0,00 INR

No products in the cart.

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு – இரண்டாம் பாகம் – அத்தியாயம் 2

ஒரு அரிசோனன்

தஞ்சை அரண்மனை, தஞ்சாவூர்

சாதாரண, ஆனி 28 – ஜூலை 13, 1010

இராஜேந்திரன் சிவாச்சாரியை வாட்போருக்கு அழைப்பான் என யாரும் எதிர்பார்க்கவில்லை. “மதுராந்தகா, இதென்ன விளையாட்டு? மரியாதைக்குரிய சிவாச்சாரியாரை வாட்போருக்கா அழைப்பது?” என்று உரிமையுடன் கண்டிக்கிறாள், குந்தவைப் பிராட்டி. 

“மகனே! விஷப்பரிட்சை வேண்டாமய்யா! உனக்குச் சமமாக வாட்போரிட யார் இருக்கிறார்கள்? சிவபெருமானைப் போற்றும் திரிபுவனச் சக்கரவர்த்தியின் இந்த மாளிகையில் சிவபூசை செய்யும் அந்தணரின் குருதியைச் சிந்தலாமா? சக்கரவர்த்திகளே! கருவூர்த்தேவரே! இந்த வேண்டாத சோதனையை நிறுத்துங்கள்!” என்று மன்றாடுகிறாள், பட்டத்துராணி சோழமகாதேவி. 

ஏதோ சொல்ல வாயெடுத்த இராஜராஜரைக் கையை உயர்த்தித் தடுத்து நிறுத்துகிறார், கருவூரார். 

“அருள்மொழி! பணியாளனைச் சோதித்துப்பார் என்று சொன்னது இந்தக் கட்டைதான்,” என்று தன்னைச் சுட்டிக்காட்டி, “ஆசிரியன் சொல்லைத்தானே இளவரசன் மதித்து நடக்கிறான்? வாட்போர் செய்யும் திறனில்லை என்றால் சிவனே சொல்லிவிடட்டுமே! மதுராந்தகன் விட்டுவிடப்போகிறான்!” என்று புன்னகையுடன் பதில் அளிக்கிறார். அவர் மனதில் ஓடுவதை அனைவரும் உடனே புரிந்துகொள்கின்றனர். 

இராஜேந்திரன் தன்னிடம் எறிந்த வாளை அதன் பிடியில் சரியாகப் பிடித்திருந்த சிவாச்சாரி, வாளைக் கீழிறிக்கி, அனைவருக்கும் தலைசாய்த்து வணக்கம் தெரிவிக்கிறான். “குருதேவரே! சக்கரவர்த்திகளே! இளவரசரின் இந்தச் சோதனைக்கு உட்பட எனக்கு அனுமதியும், அதில் இளவரசர் மனம் மகிழவும் எனக்கு ஆசி அருளுங்கள்! மகாராணியாரே! பிராட்டியாரே! தங்கள் கனிவு எனக்குக் கிடைப்பது என் முன்னோர்கள் செய்த நல்வினைதான். இளவரசர் என் குருதியைச் சிந்தும் நோக்கத்துடனா அழைக்கிறார்? அவரது நாட்டுக் குடிமகனான என்னைக் காப்பது அவர் பொறுப்பு என்று அவருக்குத் தெரியாதா?” 

கருவூராரும், இராஜராஜரும் “நடக்கட்டும்!” என்பதுபோலக் கைகளை உயர்த்துகிறார்கள். 

இராஜேந்திரனைத் தலைசாய்த்து வணங்குகிறான், சிவாச்சாரி. “இளவரசே! இந்தச் சோதனைக்கு வேறுவிதமான வாளைத் தேர்ந்தேடுக்கத் தங்கள் அனுமதி வேண்டும்!” என்று பணிவுடன் வேண்டுகிறான். 

அதற்குத் தலையசைத்த இராஜேந்திரன், “சிவாச்சாரியாரே! நான் தந்த வாளிடம் என்ன குறை என்று எமக்குச் சொல்லிவிட்டு வேறு வாளைத் தேர்ந்தெடும்!” என்கிறான். சிவாச்சாரியனுக்கு வாட்போர் மட்டுமல்ல, வாள்களைப் பற்றியும் அறிவு இருக்கிறது என்பதை அறிந்து அவனுக்கு மகிழ்வாக இருக்கிறது. 

“இளவரசே! குறையுள்ள எந்த வாளையும் தாங்கள் எனக்குத் தருவீர்களா? இந்த வாள் தாக்குவதற்கான…,” என்றவன், “என் அதிகப் பிரசங்கித்தனத்திற்கு மன்னிக்க வேண்டும். தங்கள் திறமைக்குமுன் என்னைத் தற்காத்துக் கொள்ள எனக்கு வேறுவிதமான வாள் வேண்டும்,” என்று தூணில் மாட்டியிருந்த மற்றொரு வாளை எடுத்து வருகிறான். 

அந்த வாள், மற்ற வாள்கள் மாதிரி அகலம் குறைந்து கொண்டே வந்து நுனி கூர்மையாக முடியாமல் முடிவில் பட்டையாக இருக்கிறது. கைப்பிடியிலிருந்து அகலம் அதிகமாகிக் கொண்டே வந்து நடுவில் மூன்று மடங்கு பெரிதாகி முடிவில் கைப்பிடி அகலத்தைவிட இரண்டு பங்கு அதிகமாகவே இருக்கிறது. இரண்டு கைகளாலும் பிடித்துப் போரிடவேண்டிய கனமான கட்டைவாளான அதற்கு வளைவும் அதிகமாகவே இருக்கிறது. 

இராஜேந்திரனின் விழிகள் பெரிதாகின்றன. 

அந்த வாளை சிவாச்சாரி எடுத்ததின் நோக்கம் அவனுக்குப் புரிகிறது. தன்னைவிட உயரமும், தோள்வலியும் சிறிது குறைந்த சிவாச்சாரி தன்னுடைய பலத்திற்கு ஈடுகொடுக்க வாளின் மூலம் தனது அதிகத் திறனைக் குறைக்க முயல்கிறான் என்று அறிந்து மனதுக்குள் சிரித்துக்கொள்கிறான். தன்னுடைய தாக்குதல் வேகத்தை முழுவதும் கைகளுக்குக் கொண்டுவராமல் குறைக்கும் வாள் என்று தெரிந்துதான் அதைத் தேர்ந்து எடுத்திருக்கிறான் என்றும் புரிந்துகொள்கிறான். உண்மையிலேயே இவன் போர்த்தந்திரம் தெரிந்தவன், இவனைக் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று தன்னை முன்ஜாக்கிரதைப் படுத்திக்கொள்கிறான் இராஜேந்திரன். 

அவனின் தந்திரம் அவனுக்கு முழுவதும் உதவக்கூடாது என்பதற்காக, “சிவாச்சாரியாரே! நீர் சொல்லியபடி உம்மைத் தாக்கிச் சாய்க்கக்கூடிய வாளை எடுக்காமல் நானும் நீர் தேர்ந்தேடுத்த கட்டைவாள் மூலமே உமது திறமையைத் தெரிந்துகொள்கிறேன். இளவரசன் என்று தயங்காமல் உமது முழுத்திறமையையும் காட்டும். என்னைப் பாதுகாத்துக்கொள்ள எனக்குத் தெரியும்,” என்றபடி தானும் சிவாச்சாரி தேர்ந்தேடுத்த மாதிரி ஒரு கட்டைவாளையே எடுத்துக்கொள்கிறான். 

இருவரும் அருகிலிருக்கும் பெரிய முற்றத்திற்குச் செல்கிறார்கள். வாளைத் தூக்கி நெற்றியில் வைத்து கண்களை மூடிக்கொண்டு ஒரு கணம் சிவபிரானைத் துதித்த சிவாச்சாரி, கண்களைத் திறந்து, வாளின் நுனியை இராஜேந்திரன் காலுக்கு முன்வைத்துத் தலைசாய்த்து வணக்கம் தெரிவித்துவிட்டு இருகைகளாலும் வாளை உயர்த்திப் பிடிக்கிறான். 

உடனே தன் இருகைகளாலும் வாளை உயர்த்திக்கொண்டு மதம் பிடித்த யானையைப்போல சிவாச்சாரிமேல் பாய்கிறான், இராஜேந்திரன். ஒன்று தன் பாய்ச்சலிலிருந்து விலகுவான் அல்லது தாங்கமுடியாமல் தடுமாறி விழுவான் என்று நினைத்த இராஜேந்திரனுக்குப் பெரிய அதிர்ச்சிதான் காத்திருக்கிறது. 

ஒரு குட்டிச்சுவரில் முட்டிக்கொண்டதுபோல அவனது வேகம் தடுத்து நிறுத்தப்படுகிறது. 

அவனது வாளை எதிர்நோக்கித் தனது வாளைச் சற்றுச் சரித்து, அகலமான அதன் நடுப்பகுதியில் வாங்கிய சிவாச்சாரி, கையை லாவகமாகச் சுழற்றி, இராஜேந்திரனின் வாளைத் தன் வாளின் அடிக்கு வரவைக்கிறான். அந்த வழுக்கலில் இராஜேந்திரனின் வேகம் அரைவிநாடிக்குள் குறைத்து நிறுத்தப்படுகிறது. 

உடனே தன் வாளை விடுவித்து ஓரடி பின் வாங்கிவிட்டு, அதற்கு மேலே இராஜேந்திரனை எதிர்க்க எந்த முயற்சியும் செய்யாமல் நிற்கிறான், சிவாச்சாரி. 

அவன் ஏன் வெறுமெனே நிற்கிறான் என்று திகைத்த இராஜேந்திரன், தானும் ஒரு அடி பின்வாங்கி மறுபடி தாக்குகிறான். அவன் எப்படித் தாக்கினாலும் சிவாச்சாரி அதைத் தடுத்து நிறுத்திவிடுகிறான். ஆனால், எந்தவிதமான எதிர்த்தாக்குதலும் செய்யாமல் நின்றுவிடுகிறான். இது ஏன் என்று தெரியாமல் இராஜேந்திரன் எரிச்சல்படுகிறான். 

இரண்டடி பின்னால் எடுத்து வைத்து, “ஓய் சிவாச்சாரி! உமக்கு தடுப்பதைத் தவிர எந்தப் பயிற்சியும் கிடையாதா?” என்று கத்திக்கொண்டே தனது தாக்குதலின் வேகத்தை அதிகரிக்கிறான். சிவாச்சாரியின் வாட்போர்த் திறனை அறிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் மறைந்து, அவனைத் தோற்கடிக்கவேண்டும் என்ற எண்ணமே இராஜேந்திரனுக்கு எழுகிறது. 

பத்து மணிக்கூறுகள் பத்து விநாடிகளாக ஓடிப்போகின்றன. என்னதான் மாற்றி மாற்றித் தாக்கினாலும், சிவாச்சாரி தடுத்துக்கொள்கிறானே தவிர, இராஜேந்திரன்மீது எந்தத் தாக்குதலும் நடத்தவை இல்லை. 

திடுமென்று தனது வாளைத் தூக்கி எறிகிறான், இராஜேந்திரன். 

“என்னையா சிவாச்சாரி! என்னை முட்டாள் என்றா நினைக்கிறீர்? வாட்போரிடு என்றால், வெறுமெனே என் தாக்குதலைத் தடுத்துநிறுத்தி விட்டுச் சும்மா நிற்கிறீரே! நான் சொல்வது உம் காதில் விழவில்லையா? எனக்கு என்னவோ வாட்போரிடத் தெரியாத மாதிரியும், அதனால் எனக்கு விட்டுக்கொடுப்பது மாதிரியும் நடந்துகொள்கிறீர்!  நீர் இப்படிச் செய்வது என்னைச் சிறுபிள்ளையாக நடத்துவதுபோல இருக்கிறது!” என்று உரத்த குரலில் புலியாக உறுமுகிறான். 

அனைவரும் அதிர்ந்துபோகிறார்கள். 

தன் இருக்கையைவிட்டு ஒரு கணம் எழுந்த இராஜராஜர், கருவூர்த்தேவரின் கண்ஜாடையைப் பார்த்துவிட்டுத் திரும்ப அமர்ந்துகொள்கிறார். 

உடனே தன் வாளை இளவரசரின் காலடியில் போட்டுவிட்டு, அவன்முன் மண்டியிடுகிறான், சிவாச்சாரி. 

“இளவரசே! உங்களை எரிச்சல்படுத்தியதற்கு என்னை மன்னித்து விடுங்கள்! இந்தச் சோழ வளநாட்டிற்குக் காவல்தெய்வமாக விளங்கும் தங்களை அவமானப்படுத்த என் கனவில்கூட நினைப்பேனா? தங்கள் சொல்லையும் மீறி என் தாக்குதல் திறமையை உங்களிடம் காட்டாததற்கு ஒரு காரணம் இருக்கிறது!” 

இராஜேந்திரன் பதில் பேசாமல் நிற்கவே, “தங்கள்மீது தாக்குதல் நடத்த என்னால் எப்படி இயலும்? உங்கள் தாக்குதலால் எனது இரத்தம் சிந்தக்கூடாது என்று சோழமகாதேவியார் விரும்பினார்கள். அப்படியிருக்க, உங்கள் இரத்தத்தை அவரெதிரில் என்ன, எவர் எதிரிலும் நான் சிந்தலாமா? நாட்டைக் காக்கும் நெறி தவறாத மன்னனின் இரத்தத்தைச் சிந்தவைத்து மீளாத நரகத்திற்கு நான் செல்லவேண்டுமா, இளவரசே? அதனால்தான் எளிதில் மற்றவர் இரத்தத்தைச் சிந்தவைக்கும் வாளை விடுத்து, மதயானைத் தாக்குதல் உடைய, புலியின் வேகம் உடைய தங்களின் வாள்வீச்சு வேகத்தைச் சமாளிக்க கட்டைவாளைத் தேர்ந்தெடுத்தேன். தாங்களும் கட்டைவாளை எடுத்தது என் வேலையைச் சுலபமாக்கியது. 

“இருந்தாலும் நம் இருவரின் இரத்தமும் சிந்தக்கூடாது என்று தற்காப்பாகச் சண்டையிட்டது தங்களுக்கு சினத்தை வரவழைத்தது. எனவேதான் தங்களது ஆணையை மீறவேண்டிய பாவியானேன்.  தங்கள் ஆணையை மீறித் தங்களைக் சினமடையச் செய்த என்னை இனி தாங்கள் எப்படிப் பணியாளனாக எடுத்துக்கொள்ள இயலும்? நான் அதற்குத் தகுதி இல்லாமல் போனேன்!” இராஜேந்திரனின் காலடியிலேயே கண்ணீர் சிந்துகிறான், சிவாச்சாரி. 

“நீர் சொன்னது சரிதான் சிவாச்சாரியாரே!  உமது செயலால் எனது பணியாளனாக ஆகும் தகுதியை நீர் இழந்துவிட்டீர்,” இராஜேந்திரன் குரலில் பொய்யான கோபம் தொனித்தது. 

உடனே குரலைக் கனிவாக மாற்றிக்கொண்டு, “உம்மைப் பணியாளனாக ஏற்க நான் ஒரு முட்டாளா? பொற்கங்கணத்தைக் காலில் அணியும் மதிப்பறியாக் குருடனா? இனி நீர் என் நண்பன், சிவாச்சாரியாரே – நீர் என் நண்பன்! உம்மை எனக்கு நண்பனாக அளித்த ஆசான் கருவூராருக்கு நமது நன்றியைத் தெரிவிப்போம்!” என்று அவனைத் தூக்கிநிறுத்திவிட்டு, இராஜராஜர், கருவூரார் இவர்களைப் பணிகிறான், இராஜேந்திரன். அவனைப் பின்தொடர்ந்து பணிகிறான், சிவாச்சாரி. 

தன் கண்களில் துளிர்த்த நீரைத் துடைத்துக்கொண்டு, நிம்மதியான பெருமூச்சுவிடுகிறாள், குந்தவைப் பிராட்டி. மெல்ல சோழமகாதேவியாரின் கைகளைப் பிடித்து அழுத்துகிறாள். பதிலுக்கு அழுத்தித் தனது நிம்மதியைப் பிராட்டிக்கு தெரிவிக்கிறாள் சோழமகாதேவி. 

* * *

மகிந்தன் அரண்மனை, ரோகணம், இலங்கை

சாதாரண, ஆனி 28 – ஜூலை 13, 1010

ரோகணத்தின் தலைநகர அரண்மனையில் இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தன் தன் அரியணையில் அமர்ந்திருக்கிறான். ஆதித்த கரிகாலனால் கொல்லப்பட்ட வீரபாண்டியனின் பேரனும் பாண்டிய மன்னனுமான அமரபுஜங்கனும், வந்திருந்த அவனது மகனும் அவனை ரகசியமாகச் சந்திக்கவந்து, அவனருகில் உள்ள மற்ற ஆசனங்களில் அமர்ந்திருக்கிறார்கள். பாண்டியர்களின் பின்னால் அவர்களது மெய்காப்பாளர்களில் முதன்மையானவர்களான திருமாறனும், அவனது தம்பி முருகேசனும் விறைப்பாக நிற்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் நடுவில் பாண்டியர்களின் மொழிபெயர்ப்பாளரும், மகிந்தனின் பின்னால் அவனது மொழிபெயர்ப்பாளரும் நின்று கொண்டிருக்கிறார்கள். 

சிங்களத்துச் சிங்காரிகள் தங்கக் கோப்பைகளில் பழரசத்தை ஊற்றிக்கொடுக்கிறார்கள். மூவரும் ஒன்றும் பேசாமலேயே பழரசத்தை அருந்துகிறார்கள். யார் பேச்சை ஆரம்பிப்பது என்ற தயக்கம் இருக்கிறது.

தொண்டையைக் கனைத்துக்கொண்டு பேசத் தொடங்குகிறான், அமரபுஜங்கள். அவன் பேசப்பேச மகிந்தனின் மொழிபெயர்ப்பாளன் சிங்களத்தில் மொழிபெயர்க்க ஆரம்பிக்கிறான்.

“மகிந்தரே, பாண்டிநாட்டின் சிறந்த நண்பரே! போரில் என் பாட்டனுக்குத் தோள் கொடுத்தவர், உங்கள் தந்தை.  அவர்களைப்போல நாமும் நமது நட்பைத் தொடர்வது எனக்கு மகிழ்ச்சியே!  உம்மைச் சந்திக்க நானும் என் மகனும் சோழர் கண்களில் படாமல் ரோகணத்திற்கு வந்துள்ளோம்.  உமக்கும், எமக்கும் பொது எதிரிகள் இராஜராஜசோழனும், அவனது மகன் இராஜேந்திரனும்தான். தங்கை குந்தவியின் அழைப்பை ஏற்றுக்கொண்டு இராஜேந்திரன் இன்னும் சிலகாலம் கழித்து வேங்கைநாட்டுக்குச் (வெங்கி) செல்லக்கூடும் என்று நமது ஒற்றர்கள் தகவல் கொண்டுவந்திருக்கிறார்கள்.

“வேங்கை நாட்டுக்கு எதிராக மேலைச் சாளுக்கியர்கள் வேலைசெய்கிறார்களாம். அந்த நேரத்தில், சேரனும், தாங்களும் எமக்கு உதவிசெய்தால் பாண்டிநாட்டில் நாங்கள் எங்கள் நிலைமையை வலுப்படுத்திக் கொள்ளலாம். பாண்டிநாட்டுக்கு செல்ல வேண்டிய பொலனருவையில் இருக்கும் சோழப்படைகள் வடக்கு நோக்கித் திரும்பும். இந்தக் குழப்பத்தில் தாங்கள் பொலனருவையைத் திரும்பப் பெற்றுவிடலாம்.  சேரனும், நாங்களும் தங்களுக்கு உதவிசெய்வோம்.” 

அதற்குப் பதிலே சொல்லாமல் சிறிது நேரம் அமர்ந்திருக்கிறான், மகிந்தன். நாலாம் மகிந்தன் இறந்ததும் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் அனுராதபுரத்தை விட்டுப் பொலனருவைக்கு ஓடிய அவன், ஆதித்த கரிகாலனின் மறைவுக்குப் பிறகு இராஜராஜ சோழர் ஈழத்தை விட்டுச் சென்றதால் மீண்டும் அனுராதபுரத்தைத் திரும்பப் பெற்றதும், பதினான்கு ஆண்டுகள் கழித்துத்18 திரும்பப் படையெடுத்து வந்து இராஜராஜர் தன்னை ரோகணத்துக்கு விரட்டியதும் நினைவுக்கு வருகிறது .இப்படி உயிருக்குப் பயந்து ஓடி, தென்பகுதியான ரோகணத்தில் உட்கார்ந்து, பாண்டிய அரசனுடன் அருந்தும் பழச்சாறு விஷமாக அவனுக்கு கசக்கிறது .தந்தை நாலாம் மகிந்தனின் அளவுக்கு வீரமும் இல்லை, சூழ்ச்சிசெய்து திட்டம தீட்டவும் திறனில்லை – இருக்கும் இடத்தில் குறுநில மன்னனாக நிம்மதியாக ஆட்சிசெய்யும் தன்னிடம் இவர்கள் உதவிகேட்டு வந்திருக்கிறார்களே!

“மகிந்தரே, என்ன இப்படிச் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டீர்கள்? பாண்டியர்களும், சிங்கள மன்னர்களும் எத்தனை தலைமுறைகளாக நண்பர்களாக, உறவினர்களாக இருந்து வந்திருக்கிறோம்? பாண்டியரும், சேரரும், சிங்களவரும் சேர்ந்தால் சோழனால் எப்படித் தாக்குப்பிடிக்க இயலும்? நீங்களும் தயங்காது எங்களுடன் சேர்ந்துகொள்ளுங்கள்.” என்று மீண்டும் மகிந்தனை வற்புறுத்துகிறான், அமரபுஜங்கன். 

“பாண்டியரே!  உம் பேச்சில் உள்ள நியாயம் எனக்குப் புரியாமல் இல்லை. நான் தயங்குவதற்குக் காரணம் வேறு. கடந்த பதினான்கு ஆண்டுகளாகச் சிங்களத் தீவு சோழர்கள் ஆதிக்கத்தில் இருக்கும்போது பேசாமல் இருந்துவிட்டு, சிங்களப் படைகளைப் பாண்டியநாட்டுக்கு உதவியாகப் போர்செய்ய அனுப்பினால் இங்கு மக்கள் எனக்கு எதிராகப் போர்க்கோடி உயர்த்தமாட்டார்களா? யோசித்துப் பாருங்கள்!” என்று தன் பக்கத்து நியாயத்தை பாண்டியனுக்கு எடுத்து உரைக்கிறான் மகிந்தன். 

———————————————

[18 பொது ஆண்டு 983ல் ஐந்தாம் மகிந்தனை இராஜராஜசோழர் ரோகணத்திற்கு விரட்டியதாக வரலாறு கூறுகிறது.]

“மகிந்தரே! இலங்கையைத் தவிக்க விட்டுவிட்டுப் பாண்டிநாட்டுக்கு உதவினால் உங்கள் மக்கள் சினமடையலாம்.  ஆனால் நம்மைத் தனித்தனியாக ஆக்கிவிட்டுதானே சோழன் நம் எல்லோரையும் வென்றிருக்கிறான்? நாம் ஒன்றுசேர்ந்தால்தானே சோழனை அவனது நாட்டிற்கு ஓட்டமுடியும்? வேங்கை நாட்டிற்கு அவனது படைகளும், இராஜேந்திரனும் செல்லும்பொழுது, நாம் ஒன்றுசேர்ந்து பாண்டிநாட்டை ஆக்கிரமித்திருக்கும் அவனது படைகளைத் தாக்கினால், அவர்களுக்கு உதவியாக இங்கிருக்கும் சோழப் படைகள் பாண்டிநாட்டிற்குத் திரும்பவேண்டிய கட்டாயம் ஏற்படும். அந்தசமயம் பார்த்து, சேரனுடைய படைகள் உங்களுடன் சேர்ந்து பொலனருவையைத் தாக்கி வசப்படுத்திக் கொள்ளலாம்.  இராஜராஜனுக்கு வயதாகிவிட்டது. இப்பொழுது அவனால் முன்புபோல போரிட இயலாது.  யார் கண்டது, அவனை எமனுலகுக்கு அனுப்பினால், தஞ்சைகூட விழ வாய்ப்பு இருக்கிறது!” உற்சாகமாகப் பதில்சொல்கிறான், அமரபுஜங்கன். 

அவனது உற்சாகம் மகிந்தனையும் கொஞ்சம் தொற்றிக்கொள்கிறது. 

“நீர் சொல்வதைக் கேட்கக்கேட்க எனக்கும் இந்தத் திட்டத்தில் ஆர்வம் ஏற்படுகிறது.  கடந்த பதினான்கு ஆண்டுகள் என்னைச் சும்மாவிட்டதனால் இதுவரை ஐம்பதாயிரம் சிங்களவர்கள் படையும், வேலைக்காரப் படைகள்19 முப்பதாயிரமும் திரட்டி உள்ளேன்.  இப்படைகளில் பாதிப் பேரை உங்கள் உதவிக்காக பாண்டிநாட்டுக்கு அனுப்பத் தயாராக உள்ளேன். இருந்தாலும்…” என்று இழுத்து நிறுத்துகிறான்.

—————————–

[19 இலங்கை மன்னர்கள் கூலிப்படைகள் (merceneries) திரட்டி சோழர்களுக்கு எதிராகப் போர் செய்தனர் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவர்கள் ‘வேலக்காரப் படைகள்’ என்று அழைக்கப்பட்டார்கள்.]

பாண்டியனுக்குக் கவலை பற்றிக்கொள்கிறது.  இந்தச் சிங்களவனை நம்புவது மண்குதிரையை நம்புவது மாதிரித்தானா? இவன் அப்பனை நம்பித்தானே எனது பாட்டனார் உயிரிழந்தார் என்று நினைத்தவுடனேயே அவனுக்கு அடிவயிற்றில் பகீர் என்று ஏதோ ஒன்று குடைகிறது. 

“மகிந்தரே!  பொங்கும் பாலில் தண்ணீரை ஊற்றியதுபோல உமது உற்சாகம் குறைகிறதே! அது என்ன, இருந்தாலும் என்று இழுக்கிறீர்?” 

சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டு யோசித்த மகிந்தன், கண்களைத் திறக்காமலேயே கேட்கிறான், “பாண்டியரே! நான் என் படைகளை உதவிக்கு அனுப்பலாம். ஆனால், ரோகணத்திற்கு வடக்கிலிருந்து சோழர் படைகள் குவிந்து கிடக்கின்றனவே! இதுதவிர, சோழர்கள் கிட்டத்தட்ட நானூறு கப்பல்களை இலங்கையைச் சுற்றிக் காவலாக நிறுத்தி வைத்திருக்கிறார்களே! இப்படி இருக்கும்போது, படைகளை அவர்கள் கண்ணில் படாமல் நான் எப்படி பாண்டி நாட்டிற்கு அனுப்ப இயலும்?” 

“இவ்வளவுதானா? நான் ஏதோ என்னவோ என்று பயந்து விட்டேன்!” என்று சிரிக்கிறான், அமரபுஜங்கன்.  “மகிந்தரே! நாங்கள் சோழர்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, ஐந்து பெரிய கப்பல்களை கொற்கைத் துறைமுகத்திலிருந்துகொண்டு வரவில்லையா? எங்களுக்குத் தெரிந்த அராபியர்களின் கொடிகளைக் கப்பல்களில் பறக்கவிட்டுக்கொண்டு வந்து சேர்ந்தோம். அதற்காகவே, அராபிய கூலிப் படைகளும் எங்களிடம் சிலநூறு பேர் இருக்கிறார்கள். நீர் இதைப்பற்றி ஏன் கவலைப்படுகிறீர்? உம் படைகள் பத்திரமாகப் பாண்டிநாட்டுக்குப் போய்ச்சேர நான் உத்திரவாதம் கொடுக்கிறேன்.” 

“அதுசரி, பாண்டியரே! ஐந்து பெரிய கப்பல்களா? நான் பார்க்கவில்லையே!  போகட்டும், அப்படி அதில் என்னகொண்டு வந்திருக்கிறீர்கள்?” இப்படி அப்பாவித்தனமாக மகிந்தன் கேட்டதும் அமரபுஜங்கனுக்கு பற்றிக்கொண்டு வருகிறது. 

இவன் இப்படிக் கையாலாகாதவனாக இருப்பதால்தானே, அனுராதபுரத்தை மட்டுமல்லாமல், பொலனருவையையும் கோட்டைவிட்டான் என்று தனக்குள்ளாகவே நினைத்துக்கொள்கிறான்.  இவன் மட்டும் சரியான தலைவனாக இருந்து சோழர்களுக்கு அவ்வப்பொழுது தலைவலி கொடுத்துக் கொண்டிருந்தால், பாண்டிநாட்டைச் சோழர்களின் கிடுக்கிப் பிடியிலிருந்து எப்பொழுதோ மீட்டிருக்கலாமே என்றும் எண்ணிப் பார்க்கிறான். காரணம் கேட்காமல் வெறியுடன் போரிடும் இவனது படைகள் இருந்தால் மட்டும் போதும், பாண்டிநாட்டில் தனது ஆட்சியை விரிவுபடுத்தலாம் என்று தன் எரிச்சலை அடக்கிக்கொள்கிறான்.

“மகிந்தரே!  பாண்டிநாட்டின் விலைமதிப்பில்லாப் பொக்கிஷங்களைச் சுமந்துகொண்டு அந்தக் கப்பல்கள் வந்திருக்கின்றன. அவை தற்பொழுது பாண்டிநாட்டில் இருந்தால் சோழர்களின் கழுகுக் கண்களிலிருந்து தப்பா.  அவர்கள் எங்கள் பொக்கிஷங்களுக்காக நாயைப்போல மோப்பம் பிடித்துக்கொண்டு திரிகிறார்கள். அதை அவர்களுக்குத் தெரியாமல் இங்கு கொண்டுவந்திருக்கிறேன். பாண்டிநாட்டை அவர்களின் பிடியிலிருந்து மீட்டவுடன் நான் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். என் பொக்கிஷங்களையே உங்களிடம் ஒப்படைக்கப் போகும் எனக்கு தங்கள் படைகளை உதவியாகத் தரலாம் அல்லவா?” என்று மனதில் எரிச்சலுடனும், உதட்டில் புன்னகையுடனும் கேட்கிறான், அமரபுஜங்கன். 

“பாண்டிநாட்டுப் பொக்கிஷமா!” இலங்கை அரசனின் வாய் அவனையும் அறியாமல் இலேசாகப் பிளக்கிறது.  “கப்பல் கப்பலாக அப்படி என்ன கொண்டுவந்திருக்கிறீர்கள்?” 

“மகிந்தரே!  பரம்பரை பரம்பரையாகப் பாதுகாத்துவந்த எங்கள் நாட்டுப் பொக்கிஷத்தைதான் நாங்கள் கொணர்ந்திருக்கிறோம். இவற்றில் தலையாயது எங்கள் அரியணை. களப்பிரர்களை ஒழித்த எங்கள் கடுங்கோன்20 முதன்முதலாக ஏறிய அரியணை. அரிசகேசரி மாறவர்மன் நின்றசீர் நெடுமாறன் தமிழ்பேசும் மூன்று நாடுகளையும் தனது ஒரு குடையின்கீழ் அமர்ந்து ஆட்சி செய்த அரியணை.  ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பாண்டியர்கள் அமர்ந்து யாருக்கும் தலை பணியாமல் ஆட்சிசெய்து வந்த அரியணை.  அந்த அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்ய சோழனுக்குக் கப்பம் கட்டும் எனக்கு என்ன மகிந்தரே தகுதி இருக்கிறது? அது மட்டுமல்ல. அவர்கள் பல போர்கள் செய்து பாண்டிநாட்டைப் பாதுகாத்து வந்த வீரவாள்கள் பல இருக்கின்றன.  இவற்றிற்கும் தலையாய எங்களது பாண்டிநாட்டின் மணி மகுடமும் உள்ளது.21 இவை எங்கள் உயிருக்கும் மேலானவை.  இவைகள் இல்லாத பாண்டி நாடு, பாண்டி நாடே அல்ல. இருந்தாலும் அவை அனைத்தையும் உமது ரோகணத்திற்குப் பாதுகாப்பிற்காகக்கொண்டு வந்திருக்கிறோம். எங்கள் உயிரிலும் மேலான எங்கள் பரம்பரைச் சொத்தை உம்மிடம் ஒப்பித்து அதைப் பாதுகாக்கும்படி கேட்டுக்கொள்ளத்தான் வந்திருக்கிறோம்.  நீர் எமக்குப் படையுதவி செய்யாவிட்டாலும் கவலை இல்லை. என்று எங்கள் பரம்பரையில் வரும் ஒரு பாண்டியன் சுதந்திரமாக பாண்டி நாட்டை ஆளுவானோ அப்பொழுது அவன் சிங்களநாட்டிலிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ளுவான்.  வேறு எந்த உதவி செய்யாவிட்டாலும் இந்த உதவியையாவது செய்யுங்கள், மகிந்தரே!” உணர்ச்சிப் பெருக்குடன் மகிந்தனை வேண்டிக்கொள்கிறான் அமரபுஜங்கன். 

“பாண்டியரே! என்மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பதற்கு எப்படி நான் நன்றி சொல்லப்போகிறேன்? என் உயிரைக்கொடுத்தாவது உம் நாட்டுப் பொக்கிஷத்தைக் காப்பேன்!” என்று வீரமாகப் பாண்டிய மன்னனுக்கு வாக்களிக்கிறான், மகிந்தன். 

“மூன்று கப்பல்களில் பொக்கிஷங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை எனக்குப் படை திரட்டிக்கொடுக்க உமக்கு அன்பளிப்பாக அளிக்கிறேன். இன்னொன்றில் இருக்கும் எங்கள் பரம்பரைச் சொத்தைப் பாதுகாத்து வருவீராக. மூன்றாவதில் இருப்பதை எனக்குத் தேவைப்படும் காலத்தில் வாங்கிக்கொள்கிறேன். இந்த மூன்றையும் உம் அனுமதியின்பேரில் நாங்கள் நீங்கள் சொல்லுமிடத்தில் இறக்கிவைக்கிறோம். எங்கள் பொக்கிஷத்துடன் என் மெய்காப்பாளன் ஒருவனும் இருப்பான். அவனுக்கும், அவனது உதவியாளர்களுக்கும் தங்க வசதிசெய்து கொடுப்பீராக. ஒரு கப்பலில் நானும், என் அந்தரங்கப் படையும், இன்னொரு கப்பலில் பாண்டிய வீரர்களும், படைத் தலைவர்களும் இருக்கிறார்கள். நீர் தரும் படைகளை நான் காலியாகும் மூன்று கப்பல்களில் ஏற்றிச் செல்வேன். நீரும் கொஞ்சம் கொஞ்சமாக மேலும் மேலும் படைகளை அனுப்பிவைத்தால், சமயம்பார்த்துப் பாண்டிநாட்டை மீட்டுக்கொள்வேன்,” என்று தன் திட்டத்தை மேலும் விவரிக்கிறான், அமரபுஜங்கன்.

——————————————-

[20 தமிழ்நாட்டை முந்நூற்று ஐம்பது ஆண்டுகள் அடக்கி ஆண்ட களப்பிரர்களிடமிருந்து குமாியிலிருந்து காவிாி வரையான பகுதிகளை மீட்டவன் கடுங்கோன் பாண்டியன் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

21 பாண்டியர்கள் தங்களது பரம்பரைப் பொக்கிஷங்களை ஐந்தாம் மகிந்தனிடம் ஒப்படைத்தார்கள், அதைப் பின்னர் இராஜேந்திர சோழன் கைப்பற்றிக் கங்கைகொண்ட சோழபுரத்திற்குக் கொண்டு சென்றான் – History of South India by K.A. Neelakanda Sastri.]

அதற்குச் சம்மதிக்கிறான் மகிந்தன்.  சபை கலைந்து பாண்டியன் தன் பரிவாரங்களுடன் விருந்தினர் மாளிகைக்குக் கிளம்புகிறான். வலப்புறம் திருமாறனும், இடப்பக்கம் முருகேசனும் காவலாகக் குதிரையில் வருகிறார்கள். 

“முருகேசா! நீதான் பாண்டிநாட்டுப் பொக்கிஷத்திற்குக் காவலாக இருந்துவர வேண்டும்! உனக்குத் துணையாக நூறு சிறந்த பாண்டியவீரர்கள் இருப்பார்கள். அதனால்தான் உன்னையும், அவர்களையும் குடும்பத்துடன் வரச்சொன்னேன். உன் அண்ணன் திருமாறன் என்னுடன் பாண்டியநாடு திரும்புவான்.” என்று தன் மகனின் பின்னால் நிற்கும் முருகேசனிடம் சொல்கிறான் அமரபுஜங்கன். 

“என் உயிரைக்கொடுத்து நம் பாண்டிநாட்டுப் பொக்கிஷத்தைக் காப்பேன்! இது மதுரை மீனாட்சியம்மாமீது ஆணை, அரசே!” என்று பணிவுடன் பதில்சொல்கிறான், முருகேசன். 

“உன் பாட்டன் வெற்றிமாறன் மகாவீரன், முருகேசா! என் பாட்டனாருக்குக் கொடுத்த வாக்குறுதிக்காகத் தன்னுயிரைக்கொடுத்து ஆதித்த கரிகாலனை அழித்தான். அவனது பேரர்கள் அனைவரும் பாண்டிநாட்டு வீரர்கள் அல்லவா?” 

“தங்கள் ஆணை, அரசே!” என்று தலை வணங்குகிறான் முருகேசன். 

தான் பாண்டிநாட்டுக்குத் திரும்பிச் செல்லவே முடியாது போய்விடும் என்று அவனால் அப்போது உணர்ந்துகொள்ள முடியவில்லை. 

* * *

சாளுக்கியர் அரண்மனை, வேங்கைநாடு

சாதாரண, ஆனி 28 – ஜூலை 13, 1010

வேங்கை நாட்டின் தலைநகர் வெங்கியில் மன்னர் சக்திவர்மனின் தம்பிமகன் இராஜராஜ நரேந்திரனின் பிறந்தநாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாட அரண்மனை விழாக்கோலம் கொண்டிருக்கிறது. இளவரசன் விமலாதித்தனின் முதல் மனைவியும், சக்கரவர்த்தி இராஜராஜ சோழரின் மகளும், இராஜேந்திர சோழனின் தங்கையுமான குந்தவியின் மகனான அவனுக்கு தாய்வழிப் பாட்டனார் இராஜராஜரின் பெயரைச் சூட்டியிருக்கிறான், விமலாதித்தன். தன்னிடம் அடைக்கலம் புகுந்த சக்திவர்மனுக்காக மேலைச் சாளுக்கியனான சத்யாஸ்ரயனைப் போரில் வென்று, வேங்கைநாட்டை மீட்டுச் சக்திவர்மனுக்கே திரும்ப அளித்ததொடு மட்டுமல்லாமல் தனது மகளான குந்தவியையும் அவனது தம்பி விமலாதித்தனுக்கு மணம்செய்து கொடுத்திருந்தார், இராஜராஜர். அந்த நன்றிக்காகவே, இராஜராஜனின் பெயரைத் தனது மகனுக்குச் சூட்டியிருந்தான் விமலாதித்தன். 

“நரேந்திரா, தாமதம் செய்துகொண்டிருக்காதே. நாம் உன் பிறந்தநாள் விழாவுக்குப் புறப்பட வேண்டும்!” என்று செல்லமாக அதட்டுகிறாள், குந்தவி. 

“ஒக நிமிஷமண்டி, நேனு ஒஸ்தானன்டி,” என்று பதில் வருகிறது.

தான் என்னதான் தமிழில் பேசினாலும், அவன் தெலுங்கிலேயே பதிலளிப்பது குந்தவிக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. தமிழ்தெரிந்த விமலாதித்தனும் இப்பொழுது தெலுங்கிலேயே அவளுடனும் நரேந்திரனிடமும் பேச ஆரம்பித்திருக்கிறான். ஆரம்பத்தில் தன்னுடன் தமிழில் பேசிவந்த விமலாதித்தன் வேங்கை நாட்டிற்குத் திரும்பிவந்ததும் ஏன் இப்படி நடந்துகொள்கிறான் என்று குழம்புகிறாள், குந்தவி. 

தன் பேரன் தமிழில் பேசத்தெரியாமல் இருக்கிறான் என்று தெரிந்தால் தனது தந்தை என்ன நினைப்பார் என்று எண்ணினால் அவளுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. முதலில் விமலாதித்தன்மேல் தனக்கு ஏற்பட்ட காதலை அவர் விரும்பவில்லை. ஆயினும் அண்ணன் இராஜேந்திரன் தன்பக்கம் பேசியதால்தான் தன் காதல் திருமணமாகக் கனிந்தது என்றும் அறிவாள். இப்பொழுது அந்த அண்ணனிடம், “உன் மருமகனுடன் பேசவேண்டுமென்றால் நீ தெலுங்கைக் கற்றுக்கொள்ள வேண்டும்!” என்று எப்படிச் சொல்லமுடியும்? 

மேலும், அண்ணன் இராஜேந்திரன் மகளான அம்மங்கைக்கு (அம்மங்காதேவி) தனது மகனைத் திருமணம் செய்துவை என்று எப்படிக் கேட்கமுடியும்? நரேந்திரனுக்கும் பதினேழு வயது இன்று பிறக்கிறது. கோபக்காரனான அண்ணன் இராஜேந்திரன், விஷயம் தெரிந்தால் என்ன செய்வானோ, எப்படிக் கத்துவானோ? தமிழ்த் திருமறைகளை தில்லைவாழ் அந்தணர்கள்மூலம் பரிசாகப் பெற்ற தனது தந்தை, அவரது பேரன் தமிழைப் பேச மறுக்கிறான் என்றறிந்தால் சினத்தில் என்ன செய்வாரோ? 

விமலாதித்தனுக்குத் தன்பால் ஈர்ப்பு குறைகிறது என்பதைத் திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே தெரிந்து கொண்டாள், குந்தவி. அவன் மற்றொரு பெண்ணை இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே மணந்தது அவளுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆயினும் மன்னர்கள் பட்டத்து ராணியைத் தவிர மற்றவர்களையும் மணப்பது அவள் அறிந்ததுதான். இதற்குத் தன் தந்தையும், அண்ணனும் விலக்கல்ல என்று அவள் அறிந்திருந்ததால் அதை ஒரு பெரிய குறையாக நினைக்கவில்லை. தவிர, குந்தவியிடம் காட்டிய அன்பையும், மரியாதையையும், விமலாதித்தன் மற்ற மனைவியிடம் காட்டவில்லை. 

கிட்டத்தட்ட ஓராண்டு இடைவெளிக்குள்ளேயே மற்றவளுக்கும் ஒரு ஆண்குழந்தை பிறந்தது, குந்தவிக்கு ஒருமாதிரியாகத்தான் இருந்தது. விஜயாதித்தன்22 என்று பெயரிட்டு வளர்ந்த அந்தப் பையனிடமும் அன்பைத்தான் காட்டினாள், குந்தவி. இருந்தாலும் தன் மனக்கசப்பை இராஜராஜரிடமோ, இராஜேந்திரனிடமோ சொல்ல அவள் விரும்பவில்லை. 

தமிழ்ச் சோழச் சக்கரவர்த்தியின் பேரனான நரேந்திரனுக்குத் தெலுங்கைக் கற்பித்துவர விமலாதித்தன் தெலுங்கு அறிஞரான நன்னய்ய பட்டாரகரை23 ஏற்பாடு செய்ததனால், அவனுக்குத் தமிழைவிடத் தெலுங்கிலேயே ஈர்ப்பு அதிகமாகி வருவதையும் குந்தவியால் அறிந்துகொள்ள முடிகிறது. 

நரேந்திரனும், நன்னய்ய பட்டாரகரும், அடிக்கடி தெலுங்கிலேயே நிறைய தங்களுக்குள் பேசிக் கொள்வதையும் கவனித்திருக்கிறாள். நன்னய்யா சொல்வதற்கு நரேந்திரன் அடிக்கடி தலையாட்டுவதுதான் என்ன என்று தெலுங்குதெரியாத அவளுக்குப் புரியவில்லை. தன் புகுந்தவீடு தமிழ் நாடாக இல்லாததாலும், தன் மகனே தாய்மொழியான தமிழை விடுத்துத் தெலுங்கிலேயே பேசிவருவதும் அவளுக்கு தான் தனித்து விடப்பட்டது போன்ற ஓர் உணர்ச்சியைத் தோற்றுவிக்கிறது. 

திரிபுவனச் சக்கரவர்த்தியான இராஜராஜ சோழரின் ஒரே மகளான தான் இப்படித் தன் மகனைப் பற்றிக் கவலைப்படுவது அவளுகே சிலசமயம் புரியாத புதிராக இருக்கும். சோழப்பேரரசின் வடகோடியில் உள்ள கோதாவரி, கிருஷ்ணா நதிகளை உள்ளடக்கிய வேங்கை நாட்டிற்கு பட்டத்து ராணியாக தன்னை தன் தகப்பனார் அனுப்பி வைத்தது நன்கு சிந்தித்து எடுத்த முடிவுதான் என்றும் அவளுக்குப் புரியாமல் இல்லை. 

ஆயினும் ஒரு சுட்டிக்குழந்தையாக, சிறுமியாக, பாவையாக, தஞ்சாவூர் அரண்மனையில் சுற்றி வந்ததும், தனது வாய் ஓயாத பேச்சு அங்கு எதிரொலித்ததையும், தான் விரும்பியதற்கு மாறாக பேசக்கூட யாருக்கும் துணிவு இல்லாததையும் நினைவுகூர்கிறாள். அப்படியிருந்த தான் வேங்கை நாட்டு அரண்மனையில் பேசாமடந்தையாகி வருவதையும், வாய்விட்டுச் சிரிப்பதைக்கூட வெகுவாக நிறுத்திவிட்டதையும், எப்பொழுதும் எதையோ பறிகொடுத்ததைப்போன்ற உணர்வும், மீளமுடியாத தனிமையில் மாட்டிக் கொண்டது போன்ற தவிப்பும் ஏற்படுவதை எண்ணிப் பார்க்கிறாள்.

————————————————-

[22 விஜயாதித்தன் என்பது அவனுடைய பட்டப் பெயர்தான். அவன் இயற்பெயர் என்ன என்று தெரியாததால் இந்தப் பெயரே உபயோகிக்கப்படுகிறது.

23 தற்காலத் தெலுங்கு எழுத்துக்களை வடிவமைத்தவரும், அம்மொழியை வளர்த்தவரும் நன்னய்ய பட்டாரகர் ஆவார் என்று வரலாறு கூறுகிறது.]

“ஏமண்டி அம்மகாரு, மீரு எந்துகு சிந்த சேஸ்தாரு? ஒஸ்தாரா லேதா? (அம்மா, நீங்கள் என்ன யோசனை செய்கிறீர்கள்? வருகிறீர்களா, இல்லையா)” என்று நரேந்திரன் அவளை நிகழ்காலத்திற்குக்கொண்டு வருகிறான். 

“நரேந்திரா! உன் தாயிடம்கூடத் தாய்மொழியில் பேசமாட்டாயா?” என்று விரக்தியுடன் கேட்கிறாள், குந்தவி. அவள் கண்களில் நீர் கோர்த்து நிற்கிறது. தன் தாயின் கண்களில் நிறைந்து நிற்கும் கண்ணீரைப் பார்க்க நரேந்திரனுக்கு என்னவோ செய்கிறது. 

“அம்மகாரு, மீரு…” என்று தெலுங்கில் ஆரம்பித்தவன், “அம்மா, நீங்க… அலாதண்டி. நாக்கு சால துக்கம் வர்தண்டி…” என்று தெலுங்கில் ஒரு சில தமிழ்ச் சொற்களைக் கலந்து பேசுகிறான். பதிலே பேசாமல் நடக்க ஆரம்பிக்கிறாள், குந்தவி.

“அம்மகாரு, அம்மகாரு மீரு அல ஒத்தண்டி!” என்று தமிழும் தெலுங்கும் கலந்த மொழியில் பேசியவாறே நரேந்திரன் அவளைப் பின் தொடர்கிறான். 

“நான் சோழச் சக்கரவர்த்தி இராஜராஜரின் ஒரே மகள். என் மகன்முன் ஒரு சாதாரணப் பெண்ணைப்போல அழமாட்டேன்!” என்று மனதைத் திடப்படுத்திக்கொண்டு விறுவிறுவென்று நடக்கிறாள், குந்தவி. 

நான்கு குதிரைகள் பூட்டிய இரதம் தயாராக நிற்கிறது. அதில் ஏறிக்கொள்கிறாள். கதவைத் திறந்துவிட்ட தேரோட்டிக்குக்கூட வழக்கமான புன்னகையைக்கூட உதிர்க்காமல், தனது கலங்கிய கண்களை தேரோட்டி பார்த்துவிடக்கூடாது என்று தலையைத் திருப்பிக்கொண்டு இரதத்தில் ஏறி அமர்ந்துகொள்கிறாள். 

மகாராணி அடிக்கடி இப்படி நடந்துகொள்வது தேரோட்டிக்குப் பழக்கமானதால் அவன் மனதை அலட்டிக் கொள்ளவில்லை. 

விழா மைதானத்தை அடையும்வரை குந்தவி வாயைத் திறக்கவே இல்லை. தாயின் இந்தப் போக்கு அவ்வப்போது நரேந்திரனுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினாலும், அவன் உள்ளத்தில் அது பெரிய கலக்கத்தை ஏற்படுத்தவில்லை. தமிழ், தமிழ் என்று தன் தாய் தன்னை வற்புறுத்துவது அவனுக்குப் பிடிப்பதில்லை. தன் தந்தையுடன் சிலசமயம் அதைப் பற்றிப் பேசியிருக்கிறான். 

விமலாதித்தன் தெலுங்கில் அவனிடம் சொன்னது இதுதான்: “நரேந்திரா! இது ஆந்திரநாடு! நீ ஆந்திர அரசனாகப் போகிறாய்! அதற்குத் தெலுங்கு தெரிவது மிகவும் முக்கியம். பெண்கள் எப்பொழுதும் தங்கள் முந்தானையில் ஆண்களைக் கட்டிவைக்கத்தான் முயலுவார்கள். அதற்கு நாம் அனுமதித்துவிட்டால் அரசனாக அரசாட்சி செய்யமுடியாது. அவர்களின் கைப்பாவைகளாகிவிடுவோம். நமக்கு வேண்டுவதை நாம் பெண்களிடமிருந்து பெற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எனவே அவ்வப்பொழுது அவர்கள் சொல்வதற்குச் சம்மதிப்பதுபோல நடிக்கவேண்டும். இல்லாவிட்டால் உன் அம்மாவை நான் அடைந்திருக்கவே முடியாது. போகப்போக இதை நீ நன்றாகப் புரிந்துகொள்வாய்!” என்று விஷமம் கலந்த குரலில் புத்திசொல்வான். நரேந்திரனுக்கு அது புரிந்ததுபோலவும் இருக்கும், புரியாதுபோலவும் இருக்கும். தன்னிஷ்டப்படி நடந்துகொள்ளும்படி தந்தை சொல்கிறார் என்பது மட்டும் அவனுக்குப் புரியும். 

இரதம் பிறந்தநாள் கொண்டாட்டம் நடக்கும் மைதானத்திற்கு விரைகிறது. 

விழாமேடையில் அரசர் சக்திவர்மனும், மகாராணியும் ஒரு பெரிய சிம்மாசனத்தில் ஒருவரருகில் ஒருவர் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார்கள். பலவிதமான விளையாட்டுகளும், கேளிக்கைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. அங்கு குந்தவி காணும் ஒரு காட்சி அவள் மனதைக் கசக்கிப் பிழிகிறது. 

விமலாதித்தன் நடுவில் ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறான். அவன் இடது பக்கத்தில் உள்ள சிம்மாசனத்தில் அவனது இன்னொரு ராணியும், வலது பக்கத்து இருக்கையில் விஜயாதித்தனும் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். இரதம் நிற்கிறது. கண்களில் பறக்கும் தீப்போறிகளைக் கட்டுப் படுத்திக்கொண்டு கீழிறங்குகிறாள், குந்தவி.

***

(தொடரும்)

1 COMMENT

  1. பொன்னியின் செல்வனில் ராஜராஜன்-வந்தியத்தேவன் வாள்போர் ! அதுபோல் இங்கும் ஒரு வாள் போர்! நன்றாக உள்ளது !

    கதை புரவி வேகத்தில் பறக்கிறது !

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 7

ஒரு அரிசோனன் தென்பாண்டி நாடு  காளயுக்தி, வைகாசி 16 - ஜூன் 2, 1018  கொற்கையிலிருந்து நெல்லைக்குச் செல்லும் வழியில் அக்குதிரைகள் விரைந்து கொண்டிருக்கின்றன. ஒரு வணிகனைப் போல உடையணிந்திருக்கிறான், மாறுவேடத்தில் இருக்கும் விக்கிரமபாண்டியன். வேலையாள் போல...

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 6

ஒரு அரிசோனன் ஜயங்கொண்ட சோழபுரம்  காளயுக்தி, சித்திரை 8 - ஏப்ரல் 21, 1018  கேட்பதற்கு இனிமையாக மங்கள இசை ஒலித்துக் கொண்டிருக்கிறது. அது மற்றவர்கள் பேசும் தேவையற்ற சொற்களை முழுகடிக்கிறது. வேதங்கள் ஓதப்படுகின்றன. தேவார, திருவாசகப்...

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 5

ஒரு அரிசோனன் ஜயங்கொண்ட சோழபுரம்  பிங்கள, வைகாசி 24 - ஜூன் 9, 1017  கூரைக்கு மேலே வண்டுகள் ரீங்காரமிட்ட வண்ணம் இருக்கின்றன. முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் சிவாச்சாரி சொல்வதை காதுறுகிறான், இராஜேந்திரன்.  அவனது மனம்...

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 4

ஒரு அரிசோனன் சுந்தர சோழரின் பொன் மாளிகை நள, சித்திரை 15 - ஏப்ரல் 30, 1016 சிவிகை கீழ ரத வீதியைக் கடந்து பராந்தக சோழரின் பொன் மாளிகையை அடைகிறது. நிலவுமொழிக்கு இன்னும் தான் அருள்மொழிநங்கையுடன்தான்...

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 3

ஒரு அரிசோனன் தஞ்சை அரண்மனை ராட்சச, பங்குனி 10 - மார்ச் 24, 1016 கிட்டத்தட்ட முப்பத்தைந்திலிருந்து நாற்பது பேர் அரச ஆலோசனை மண்டபத்தில் அமர்ந்திருக்கின்றனர். இராஜேந்திரனுக்கு இருபுறமும் அவனது மைந்தர்கள் இராஜாதிராஜனும், இராஜேந்திரதேவனும் அமர்ந்திருக்கிறார்கள். இராஜாதிராஜனுக்கு...