பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு – இரண்டாம் பாகம் – அத்தியாயம் 1

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு – இரண்டாம் பாகம் – அத்தியாயம் 1

ஒரு அரிசோனன்

தஞ்சாவூர் சோழர் அரண்மனை

சாதாரண, 28 – பொது ஆண்டு 1010

ஐந்து பாணர்கள் யாழை மெல்ல இசைத்துக்கொண்டிருக்கின்றனர். திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ சோழத்தேவர் கண்களை மூடி அதை இரசித்துக் கொண்டிருக்கிறார். அவர் ஈழப் படையெடுப்பிலிருந்து திரும்பியபோது, யாழ் இசையில் வல்ல சில பாணர் குடும்பங்களைத், தன்னுடன் அழைத்துவந்திருந்தார். அக்குடும்பங்கள் தஞ்சையிலேயே தங்கிப் பெருகின. அரச அலுவல்கள், போர்த்தந்திரங்கள் இவற்றைப் பற்றி அவர் ஆழ்ந்து சிந்திக்கும்பொழுது பாணர்களை அழைத்து யாழை இசைக்கச் சொல்லி, கண்களை மூடிக்கொள்வார். இது கிட்டத்தட்டக் கடந்த பதினைந்து ஆண்டுகளாக நடந்துவருகிறது.

அறுபத்திமூன்று வயதானாலும், அவரது தலையில் நரையின் பாதிப்பு குறைவாகவே இருக்கிறது. வெளியில் வரும்பொழுது மணிமுடி அணிவதற்காகத் தூக்கிக் கட்டப்பட்டிருக்கும் அவரது நீண்ட கூந்தல் தோளுக்கும் சற்று கீழே அலையலையாகத் தொங்குகிறது. தங்கமுலாம் பூசிய அழகான மயில்மஞ்சத்தில் சாய்ந்திருக்கும் அவரது கால்களை அன்புடன் நீவிப் பிடித்துவிட்டுக் கொண்டிருக்கிறான், அவரது அடைப்பக்காரன். அருகில் இருக்கும் வட்டமான கருங்காலி முக்காலியில் அவரது இரத்தினங்கள் பதித்த வீரவாளும், மணிமகுடமும் பட்டுத் துணியின்மேல் இருக்கின்றன. அவருக்குப் பின்னால் நிற்கும் பணிப்பெண் சாமரம் வீசிக்கொண்டிருக்கிறாள்.

திருநீறு மூன்று பட்டைகளாக அவரது நெற்றியில் திகழ்கிறது. நடுவில் குங்குமப்போட்டு ஒளிருகிறது. அதையும் மீறிக்கொண்டு அவரது நெற்றியிலிருக்கும் கோடுகள் சிறிது மேலும்கீழும் சென்று, அவரது ஆழ்ந்த சிந்தனையைக் காட்டுகின்றன. அரியணை ஏறுவதற்குமுன் பெரிதாக வளர்ந்திருந்த மீசையைச் சில ஆண்டுகள் முன் மழித்துவிடச் செய்துவிட்டார். தனது சிலையைத் தஞ்சைப் பெரிய கோவிலில் நிலைநிறுத்த வேண்டும் என்று அனைவரும் விரும்பிய சமயமே அதை நீக்கிவிட்டிருந்தார். வைரம்பதித்த கங்கணம் அணிந்த வலக்கையின் விரல்கள் மடிந்தும் நிமிர்ந்தும் செய்வது — அவர் தன் மனதிலேயே திட்டங்களின் பலவேறு விளைவுகளைக் கூட்டியும் கழித்தும் பார்க்கிறார் என்று அவரைப் பற்றி அறிந்தவர்களுக்கு மட்டுமே புலனாகும் ஒன்றாகும்.

சில வாரங்களுக்கு முன்னர்தான் தஞ்சைப் பெரியகோவிலின் குடமுழுக்கு நடந்து முடிந்திருந்திருக்கிறது. எட்டு ஆண்டுகளாக10 இடைவிடாது உழைத்து, பெரியநாயகனாம் சிவபெருமானுக்கு ஆழ்ந்த பக்தியுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிமிர்ந்து நிற்கவேண்டும் என்ற அவரது ஆசான் கருவூர்த்தேவரின்11 ஆலோசனைப்படிக் கட்டப்பட்ட பெரிய முயற்சி அது. கற்களே கிடைக்காத தஞ்சைக்கு எத்தனையெத்தனை யானைகள் எத்தனையோ காதங்கள் கற்களைக் கொணர்ந்தன! எத்தனை புதுப்புது முறைகள் கையாளப் பட்டன! சைவம் செழிக்கவேண்டும். அத்துடன் பெரியகோவில் கட்டிய சோழர் பரம்பரையின் புகழ் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைக்கவேண்டும் என்ற வேகம் கடைசியில் எப்படி நிறைவேறியது!

—————–

[10. காலம் சென்ற கணபதி ஸ்தபதி அவர்களின் ஆராய்ச்சி.

11.  கருவூர்த் தேவரை இராஜராஜ சோழனின் அரசகுரு என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

தஞ்சைப் பெரிய கோவிலில் ஒரு பழைய ஓவியம் இராஜராஜ சோழரையும், அவருக்கு அருகில் உள்ள கருவூர்த் தேவரையும் காட்டுகிறது. சேர நாட்டின் தலைநகரான கருவூரில் (தற்காலக் கரூர்) வேதியர் குலத்தில் பிறந்து வளர்ந்த அவர் ஒரு சித்தர் என்றும், பழனியில் உள்ள தண்டபாணியின் சிலையை வடித்த சித்தர் போகாின் மாணாக்கர் என்றும் சிலர் கூறுவர். ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பாவில் பத்து பாடல்கள் அவர் இயற்றியது என்றும் சொல்கிறார்கள். அது அவரல்ல,

கருவூர்த் தேவர் என்று பலருக்குப் பட்டங்கள் உண்டு, அவர் இராஜராஜசோழன் காலத்தவரோ, அவரது அரச குருவோ அல்ல என்போரும் சிலர். எப்படியிருப்பினும் இக்கதையின் காரணகர்த்தராக கருவூர்த்தேவர் உருவாக்கப்பட்டிருக்கிறார்.]

விவசாயம் செய்யும் வேளை தவிர மற்ற சமயம் வெறுமனே இருந்தால் மக்கள் தேவையற்ற மனக் கசப்புப்பட்டு, உட்பூசலில், சண்டையிடுவதில் ஈடுபடுவார்கள் என்பதை அறிந்து, அவர்கள் கவனம் வேறெங்கும் சிதறாது இருக்கவேண்டி, தன் தமக்கையார் குந்தவையாரின் விருப்பப்படி சிவனாருக்குக்கு ஆங்காங்கு கோவில்கள் கட்டி, மக்களை இலாபகரமான முறையில் ஒருங்கிணைப்படுத்தி வைத்திருப்பதையும் நினைவு கூர்கிறார்.

இராஜராஜரின் மனம் இன்னும் பின்சென்று தன் தமையன் ஆதித்த கரிகாலன் மிகவும் குரூரமான முறையில் கொலைசெய்யப்பட்டதைப் பற்றியும், கொலையாளி தன் அண்ணன் அருகிலேயே அவனது வீரவாள் இதயத்தில் பதிந்தபடி கிடந்ததையும் பற்றித் தூதுவர்கள் செய்திமூலம் அறிந்து உடனே தான் ஈழத்திலிருந்து திரும்பி வந்ததையும், தன் தந்தை பராந்தக சுந்தரசோழர் அந்த மனவாட்டத்திலேயே நோய்வாய்ப்பட்டு நான்கு ஆண்டுகளில் உயிர் துறந்ததையும், இந்த இக்கட்டான நிலையில் மக்களும் மற்றோரும் தானே அடுத்தபடி சோழ அரியணையைப் பெறவேண்டும் என்று விரும்பினாலும், அரியணைச் சச்சரவில் உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டு, சோழநாட்டின் அமைதி குலைந்துவிடக்கூடாது என்பதற்காகத் தன் சிறியதந்தை உத்தமசோழரையே அரியணை ஏறச்செய்து, பதினைந்து ஆண்டுகள் பொறுத்திருந்ததையும் எண்ணிப் பார்க்கிறார்.

"அமைதியான, இடைவிடாத போரில்லாத, மகிழ்வு நிறைந்த தமிழகம் ஏற்படவேண்டும்! சைவம் தழைக்கவேண்டும், அதற்குச் சோழப்பேரரசு வழிவகுக்க வேண்டும்! எல்லாம் வல்ல என் இறைவா, உமையொருபாகா! தில்லையின் ஆனந்த நடமாடும் கூத்தபிரானே! அதற்கு எனக்கு சக்தியைக் கொடு! கிட்டத்தட்ட முன்னூற்று ஐம்பது ஆண்டுகளாக களப்பிரர்கள்12 ஆட்சிக்குப் பின்னர் மறைந்து கிடந்த சைவப் பொக்கிஷங்களான தமிழ்த் திருமுறைகளை, எனக்குப் பரிசாக அளிக்கத் தில்லைவாழ் அந்தணர்களின் இதயத்தில் ஓதிய எம்பெருமானே! உன்னுடைய அந்த அருளால் தமிழ்நாட்டின் உன் கோவில்கள் அனைத்திலும் தேவாரத்தை ஒலிக்கச்செய்ய என்னை ஒரு கருவியாக்கினாய்!

——————-

[12. பொதுவாகக் களப்பிரர்களின் ஆட்சிக்காலத்தைத் தமிழ்நாட்டின் இருண்டகாலம் என்பர், பலர். முன்னூற்றைம்பது (பொது ஆண்டு 250-600) ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள் என்பதைத் தவிர, அவர்களைப் பற்றி அதிகமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அவர்கள் எந்த ஆதாரங்களையும் விட்டுச் செல்லவில்லையா அல்லது அவர்களது ஆட்சியைப் பற்றிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டனவா

என்றும் தெரியவில்லை. 'களப்பிரர்கள் சைவ, வைணவ சமயங்களுக்கு எதிராகச் செயல்பட்டு சமணம் மற்றும் புத்த சமயங்களைத் தமிழ் நாட்டில் பரப்பினர், ஆகவே, அவர்களைப் பற்றிய ஆதாரங்கள் அனைத்தும் பிற்காலத்தில் சைவ, வைணவ சமயத்தாரால் அழிக்கப்பட்டன,' என்று கூறுவோரும் உள்ளனர். இருப்பினும் இந்தக் கூற்றை கதாசிாியர் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஏனெனில், அடூர் கே.கே. ராமச்சந்திரன் நாயர் இதைத் தகுந்த ஆதாரங்களுடன் எதிர்த்து, கேரளா ஸ்டேட் கசட்டியர், இரண்டாம் பகுதி, முதல் பாகத்தில் 146ம் பக்கத்தில் எழுதியிருக்கிறார். (P. 146 Kerala State gazetteer, Volume 2, Part I By Adoor K.K. Ramachandran Nair.)

பி. தங்கப்பன் நாயரும் தனது புத்தகமான "மயில், இந்தியாவின் நாட்டுப்பறவை" என்ற புத்தகத்தில் களப்பிரர்கள் தமிழ்க்கடவுள் முருகனின் திருவுருவத்தை ஸ்கந்தன், சுப்பிரமணியன் என்று தங்கள் நாணயங்களில் பதித்திருக்கிறார்கள் என்றும் எழுதியிருக்கிறார். (P. 150 and P. 152 The peacock, the national bird of India By P. Thankappan Nair.)]

மேலும் தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் மூன்றான வளையாபதி, குண்டலகேசி, மணிமேகலை ஆகியவை சமண, புத்த சமயக் காப்பியங்களே! சிலப்பதிகாரமும் சமண முனிவரான இளங்கோவடிகளால் எழுதப்பட்டதே. இவற்றை அழிக்காமல் விட்டதிலிருந்து சைவ, வைணவ சமயத்தார் மற்ற சமய நூல்களையும் ஆதாரங்களையும் அழிக்கவில்லை என்பதும், அவர்களால் களப்பிரர்களின் ஆட்சியைப் பற்றிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டது என்று வாதிடுவது சைவத்தையும்

வைணவத்தையும் எதிர்ப்போரின் ஆதாரமில்லாத ஒரு கூற்றே என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.

"மூவேந்தர்களும் தமது பகையை மறந்து, தமிழ்த்தாயின் புதல்வர்களாக இணைந்து வாழவேண்டும்! அதற்கு இந்த இராஜராஜன் வழி ஏற்படுத்திக் கொடுத்து தமிழர்களின் பெருமையை உலகில் நிலைநாட்டினான் என்று வையம் கூறி மகிழவேண்டும்! அந்த அமைதியான, தமிழர் ஒற்றுமை என்னும் சிறிய செடி என்னால் நடப்பட்டு, என் காலம் முடிவதற்குள் தழைத்து வளர்ந்து ஒரு மரமாகிடவேண்டும்! அந்த மரம் ஆயிரம் விழுதுகளூன்றி நிலைபெறும்படிசெய்ய நீதான் இராஜேந்திரன் மனதில் புகுந்து, அவனது போர்வெறியைச் சிறிது குறைக்கவேண்டும். அவனுக்கும் நாற்பது வயதாகிவிட்டது! அரியணை ஏறும் வயது நெருங்கி வந்துவிட்டது. அரசனாகி இப்பேரரசை நன்கு நிர்வகிக்கவேண்டும்!" என்று அவர் உள்ளூர இறைவனை வேண்டிக்கொள்கிறார்.

வெளியில் காலடிச்சத்தம் மெலிதாகக் கேட்கவே, மெல்லக் கண்களைத் திறக்கிறார். அவர் கண் விழித்தவுடன் பழச்சாற்றை தங்கக் கோப்பையில் நிரப்ப ஆரம்பிக்கிறாள் ஒரு பணிப்பெண். மெதுவாகக் கால்களை அடைப்பக்காரனிடமிருந்து விடுவித்துக்கொண்டு மஞ்சத்தில் நிமிர்ந்து உட்கார்கிறார்.

கையை உயர்த்தியவுடன் பாணர்கள் யாழிசையை நிறுத்துகிறார்கள். யார் வரவையோ எதிர்நோக்குபவர்போல எழுந்திருக்கவே, உடனே அவரைச் சுற்றியிருக்கும் அனைவரும் எழுந்திருக்கிறார்கள்.

சக்கரவர்த்தி எழுந்து நிற்பதென்றால் ஒன்று அவரது தமக்கையார் குந்தவைப் பிராட்டியாராக இருக்கவேண்டும், அல்லது ஆசான் கருவூர்த்தேவராக இருக்கவேண்டும் என்று அனைவருக்கும் தெரிந்திருந்ததால், அவர்களும் மரியாதையுடன் எழுந்துநின்று அவர் நோக்கும் திசையை நோக்குகிறார்கள். தங்களுக்குத் தற்பொழுது மட்டுமே கேட்க ஆரம்பித்திருக்கும் காலடிச்சத்தம், கண்களை மூடிக்கொண்டு ஆழ்ந்த சிந்தனையிலிருந்த சக்கரவர்த்தியின் காதுக்கு எப்படிக் கேட்டது என்று வியக்கிறார்கள். இத்தனை வயதிலும் அவரது கூர்மையான கவனிப்பு அவர்களை அயரச்செய்கிறது.

அவரது பட்டத்து ராணி சோழமகாதேவி, அவரது தமக்கையார் வல்லவராயர் வந்தியத்தேவர்தம் பிராட்டியார் ஆள்வார் ஸ்ரீபராந்தகன் ஸ்ரீகுந்தவைப் பிராட்டியார்13, இளவரசன் இராஜேந்திரன் ஆகியோர் புடைசூழக் கருவூர்த்தேவர் உள்ளே நுழைகிறார். அவருக்கு இடப்பக்கத்தில் முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு அந்தணரும் வருகிறார். அவர் கையில் சிவப்புப்பட்டு சுற்றப்பட்ட ஒரு நீண்ட பேழை இருக்கிறது. அது சற்றுக் கனமானது என்பது அவர் அதைத் தூக்கிவரும் விதத்திலேயே தெரிகிறது.

————–

[13. தஞ்சைப் பெரியகோவில் கல்வெட்டு ஒன்று சோழ சாம்ராஜ்யத்தில் மிகவும் செல்வாக்கு நிறைந்த குந்தவைப் பிராட்டியாரை இப்படித்தான் அறிமுகம் செய்கிறது.

இராஜராஜர் கருவூராரை வணங்குகிறார். அவரது தலையில் கையை வைத்து வாழ்த்துகிறார், கருவூரார். மற்றவர்கள் இராஜராஜரை வணங்குகிறார்கள்.]

"அருள்மொழி, நான் உன்னை அரை நாழிகை காக்கவைத்துவிட்டேன். உன் பட்டத்துராணியாரும், மதுராந்தகனும் என்னைப் பிடித்து வைத்துக்கொண்டு உபசரிக்க ஆரம்பித்ததே அதற்குக் காரணம். பட்டத்துராணியாரை மீறிக்கொண்டு வரமுடியுமா? நான் உன்னைச் சந்திக்க வருகிறேன் என்றதும் அவர்களும் உடன் கிளம்பிவிட்டார்கள்." என்கிறார், கருவூரார்.

இராஜராஜசோழச் சக்கரவர்த்தியை அருள்மொழி என்ற அவரது இயற்பெயரால் உரிமையுடன் அழைக்க கருவூராருக்கும், குந்தவைப் பிராட்டியாருக்கும்தான் துணிவும், அனுமதியும் இருந்தன. மதுரைக்குக் காலன் (எமன்) என்ற பொருள் வரும்படி பெயர் கொண்டவனான இராஜேந்திரனையும் கருவூரார், மதுராந்தகன் என்றுதான் அழைப்பார்.

நீண்ட வெண்தாடியும், உருத்திராட்ச மாலை சுற்றிக்கட்டப்பட்ட வெள்ளைத் தலைமுடியும், நெற்றி, உடலெல்லாம் திருநீற்றுப் பட்டைகளும், கழுத்து, மார்பு, கைகளில் உருத்திராட்ச மாலைகளும் அணிந்திருந்த சிவனடியாரான அவரைக் கண்டால் எவருக்கும் உடனே கைகூப்பத்தான் தோன்றும். அவர் ஒரு சிறந்த ராஜதந்திரி என்றும், முன்நோக்காளர் என்றும் — கட்டிடக்கலை வல்லுனர் என்று சிலருக்கும், அதுவும் குறிப்பாக இராஜராஜருக்குத்தான் நன்றாகத் தெரியும். இரசவாதம் தெரிந்தவர் என்று இன்னும் மிகச்சிலர் சொல்லிக் கொள்வதுகூட உண்டு.

பிறகு, கொஞ்சம் நகைச்சுவை கலந்த குரலில், "குந்தவைப் பிராட்டியாருக்குத் தெரியாமல் இந்த சோழ சாம்ராஜ்ஜியத்தில் யாரும் ஓரடிகூட எடுத்து வைத்துவிட இயலுமா? தன் தம்பியை இந்தப் படுகிழவன் ஏதாவது செய்துவிடப் போகிறான் என்ற கவலையில் என்னை முந்திக்கொண்டு உன்னை எச்சரிக்கை செய்துவிடப் பார்த்தார்கள். நான்தான் மதுராந்தகனை உன் அத்தையாரைக் கொஞ்சம் மெதுவாக நடக்கச் சொல்லப்பா, வயதான காலத்தில் அவருக்குச் சமமாக என்னால் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள முடியாது என்று கேட்டுக்கொண்டேன்!" என்று புன்னகை செய்கிறார்.

அவருடைய நகையாடலைக் கண்டு மகிழ்வுடன் புன்னகைக்கிறார், இராஜராஜர். தன் குறிக்கோள் நிறைவேற ஒரு வழியுடன்தான் வந்திருக்கிறார் என்று அவரால் யூகிக்க முடிகிறது.

"தேவர்பெருமானே! உங்களுடைய கேலிக்கு கேவலம் இந்த ஏழைப் பெண்தானா கிடைத்தேன்?! நானுண்டு, எனது சிவத் தொண்டு14 உண்டு என்றுதானே என் வாழ்க்கையைக் கழித்து வருகிறேன்! தாங்கள் அருள்மொழியைச் சந்திக்க வருவது தெரியாமல் சற்று முன்னால் வந்ததற்கு இப்படி ஒரு உள்நோக்கம் கற்பிப்பதன் காரணத்தை நானறியேன், ஐயா! எனக்குத் தெரியாமல் என் தம்பியை ஏதாவது வம்பில் மாட்டிவைக்கப் போகிறீர்களோ என்று இப்பொழுது எனக்கு அச்சம் வருகிறது!" என்று கருவூராரைத் திரும்ப நகையாடுகிறாள் குந்தவை.

——————

[14. குந்தவைப் பிராட்டியார் சிறந்த சிவத்தொண்டர் என்றும், அவர் இராஜராஜ சோழரைச் சிவப்பணியில் ஈடுபடுத்தவும், பல கோவில்கள் கட்ட அவரை உற்சாகமும் படுத்தியவர் என்பது தெள்ளத்தெளிவு. தஞ்சைப் பெரியகோவிலுக்கு இராஜராஜ சோழனின் 29ம் ஆட்சி ஆண்டில் (பொது ஆண்டு 1014) தன்டவனிக்குக் கால் மாற்று மதிப்பு கூடிய மூவாயிரத்து ஐநூறு கழஞ்சு தங்க நாணயங்களும், தன்டவனிக்கு ஒரு மாற்று மதிப்புக் குறைந்த ஆயிரத்து ஐநூறு கழஞ்சு தங்க நாணயங்களும் காணிக்கையாக அளித்தாள் என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. பல சிவன் கோவில்களும், குந்தவை விண்ணகரத்தை (பெருமாள் கோவில்) நடத்திவர சேனாபதி மும்முடிச்சோழ பிரம்மராயரை நியமித்ததாகவும், இது மட்டுமன்றி குறைந்தபட்சம் இரண்டு சமணக் கோவில்களும் கட்டுவித்ததாகவும்சோழர் கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம்.]

இவர்களின் சொற்போரை அரும்பும் புன்னகையுடன் இரசிக்கிறார், இராஜராஜர்.

"அமருங்கள், தேவர்பெருமானே!" என்று தனது மயில்மஞ்சத்தைக் காட்டுகிறார், இராஜராஜர்.

"அருள்மொழி! இந்தத் தங்க மயிலாசனமெல்லாம் உன்போன்று நாட்டைக் கட்டியாளும் அரசர்களுக்குத்தானய்யா உகந்தது! என்மாதிரி துறவிகளுக்கு வெறும் மரக்கட்டை நாற்காலிதான் சரி," என்றபடி மயிலாசனத்திற்கு அருகிலுள்ள மரநாற்காலியில் அமர்ந்துகொள்கிறார், கருவூரார். அவரருகில் பணிவுடன் தன் தந்தை நிற்பது இராஜேந்திரனுக்குப் பிடிக்கவில்லை என்று அவன் நிற்கும் பாணியிலிருந்தே அறிந்துகொள்கிறார், இராஜராஜர்.

அவரது கண்கள் ஒரு கணம் இராஜேந்திரனிடம் சென்று திரும்பியதைக் கவனித்த கருவூரார், "அருள்மொழி, அரசன் யார் முன்னரும் நிற்கக்கூடாது என்று எத்தனை தடவை உனக்கு நான் உரைப்பது? நீ நின்றால் நானும் எழுந்துகொள்ள வேண்டியதுதான்!" என்று எழுந்திருக்க முயல்கிறார்.

"ஐயா, நீங்கள் எனக்குக் கற்றுக்கோடுத்த அரசநீதியை நான் மறக்கவில்லை. நான் மணிமுடி அணிந்து இருந்தால்தான் உங்கள் கூற்று சரியாகும். அப்பொழுது நான் உங்களை வணங்கக்கூட மாட்டேன். கோவிலுக்கு இறைவனை வணங்கச் செல்லும்பொழுதுகூட, உலக நாயகனான சிவபெருமான் கொலுவிருக்கும் சபைக்குச் செல்கிறோம் என்று மணிமுடியைக் கழட்டிவிட்டுத்தான் உள்ளே நுழைபவன் நான். தங்களுக்கு இது தெரிந்திருந்தும், இப்படிச் சொல்வதன் கருத்துதான் எனக்கு விளங்கவில்லை!" என்று பணிவுடன் பதிலளிக்கிறார், இராஜராஜர்.

"விளங்கவேண்டியவர்களுக்கு அது விளங்கிவிடும், அருள்மொழி!" என்று சிறு குழந்தையின் சிரிப்பைத் தன் முகத்தில் படரவிடுகிறார், கருவூரார்.

இராஜேந்திரனுக்கு இவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த பேச்சின் பொருள் விளங்காமல் போகவில்லை. தனது மனநிலையைப் புரிந்துகொண்டமாதிரி இவர்கள் இருவரும் பேசுகிறார்களே, அது எப்படி என்று குழம்புகிறான்.

இத்தனைக்கும் தான் கருவூராரின் முதுகுப் பக்கம் நிற்கிறோம், தனது நினைப்பு இவருக்கு எப்படித் தெரிந்திருக்கக் கூடும் என்று வியக்கிறான். தனது தந்தைக்கும் இவருக்கும் அப்படி என்ன பிணைப்பு இருக்கிறது என்று மூளையைக் கசக்கிப் பிழிந்துகொள்கிறான்.

"அருள்மொழி! நீ இப்படி நின்றுகொண்டிருந்தால் என் காலில் வலியெடுக்கிறதப்பா. நீ நின்றால் மற்றவர்கள் எப்படி அமருவார்கள்? எனக்குச் சீடன் என்று சொல்லிக்கொண்டாலும், அவர்களுக்கு நீ சோழச் சக்கரவர்த்திதானே? அதற்காகவாவது அமர்ந்துகொள். இல்லை, நான் விரைவில் கிளம்பிவிடவேண்டும் என்று நீ நினைக்கிறாயா?"

இராஜராஜ சோழச் சக்கரவர்த்தியை இப்படிச்சாட குந்தவைப் பிராட்டியார் ஒருவரால்தான் இயலும் என்று நேரில் பார்த்திருந்த இராஜேந்திரனுக்கு இது அவ்வளவாகப் பிடிக்காவிட்டாலும், அவருடைய செல்வாக்கு, அவர்மீது தன் தந்தையார் வைத்திருக்கும் மதிப்பு, நன்றாகவே தெரிகிறது.

"ஐயா! நானே உங்களைத் தேடி வரவேண்டும் என்றுதான் இருந்தேன். ஏதேதோ சிந்தனைகளில் ஆழ்ந்து இருந்துவிட்டேன். இதற்காக நீங்கள் என்னைத் தேடிவர வேண்டுமா? சொல்லி அனுப்பியிருந்தால் நான் வந்திருக்கமாட்டேனா?" என்று கரிசனத்துடன் கேட்கிறார், இராஜராஜர்.

"அரசன் இருக்குமிடத்திற்குச் சென்றுதான் அரசாங்க விஷயங்களைப் பேசியாக வேண்டும், அருள்மொழி! அனைவரும் அமர்ந்துகொள்ளுங்கள். உங்களுக்கும் நான் பேசப்போவது தெரிந்தாகவேண்டும்!"

அனைவரும் இருக்கையில் அமர்ந்துகொள்கிறார்கள்.

இராஜராஜர் கையைச் சுழற்றிக் சைகைசெய்யவே, எல்லாப் பணிப்பெண்களும், பாணர்களும் வெளியேறுகிறார்கள். வெளிக்கதவுகள் சாத்தப்படுகின்றன.

"இவன் என்னுடைய உதவியாளன், மாணாக்கன். என் தங்கையின் மருமகப்பிள்ளை. சிவசங்கர சிவாச்சாரி15 என்று இவனுக்குப் பெயர். சுருக்கமாக சிவன் என்று அழைக்கிறோம். இவன் இரண்டு வேதங்களை உரையுடன் கற்றிருக்கிறான். சிவபூசைக்காகக் காரண, காமிக ஆகமங்களை16 முறையாகப் பயின்றவன். தஞ்சைப் பெருவுடையார் கோவில் குடமுழுக்கின் பொது தலைமை சிவாச்சாரியாருக்கு ஆகம முறைமைகளில் வலதுகையாக உதவியிருக்கிறான். இதுதவிர, திருமுறைகள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருக்கிறான். தமிழ் மறையாம் பொய்யாமொழிப் புலவரின் குறளை கசடறக் கற்றவன். பழந்தமிழ் நூற்கள் அனைத்தும் அறிவான். தொல்காப்பியரின் தமிழிலக்கணம் இவனுக்கு அத்துபடி. சித்த மருத்துவமும் கொஞ்சம் தெரியும். அந்தணன் ஆனாலும், அத்திரங்களும், குதிரையேற்றம், யானையேற்றம், வாட்போர், விற்போர் இவைகளிலும் தேர்ந்தவன். பஞ்சதந்திரமும் கற்றவன். போரமைப்பும் புரிந்தவன்," என்று தன்னருகில் நின்று கொண்டிருந்த அந்தணனை அறிமுகப்படுத்துகிறார், கருவூரார்.

——————

[15. ஒரு அந்தணப் படைத்தளபதி இராஜேந்திரனின் கடைசிக் காலத்தில் இராஜேந்திரனுக்காகப் படைநடத்திச் சென்றிருக்கிறார் என்று கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி தன் சரித்திர ஆராய்ச்சியில் எழுதியிருக்கிறார். அந்த அந்தணத் தளபதியே இந்தச் சிவாச்சாரியின் பாத்திரத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

16. ஆகமங்களை இறைவனை அடைவதற்கான வழியைக் கூறும் ஞானநூல் என்று ஆன்றோர் உரைப்பர். இருபத்தெட்டு சைவ ஆகமங்களில் தலையாயது காமிக ஆகமம். இதைச் சிவபெருமானின் திருவடிகளாகக் கூறுவர். காரண ஆகமம் பூசை வழிபாட்டுத் தந்திரங்களையும் (வழிமுறைகள்), மந்திரங்களையும் கூறுகிறது. இது சிவனாரின் கெண்டைக்கால்களாகக் கருதப்படுகிறது. சிவாச்சாரியார்கள் கோவில் இறைவழிபாட்டிற்காக இவ்விரண்டு ஆகமங்களையும் கற்றுத் தேற வேண்டும் என்பது முறைமையாகும்.]

கருவூராரின் அறிமுகத்தைக் கேட்டதும் கோவிலில் மணியடித்து பூசை செய்யும் வேதியன் என்று நினைத்து அலட்சியமாயிருந்தவன் மேல் ஒரு மதிப்புப் பிறக்கிறது, இராஜேந்திரனுக்கு. அவரை ஏறிட்டுப் பார்க்கிறான்.

கிட்டத்தட்ட அவனளவு உயரம், வேதியர்கள் வழக்கப்படி முன்னால் மழித்து பின்னால் கட்டிய குடுமி, அரசர்களைச் சந்திக்கப் போகிறோமே என்று நன்றாக மழிக்கப்பட்ட முகம், ஊடுருவிப் பார்க்கும் கண்கள், எடுப்பான நாசி, உடலைச் சுற்றிப் போர்த்தியிருந்த வெள்ளை நிற உத்தரீயம், கணுக்கால்வரை தாழ்த்துக் பஞ்சகச்சமாகக் கட்டிய வேட்டி, என்ன நினைக்கிறான் என்பது சிறிதும் வெளியில் தெரியாத அமைதியான முகம், நெற்றியில் பளிச்சென்று துலங்கிய திருநீறு, நடுவில் பெரிய குங்குமப் பொட்டு, இந்த மனிதன் தன் வாழ்வில் ஒரு முக்கியமான ஒருவராக இணையப்போகிறான் என்று ஏதோ ஒன்று அவன் உள்மனதில் சொல்கிறது. கருவூராரின் கணீரென்ற குரல் அவனை அவர்பால் திருப்புகிறது.

"முதலாவதாக, உன் அரசபாரத்தைச் சிறிது நீ குறைத்துக்கொள்ள வேண்டும், அருள்மொழி!" திடுதிப்பென்று அவர் கூறியதும் இராஜேந்திரன் ஏதோ சொல்ல வாயெடுக்கிறான். தந்தையின் கண்கள் அவனை வாயை மூடிக்கொள் என்று எச்சரிக்கை விடுத்ததை அடுத்து நாவை அடக்கிக்கொள்கிறான். அதைக் கண்டும், காணாததுபோல மேலே தொடர்கிறார், கருவூரார்.

"ஆமாம், அருள்மொழி! எண்பத்தி இரண்டு வயதாகிய இந்தக் கட்டை முதுமையின் காரணமாக நிலையிழந்து பிதற்றவில்லை. உன் மனதில் வேறோர் இலட்சியம் உருவாகியுள்ளதை நானறிவேன். அதற்கு உன்னைத் ஆயத்தப்படுத்திக் கொள்ளவே மதுராந்தகனுக்கு அரசப்பட்டத்தை அளித்து, உன் பளுவைக் குறைத்துக்கொண்டு, அந்த இலட்சியத்தின்பால் உன் கவனத்தைச் செலுத்தவேண்டும்!" ஒளிவு மறைவில்லாமல் தன் இயல்புப்படி பேசுகிறார், இல்லை, அன்புடன் உத்தரவிடுகிறார், கருவூரார்.

சித்தராகிய அவர், எதற்காகத் தான் சொல்லவந்ததை மறைத்து தேன்தடவிப் பேசப்போகிறார்?

ஒரு நிமிடம் அங்கு பேச்சே எழவில்லை. வாயடைத்துப் போய்விடுகின்றனர் அனைவரும். இராஜேந்திரனுக்குத் தன் காதுகளையே நம்பமுடியவில்லை! தானே இதுவரை நினைத்திராத அரசப்பொறுப்பைக் கருவூரார் எதற்காகத் தன் தந்தையைத் தன்னிடம் தரச்சொல்கிறார் என்று யோசிக்கிறான்.

தமக்கையார் குந்தவைப் பிராட்டியார்தான் அமைதியைக் கலைக்கிறாள்.

"இதைச் சொல்வதற்காகத்தான் என்னை விரட்டப்பார்த்தீர்களா?"

கலகலவென்று நகைக்கிறார், கருவூரார். "ஏனம்மா, பிராட்டியே! உன் வார்த்தையே சரியில்லையே! நீதானே என் தம்பியை வம்பில் மாட்டிவிடப்போகிறீரா என்று கேட்டாய்? இப்பொழுது உன்னை விரட்டப் பார்க்கிறேன் என்று பழிசுமத்துகிறாயே?"

"என் தம்பியிடம் கிழவனாகிவிட்டாய் என்று சொல்லி, அப்படியே நானும் அவனைவிடக் கிழவியாகிவிட்டேன் என்று சொல்வதைக் கேட்டு உங்களுடன் சண்டைபிடிப்பேன் என்பதற்காகத்தான் என்னை விரட்டப் பார்த்தீர்களா என்று கேட்டேன்!" உருண்டோடும் வெள்ளி நாணயங்கள் எழுப்பும் ஒலியுடன் சிரிக்கிறாள்.

இராஜராஜ சோழரைவிட இரண்டரை ஆண்டுகள் மூத்தவளானாலும் அவரைவிட ஓரிரு வயது குறைவாகவே தெரிகிறாள், குந்தவைப் பிராட்டி.

இவர்களுக்கிடையே நடக்கும் நகைச்சுவைச் சொற்போரை அமைதியாக இரசிக்கிறார், இராஜராஜர். உயிருக்கு மேல் அன்பு செலுத்திய கணவர் வந்தியத்தேவரைச் சமீபத்தில் இழந்த குந்தவைப் பிராட்டியாரைத் தஞ்சைப் பெரியகோவிலின் திருப்பணிதான் இவ்வுலகில் தொடர்ந்து இருக்க உதவியது என்று அறிந்தவர் அவர்.

அந்த இழப்பிலிருந்து திரும்பிக் கொணரத்தான் கருவூரார் நகைச்சுவை என்னும் மருந்தைத் தனது தமக்கைக்கு அவ்வப்பொழுது புகட்டிவருகிறார் என்பதும் அவர் அறிந்ததே.

'அருள்மொழி! நானும் பிராட்டியாருமே மாறிமாறிப் பேசிக்கொண்டிருக்கிறோம், ராணி சோழமாதேவியாரும், நீயும் மௌனம் சாதிப்பதைப் பார்த்தால் ஏதோ வயதான கிழவன் பிதற்றிவிட்டுப் போகட்டும் என்பதுபோல…" என்றவரை இடைமறித்து, "ஐயா, என்றாவது உங்கள் பேச்சுக்கு நான் மறுப்பு தெரிவித்திருக்கிறேனா, அல்லது சோழமாதேவியார் என்றாவது அரசு விவகாரங்களில் தலையிட்டதுண்டா? அக்கையாரும், நீங்களும் பேசப்பேச எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாகத் தெரியுமா இருக்கிறது! என் மனக்கவலைகள் எல்லாவற்றையும் மறந்துவிடுகிறேன்!" என்று தன் சம்மதத்தைத் தெரிவிக்கிறார்.

இராஜேந்திரன் வானத்தில் மிதக்க ஆரம்பித்தான். அப்படியென்றால் இனிமேல் எந்த அரசியல் நடவடிக்கைக்கும் தான் தன் தந்தையின் அனுமதி பெறவேண்டாம் என்றுதானே பொருள்? ஆக தன்மீது அவருக்கு முழு நம்பிக்கை பிறந்துவிட்டதல்லவா? இல்லாவிட்டால் தன்முன் இந்தப் பேச்சைக் கருவூரார் கொண்டுவருவாரா?

"அப்படியென்றால் என்னை அரண்மனை விதூஷகன் என்கிறாயா, அருள்மொழி? பரவாயில்லை. அம்மா, பிராட்டியாரே! நமது பணி என்ன என்று உன் தம்பியார் சொல்லிவிட்டார், பார்த்தாயா?" என்று மீண்டும் குந்தவையைச் சீண்டிப்பார்க்கிறார். தம்பி பேச ஆரம்பித்தவுடன், இனி தான் அரசு விவகாரத்தைப் பற்றிக் கலந்துரையாடலாகாது என்று அமைதியாகிவிடுகிறாள் குந்தவைப் பிராட்டி.

இராஜேந்திரன் பக்கம் திரும்புகிறார், கருவூரார். அன்புடன் அவனது தோளில் கைவைத்துத் தடவுகிறார். அவர் முகத்தில் அன்புப் புன்னகை மலர்கிறது. "மதுராந்தகா, உன்னைப்போல் ஒரு யுத்தமல்லன் இனிமேல்தான் பிறந்து வரவேண்டும். கடற்படையை நடத்திச் செல்லுவதற்கு இப்பாரத நாட்டில் உன்னைவிடத் திறமையுள்ளவர் எவர்? சோழப்பேரரசின் காவலனாக நீ இருக்கிறாய் என்ற துணிவில்தானே தஞ்சையில் அருள்மொழி இரவில் நிம்மதியாக உறங்குகிறான்!

"நாட்டுப்பணியைவிட ஒரு சிறந்த பணியை மேற்கொள்ள ஒரு திட்டம் தீட்டித்தருமாறு என்னைப் பணித்தான். அதற்கு அவனுடைய முழுநேரமும் தேவைப்படும். எனவே, அவனுடைய அரசபாரத்தை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும். உனக்கு அந்தத் தகுதி நிறையவே இருக்கிறது. அருள்மொழிக்கு நான் அவ்வப்பொழுது ஏதோ எனக்குத் தெரிந்ததைச் சொல்லிவருவதுபோல உனக்கும் ஒரு பணியாளன் தேவைப்படும் அல்லவா? அதற்காகவே இந்தச் சிவனை என்னுடன் அழைத்துவந்தேன். சோழ சாம்ராஜ்யத்தின் மாமன்னனாகப் போகும் உனக்கு நான் அளிக்கப்போகும் பரிசு, இவன்தான்!" என்று தன் அருகில் பேழையை இறுக்கிக்கொண்டு நிற்கும் தன் தங்கையின் மருமகனைக் காட்டுகிறார், கருவூரார்.

சிரித்துவிடாமலிருக்க இராஜேந்திரன் மிகவும் முனைந்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறான். இந்தக் கோவில் பூசாரி அந்தணன் தனக்கு மந்திரி அளவில் – அரசகுரு அளவில் — ஆலோசனை அளிக்கக் கூடியவனா? பணியாளன் என்று சர்க்கரைக் கலவை தடவினாலும், கருவூராரின் பேச்சின் உட்பொருளை அவனால் புரிந்துகொள்ள முடியாதா?

அவனுடைய உதடுகளின் அசைவிலிருந்து அவனது மனநிலையைப் புரிந்துகொள்கிறார், கருவூரார். அவருடைய கரங்கள் இராஜேந்திரனின் முதுகைத் தடவுகின்றன.  "மதுராந்தகா! நான் இவனைப் பணியாளன் என்று சொன்னதற்கு ஒரு காரணமிருக்கிறது. எந்தப் பணியாளனையும் சோதித்துப் பார்க்காமல் மன்னர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பது நீ அறியாததா? சிவனே! அந்தப் பேழையை என்னிடம் கொடப்பா! மதுராந்தகன் நடத்திப் பார்க்கும் சோதனையில் நீ அவனை நிறைவுபடுத்தினால்தான் என் பேச்சிற்கு மரியாதை இருக்கும்."

அனைவரும் அதிர்ந்துபோகிறார்கள். இதென்ன கருவூராரின் பேச்சு ஒருவிதமாகத் திரும்புகிறது? சுருக்கென்று சினங்கொள்ளும் இராஜேந்திரனை அவர் ஏன் சீண்டுகிறார்? ஒரு வேதியனை இராஜேந்திரன் எப்படிச் சோதனைசெய்வான்? எவ்விதத்தில் சோதனைசெய்வான்? ஏன் இப்படி ஒரு சிவாச்சாரியனை வம்பில் இழுத்துவிடுகிறார்?

தன் உயிரையே கொடுப்பதுபோல மிகவும் தயக்கத்துடன் பேழையை மிகவும் தன்னடக்கத்துடன் ஒரு தூங்கும் குழந்தையைத் தாய் மற்றவரிடம் கொடுப்பது போன்று கருவூராரிடம் கொடுத்துவிட்டுத் தன் தோளின் மேலுள்ள உத்தரீயத்தை எடுத்து இடுப்பில் சுற்றிக்கொள்கிறான், சிவசங்கர சிவாச்சாரி. அவனுடைய திண்தோள்களும், பரந்து இறுகியிருந்த மார்புத்தசைகளும், விம்மிப் புடைத்திருந்த புஜங்களும், அவன் திறமையாக உடற்பயிற்சிசெய்து தனது உடலை நன்கு தேற்றிவைத்திருக்கிறான் என்பதைச் சொல்லாமல் சொல்கின்றன. குடுமியும், உருத்திராட்ச மாலைகளும், அமைதியான முகபாவமும் இல்லாவிட்டால், அவன் ஒரு சிவாச்சாரி என்று யாருக்கும் நம்பிக்கை பிறக்காது, ஒரு போர்வீரன் என்றே நினைக்கத் தோன்றும்.

சிவாச்சாரியின் திண்தோள்களைப் பார்த்தவுடனேயே இராஜராஜருக்குக் கருவூராரின் போக்கு நன்றாகப் புரிகிறது. எனவே மெல்லிய புன்னகையுடன் ஒரு நாடகத்தை ஆவலுடன் ரசிக்கும் மனநிலைக்குத் தன்னைக் கொண்டுசெல்கிறார்.

தனது தம்பியின் நிதானத்தைப் பார்த்துக் குந்தவைப் பிராட்டியும் தனது பதட்டத்தைக் கைவிடுகிறாள். கணவரிடமும், கருவூராரிடமும் பக்திவைத்திருக்கும் சோழமகாதேவி இதுவும் ஒரு அரசுச் சதுரங்க விளையாட்டே என்று உள்ளூரத் தன் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு சிவாச்சாரியையும், தன் வீரமைந்தன் இராஜேந்திரனையும் நோக்குகிறாள்.

கருவூரார், இராஜராஜர், குந்தைவைப் பிராட்டியார், சோழமாதேவி இவர்களை வணங்கிவிட்டுத் தன் அருகில் பணிவுடன் வந்து வணங்கிநின்ற சிவாச்சாரியைப் பார்த்து, "சிவாச்சாரியாரே! உம்மை எனக்குப் பணியாளனாக ஆசான் கருவூரார் அளித்தாலும், நீர் சிவனடியார் என்பதாலும், வேதங்களும், மறைகளும் கற்றுத் தேறிய அறிவாளர் என்றாலும் உம்முடைய சிவப்பணிக்கும், உமது அறிவுக்கும் தலைசாய்க்கிறேன். உம்முடைய இறையறிவு என் அத்தையாருக்கும், அன்னையாருக்குமே தேவைப்படலாம். வேண்டுமென்றால், சிவத்தொண்டில் சிறந்த எனது அத்தையார் அதைப்பற்றிச் சோதித்து அறிந்துகொள்ளட்டும். போர்வீரனாகிய எனக்கு உம்முடைய அரசியல் அறிவிலும், மறத்திலும்தான் விருப்பம். அதையே சோதித்து அறிய விரும்புகிறேன்!" என்று இராஜேந்திரன் கணீறென்ற குரலில் தெரிவிக்கிறான்.

"தங்கள் சித்தம், என் பாக்கியம் இளவரசே! உலகத்தில் இருக்கும் எல்லா அறிவையும் தன்னுள் அடக்கிய கலைமகளே இன்னும் கற்கும்பொழுது, மறத்தையே ஒரு கலையாகப் பயின்று, அதை இவ்வுலகத்திற்கு எடுத்துக்காட்டும் ராஜதந்திரியான, மாவீரரான, உங்களின் கேள்விக்கு என்னால் இயன்ற அளவு பதில் இயம்புகிறேன். குற்றம், குறையிருப்பின், பெரியோரான தாங்களும், சக்கரவர்த்தி அவர்களும், எனது குருதேவரும் பொறுத்தருளிக் குறைநீக்கி அருளவேண்டுமாறு பிரார்த்திக்கிறேன்!" அவனது குழைவு இயல்பானதா, அல்லது கிண்டலா என்று அவனது முகபாவத்திலிருந்து இராஜேந்திரனால் கண்டுபிடிக்க இயலவில்லை. ஆயினும், அரசவையில் பேசத் தெரிந்துவைத்திருக்கிறான் என்று அவன்பால் பரிவு பிறக்கிறது.

நிமிர்ந்து அமர்ந்து, இவர்களின் சொற்போரின் துவக்கத்தை உற்சாகத்துடன் கவனிக்கிறார், இராஜராஜர்.

'ஒரு நாடு எப்படி இருக்கவேண்டும்? அதன் இலக்கணம் என்ன? சிவாச்சாரியாரே, தகுந்த சான்றுடன் விளக்கும்!" முதல் கேள்விக் கணையைத் தொடுக்கிறான், இராஜேந்திரன்.

"உண்பதற்கு எதுவும் இல்லையே, அப்படியிருக்க அடுத்த வேளைக்கு எதை உண்ண இயலும் என்று குடிமக்களை வருத்தும் பசி — அடங்காமல் மக்களை துன்புறுத்தும் பிணிகள் – அச்சுறுத்தும் பகை – ஆகிய இவை யாவும் இல்லாமல் — சுதந்திரமாக இருப்பதற்கு மற்ற எந்த வெளிநாடுகளின் துணையும் தேவைப்படாது இயங்குவது எதுவோ, அதுதான் நாடு எனப்படுவது என்று செந்நாப்புலவர் தனது திருக்குறளில் இயம்பியுள்ளார், அரசே!" என்று பளிச்சென்று பதிலளிக்கிறான், சிவாச்சாரி.

தலையை ஆட்டிய இராஜேந்திரனிடமிருந்து, "அரசன் ஒற்றரிடமிருந்து வரும் செய்தி உண்மையா என்று எப்படி அறிவது?" அடுத்த கேள்வி பிறக்கிறது.

"ஒரு ஒற்றனை எந்தச் செய்தியை அறிந்துவர அனுப்புகிறோமோ, அதே செய்தியை அறிந்துவர, அந்த ஒற்றனுக்குத் தெரியாமலேயே மற்றோரு ஒற்றனை அனுப்பித் தெரிந்து கொள்வதே முறை என்று வள்ளுவப் பெருமான் கண்ணோட்ட அதிகாரத்தில் அறிவுறுத்தி இருக்கிறார்!"

"அரசனிடம் ஒரு பணியாளன் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?"

"அரசனிடம் உண்மையே பேசவேண்டும். அரசன் விரும்புவதை மட்டுமே செய்யவேண்டும். எப்பொழுதும் அரசனின் நன்மைபற்றி மட்டுமே சிந்திக்கவேண்டும். அரசனைச் சுற்றி நடப்பதைக் கண்டும் காணாத குருடனாகவும், அரச இரகசியங்களைக் கேட்டாலும் காதில் விழாத செவிடனாகவும், அரசர் செய்வது தகாத செயலாகவே இருந்தாலும் அதைக் காணாத குருடனாகவும் இருக்கவேண்டும் என்று பஞ்சதந்திரம் தெரிவிக்கிறது."

"அரசனிடம் ஒரு பணியாளன் எப்படிப் பழக வேண்டும்?"

"ஒரு நெருப்புடன் பழகுவதைப்போல, அரசே! நெருப்பின் கதகதப்பும், உணவைச் சமைக்கும் திறனும், ஒளியும் தேவைப்பட்டாலும், அந்நெருப்பை மிகவும் நெருங்கிவிட முடியாதல்லவா? நெருங்கினால் சுட்டுவிடுமல்லவா? அதைப்போலத்தான் அரசனின் உறவும் ஒரு பணியாளனுக்கு இருக்க வேண்டும்."

"ஒரு அரசனின் அறிவு எப்படி இருக்கவேண்டும்?"

"ஒரு அரசனுக்கு பலரிடமிருந்தும் பலவிதமான தகவல்கள் வந்தவண்ணம் இருக்கும். அவற்றின் பொருள் எப்படி இருந்தாலும், அவை ஏன் சொல்லப்படுகின்றன, எப்படிச் சொல்லப்படுகின்றன, எந்த விளைவை எதிர்நோக்கி அவை சொல்லப்படுகின்றன, அந்தச் செய்திகளை தெரிவிப்பதனால் தெரிவிப்பவருக்கு ஆதாரம் என்ன, அந்தச் செய்திகளின் அடிப்படையில் செயல்புரிந்தால் அதன் விளைவுகள் என்ன என்று பலவாறு ஆராய்ந்து, அதன் உண்மையான நோக்கத்தைத் தெரிந்துகொள்வதுதான் அரசனுடைய அறிவாகும்."

"ஒரு அரசன் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும்?"

"கடவுள் பற்றின்மை, பொய்மை, சினம், கவனமின்மை, ஒத்திப்போடுதல், கற்றோரைப் புறக்கணித்தல், சோம்பேறித்தனம், ஐம்புலன்களுக்கு அடிமையாதல், செல்வத்தின்பால் மோகம், வழியறியாத ஈனர்களின் அறிவுரை, முடிவெடுத்த செயல்களை நிறைவேற்றாமை, இரகசியங்களைக் கட்டிக்காப்பதில் கவனக் குறைவு, நன்னெறியைப் பின்பற்றாமலிருத்தல், தராதரம் இல்லாதவர்களுக்கு மரியாதை அளித்தல் என்ற இந்தப் பதினான்கையும் ஒரு அரசன் தவிர்க்கவேண்டும் என்று இராமாயண மகாகாவியத்தில் இராமர் தன் இளையோனான பரதனுக்கு அறிவுரை கூறுகிறார்!"

கிட்டத்தட்ட ஒரு நாழிகை நேரம் இராஜேந்திரனின் கேள்விகளும், அதற்கு சிவாச்சாரியுடைய பதில்களும் தொடர்கின்றன. அனைவருக்கும் நேரம் செல்வதே தெரிவதில்லை. கடைசியில் இராஜேந்திரனின் முகத்தில் புன்னகை மலர்கிறது.

"சிவாச்சாரியாரே! உம்முடைய அரசியல் அறிவை மெச்சுகிறேன். நீர் அரசியலைக் கரைத்துக் குடித்தவராகவே தென்படுகிறீர். நான் இனி போர்த்தந்திரம் பற்றி கேள்விகளைத் தொடரவிரும்புகிறேன்!" என்று ஆரம்பிக்கிறான்.

இராஜேந்திரன், சிவாச்சாரி இருவரின் மேலும் இராஜராஜருக்கு மதிப்பு வர ஆரம்பிக்கிறது. தான் வளர்த்த சோழ சாம்ராஜ்ஜியத்தை வளரவைப்பான், சோழர்தம் புகழைப் பரப்புவான் தன் மைந்தன் என்ற மகிழ்ச்சி அவர் நெஞ்சத்தை நிரப்புகிறது.

"சிவாச்சாரியாரே! போர் அணிவகுப்பை எப்படி நடத்திச்செல்ல வேண்டும்? எந்தெந்தப் படைகள் எங்கெங்கு நிறுத்தப்படவேண்டும்?" இது இராஜேந்திரனின் முதற்கேள்வி.

"இளவரசே! அது போர் நடக்கும் இடத்தையும் எதிரியின் போர்த்திறனையும் பொறுத்தது. சமவெளியில், சமமான படையுடன் போரிட்டால், முதலில் வில்லாளிகளை வைத்து சரமாரியாக அம்பெய்து எதிராளிக்கு அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தவேண்டும். அதன் பின் நம் படைகள் முன்னேறும்பொழுது ஈட்டியெறிபவர்கள் மூலம் பகைவரின் அணிவகுப்பை நிலைகுலையச்செய்வது சிறந்தது. அதன் பின்னர், யானைப் படைகள் எதிராளிகளின் காலாட்படைகளையும், அதற்குத் துணையாக வரும் குதிரைவீரர்களையும் துவம்சம் செய்யவேண்டும். நம் யானைப் படைகளுக்கிடையில் குதிரை வீரர்களும், காலாட்களும், அணி வகுத்திருக்க, வில்லாளர்கள் சற்றே பின்வாங்கி அவர்களுக்கு உதவியாக சரமாரியாக அம்பெய்து, எதிரிகளின் அணிவகுப்பில் குழப்பத்தை உண்டாக்கி, அவர்கள் சிதறி ஓடும்பொழுது, அவர்களுடைய ஏனாதிகளைத் தந்திரமாகக் கொல்லவேண்டும். அதனால் எதிரிப்படை தலைவர்களில்லாமல் தடுமாறும்."

இராஜராஜருக்கே சிவாச்சாரியனின் அணிவகுப்பு முறை விந்தையாகப்படுகிறது. அதை எதிர்பார்த்ததுபோல, "இதை சீனநாட்டின் மிகப்பெரிய படைத்தளபதி ஒருவரின் போர்க்கலையிலிருந்து17 எடுத்து, நம் நாட்டிற்கு உகந்தபடி மாற்றிச் சொல்லியிருக்கிறேன்," என்று விளக்கம் கொடுக்கிறான்.

"இது விந்தையாகத்தான் இருக்கிறது. ஏதாவது ஒரு படையெடுப்பில் இதைப் பயன்படுத்திப் பார்க்கவேண்டும். அது போகட்டும். நீர் பல சாத்திரங்களும் கற்றுத் தேர்ந்தவர் என்று தெரிந்துகொண்டேன். நீர் வெறும் பேச்சுப் புலியா அல்லது, பேச்சைச் செயல்படுத்தும் திறன் உடையவரா என்று நான் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கு உம் வாள்வீச்சுத் திறமையைக் காட்டும்!" என்று சுவற்றில் மாட்டியிருந்த இரண்டு வாள்களை எடுத்து, ஒன்றைச் சிவாச்சாரியிடம் தூக்கி வீசுகிறான், இராஜேந்திரன்.

——————

[17. சுன் ட்சு (Sun Tsu) என்னும் சீனப் பேரரறிஞர் எழுதிய போர்க்கலை (The Art of War) என்னும் புத்தகத்தையே சிவாச்சாரி குறிப்பிடுகிறான்.]

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com