பொன்னியின் செல்வனின் தமிழ்க் கனவு – முதல் பாகம் [நினைவூட்டல்] – பொது ஆண்டு 2411

பொன்னியின் செல்வனின் தமிழ்க் கனவு – முதல் பாகம் [நினைவூட்டல்] – பொது ஆண்டு 2411

ஒரு அரிசோனன்

ஆசிரியனின் குறிப்பு:

சரித்திரப் புதினம் என்று பழந்தமிழ் மன்னரின் வரலாற்றை எதிர்பார்த்து, முதல் பாகம் இறுதிவரை படித்த ஒரு சிலருக்கு, 'என்னது, இது ஒரு விஞ்ஞானப் புதினமாக (Science Fiction) மலர்ந்து வந்திருக்கிறதே,' என்ற ஏமாற்றமும், மற்றவருக்கு, 'இனி என்ன நடக்கப் போகிறது?  கருவூர்த்தேவர் பொன்னியின் செல்வன் இராஜராஜசோழருக்கு எழுதிக்கொடுத்த தமிழ்ப்பரப்புத் திட்டத்தில் என்ன இருக்கிறது?' என்ற ஆர்வமும் எழுவது இயற்கையே.

புதினத்தின் அறிமுகத்திலேயே, 'இந்த நாவல் தமிழன்னை நடந்துவந்த அடிச்சுவடுகளைப் பின்பற்றி — பண்டைத் தமிழர்களின் பொற்காலத்திற்கும் —  இக்காலத்தில் நிகழும் தமிழ்க்கல்வி நலிவு நீடித்தால் அவள் எப்படிப்பட்ட எதிர்காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்லக்கூடும் என்ற கற்பனைப் பயணத்திற்கும் அவளுடன் பறந்து பயணிக்கிறது. தமிழன்னையின் எதிர்காலப் பயணத்திற்கும் அவளுடைய பழைய பொற்காலத்திற்கும் என்னுடன் சேர்ந்து பயணிக்குமாறு வாசகர்களைப் பணிவன்புடன் அழைக்கிறேன்.

தற்காலத்தில் வேலைவாய்ப்பு கருதியும், எளிதாக மதிப்பெண்கள் பெறுவதற்காகவும் தமிழ்க்கல்வி பின்னுக்குத் தள்ளப்படும் நிலை கண்டு பல தமிழறிஞர்களும் கவலை தெரிவித்து வருகிறார்கள். எனினும் அது நிகழாது., நிகழலாகாது, என்ற என் அக்கறையே இந்த நாவலாய் வடிவம் எடுத்துள்ளது,' என எழுதியுள்ளதை மேதகு வாசகர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

இப்புதினம் தமிழன்னையுடன் நாம் மேற்கொள்ளும் பயணம்.  இப்புதினத்தின் நாயகி அவளே.  அதனால் அவளது எதிரிகாலச் சரித்திரத்தை, வரலாற்றை – முதல் பாகத்தில் அவளுடன் எதிர்காலத்திற்குச் சென்று – தமிழகத்தில் தமிழ்க்கல்வியின்மீது இருக்கும் அக்கரைநலிவு தொடர்ந்தால் –  தமிழன்னையின் நிலை எப்படியிருக்கும் என்பதை ஒரு புனைவாக (what-if situation) — தமிழன்னை அவளது இருண்டகாலத்திற்கு நம்மை அழைத்துச் செல்வாளோ எனக் கோடிகாட்டினேன்.

அத்துடன் பாரதம் எப்படிப்பட்ட ஒரு வல்லரசாக – பழங்கால அகண்ட பாரதமாகப் பரிணமித்ததையும் படம்பிடித்துக் காட்டினேன்.

இதை நம் எல்லோருக்கும் ஒரு அதிர்ச்சி தரும் தொடக்கமாக – நம் பழந்தமிழ்ப் பேரரசனின் கனவு எப்படித் தொடங்கி எப்படி முடிந்தது என்பதைக் காட்டவே, ஏழு அத்தியாயங்களின் மூலம் அழைத்துச்சென்றேன்.

ஆக, இதுவரை நீங்கள் படித்தது, தமிழன்னையில் எதிர்கால வரலாறு – தாங்கள் எதிர்நோக்காத — புதுமையான சரித்திரப் புதினத்தின் தொடக்கம்தான் என்று தங்களுக்குத் தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.

இரண்டாம் பாகத்தில் இதுவரை வாசகர்களுக்கு ஏற்கனவே படித்துப் பழக்கமான பழந்தமிழ் சரித்திரப் புதினம் தொடரும்.

அதற்குமுன் இந்த எழு அத்தியாயங்களில் தமிழன்னை தங்களை தன் எதிர்காலப் பயணத்திற்கு எப்படி அழைத்துச்சென்றாள் என்பதைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.  புதிதாகச் சேரும் வாசகர்களுக்கு இது ஓர் அறிமுகமாக இருக்கும்.

இதுவரை நடந்தது . . .

இருபத்தைந்தாம் நூற்றாண்டில் வல்லரசாகப் பாரத ஒருங்கிணைப்பு (Bharat Federation)  — இருபத்தொன்றாம் நூற்றாண்டு ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், பாரதம், இலங்கை, வங்கதேசம், மியன்மார்(பர்மா), மலேசியா, சிங்கப்பூர் ஒன்றாக இணைந்து செயல்படும் பாரத ஒருங்கிணைப்பு –  உலகில் திகழ்கிறது.

எண்ணெய் உற்பத்திமூலம் உலகைக் கிடுக்கிப்பிடிபோட்டு மடக்கிய நடுவண் கிழக்கு (Middle east) நாடுகளின் கொட்டமும் அடங்கிப்போகிறது.   பாரே புகழும் பண்டைய பெருமையைப் பாரத ஒருங்கிணைப்பு பெற்று, சீன ஒருங்கிணைப்பின் நட்புடன் மற்ற நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது.

அப்பொழுது இருபத்தொன்றாம் நூற்றாண்டைய தமிழ்நாடு மாநிலம் 'தக்கன் கண்ட்' என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலமும், இந்தியும் கலந்த ஒரு மொழியே அங்கு பேசப்படுகிறது.  சென்னை 'ஷெனாய்' என்றும், தஞ்சை 'தஞ்ஜூ'வாகவும், மதுரை 'மத்ரா' எனவும் அழைக்கப்படுகின்றன.  மற்ற ஊர்களும் அப்படியே பெயர்மாற்றம் பெறுகின்றன.

வாழ்க்கை வசதிக்காகத் தமிழ்மொழி கற்பதைத் தமிழர்கள் துறந்ததனால், தமிழ் ஒரு கூற்றுமொழியாகிப் போய், சில ஆயிரக்கணக்கான மக்களால் மட்டுமே பேசப்படுகிறது.

இவர்கள் இருபத்திநான்காம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 'எடுபிடி'ச் சட்டத்தினால், உடலூழியம செய்யும் 'எடுபிடி'கள்  ஆகிப்போகிறார்கள். 'உரிமைக் குடிமக்க'ளுக்கு பணியாற்றியும் வருகிறார்கள். மொழிமாற்றுக் கருவி மூலமே அவர்கள் மற்றவர்களுடன் பேசிவருகிறார்கள்.   அவர்கள் இந்தி கற்கக்கூடாது என்ற தடையும் எடுபிடிச் சட்டத்தில் உள்ளது.

பழந்தமிழ்நாட்டின் ஒரு பகுதியான சோழநாட்டின் தலைநகரான தஞ்சையில், பொன்னியின் செல்வனின் குருநாதரான கருவூர்த்தேவரின் வழிவந்த ஈஸ்வரன், பெருவுடையார் கோவில் சுற்றுலாக் குழுவில் எடுபிடியாகப் பணியாற்றுகிறான்.

வேங்கைநாட்டில் தமிழைப்பரப்ப அனுப்பப்பட்ட நிலவுமொழியின் வழிவந்த காமாட்சியும், அவளது தம்பியான ஏகாம்பரநாதனும், ஷெனாயில் உரிமைக் குடிமக்களான ஷிஃபாலி-நிமிஷா குடும்பத்தில் எடுபிடியாக இருக்கிறார்கள்.

மதுரைப் பாண்டிய மன்னர்களின் மெய்காப்பாளர் பரம்பரையில் வந்த அழகேசன், உரிமைக்குடிமக்களின் மனமகிழ்வுக்காகச் சண்டையிடும் எடுபிடி மல்லனாக இருக்கிறான்.

தமிழை எழுதப்படிக்க அறிந்த ஒரு சில குடும்பங்களின் வழியில் வந்த ஈஸ்வரன், அழகேசன், காமாட்சி, அவள் தம்பி ஏகாம்பரம், ஆகியோர், இப்படிப் பல்வேறு இடங்களில் வசித்தாலும், தஞ்ஜூவில் உரிமைக் குடிமகளான நிமிஷாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஹோட்டல் சாம்ராட் ராஜ்ராஜில் சந்திக்கிறார்கள்.

அச்சமயத்தில், கடும் சூரியக் கதிர்வீசல் மற்றும் மின்காந்தப் புயலினாலும், புவிதூண்டிய மின் அழுத்தத்தாலும், ஒரு முழு சூரியகிரகணத்தன்று எதிர்பாரா மாபெரும் அழிவு நிகழ்ச்சியை உலகம் சந்திக்கிறது.

அதனால் உலகமே தனது காந்த சக்தியின் ஒழுங்கமைப்பை இழந்து தடுமாறுகிறது; மின்மாற்றிகள் உடைந்து செயலிழந்து, உலகம் முழுவதும் மின்சக்தி இல்லாமல் போகிறது; செயற்கைக் கோள்கள் தங்கள் செயலாற்றச் சக்தியை இழந்து, அனைத்துத் தொடர்பாடுகளும், செயல்பாடுகளும் நின்றுபோகின்றன.  செயலிழந்ததால் விபத்துக்குள்ளாகி விழுந்த விமானவிபத்தில் நிமிஷாவின் தாய், ஷிஃபாலி இறந்துபோகிறாள்.   

மொழிமாற்றுக் கருவிகள் வேலைசெய்வதை நிறுத்திவிடுகின்றன.  எடுபிடிகளுக்கும், உரிமைக்குடிகளுக்கும் உள்ள பேச்சுத் தொடர்பு அறுகிறது.

உடலுழைப்பை நம்பிவாழும் தமிழ்பேசும் எடுபிடிகள் எளிதில் தப்புகின்றனர்.  அது இல்லாத மின் சக்தியையும் மின் மாற்றல் கருவிகளையும் மட்டுமே சார்ந்து வாழும் உரிமைக் குடிமக்களில் பெரும்பாலோனோர் ஆதரவின்றி உயிரிழக்கின்றனர்.

உலகமே கற்காலத்திற்குத் திரும்புகிறது.

காமாட்சி, ஏகாம்பரம், ஈஸ்வரன், அழகேசன் இவர்களுடன் தஞ்சஜூல் தனித்துவிடப்பட்ட நிமிஷா சேர்ந்துகொள்கிறாள். ஐவரும் ஈஸ்வரனின் பெற்றோருடன் சென்று, ஒரு கிராமத்தில் வசிக்கிறார்கள்.   அங்கு பயிர்செய்து உயிர்வாழ்கிறார்கள்.  வேறுவழியின்றி, நிமிஷா தமிழைக் கற்று, அவர்களுடன் ஒருத்தியாகிறாள்.

ஆறாண்டுகள் கழிகின்றன.

இதற்குள், ஈஸ்வரன்-நிமிஷா, அழகேசன்-காமாட்சி  இவர்களின் திருமணம் நடந்தேறுகிறது.

இந்நிலையில் ஒரு நிலநடுக்கத்தால், கங்கைகொண்ட சோழபுரத்துக் கோவிலின் சுவரிலுள்ள கல் பெயர்ந்து ஒரு இரகசிய அறை தென்படுகிறது. அந்த அறையில் தமிழைப் பரப்ப பொன்னியின் செல்வனாகிய இராஜராஜசோழனுக்கு, அவரது அரசகுரு கருவூர்த்தேவர் திட்டம்தீட்டி அளித்த,  பழந்தமிழரின் வரலாறு எழுதப்பட்ட, தங்கச்சுருள் அடங்கிய, குழல் ஒன்று அங்கிருக்கும் ஈஸ்வரன், ஏகாம்பரம், அழகேசனுக்குக் கிடைக்கிறது.

ஈஸ்வரன் தங்கச் சுருளில் எழுதியிருப்பதை மற்றவர்களுக்குப் படித்துச் சொல்ல ஆரம்பிக்கிறான்…

(இரண்டாம் பாகம் தொடர்கிறது.)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com