பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 2

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 2

ஒரு அரிசோனன்

பழையாறை மாளிகை

ராட்சச, தை 1 – ஜனவரி 14, 1016

"காதல் கடிமணம் செய்து கொண்டேன் நான், எனது பதினெட்டாம் வயதில்! வேளிர்கோன் சேதுராயர் மகளிடம் மனதைப் பறிகொடுத்தேன். கணையாழியை மாற்றிக்கொண்டு அரசருக்கே உரிய காந்தர்வ மணம் செய்து கொண்டோம். அந்த மணத்தில் தோன்றியவன் இவன். ஆளவந்தான்2 என்று இவன் பெயர். வைணவச் சமயத்தைச் சார்ந்த பெண்ணை சோழப்பேரரசின் ராணியாக அறிவிக்கத் தயாராக இல்லாததாலும், முறைப்படி செய்து வைக்காத திருமணம் என்பதாலும் தந்தையார் இவனது தாயைத் தன் அரச குடும்பத்து மருமகளாக ஏற்றுக்கொள்ளவே இல்லை. உடனேயே திரிபுவன மாதேவியை எனக்கு முறையான முதல் மனைவியாகவும், சோழநாட்டின் வருங்காலப் பட்டத்து ராணியாக ஆக்கவும், திருமண ஏற்பாடு செய்துவிட்டார்.  எந்தவிதமான சோழ அரசுரிமையும் சேதுராயர் மகளின் சந்ததிக்குக் கிடையாது என்றும் செப்பேடு3 மூலம் ஆணையிட்டு விட்டார்.

"தனது மகன் சோழ அரியணையில் ஏறவேண்டும் என்று விரும்பி இவனது தாய் என்னை மணமுடிக்கவில்லை. ஆகவே, அவள் எனது தந்தையாரின் ஆணையைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், என் மனதில்தான் அந்த நிரடல் இருந்துகொண்டே வருகிறது. இவனையும் சிறந்த வீரனாக நான் உருவாக்கினேன்.

"இவனது தாயும் என்னை மணந்ததிலிருந்து சைவத்தையே ஏற்றுக்கொண்டாள். இவனுடைய பாட்டனாரின் கட்டாயத்தையும் மீறி இவனைச் சைவனாக வளர்க்கத்தான் முயற்சி செய்து வந்திருக்கிறாள்…" என்று நிறுத்துகிறான் இராஜேந்திரன்.

கூடத்தில் இருந்த இரண்டு ஆசனங்களில் ஒன்றில் இராஜேந்திரனும், இன்னொன்றில் ஆளவந்தானும் அமர்ந்திருக்கிறார்கள். கீழே விசுப்பலகையில் இராஜேந்திரனுக்கு எதிரில் சிவாச்சாரி உட்கார்ந்திருக்கிறான். எவ்வளவு வற்புறுத்தியும் சிவாச்சாரி ஆசனத்தில் அமர மறுத்து விடுகிறான். இராஜராஜருக்காகவும், இராஜேந்திரனுக்காகவும் என்று இரண்டு ஆசனங்கள்தான் அவனது வீட்டில் உண்டு. அவற்றில் அவர்களைத் தவிர வேறு எவரும் அமரவும் மாட்டார்கள். தான் கணக்கன் என்றும், தனக்கு அரசர்களின் ஆசனம் சரியானதல்ல என்றும் மறுத்து வந்திருக்கிறான் சிவாச்சாரி.

சிவாச்சாரியனது முகத்தில் எந்தவிதமான மாற்றமும் தென்படவில்லை. இராஜேந்திரன் இதுவரை மறைவாக வைத்திருந்த தனது மூத்த மகனை வெளிச்சத்திற்குக் கொணர முயல்கிறான் என்பதால், அவனே மேலே தொடரட்டும் என்று காத்திருக்கிறான்.

"தந்தையே, அண்ணனுடன் உணவுண்ண வாருங்கள். இவரும் காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிடவிலை. நீத்தார் சடங்கை முடித்துவிட்டுத் திரும்பினார். பொங்கல் பொங்குவதற்காகக் காத்திருந்தார். பிறகு பேசிக்கொள்ளலாமே!" என்று அனைவரையும் அழைத்த அருள்மொழிநங்கை, ஆளவந்தான் பக்கம் திரும்பி, "அண்ணா!  தங்களைக் கண்டு ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. என் திருமணத்திற்குக்கூடத் தாங்கள் வரவில்லையே!" என்று குறை கூறும் குரலில் சொல்கிறாள்.

———————————————-

[2 இராஜேந்திர சோழனுக்கு 'ஆளவந்தான்' என்று ஒரு மூத்த மகன் இருந்ததாக சாக்கோட்டை சீனிவாச ஐயங்கார் 'பழங்கால இந்தியா (Ancient India)' என்ற சரித்திர நூலில் எழுதி உள்ளார். அந்த மகனையே இராஜேந்திர சோழனின் இரண்டாம் மகன் என்றும், அவன் பெயர் மனுகுலகேசரி என்றும், அவனை கேரளத்தின் அரசப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதாகவும் 'Medieval Chola Empire and it's relations with Kerala' என்ற வரலாற்று நூல் கூறுகிறது. அந்த மகன் சாளுக்கியப் போரில் கலந்து கொண்டதாக இரண்டு நூல்களுமே உரைக்கின்றன.

3 கற்பனையே.  இதற்கு ஆதாரம் எதுவும் இல்லை.  அரசு விவகாரங்களில் இராஜராஜ சோழர் நாட்டின் வருங்கால நலன் கருதி பட்சபாதமற்ற முடிவுகளை எடுத்ததாக சரித்திரம் கூறுவதே
இக்கற்பனைக்குக் காரணம்.]

இலேசாகப் புன்னகைத்த ஆளவந்தான், "நங்கை! கடந்த ஆறு ஆண்டுகளாகக் கடாரம் (தற்பொழுதைய மலேசியா) சென்றிருந்தேன். ஸ்ரீவிஜயத்தின் (இந்தோனேசியா) வட பாகமான அதன் மூலமாகத்தான் நமது நாவாய்கள் சீன நாட்டிற்கு வணிகத்திற்குச் செல்கின்றன. கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து அவற்றைக் காப்பாற்ற நமது கடற்படைகளுடன் சென்றிருந்தேன். அங்கு கடாரத்தின் மன்னரைச் சந்தித்துத் தந்தையாரின் சார்பில் நட்புக்கரம் நீட்டி வந்தேன். அதனாலேயே உன் திருமணத்திற்கு வராத நிலைமை ஏற்பட்டுவிட்டது" என்று சமாதானம் சொல்கிறான் ஆளவந்தான்.

அவன் சொல்வது வெறும் சமாதானம்தான் என்று அருள்மொழிநங்கைக்கும் நன்றாகவே புரிகிறது. பாட்டனார் இராஜராஜர் இருந்தவரை, அவன் அரச உறவு கொண்டு அரண்மனைக்குள் வர இயலாத நிலைமை ஏற்பட்டிருந்தது அவளுக்கும் நன்றாகவே தெரியும். அரண்மனைக்கு வெளியில் அவனை பல தடவை சந்தித்திருக்கிறாள். அவனுடன் சைவ -வைணவ வாதமும் செய்திருக்கிறாள். தனது தந்தையின் பொருட்டு அவனது தாய் அவனைச் சைவனாக வளர்க்க முயற்சி செய்தாலும், அவனது தாய்வழிப் பாட்டனாரான சேதுராயர் அவனை வைணவனாக்குவதில் வெற்றி பெற்று வருகிறார் என்றும் அந்த வாதங்களின் மூலம் அறிந்துகொண்டிருக்கிறாள். அதை உறுதி செய்வது போல இருக்கிறது – அவனது நெற்றியின் சிறிய ஒற்றைத் திருநீற்றுப் பட்டைக்கு மேல் செங்குத்தாகத் தீட்டப்பட்டிருந்த செவ்விய கோடு.

பலகைகளின் மீது அமர்ந்து கொண்டு தலைவாழை இலையில் பரிமாறப்பட்ட புத்தரிசிச் சர்க்கரைப் பொங்கலையும், காய்கறி, பழங்கள், இவற்றையும் இராஜேந்திரனும், ஆளவந்தானும் ஒருகை பார்க்கிறார்கள். நீத்தார் சடங்கைச் செய்த சிவாச்சாரி அதற்குத் தகுந்த வழக்கப்படி சிறிதளவு சர்க்கரைப் பொங்கலையும், கனிகளையுமே உட்கொள்கிறான்.  அவன் தனது வழக்கப்படி உணவுண்ணும் பொழுது உரையாடலைத் தவிர்ப்பான் என்பது மற்றவர்களுக்குத் தெரிந்திருந்ததால், அருள்மொழிநங்கையும், சிவாச்சாரியனின் முதல் மனைவியுமே இராஜேந்திரனிடமும், ஆளவந்தானிடமுமே உரையாடுகிறார்கள். இருவரும் நன்கு நிறையச் சாப்பிட்டதிலிருந்து நல்ல பசியுடன் வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

உணவு முடிந்ததும் வெற்றிலை பாக்கு, வண்ணச் சுண்ணாம்புக் கிண்ணத்தைத் தங்கத் தட்டில் வைத்து சிறிய முக்காலியில் வைக்கிறாள் சிவாச்சாரியின் முதல் மனைவி. எப்பொழுதும் அடைப்பக்காரன் மடித்துத் தந்தே வெற்றிலைச் செல்வம் மெல்வது வழக்கமாதலால், அருள்மொழிநங்கை தனது தந்தைக்கு வெற்றிலைப் பாக்கு மடித்துத் தருகிறாள். சிறப்பு நாளென்றதால் சிவாச்சாரியும், திருமணம் ஆகவில்லை என்று ஆளவந்தானும் மறுத்து விடுகிறார்கள்.

"தந்தையே! அண்ணனுக்கும் திருமண வயதாகிவிட்டது. பெண் ஏதாவது பார்க்கிறீர்களா?  உறவுமுறையில் யாராவது பெண் கொடுக்க முன்வந்திருக்கிறார்களா?" என்று மெல்லப் பேச்சை ஆரம்பிக்கிறாள் அருள்மொழிநங்கை. அதைக் கேட்டதும் பெரிதாக நகைக்கிறான் இராஜேந்திரன்.

"கடமையை மறந்து விடாதே என்று எனக்கு நினைவுறுத்துகிறாயா நங்கை! நீதான் இப்பொழுது பெரிய மனிதி ஆகிவிட்டாயே!  நீயே உன் அண்ணியைத் தேர்ந்தெடுக்கலாமே!" என்று தன் பக்கம் அவள் எறிந்த பந்தைத் திருப்பி அடிக்கிறான் இராஜேந்திரன்.

"ஆறு ஆண்டுகள் கழித்து முதன்முறையாக இப்பொழுதுதான் நான் அண்ணனைப் பார்க்கிறேன். அவர் எங்கிருக்கிறார் என்பது தங்களுக்குத்தானே தெரியும்! பெரிய அன்னையார் இது பற்றித் தங்களிடம் பேசாமலா இருந்திருப்பார்!" என்று சமாளிக்க முனைகிறாள் அருள்மொழிநங்கை.

"அப்பா…" என்று அழைத்துக்கொண்டு அங்கே வந்த சிவாச்சாரியின் மகள் சிவகாமி, மற்றவர்களைக் கண்டு அப்படியே நின்று விடுகிறாள்.

"சிவகாமி!  கோப்பரகேசரியாருக்கு வணக்கத்தைத் தெரிவியம்மா!" என்று பணிக்கிறான் சிவாச்சாரி.

"வணக்கம் கோப்பரகேசரியார் அவர்களே!" என்று சிவகாமி தரையில் விழுந்து வணங்குகிறாள். அவளது கணீரென்ற குரல் இராஜேந்திரனை வியப்பில் ஆழ்த்துகிறது. எழுந்து அவளைத் தூக்கி அணைத்துக் கொள்கிறான்.

"எப்படி அம்மா இருக்கிறாய்? தம்பி என்ன செய்கிறான்?" என்று தன் மடியில் அவளை அமர்த்திக் கொண்டு, அவள் கன்னத்தை நிமிண்டியபடி கேட்கிறான் இராஜேந்திரன்.

"நான் சௌக்கியமாக இருக்கேன்.  தம்பி விளையாட மாட்டேங்கறான்.  அப்பாவை எழுதப் படிக்கக் கத்துத் தரக் கேட்டேன். அம்மா வேண்டாங்கறா." விடுவிடென்று அவனிடம் எல்லாவற்றையும் ஒப்பிக்கிறாள் சிவகாமி.

இராஜேந்திரன் மகிழ்ச்சியில் புன்னகைக்கிறான்.

"பாட்டா, பாட்டா!" என்றபடி அங்கு ஓடிவந்து அவன் கால்களைக் கட்டிக் கொள்கிறான் மறையன் அருள்மொழி. மகள் வயிற்றுப் பெயரனை வாரி எடுத்து சிவகாமிக்குப் பக்கத்தில் இருத்திக் கொள்கிறான் இராஜேந்திரன்.

அனைவரும் அரசமரியாதையுடன் நடத்தும் தன் தந்தையை, 'பாட்டா' என்று தன் மகன் முறைசொல்லி அழைப்பதைப் பார்த்து மனதுக்குள் பூரிக்கிறாள் அருள்மொழிநங்கை. இரண்டு குழந்தைகளிடமும் சிறிது நேரம் சிரித்துப் பேசி மகிழ்கிறான் இராஜேந்திரன்.

"கோப்பரகேசரியார் அவர்களே!  எங்க அப்பா தொடர்ந்து உங்ககிட்ட வேலை பார்ப்பாரா?" திடுதிடுப்பென்று பிரம்மாஸ்திரமாக சிவகாமி ஒரு கேள்வியைத் தொடுத்தது அவனுக்கு மலைப்பை வரவழைக்கிறது.

அனைவரும் அதிர்ந்துபோகிறார்கள். இந்தச் சிறுமி ஏன் இப்படிக் கேட்கிறாள்?

அவள் மேலே ஏதாவது பேசி குழப்பாமல் இருக்க வேண்டுமே என்று உள்ளூர நினைத்துக்கொண்ட சிவாச்சாரி, தனது முகத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் காட்டாமல் மறைத்துக்கொள்கிறான். ஏனெனில் அந்தக் கேள்வியை அவள் கேட்டவுடன் இராஜேந்திரனின் கவனம் தன் பக்கம் திரும்பும் என்று அவனுக்கு நன்றாகவே தெரிகிறது.

அது உண்மை என்பதை மெய்யாக்குவது போல சிவாச்சாரியை இராஜேந்திரன் உற்றுநோக்குகிறான். அவனது விழிகள் 'என்ன இது?' என்று அவனை விசாரிக்கின்றன.

"பிறகு சொல்கிறேன்" என்பது போல சிறிது தலையை அசைக்கிறான் சிவாச்சாரி.

"ஏனம்மா உனக்கு அந்த சந்தேகம்?" என்று சிரித்துக்கொண்டே கேட்கிறான் இராஜேந்திரன்.

அருள்மொழிநங்கைக்கு உள்ளூரக் கவலையாக இருக்கிறது. சிவகாமி சின்னக்குழந்தையாக இருந்தாலும் பெரிய மனுஷியாகப் பேசுவாள் என்பது அவனுக்குத் தெரிந்தாலும் இப்படி ஒரு கேள்வி கேட்கிறாள் என்றால் தன் கணவன் ஏதாவது அவளிடம் பேசியதை தவறாக எடுத்துக்கொண்டிருக்கிறாளோ என்று சந்தேகப்படுகிறாள். இருப்பினும் தனது தந்தையும் குணமும் அவளுக்கு நன்றாகத் தெரியும் – முழு விவரத்தையும் சிவகாமியின் வாயிலிருந்து வரவழைக்கும் திறமை அவனுக்கு உண்டு என்று.

"சக்ரவர்த்தியார் கொடுத்த தமிழ்த்திருப்பணி வேலையைச் செய்ய நீங்க அனுமதி கொடுப்பீங்களா?"

அருள்மொழிநங்கைக்கு தூக்கிவாரிப் போடுகிறது. என்ன கேட்கிறாள் இவள்!  காலையில் தன் கணவர் திருப்பணிச் சுருளில் வழக்கப்படி எழுதியபோது என்ன இவள் கேட்டாளோ, என்ன அவர் சொன்னாரோ!

"ஏனம்மா அப்படிக் கேட்கிறாய்?  நான் அனுமதி கொடுக்கமாட்டேன் என்று யாராவது சொன்னார்களா?" சிவாச்சாரியை அமைதியாக இருக்கும்படி தன் கண்களாலேயே எச்சரித்தபடி அவளை வினவுகிறான்.

"அப்படிச் சொல்லலை."

"எப்படிச் சொன்னார்கள்?"

"திருப்பணியை முழுக்க முழுக்க கவனமாச் செய்வீங்களான்னு அப்பாவைக் கேட்டேன். நீங்க அனுமதிக்கும் வரை செய்வேன்னு அப்பா சொன்னார்" என்று இழுத்தவளிடம், "ஏன்?  என் அனுமதி கிடைக்காது என்று சொன்னாரா?" என்று அவளைத் தன் மடியில் நிறுத்தி வைத்து, அவள் முகத்தைத் தன் முகத்துக்கு நேராக வைத்து, ஏதோ இரகசியம் பேசுவதுபோல இராஜேந்திரன் கேட்கிறான்.

"சக்ரவர்த்திகளுக்கு அப்புறம் உங்ககிட்ட அவர் வேலை பார்க்கதுனால உங்க அனுமதி இருக்கவரைக்கும் திருப்பணி செய்வேன்னு சொன்னார். அதுனாலதான் நான் கேட்டேன், எங்க அப்பா உங்ககிட்ட தொடர்ந்து வேலைபாப்பாரான்னு.  ஏன்னா, ஏன்னா…." சிறிது நேரம் காலையில் நடந்ததைத் தன் மனதில் கொணர்ந்து பார்த்து விட்டு மீண்டும் தொடர்கிறாள்.

"ஏன்னா, எங்க அப்பா சொன்னதை நான் செய்வேன். உங்க அப்பா என் அப்பாவைச் செய்யச்சொன்னதை நீங்க தொடந்து செய்யச் சொல்வீங்களா?"

அவள் கன்னத்தை மீண்டும் ஒருமுறை செல்லமாக நிமிண்டியபடி, "திருப்பணி மேல ஏம்மா உனக்கு இவ்வளவு அக்கரை?" என்று கேட்கிறான்.

"அப்பா அதை பொக்கிஷம் அப்படீன்னு சொன்னார். பொக்கிஷம்னா ரொம்ப முக்கியம் இல்லையா? அதுனாலதான் அதை அப்பாவே தொடர்ந்து செய்யணும்னு…" திடுமென்று தன்னைச் சுற்றி இருப்பவர்களைப் பார்க்கிறாள் சிவகாமி.

எல்லோரும் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பது அவனுக்கு வெட்கத்தை வரவழைக்கிறது. சட்டென்று இராஜேந்திரனின் மடியிலிருந்து குதித்து ஓடிப்போய் விடுகிறாள்.

சிவாச்சாரி தன்னிடம் ஏதோ சொல்ல விரும்புகிறான், ஆனால் மற்றவர்கள் முன்னர் எப்படி அதைச் சொல்வது என்று தயங்குகிறான் என்று புரிந்துகொண்ட இராஜேந்திரன், "எல்லோருக்கும் ஒன்று சொல்லிக்கொள்கிறேன்.  சோழ சாம்ராஜ்யம் இருக்கும்வரை சிவாச்சாரியார் அதற்குப் பணி செய்து கொண்டுதான் இருப்பார். இது என் விருப்பம் மட்டுமல்ல, ஆணையும்கூட.

"நானும் தமிழ்த்திருப்பணியைப் பற்றிப் பேசத்தான் வந்தேன். சிவகாமியின் வாய்மூலமாக அது எனக்கு மீண்டும் நினைவுபடுத்தப்பட்டது. நங்கை!  தந்தையார் இருந்தவரை நீங்கள் அனைவரும் இங்கு பழையாறையில் இருந்தீர்கள். தந்தையார் சிவாச்சாரியாரின் தமிழ்ப்பணி ஆலோசகராக இருந்ததால், அவர் திருமந்திர ஓலைநாயகமாக இருந்தும், தஞ்சைக்கு அழைக்காமல் இருந்தேன்.

"தந்தையார் சிவனடி சேர்ந்து இரண்டு ஆண்டுகள் செல்லப் போகின்றன. அவரது நினைவாலயமும் கட்டப்பட்டாகிவிட்டது. அத்தையார்தான் பழையாறை அரண்மனையை விட்டு வர இயலாத நிலையில் இருக்கிறார். இருப்பினும், அரசுப்பணிகள் இப்பொழுது தஞ்சையில்தான் நடைபெறுகின்றன. மேலும் தலையாய பணிகள் நடக்க இருக்கின்றன.  எனவே…" என்று நிறுத்திய இராஜேந்திரன் அனைவரையும் நோக்குகிறான்.

"சிவாச்சாரியர் எம் அருகில் இருப்பதுதான் சிறந்தது என்று முடிவுசெய்திருக்கிறேன். அடுத்த மாதத்திற்குள் குடும்பத்துடன் தஞ்சைக்கு வந்து சேர்வீராக. நங்கை, நீயும் புறப்பட ஆயத்தம் செய்வாயாக. இரண்டு ஆண்டுகள் அமைதியாக இருந்திருக்கிறோம். உள்நாட்டில் நிறைய அமைதிப்பணிகள் செய்துள்ளோம். இனி நிறைய வேலைகள் உள்ளன. தந்தையாருக்குப் பின்னர் சோழநாட்டை எப்படி வழிநடத்திச் செல்வது, எப்படி விரிவுபடுத்துவது என்பதைப் பற்றி மந்திரலோசனை செய்ய வேண்டும். அது அடுத்த மாதம் நடக்கப் போகிறது" என்று தன் முடிவை அறிவிக்கிறான்.

***

திருமயிலை

ராட்சச, தை 1 – ஜனவரி 14, 1016

லயத்திலிருந்து திரும்பிவந்த தந்தை தன்னிடம் கொடுத்த நிவேதனப் பொருள்களை வாங்கிக் கொள்கிறாள் நிலவுமொழி. தஞ்சையிலிருந்து திருமயிலைக்குத் திரும்பிவந்து இரண்டு ஆண்டுகள் ஆகப் போகின்றன…

…சிவாச்சாரிக்கும், அருள்மொழிநங்கைக்கும் திருமணம் ஆகும்வரை தஞ்சையில் தங்கியிருந்த அவள், திருமயிலைக்குத் திரும்பிச்செல்வதுதான் சிறந்தது என்று தீர்மானித்துத் தன் விருப்பத்தைச் சிவாச்சாரியிடம் தெரிவித்தாள். குந்தவியுடன் வேங்கைநாடு செல்வதுதானே என்ற கேள்வி வந்தபோது, அது தன்னை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கும் என்ற தயங்கினாள். அதை ஒப்புக்கொண்ட சிவாச்சாரி, பழையாறை மாளிகையில் தங்களுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டான். அவனுடைய கருத்துக்கு மாறுசொல்ல விரும்பாத நிலவுமொழி அவர்களுடன் பழையாறைக்கே சென்றாள்.

உதகையிலிருந்து திரும்பிவந்த இராஜராஜ நரேந்திரன் சிவாச்சாரியை இளஞ்சேரன் சிறையில் அடைத்த சேதியை அனைவருக்கும் தெரிவித்ததை அறிந்து மிகவும் துடித்துப்போனாள். அருள்மொழிநங்கைக்கு ஆறுதல் சொல்வதிலேயே ஆறு மாதங்கள் கழிந்தன.

அடுத்து, சிவாச்சாரி மீண்டு வந்தவுடனேயே இராஜராஜர் சிவனடி சேர்ந்ததுவிட்டார். அச்சேதியறிந்து சோழப்பேரரசே செயலிழந்து நின்றது. இராஜேந்திரனின் திறமையால் அவரது இழப்பை நினைத்து நாடு வருந்தி நிற்காமல், உற்சாகமூட்டப்பட்டது. மக்கள் இராஜராஜரைப் போன்று பெருநோக்கமுள்ள மன்னர் ஒருவர் அரியணையில் இருக்கிறார் என்று தங்களைத் தேற்றிக் கொண்டு எதிர்காலத்தை நோக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில் இராஜேந்திரனுக்கு பக்கபலமாக அதிக நேரத்தைச் சிவாச்சாரி அவனுடன் கழிக்கவும், நாட்டில் பலபகுதிகளுக்குச் சென்று, அரச ஆணைகள் நிலைபெறவும் உதவி செய்ய ஆரம்பித்தான்.

அச்சமயம் திருமயிலைக்குச் சென்று, மூன்று ஆண்டுகளாக பிரிந்திருந்த தந்தையைச் சந்திக்க நிலவுமொழி விருப்பம் தெரிவித்தாள். எனவே, தகுந்த மரியாதைகளுடனும், சன்மானங்களுடனும், வீரர்கள் துணையுடன் சிவாச்சாரி அவளைத் திருமயிலைக்கு அனுப்பி வைத்தான்.

இருந்தபோதிலும், அவளின் வேலை முழுவதும் நிறைவு பெறவில்லை என்ற குறை அவனுக்கு இருந்து வந்ததை அவளுக்கு அவன் தெரிவித்ததும் அவளுக்கு அப்பொழுதுக்கப்பொழுது நினைவுக்கு வந்துகொண்டுதான் இருந்தது…

…"என்னம்மா நிலா, எப்பொழுதும் எதையோ பறிகொடுத்தது போல இருந்து வருகிறாயே, என்னம்மா அது?" என்று கனிவுடன் கேட்கிறார் அவளது தந்தை பொன்னம்பல ஓதுவார்.

"இல்லையப்பா. ஏதேதோ நினைவுகள். அவ்வளவுதான்!" என்று மெல்லச் சிரிக்க முயல்கிறாள்.  அது மனதிலிருந்து வராததால் உதடுகள் பிரிகின்றனவே தவிர, அவளது வழக்கமான மலரும் சிரிப்பாக அது இல்லை.

அது அவளது தந்தைக்கும் தெரிகிறது. இந்தப் பெண் ஏன் இப்படி இருக்கிறாளோ என்று மனம் வருந்துகிறார்.

"உன் மனத்தில் இருப்பதை முகம் கண்ணாடியாகக் காட்டுகிறதே அம்மா!  உன் தந்தை நான்; என்னிடமும் உன் மனதைப் பகிர்ந்துகொள்ளாவிட்டால் யாரிடம் பகிர்ந்துகொள்வாய் அம்மா!  நீ வருந்தினால் என் உள்ளமும் வருந்துகிறது. நீ சோழநாட்டிலிருந்து திரும்பி வந்ததிலிருந்து எதையோ பறிகொடுத்தவள் மாதிரித்தான் இருக்கிறாய்.

"உன்னை ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டால் பொறுப்பு முடிந்த நிம்மதி எனக்கு ஏற்படும். எப்பொழுது திருமணப் பேச்சை எடுத்தாலும் நீ என்னைத் தடுத்து விடுகிறாய்.  கோப்பரசேகரியார் மற்றும் சிவாச்சாரியார் தயவினால் உன் திருமணத்திற்கான பொருள்கள், நகைகள் எல்லாம் நிறையவே இருக்கின்றன. அவர்கள் கொடுத்த மானியமும் நமது தலைமுறையின் தேவைக்கு மேலேயே இருக்கிறது. உனக்குத் திருமணம் ஆகிவிட்டால், இதையெல்லாம் உன் கணவனே பார்த்துக்கொள்வான் அல்லவா?  நானும் கபாலீஸ்வரரைத் துதித்துக்கொண்டு என் காலத்தைத் தள்ளிவிடுவேன்" என்று புலம்ப ஆரம்பிக்கிறார்.

'எனக்கே என் நிலைமை புரியவில்லை. அப்படியிருக்க உங்களுக்கு அதை எப்படி எடுத்துச் சொல்வேன்!' என்று நினைத்துக் கொள்கிறாள் நிலவுமொழி.

ஒருசில சமயங்கள், தான் திருமயிலைக்குப் புறப்பட்டு வந்ததும் தவறுதானோ என்று அவளுக்குத் தோன்றுகிறது. சிவாச்சாரிக்குத் தகவல் சொல்லி அனுப்பலாம் என்றால் அது எப்படி என்றுகூட அவளுக்குப் பிடிபடவில்லை.

தனது தந்தைக்கோ ஆலயத்தையும், வீட்டையும் தவிர எதுவும் தெரியாத நிலை. அவருக்கு மானியமாகக் கொடுக்கப்பட்ட நிலங்களை நிர்வாகம்செய்யக்கூட அவருக்குத் தெரியவில்லை. குடியானவர்கள் பழிபாவத்திற்கு அஞ்சிய நல்லவர்களாக இருந்து, அவர்களே அறுவடை முடிந்ததும் தேவைக்கும் மேலாக நெல்மூட்டைகளை இறக்கிவிட்டுப் போய்விடுவதால் சாப்பாட்டுக்குக் கவலையில்லாமல் இருக்கிறது.

மறைந்த சோழச்சக்ரவர்த்தி இராஜராஜர், கோப்பரகேசரி இராஜேந்திரன், அவரது மகள், வேங்கை நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரன் என்று அனைவருக்கும் அருகில் எத்தனை காலம் பழகி இருக்கிறாள்! சோழ சாம்ராஜ்ஜியத்தில் எவருக்கும் கிடைக்காத, நினைத்துப் பார்க்கவும் இயலாத பெருமையல்லவா கிடைத்திருக்கிறது!  மூன்று ஆண்டுகள் அவள் மேகத்திரள்களில் அல்லவா மிதந்து கொண்டிருந்தாள்! அது இப்பொழுது ஒரு இதமான கனவு போலத்தானே ஆகிவிட்டது!

தனது அன்புக்காக வேங்கைநாட்டு இளவரசன் தமிழைக் கற்றுக்கொள்ளும் மாணவன் ஆனானே! இதையெல்லாம் வெளியில் சொன்னால் யாரும் நம்பக்கூட மாட்டார்கள்! ஓதுவார் மகள் கனாக்கண்டு உளறுகிறாள் என்றுதான் சொல்வார்கள்!

தனது தந்தையிடம்கூட அவள் இதைப்பற்றிச் சொன்னதில்லை. அவரும் குந்தவிக்குப் பணிப்பெண்ணாக இருந்து விட்டுத் திரும்பியிருக்கிறாள் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார். மூன்று ஆண்டுகளாகக் காணாத பெண்ணைக் கண்ட மகிழ்ச்சி இருந்தாலும், தான் ஒரேயடியாகத் திரும்பி வந்துவிட்டதால், அரசுப்பணி செய்யும் ஒரு நல்ல வேலைக்காரனைத் தன் பெண் மணந்து கொண்டு வாழ்வில் உயர்மட்டத்திற்குச் செல்வாள் என்று அவர் கண்ட கனா கலைந்து அவருக்கு மனவருத்தத்தை வரவழைத்தது என்று அவளுக்குத் தெரியாமல் இல்லை.

கோப்பரகேசரி இராஜேந்திரனின் வாக்கைப்பற்றி அவள் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறாள். எப்பொழுதும் சொன்னசொல் தவறாத அவர், மகள் என்று அறிவித்துவிட்டுத் தன்னை மறந்துவிட்டிருப்பார் என்று அவளால் எண்ணிப்பார்க்க முடியவில்லை.

அதுமட்டுமன்றி, தன்னைப் பற்றிய கவலை தனது தந்தைக்கு இருக்காது என்று உறுதியளித்து, தன்னை அழைத்துச் சென்ற சிவாச்சாரியிடமிருந்தும் இரண்டு ஆண்டுகளாக எச்செய்தியும் வராததை எண்ணி வருந்துகிறாள்.

அரசர்களும், அவரைச் சார்ந்தவர்களும், கொடுத்த வார்த்தையை இப்படி மறந்து விடுவார்களா என்று எண்ணிப் பார்த்தால் அவளுக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது.

இருந்தாலும் சிவாச்சாரியாரையும், கோப்பரகேசரி இராஜேந்திரனையும் மீண்டும் சந்திப்போம் என்று அவள் உள்மனது சொல்லிக்கொண்டே இருக்கிறது. தன் வாழ்வை நல்ல நிலைமைக்குக் கொண்டு வருவது தனது பொறுப்பு என்று சொன்னவரும், தன்னை மகள் என்றவரும் தன்னை மறந்து விட்டுவிட மாட்டார்கள் என்று தனக்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறாள்.

எனவேதான், தந்தை திருமணப் பேச்சை எடுத்தாலும் அதற்குச் சரிவர பதில் சொல்ல அவள் மனது இடம் கொடுக்கவில்லை.

"இப்படி அமைதியாக இருந்தால் என்னம்மா செய்வேன்?  கோவிலில் எல்லோரும் என்னைக் கேள்விமேல் கேள்வி கேட்கிறார்கள். இருபது வயதுக்கு மேல் ஆன பெண் வீட்டில் இருக்கும்போது அவளது திருமணத்தைப் பற்றியே நினைக்காமல் நீர் எப்படி நிம்மதியாக இறைவன்மீது துதிபாடிக்கொண்டிருக்கிறீர்கள் என்று நகையாடுகிறார்கள். சோழச் சக்ரவர்த்தியின் மகளுக்குத் துணையாகப் போனவள் விட்டெறிந்த பந்துபோலத் திரும்ப வந்திருக்கிறாளே, என்ன நடந்தது என்று வேறு தூற்றுகிறார்கள். எனக்கு ஒரு முடிவைச் சொல்லம்மா!" என்று அவர் கேட்பது நிலவுமொழியை என்னவோ செய்கிறது.

"எனக்கு மூன்று மாதங்கள் அவகாசம் கொடுங்கள் தந்தையே!" என்று அவளது வாயிலிருந்து பதில் வருவது அவள் காதில் விழுகிறது.

நாமா இதைப் சொன்னோம் என்று அவளுக்குத் திகைப்பாக இருக்கிறது. தன்னையும் அறியாமல் அல்லவா தந்தைக்குப் பதில் சொல்லி இருக்கிறோம் என்று நினைத்துக் கொள்கிறாள்.

"மூன்று மாதம் என்ன கணக்கு, அம்மா?" என்று அவர் கேட்டதற்கு என்ன பதில் சொல்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் மூன்று மாதத்திற்குள் தனது குழப்பத்திற்கு நல்ல விடை கிடைக்கும் என்று அவளது உள்மனம் சொல்கிறது.

"தந்தையே!  உங்கள் மகள் உங்களை மற்றவர்களின் தூற்றுதலுக்கு ஆளாக விடமாட்டாள்!  எப்படியும் நல்லதே நடக்கும்!  நான் கேட்ட மூன்று மாத அவகாசத்தை எனக்குக் கொடுங்கள்!  வரும் வருடப் பிறப்பன்று நல்லவழி கட்டாயம் நமக்குத் தெரியும்!" என்று அவருக்கு அமைதியளிக்கும் வகையில் பதிலளிக்கிறாள்.

"கைகால் கழுவிக்கொண்டு வாருங்கள். உங்களுக்குப் பிடித்த கீரைக்குழம்பும், அவரைக்காய் வாட்டலும், செந்நெல் அரிசிச் சோறும், புத்தரிசியில் பொங்கிய பொங்கலும் வைத்திருக்கிறேன்" என்று அவரை புழக்கடைக்கு அனுப்பி வைத்தவள் சிவாச்சாரியிடமிருந்து ஏன் ஒருவிதத் தகவலும் வரவில்லை என்று நினைத்துக் குழம்புகிறாள்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மாதா மாதம், அவளுக்கும் தெரியாமல் அவளைப் பற்றிய விவரங்களை ஒற்றர் மூலம் அவன் அறிந்துகொண்டுதான் இருக்கிறான் என்றும், அவன் தனக்காக திட்டம் தீட்டிக்கொண்டுதான் இருக்கிறான் என்றும் அறிந்துகொள்ளவும் அவளுக்கு வாய்ப்பு இல்லைதான்!

***

ரோகணம்

ராட்சச, தை 1 – ஜனவரி 14, 1016

விக்கிரம பாண்டியனைக் கண்டதும் முருகேசன் மகிழ்ச்சியில் அதிர்ந்து போகிறான். பாண்டிய ஒற்றன் முத்துவீரப்பன் பாண்டிய மன்னனைச் சந்திக்கத்தான் தன்னை வெளியில் அழைத்துச் செல்கிறான் என்று அவனால் எண்ணிக்கூடப் பார்க்க இயலவில்லை. அந்த வியப்பில் என்ன பேசுவது என்றுகூட அவனுக்குத் தெரியாமல் போகிறது.

"மகராசா!  நீங்களா?  இந்த ஏழைக்காகவா நீங்க இப்பிடி மாறுவேசம் போட்டுக்கிட்டு வந்தீங்க!  இந்தப் பயபிள்ளை வீரப்பன் நீங்க வந்திருக்கறதப் பத்தி ஒண்ணுமே சொல்லாம வீட்டுல குந்திக்கிட்டு நல்லா திண்ணுக்கிட்டில்ல இருந்தான் மகராசா!  இந்த பொங்கல் திருநாள்ல நீங்க இப்படித் தனியா இருக்கலாமா?  வூட்டுக்கு வாங்க, மகராசா!  உங்களுக்காக நல்லவிதமா என் பொண்டாட்டி சமைச்சுப் போடுவா!" 

விக்கிரம பாண்டியனின் காலடியில் மண்டியிட்டபடி முருகேசன் தன்னை மறந்து புலம்புகிறான்.

அவன் கண்ணில் தாரைதாரையாக நீர் வழிகிறது. அருகில் சருகுகள் மிதிபடும் சத்தம் கேட்கவே திரும்பிய அவன் கண்கள், தன் அண்ணன் வெற்றிவீரனையும், அவன் மகன் காளையப்பனையும் கண்டதும் பெரிதாக மலர்கின்றன.

"என்னண்ணே இது?  மகராசாவுடன் வந்திருக்கீங்க, காளையப்பனையும் கூட்டி வந்திருக்கீங்க, மகராசாவை நம்ம வூட்டுக்குச் சாப்பிடக் கூட்டிட்டு வராம விட்டுப்புட்டீங்களே!" தன் அண்ணனை ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகக் காணாமலிருந்த ஏக்கம் அவன் குரலில் ஒலிக்கிறது.

அவன் முதுகை ஆதரவாகத் தடவிக் கொடுத்து அவனைத் தூக்குகிறான் விக்கிரம பாண்டியன்.  அவன் சரக்கு வியாபாரி போல மாறுவேடம் அணிந்திருக்கிறான். அவனை நன்கு அறிந்தவர்கள் மட்டுமே அடையாளம் கண்டுகொள்ள இயலும் – மற்றவர்கள் அவன் பாண்டிய அரசன் என்பதை அறிய மாட்டார்கள்.

"முருகேசா, எழுந்திரு. முக்கியமான காரணமாகத்தான் நாங்கள் உன் வீட்டிற்கு வரவில்லை.  உன் மனைவி ஐயப்படக்கூடாது என்பதற்காகத்தான் முத்துவீரப்பனும் உன்னை அவசரப் படுத்தவில்லை. நீ எதற்காக இங்கு இருக்கிறாயோ அதைச் சோதிக்கும் தருணம் வந்துகொண்டிருக்கிறது. அதுபற்றி உன்னை எச்சரித்துவிட்டு, மேலே என்ன செய்ய வேண்டும் என்பதையும் உனக்கு விளக்கவே நேரில் வந்திருக்கிறேன்" என்று அவனை ஆதரவான குரலில் தேற்றுகிறான் விக்கிரமன்.

"ஆமாம் முருகு. தங்கச்சியையும், குழந்தைகளையும் உடனே நீ நெல்லைக்கு அனுப்ப வேணும்.  இனிமேல் அவர்கள் இங்கே இருப்பது நல்லதுக்கல்ல!" என்று வெற்றிவீரன் எதிர்பாராத ஒரு எச்சரிக்கையை விடுகிறான்.

திடுக்கிடுகிறான் முருகேசன்.

"அப்படியா?"

"முருகேசா, என் தந்தை நமது பரம்பரைப் பொக்கிஷங்களைச் சோழர்களிடமிருந்து பாதுகாக்க இந்தத் தென்னிலங்கையில் உன்னை நூறு வீரர்களுக்குத் தலைவனாக விட்டுச்சென்றார் என்று நான் உனக்கு நினைவுபடுத்த வேண்டியதில்லை. சோழர்கள் பரம்பரையையே வேரறுக்க வேண்டும் என்று எனக்கும், என் சந்ததியினருக்கும், உன்னைப் போன்ற அரச விசுவாசிகளான பாண்டிய வீரர்களுக்கும் ஆணையிட்டுத்தான் உயிர் நீத்திருக்கிறார். அதைச் செய்யவேண்டிய தருணம் வந்துவிட்டது!"

விக்கிரம பாண்டியன் தொடர்கிறான்: "இராஜராஜன் இறந்ததும் சோழ வீரர்களெல்லாம் இணையில்லாத் தலைவனை இழந்துவிட்டோமே என்று கதிகலங்கி இருக்கிறார்கள்.  துங்கபத்திரை நதிக்கு வடக்கே போருக்குச் சென்றிருந்த வீரர்கள்கூட எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டுத் திரும்பி வந்துவிட்டார்கள். இராஜேந்திரனுக்கு வீரம் இருக்கும் அளவுக்கு மதி இல்லை. சினம் இருக்கும் அளவுக்குச் சிந்திக்கும் திறன் இல்லை. இது அனைவரும் அறிந்ததே. அதனால்தான் இராஜராஜன் தனது உடல்நிலை குன்றும்வரை அவனுக்கு பட்டம் அளிக்கவில்லை. இப்பொழுது இராஜேந்திரன் தனது தலைமையை நிலைநாட்டும் வேலையில் முனைந்திருக்கிறான்.

"எனவே, சிங்கள மன்னருடனும், இன்னும் வடநாட்டு மன்னர் ஒருவருடனும் படை திரட்டி வருகிறோம். முதலில் அவனுக்குத் தலைவலி உண்டாக்குவதற்காக சோழநாட்டு வணிக நாவாய்களைச் சிங்களவர்கள் உதவியுடன் சிதறடிக்கப்போகிறோம். இதனால் நமக்கு இரட்டை வெற்றி கிட்டும்.  வணிக நாவாய்களின் செல்வங்களைக் கைப்பற்றுவதோடு, வணிகர்களிடையே இராஜேந்திரனுக்கு உள்ள செல்வாக்கை மழுங்கடித்துவிடலாம். சேரமான் பாஸ்கர ரவிவர்மனும் தனது மகனின் இறப்பிற்குப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறான். ஒரேசமயத்தில் கடல், இலங்கை, சேரநாடு, பாண்டிநாடுகளில் சோழப் படைகளைத் தாக்கினால் இராஜேந்திரன் எங்கு தனது கவனத்தைச் செலுத்துவான்?

"எனவே, இங்கும் கடுமையான போர் நடக்க வாய்ப்புள்ளது. உனக்குத் துணையாக – உன் சொல்லுக்காக உயிரையும் கொடுக்கச் சித்தமாக இருக்கும் – தேர்ந்தெடுத்த மூவாயிரம் பாண்டிய வீரர்களை இங்கு விட்டுச் செல்லப் போகிறோம். அந்த வீரர்கள் அனைவருக்கும் நீதான் தலைவன்.

"நமது பொக்கிஷத்தைப் பாதுகாக்க என்னவிதமான நடவடிக்கைகள், பாதுகாப்புகள் எடுக்கவேண்டுமோ அதை எடுப்பாயாக. எப்படிப்பட்ட அரண்கள், தடுப்புகள் கட்ட வேண்டுமோ, அவற்றை உடனே கட்டத் தொடங்குவாயாக!" சிறிது நேரம் தான் சொல்வது முருகேசனின் உள்ளத்தில் பதிகிறதா என்று அவனை அளவெடுக்கிறான் விக்கிரமன்.

அரசன் பேசும்போது குறுக்கிடுவது அழகல்ல என்று அமைதியாக இருக்கும் முருகேசன், அவனுடைய ஆணைக்கு மரியாதைசெலுத்தத் தலையை மட்டும் அசைக்கிறான்.

"இலங்கை மன்னர் மகிந்தரும் ஐயாயிரம் சிங்கள வீரர்களைப் பொக்கிஷப் பாதுகாப்புக்காகத் தர ஒப்பம் அளித்திருக்கிறார். அவர்களுக்கும் நீயே தலைவனாக இருப்பாய். சோழர்களை உறுதியாக இத்தடவை தோற்கடித்து விடுவோம். நீயும் உனது கடமையை உணர்ந்து செயல்படுவாயாக! உன் கவனம் சிதறக்கூடாது, உன் மனைவி மக்களைப் பற்றிய கவலை இருக்கக் கூடாது என்பதற்காகவே அவர்களைப் பாண்டிநாட்டின் பாதுகாப்பான இடமான நெல்லைக்கு அனுப்பிவை என்று உனக்கு ஆணையிடுகிறோம். அவர்களின் பாதுகாப்புக்கு எமது உத்திரவாதத்தை உனக்கு யாமே அளிக்கிறோம்!" என்று மேலும் விளக்குகிறான் விக்கிரமன்.

"ஆணை அரசே!" என்று முருகேசன் பெருமிதத்துடன் பதிலளிக்கிறான்.

கடைசியில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பாண்டி நாட்டுக்காக வாளேந்தும் தருணம் வருகிறது என்பதை அறிந்த மகிழ்ச்சி அவன் முகத்தில் பளிச்சிடுகிறது.

"மிக்க மகிழ்கிறேன் முருகேசா!" என்ற விக்ரமன் மேலும் தொடர்கிறான்.

"உன் போன்ற வீரர்கள்தான் பாண்டிநாட்டுக்குத் தேவை! நாம் வெற்றிபெறுவோம்!  சோழர்களைத் தஞ்சைக்கு விரட்டி, கிடுக்கிப்பிடிபோட்டு மடக்குவோம்!  நமது வெற்றி விழாவிலே கலந்துகொள்ள நீ மதுரைக்கு நமது பரம்பரைப் பொக்கிஷத்தோடு வரத்தான் போகிறாய்! அங்கு உன் மனைவி மக்களுடன் இணைந்து பாண்டிநாட்டுக்கு மேலும் பல வீரமக்களைப் பெற்றுத்தரத்தான் போகிறாய்! வெற்றிவீரனுடனும், காளையப்பனுடனும் நாளை பாண்டிநாட்டுக்குத் திரும்பும் என்னுடன் உன் மனைவியையும், குழந்தைகளையும் அனுப்பி வைப்பாயாக!" அவன் முதுகில் அன்புடன் தடவிக்கொடுக்கிறான்.

முருகேசனுக்கு மெய் சிலிர்க்கிறது. நான்கு ஆண்டுகளாக வாளாவிருந்த பாண்டியப் படை சோழர்களின் மீது பாயப்போகிறது என்றதை அறிந்து மகிழ்கிறான். மீனக்கொடி மீண்டும் மதுரையில் பறக்கும் நாளைக் கண்ணுறப் போவதை எதிர்நோக்கி அவன் உள்ளம் பூரிக்கிறது.

"ஆணை, அரசே!  என் உடலில் கடைசிச் சொட்டுக் குருதி உள்ளவரை பாண்டியப் பொக்கிஷம் பாதுகாக்கப்படும்! ஒவ்வொரு பாண்டிய மறவனும் ஒன்பது சோழ வீரர்களுக்குச் சமம்!  தினவெடுத்த எங்கள் தோள்களுக்கு, அவர்களது உயிரைக் குடிக்கும் போர் ஒரு பயிற்சியாக இருக்கும்! இது சொக்கநாதர் மீதும், அங்கயற்கண்ணி அம்மை மீதும் ஆணை!" வீரத்துடன் முழங்குகிறான்.

"இன்று இரவு நான் உன் வீட்டில் உணவு உண்டுவிட்டுத்தான் செல்லப்போகிறேன். என்னுடன் மொத்தம் இருபது பேர் வருவார்கள். இப்பொழுது காளையப்பன் உன்னுடன் வருவான்.  அழைத்துச் செல்" என்று திரும்பி நடக்கிறான் விக்கிரம பாண்டியன்.

வீட்டிற்கு வந்த முருகேசன் முதல் வேலையாகத் தன் புஜத்தில் இருந்த தாயத்தை அவிழ்த்து சொக்கனின் கழுத்தில் மாலையாக அணிவிக்கிறான். வள்ளிக்குத் தூக்கிவாரிப் போடுகிறது.  "என்ன அத்தான் இது? நம்ம பரம்பரைச் சொத்தை இப்படித் திடுமுனு சொக்கன் கழுத்திலே கட்டுறீங்களே!" என்ற பதைபதைப்புடன் வினவுகிறாள்.

"மகாராசா ரவைக்கு (இரவில்) நம்ம வூட்டுக்குச் சாப்பிட வரப்போறாரு புள்ளே!  வெட்டிக் கேள்வி கேக்காம இருவத்தஞ்சு பேருக்கு உடனே சாப்பாடு ஆக்கற வேலையப் பாரு!" என்று முருகேசனிடமிருந்து அதட்டலான பதில் வருகிறது.

***

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com