருநீலவானம் தெரிய ஆரம்பிக்கிறது.

*          *          *

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com