பொன்னியின் செல்வனின் தமிழ்க் கனவு – இரண்டாம் பாகம் – திருப்பணித் துவக்கம்

பொன்னியின் செல்வனின் தமிழ்க் கனவு – இரண்டாம் பாகம் – திருப்பணித் துவக்கம்

ஒரு அரிசோனன்

திருப்பணித் துவக்கம்

இரண்டாம் பாகத்தின் முக்கிய இடங்களும், கதாபாத்திரங்களும் இடங்கள்:

சோழப் பேரரசு: தென்னிந்தியாவில் துங்கபத்திரை நதியிலிருந்து கலிங்கம் (ஒரிசா) வரை வடக்கிலும், குமரி வரை தெற்கிலும், வட இலங்கையும் அடங்கியது. தஞ்சாவூர் (தஞ்சை) தலைநகர். 

பாண்டிநாடு: வெள்ளாற்றுக்குத் தெற்கிலிருந்து குமரிவரையும், வங்கக் கடலிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலை வரையிலான அரசு சோழப் பேரரசுக்குக் கட்டுப்பட்டது. மதுரை தலைநகர். 

வட சேரநாடு (குடமலை நாடு): மகோதயபுரத்தைத் தலைநகராகக் கொண்ட சேரநாடு சோழப் பேரரசுக்குக் கட்டுப்பட்டது. 

தென்சேரநாடு (வயநாடு): கொல்லத்தைத் தலைநகராகக் கொண்ட சேரநாடு சோழப் பேரரசுக்குக் கட்டுப்பட்டது. 

வேங்கைநாடு: வெங்கியைத் தலைநகராகக் கொண்ட கீழைச் சாளுக்கியநாடு சோழப் பேரரசுக்குக் கட்டுப்பட்டது. 

வட இலங்கை: சோழப் பேரரசால் நேரடியாக ஆளப்பட்டது. அனுராதபுரம், பொலனருவை போன்ற நகரங்களை உள்ளடக்கியது. 

ரோகணம்: இலங்கைச் சிங்கள மன்னனால் ஆளப்பட்ட தென் இலங்கைப் பகுதி. 

கருநாடு: இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டைய கர்நாடக மாநிலம் சோழப் பேரரசுக்குக் கட்டுப் பட்டது. 

அரச பரம்பரைகளும், குலங்களும்:

சோழ அரச பரம்பரை: 

இராஜராஜ சோழன்: சோழப் பேரரசர் (சக்கரவர்த்தி) ஆட்சிக்காலம் 985லிருந்து 1014 வரை இயற்பெயர் அருள்மொழி. பட்டப்பெயர்கள் திரிபுவனச் சக்கரவர்த்தி. அரசகேசரி. 

சோழ மகாதேவி: இராஜராஜ சோழனின் பட்டத்து அரசி. 

குந்தவைப் பிராட்டி: இராஜராஜ சோழனின் தமக்கை சோழப்பேரரசில் சக்கரவர்த்திக்கு அடுத்தபடி மிகவும் செல்வாக்கு உள்ளவர். 

ஆதித்த கரிகாலன்: இராஜராஜ சோழனின் தமையன். 

குந்தவி: இராஜராஜ சோழனின் மகள். கீழைச் சாளுக்கிய அரசன் விமலாதித்தனை மணந்தவள். 

இராஜேந்திர சோழன்: இராஜராஜ சோழனின் மகன். பட்டத்து இளவரசன். இயற்பெயர் மதுராந்தகன். பட்டப்பெயர் கோப்பரகேசரி. 

திரிபுவன மகாதேவி: இராஜேந்திரனின் மூத்த மனைவி. பட்டத்தரசி. 

பஞ்சவன் மகாதேவி: இராஜேந்திரனின் இரண்டாம் மனைவி. 

வீரமகாதேவி: இராஜேந்திரனின் மூன்றாம் மனைவி. 

இராஜாதிராஜன்: இராஜேந்திரன்-திரிபுவன மகாதேவியின் மூத்தமகன். 

இராஜேந்திர தேவன்: இராஜேந்திரன்-திரிபுவன மகாதேவியின் இரண்டாம் மகன். 

வீரன் (வீரராஜேந்திரன்) : இராஜேந்திரன்-வீரமகாதேவியின் மகன். 

அருள்மொழிநங்கை: இராஜேந்திரன்-பஞ்சவன் மகாதேவியின் மகள், சிவசங்கர சிவாச்சாரியின் மனைவி 

அம்மங்கை : இராஜேந்திரன்-திரிபுவன மகாதேவியின் மகள்.கீழைச் சாளுக்கிய அரச பரம்பரை 

கீழைச் சாளுக்கிய அரச பரம்பரை 

விமலாதித்தன் : கீழைச் சாளுக்கிய அரசன் 

குந்தவி : விமலாதித்தனின் பட்டத்தரசி. இராஜராஜ சோழனின் மகள். 

இராஜராஜ நரேந்திரன்: விமலாதித்தன் குந்தவியின் மகன். 

விஜயாதித்தன் : விமலாதித்தனுக்கும், அவனது இரண்டாம் மனைவிக்கும் பிறந்த மகன். 

சக்திவர்மன் : விமலாதித்தனின் அண்ணன். அவனுக்கு முன் வேங்கைநாட்டை ஆண்ட அரசன். 

பாண்டிய அரச பரம்பரை 

வீரபாண்டியன் : பாண்டிய அரசன் ஆதித்த கரிகாலனுடன் போரிட்டவன். 959ல் இறந்தான். 

அமரபுஜங்கள் : பாண்டிய அரசன் வீரபாண்டியனின் பேரன். 1012ல் இறந்தான். 

விக்கிரம பாண்டியன் : அமரபுஜங்கனின் மகன். இராஜேந்திரனுடனும், இராஜாதிராஜனுடனும் போரிட்டவன். 

சேர அரசர்கள்:

பாஸ்கர ரவிவர்மன் :வட சேரநாட்டு அரசன். மகோதயபுரத்திலிருந்து (திரிச்சூர்) அரசாண்டான். 

இரண்டாம் பாஸ்கர ரவிவர்மன்: முதலாம் பாஸ்கர ரவிவர்மனின் மகன். உதகையில் கொலோச்சினான். 

கோவர்த்தன மார்த்தாண்டன்: தேன் சேர நாட்டு அரசன். பாண்டிய அரசன் அமரபுஜங்கனின் நண்பன். 

பிற முக்கிய பாத்திரங்கள்

பிரம்மராயர் சிவாச்சாரி குலம் 

கருவூர்த்தேவர்: இராஜராஜ, இராஜேந்திர சோழர்களின் அரசகுரு 

சிவசங்கர சிவாச்சாரி: கருவூர்த்தேவரின் மாணவன். அவரின் மாற்றாந்தாயின் மருமகன். இராஜராஜரின் தமிழ்த் திருப்பணி ஆலோசகர். திருமந்திர ஓலைநாயகம். (முதல் பாகதில் வந்த ஈஸ்வரனின் மூதாதை.) 

சிவாச்சாரியின் முதல் மனைவி: பெயர் கொடுக்கப்படவில்லை. 

சிவாச்சாரியின் இரண்டாம் மனைவி: அருள்மொழிநங்கை, இராஜேந்திரனின் மகள். 

வெற்றிமாறன் குலம் 

வெற்றிமாறன் : வீரபாண்டியனின் மெய்காப்பாளன் (முதல் பாகதில் வந்த அழகேசனின் மூதாதை) 

திருமாறன் : வெற்றிமாறனின் பேரன். அமரபுஜங்கனின் மெய்காப்பாளன். 

காளையப்பன் : திருமாறனின் மகன் விக்கிரம பாண்டியனின் மெய்காப்பாளன். 

வெற்றிவீரன் : திருமாறனின் தம்பி. விக்கிரம பாண்டியனின் முதல் மெய்காப்பாளன். 

முருகேசன் : திருமாறனின் தம்பி. ரோகணத்தில் (தென் இலங்கை) மறைத்து வைக்கப்பட்ட பாண்டியர் பொக்கிஷத்தின் காவலன். 

நிலவுமொழி குலம் 

நிலவுமொழி : குலத்தலைவி (முதல் பகுதியில் வரும் காமாட்சி மற்றும் ஏகாம்பரநாதனின் குலமுதல்வி.) 

பொன்னம்பல ஓதுவார்: நிலவுமொழியின் தந்தை. 

தொண்டைமான் குலம்

ஈராயிரவன், பல்லவராயர் : இராஜராஜ சோழனின் மையப் படைத்தலைவர், பல்லவ அரச பரம்பரை. 

பண்டைய நகர்களின் பெயர்கள்

திருமயிலை : மயிலாப்பூர் சென்னையின் ஒரு பகுதி. 

தில்லை : சிதம்பரம் 

நெல்லை : திருநெல்வேலி 

உதகை : ஊட்டி என்று அழைக்கப்படும் உதகமண்டலம் 

கச்சிப்பேடு : காஞ்சிபுரம் 

பொன்னமராவதி : வடபாண்டிய நாட்டின் தலை நகரம். தற்பொழுது ஒரு சிற்றூராக உள்ளது. 

பழையாறை : சோழர்களின் பழைய தலைநகரம். இப்பொழுது ஒரு சிற்றூராக உள்ளது. 

இடைச்செருகல்

அ. சேவூர் அருகிலான மலைக்காட்டில் ஒரு குகை

சித்தார்த்தி, வைகாசி 8 – ஜூன் 23, 959¹

ழையைப்போல அந்தக் குகையின் தரையில் படுத்துக்கிடக்கிறான் வீரபாண்டியன். மெதுவாக அவனுக்கு நினைவு திரும்புகிறது. 

சேவூரில் ஆதித்த கரிகாலனுடன் போரிட்டதனால் அவன் உடம்பெல்லாம் ஏற்பட்ட விழுப்புண்களிலிருந்து ஒழுகிய இரத்தம் கருப்பாக உறைந்து காயந்திருக்கிறது. அவற்றின்மீது ஆங்காங்கு பச்சிலைப் பற்று காணப்படுகிறது. இடது கண்ணின்மீது பச்சிலை வைத்து கட்டப்பட்டிருக்கிறது. துண்டிக்கப்பட்ட வலது மணிக்கட்டுக்கு மேல்², இரத்தப் பெருக்கை நிறுத்தக் கட்டிய கட்டு செக்கச் செவேலென்று நனைந்துபோயிருக்கிறது. காய்ச்சலால் உடல் அனலாகக் காய்கிறது. அவனது வீரவாளும், மகுடமும் இரத்தக்கறைபடிந்த துணியில் அருகில் வைக்கப்பட்டிருக்கின்றன. 

முனகலுடன் கண் விழிக்கிறான், வீரபாண்டியன். சோழப் படைகளின் புதுத்தளபதியான – "அபிமன்யு"வின் வீரத்தை ஒத்த, பதினைந்தே வயதான ஆதித்த கரிகாலன்³, புலிக்குட்டியைப்போல படைகளை நடத்திச்சென்று படைகளுக்குக்கொடுத்த வீர உற்சாகத்திற்கும் – அவர்களின் அதிகமான எண்ணிக்கைக்கும் – என்னதான் வீரத்துடன் போரிட்டாலும், பதில்சொல்ல இயலாதுபோனது இலேசாக ஞாபகத்திற்கு வருகிறது. 

இதற்கிடையில் இலங்கை அரசன் நாலாம் மகிந்தனுடைய உதவிப்படை சோழப்படையின் புலிவெறிக்கு முன்னால் ஈடுகொடுக்க முடியாது பின்வாங்கிச் சென்று தனியாகிவிட்டது. இந்நிகழ்வு பாண்டியப் படைகளுக்கு ஒரு கையை இழந்த மாதிரியாக இருந்ததும், சிறுவன் என்று எண்ணி ஆதித்த கரிகாலனின் திறமையைக் குறைத்து மதிப்பிட்ட தனது அதிகத் தன்னம்பிக்கையே தனக்கு எதிரியாக ஆகியதும், போர்த்திறமை அதிகமிருந்தாலும், ஆதித்த கரிகாலனின் வேகம், புதுவிதமான வாட்போர் தன் உடலில் அளவுக்கும் அதிகமான காயங்களை ஏற்படுத்தியதும், அதன் தாக்கத்தால் மயக்கமடைந்து குதிரையில் சாய்ந்ததும் கண்முன் நிழலாடுகிறது. 

——————————

1 இரண்டாம் பராந்தக சோழருடன் சேர்ந்து ஆதித்த காிகாலன் தலைமைதாங்கிய சோழப் படைகளும், வீரபாண்டியனின் பாண்டியப் படைகளும், அவனுக்குத் துணை வந்த நாலாம் மகிந்தனின் ஈழப் படைகளுக்கும் இடையே\ சேவூாில் நிகழ்ந்த போர் பொது ஆண்டு 959ல் நிகழ்ந்தது – சோழச் செப்பேடுகள்.

2 இது என்னுடைய கற்பனையே! இதற்கு ஆதாரம் ஒன்றுமில்லை.

3 அபிமன்யுவின் வீரத்தை ஒத்த ஆதித்த காிகாலன் பதினைந்து வயதிலேயே வீரபாண்டியனைத்

தோற்கடித்துப் போர்க்களத்தைச் சுற்றியிருந்த மலைக்காடுகளுக்கு ஓடச்செய்தான் – சோழச் செப்பேடுகள்.

நினைவு திரும்பியதால் உடலின் காய்ச்சலும், வலியும் மீண்டும் அவனை வெறியுடன் அணைத்துக்கொண்டு நரகவேதனையைத் தருகின்றன. பல போர்களில் விழுப்புண் ஏற்ற வீரபாண்டியனுக்கு வலி புதிதல்ல தான். ஆகவே, தன்னைச் சமாளித்துக்கொண்டு எழ முயல்கிறான். 

"அரசே! அசையாதீர்கள்! நான்தான் உங்களது மெய்காப்பாளன் வெற்றிமாறன். உங்கள் காயத்திற்குப் பச்சிலை மருந்துவைத்துக் கட்டியிருக்கிறேன். உங்களின் காய்ச்சலுக்கு கசாயமும் கொதிக்கவைத்துக் கொண்டிருக்கிறேன். அதை அருந்தினால் உங்கள் காய்ச்சல் பறந்துவிடும். மதுரை திரும்பிவிடலாம்," என்று வீரபாண்டியனை மெதுவாகத் தாங்கிப் படுக்கவைக்கிறான் அவனது மெய்காப்பாளர்களிலேயே வயதில் மிகவும் சிறியவனான வெற்றிமாறன். 

"ம்…" தன்முன் தெரியும் மங்கலான உருவத்தைக் நோக்குகிறான், வீரபாண்டியன். பார்வை மங்கி இருப்பதும், ஒரு கண்ணை பச்சிலைப்பற்று மறைத்திருப்பதும் தெரிகிறது. தலையில் ஒரு பெரிய கல்லைத் தூக்கிவைத்திருப்பது போலவும், ஒரு சுத்தியலால் நெற்றியில் அடிக்கடி அடிப்பதுபோலவும் உணர்கிறான். இருந்தாலும் தன்னைப் பற்றியும், தன் உடல் நோவைப் பற்றியும் கவனம் செலுத்துவதைவிட, தன் படைகளின் நிலையைப் பற்றிப் பேசுவதுதான், மீண்டும் போருக்குச் செல்வதுதான் முக்கியம் என்று வலுக்கட்டாயமாகத் தெம்பை வரவழைத்துக்கொண்டு மெல்லிய குரலில் கேட்கிறான். 

"வெற்றிமாறா! நீ மட்டும்தான் இங்கே இருக்கிறாயா? மற்ற மெய்காப்பாளர்கள் ஐவரும் என்ன ஆனார்கள்? பாண்டியப் படைகளின் நிலை என்ன? இலங்கை அரசரையும் அவர் படைகளையும் மீண்டும் களத்திற்கு அழைத்துவரச் சென்ற ஓலைதாங்கி திரும்பி வந்தானா?" 

தலையைக் குனிந்துகொள்கிறான், வெற்றிமாறன். 

"வெற்றிமாறா! நீ பாண்டிய வீரனடா, மதுரைத் தமிழனடா! நீ என்றும் தலை குனியக்கூடாது. சாவைக்கூட மகிழ்ச்சியாகத் தலைநிமிர்ந்து வரவேற்கவேண்டும். நீ தலைகுனியும்படி என்ன காரியம் செய்தாய்?" மெதுவாக உறுமுகிறான், வீரபாண்டியன். 

"அரசே! இன்றுவரை மட்டுமல்ல, உடலில் உயிர் இருக்கும்வரை தலைகுனியும்படியான வேலையை உங்களது மெய்காப்பாளன் செய்யமாட்டான். உங்கள் உயிரைக் காப்பதுதான் என் பாக்கியம். நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் நான் என்ன பதில்சொல்வது, அரசே? ஆதித்த கரிகாலனின் தாக்குதலினால் மயங்கிக் குதிரையில் சாய்ந்த உங்களைப் பாதுகாப்பான மலைக்காட்டுக் குகைக்குக் கொண்டுவந்து சேர்த்த நான் ஒருவன்தான் மீந்திருக்கிறேன். மற்ற அனைவரும் நான் உங்களை மீட்டுச் செல்வதற்காகத் தங்கள் உயிரைக் கொடுத்து வீரசுவர்க்கத்தை எய்திவிட்டார்கள். அந்த வாய்ப்பை எனக்கு அவர்கள் கொடுக்க மறுத்ததுதான் என்னை வருத்தப்படச் செய்துவிட்டது. அரசே! ஆயினும் உங்கள் உயிரைவிட வீரசொர்க்கம் எனக்குப் பெரிதல்ல. உங்கள் பக்கத்திலேயே இருந்து, உங்கள் உயிருக்காக என் உயிரைக்கொடுக்கத் தயாராக இருப்பதே சொர்க்கத்தில் இருப்பதுபோலத்தான், அரசே!" பொங்கும் ஆற்றாமையுடனும், அதே சமயத்தில் வீரப்பெருக்குடனும் பதிலிறுக்கிறான், வெற்றிமாறன். 

"என்ன என்னருமை நண்பனும் உன் தந்தையுமான வீரமாறன், உன் சிற்றப்பனான மதுரைமாறன், என்னை எடுத்து வளர்த்த செங்கழனித் தேவர், எனக்கு வாட்பயிற்சி கற்றுவித்த முதுகுடுமியார், உன் அண்ணன் நெடுமாறன் இவர்கள் எல்லாரும் எனக்காக உயிர் நீத்தனரா? எனக்கு முன்பே போரில் மார்பில் விழுப்புண் தாங்கி வீரசொர்க்கம் எய்தினரா? கோழையைப்போல நான் மட்டும் மயக்கநிலையில் உயிர் தப்பித்தேனே, இது என்ன கொடுமை? தாயே மீனாட்சி! சொக்கநாதா! உனக்குச் சொந்தமான பாண்டிநாட்டைச் சோழன் ஆள்வதா? ஆதித்த கரிகாலா! சோழச் சிறுவா! நீ அரியணை ஏறமாட்டாய்! என் உயிரைக்கொடுத்துச் செய்யும் வாக்குறுதி இது!" என்று சொற்களைக் கடித்துத் துப்புகிறான் வீரபாண்டியன். 

"அரசே! உங்கள் வாக்குறுதி நிறைவேற என் உயிரையும் கொடுப்பேன்!" என்று தன் வாளை உறுவி, கட்டைவிரலில் இலேசாகக் கீறுகிறான். வழியும் இரத்தத்தால் வீரபாண்டியனுக்குத் திலகமிடுகிறான் வெற்றிமாறன். வீரபாண்டியனின் முகத்தில் இலேசான புன்னகை மலர்கிறது. 

"மதுரைக்கு உன் மாதிரியான வீரப் புதல்வர்கள்தான் வேண்டும், வெற்றிமாறா! நீ எனக்கு இன்னும் ஒரு சத்தியமும் செய்துகொடுக்க வேண்டும்!" வீரபாண்டியனின் குரலில் அவனது காயங்களின் தாங்கவோண்ணா வலியின் தாக்கம் தெரிகிறது. மூச்சுவிட மிகவும் கஷ்டப்படுகிறான். 

"சொல்லுங்கள், அரசே! உங்களுக்காக என் உயிரையும் கொடுப்பேன்!" வீரத்துடன் முழங்குகிறான், வெற்றிமாறன். 

"அந்த சோழச் சிறுவனைப் பழிவாங்கும்வரை எக்காரணத்திற்காகவும் நீ உயிரை விடக்கூடாது. அதற்காக எந்த ஈனமான வேலையையும் நீ செய்யவேண்டும். இனிமேல் உன் உயிர் ஆதித்த கரிகாலனை அழிக்க மட்டுமே பயன்படவேண்டும், உன்னுயிரைக் கொடுத்து என்னைப் பாதுகாக்க நீ எடுத்த உன் வாக்குறுதியிலிருந்து உன்னை விடுவிக்கிறேன். உம்…" என்று வலதுகையை நீட்டி உயர்த்திய வீரபாண்டியன் திடுக்கிடுகிறான். மணிக்கட்டுக்கு மேல் மொட்டையாகக் காட்சியளிக்கிறது அவனது வலது கை. 

சில வினாடிகளில் அவனிடமிருந்து ஒரு விரக்திச் சிரிப்பு உதிர்கிறது. 

"உன்னிடமிருந்து உறுதியைக்கூடப் பெறமுடியாமல் செய்துவிட்டானா, அந்தச் சோழச்சிறுவன்?" தழுதழுக்கிறது வீரபாண்டியனின் குரல். 

"பரவாயில்லை. இன்னும் இடது கை இருக்கிறதல்லவா?" என்று இடது கையை உயர்த்தி, "வாக்குறுதி செய் வெற்றிமாறா! எனது வலது கையாக ஆகி அந்தச் சோழச்சிறுவனைக் கொற்றவைக்குப் பலிகொடுப்பேன் என்ற வாக்குறுதியைக் கொடு!" என்று இடது கையை நீட்டுகிறான். 

வாளை மீண்டும் எடுத்துத் தன் வலது உள்ளங்கையைச் சற்று பலமாகக் கீறுகிறான், வெற்றிமாறன். இரத்தம் ஒரேயடியாக தாரையாகப் பெருகுகிறது. நீட்டப்பட்டிருந்த வீரபாண்டியனின் இடது உள்ளங்கையைத் தயக்கத்துடன் மிகவும் மெதுவாகக் கீறுகிறான். எறும்பு கடிப்பதைப் போன்ற உணர்வுதான் வீரபாண்டியனுக்கு ஏற்படுகிறது. அவனது உள்ளங்கையில் தாமரைப் பூவாகக் குருதி மலருகிறது. அவனது குருதியில் தன் குருதியைக் கலக்கும் வண்ணம் இறுகப் பிடிக்கிறான் வெற்றிமாறன். 

"அரசே! உங்களது இரத்தத்துடன் கலக்கும் என் இரத்தத்தின்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்! ஆதித்த கரிகாலனின் அழிவு என் கையால்தான்!" வீரத்துடன் முழங்கினாலும், அவனது குரல் கம்முகிறது. 

"வெற்றிமாறா! பாண்டிய மண்ணுக்குப் பெருமையைச் சேர்!" வீரபாண்டியன் களைப்பில் கண்களை மூடிக்கொள்கிறான். 

"என் நாவு வரள்கிறது. சிறிது தண்ணீர் தருகிறாயா?" 

அதுதான் அவன் கடைசியாகப் பேசும் பேச்சு என்று வெற்றிமாறனால் அறிந்துகொள்ள முடியவில்லை. 

"இதோ, அரசே! அருகில் இருக்கும் மலையருவியில் உங்களுக்குத் தண்ணீர் எடுத்து வருகிறேன். அப்படியே உங்கள் காய்ச்சலுக்கு கசாயத்தையும் கொண்டுவருகிறேன்." என்றவாறு அங்கிருந்து நகர்கிறான், வெற்றிமாறன். அவனையும் அறியாமல் அவன் கண்களிலிருந்து கண்ணீர் தாரையாகப் பெருகுகிறது. 

ண்ணீர்க் குடுவையை ஒரு கையிலும், கஷாயச் சட்டியை ஒரு கையிலும் எடுத்துக்கொண்டு திரும்பும் வெற்றிமாறனின் காதில் குதிரைகளின் குளம்பொலி நாராசமாகப் பாய்கிறது. வேகமாக குகையை நோக்கி ஓடுகிறான். அவன் குகையை அடைவதற்குள் குதிரைகளின் குளம்பு ஒலிகள் நின்றுபோய், மீண்டும் ஆரம்பித்துச் செல்வது அவன் காதில் விழுகிறது. 

இனம் புரியாத அச்சத்துடனும் வேதனையுடன் குகையை அடைந்த அவனுக்கு, அங்கு கண்ட காட்சி இரத்தத்தை உறையவைக்கிறது. 

தண்ணீர்க் குடுவையையும், கஷாயச் சட்டியையும் எறிந்துவிட்டு, "அரசே! உங்களுக்கா இக்கதி? இதற்காகவா என்னை உங்கள் உயிரைக் காக்கும் வாக்குறுதியிலிருந்து விடுவித்தீர்கள்?" என்று அலறுகிறான். 

குகையிலிருந்து குருதி சிறிய ஆறாக வழிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. குகையின் உள்ளே தலையற்ற வீரபாண்டியனின் உடல் முண்டமாகக் கிடக்கிறது. அவனது கழுத்தில் எப்பொழுதும் தொங்கும் பரம்பரைச் சொத்தான பெரிய முத்துமாலையோடு, சாத்திவைத்திருந்த மகுடமும், வாளும் காணப்படவில்லை4

"அரசே, என்னை ஏன் வெளியே அனுப்பினீர்கள்?  இதற்காகவா?" என்று கதறியவாறே குகைக்கு இடப்பக்கம் சென்று கீழே குதிரைக் குளம்புகளின் சத்தம் வரும் திசையை நோக்குகிறான். 

நூறடி கீழே செல்லும் மலைப் பாதையில் முன்செல்லும் குதிரையில் அமர்ந்திருக்கிறான், ஆதித்த கரிகாலன். அவனது கையில் தூக்கிப் பிடித்த ஈட்டி – அதில் வீரபாண்டியனின் தலை5 சொருகப்பட்டிருக்கிறது.

———————————

4 "வீரபாண்டியனை வென்றபின், பாண்டியநாட்டின் சுதந்திர உாிமையை மறுக்க பாண்டியர்களின் மீன் அச்சு, மணிமகுடம், அாியணை, பரம்பரைச் சொத்தான முத்துமாலை இவைகள் கவர்ந்து

கொண்டுவரப்பட்டன." — இரண்டாம் பராந்தக சுந்தரசோழாின் மெய்கீர்த்தி.

5 ஆதித்த காிகாலனைப் பற்றிய கல்வெட்டுகள் 'வீரபாண்டியன் தலைகொண்ட ஆதித்த காிகாலன்,' என்று குறிப்பிடுகின்றன.

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com