பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு – இரண்டாம் பாகம் – அத்தியாயம் 11

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு – இரண்டாம் பாகம் – அத்தியாயம் 11

ஒரு அரிசோனன்

கொள்ளிடத்திற்கு இரண்டு காதங்கள் வடக்கே

பரிதாபி, ஆனி 22 – ஜூலை 7, 1012

ங்கம் போல மின்னுகிறது கொள்ளிடத்தின் நீர்ப்போக்கு – சாயும் கதிரவனின் ஒளி பட்டு. அந்தக் கண்கொள்ளாக் காட்சி இராஜேந்திரனின் கருத்தைக் கொள்ளைகொள்கிறது. வைத்த கண் வாங்காமல் தங்கப்பாளமாக ஓடும் நீரைக் கண்ணோக்குகிறான். நீரோட்டத்தில் வேகம் அதிகம் இல்லை. காவிரியின் வெள்ளத்திற்கு வடிகாலாக ஓடும் தண்ணீரைக் கொள்ளும் இடமாக இருந்து, 'கொள்ளிடம்' என்ற காரணப்பெயரைப் பெற்ற அப்பெரிய ஆறு, பாதி அளவே தண்ணீரால் நிறைந்திருக்கிறது. எனவே, மழைத் தண்ணீர் வடிந்திருக்க வேண்டும் என்று நினைத்துக்கொள்கிறான் இராஜேந்திரன்.

மறுநாள் காலையில் நீர்ப்போக்கு இன்னும் வடிந்துவிடும். ஆற்றைக் கடப்பது எளிதாகிவிடும் என்ற நினைப்புடன் தனது பாசறையை நோக்கி விரைவாகக் குதிரையைச் செலுத்துகிறான்.

… அன்று காலையில் தில்லையை அடைந்த இராஜேந்திரன், தில்லை அந்தணர்கள் அவனுக்குப் பூரண கும்ப மரியாதை கொடுத்து, பூசை பல செய்து ஆடற்கூடத்தில் கூத்தாடும் சிவபிரானின் தரிசனம் செய்வித்ததும், தன்னை மறந்து சில கணங்கள் இறைவனுடன் ஒன்றிவிட்டு, மதிய உணவைக் கோவில் விடுதியில் முடித்துக்கொண்டு கிளம்பி, கதிரவன் சாயும் வேளைக்கு அரை நாழிகை முன்னர் வரை பயணித்து, அன்றிரவு கொள்ளிடத்திற்கு வடக்கே இரவைக் கழிக்க முடிவு செய்து, மாலை நீராடக் கொள்ளிடத்திற்கு வந்து சேர்ந்தவன், அதன் நீரோட்ட அழகில் தன்னைப் பறிகொடுத்தான்.

… இராஜேந்திரனுடன் அவனது மெய்காப்பாளர்களும் பாசறைக்குத் திரும்புகிறார்கள். இளவரசர் வந்திருக்கிறார் என்று கிராம மக்கள் போட்டிபோட்டுக்கொண்டு, கோழி, காடை, கௌதாரி என்று நிறைய பறவைகளையும், அறுவடை செய்து பதமாக வைத்திருந்த சம்பா நெல்லைக் குத்தியெடுத்த அரிசியையும் மூட்டை மூட்டையாகக் கொண்டு வந்து, இரவு உணவுக்காகப் பாசறைக்கருகில் இருக்கும் தளிகைக் கூடாரத்திற்குக் கொண்டு வந்து சேர்த்திருந்தனர். இன்னொரு பக்கம் பச்சைக் காய்கறிகள் குவிந்துக் கிடக்கின்றன.

இராஜேந்திரன் பாசறைக்கு வரும்பொழுது சமையல் மணம் அவனது மூக்கைத் துளைக்கிறது. நிறைய நாட்கள் கோவில் விடுதிகளில் சைவச் சாப்பாட்டை உண்டுவந்த அவனது நாவில் அசைவ உணவின் மணம் எச்சிலை ஊறவைக்கிறது. உதவியாளன் கொடுத்த தண்ணீரில் கால்களை அலம்பிக்கொண்டு கூடாரத்திற்குள் நுழைகிறான்.

அவன் வந்ததும், இரவு உணவு கொண்டுவரப்படுகிறது. அவனுடன் நடுமண்டலத் தண்டநாயகர் ஈராயிரவன் பல்லவராயரும், இன்னும் நான்கு அணித்தலைவர்களும் உணவருந்தச் சேர்ந்துகொள்கிறார்கள். 

இராஜேந்திரனின் மனதில் ஏதோ இனம் புரியாத உற்சாகம் தோன்றுகிறது. இப்பொழுது பாசறையை அடுத்துத் தங்கியிருக்கும் இடம் தன் வாழ்வில் மட்டுமன்றி, சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஒரு முக்கியமான இடமாக ஆகக்கூடும் என்று அவன் மனதுள் ஏதோ ஒன்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருக்கிறது.  ஏன் அப்படிப்பட்ட உணர்வு தோன்றுகிறது என்று இராஜேந்திரன் சிந்திக்கிறான்.

தஞ்சையில் என்ன ஆயிற்று, தந்தை எப்படி இருக்கிறார் என்று இதுவரை இருந்து வந்த கவலை திடுமென்று நீங்கிவிட்டது போன்ற ஒரு உணர்வும் தோன்றுகிறது. அந்த இடம் தந்த நிம்மதியால் அவனையும் அறியாமல் அவனது முகம் சற்றுப் பெருமிதத்துடன் மலர்கிறது.

"அரசே! உணவு நன்றாக இருக்கிறதா? தங்கள் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறதே!" என்று ஒரு முழுக் கோழியையும், ஒரு பாத்திரம் நிறையச் சோற்றையும், நிறையக் காய்கறிகளையும், ஒரு மொந்தை கள்ளையும் உள்ளே தள்ளிய நிறைவில் முகமலர்ச்சியுடன் கேட்கிறார் பல்லவராயர்.

"என்ன கேட்டீர் பல்லவராயரே? ஆழ்ந்த சிந்தனையில் இருந்ததால் உம்முடைய கேள்வி சரியாக என் செவியில் விழவில்லை!" என்று புன்னகையுடன் பதிலளிக்கிறான் இராஜேந்திரன்.

பெருமூச்சு விட்டால்கூட விழிப்பாகிவிடும் மன்னன், இப்பொழுது தான் கேட்டதைச் செவிமடுக்கவில்லை என்று கூறுவது பல்லவராயருக்கு வியப்பாக இருக்கிறது.

"அரசே! நான் தங்களது முகத்தில் இப்பொழுதுதான் மகிழ்வைக் கண்ணுறுகிறேன். அப்படித் தங்களை மகிழ்வித்த சிந்தனையைத் தாங்கள் என்னிடம் பகிர்ந்துகொண்டால் எனக்கும் மகிழ்வாக இருக்கும்" என்று வினவுகிறார் பல்லவராயர்.

"அதிலென்ன பல்லவராயரே! ஏதோ இனம் தெரியாத பெருமிதத்தை இந்த இடம் என் நெஞ்சில் நிரப்புகின்றது. இந்த இடம் சோழ சாம்ராஜ்ஜியம் மட்டுமல்லாது; இந்த பாரத பூமி மற்றும் திரைகடல் கடந்தும் புகழ் பெறப்போகிறது என்று எனது உள்ளுணர்வு கூறுகிறது. தவிர, மனதில் இதுவரை இருந்துவந்த பாரமும் நீங்கியதைப் போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. அதனால் என் முகத்தில் ஏற்பட்ட தெளிவே மகிழ்ச்சியாகப் பரவியதோ என்னவோ?" என்று பதிலளிக்கிறான் இராஜேந்திரன்.

"இந்த இடமா? அப்படி எனக்கு ஒன்றும் தோன்றவில்லையே? அரசே, எனக்கு போரைப் பற்றியும், உணவைப் பற்றியும்தான் தெரியும். இடங்களின் சிறப்புகளைப் பற்றி நான் என்ன அறிவேன்? தொலைநோக்குப் பார்வை உள்ள தங்களுக்குத்தான் புவியின் சிறப்பு அதிர்வுகள் புலனாகின்றன" என்று தன் நிலையைத் தெளிவாக்குகிறார்.

அச்சமயம் கூடாரத்தின் வாயிலில் ஏதோ காலடிச்சத்தம் கேட்கிறது. மெய்காப்பாளனுடன் ஒரு ஓலைதாங்கி உள்ளே நுழைகிறான். தொடர்ந்து பயணித்ததினால் அவன் உடல் வேர்த்து விறுவிறுத்திருக்கிறது. இராஜேந்திரனுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, "அரசே! சக்கரவர்த்தி தங்களுக்குத் திருமுகம் அனுப்பி உள்ளார். இதோ!" என்று திருமுகக் குழலை நீட்டுகிறான். பரபரப்புடன் அதைப் படித்த இராஜேந்திரனின் முகம் கதிரவனைப்போலச் சுடர்விடுகிறது.

"வெற்றி! வெற்றி!! வெற்றியோ வெற்றி!!!" என்று துள்ளிக் குதிக்கிறான். 

"தந்தையார் பாண்டிய மன்னன் அமரபுஜங்கனைச் சிறைப்பிடித்துவிட்டாராம். இளவரசன் இராஜாதிராஜன் தென்சேரன் கோவர்த்தன மார்த்தாண்டனை யானைப்போரில் யமனுலகுக்கு அனுப்பினானாம். சிவாச்சாரியார் பாண்டியப் படைத்தலைவனைச் சிறைப்பிடித்தாராம். ஆறாயிரம் பாண்டியப் படையினர் உயிரிழந்தும் சோழப்படையினர் ஒருவர்கூட உயிரிழக்கவில்லையாம். என்னை நிதானமாகத் தஞ்சை வரும்படி தந்தையார் செய்தி அனுப்பியிருக்கிறார்.

"என்னால் நம்பவே முடியவில்லை! எதிரிப் படையினர் ஆறாயிரம் பேர் அழிந்தும் நமது வீரர் ஒருவர்கூட இறக்கவில்லையா? ஓலைதாங்கியே! இந்த நல்ல செய்திக்காக – இந்தா எமது பரிசு!" என்று தன் கையில் இருந்த தங்கக் கங்கணத்தைக் கழட்டித் தூதுவனிடம் நீட்டுகிறான் இராஜேந்திரன்.

பணிவுடன் அதைப் பெற்றுக் கொண்ட தூதுவனின் வாயெல்லாம் பல்லாக மலர்கிறது.

"விளக்கமாகச் சொல். போர் எப்படி நிகழ்ந்தது? தந்தை பாண்டிய மன்னனை எப்படிச் சிறைப் பிடித்தார்? ஆறாயிரம் பேரை எப்படி அழிக்க முடிந்தது?" என்று பரபரப்புடன் மகிழ்ச்சி மிகுந்த குரலில் வினவுகிறான் இராஜேந்திரன்.

 "அரசே! நான் தஞ்சையிலிருந்து வருகிறேன். நான் போரில் கலந்துகொள்ளவில்லை. தங்களிடம் விரைவாகச் சேர்க்க வேண்டும் என்று தஞ்சையில் சிவாச்சாரியார் என்னிடம் திருமுகத்தைக் கொடுத்து அனுப்பினார். தங்களைக் கண்டுபிடித்து இத்திருமுகத்தைச் சேர்ப்பிக்கும்வரை நான் உறங்கக்கூடாது, உணவுக்குத் தவிர வேறெதற்கும் நிற்கக்கூடாது என்றும் கட்டளையிட்டார். திருமுகத்தில் என்ன இருக்கிறது என்றோ, மற்றபடி வேறு எந்தத் தகவலுமோ என்னிடம் தெரிவிக்கவில்லை. கொள்ளிடத்தைக் கடக்கத்தான் மிகவும் சிரமப்பட்டுவிட்டேன்" பணிவுடன் பதிலிறுக்கிறான் ஓலைதாங்கி. 

"சிவாச்சாரியார் வேறு ஒன்றும் சொல்லவில்லையா?" என்று கேட்கிறான் இராஜேந்திரன்.

"இல்லை, அரசே! அவர் மிகுந்த படபடப்புடன் காணப்பட்டார். அவர் முகத்தில் ஒரு பரபரப்பு இருந்தது. வேறு அலுவல் இருக்கிறது என்று உடனே கிளம்பிவிட்டார்" பதில் வருகிறது.

"சரி, நீ போகலாம். நமக்குச் சமைத்த உணவை தளிகைக் கூடாரத்திற்குச் சென்று உண்டு களைப்பாறுவாயாக!" என்று ஓலைதாங்கியை அனுப்பிவிடுகிறான் இராஜேந்திரன். மற்றவர்கள் கூடாரத்தில் இருந்து வெளியேறுகின்றனர்.

சிறிது நேரம் அமைதியில் ஆழ்ந்த வண்ணம் கூடாரத்திற்குள் முன்னும் பின்னும் நடை பயில்கிறான். அவன் முகம் பெரிதாக மலர்கிறது. மிகுந்த உற்சாகத்துடன் பல்லவராயரின் தோளில் தட்டுகிறான்.

 "பல்லவராயரே! இத்தனை நேரம் நான் நினைத்தது சரியாகிவிட்டது! இந்த நிலம் என் கவலைப் பளுவை இறக்கிவைத்தது என்று நான் பகர்ந்தது எவ்வளவு உண்மை ஆகியது பார்த்தீரா? தந்தையாரிடமிருந்து வெற்றிச்செய்தி வந்துவிட்டது. இது வெற்றிகொள்ளும் இடம். இதை, 'ஜயங்கொண்டம்' என்று அழைத்தால் மிகையாகாது. இந்த இடத்தில் நான் பெருவுடையாருக்கு ஒரு கோவில் எழுப்பப்போகிறேன். எனவே, இந்த இடத்தை, 'ஜயங்கொண்ட சோழபுரம்49' என்று அழைப்போம்." 

உற்சாகமாக பேசிக்கொண்டே செல்கிறான் இராஜேந்திரன். "ஆமாத்தியரே! இந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்று அறிந்து அவர்களிடமிருந்து இந்நிலத்தைக் கொள்முதல் செய்வீராக. கிட்டத்தட்ட ஐந்து கல்லுக்கு ஐந்து கல் பரப்பளவு உள்ள நிலம் வாங்கப்பட வேண்டும். நில உரிமையாளர்களுக்கு நல்ல நன்செய் நிலத்தை மாற்றாகக் கொடுக்க ஏற்பாடு செய்வீராக! நமக்கு வெற்றிச் செய்தி அறிவிக்கப்பட்ட இக்கூடாரத்தின் அருகே பெருவுடையாருக்கு கற்றளி எழுப்ப நிச்சயிக்கிறேன். அதற்குப் பெருவுடையார் அருள்புரிவாராக!" என்று கண்களை மூடி ஒரு நிமிடம் கைகூப்பிப் பிராத்திக்கிறான்.

பல்லவராயருக்கு ஒரே அதிர்ச்சியாக இருக்கிறது. சக்கரவர்த்திகள் போரில் வென்றார் என்ற செய்தி அளவில்லா மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், இராஜேந்திரன் இப்படி திடுதிப்பென்று காட்டுப்புறத்தில் ஒரு நகரை நிர்மாணிக்கவும், தஞ்சைப் பெரியகோவிலைப்போல ஒரு கோவிலைக் கட்டவும் தீர்மானித்துவிட்டானே, இது சக்கரவர்த்திகளுக்கு போட்டியாக அமைந்துவிடாதா என்று கவலையுடன் குழம்புகிறார். எது எப்படியிருந்தாலும் தான் வாயை மூடிக்கொண்டு இருப்பதுதான் சாலச்சிறந்தது என்ற முடிவுக்கு வருகிறார்.

அவர் மனதில் ஓடுவதை அறிந்து கொண்டவன்போல, "பல்லவராயரே, என் மனதில் தோன்றியதை நீர் வெளிப்படுத்தாமல் இருப்பதே சாலச்சிறந்ததாகும். காலைக்கடன்கள் கழித்தவுடன் தஞ்சைக்குப் புறப்படலாமென்று இருக்கிறேன். நீர் படைகளுடன் மெதுவாக வருவீராக. எல்லாம் சரியாக இருந்தால் சிவாச்சாரியார் இங்கு வந்திருப்பார். அப்படி இல்லாமல் சிவாச்சாரியார் பரபரப்பாக இருந்தார் என்பதும், ஓலைதாங்கியை அனுப்பியதும் எனக்கு மனக்கலக்கத்தை ஏற்படுத்துகிறது. தஞ்சையை அடைந்து தந்தையாரை நேரில் கண்டால்தான் மனது நிம்மதி அடையும். அனைவரும் என்னைத் தனியாக இருக்க விடுவீர்களாக!" என்று சொல்லி அவரையும் கூடாரத்திலிருந்து அனுப்பிய பிறகு கூடாரத்திற்குள் முன்னும் பின்னும் நடந்து சிந்திக்க ஆரம்பிக்கிறான்.

—————————–

[49 இராஜேந்திரனின் தலைநகரான 'கங்கைகொண்ட சோழபுரம்', முதலில் 'ஜயங்கொண்ட சோழபுரம்' என்று அழைக்கப்பட்டது. தஞ்சைப் பெரியகோவிலைப்போல ஒரு கோவிலை அங்கு கட்டுவித்த இராஜேந்திரன் கங்கை நீரை கோவில் குடமுழக்குக்காகக் கொண்டுவந்ததால் இந்த ஊர் 'கங்கைகொண்ட சோழபுரம்' என மருவியது. இப்பொழுது கங்கைகொண்ட சோழபுரம் கும்பகோணத்திலிருந்து 34 கி.மீ. (21 மைல்) தொலைவில் ஒரு சிற்றூராக உள்ளது.]

தஞ்சை அரண்மனை

பரிதாபி, ஆனி 24 – ஜூலை 9, 1012

ராஜராஜர் மஞ்சத்தில் கண்களை மூடிப் படுத்திருக்கிறார். மூச்சு மெல்ல நூலிழையாக வந்துகொண்டிருப்பது அவரது மார்பு மெதுவாக ஏறி இறங்குவதிலிருந்து தெரிகிறது. அவரது உடலில் பல இடங்களில் பச்சிலைக் கட்டுக்கள் காணப்படுகின்றன. சில கட்டுகளில் இரத்தம் கசிந்து, துணி சிவப்பாகி இருக்கிறது.

அருகில் தலைமை அரச மருத்துவர் தனது உதவியாளர்களுடன் ஒரு முக்காலியில் அமர்ந்து இராஜராஜரின் கையைப் பிடித்து நாடித்துடிப்பைக் கவனிக்கிறார். இராஜராஜரின் மனைவியரும், குந்தவைப் பிராட்டியாரும், சிவாச்சாரியும் மருத்துவருக்கு எதிர்ப் பக்கத்தில் கவலைபடரும் முகங்களுடன் நிற்கிறார்கள்.

இராஜராஜரின் நெற்றியில் கைவைத்துப் பார்க்கிறார் அரச மருத்துவர். "மகாராணி அவர்களே! பிராட்டியாரே! தாங்கள் கவலை ஏதும் படவேண்டாம். சக்கரவர்த்தி இருபத்தியோரு விழுப்புண்களை உடலில் தாங்கியுள்ளார். எல்லாவற்றிற்கும் தகுந்த பச்சிலைகள் மற்றும் சூரண மருந்துகளைப் பூசியுள்ளேன். ஓரிடத்தில் தையலும் போட்டுள்ளேன். நாடி நன்றாகவே துடிக்கிறது. சக்கரவரத்தி அவர்களுக்கு ஜுரம் கண்டிருக்கிறது. அதற்கும் பச்சிலைக் கஷாயம் கொடுத்திருக்கிறேன். எனது உதவியாளர்கள் வேளைதோறும் கொடுப்பதற்காகக் கஷாயம் காய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு வாரம் பத்து நாட்களில் சக்கரவர்த்தி எழுந்து நடமாட ஆரம்பித்துவிடுவார்" என்று நம்பிக்கை நிறைந்த குரலில் அறிவிக்கிறார்.

"மருத்துவரே! அருள்மொழி இந்த வயதில் இருபத்தியோரு விழுப்புண்களை ஏற்றுக்கொண்டானா? இது எப்படி? சிவாச்சாரியாரே! நீரும், தண்டநாயகர் பழுவேட்டரையரும் வேடிக்கையா பார்த்துக்கொண்டிருந்தீர்கள்? போரில் அருள்மொழியின் உதவிக்குச் செல்லவில்லையா?" என்று கேட்டு சிவாச்சாரியைக் கண் பார்வையால் துண்டாடுகிறாள் குந்தவைப் பிராட்டி.

"எங்கள் கைகள் கட்டப்பட்டிருந்தன பிராட்டியாரே! அதுவும் சக்கரவர்த்தி அவர்களால் கட்டப்பட்டிருந்தன. இல்லாவிட்டால் அவர் மீது பலமாகக் காற்றுப்படவும் விடுவோமா?" என்று பதில்சொல்கிறான் சிவாச்சாரி. 

"அதைத்தான் விளக்கிச் சொல்லுமேன்!" என்று அதட்டுகிறாள் குந்தவைப் பிராட்டி.  அவள் குரல் சிவாச்சாரி சொல்வதை நம்பாதது போல ஒலிக்கிறது. அதில் தன்மேல் குற்றச்சாட்டும் இருப்பதை உணர்ந்துகொள்கிறான் சிவாச்சாரி.

"பிராட்டியார் அவர்கள் என்னைப் பொறுத்தருள வேண்டும். சக்கரவர்த்தி அவர்கள் இளவரசர் வரும்வரை விழுப்புண்களின் காரணத்தை நாங்கள் யாருக்கும் சொல்லக்கூடாது என்று பணித்திருக்கிறார். மேலும், அவருக்கு இம்மாதிரி விழுப்புண்கள் பட்டதையும் இளவரசர் நேரில் வந்து தெரிந்துகொள்ள வேண்டுமே தவிர, யார் மூலமாகவும் அறிந்துகொள்ளக்கூடாது என்ற கடுமையான உத்தரவையும் இட்டிருக்கிறார். சக்கரவர்த்தியின் கட்டளையை மீற இவ்வுலகில் யாருக்குத் துணிவு இருக்கிறது? இளவரசருக்குச் செய்தி அனுப்பியாகிவிட்டது. அவர் எந்நேரமும்…" என்று சிவாச்சாரி அவர்களைச் சமாதானப்படுத்திக் கொண்டிருக்கும்போதே இராஜேந்திரன், இராஜாதிராஜனுடன் அங்கு வருகிறான்.

அங்கு இராஜராஜர் படுத்திருப்பதையும், அரச மருத்துவர், தன் தாய், அத்தை, சிவாச்சாரி இவர்கள் அருகில் நின்று கொண்டிருப்பதையும் கண்டு அவன் நெஞ்சு பதைக்கிறது. விரைந்து அருகில் வருகிறான்.

"மருத்துவரே! தந்தையாருக்கு என்ன ஆயிற்று?" என்று புலியாய் உறுமுகிறான்.

மருத்துவர் அவனது அதட்டலில் நடுங்கிப்போகிறார். தான் முன்பு விவரித்ததையே மீண்டும் இராஜேந்திரனுக்கு விவரிக்கிறார். அவனும் குந்தவைப் பிராட்டி கேட்ட கேள்வியையே சிவாச்சாரி மீது அம்பாகத் தொடுக்கிறான்.

"இப்படி ஆகத்தான் உம்மை நம்பித் தந்தையை விட்டு சென்றேனா? என்னவோ, சோழவீரன் ஒருவனும் உயிரிழக்காமல் பாண்டிய வீரர்கள் ஆறாயிரம் பேரை அழித்த பெருமையைத் திருமுகம் சொன்னதே தவிர, தந்தையார் இருபத்தியோரு விழுப்புண்கள் பெற்றதை ஏன் எனக்கு உரைக்கவில்லை? போரில் ஓரிரண்டு விழுப்புண் ஏற்படுவது முறைதான். ஆனால் இவ்வளவா! நீங்கள் அனைவரும் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? தந்தை ஒருவரை மட்டும் போரிட விட்டுவிட்டுப் போர்க்களத்தில் தூங்கிக்கொண்டிருந்தீர்களா? இராஜாதிராஜா, ஏற்கெனவே உனக்குத் தெரிந்திருந்திருந்தும் ஏன் நேற்றிலிலிருந்து இதுவரை என்னிடம் தெரிவிக்கவில்லை?" இந்தமுறை இராஜேந்திரனின் உறுமல் இன்னும் பலமாகவே இருக்கிறது.

"அரசே! இளவரசர் மீது எந்தக் குற்றமும் இல்லை. எங்கள் வாயைச் சக்கரவர்த்தி அவர்களின் உத்தரவுதான் கட்டிப்போட்டுவிட்டது. என்ன நடந்தது என்பதை இப்போது அனைவருக்கும் விவரிக்கிறேன். இது முன்பே தங்களுக்கும், சாளுக்கிய அரசர் விமலாதித்தருக்கும் நடந்த நேர்முகப் போர் போலத்தான்!" என்ற சிவாச்சாரி, பொன்னமராவதியில் நடந்ததை விவரிக்க ஆரம்பிக்கிறான்.

மரபுஜங்கனின் அழைப்பை ஏற்று மூவர் மட்டுமே போரிட நேரிட்டதையும், முதலில் தான் பாண்டியர் படைத்தலைவரைத் தோற்கடித்ததையும், பிறகு இராஜாதிராஜன் யானைப் போரில் சேரன் கோவர்த்தன மார்த்தாண்டனின் யானையின் மேல் தவ்விக் குதித்துச் சேரனை யானையிலிருந்து வீழ்த்தியதையும், தன் யானையின் பின்காலில் மிதிபட்டு சேரன் மாண்டதையும் விளக்குகிறான்.

"அரசே! கடைசியாக, சக்கரவர்த்தி அவர்கள் பாண்டிய மன்னருடன் வாட்போர் செய்யக் களம் இறங்கினார். நாங்கள் குதிரை மீதிருந்தும், யானை மீதிருந்தும் சண்டையிட்டாலும், அவர்கள் இருவரும் நின்றுகொண்டுதான் போரிட்டார்கள். போர் முடிவுக்கு வரும்வரை யாரும் உள்ளே உதவிக்கு வரக்கூடாது என்பது போட்டியின் நிபந்தனை.

"தாங்களும் நானும் போரிட்ட கட்டை வாள்களையே நான் சக்கரவர்த்திக்குத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தேன். பாண்டிய மன்னரின் வேகத்தைத் தடுத்து நிறுத்த அது உதவும் என்று நான் சொன்னதை சக்கரவரத்தியார் ஏற்றுக்கொண்டார்கள். மேலும் இரண்டு கைகளாலும் வாளைப் பிடிக்க வேண்டும் என்பதால் சட்டென்று திரும்பவோ, எதிர்பாராத மின்னல்வேகத் தாக்குதல் நடத்தவோ இயலாதுபோகும், சக்கரவர்த்திகளின் வேகத்திற்கு அது சரியாக இருக்கும் என்பதும் அதற்கு ஒரு காரணம்.

"சக்கரவர்த்தி அவர்கள் பாண்டிய மன்னரை விட இரண்டு விரல்கட்டை அளவுக்கு உயரமானவர் ஆதலால் தாக்குதலைத் தடுக்க அவருக்கு அநுகூலம் உள்ளது என்பதையும், பாண்டிய மன்னர் தாக்குதலிலேயே தனது பலத்தைச் செலவிடுவார் என்று எதிர்பார்த்ததால் சக்கரவர்த்தி அவர்கள் தனது பலத்தைச் செலவிடாது சேமிக்க, தடுப்புமுறையைப் பின்பற்றவும் முடிவுசெய்யப்பட்டது. இந்த முறைபாடு பாண்டிய மன்னரின் வயதுக் குறைவின் மேன்மையைக் குறைக்க வழிசெய்தது.

"ஆயினும் இரண்டு நாழிகை வரை (48 நிமிடங்கள்) நடந்த வாட்போரில் இருவருக்கும் பலப்பல காயங்கள் ஏற்பட்டன. பாண்டிய மன்னருக்கு முப்பதுக்கும் மேற்பட்ட காயங்களைச் சக்கரவர்த்தி அவர்களின் வாள் ஏற்படுத்தியது. கடைசியில் கையில்பட்ட காயத்தால் பாண்டிய மன்னர் நிலை தடுமாறியபோது, சக்கரவர்த்தி அவர்கள் வாட்போரின் தனது முதல் தாக்குதலை நடத்தி, பாண்டியரின் வாளை விழச்செய்தார்.

"பாண்டியரின் மார்பில் வாளை ஊன்றி, பிணைக்கைதியாக ஆக்கியதை அறிவித்தார்கள். நாங்கள் அணுகும்வரை வாளைத் தரையில் ஊன்றிநின்ற சக்கரவர்த்தி அவர்கள், எங்களிடம் பாண்டிய மன்னரை ஒப்படைத்து, தன்னைவிட அதிகக் காயங்கள் அடைந்த அவருக்கு நன்கு சிகிச்சை அளிக்குமாறு பணித்துவிட்டு எங்கள் மேல் சாய்ந்துவிட்டார்கள். தாங்கள் தஞ்சை அரண்மனை வந்துசேரும் வரை அவரது உடல்நிலை பற்றியோ, அவரது விழுப்புண்கள் ஏற்பட்ட காரணம் பற்றியோ செய்தியை வெளியில் விடக்கூடாது என்றும் உத்தரவிட்டுவிட்டார்கள்.

"அது மட்டுமல்ல, அரசே! மழையில் சகதியில் வழுக்கி விழுந்தும், எதிர்த்துப் போராட இயலாத நிலையில் இருந்த பாண்டிய வீரர்கள் மீது கவண் கற்களை ஏவிக் கொன்றது சக்கரவர்த்திகள் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. 'போர் முறை மாறிவிட்டது. இம்மாதிரிப் போர் நடப்பது இதுவே கடைசியாக இருக்கட்டும்!' என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள். நம்மிடம் போர் வீரர்கள் மிகவும் குறைவு என்றதாலேயே நான் வகுத்த போர்முறைக்குச் சம்மதித்தார்கள். அது அவர்கள் மனதை எவ்வளவு பாதித்தது என்பதைத் தண்டநாயகர் பழுவேட்டரையரும் எனக்கு மிகவும் விளக்கினார். தனது பக்கத்து நியாயத்தை நிலைநிறுத்தவே பாண்டிய மன்னரிடம் நேருக்குநேர் வாட்போரிட ஒப்புக்கொண்டார் என்பதையும் அறிந்தோம்.

"இதுதான் நடந்தது. எங்கள் உயிரைக்கொடுத்து அவர்கள் உயிருக்கு ஊறு வராது காப்பாற்ற நாங்கள் ஆயத்தமாக இருந்தோம். ஆனால், நீவிர் எம்மைத் தடுக்காதீர்! ஆறாயிரம் பாண்டிய வீரர்களை யாம் கொல்ல அனுமதித்தது முறையான தற்காப்பில்லை என்றால், இப்போரில் யாம் வெல்லாது ஒழிவோமாக என்று கூறியபடிக் களமிறங்கி விட்டார்கள். சக்கரவர்த்தி அவர்களின் வெற்றிக்காகப் பெருவுடையாரை வேண்டுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாதுபோனோம் அரசே!" என்று முடிக்கிறான் சிவாச்சாரி.

தைக் கேட்ட இராஜேந்திரனின் முகத்தில் பெருமிதம் எழுகிறது. கடகடவென்று நகைக்கிறான். அனைவரும் திகைக்கின்றனர்.

"தந்தையார் தான் ஒரு புலி; ஒரு மீனால் தன்னை விழுங்க இயலாது என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டார். போரில் இதுவரை அவர் தோற்றதில்லை என்ற புகழையும் நிலைநாட்டிக் கொண்டுவிட்டார்.

"சிவாச்சாரியாரே! உம்முடைய புதிய போர் முறை இன்று தஞ்சையை பாண்டியரிடமிருந்து காப்பாற்றியது. தந்தையார் பாண்டியனைச் சிறைப்பிடிக்கவும் வழிவகுத்தது. நமது போர் வீரர் ஒருவரும் உயிரிழக்காதது உமது மதியின் கூர்மையைக் காட்டுகிறது. இராஜாதிராஜனும் தானும் ஒரு புலிதான் என்பதை நிரூபிக்கத் தென்சேரனை எமனுக்குக் காவு கொடுத்திருக்கிறான். நன்று! நன்று!! இனி தந்தையாரை எந்தப் போருக்கும் செல்ல விடமாட்டேன். இதுவே அவரது கடைசிப் போராக இருக்கட்டும்!" என்று உணர்ச்சியுடன் அறிவிக்கிறான் இராஜேந்திரன். அது உண்மையாகி விடும் என்று யாருக்குமே தெரிய நியாயமில்லைதான்.

மெல்லக் கண்களைத் திறக்கிறார் இராஜராஜர். அருகில் இராஜேந்திரனைக் கண்டதும் அவரது முகம் மலர்கிறது. தந்தை கண்ணைத் திறந்ததும் உடனே அவரருகில் சென்று, "தந்தையாரே! மீண்டும் மீண்டும் புலிக்கொடியை நிலைபெற்றுப் பறக்கச் செய்திருக்கிறீர்களே! அதற்காக எத்தனை புண்களை உடலில் ஏற்றியிருக்கிறீர்கள்? தாங்கள் இன்னும் பலநூறு ஆண்டுகள் சோழப் பேரரசை ஆட்சிசெய்து வரவேண்டும்!" என்று குழைகிறான்.

மிகவும் முயற்சிசெய்து வலதுகையை உயர்த்தி இராஜேந்திரனுக்கு ஆசி வழங்குகிறார் இராஜராஜர். பிறகு மெல்லிய குரலில் சிவாச்சாரியனைத் தன்னருகே அழைக்கவே, அவரருகில் சென்று வணங்கி நிற்கிறான் சிவாச்சாரி.

"இராஜேந்திரா, தஞ்சையைப் பாண்டியரிடமிருந்து சிறந்த முறையில் காப்பாற்றித் தந்தமைக்காக யாம் சிவாச்சாரியரைத் திருமந்திர ஓலைநாயகமாக50 நியமிக்கிறோம். இதை நீ மற்றவருக்கு உடனே அறிவிப்பாயாக!" பரிவாக அறிவிக்கிறார் இராஜராஜர்.

"அப்படியே செய்கிறேன் சக்கரவர்த்தி அவர்களே!" என்று பதிலளிக்கிறான் இராஜேந்திரன். 

"ஓலைநாயகரே! உமக்கு எம் முதல் ஆணையைப் பிறப்பிக்கிறோம். இன்னும் ஒரு வாரத்தில் இராஜேந்திரனுக்கு முடிசூட்டுவிழா நடத்த விருப்பமாக உள்ளோம். அதை நீர் உடனே நிறைவேற்றுவீராக!" இராஜராஜரிடமிருந்து சிவாச்சாரியனுக்கு உத்தரவு பிறக்கிறது.

அனைவரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடுகிறார்கள். இருப்பினும் ஒருவாரத்திற்குள்ளா – அதுவும் இராஜேந்திரனின் பட்டத்து ராணி திரிபுவனமாதேவி இல்லாத வேளையில்? 

"உத்தரவு சக்கரவர்த்தி அவர்களே!" என்று வணங்குகிறான் சிவாச்சாரி.

"எனக்கு ஓய்வு தேவை. இருவரும் எமது ஆணைகளை நிறைவேற்றுவீராக!" என்று மீண்டும் ஆயாசத்துடன் கண்களை மெல்ல மூடுகிறார் இராஜராஜர்.

——————————————

[50 லேடன் (Leydon) செப்பேடுகள் 'கிருஷ்ணன் ராமன் என்ற அந்தண குலத்தார் ஒருவர் இராஜராஜ சோழரால் திருமந்திர ஓலைநாயகமாக (administrative officer) நியமிக்கபட்டார்,' என்று தெரிவிக்கின்றன. இது சோழநாட்டின் மிகப்பெரிய அதிகாரப் பதவியாகும். இந்தக் கிருஷ்ணன் ராமனையே சிவசங்கர சிவாச்சாரியாக இப்புதினம் சித்தரிக்கிறது.]

அங்கு சிறிது நேரம் அமைதி நிலவுகிறது. பட்டத்துராணி சோழமாதேவியார், குந்தவைப் பிராட்டி, இராஜேந்திரன் ஆகிய மூவரும் சிவாச்சாரியைத் தங்களுடன் வரும்படி சைகை செய்கிறார்கள்.

நால்வரும் இராஜராஜரின் கட்டிலை விட்டுத் தள்ளி வருகின்றனர். அவர்களைப் பின்தொடர்கிறான் இராஜாதிராஜன்.

சோழமாதேவியார் தன் கழுத்து மாலையில் தொங்கும் ஒரு இலச்சினைக் கழட்டி குந்தவைப் பிராட்டியாரிடம் காட்டிவிட்டு, இராஜேந்திரனிடம் அளிக்கிறார். அது புலிச்சின்னமும், ஓலைநாயகத்தின் சின்னமும் கொண்ட இலச்சினை. அதை சிவாச்சாரியிடம் அளிக்கிறான் இராஜேந்திரன். அதைப் பணிவுடன் பெற்றுக் கொண்ட சிவாச்சாரி, மூவரையும் தலைவணங்குகிறான்.

"தேவியாரே, பிராட்டியாரே, அரசே! எனக்கு முடிசூட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்ய நிறைய வேலைகள் உள்ளன. இளவரசரையும் அழைத்துச்செல்லத் தாங்கள் அனுமதி கொடுத்தால் நலமாக இருக்கும்" என்று இராஜாதிராஜனைச் சுட்டிக் கட்டுகிறான் சிவாச்சாரி.

"ஓலைநாயகத்தின் வேண்டுதலுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம்" என்று கிண்டல் செய்யும் தொனியில் பதிலளிக்கிறாள் குந்தவைப் பிராட்டி. இராஜாதிராஜனுடன் வெளியேறுகிறான் சிவாச்சாரி.

"இராஜேந்திரா, இந்தச் சிவாச்சாரியாரை விட்டுவிடாதே! இவரால் உனக்கும் சோழப் பேரரசுக்கும் நிறைய நன்மைகள் வந்துசேரக் காத்திருக்கின்றன!" என்று பரிந்துரைக்கிறாள் குந்தவைப் பிராட்டி. 

அவளை உற்றுப் பார்த்த இராஜேந்திரனின் உதடுகளில் புன்னகை அரும்புகிறது. சரியென்று தலையை ஆட்டுகிறான்.

குந்தவியின் அந்தப்புரம்

பரிதாபி, ஆவணி 30 – செப்டம்பர் 15, 1012

கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகியிருக்கின்றன, இராஜராஜ நரேந்திரன் நிலவுமொழியிடம் தமிழ் கற்றுக்கொள்ளத் துவங்கி. தினமும் தனது தாய் குந்தவியின் அந்தப்புரத்திற்கு தமிழ்ப் பயிற்சிக்காக வந்து போகிறான். அவனுடைய தமிழ்ப்பேச்சில் நிறைய முன்னேற்றம் தென்படுகிறது. கூடிய மட்டும் தெலுங்கு கலப்பில்லாமல் தமிழ் பேசும் முயற்சியில் தேறி வருகிறான்.

இராஜராஜ நரேந்திரனுக்கு தினமும் நிலவுமொழியைப் பார்ப்பதே பேரானந்தமாக இருக்கிறது. அவளது முத்துப் பற்களும், பெரிய கயல்விழிகளும், சிரித்தால் இலேசாகக் குழிவிழும் கன்னங்களும், ஈரப்பசையுள்ள உதடுகளும் அவனைக் கிறங்கவைக்கின்றன. சிலசமயம் அவற்றில் கவனத்தை விட்டுவிடுகிறான். நிலவுமொழிதான் அவனை தமிழ்க்கல்விக்குத் திரும்ப ஈர்த்துக் கொணர நேரிடுகிறது. 

நிலவுமொழிக்கும் அவனது பார்வையின் உள்நோக்கம் விளங்காமலில்லை. அடிக்கடி இராஜராஜ நரேந்திரனின் பார்வை செழிப்பான தன் மார்புப் பகுதியில் சென்று நிலைப்பதைக் கவனிக்காமலுமில்லை. தன்னுடைய சிரிப்பில் அவன் சொக்கிப்போவதை அறிந்தே இருக்கிறாள்.

தனது வாயிலிருந்து உதிரும் ஒவ்வொரு சொல்லையும், அடையிலிருந்து ஒழுகும் தேனை நோக்கி நாவை நீட்டும் கரடியைப்போல எதிர்பார்த்துக்கொண்டு இருப்பதையும் அவள் கண்கள் கண்டுகொண்டுதான் இருக்கின்றன. தான் திரும்பிச் செல்லும்பொழுது தனது பின்னழகைத் துளைக்கும் பார்வையால் அவன் பார்த்துக்கொண்டு இருப்பதை அவள் உணரத்தான் செய்கிறாள்.

ஆயினும், ஓரொரு தடவை இராஜராஜ நரேந்திரன் தன்னை பொருட்செறிவுடன் நோக்கும் போதும், 'இவனுக்கு தமிழ்க்கல்வியை மட்டுமே சொல்லிக்கொடு' என்ற இராஜேந்திரனின் கண்டிப்பான உத்தரவு அவள் மனக்கண் முன்னர் நிழற்காட்சியாக வந்து நிற்கிறது. இராஜராஜ நரேந்திரனின் எடுப்பான நாசி, ஆட்கொள்ளும் கண்கள், ஊடுருவும் பார்வை, மயக்கும் புன்னகை அவளை ஏதேதோ செய்தாலும், வலுக்கட்டாயமாக அவன் ஒரு சிலை என்று தனக்குள் தீர்மானம் செய்துகொள்கிறாள். சிலையின் சிரிப்பு இது, நிஜச்சிரிப்பு இல்லை – மயக்கும் சிலை இது, மணாளன் அல்ல என்று இதயத்தில் எழுதிக்கொள்கிறாள்.

"உன் வாழ்வை வளமாக்குவது என் பொறுப்பு, தமிழைக் கிழக்குச் சாளுக்கியர் மாளிகையில் பரப்புவது உன் பொறுப்பு!" என்று சொல்லிச்சொல்லி அனுப்பிய சிவாச்சாரியனின் முகமும் நினைவிலும், சொற்கள் காதுகளிலும் வந்துவந்து ஒலிக்கின்றன.

"சிவாச்சாரியாரை நம்பித்தான் உன்னை அனுப்புகிறேனம்மா. இனி எல்லாமே உனக்கு அவர்தான். அவர் சொல்லுக்கு நீ கொடுக்கும் மதிப்பு என் சொல்லுக்கு நீ தரும் மதிப்பைவிடப் பலமடங்கு அதிகமாக இருக்க வேண்டும். அரச பரம்பரையினரின் நேர்நிழலில் நீ வாழச் செல்கிறாய். அது நெருப்பின் அருகாமையில் இருப்பதைப் போன்றதம்மா. அதன் கதகதப்பில் குளிர் காயவேண்டுமே தவிர, அணைத்துக்கொள்ள ஒருபோதும் நினைக்கவோ, விரும்பவோ கூடாது" என்று தன் தந்தை உருக்கமாகச் சொல்லி அனுப்பிய அறிவுரையைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்தி மன உறுதி பெற்றுக்கொள்கிறாள்.

'இந்த நெருக்கடியான சமயத்தில் சிவாச்சாரியரோ, தனது தந்தையோ, ஏன் இராஜேந்திர சோழரோ வந்து சேரமாட்டார்களா, தனக்கு இரும்பை ஒத்த இதயத்தைத் தந்துவிட மாட்டார்களா' என்று ஏங்குகிறாள்.

சில சமயம் நிலைமை கைமீறிப் போகும் என்று தோன்றினால் ஏதாவது சாக்கைச் சொல்லி எழுந்து போய்விடக் கற்றுக்கொண்டிருக்கிறாள். அது இராஜராஜ நரேந்திரனுக்கு எரிச்சலாக இருக்கும். "இந்தப் பெண் ஏன் ஒரு புரியாத புதிராக இருக்கிறாள்? ஒரு சமயம் பூத்துக் குலுங்கும் மலராகச் சிரிக்கிறாள், மறுசமயம் தொட்டால் சுருங்கியாய், தனது ஓட்டுக்குள் குவியும் நத்தையாக மாறிவிடுகிறாளே!" என்று குழம்புகிறான்.

இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும், தனது இதயத்தைத் திறந்து காட்டிவிட வேண்டும் என்று, "நிலா, நான் உன்னை ஒண்ணு கேக்கணும்!" என்று ஆரம்பிக்கிறான். அவனது சொற்களின் இருக்கும் தொனி நிலவுமொழியைத் திடுக்கிட வைக்கிறது. 

"என்ன, அரசே? நான் சொல்லித் தருவது புரியவில்லையா?" என்று திசை திருப்பப் பார்க்கிறாள் நிலவுமொழி. அவன் ஏதாவது ஏடாகூடமாகக் கேட்டுவிடக் கூடாதே என்று அவள் மனம் பதைபதைக்கிறது.

"நான்… வந்து… வந்து…" என்று தயங்கித் தயங்கி இழுக்கிறான் இராஜராஜ நரேந்திரன். நிலவுமொழியின் ஐயம் இன்னும் வலுப்படுகிறது.

எப்படி இச்சுழலில் இருந்து விடுபடுவது என்று நினைக்கும்பொழுது, இறைவியே அவள் உதவிக்கு வந்ததுபோல, குந்தவி அங்கு வருகிறாள். அவள் கால்களில் அணிந்திருந்த வெள்ளிச் சிலம்புகளின் உள்ளே இருக்கும் மாணிக்கப் பரல்கள் எழுப்பிய ஒலி இருவரையும் திரும்ப வைக்கிறது.

மெதுவாக நிம்மதிப் பெருமூச்சு விடுகிறாள் நிலவுமொழி. அப்பொழுது விம்மிய அவளது மார்பகங்கள் இராஜராஜ நரேந்திரனை ஈர்த்தாலும், தாய் அருகில் வருவது அறிந்து தனது பார்வையை அவளது கண்களுக்கு உயர்த்துகிறான். உடனே மரியாதையாக எழுந்து நிற்கிறாள் நிலவுமொழி. 

"வணக்கம் தாயே!" என்று தெளிவான தமிழில் குந்தவிக்குத் தன் வணக்கத்தைத் தெரிவிக்கிறான் இராஜராஜ நரேந்திரன். பூரித்துப் போகிறாள் குந்தவி.

நிலவுமொழியிடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததிலிருந்து இராஜராஜ நரேந்திரனின் தமிழ்ப் பேச்சில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டு வருகிறாள் அவள்.

"உட்காருங்களு. நானு இப்ப நன்னாக தமிளு பேசுறேனு. நிலா ரொம்ப நல்ல… நல்ல… வாத்யாரு" என்று தமிழில் தெலுங்கு வாடை கலந்து பேசினாலும், இராஜராஜ நரேந்திரனின் தமிழ் குந்தவியை மிகவும் பெருமைப்படச் செய்கிறது. நான்கு திங்களுக்கு முன் தெலுங்கிலல்லவா தமிழைக் கலந்து பேசுவான்!

"உட்காரம்மா நிலா! நீ நரேந்திரனுக்குத் தமிழ் கற்றுக்கொடுப்பதைக் காது குளிரக் கேட்கிறேன்!" என்று பரிவுடன் தன் மகனுக்கு அருகிலிருந்த ஆசனத்தில் அமர்ந்துகொள்கிறாள் குந்தவி.

நிலவுமொழிக்கு குந்தவி அருகில் இருப்பது மன நிம்மதியைத் தருகிறது. எதைப் பற்றியும் மனதை அலையவிடாமல் தமிழ்ப்பேச்சு கற்றுக்கொடுப்பதிலேயே கவனத்தைச் செலுத்தலாமே!

இன்று இராஜராஜ நரேந்திரனிடமிருந்து தப்பிவிட்டோம். விரைவிலேயே அவன் தேர்ச்சி பெற்றுவிட்டால் ஒருவழியாக அவனிடமிருந்து விடுதலை பெற்றுவிடலாம். மற்ற வேலைகளில் கவனத்தைச் செலுத்தலாம் என்று தனக்குள்ளே சொல்லிக்கொள்கிறாள்.

கிட்டத்தட்ட முப்பது நிமிடங்கள் இராஜராஜ நரேந்திரனின் தமிழ் மொழியோசைத் திருத்துவதில் கவனத்தைச் செலுத்துகிறாள் நிலவுமொழி.

தான் சொல்ல வந்ததைச் சொல்ல இயலாதுபோனதும், தாய் அருகில் அமர்ந்திருப்பதால் நிலவுமொழியின் அழகை ரசிக்க முடியாததும், இராஜராஜ நரேந்திரனுக்கு எரிச்சலை மூட்டினாலும், அவனைப் பாடத்தில் கவனத்தைச் செலுத்த வைக்கிறது. எனவே, கல்வியில் அவனது ஏற்புத் தன்மையின் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி கலந்த நிறைவு பெறுகிறாள் நிலவுமொழி.

குந்தவிக்குத் தன் மகனின் ஆழ்ந்த கவனம் பெருமையை வரவழைக்கிறது. மூவரும் தத்தம் நிலையில் நிறைவாகச் செயல்படுகிறார்கள்.

"ல, ள, ழ" இந்த மூன்று எழுத்துக்களின் மொழி ஓசையைச் சரிப்படுத்தி முடிப்பதற்கும், தாதி ஒருத்தி, தஞ்சையிலிருந்து ஓலைதாங்கி ஒருவர் வந்திருப்பதை அறிவிப்பதற்கும் சரியாக இருக்கிறது.

"உள்ளே அழைத்து வா!" என்ற குந்தவியின் மனதில் பரபரப்பு மிகுகிறது. அவசரமாகத் தன் தமையன் கிளம்பிச் சென்றதிலிருந்து தகவல் ஏதும் வரவில்லை. என்ன ஆயிற்றோ, ஏதாயிற்றோ, அப்படி என்ன முக்கியமான பணியோ என்று அவ்வப்போது அவளது மனம் அடித்துக்கொள்ளும். எனவே, தஞ்சையிலிருந்து ஓலைதாங்கி வந்திருப்பதாகச் சொன்னதும் என்ன செய்தி வந்திருக்கும் என்று ஆவலுடன் எதிர்நோக்குகிறாள்.

தாதியுடன் சிவாச்சாரி உள்ளே நுழைகிறான். அவனைப் பார்த்த நிலவு மொழியின் முகம் முழுநிலவாக மலர்கிறது. 

"வணக்கம் சிவாச்சாரியாரே!" என்று தரையில் படிந்து வணங்குகிறாள்.

இதுவரை சிவாச்சாரியைப் பார்த்திராத குந்தவி, "யாரிந்த சிவாச்சாரியார்? சோழநாட்டுத் தலைமை அதிகாரியின் உடை அணிந்திருக்கும் இவரா ஓலைதாங்கி? இவரே நேரில் வந்திருப்பதால் என்ன செய்திகொண்டு வந்திருப்பார்?" என்று திகைத்து நிற்கிறாள்.

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com