பொன்னியின் செல்வனின் தமிழ்க் கனவு – முதல் பாகம் – அத்தியாயம் 7

பொன்னியின் செல்வனின் தமிழ்க் கனவு – முதல் பாகம்  – அத்தியாயம் 7

ஒரு அரிசோனன்

ஹோட்டல் ராஜ்ராஜ் , தஞ்ஜு

பிரஜோற்பத்தி, ஆடி 7 – ஜூலை 22, 2411

"ன்ன ஆச்சு காம்ஸ்? விளக்கெல்லாம் ஏன் அணைஞ்சு போச்சு? மின்காந்தப் புயல் என்ன செய்யும்?" என்று கவலையுடன் விசாரிக்கிறாள் நிமிஷா. அவள் சொல்வது இந்தியும் ஆங்கிலமும் கலந்த மொழியாகத்தான், "க்யா ஹாப்பன்ட் காம்ஸ்? க்யோன் லைட் பந்த்? எலேக்ட்ரோ மாக்னடிக் தூஃபான் வாட் கரெகா?" என்று காமாட்சியின் காதில் ஒலிக்கிறது

நிமிஷா கேட்பது ஏன் தனக்குத் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படவில்லை என்று புரியாமல் காதில் இருக்கும் மொழிமாற்று கருவியைத் தட்டித்தட்டிப் பார்க்கிறாள், காமாட்சி

"நிமிசாம்மா, நீங்க சொல்றது ஒண்ணும் புரியலம்மா? என்னம்மா கேக்குறீங்க?" என்று அவளைத் தொட்டு விசாரிக்கிறாள். அவள் பேசும் தமிழும் நிமிஷாவின் மொழிமாற்றக் கருவியால் மொழிபெயர்க்கப் படாததால், அது நிமிஷாவுக்கு விளங்கவில்லை என்பது அவளது முகபாவத்திலிருந்து தெரிகிறது

இருவர் முகத்திலும் கவலை படிகிறது

உடனே தன் கட்டில் அருகே சிறிய மேசையில் இருந்த பொத்தானை அமுக்கி ஹோட்டல் வரவேற்பாளர்களுடன் தொடர்புகொள்ள முயற்சிக்கிறாள், நிமிஷா

ஆனால் ஒருவிதமான பலனும் ஏற்படவில்லை. காதுக்கருவியில் ஒரு அமைதி. தன் சட்டைப்பையிலிருந்து முப்பரிமாணத் தொடர்புக் கண்ணாடியை அணிந்துகொண்டு அழகேசனுடன் தொடர்புகொள்ள முயன்று தோல்வியைத் தழுவுகிறாள். எந்தவிதமான கம்பியில்லாத் தொடர்பும் வேலைசெய்யவில்லை. இனம் தெரியாத பயம் அவளைக் கவ்வுகிறது

"காம்ஸ். முஜே ஃபியர் லக்தா. ஹம் பாஹர் கோ, ஆர் வாட்?" (காம்ஸ், எனக்குப் பயமா இருக்கு. வெளியே போவோமா என்ன?) என்று கேட்கிறாள். அது காமாட்சிக்கு வெறும் பொருளற்ற உளறலாகத்தான் ஒலிக்கிறது

"நிமிசாம்மா, என்ன கேக்கறீங்க? எனக்கு ஒண்ணும் புரியலையே? அளகேசனைக் கூப்பிடுங்கம்மா! தம்பி ஏகாம்பரம்வேற ஈசுவரன் அண்ணன்கூடப் போயிருக்கானே? என்ன ஆச்சுன்னு தெரியலிலேம்மா?" என்று புலம்புகிறாள்

நிமிஷா அறைக்கதவைத் திறக்கப் பொத்தானை அமுக்குகிறாள். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. உடனே கதவில் இருக்கும் கைப்பிடியைச் சுற்றித் திறக்க முயற்சிக்கிறாள். மின்னணுக்களால் பூட்டப்பட்ட பூட்டின் கைப்பிடி சுழன்றாலும், மின்தொடர்பு கிடைக்காததால் கதவு திறக்கமறுக்கிறது. என்னதான் முயற்சிசெய்து கைப்பிடியைச் சுழற்றிச் சுழற்றி ஆட்டிப் பார்த்தாலும் கதவைத் திறக்கமுடியவில்லை

அவளுக்கு பயத்தால் ரத்தம் உறைந்துவிடும்போல இருக்கிறது

"காம்ஸ், தர்வாஜா ஓபன்ஸ் நாட், க்யோன் (கதவு திறக்கலையே, ஏன்)?" என்று அழ ஆரம்பிக்கிறாள். அவள் வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பதுபோன்ற உணர்வு… 

"நிமிசாம்மா, என்னம்மா நடக்குது, இங்கே? ஏம்மா அழறீங்க? நீங்க அழறதைப் பார்த்தா எனக்கு ரொம்பப் பயம்மா இருக்கும்மா? என்ன ஆச்சும்மா? உங்களோட பேச்சு எனக்குப் புரியலையேம்மா! என் பேச்சாவது உங்களுக்குப் புரியுதாம்மா? இங்கே மாட்டிக்கிட்டு நாம என்னம்மா செய்யப்போறோம்?" என்று கம்மிய குரலில் அவளைக் கேட்கிறாள். காமாட்சி

திடுமென்று அவர்களுக்கு இடையில் ஒரு இரும்புத்திரை விழுந்துவிட்டமாதிரிஇருவருக்குமே காதுகேட்காமல் போய்விட்டமாதிரியான ஒரு உணர்ச்சி அவர்களுக்குள் எழுகிறது. இருவருக்குமே அடிவயிற்றை பிசைகிறது

இருந்தாலும் யாராவது கதவைத் திறந்துவிடுவார்களா என்ற நப்பாசையில் காமாட்சி கதவைத் தட்டித்தட்டிப் பார்க்கிறாள். கைகள் சிவந்து வலித்ததுதான் மிச்சம். கதவை யாரும் திறந்துவிடவில்லை

விளக்குகள் எரியவில்லை, தொலைக்காட்சி தெரியவில்லை, தங்களின் மொழிமாற்றுக்கருவிகள் வேலைசெய்யவில்லை, முப்பரிமாணக் கண்ணாடி மூலம் யாருடனும் தொடர்புகொள்ள முடியவில்லை, இப்பொழுது அறைக்கதவும் திறக்கவில்லைஏன் எதுவுமே வேலைசெய்யவில்லை என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்கிறாள், நிமிஷா

அவள் மூளையில் 'மின்சாரம்' என்று பதில் திடுமெனப் பளிச்சிடுகிறது. அது சரி, மின்சாரம் இல்லாததால் விளக்குகள் எரியவில்லை, தொலைக்காட்சி வேலைசெய்யவில்லை. அறைக்கதவு திறக்கவில்லைசரிதான். ஆனால் மொழிமாற்றுக்கருவி ஏன் வேலைசெய்யவில்லை என்று சிந்திக்கிறாள்

'மின்கலம், பாட்டரி' என்று கத்துகிறது, அவள் மூளை. அப்படியானால் பாட்டரிகளும் வேலைசெய்யவில்லையா என்று கேட்டுக்கொள்கிறாள். அது சரியில்லையே; பாட்டரி வேலைசெய்ய வெளியிலிருந்து மின்சாரம் தேவையில்லையே; அவைகளில் மின்சக்தி சேமித்து வைக்கப்பட்டிருக்கிறதே என்று நினைத்துப்பார்க்கிறாள். சோபாவில் உட்கார்ந்து மூளையைக் கசக்கிச் சிந்திக்கிறாள். அவளது மூளை விடையளிக்க இயலாமல் திணறுகிறது

அவளருகிலேயே அமர்ந்த காமாட்சியையும் கவனிக்காமல், ஆழ்ந்த யோசனையில் ஆழ்கிறாள்

அப்படியானால், அலைபரப்புகள் (wireless transmissions) நின்றுவிட்டிருக்கலாம் என்று அவளது அறிவு அவளுக்குப் புலப்படுத்துகிறது. ஆக, இப்பொழுது வெளித்தொடர்பு இல்லாமல் தனியாகிவிட்டோம்; தாங்கள் இருக்கும் அறையே தங்களுக்குச் சிறை ஆகிவிட்டது; தன் அருகிலிருக்கும் காம்ஸிடம்கூட தன்னால் பேசமுடியாது; தன் கருத்துகளை அவளுக்குத் தெரிவிக்கவோ, அவள் சொல்வதைத் தன்னால் புரிந்துகொண்டு அவளுடன் உரையாடவோ முடியாது, வாயிருந்தும் ஊமைகள்தான், காதிருந்தும் செவிடுகள்தான் என்று புரிந்துகொள்கிறாள்

அப்பொழுதுதான் தன் முதுகைக் காமாட்சி இதமாகத் தடவிக்கொண்டிருப்பதைத் திடுக்கிட்டு உணர்கிறாள்

பேசமுடியாது போனாலும் தன்னைச் செய்கைமூலம் தேற்றுகிறாள் காமாட்சி என்பதை அவள் வருடிக்கொடுப்பது உணர்த்துகிறது. அப்படியே மனம் நெகிழ்ந்துபோய், "காம்ஸ், தூ மேரீ எல்டர் பஹன்! தூ மேரி டியர் ஃப்ரென்ட்! (நீ என் அக்கா, நீ என் அருமைத் தொழி)" என்று சொல்லி காமாட்சியைச் சேர்த்து இறுகக் கட்டிக்கொள்கிறாள்

அவள் கண்களிலிருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வழிந்து காமாட்சியின் தோளை நனைக்கிறது

"அழாதீங்க நிமிசாம்மா! பயப்படும்படி ஒண்ணும் ஆகாது. படிச்ச நீங்களே இப்படி இடிஞ்சு உக்காந்தா, எடுபிடியான நான் என்னம்மா செய்யறது?" என்று காமாட்சி புலம்புகிறாள்

நேரம் ஆமையாக ஊர்கிறது

*          *          *

விண்வெளி ஆராய்ச்சி மையம், காரைகட்

காவலாளர்கள் சோம்காந்த்தைக் கழுத்தைப் பிடித்துத்தள்ளாத குறையாக வெளியேற்றியவுடன் அவரைப் பின்தொடர்கிறாள், ஸஹஜா. கலைந்த தலையுடனும், கைகலப்பினால் கிழிந்த சட்டையுடனும் இருக்கும் அவரைப் பார்க்க அவளுக்குப் பரிதாபமாக இருக்கிறது

"ஏம்மா ஸஹ்ஜ், என்னுடன் ஏன் வந்துட்ட? உன் எதிர்காலத்தை ஏன் வீணாப் பாழாக்கிக்கறே?" 

"சோம்த். இன்னும் எட்டு நிமிஷத்துல ஏதோ பயங்கர விளைவுன்னீங்களே! அது என்ன? நீங்க இங்கே இல்லைன்னா விஷயத்தை எப்படி நான் எல்லோருக்கும் சொல்றது? அது போகட்டும், உலகத்துக்கே பெரிய ஆபத்து ஏற்படறச்ச எனக்கு என்ன எதிர்காலம் இருக்கப்போறது?" 

"நான் எதிர்பார்த்தது நடக்க ஆரம்பிச்சாச்சு. ஈஸ்வரா, நீதான் இந்த உலகைக் காப்பாத்தணும்! சீக்கிரம் வெளியே போனால் நமக்கு நல்லது," என்று முனகியவாறே வாசல்கதவைத் திறக்கிறார்

"நீங்க என்ன எதிர்பார்த்தீங்க, சோம்த்? நீங்க சொல்றதைக்கேட்டால் பயமா இருக்கு." என்று அவர் கையைப் பிடித்துக்கொள்கிறாள், ஸஹஜா

அவர்கள் வாசல்படி இறங்கிவருவதற்குள்ளேயே தூரத்தில் மையத்தின் பெரிய டிரான்ஸ்ஃபார்மர் பலமான சத்தத்துடன் வெடித்துச் சிதறிப் புகைய ஆரம்பிப்பது அவர்கள் கண்ணுக்குத் தெரிகிறது. மின்சாரம் நின்றுபோவதால் வெளியில் புல்தரைக்கு நடுவில் இருக்கும் பெரிய நீரூற்று நின்றுபோகிறது

அதைச் சுற்றியிருக்கும் அலங்கார விளக்குகள் அணைந்துபோகின்றன. 'காரைகட் விண்வெளி ஆராய்ச்சி மையம்' என்று எழுதியிருக்கும் குழல்விளக்கு மங்கி நின்றுபோகிறது

"முதல் கட்டமாக மின்சாரம் நின்னுபோச்சு, பார்த்தாயா? பூமி தூண்டிய அதிகமான மின்னோட்டத்தால் (Ground induced current – GIC) டிரான்ஸ்ஃபார்மர்கள் புகைந்துபோய் மின்சார ஓட்டம் நின்றுபோயிருக்கு. இதுக்கு முன்னாலேயே ஸாட்டலைட் அலைபரப்பு நின்னுபோயிருக்கணும். அதுனால பிளேன்ஸ் பறக்கறத்துக்கு வழிகாட்டி இல்லாம போயிடும். அது ரொம்ப ஆபத்து. நிறைய விமானங்களை சரியானபடி வழிநடத்த முடியாமபோக வாய்ப்பு இருக்கு. இது போதாதுன்னு, மின்காந்தப் புயல் அதுகளை ஒழுங்கா வேலைசெய்யமுடியாம தடுத்தாலும் தடுக்கலாம். கரண்ட் இல்லாததுனால என் வீட்டிலேயும் ஒரே களேபரமா இருக்கும். போயி என்னனு பார்க்கணும். என்னோட வரியா, இல்லை உன் ஹோட்டலுக்குப் போறியா?" என்றவாறே தனது காரைநோக்கி நடக்கிறார், சோம்காந்த்

"இருண்டு கிடக்கற ஹோட்டலுக்குப் போயி என்ன செய்யப்போறேன், சோம்த்? உங்ககூட வறேன்." என்று அவருடன் நடக்கிறாள், ஸஹஜா

கார் சாவியை எடுத்து கதவைத்திறக்கும் பொத்தானை அமுக்குகிறார் சோம்காந்த்

கார்க்கதவு திறக்கவில்லை

"பாட்டரி தீர்ந்துபோச்சா?" என்று சொல்லிக் கொண்டே சாவியினால் கதவைத் திறந்து அமர்ந்துகொள்கிறார். பக்கத்து இருக்கையில் சாய்கிறாள், ஸஹஜா. காரை ஸ்டார்ட்செய்யும் பொத்தானை அவர் பலமுறை அமுக்கியும் ஒன்றுமே நடக்கவில்லை

"என்ன ஆச்சு இந்தக் காருக்கு? காலைல வர்றபோது ஒழுங்காகத்தானே இருந்தது?" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவரின் கவனம் 'டாஷ்போர்டி'ன் நடுவில் இருக்கும் கடிகாரத்தின் பக்கம் செல்கிறது. அது அணைந்திருக்கிறது. இலேசான எரிச்சலுடன் தனது கைக் கடிகாரத்தைப் பார்த்தவர் திடுக்கிடுகிறார். அவரது கடிகாரத்தின் ஒளிரும் எண்கள் அணைந்துவிட்டிருக்கின்றன

"ஸஹ்ஜ், டைம் என்ன, சொல்லு?" என்று கேட்டவரை ஒருமாதிரியாகப் பார்த்துக்கொண்டு தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தவள், "சோம்த், என் கடிகாரம் நின்னுபோச்சு," என்றவள், "உங்க கடிகாரம்?" என்று இழுக்கிறாள்

"நான் எதிர்பார்த்ததுக்கு மேலே மோசமா இருக்கு, ஸஹ்ஜ்! இங்கே ஒட்டுமொத்தமா மின்சாரம் நின்னுபோச்சு. அதுனாலதான் கார் ஸ்டார்ட் ஆகல. ஸோ, காரோட கடிகாரம் மட்டுமில்ல, மின்சாரத்துல ஓடற நம்ம கடிகாரங்களும் நின்னுபோச்சு," என்றவரின் முகம் திடுமெனப் பேயறைந்த மாதிரி ஆகிறது

அதைப் பார்த்துப் பயந்த ஸஹஜா, "என்ன சோம்த், என்ன ஆச்சு? என்ன ஆச்சு?" என்று பதட்டத்துடன் கேட்கிறாள்

"இப்ப நடந்திருக்கிறது கடிகாரத்தோடயும், காரோடையும் போற விஷயமில்ல ஸஹ்ஜ்! நீயும் நானும் ரொம்ப அதிர்ஷ்டம் செஞ்சவங்க. ஓடாத காரில உட்கார்ந்து இருக்கறதுனால, அமைதியா இதைப் பத்திப் பேசமுடியுது. யோசிச்சுப்பாரு. ரோடில போற கார்கள், ரயில்கள் என்ன ஆகும்? எல்லாம் நின்னுபோகும். பிரேக் சரியாப் பிடிக்காதுனால ஒண்ணோட ஒண்ணு இடிச்சுக்கிட்டு பெரிய விபத்துகள் நடக்கும். ஆகாசத்துல பறக்கற விமானங்களோட இன்ஜின்கள் மின்சாரம் இல்லாட்டா ஓடாம நின்னுடும். அவற்றை இயக்கற கன்ட்ரோல் எதுவுமே வேலைசெய்யாது. எல்லா விமானங்களும் பொத்துப் பொத்துனு கீழே விழுந்துடும்

"நாம உபயோகிக்கிற எலேக்ட்ரிக், எலேக்ட்ரானிக் ஐட்டம்ஸ் ஒண்ணுகூட வேலைசெய்யாது. யாரோடயும் டெலிகம்யூனிகேஷன்ஸ் பண்ணமுடியாது. நேரில பேசினாத்தான் உண்டு. அரசாங்கம் ஒழுங்கா நடக்காது. யாருக்கும், எதுவும் சுலபமாக் கிடைக்காது. சில நாள்ல சாப்பாட்டுக்கே வழியில்லாம, ஏன் சமைக்கக்கூட வழியில்லாம போயிடும். நம்ம நாட்டு, ஏன் உலகத்தோட எதிர்காலத்தை நினைக்க நினைக்க எனக்கு ரொம்பப் பயமா இருக்கு! சுருக்கமாச் சொன்னா நாம கற்காலத்துக்குத் தள்ளப்பட்டிருக்கோம், ஸஹ்ஜ்!" அவர் குரல் கம்முகிறது

"மின்காந்தப் புயலோட தாக்கம் சிலநாள்ல போயிடுமில்லையா? அப்படியிருக்கறச்ச கற்காலத்துக்குப் போயிடுவோம்னு ஏன் சொல்றீங்க. சோம்த்?" 

அவள் குரலில் ஒரு நடுக்கம். 

"காரில நான் வச்சிருந்த திசைகாட்டியைப் பாரு, அது எந்தத் திசையைக் காட்டுது? காரு கிழக்கே பார்க்க இருக்கு, ஆனா அது வடக்கேன்னு சொல்லுது, இப்பப் பாரு, அது மெல்லக் கத்துது. இது ஏன் தானா கத்தணும்? பூமியோட காந்தசக்திக்கு ஏதோ மாற்றம் வந்துக்கிட்டு இருக்கு. பெரிய அளவுல மாற்றம் வந்தா, முறையான காந்தசக்தியே இல்லாம போயிடும். அப்ப ஜெனரேட்டர் மூலமா மின்சக்தி உண்டு பண்ண முடியாது. அதை விட்டுத் தள்ளு. நம்ம கடிகாரங்கள்ல சின்ன பாட்டரி இருக்கு. அதில் காந்தசக்தி மாற்றத்தால மின்சார சேமிப்பை இழந்துடுச்சு. இனிமே நாம் இதுவரைக்கும் செஞ்சுக்கிட்டு வந்த வேலையைச் செய்யமுடியாது

"வீட்டுக்குப் போய் வருங்காலத்துல என்ன பண்ணறதுன்னு யோசிப்போம். நல்லவேளையா எனக்குத் தனிவீடு இருக்கறதுனால பெரிய கஷ்டம் ஒண்ணும் இருக்காதுன்னு நினைக்கிறேன். மூணு கிலோமீட்டர் நடப்பே இல்லையா?" என்று நடக்க ஆரம்பிக்கிறார் சோம்காந்த்

அவர் சொன்ன அதிர்ச்சியான செய்திகளை மனதில் ஜீரணிக்க முயன்றுகொண்டே அவருடன் மெதுவாகத் தன் கையை இணைத்துக்கொண்டு தன் பயத்தை ஒருவாறு மறைக்க முயன்றவாறே நடக்கிறாள் ஸஹஜா

*          *          *

ஹோட்டல் சாம்ராட் ராஜ்ராஜ், தஞ்ஜு

ஹோட்டலில் எங்கும் ஒரே கூச்சல், குழப்பம், தடுமாற்றம்மின்சாரம் நின்றுபோனதாலும், அவசரத் தேவைக்காக இருந்த மின் உற்பத்தி இயந்திரங்கள், பாட்டரிகள் வேலைசெய்யாததாலும் விளக்குகள் அணைந்துபோய் எல்லா இடத்திலும் இருள் சூழ்ந்திருக்கிறது. அதனால் மாடி ஏறவும் இறங்கவும் முடியாமல் லிஃப்டுகள் நின்றுவிடுகின்றன

அவற்றில் மாட்டிக்கொண்டவர்கள் தகரடின்னில் மாட்டிக்கொண்டு, வெளியேற முடியாது தவிக்கும் எலிகள் மாதிரித் தவிக்கிறார்கள்

வரவேற்புக்கூடத்தில் ஒரே பரபரப்பு. 

மின்வெட்டுதான் இவை எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கக்கூடும் என்றெண்ணி, மின் இலாகாவுடன் தொடர்புகொள்ள முயல்பவர்களுக்கு அமைதிதான் பதிலாகக் கிடைக்கிறது. அவர்களால் யாருடனும் தொடர்புகொள்ள முடியவில்லை

அழகேசன், ஏகாம்பரம், ஈஸ்வரன் மூவரும் சாப்பாட்டு வண்டியைத் தள்ளிக்கொண்டு லிஃப்ட்டின்முன் நிற்கும்பொழுது தான் இந்த மின்வெட்டு ஏற்படுகிறது

முதல் நாள் சிலசமயங்கள் விளக்குகள் அணைந்துபோனது அவர்கள் நினைவுக்கு வருகிறது. எனவே சிறிதுநேரம் சென்றால் மின் இணைப்பு மீண்டும் கிடைக்கும். மேலே செல்லலாம் என்று பொறுமையுடன் காத்திருக்கிறார்கள்

சற்றுத் தள்ளி வரவேற்புக்கூடத்திலும், வாசலிலும் குழப்பத்துடன் கூக்குரல்கள் கேட்கவே, அவர்களைச் சிறிதுநேரம் அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு, அழகேசன் வாசல்நோக்கி விழைகிறான்

நேரில் சென்று என்னவென்று பார்க்கலாம் என்று வெளியில் வந்தவனை வியப்புக்குள்ளாக்குகிறது அங்கு தெருவில் அவன் காணும் காட்சி

தெருவில் ஓடிக்கோண்டிருக்கும் வண்டிகள் அனைத்தும் நின்றுபோயிருக்கின்றன. ஒரேயடியாக இப்படி ஆகிவிட்டதே என்று வண்டியிலிருந்து மக்கள் வெளியே வந்து திகைப்புடன் பார்க்கிறார்கள். சில வண்டிகள் மோதிக்கோண்டு தாறுமாறாகக் கிடக்கின்றன. ஒன்றன்மேல் ஒன்று ஏறியதால் சில இடங்களில் வண்டிக் குவியல்களும் தெரிகின்றன. அதனால் காயமுற்றோரின் கூச்சலையும், உடைந்த வண்டிகள் தாறுமாறாகக் கிடப்பதையும் பார்த்து, ஹோட்டலிலிருந்து வெளியே வந்தவர்கள் திகைக்கிறார்கள்

கருநீல வானமும் மெதுவாக வெளிற ஆரம்பிக்கிறது. சிவப்பும் வெள்ளையுமாகத் தெரிந்து வந்த மின்னொளிச் சிதறல்களும் மறைய ஆரம்பிக்கினறன

எந்த வண்டியையும் ஓட்டத் தெரியாவிட்டாலும் (எடுபிடிகளுக்கு வண்டி ஓட்டக் கற்றுக்கொடுக்கக்கூடாது என்பது சட்டம்) எல்லா வண்டிகளிலும் மோதலைத் தவிர்க்கும் சாதனங்கள் உள்ளன என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே, தெருவில் ஒட்டுமொத்தமாக எல்லா வண்டிகளும் நின்றுவிட்டிருப்பதோடு மட்டுமல்லாமல் ஒன்றோடொன்று முட்டிமோதிக்கோண்டிருப்பதற்கு மனிதச் சக்திக்கு அப்பாற்பட்ட நிகழ்வே காரணம் என்று உணர்ந்துகொள்கிறான், அழகேசன்

அந்த நிகழ்வுதான் மின்வெட்டை இப்பொழுது உருவாக்கியிருக்கிறது என்றும் அவனது தற்காப்பு உள்ளுணர்வு உணர்த்துகிறது

அவன் தன் இளம்வயதில் முழு சூரிய கிரகணத்தைப் பார்த்திருக்கிறான். அப்பொழுது இருட்டுமே தவிர இம்மாதிரி, கருநீல வானத்தையோ, சூரியனிடமிருந்து கிளம்பிய சிவப்பும் வெள்ளையுமான பொறிச் சிதறல்களையோ அவன் கண்டதில்லை

ஆகவே, இந்த நிகழ்வுகளும் இயற்கையின் ஒரு சீற்றமே என்று புரிந்துகொள்கிறான்

மனம் மத்ராநகர்த் தெய்வமான மீனாட்சியையும், மாரியம்மனையும் துணைக்கு அழைக்கிறது. தன்னைப் பத்திரமாக வைத்திருக்கும்படி ஒருகணம் வேண்டுகிறது

மறுகணம் அவனுக்கு ஹோட்டலில் முப்பதாவது மாடியில் இருக்கும் நிமிஷா, காமாட்சி இவர்களின் நினைவுவருகிறது

'அவர்களுக்கு என்ன ஆயிற்றோ? அவர்கள் தன்னந்தனியாக அல்லவா மாட்டிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்குத் துணையாக இருக்கவேண்டியதல்லவா நமது கடமை,' என்ற நினைவு வந்தவுடன் உடனே ஈஸ்வரனும், ஏகாம்பரநாதனும் இருக்குமிடத்திற்கு ஓடுகிறான்

இருவரும் வேகமாக ஓடிவரும் அவனைப் பார்த்துத் திகைக்கின்றனர். என்னவாயிற்று என்ற அவர்களின் கேள்விக்குப் பதில்சொல்லாமல், "ஏதோ கெட்டது நடந்துபோச்சு! உடனே நாம மேலபோயி காமாட்சியையும், நிமிசாம்மாவையும் பார்க்கணும். வாங்க, மேல்மாடிக்குப் போகலாம்!" என்று அழைக்கிறான்

"லிஃப்டுதான் அப்படியே நின்னுபோச்சுதே! எப்படி மேல்மாடிக்குப் போறதாம்?" என்று கேட்ட ஈஸ்வரனுக்கு கோடியில் இருக்கும் மாடிப்படிகளைச் சுட்டிக்காட்டுகிறான், அழகேசன்

ஈஸ்வரனின் கண்கள் அழகேசன் சொல்வதை நம்பாமல் விரிகின்றன

"நாம முப்பது மாடி ஏறிடலாம். ஏகாம்பரம் எப்படி முப்பது மாடி ஏறுவான்?" என்று கேட்கிறான்

"உனக்கு இப்ப எப்படி சொகுசைப் பத்தின நினப்பு வரலாம்?" என்று உறுமுகிறான் அழகேசன். "இங்க பாரு ஈஸ்வரா? சிபாலியம்மா திரும்பிவர்ற வரைல அந்தப் பொண்ணுங்க ரெண்டு பேரும் இந்தப் பையனும் என் பொறுப்பு. அந்தப் பொண்ணுங்க ரெண்டுபேரும் தனியா என்ன திண்டாட்டம் திண்டாடறாங்களோ, யோசிச்சுப் பாரு. அவங்களுக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா நான் சிபாலியம்மாவுக்குச் செய்துகொடுத்த உறுதிமொழி என்ன ஆறது? இந்தப் பையனுக்கு காலு வலிச்சா, இவனை நான் முப்பது மாடியும் தூக்கிட்டே போவேன். அவுங்க பசியா இருப்பாங்க. சாப்பாடுச் சட்டிகளைத் தூக்கிக்கிட்டு என்னோட வா!" 

ஈஸ்வரன் தலையை ஆட்டுகிறான். "நீ சொல்றது ரொம்பச் சரி, அழகேசா! எடுபிடியிலேயேயும், கடைசிப்பிடியாகத் தள்ளப்பட்ட என்னைக் கைதூக்கிவிட்டவங்க ஷிஃபாலியம்மா. அவங்களுக்கு நாம நன்றியா இருக்கத்தான் வேணும். உனக்கு இருக்கற பதட்டம்தான் எனக்கும் இருக்கு. நீ சொல்றபடி அவங்க பட்டினியா இருப்பாங்கசரி, போவோம் வா. தம்பி ஏகாம்பரம், வாப்பா! மேலே போயி உங்க அக்காவைப் பார்க்கலாம்!" என்று அழகேசனையும் ஏகாம்பரநாதனையும் பார்த்துப் பதில்சொல்கிறான்

ஆளுக்கு இரண்டு சாப்பாட்டுப் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு மூவரும் மாடிப்படி ஏறுகின்றனர்

நான்கைந்து மாடி ஏறியவுடனேயே ஏகாம்பரநாதனுக்குக் கால் வலிக்கிறது. வியாதியிலிருந்து மீண்ட பூஞ்சை உடம்பு அவனுக்கு

அவன் நிலைமையைப் புரிந்துகொண்ட அழகேசன் அவனைத் தன் தோள்களின்மீது ஏற்றிக்கொள்கிறான். முப்பதாவது மாடியை அவர்கள் அடையும்போது இருபத்தைந்து நிமிஷங்கள் கழிந்துவிடுகின்றன

ஈஸ்வரனுக்கு மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்குகிறது. சாப்பாட்டுப் பாத்திரங்களைத் தூக்கி வந்ததனால் கைகள் விண்விண்ணென்று வலித்துத் தெறிக்கின்றன. கால்கள் ஈயத்தால் செய்யப்பட்டதைப்போல கனமாகி வலிக்கின்றன. சட்டை வியர்வையினால் தொப்பலாக நனைந்துவிட்டிருக்கிறான்

ஆனால், அழகேசனோ ஏதோ கடற்கரையில் நடந்துவிட்டு வந்ததைப்போல சாதாரணமான மூச்சுடன், கைகளிலிருக்கும் சாப்பாட்டுப் பாத்திரத்தைக் கீழே வைத்துவிட்டு ஏகாம்பரநாதனையும் இறக்கிவிடுகிறான்

இருவரும் அறைக்கதவைத் தட்டி, "காமாச்சி, நிமிசாம்மா!" என்று கூப்பிடுகின்றனர்

ஏகாம்பரநாதனும் "அக்கா, அக்கா, நிமிசாக்கா, நாங்க சாப்பாடுகொண்டு வந்திருக்கோம்! கதவைத் திறங்க!" என்று கத்துகிறான்

அவர்களின் கூச்சல் காமாட்சியை மகிழ்ச்சி அடையவைக்கிறது

உடனே எழுந்திருந்து நிமிஷாவை எழுப்பி, நிம்மதியான பெருமூச்சுடன், "நிமிசாம்மா, நம்ம மனுசங்க வந்துட்டாங்க. அழகேசனும், ஈஸ்வரனும் கதவைத் தட்டறாங்க!" என்று மகிழ்வுடன் கூறுகிறாள்

"எங்களால கதவைத் திறக்கமுடியலை. தாப்பாள் திறக்க மாட்டேங்குது. நீங்கதான் எப்படியாவது கதவைத் தொறந்துவிடணும்," என்று காமாட்சி கத்துவது வெளியில் இருப்பவர்கள் காதில் விழுகிறது

அங்குமிங்கும் பார்த்த அழகேசன், ஒரு மேசையில் அழகுக்காக வைக்கப்பட்டிருந்த பெரிய வெண்கலப் பாவைவிளக்குச் சிலையை எடுத்து வருகிறான்

"ஈஸ்வரா, கொஞ்சம் நகந்துக்க," என்று ஈஸ்வரனையும், ஏகாம்பரநாதனையும் கைகளால் நகர்த்தியவன், "காமாச்சி, நான் கதவை உடைக்கப் போறேன், ரெண்டு பெரும் தள்ளி நின்னுக்கங்க!" என்று கத்திவிட்டு, கதவின் பூட்டு இருக்குமிடம் எது என்று ஊகித்து பாவைவிளக்கால் ஓங்கி ஓங்கி இடிக்கிறான்

அவன் புஜங்கள் புடைத்து எழுகின்றன. ஐந்து நிமிஷங்களில் கதவு உடைந்து திறந்துகொள்கிறது

மூவரும் உள்ளே நுழைகின்றனர்

தம்பியைப் பார்த்த காமாட்சி, அழுதுகொண்டே அவனைக் கட்டிக்கொள்கிறாள். அவள் கண்கள் அழகேசனையும், ஈஸ்வரனையும் பார்த்து நன்றிக்கண்ணீர் வடிக்கின்றன

"வெரி வெரி ஷுக்ரியா, கேஷ் அன்ட் ஈஸ்வ். ஹம் போத் வெரி டர் கயே! நவ் ஹமே ஃபிர் ஜிந்தகி கம்! (மிக்க நன்றி, நாங்கள் இருவரும் மிகவும் பயந்துவிட்டோம்! இப்பதான் பழையபடி உயிர் வந்தது!)" என்று நிமிஷா நன்றி தெரிவிக்கிறாள்

அவள் நன்றி தெரிவிக்கிறாள் என்று அழகேசனுக்குப் புரிந்தாலும், அவள் என்ன சொல்கிறாள் என்று தெரியாமல் விழிக்கிறான். காதில் இருக்கும் மொழிமாற்றுக்கருவி ஏன் வேலைசெய்யவில்லை என்று அவனுக்குப் புரியவில்லை

அப்போது புரியாத மொழியில் ஈஸ்வரன் நிமிஷாவுக்கு பதில்சொல்வது கேட்கிறது

ஈஸ்வரன் இந்தியில் பேசுவது நிமிஷாவுக்கும், காமாட்சிக்கும் மட்டுமல்லாது, ஏகாம்பரநாதனுக்கும் வியப்பைத் தருகிறது

"ஈஸ்வரண்ணே! ஒங்களுக்கு நிமிசாம்மாவோட பாசை தெரியுமா?" என்று வியப்புடன் கேட்கிறாள் காமாட்சி

"ஈஸ்வ், வாட் தும் ஹிந்தி அன்டர்ஸ்டான்ட்? (உனக்கு இந்தி தெரியுமா?)" என்ற இந்தியும் ஆங்கிலமும் கலந்த மொழியில் கேட்கிறாள், நிமிஷா

அவள் கண்களில் பளிச்சிட்ட ஒளி ஈஸ்வரனை என்னவோ செய்கிறதுதெரியும் என்பதுபோலத் தலையை ஆட்டுகிறான்

அப்படியே அவன் கைகளைப் பிடித்த நிமிஷா, அவனைச் சேர்த்து அணைத்துக்கொள்கிறாள். ஈஸ்வரன் உடலில் மின்சாரம் பாய்கிறது. சில கணங்கள் கழித்து வெட்கத்துடன் தன் அணைப்பை விடுகிறாள்

அழகேசனின் கழுகுக் கண்கள் இதைக் கவனிக்கத் தவறவில்லை. அவனது மூளை நிமிஷாவுக்கும், ஈஸ்வரனுக்கும் இடையில் நடக்கும் ஒருவிதமான பிணைப்பை இரண்டு நாள்களாகப் பதிவுசெய்துகொண்டுதான் இருக்கிறது. அதைப் பற்றி ஈஸ்வரனிடம் பேசவேண்டும் என்று நினைத்துக்கொள்கிறான்

"அக்கா! நாங்க உங்களுக்காக முப்பது மாடி ஏறி சாப்பாடு கொண்டுவந்திருக்கோம். அழகேசண்ணன்தான் என்னைத் தூக்கிக்கிட்டு படியேறி வந்தாரு!" என்று பெருமையாகக் காமாட்சியிடம் சொல்கிறான், ஏகாம்பரநாதன். அழகேசனை நன்றியுடன் பார்க்கிறாள் காமாட்சி. அவர்கள் இருவருக்குள்ளும் மௌனமான ஒரு உரையாடல் நடக்கிறது

இருவரும் மேசையில் உணவை எடுத்துவைக்கிறார்கள்

"நிமிசாம்மா. உங்களுக்கு ரொம்ப பசியா இருக்கும். சாப்பிடுங்க!" என்று அழைக்கிறாள் காமாட்சி. தன்னுடன் மேசையில் அமர்ந்து சாப்பிடும்படி அவளின், ஏகாம்பரநாதனின் கைகளைப் பற்றி இழுத்து அமர்த்துகிறாள், நிமிஷா. ஈஸ்வரனிடம் அவனையும், அழகேசனையும் தங்களுடன் சாப்பிட அமருமாறு இந்தியில் அழைக்கிறாள்

முதலில் தயங்கினாலும், அவளுடைய கட்டாயத்தினால் இருவரும் சாப்பிட அமர்கின்றனர். ஒன்றும் பேசாமல் உணவை உண்ண ஆரம்பிக்கின்றனர்

ஹோட்டல் சாம்ராட் ராஜ்ராஜில் தங்குவது என்பது நினைத்துப் பார்க்கவே முடியாத விஷயம் என்று ஈஸ்வரனுக்கும், அழகேசனுக்கும் சாப்பிட்டு முடித்தவுடனேயேபுரிந்து போகிறது. பதனப் படுத்திய காற்று (.சி.) இல்லாததால் நிமிஷத்துக்கு நிமிஷம் காற்றுப் போகாத அந்த அறையில் வெப்பம் ஏறுகிறது. நிலைமை மோசமாவதற்குள் வெளியேறவேண்டும் என்று தெரிகிறது இருவருக்கும். அதைப்பற்றிக் கலந்துரையாடி, ஈஸ்வரனின் வீட்டிற்கே செல்வது என்று தீர்மானிக்கிறார்கள்

மன்றாடிக் கெஞ்சிக்கூத்தாடி, ஒருவழியாக நிமிஷாவை அவர்களின் முடிவுக்குச் சம்மதிக்கவைக்கிறார்கள்

நிமிஷாவுக்கு நிலைமையின் அதிர்ச்சியினால் சரியாகச் சிந்திக்கக்கூட முடியவில்லை. ஷிஃபாலியைப் பற்றி தினமும் ஹோட்டலில் வந்து விசாரிக்கலாம் என்று ஈஸ்வரன் தனக்குத் தெரிந்த இந்தியில் கூறி அவளைச் சமாதானப்படுத்துகிறான்

வேறு வழியில்லை என்றறிந்த நிமிஷா, அதற்குச் சம்மதிக்கிறாள்

காமாட்சியின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. "ஈஸ்வரண்ணா! எங்களால் எங்க அப்பாவையும், அம்மாவையும் பார்க்க முடியுமா? எனக்கு ரொம்பப் பயமா இருக்குதுண்ணா? இப்படி ஒரேயடியா இருளாயிப் போயிருச்சே! என்ன ஆச்சு? நிலைமை பழையபடி மாறுமா?" என்று அழுகிறாள்

இதுவரை நிலைமையை ஒரு விளையாட்டாக நினைத்து வந்த ஏகாம்பரநாதன், தமக்கையின் கண்ணீரைக் கண்டு பொறுக்காமல் கதறுகிறான்

"எங்களுக்கு மட்டும் என்ன தெரியும்? வெளியே இருக்கற நிலைமையைப் பார்த்தா நீங்க பயந்து போயிருவீங்க! ஒரே புரியாத கூத்தா இருக்கு. எல்லா இடத்திலயும் இதே கஷ்டம்தான். எல்லாம் நல்லபடியா நடக்கணும்னு சாமியை வேண்டிப்போம், காமாச்சி! இப்ப உங்க எல்லாரையும் ஒரு நல்ல இடத்தில கொண்டு வைக்கறதுதான் எங்க பொறுப்பு. இனிமே பொத்தானை அமுக்கினா எதுவும் நம்மத் தேடிக்கிட்டு வராது. தம்பி அழறான் பாரு. நீ அவனுக்குச் சமாதானம் சொல்லிட்டு, கிளம்பற வழியைப் பாரு!" என்று அவளைத் தேற்றுகிறான் ஈஸ்வரன்

காமாட்சி சிறிதுநேரம் அழுது ஓய்கிறாள். எல்லோரும் புறப்படுகின்றனர்

'லிஃப்ட் கிடையாது. படியில் இறங்கித்தான் கீழே செல்லவேண்டும்,' என்று தெரிந்தவுடன் நிமிஷா அதிர்ச்சியுற்றுக் கொஞ்சம் சண்டித்தனம் செய்கிறாள்

என்ன செய்வது, எப்படி நிமிஷாவைச் சமாதானப் படுத்துவது என்று ஆண்கள் இருவரும் தவிக்கும்போது காமாட்சி எதிர்பாராத ஒரு காரியத்தைச் செய்கிறாள்

"ஏய், நிமிசா!" என்று அதட்டுகிறாள். திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்கிறாள் நிமிஷா

"என்ன நினைச்சுக்கிட்டிருக்கே உம் மனசுல? நீ என்ன ராசகுமாரியா? நாங்க எல்லாரும் உன்னோட வேலைக்காரங்களா? நம்மைச் சுத்தி நடக்கறது தெரியாம உன் கண்ணு என்ன அவிஞ்சா போயிடுச்சு? இங்கேயே கிட, பல்லாக்கு வந்து உன்னையத் தூக்கிக்கிட்டுப் போகும்!" என்று கத்திவிட்டு ஏகாம்பரநாதனின் கையைப் பிடித்துக்கொண்டு விடுவிடுவென்று படியிறங்குகிறாள்

ஈஸ்வரனும் அழகேசனும், அவள் ஏன் இப்படி நடந்துகொள்கிறாள், தாங்கள் இனிமேல் என்னசெய்வது என்று தெரியாமல் திகைக்கின்றனர்

"சலோ நோ, காம்ஸ். முஜே லீவ் நோ கோ மை தீதீ. துஜே வித்தவுட் வாட் கரூன்? (போகாதே காம்ஸ். என்னை விட்டுப் போகாதே, என் அக்கா. நீ இல்லாமல் நான் என்ன செய்வேன்?)" என்று அழுதவாறே படியிறங்கி வந்து, காமாட்சியைக் கட்டிக்கொள்கிறாள்

அவளைத் தன்னுடன் அணைத்துக்கொள்கிறாள் காமாட்சி

அவளது அதிர்ச்சி வைத்தியம் உடனே பயனளித்ததைப் பார்த்து நிம்மதியடைந்தவாறே ஈஸ்வரனும் அழகேசனும் படியிறங்க ஆரம்பிக்கின்றனர்

ஹோட்டல் சாம்ராட் ராஜ்ராஜை விட்டுக் கிளம்பிய ஐவரும் ஈஸ்வரனின் வீட்டில் அடைக்கலம் புகுகின்றனர்

அழகேசன் அங்கும் இங்கும் ஓடி அலைந்து, கடைசியில் தஞ்ஜூ விமான நிலையத்திற்கு நடந்துசென்று, ஷிஃபாலி சென்ற விமானம் மட்டுமன்றி வானில் பறந்த எல்லா விமானங்களும் விழுந்து நொறுங்கிவிட்டன என்பதை அறிந்து வருந்துகிறான்

செய்தி அறிந்த நிமிஷா கதறித் துடிக்கிறாள். பிறகு தனக்குக் குடும்பம் என்று தனியாக ஒன்றும் கிடையாது. ஈஸ்வரனின் குடும்பம், காமாட்சி, ஏகாம்பரநாதன், அழகேசன் இவர்கள்தான் தனது உறவினர்கள் என்று தெரிந்துகொள்கிறாள்

ஒரு வாரம் சென்றவுடன் தஞ்ஜூவிலிருந்து அறுபது கிலோமீட்டர்கள் தள்ளி உடையார்பாளையத்திற்கு அருகில் இருக்கும் தங்கள் கிராமத்திற்குச் சென்றுவிடலாம் என்று ஈஸ்வரனின் அப்பா சங்கரன் அறிவிக்கிறார். அங்குதான் மின்சாரம் இல்லாமல் காலம்தள்ள இயலும், தனக்குப் பூர்வீகச் சொத்தாக ஒரு நிலம் இருக்கிறது. அங்கு ஒரு சிறிய ஓட்டுவீடும் இருக்கிறது. அங்கு சாப்பிட அரிசி, பருப்பு முதலியவற்றை சேமித்துவைத்திருப்பதாகவும், அங்கு எல்லோரும் வாழ்வது எளிது என்றும் தீர்மானிக்கிறார்

மூட்டையைக் கட்டிக்கொண்டு அனைவரும் எட்டுநாள் பயணத்திற்குப் பிறகு கிராமத்தை அடைகின்றனர்

அவர்கள் வாழ்வு அங்கே தொடர்கிறது

*          *          *

ஈஸ்வரனின் கிராமம், தக்கண்கண்ட்

ஈஸ்வர, ஆடி 12 – ஜூலை 27, 2417

று ஆண்டுகள் ஓடிப்போகின்றன. உலகம் முழுவதும் மின்சக்தி இல்லாததால், மக்களின் வாழ்வு பதினெட்டாம் நூற்றாண்டின் அளவுக்குப் பின்னோக்கிச் சென்றுவிடுகிறது. செய்தித் தொடர்பு அடியோடு அற்றுப்போனதாலும், மின்சாரத்திலும், மின்னணுக்களாலும் இயங்கும் சாதனங்கள் வேலைசெய்யாததாலும், விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கின்றன

பெரும்பாலோர் உண்ண உணவின்றி, உடுக்க மாற்றுத்துணியின்றி, நோய்க்கு மருந்தின்றி நலிந்து இறக்கின்றனர்

கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக பாரதத்தில் குற்றமே அற்றுப் போனதால் முதலில் பெரிய அளவில் நாட்டில் அமைதியின்மை வரவில்லை. பிறகு பசிக்கொடுமையால் குற்றங்கள் சிறிதுசிறிதாகத் தோன்றுகின்றன

குற்றங்களைத் தவிர்க்க, மக்கள் ஆங்காங்கு சிறிய அளவில் ஒன்றுகூடி தங்களைக் காத்துக் கொள்ள ஆட்களை நியமித்துக்கொள்கின்றனர். சுருங்கச் சொன்னால் பழையபடி கிராமப் பஞ்சாயத்து மாதிரியான அமைப்புகள் தோன்றிவருகின்றன

மேல்தட்டு மக்கள், எடுபிடிகள் என்ற நிலைமை வெகுவாக மாறிவிடுகிறது. இந்தி பேசத் தெரிந்தவர்களால் தமிழ்பேசத் தெரிந்தவர்களோடு சேர்ந்து இயங்கமுடியவில்லை. இரண்டு மொழியாரும் தனித்தனியாகப் பிரிந்து வாழ்கின்றனர். உடம்பு சார்ந்த வேலைகளை தமிழ்தெரிந்த எடுபிடிகள் செய்துவந்ததால் அவர்களுக்கு ஓரளவு விவசாயம், காய்கறி வளர்த்தல், நூல் நூற்றல், தைத்தல் முதலிய தொழில்களைச் செய்து வயிற்றைக் கழுவுவது எளிதாக இருக்கிறது

ஆனால், இந்திபேசும் உரிமைக் குடிமக்கள் மின்சக்தியை உபயோகித்தும், மூளையை மட்டுமே நம்பி நாற்காலியில் அமர்ந்துசெய்யும் வேலைகளையே செய்துவந்ததால் அவர்களால் இந்த மாற்றத்தை எளிதில் அனுசரித்து வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியாமல் போகிறது

தவிரவும் அடுக்குமாடிக் கட்டிடங்களில் வசிப்பது என்பதை நினைத்துப்பார்க்கவும் முடியாது போகிறது. தண்ணீருக்கும், மற்ற வசதிகளுக்கும் எங்கு போவது? இத்தனை மாடிகள் எப்படி ஏறி இறங்குவது

எனவே, மக்கள்தொகை அதிகமுள்ள பெரிய பட்டினங்களில் இருந்து வாழ்க்கையைத் தள்ளுவது முடியாதுபோகிறது. இந்த மாற்றத்தை பெரும்பாலோரால் தாங்கமுடியாததால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாது இறந்துபோகின்றனர்

மக்கள் நகரங்களிலிருந்து இடம்பெயர்ந்து, வாழ வழிகொடுக்கும் கிராமங்களை நோக்கி நகருகின்றனர்இதனால் பெரிய நகரங்கள் களையிழந்து எலும்புக்கூடுகளாக மாறுகின்றன

நிமிஷாவின் வாழ்க்கையில் இந்த ஆறு ஆண்டுகள் நிறைய மாற்றங்களைக் கொண்டுவருகின்றன. அவள் நன்றாகத் தமிழ்பேசக் கற்றுக்கொள்கிறாள். அவளுக்கு ஈஸ்வரன் மேல் ஏற்பட்ட ஈர்ப்பு காதலாக மாறுகிறது

இதை மெதுவாக அவன் அப்பா சங்கரன் காதில்போடுகிறான் அழகேசன்

விரைவிலேயே, அங்கிருந்த சிறு கோவிலில் ஒரு ஆண்டு முன்பு அவர்கள் திருமணத்தை நடத்திவைத்திருக்கிறார் சங்கரன். அதற்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே காமாட்சிஅழகேசன் திருமணமும் நடந்துவிடுகிறது.

ஏகாம்பரநாதன் அரும்பு மீசை துளிர்க்கும் இளங்காளையாகப் பரிணமிக்கிறான்

அவ்வப்போது அங்கு சுற்று வட்டாரத்திலிருக்கும் கோவில்களுக்கெல்லாம் சென்று அதிலிருக்கும் கல்வெட்டுகளைப் படித்து எழுதிக்கொண்டு வந்து பழந்தமிழர் வரலாற்றை வீட்டில் உள்ளவருக்குச் சொல்வது, ஈஸ்வரனின் வழக்கம். எப்பொழுதும் ஏகாம்பரநாதன் அவனுக்குத் துணையாகச் சென்று வருகிறான். வேறுவேலை இல்லாவிட்டால், அழகேசனும் உடன்செல்வான்.

அறுவடைக்காலம் முடிந்துவிட்டதால் அன்று அழகேசனும் அவர்களுடன் செல்கிறான்

அவர்கள் வீட்டிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சென்று கோவில் பிரகாரத்திலுள்ளகல்வெட்டுகளைப் படித்துக்கோண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலைமையில்தான் அவர்கள் யாரும் எதிர்பாராத ஒரு பெரிய நிகழ்ச்சி நடக்கிறது. திடுமென்று இரண்டு நிமிஷங்கள் பலத்த நிலநடுக்கம் ஏற்படுகிறது

அவர்கள் கண்முன் கோவிலின் கருவறைக்குப் பின்புறமுள்ள வெளிச்சுவரில் ஒரு பெரிய விரிசல் ஏற்பட்டு இரண்டு கற்கள் ஆடி ஆடிக் கீழே விழுகின்றன

மேற்கிலிருந்த சூரிய வெளிச்சம் பட்டு அந்த ஓட்டையின் உள்ளே ஏதோ தகதகப்பது ஏகாம்பரநாதனின் கண்ணைப் பறிக்கவே அவன் ஈஸ்வரனையும், அழகேசனையும் அழைக்கிறான்

ஏறிப்பார்த்தால், உள்ளே ஒரு சிறிய அறை இருப்பது தெரிகிறது. ஈஸ்வரன் உள்ளே எட்டிப் பார்க்கிறான். அந்த அறையில் ஒரு உலோகக்குழல் பளபளவென்று சூரிய ஒளியில் மின்னுகிறது! அங்கு ஏதேதோ பெட்டிகள் பூட்டப்பட்டு இருக்கின்றன. இந்தக்குழல் மட்டும் ஒரு பெட்டியின் மேல் சாய்ந்து நிற்கிறது. அது இந்த நில அதிர்ச்சியில் மேலிருந்த ஒரு மாடத்திலிருந்து உருண்டு விழுந்திருக்கிறது என்றும், விழுந்ததால் அதில் படிந்திருந்த தூசி விழுந்து சூரிய ஒளியில் மின்னியிருக்கிறது என்றும் தெரிந்துகொள்கிறான்

கிட்டத்தட்ட ஒண்ணரை அடி நீளமும், ஐந்தங்குலத்திற்கு எட்டங்குல அளவில் நீள்வட்ட வடிவில் அக்குழல் இருக்கிறது. அந்தக் குழலைக் கையில் எடுக்கிறான். அதன் கனம் அவனுக்கு வியப்பாக இருக்கிறது? உள்ளே அப்படி என்னதான் இருக்கிறது

அந்தக் குழல் செம்பினால் செய்யப்பட்டுத் தங்கமுலாம் பூசப்பட்டிருக்கிறது. சில இடங்களில் தங்கமுலாம் போய்ச் செம்பில் களிம்பு பிடித்திருக்கிறது. அதில் ஒரு படம் செதுக்கப்பட்டிருக்கிறது

தாடியுடன் கூடிய ஒரு முதியவரும், அவரருகில் கம்பீரமான ஒரு நடுத்தர வயதுக்காரரும் இருப்பதை அப்படம் சித்தரிக்கிறது. இருவரின் முடியும் கொண்டையாகப் போடப்பட்டிருக்கின்றன. படத்தின் கீழே எழுத்துக்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. அதைப் படித்த அவன் கண்கள் பெரிதாக விரிகின்றன

"ஈஸ்வரா! என்ன அது?" என்றபடி அவனருகில் ஏறி வருகிறான் அழகேசன்

அவனிடம் அந்தக் குழலை நீட்டுகிறான், ஈஸ்வரன். அழகேசன் அதன் கனத்தைப் பார்த்துத் திகைக்கிறான். அதை எடுத்துக்கொண்டு கீழே இறங்குகிறான். அவனைத் தொடர்ந்து ஈஸ்வரனும் கீழே இறங்குகிறான்

"இது ஒரு பெரிய புதையல், அழகேசா!" என்று ஈஸ்வரன் பெருமிதத்துடன் கூறுகிறான்

"கடவுள் நமக்காக இப்புதையலை அளித்திருக்கிறார். 'திரிபுவனச் சக்ரவர்த்தி இராஜராஜ சோழத் தேவருக்கு அவரது குரு கருவூர்த் தேவர் இப் புவியெங்கும் தமிழ் வளர்க்கத் தீட்டிக்கொடுத்த மடலைத் தன்னுள் தரித்த காப்பு,' என்று இந்தக் குழலில் எழுதியிருக்கிறது. இதனுள்ளே ஒரு பெரிய தங்கச்சுருள் இருக்கிறது. நாம் மிகமிகக் கொடுத்துவைத்தவர்கள். பழந்தமிழ் மாமன்னரின் ஆசான் தமிழை வளர்க்கத் தீட்டிக்கொடுத்த திட்டம் நம் கையில் இப்பொழுது கிடைத்திருக்கிறது. ஆயிரத்துநானூறு ஆண்டுகள் அடைபட்டுக்கிடந்த அரிய கருவூலத்தைதமிழ் அன்னையே இப்புவியைச் சிலிர்க்கவைத்துஇந்தக் கற்களைப் பெயர்த்தெடுத்து எறிந்துநம் கையில் கொடுத்திருக்கிறாள். பார், என் மயிர்கால்கள் சிலிர்க்கின்றன. என் இதயம் பூரிக்கிறது. நான் அந்த நாளுக்கே செல்கிறேன் நண்பா!" என்று உரக்கக் கத்துகிறான்

தன்னையும் அறியாமல் அவன் செந்தமிழில் பேசுவதைக் கண்டு அழகேசன் மலைக்கிறான்

"ஈஸ்வரா! கொஞ்சம் எனக்கும் புரியும்படி சொல்லு. ஏன் இந்தக் குழல் இந்தக் கனம் கனக்குது? இதிலே அப்படி என்னதான் இருக்கு? இதை ஏன் பொக்கிஷம்னு சொல்றே? உன் உடம்பு ஏன் இந்த நடுக்கம் நடுங்குது? கொஞ்சம் விவரமாச் சொல்லு. நீதான் தமிழ் நல்லாப் படிச்சவன். எனக்கு எழுத்துக்கூட்டி மெதுவாகத்தான் தமிழ் படிக்கவரும். என் ஆத்தா அடிச்சு அடிச்சுச் சொன்ன பாடம்கூட மறந்துபோக ஆரம்பிச்சிருச்சு. புரியும்படிதான் சொல்லேம்ப்பா!" என்று ஈஸ்வரனைக் கேட்கிறான்

"முதல்ல இந்த ஓட்டையை மூடுவோம். யார் கண்ணுக்கும் இந்த ரகசிய அறை தெரியக்கூடாது!" என்று ஈஸ்வரன் அழைக்கிறான்

நீள்வட்டக் குழலை அருகிலுள்ள மேடையில் வைத்துவிட்டு, மூவரும் கீழே விழுந்த இரண்டு கற்களையும் தூக்கி கருவறையின் ஓட்டையை அடைக்கிறார்கள்

ஈஸ்வரன் பிறகு இலேசாகத் தட்டித் தட்டிக் குழலின் மூடியைத் திறக்கிறான். உள்ளே ஒரு தங்கச் சுருள் இருக்கிறது. அது இரண்டு கைப்பிடிகளில் — பாதிக்கு மேல் ஒரு பக்கம் உள்ள கைப்பிடியிலும், மிச்சமிருப்பது இன்னொரு கைப்பிடியிலும் சுற்றப்பட்டிருக்கிறது

ஈஸ்வரன் மெதுவாகக் குழலை மூடுகிறான்

மூவரும் அக்குழலை எடுத்துக்கொண்டு துடிக்கும் இதயத்துடன் வீட்டை நோக்கிக் கிளம்புகிறார்கள். அவர்கள் அந்த வீட்டை அடையும் பொழுது கதிரவன் மேற்கில் சாய ஆரம்பிக்கிறான்

"அக்கா, நாங்க என்னகொண்டு வந்திருக்கோம் பாரு!" என்றபடி உள்ளே குதித்துக்கொண்டே வீட்டுக்குள் ஓடி நுழைகிறான், ஏகாம்பரநாதன்

தன் தந்தை சங்கரனிடம் விவரத்தைத் தெரிவிக்கிறான், ஈஸ்வரன். அப்படியே நெகிழ்ந்துபோகிறார், சங்கரன்

கருவூர்த்தேவர் இராஜராஜசோழச் சக்ரவர்த்திக்கு அளித்த தமிழ்வளர்க்கும் திட்டத்தைதங்கச்சுருளில் எழுதப்பட்ட திட்டத்தைத்  தன்னுள் பேணிப் பாதுகாத்த குழல்  கிட்டத்தட்ட ஆயிரத்துநானூறு ஆண்டுகள் கழித்துகடைசியில் அவரது பரம்பரையில் வழிவந்த தோன்றலாகிய ஈஸ்வரன் கையிலேயே கிடைத்துவிட்ட அதிசயம் அவர்களுக்குத் தெரிய நியாயமில்லைதான்! 

சங்கரன் சொற்படி பூசைமாடத்தில் அதை வைக்கிறான், ஈஸ்வரன்

அவனுக்குப் பிடித்த சாப்பாட்டை நிமிஷா பரிமாறியது, அது பிடித்திருக்கிறதா என்ற கேள்விக்கு ஒன்றுமே பதில்சொல்லாமல் ஏதோ ஒரு கனவுலகில் இருப்பதுபோல எழுந்து கையைத கழுவிக்கொண்டு வந்ததுகூட அவனுக்கு நினைவில் இல்லை

எண்ணெய் விளக்கை ஏற்றி வைத்துக்கொண்டு தென்னாடுடைய இறைவனை பயபக்தியுடன் வணங்கிவிட்டு குழலைத் திறக்கிறான், ஈஸ்வரன்

உள்ளே இருக்கும் தங்கச் சுருளை மிகவும் கவனத்துடன் பிறந்த குழந்தையைத் தூக்குவதுபோல எடுத்து மெதுவாகப் பிரிக்கிறான். சுருள் விரிகிறது. அவனது கண்கள் அச்சுருளில் எழுதியிருப்பதை இனங்கண்டுகொள்கின்றன. உதடுகள் பிரிகின்றன. நா அசைகிறது. குரல் கம்பீரமாக எழுகிறது

வீட்டில் அனைவரும் அவன்முன் அமர்ந்து அவன் படிப்பதைக் கேட்கின்றனர். ஈஸ்வரனின் குரல் அவர்களை ஆயிரத்து நானூறு ஆண்டுகள் பின்னால் இழுத்துச் செல்கிறது

(முதல் பாகம் முற்றும்)

*          *          *

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com