பொன்னியின் செல்வனின் தமிழ்க் கனவு – இரண்டாம் பாகம் – இடைச்செருகல் தொடர்ச்சி….

பொன்னியின் செல்வனின் தமிழ்க் கனவு – இரண்டாம் பாகம் – இடைச்செருகல் தொடர்ச்சி….

ஒரு அரிசோனன்

இடைச்செருகல் தொடர்ச்சி….

ஆ. கீழக் கடம்பூர் மாளிகை

சுக்கில, ஐப்பசி 8 – அக்டோபர் 23, 9696

. . . வீரபாண்டியனின் தலையை ஈட்டியில் சொருகிக்கொண்டு சென்று அதை வெற்றி ஊர்வலமாக தஞ்சைக்கு எடுத்துச்சென்றது மட்டுமல்லாமல், அதைத் தன் வெற்றிக்கு அறிவிப்பாக, பாண்டிநாட்டின் வீழ்ச்சிக்கான சின்னமாக கம்பத்தில் ஆதித்த கரிகாலன் நட்டுவைத்தது வெற்றிமாறனின் இரத்தத்தைக் கொதிக்கவைத்தது. காக்கைகளும் கழுகுகளும் வீரபாண்டியனின் மிச்சமிருக்கும் கண்ணையும் கொத்தித் தின்பது அவனுடைய கண்ணையே அவைகள் கொத்தித் தின்னுவதுபோல இருந்தது. . . 

. . . "இன்று எனக்கு வெற்றி கிட்டிவிடும். இதற்காக எத்தனை ஈனச் செயல்களைச் செய்யவேண்டி வந்தது? அரசரின் வெட்டப்பட்ட வலது கையிலிருந்த முத்திரை மோதிரத்தை உபயோகித்துப் பாண்டிநாட்டின் முத்துக்களைப் பெற்று,  நாட்டைக் காட்டிக்கொடுக்கும் ஐந்தாம்படைத் துரோகிகளைக் (தனக்கு உதவினாலும் அவர்களது நாட்டிற்கு அவர்கள் துரோகிதான் என்பது அவன் கருத்து!) கண்டுபிடித்து, அவர்களுக்கு அந்த முத்துகளைக்கொடுத்து, அவர்களின் பொருளாசையைப் பயன்படுத்தி, அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டி வந்திருக்கிறதே?" அவன் மனம் தன் திட்டத்தையும், அது நிறைவேறும் அளவுக்கு வந்திருப்பதையும் நூறு தடவை திரும்பத் திரும்ப மனதில் ஒத்திகை பார்க்கிறது. . .  

. . . தஞ்சையில் மிகவும் மதிப்பு வாய்ந்த ரவிதாச பஞ்சவ பிரம்மாதிராசர்7 நட்புக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பாத்திரமானான். அதற்கு அவன் பாண்டிநாட்டிலிருந்து கொண்டுவந்த முத்துக்கள் பெரிதும் உதவின. அவர்கள் மூலமாக ஆதித்த கரிகாலனின் நடவடிக்கைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்து கொண்டான். தான் பாண்டிய நாட்டான், தனது எண்ணம் ஆதித்த கரிகாலனை அழிப்பது என்று மற்றவர்க்குத் தெரியாமல் நடந்துகொண்டான். அதற்காக எப்பொழுதும் ஆதித்த கரிகாலன் புகழை ரவிதாசனின் காது புளித்துப்போகும்வரை புகழ்ந்து தள்ளினான். 

————————————

6 இராஜராஜன் சோழன் காலத்துக் கல்தவெட்டுகளிலிருந்து ஆதித்த காிகாலன் கொலைசெய்யப்பட்ட ஆண்டு 969ஆக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

7 ஆதித்த காிகாலனைக் கொலைசெய்ததில் சம்பந்தப்பட்டவர்களான 'துரோகிகளான ரவிதாசனாகிய பஞ்சவன் பிரம்மாதிராசன், அவன் உடன்பிறப்புகள் 'சோமன் சாம்பவன்' முதலியவர்களைத் தண்டித்ததாகக் உடையார்குடிக் கோவில் கல்வெட்டு, தெரிவிக்கிறது. அவர்கள் எவ்விதத்தில் கொலையில் சம்பந்தப்பட்டிருந்தார்கள், ஏன் அவர்களுக்கு மரணதண்டனை கொடுக்கப்படவில்லை என்பதுபற்றி எந்தத் தகவலும் இல்லை. இது சாித்திர வல்லுனர்களுக்குப் பெரிய புதிராகவே இருந்துவருகிறது.

இதனால் இரகசியமாக இருக்கவேண்டிய ஆதித்த கரிகாலனின் தனிப்பட்ட போக்குவரத்து விபரங்களை அவனெதிரிலேயே அவர்கள் பேசத் தொடங்கினார்கள். ஆதித்த கரிகாலனுக்கு ஆடலிலும் பாடலிலும் வல்ல ஒரு பெண்ணுடன் நட்பு இருக்கிறது. அவளைச் சந்திக்க அவன் அடிக்கடி வந்துபோவான் என்று தெரிந்துகொண்டான். அவள் கோவிலுக்கு அருகிலுள்ள மாளிகையில் வசிப்பதையும் அறிந்துகொண்டான். மாறுவேடத்தில் சென்று அந்தப் பெண்ணின் வீட்டில் பணியாளனாகவும் வேலைக்குச் சேர்ந்துவிட்டான். அடுத்தநாள் ஆதித்த கரிகாலன் வரப்போகிறான் என்ற சேதி தெரிந்தது. 

நடனமாடும் பெரிய மேடையை அலங்கரித்துக் கண்ணுக்குக் குளிர்ச்சியாக மலர்களையும், மாலைகளையும் கட்டும் பொறுப்பு அவனுக்குக் கிடைத்தது. இருப்பினும் மாளிகைக்கு ஆதித்த கரிகாலன் எப்படி வருவான் என்று தெரியாமல் தவித்துக்கொண்டு இருந்தான். 

யோசித்தவாறே மேடையை அலங்கரிக்கும்போது யாரோ நடந்துவரும் சந்தடி கேட்டது. சட்டென்று அருகிலிருக்கும் மிகப்பெரிய பூக்கூடைக்குப் பின்னால் மறைந்துகொண்டான். 

கதவு திறக்கும் ஓசை கேட்கவே, இங்கு கதவொன்றும் கிடையாதே என்று நினைத்தவனுக்குத் திகைப்பூட்டும் வகையில் ராதையும் கண்ணனும் சேர்ந்திருக்கும் ஒரு பெரிய ஓவியம் பக்கவாட்டில் நகர்ந்து, ஒரு சுரங்கப் பாதையின் கதவு அது என்று காட்டியது. இரண்டு சோழவீரர்கள் உருவிய வாள்களுடன் வெளியே வந்தார்கள். "பொன்னா, இப்படியா முன்யோசனை இல்லாமல் சுரங்கக் கதவைத் திறப்பாய்? யாருக்காவது தெரிந்தால் என்னாவது?" என்று பின்னாலிருந்த வீரன் திட்டினான். 

"என் வாளுக்கு இரையாக வேண்டியதுதான்!" என்று கடகடவென்று சிரித்தான், பொன்னன். 

"நாளை இளவரசர் வரப்போகிறாரே! அவரைப் பாதுகாக்க ஐம்பது வீரர்களைக் கண்ணைக்கட்டி உள்ளே கொண்டுவர வேண்டும் இல்லையா? அதற்காகச் சுரங்கவழி சரியாக இருக்கிறதா, கதவு சுலபமாகத் திறக்கிறதா என்று பார்க்கவேண்டாமா? அவர்கள் ஒளிந்துகொள்ளும் இடங்களைத் தேர்ந்தெடுப்பது நமது பொறுப்பல்லவா?" என்றபடி அவன் கண்கள் இங்குமங்கும் சுழண்றன. 

"பொன்னா, இளவரசர் உல்லாசச் சரசமாடும் பொழுது அதை மறைந்திருந்து பார்ப்பது முறையா?" என்று கேட்கவே, "மடையா, இவர் இந்த மேடையிலா சரசமாடப்போகிறார்? நாம்தான் இங்கு காவல் காப்போம். அவர் வேறுவழியாகத் தனி அறைக்குச் சென்றுவிடுவார்," என்று பதிலளித்தான் பொன்னன். 

"எந்த அறை?" என்றவுடன் பளேர் என்று அவன் கன்னத்தில் விழுந்த அறை வேட்டுச் சத்தமாக எதிரொலித்தது. 

"என்னை என்ன ராஜத்துரோகி என்றா நினைத்தாய், உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு?" என்று சீறினான் பொன்னன். "எந்த அறை என்று கேட்டதற்குத்தான் உனக்கு இந்த அறை! இளவரசரின் ரகசியங்கள் அவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடாது! அதைப் பற்றி நீ கேள்வி கேட்கவும் கூடாது!" 

கன்னத்தைத் தடவிக்கொண்டே பொன்னனின் பின்னால் சென்றான், இரண்டாவது வீரன். மூச்சு விடுவதைக்கூட சில நிமிஷங்கள் நிறுத்திவைத்தான், வெற்றிமாறன். 

மேடையைச் சுற்றிப்பார்த்த வீரர்கள் சுரங்கப் பாதையை மூடிக்கோண்டு சென்றுவிட்டார்கள். 

பாதுகாப்புக்கு வரும் ஐம்பது வீரர்களைச் செயலிழக்கச் செய்யவும், ஆதித்த கரிகாலன் சல்லாபம் செய்யும் அறைக்கு வரும்வழியைக் கண்டுபிடிக்கவும், வெற்றிமாறனின் மனம், ஒரு திட்டம் தீட்டியது. . . 

ளவரசே! இந்த ஏழைப் பெண்ணை இப்பொழுதெல்லாம் நீங்கள் பார்க்கவருவது மிகவும் குறைந்துவிட்டது!" என்று குழைகிறாள், குசுமவல்லி. ஆதித்த கரிகாலனுக்கு திருமணப்பேச்சு மும்முரமாக நடக்கிறது என்று அவள் காதில் விழுந்ததுதான் இந்தக் குழைவுக்குக் காரணம். 

ஆட்டக்காரியான தன்னை அவன் திருமணம் செய்துகொள்வான் என்று நினைப்பது கனவில்கூட நடக்காத ஒன்று என்று அவளுக்குத் தெரியாதா என்ன?! குழைந்து பேசினால்தான் திருமணமானாலும் அவனது தயவு அவளுக்குக் கிடைக்கும் என்றுதான் அப்படிக் குழைகிறாள். தான் கேட்பது ஒன்றையும் காதில் வாங்காமல் ஏதோ ஆழ்ந்த சிந்னையில் ஆதித்த கரிகாலன் இருப்பது அவளுக்குத் தெரியாமலில்லை. 

"இளவரசே! நான் கண்ணெதிரில் வண்ண மெழுகுப் பாவையாக உங்களுக்காகக் கரைந்து உருகுவது உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? உங்கள் காதுக்கு இனிமையாக யாழை மீட்டட்டுமா, அல்லது கண்ணுக்கு விருந்தாக புதிதாகச் சாவகநாட்டு நடனம் ஆடட்டுமா?" என்று சர்க்கரையாகக் கரைகிறாள், குசுமவல்லி. 

"யாழிலும், சாவகநாட்டு நடனத்திலும் என் நாட்டம் செல்லவில்லை, குசுமா!" என்று எரிச்சலுடன் பதிலிறுக்கிறான் ஆதித்த கரிகாலன். 

"பின் இளவரசருக்குப் பிடித்தது எதுவோ அதை என்மீது கருணைகூர்ந்து தெரிவிக்கக்கூடாதா? உங்கள் குசுமவல்லி அதை நிறைவேற்றிவைக்க மாட்டாளா?" சொற்களில் தேனைக் குழைக்கிறாள். 

"போர் முரசம் கொட்டு! கொற்றவையின் வெறியாட்டம் ஆடு! அதுதான் இப்பொழுது எனக்குத் தேவை!" என்று வெடிக்கிறான் ஆதித்த கரிகாலன். 

"இளவரசே! உங்களைக் கண்டாலே அகிலமும் நடுங்குகிறது. அனைவரும் ஓடி ஒளிந்துகொள்கிறார்கள். அப்படியிருக்க இன்னும் ஏன் இந்தப் போர்வெறி உங்களுக்கு? போர்தான் புரிய வேண்டுமென்றால் என்னுடன் சல்லாபப் போர் புரிந்துபாருங்களேன்! அதில் மட்டும் உங்களுக்கு வெற்றியே கிடைக்காது!" என்று அவன் கவனத்தைத் தன்பக்கம் ஈர்க்க முயற்சிக்கிறாள். 

"குசுமா! பாண்டியற்கு உதவிய மகிந்தனின் கொட்டத்தை அடக்க என் தம்பி அருள்மொழி8 ஈழத்திற்குப் படையெடுத்துச் சென்றிருக்கிறான். காஞ்சிப் பொன்மாளிகையில் அரசர் குடிபுகுந்திருக்கிறார். அவருக்குத் துணையாக ஈராயிரவன் பல்லவராயன் வடக்கே படையெடுத்துச் சென்றிருக்கிறான். நான் மட்டும் தஞ்சையில் ஒரு பெண்ணிடம் போர்செய்யும் அளவுக்கு வந்திருக்கும் நிலையைப் பார்த்தால் பத்து ஆண்டுகளுக்குமுன் வீரபாண்டியன் தலையைத் துண்டித்து அவன் மகுடம், வீரவாள், பரம்பரைச் சொத்தான முத்துமாலையைக் கொண்டுவந்து சோழ அன்னைக்கு வெற்றி வாகையை அர்ப்பணித்தவனா நான் என்று எனக்கே ஐயமாக இருக்கிறது!" என்று வெதும்பலுடன் சொல்கிறான். 

"இளவரசே! தவறாகப் பேசியிருந்தால் இந்த அடியாளை மன்னித்துவிடுங்கள். தங்கள் வாளைத் தூக்கி எடுக்கவும் பலமில்லாதவள், நான். உங்களை மனவேதனைப் படுத்தியதற்கு என்னைக் கண்டம்துண்டமாக வெட்டி எறிந்துவிடுங்கள்!" என்று இலேசாக விசும்ப ஆரம்பிக்கிறாள். வெட்டும் வாளுக்கு மசியாத வீரன், அணங்கையரின் கண்ணீருக்கு மசிவான் என்பது அவள்கற்ற கலையாயிற்பற! 

அவளைத் தேற்ற முற்படுகிறான், ஆதித்த கரிகாலன். அவனது எரிச்சல் தணிய ஆரம்பிக்கிறது. அவளைத் தன்னோடு சேர்த்து இழுத்து அணைத்தவன், "குசுமா! நீ ஏதாவது புதிய நறுமணப் பூச்சையோ, அல்லது வழக்கத்துக்கு மாறான செஞ்சாந்துக் கலவையைப் பூசியிருக்கிறாயா? என்னைக் கிறங்கவைக்கிறதே?" என்று கேட்கிறான். 

"இல்லையே! இன்று புதிய அகில் கட்டைகள் வந்தன. அதன் மணம் இளவரசருக்குப் பிடிக்கிறதா? இதோ பாருங்கள்!" என்று அறையின் மூலையில் புகைந்து கொண்டிருந்த அகில் கட்டையைக் காட்டுகிறாள். 

"இது அகில் புகையாகத் தெரியவில்லை. ஏதோ புரியாத மணமாக இருக்கிறது. என் தலை கிறுகிறுக்கிறது!" என்று அவள் தோளில் சரிகிறான் ஆதித்த கரிகாலன். அவனது பாரம் அவளை அழுத்துகிறது. 

—————————————

8 இராஜராஜ பசாழச் சக்கரவர்த்தியின் இயற்பெயர். தன் இளமைக்காலத்தில் ஈழத்தில் போரிடச் சென்றார்

"ஆமாம் இளவரசே! இப்பொழுதான் என் நாசியையும் அந்த மணம் கவருகிறது. அது உங்களது மேனியிலிருந்துதான் வருகிறது என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன்…" என்று குழைகிறாள் குசுமவல்லி. 

அப்பொழுது தடதடவென்று காலடிச் சத்தம் கேட்கிறது. 

"யா..ழ்ழ..துஉஉஊ?" ஆதித்த கரிகாலனுக்கு நாக்குப் புரளுகிறது. கேள்வி கேட்கவே மறுக்கிறது. மெதுவாக மஞ்சத்தில் கையை ஊன்றி எழ முயற்சிக்கிறான். கை வழுக்குகிறது. 

சுவற்றுக்கு மேலிருக்கும் சாளரம் (ஜன்னல்) தெறித்து விழுகிறது. அதிலிருந்து வீசப்பட்ட கயிறைப் பிடித்தவாறே. வெற்றிமாறன் விறுவிறுவென்று குரங்கைப்போல இறங்குகிறான். 

"யாரங்கே! எங்..கே..? என..து உஉஉட்டஐ வாஆஆஆள்ள்ள்ள்ள்?" 

குழறியபடியே எழுந்து அருகிலிருந்த மேசையின் மேலிருக்கும் உடைவாளை எடுக்கமுயலும் ஆதித்த கரிகாலனை முந்திக்கொண்டு வெற்றிமாறன் அவனது உடைவாளை எடுத்துச் சுழற்றுகிறான். 

குசுமவல்லியின் அறையில் இருந்த அகில் கட்டைகளில் நரம்புகளை செயலிழக்க வைக்கும் மயக்க மருந்தைத் தடவிவைத்தவன் அவன்தான். 

அந்த அறைக்கதவை உடைத்துத் திறப்பது எளிதில் முடியாத ஒன்று தெரிந்தே சரியாகப் பொருத்தாத சாளரத்தைத் தேர்ந்தேடுத்து, அதைக் காலையிலேயே கழட்டிவைத்துவிட்டான். 

தட்டுத் தடுமாறி எழுகிறான், ஆதித்த கரிகாலன். அவனது கைகளும், கால்களும் அவனுக்கு ஒத்துழைக்க மறுக்கின்றன. கால் வில்லாக வளைகிறது. 

"செயலிழந்திருந்த என் அரசருக்கு வீரமரணம் கிட்டாதவாறு அவரது தலையைத் துண்டித்த கோழையே! வாள்பிடிக்கும் வலக்கை துண்டுபட்டு, ஒரு கண்ணையும் இழந்து, உடலில் பட்ட புண்களின் நோவினாலும், சுரவேகத்தாலும் களைத்துக்கிடந்த என் தலைவரின் தலையைப் பலி ஆட்டைப்போல் துண்டித்தது மட்டுமல்லாமல் காக்கைகளுக்கும், கழுகுகளுக்கும் இரையாகுமாறு நட்டும் வைத்தாய்! ஒரு மாவீரனுக்கு நீ தரும் மரியாதையா அது? குறைந்தபட்சம் ஒரு சுத்த வீரன் மற்ற வீரனுக்குக் காட்டும் மரியாதைகூட உன்னிடம் இல்லையே, சிறுவா!" கோபத்தில் அவனது வெற்றிமாறனின் குரல் உயர்கிறது. 

"நீஈஈஈ ஒருஉஉ பாஆஆண்டியப் பஅஅஅதராஆஆஆ…?" குழறுகிறான் ஆதித்த கரிகாலன். இனம் புரியாத கோபம் அவன் தலைக்கேறுகிறது. வெற்றிமாறனைக் கட்டிப்பிடித்து மற்போரிட அடியெடுத்து வைத்தவன், கால் தடுமாறிக் கீழே விழுகிறான். 

"என் மன்னர் எப்படித் தன்னைக் காத்துக்கொள்ளப் போர்புரிய இயலாத நிலையில் இறந்தாரோ, அப்படித்தான் உன் சாவும் என் கையால் உனக்குக் கிடைக்கப்போகிறது!" என்று அவன் தலையில் வாளின் கட்டையால் வெற்றிமாறன் பலமாக அடிக்கிறான். சாக்குமூட்டையாகச் சரிகிறான், ஆதித்த கரிகாலன். 

அவன் கழுத்தில் கயிற்றைச் சுருக்கிட்டுக் கட்டுகிறான். தன்னைக் காத்துக்கொள்ள எதிரியை முட்டியால் குத்த முயன்றும் ஆதித்த கரிகாலனின் கைவலிமை நலிந்து, ஒரு குழந்தையின் குத்துக்களாகத்தான் வெற்றிமாறன்மேல் விழுகின்றன. 

அவனை அப்படியே விட்டுவிட்டு, தொங்கும் கயிற்றைப் பிடித்துக்கோண்டு மேலேறுகிறான். அவன் ஏறிச்சென்ற கயிறு கொஞ்சம் கொஞ்சமாக மேலே இழுக்கப்படுகிறது. அதனுடன் ஆதித்த கரிகாலனின் தலையும் எழும்புகிறது. ஏற்கனவே செயலிழந்த ஆதித்த கரிகாலனால் தற்காப்புக்காக எதுவும் செய்ய இயலவில்லை. கழுத்தைச் சுற்றிய கயிறு இறுக இறுக அவனுக்கு மூச்சுத் திணறுகிறது; நாக்கு பிதுங்குகிறது; கண்கள் வெளிவர ஆரம்பிக்கின்றன. 

வேண்டுமென்றே மெல்ல மெல்லக் கயிற்றை இழுக்கிறான் வெற்றிமாறன். அவனது நோக்கம் ஆதித்த கரிகாலன் துடிதுடித்து மெதுவாகச் சாகவேண்டும் என்பதே. பாதி உடம்பு மேலே வந்ததும் கீழே குதிக்கிறான். மெதுவாக ஆதித்த கரிகாலனைத் தூக்குகிறான். 

அவனது மூச்சு இன்னும் வந்து கொண்டிருக்கிறது. அவனது கண்கள் செக்கச் செவேலென்று சிவந்து போயிருக்கின்றன. நாக்கு சிறிது வெளிவந்திருக்கிறது. தான் பேசுவதை அவனால் கேட்கமுடியும் என்று அறிந்த வெற்றிமாறன், "இப்படித்தானே செயலிழந்திருந்தார், எங்கள் மன்னர்? குதிரையில் மயங்கிவிழுந்து தற்காத்துக் கொள்ள இயலாத அவரின் கையை இந்த வாளினால்தானே வெட்டினாய்? அவரது இடது கண்ணைத்தானே இந்த வாள் குருடாக்கியது?" என்று வாளினால் அவனது இடது கண்ணை நோண்டி எடுத்துக் கையினால் பிடுங்கி எறிகிறான் வெற்றிமாறன். 

ஆதித்த கரிகாலன் வலி தாளாது துடிக்கிறான். நிகழ்வது எதையும் அறியாமல் மயங்கிக் கிடக்கிறாள் குசுமவல்லி. 

வெறிச்சிரிப்பு வெற்றிமாறனின் உதடுகளிலிருந்து வெடித்துக் கிளம்புகிறது. 

"இன்னும் முடியவில்லையடா, எனது பழிவாங்கும் படலம்!" என்று ஆதித்த கரிகாலனின் வலது கையை மஞ்சத்தின் கட்டையில் வைத்து ஓங்கி வெட்டுகிறான். வெட்டிய வேகத்தில் வெட்டுப்பட்ட கை ஆறடி தள்ளி விழுகிறது. கையிலிருந்து இரத்தம் பீச்சியடிக்கிறது. அது மயங்கிக்கிடக்கும் குசுமவல்லியைக் குளிப்பாட்டுகிறது. 

அதிர்ச்சியினால் நினைவிழந்து விடக்கூடாது என்று வெற்றிமாறன் ஆதித்த கரிகாலனின் கன்னத்தில் மாறிமாறி அறைகிறான்.. 

"அவமானச்சாவு எப்படி இருக்கும் என்று இப்பொழுது தெரிகிறதா…?" கர்ஜிக்கிறான் வெற்றிமாறன். அறைக்கதவைத் தட்டும் சத்தம் கேட்கிறது. 

"உன் உதவிக்கு யாரும் வருவதற்குள் உன் அவமானச் சாவை நிறைவேற்றுகிறேனடா!" என்று கழுத்தைச் சுற்றியிருக்கும் கயிற்றைப் பிடித்து ஒரு கட்டையால் முறுக்குகிறான். மெல்ல மெல்ல ஆதித்த கரிகாலனின் உயிர் பிரிகிறது.9 

"ஓஓஓஓஓ! ஆஆஆஆ!" என்று உயரப் பார்த்து ஆனந்த வெறிக்கூச்சல் இடுகிறான், வெற்றிமாறன். பிறகு குலுங்கிக் குலுங்கி அழுகிறான். 

"அரசே! நான் உங்களுக்குக்கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன்! அதற்காகத்தான் இதுவரை என் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்தேன். என்னதான் என் மெய்க்காப்பு வாக்குறுதியை நீங்கள் திரும்பப் பெற்றாலும் என் உயிரைக்கொடுத்துத் தங்களின் உயிரை காப்பாற்றமுடியாது போனேனே! தங்களின் தவித்த வாய்க்குத் தண்ணீர்கொடுக்க இயலாத பாவியாகிப்போனேனே! 

"நான் இனிமேல் வாழ்வதில் என்ன பொருள் இருக்கிறது? என் கடமை முடிந்துவிட்டது. என் மகனை பாண்டிய அரசபரம்பரைக்குச் சேவைசெய்ய வீரப்பாலூட்டி வளர்க்கிறாள், என் மனைவி. அவனும், அவன் வழித்தோன்றல்களும் பின்னால் இந்தச் சோழர்களை அழிக்க தங்கள் வழித்தோன்றல்களுக்கு தோள் கொடுப்பார்கள்! இது உறுதி!, அரசே! இதோ நான் உங்களிடம் வந்துசேர்கிறேன். தாங்கள் வீரமரணம் அடைய முடியாதபோது எனக்கு மட்டும் அது தேவையா?" 

வாளைத் தரையில் வைத்து தன் நெஞ்சில், இதயம் இருக்குமிடத்தில் வைத்து வேகமாக அழுத்துகிறான் வெற்றிமாறன். 

கூர்மையான அந்த வாள் அவனது மார்பைத் துளைத்துக்கொண்டு ஏறி, அவனது இதயத்தைப் பிளக்கிறது. அப்படியே அவன் தரையில் சாய்கிறான். அவன் முகத்தில் அமைதியான புன்னகை மலருகிறது. 

அறைக்கதவு உடைக்கப்படுகிறது. சோழ வீரர்கள் உருவிய வாளுடன் உள்ளே நுழைகிறார்கள். 

கயிற்றில் தொங்கியபடியே குரூரமான முறையில் கொலைசெய்யப்பட்ட ஆதித்த கரிகாலனின் உடலையும், அருகில் மார்பில்பதிந்த வாளுடன் கிடக்கும் வெற்றிமாறனையும், இரத்த வெள்ளத்தில் நனைந்து கிடக்கும் குசுமவல்லியையும் பார்க்கிறார்கள். 

———————————

9 ஆதித்த காிகாலன் கொலைசெய்யப்படும் முறை ஆசிாியாின் கற்பனைதான். அதைப்பற்றிய ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.

அவர்கள் அருகில் வருவதற்கும், வெற்றிமாறனின் உயிர் பிரிவதற்கும் சரியாக இருக்கிறது. 

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com