பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 7

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 7

ஒரு அரிசோனன்

தென்பாண்டி நாடு 

காளயுக்தி, வைகாசி 16 – ஜூன் 2, 1018 

கொற்கையிலிருந்து நெல்லைக்குச் செல்லும் வழியில் அக்குதிரைகள் விரைந்து கொண்டிருக்கின்றன. ஒரு வணிகனைப் போல உடையணிந்திருக்கிறான், மாறுவேடத்தில் இருக்கும் விக்கிரமபாண்டியன். வேலையாள் போல உடையணிந்து அவனுக்கு அடுத்த குதிரையில் காளையப்பன் சவாரி செய்துகொண்டிருக்கிறான். அவர்களைச் சுற்றிப் பன்னிரண்டு குதிரைகளில் வணிகர்கள்போல வேடமணிந்து பாண்டிய வீரர்கள் சவாரி செய்துகொண்டிருக்கின்றனர். 

"நமக்கு உதவி செய்த மகிந்தரை ஆயுள் தண்டனை அளித்து வெளியுலகத் தொடர்பே இல்லாது சிறையில் பூட்டிவிட்டான் இராஜேந்திரன்!" என்று பல்லைக் கடித்தவாறே முணுமுணுக்கிறான் விக்கிரமன். 

"தன் மகன் இராஜாதிராஜனையே மகிந்தன் சார்பில் வாதாடச் செய்து, ஒரு நாடகமும் ஆடியிருக்கிறார்கள், அரசே!" என்று அவனது எண்ணத்தைப் பிரதிபலிக்கிறான் காளையப்பன். 

"இதைவிடக் கொடுமை எனது மூதாதையரின் அரியணையிலேயே இராஜாதிராஜனை சோழ இளவலாக முடிசூட்டியிருக்கிறான் அந்த இராஜேந்திரன். இதை எண்ணினால் என் நெஞ்சே வெடித்துவிடும் போல இருக்கிறது காளையப்பா!" என்று உறுமுகிறான் விக்கிரமன். 

"அதோடு மட்டுமல்ல, அரசே!  ரோகணத்தில் மட்டுமல்லாது; இலங்கையில் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் மகிந்தரின் மகன் கசபனைத்5 தேடி சோழ வீரர்கள் அலைகிறார்களாம்!  இலங்கை மன்னர்களையே வேரறுக்க வேண்டும் என்று இராஜேந்திரன் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறானாம். சிங்களத் தீவைத் தமிழ் பேசும் தென் சோழ மண்டலமாக்க வேண்டும் என்றும் தீர்மானித்துள்ளார்களாம்!" என்று இன்னொருவன் தெரிவிக்கிறான். 

"அது நடக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை!" என்று உறுதியான குரலில் பதிலளித்தவாறே குதிரையைச் செலுத்துகிறான் விக்கிரமன். 

"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் அரசே?" என்று காளையப்பன் வினவுகிறான். 

"மொழி, சமயம் இரண்டும் ஒன்றாக உள்ள நாமும் சோழருமே ஒருவரை ஒருவர் அழிக்க அலைந்துகொண்டிருக்கிறோம். அப்படியிருக்க, மொழியும், சமயமும் வெவ்வேறான சிங்களவர் எப்படிச் சோழர்களை ஏற்றுக்கொண்டு தங்கள் நாட்டைச் சோழமண்டலமாக ஒப்புக்கொள்வார்கள்? தமிழை எப்படித் தங்கள் மொழியாக ஏற்பார்கள்? நமது குருதியில் சோழர்களுக்கு எதிராக எப்படி ஒரு வெறி ஓடிக்கொண்டிருக்கிறதோ, அப்படிப்பட்ட வெறி சோழர்களுக்கு எதிராக அவர்களின் குருதியிலும் ஓடிக்கொண்டிருக்கிறது! நாமாவது சோழ ஆதிக்கத்தை மட்டும்தான் வெறுக்கிறோம். தமிழை நமது உயிராகப் போற்றுகிறோம். ஆனால் சிங்களவர்கள் சோழர்கள் அவர்களுக்கு செய்யும் நன்மைகளைக்கூட வெறுக்கிறார்கள். 

————————- 

[5. மகிந்தனின் மகன் கசபன் பிற்காலத்தில் விக்கிரமபாகு என்ற பட்டத்துடன் சோழருக்கு எதிராகப் போராடி இலங்கை மன்னனாக ரோகணத்தில் ஆட்சி செய்தான்.  அவனது ஆட்சிக்காலம் பொது ஆண்டு 1019 லிருந்து 1041 எனத் தெரிகிறது.  அவன் இறந்த ஆண்டு 1037லிருந்து 1041ஆக இருக்கலாம் என்று வரலாற்றாளர் எண்ணுகின்றனர் – 1. 'The politics of Plunder: The Cholas of 11th Century Ceylon' by George W. Spencer, The Journel of Asian Studies, May 1976; 2. 'Chulavamsa'; 3. 'A Concise History of Ceylon' by Senarat Paranavitana and Cyril Wace Nicholas, Ceylon University Press, Colombo 1961.]

எனவே, சோழர்கள் தமிழை இலங்கைக்குக் கொண்டுசென்றால் தமிழையும், சோழர்களையும் ஒன்றாக்கி தமிழ் தங்களை அடக்கி ஆளவந்த சோழர்களின் குரல் என்றும் – தங்களின் அடையாளத்தையே அழித்துத் துடைத்துவிடவே தமிழைத் தங்கள்மீது திணிக்கிறார்கள் என்றும் தமிழையே வெறுப்பார்கள்6 காளையப்பா, அதனால்தான் தமிழை இலங்கையில் பரப்ப இயலாது என்று கருதுகிறேன்!" என்று விக்கிரமன் அவனுக்குப் பதிலளிக்கிறான். 

"அப்படியா அரசே?  தாங்கள் இவ்வளவு சிந்திப்பது மாதிரி ஆழ்ந்து சிந்திக்காமலா இருப்பார்கள் சோழர்கள்?" 

"அதனால்தான் இலங்கை அரசரான மகிந்தரையும் அவர் குடும்பத்தினரையும் சோழநாட்டிற்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, இலங்கை அரசு வாரிசான கசாபனையும் பிடித்து அழிக்கவும் அலைகிறார்கள். கசாபன் இல்லாவிட்டால் சிங்களவர் யாருடனும் ஒன்றுசேர இயலாதல்லவா! தலையில்லாத உடல் என்ன செய்யும்! இப்பொழுது இலங்கையின் தலை கசாபன்தான்!" 

சிறிது நேரம் விக்கிரமன் அமைதியாக குதிரையைச் செலுத்துகிறான். அவனது முகத்தில் கவலைக் கோடுகள் பரவுவதைக் கவனிக்கிறான் காளையப்பன்.  தனது அரசனின் சிந்தனை எதைப் பற்றியதாக இருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறான். அவனைப் பற்றி நன்கு அறிந்ததால், சோழர்கள் இலங்கையில் தமிழைப் பரப்ப எண்ணுவதைப் பற்றித்தான் இப்பொழுது தீவிரமாகச் சிந்திக்கிறான் என்றும் அறிந்துகொள்கிறான். எனவே, உரையாடலைத் தானாகவே மீண்டும் தொடங்கட்டும் என்று அமைதியாக இருந்து விடுகிறான். 

"காளையப்பா!" என்றபடி விக்கிரமன் மீண்டும் துவங்குகிறான்: "சோழர்கள் தமிழைப் பரப்ப ஆரம்பித்தால் சிங்களவர்கள் சோழர்களை மட்டுமல்ல, தமிழையே வெறுக்கத் துவங்குவார்கள். அவர்கள் தமிழின் மீது கொள்ளும் வெறுப்பு தமிழர்கள் அனைவரின் மீதும் தாவும், பாண்டியர்களாகிய நாமும் தமிழர்கள்தானே! இப்பொழுது சோழர்களை மட்டும் வெறுக்கும் சிங்களவர்கள் நாளை நம்மையும் வெறுப்பார்கள்! சோழர்களை எதிர்க்கச் சிங்களவர்களின் துணையை நாடும் நாம் அவர்களின் வெறுப்புக்கு உள்ளானால் என்ன ஆகும்? 

"இப்பொழுது இரண்டு காரணங்களுக்காக நாம் சோழர்களின் தமிழ்பரப்புத் திட்டத்தை எதிர்க்கவேண்டி உள்ளது. ஒன்று, நமது தாய்மொழியான தமிழ் சிங்களவர்களின் வெறுப்பை ஈட்டிக்கொள்ள அனுமதிக்கக்கூடாது. இரண்டாவது, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பாண்டியரான நம்மை சிங்களவர்களுக்கு நண்பர்களாக இருந்துவரும் நம்மை நமது ஆதரவாளர்களை, நமது நண்பர்களை, நமக்குத் தோள்கொடுத்தவர்களை, நமக்குத் தோள்கொடுக்கப் போகிறவர்களை நம்மை வெறுக்கும் எதிரிகளாகிவிட வாய்ப்பு கொடுக்கக்கூடாது. 

"எனவே, சோழர்களின் தமிழ்பரப்பும் திட்டத்தை எப்படியாவது நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.  அதற்காக எப்படியாவது சோழர்களுக்குத் தலைவலி கொடுத்து, அவர்களின் திட்டத்தைத் திசைதிருப்ப வேண்டும்!" என்று முடிக்கிறான் விக்கிரமன். 

"அதை எப்படிச் செய்ய இயலும் அரசே!  இலங்கையில் இருந்த நமது படை வீரர்களில் எனது சிற்றப்பன் முருகேசன் உள்பட ஒருவர்கூட மிஞ்சவில்லை. அவர்களுக்குத் துணையாக இருந்த சிங்களவர்களும், அவர்களது படை வீரர்களும் அழிக்கப்பட்டார்கள். சிங்களத்தில் மன்னர் என்று சொல்லிக்கொள்ள யாருமே இல்லை. பாண்டிநாட்டிலும் சோழப்படைகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. மதுரைப்பக்கம் நாம் செல்வதைத் தற்பொழுது நினைத்துப் பார்க்கக்கூட முடியாது போலிருக்கிறது. 

"அரச விசுவாசம் மிகுந்த பாண்டிய மக்கள் நிறைய இருப்பதால்தான் தென்பாண்டி நாட்டிலாவது நாம் நடமாட முடிகிறது. பாண்டியப் படைகள் அனைத்தும் சரணடைய வேண்டும் என்று பட்டிதொட்டிகளிலெல்லாம் பறையறைந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நம்மால் என்ன செய்ய இயலும் அரசே?"  என்று ஆற்றாமையுடன் கேட்கிறான் காளையப்பன். 

——————————————— 

[6. இலங்கையில் கடந்த சில பத்தாண்டுகளாக நிகழ்ந்த போராட்டத்தையும் அது நடந்தேறியதன் காரணத்தைப் பாண்டிய மன்னன் விக்கிரமன் தொலைநோக்காகச் சொல்வதாகப் புனையப்பட்டுள்ளது.]

"சேரநாட்டிற்குச் செல்ல வேண்டும் காளையப்பா!" என்று தன் திட்டத்தை விவரிக்கத் தொடங்குகிறான் விக்கிரமன். அதைக் கேட்கக் கேட்க காளையப்பனின் பெரிய விழிகள் இன்னும் பெரிதாக விரிகின்றன.  விக்கிரமன் கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் தன் திட்டத்தை அவனுக்கு விவரிக்கிறான். 

"நான் சொல்வது புரிகிறதா காளையப்பா?" என்று கேட்டதும் காளையப்பன் பெரிதாகச் சிரித்தவாறே தலையாட்டுகிறான்.  "அரசே! உங்கள் திட்டம் நன்றாகத்தான் இருக்கிறது.  சேர மன்னர் பாஸ்கர ரவிவர்மர் தங்கள் திட்டத்திற்கு ஒத்துவருவார் என்றே நானும் நம்புகிறேன்" என்று புன்னகையுடன் ஆமோதிக்கிறான். 

"குந்தித் தின்றால் குதிரும் கரையும் என்ற பழமொழியை நீ கேள்விப்பட்டிருக்கிறாய் அல்லவா?  சிறிது சிறிதாக சோழருக்கு எதிராக நாம் செயல்பட்டுவந்தால் அவர்களது வலிமை குறைந்து கொண்டே வரும். இலங்கைப் போரை எடுத்துக்கொள். நமக்கு ஐயாயிரம் வீரர்கள்தான் இழப்பு. ஆனால் பேரிழப்பு சோழர்களுக்குத்தானே! ரோகணத்தில் இராஜாதிராஜன் பதிமூவாயிரம் வீரர்களையும், இராஜேந்திரன் இருபத்தையாயிரம் வீரர்களையும் இழந்தான் அல்லவா? சிங்கள வீரர்கள் கிட்டத்தட்ட நாற்பத்தையாயிரம் பேருக்குமேல் இறந்தாலும், கூட்டிக் கழித்துப் பார்த்தால் நமக்கு ஐயாயிரமும், சோழர்களுக்கு முப்பத்தெட்டாயிரமும் இழப்பல்லவா? எனது தந்தை இராஜராஜனிடம் இழந்ததற்கு மேலாகவே நாம் சோழ வீரர்களை அழித்துவிட்டோமே!  இது தவிர, எத்தனை பொருட்சேதம் அவர்களுக்கு ஏற்பட்டது? 

"இனி நேருக்கு நேராக இராஜேந்திரனிடம் தேவையில்லாமல் போரிட்டு, நான் பாண்டிய வீரர்களை இழக்க மாட்டேன்.  மெல்ல மெல்ல நமது எண்ணிக்கை அதிகரிக்கட்டும். அவனுக்கு எல்லாவிதத்திலும் தொல்லை கொடுத்து, நமது வலிமையை அதிகரிப்போம்" என்று கூறியபடி குதிரையை ஒரு மண்டபத்திற்கருகில் நிறுத்துகிறான் விக்கிரமன். மற்றவர்களும் தங்கள் குதிரைகளை நிறுத்துகிறார்கள். 

மண்டபத்தின் அருகிலிருக்கும் குடிசையிலிருந்து ஒரு கிழவன் வெளியே வருகிறான். 

"நாங்கள் வணிகர்கள். இரவு நாங்கள் இந்த மண்டபத்தில் தங்கி, காலையில் நெல்லைக்குச் செல்லப் போகிறோம். எங்களுக்கு உணவு ஏதாவது கிடைக்குமா? நாங்கள் பணம் கொடுத்துவிடுகிறோம்" என்றபடி காளையப்பன் கைநிறையக் காசுகளை கிழவனிடம் நீட்டுகிறான். 

அவனையும், மற்ற வீரர்களையும் மேலும் கீழும் பார்த்த கிழவனின் முகம் மலர்கிறது. தனது மிச்சமிருக்கும் பற்கள் தெரியச் சிரிக்கிறான். 

"எங்க பாண்டிய மகராசாவை எனக்குத் தெரியாதா என்ன! வராத விருந்தாளியாக மன்னர் பிரானே என் குடிசைக்கு எழுந்தருளி இருக்கிறார். அவர் பசியாற நாங்கள் பணமா வாங்கிக்கொள்வோம்!" என்றபடி விக்கிரமனை நோக்கிக் கையெடுத்துக் கும்பிடுகிறான்.   

"கும்பிடறேன் மகராசா!" 

திருசிவப்பேரூர்,7 சேரநாடு 

காளயுக்தி, ஆவணி 8 – ஆகஸ்ட் 23, 1018 

"கோடி கொடுத்தாலும் கொளேன், அட்டமா சித்தியும், அண்டத்திலுள்ள அனைத்துச் செல்வமும் வேண்டேன்!  உன் காலடியில் விழுந்துகிடக்கும் பேரின்பம் ஒன்றையே வேண்டி மெழுகாய்க் கரைந்து நிற்பேன்!" என்று திருசிவப்பேரூரில் வடக்குநாதன் ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் சிவபெருமானை பலவாறு மனமுருகி வேண்டிக்கொண்டிருக்கிறார் பொன்னம்பல ஓதுவார். அவரருகில் நிலவுமொழி நின்றுகொண்டிருக்கிறாள். வைணவனான தன்னை ஆலயத்திற்குள் விடமாட்டார்கள் என்று அவளது கணவன் காடவன் உள்ளேவர மறுத்துவிட்டதால், தந்தையுடன் மட்டுமே வடக்குநாதன் ஆலயத்திற்கு வழிபட வந்திருக்கிறாள். 

—————————————- 

[7. தற்பொழுதைய திரிஸ்ஸூர்.]

சேரமான் பாஸ்கர ரவிவர்மனின் விருந்தாளிகளாக அவர்கள் வந்திருப்பதால், அவர்களுக்காகச் சிறப்பான வழிபாடு நடத்தப்படுகிறது. கற்களால் கட்டப்பட்டு ஓங்கிநிற்கும் சோழநாட்டுக் கோவில்களைக் கண்டுவந்த நிலவுமொழிக்கு மரத்தினால் எழுப்பப்பட்ட சேரநாட்டுக் கோவில்களைக் கண்டால் புதுமையாக இருக்கிறது. தவிரவும், அங்கு நம்பூதிரிகள் பூசை செய்யும் முறையும் வேறுபட்டிருப்பதைக் கண்டு மலைக்கிறாள். 

அதுமட்டுமன்றி, அங்கு கோவிலில் தொழவரும் சேரப்பெண்கள் தங்கள் மார்பை மறைக்கும் முண்டுகளை இறைவன் சன்னிதியில் நீக்கிவிடுவதைக் கண்டு வியக்கிறாள். தனது பார்வை அவர்கள் மார்பகங்களின் மீது படாமல் இருக்கவேண்டி கண்களைத் திருப்பிக் கொள்கிறாள். 

மார்புக்கச்சையை நீக்க வேண்டும் என்று அவளைச் சொன்னபோது அவளுக்குக் கோபமே வந்துவிட்டது. அவள் சேரநாட்டுப் பெண்ணல்ல, சோழநாட்டு அரசப் பிரதிநிதிகளுடன் வந்திருக்கிறாள். எனவே, சேரநாட்டு வழக்கங்களுக்கு அவளைக் கட்டுப்படுத்தக்கூடாது என்று பலவாறு எடுத்துச்சொன்ன பின்னர், கச்சையை நீக்க வேண்டாம். ஆனால், மறைத்துப் போர்த்திருக்கும் உத்தரீயத்தையாவது நீக்கி விடவேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டனர் நம்பூதிரிகள். 

பொன்னம்பல ஓதுவாரும் அவளிடம், "மகளே நிலா, இந்த நம்பூதிரிகளின் பார்வை உனது மார்பின் மேல் படியாது. முகத்தையும், கைகளையும் போலத்தான் அவர்கள் மார்பையும் நோக்குவர். குழந்தை தாயின் மார்பைப் பார்ப்பதுபோலத்தான் அவர்களது பார்வையும் இருக்கும். எனவே, உத்தரீயத்தை எடுப்பதில் தவறில்லை என்றுதானம்மா நானும் நினைக்கிறேன்!" என்று எடுத்துச் சொல்லிய பிறகு அரைமனதாக தனது உத்தரீயத்தை இடுப்பில் கட்டிக் கொண்டு மார்புக் கச்சைகூட யாருடைய கண்ணுக்கும் தெரியாதவாறு கைகளால் மறைத்துக் கொண்டுதான் இறைவனை வழிபடுகிறான் அவள். 

அவளுடைய இக்கட்டான இந்த நிலையையும், அவளது வெட்கத்தையும் கண்டு அங்கு வழிபட வந்த சேர நங்கைகள் தமக்குள்ளாக நமுட்டுச் சிரிப்பை உதிர்க்கின்றனர். அதைக் கண்ட நிலவுமொழிக்கு வெட்கம் பிடுங்கித் தின்கிறது. தந்தை வேண்டாத அஷ்டமாசித்தியைப் பெற்று தான் யார் கண்ணிலும் படாது மறைந்துவிட மாட்டோமா என்று இறைவனைப் பலவாறு வேண்டுகிறாள். 

"நிங்ஙள் நாடு எதுவோ?" என்று அவளருகில் வந்து விசாரிக்கிறாள் ஒரு சேர நங்கை. 

நிலவுமொழிக்கு தூக்கி வாரிப் போடுகிறது. அருகில் நிற்கும் அந்த நங்கையை ஏறிட்டு நோக்குகிறாள். 

பதினெட்டு வயதான அவள் பளபளவென்று ஆரோக்கியமான உடற்கட்டுடன் இருபத்திரண்டு வயது மதிக்கும் அளவுக்கு இருக்கிறாள். 

மெதுவாக அவளைப் பார்த்துப் புன்னகை செய்த நிலவுமொழி, "தொண்டைநாடு.  திருமயிலை.  நான் சோழநாட்டு வேளிர்கோன் காடவராயரின் மனைவி. இவர் எனது தந்தை பொன்னம்பல ஓதுவார்" என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறாள். 

"சோமசுந்தரத் தம்புரான் என்ட அம்மானானு (மாமன்).  எண்ட அம்மை இந்துமதி தம்புராட்டி.  ஞான் சந்திரயாக்கும். நிங்கள் எங்கள கேரளத்தில் எத்தனை திவசம் தாமசிக்கும்?" என்று சேர நாட்டிற்கே உரித்தான மூக்கொலி கலந்த தமிழில் கேட்கிறாள் அப்பெண். 

இதற்குள் பூசை முடிந்து நம்பூதிரி கோவில் பிரசாதத்தை அவர்களுக்கு வழங்குகிறார் இல்லை அவர்களிடம் தூக்கி எறிகிறார். இது வேறாகப் படுகிறது நிலவுமொழிக்கு. 

கோவில் பிரசாதம்தான். அதை மதிப்பாகப் பேணாமல் தூக்கி எறிகிறாரே என்று திகைக்கிறாள். 

அவளும் அவளது தந்தையும் கோவிலை விட்டு வெளிவரும்போது அவர்களுடன் பேச்சுக் கொடுத்துக்கொண்டு அச்சேர நங்கை அவர்களைப் பின்தொடர்கிறாள். 

அவளது கலகலவென்ற பேச்சும் சிரிப்பும் நிலவுமொழிக்கு மிகவும் பிடித்துப்போகிறது. தன்னுடைய அம்மான் சோமசுந்தரத் தம்பிரான் திருசிவப்பேரூரில் அரசுப்பணி செய்வதாகவும், நிலவரி வசூல் செய்வது அவரது தொழில் என்றும் கூறிய அவள், தனது மாமன் வீட்டில் வசித்துவருவதாகச் சொல்கிறாள். ஏன் தந்தையுடன் இருக்கவில்லை என்று நிலவுமொழி கேட்டதும் சேர நாட்டுப் பழக்க வழக்கங்களை எடுத்துச் சொல்கிறாள் சந்திரை. 

சேர நாட்டுக் குடும்பங்களில் மாமன்தான் வீட்டை நிர்வகிப்பவர் என்றும், தனது தந்தை தனது வீட்டிலேயே இருப்பார் என்றும், தனது தாயையும் தங்களையும் அடிக்கடி வந்து பார்த்துச் செல்வார் என்றும் கூறுகிறாள். 

தவிரவும், சொத்துக்கள் பெண்வழி வருவதால் பெண்கள் திருமணம் ஆனதும் கணவன் வீட்டிற்குச் செல்வதில்லை என்றும், கணவர்கள்தான் மனைவிகளின் வீட்டிற்கு வந்து போவார்கள் என்றும் சேர நாட்டின் மரபுகளை விவரிக்கிறாள். அது புதிதாக இருந்தாலும் நிலவுமொழி அதைக் கவனமாகக் கேட்டுக்கொள்கிறாள். 

தன் தாயையும், சகோதரிகளையும் சந்திரை அறிமுகம் செய்துவைக்கிறாள். 

சோழ நாட்டுக் குறுநில மன்னர் ஒருவரின் மனைவி நிலவுமொழி என்பதையும், சோழச் சக்ரவர்த்தி இராஜராஜருடனும், பேரரசர் இராஜேந்திரனுடனும் நன்கு பழகியவள், இவளது திருமணத்தை இராஜேந்திரனே நடத்தி வைத்தார், அவர்தான் இவர்களை சேரமான் பாஸ்கர ரவிவர்மனின் விருந்தாளியாக அனுப்பிவைத்திருக்கிறார் என்பதையும் அறிந்தவுடனேயே அவளுக்கு உபசரிப்பு பல மடங்கு அதிகமாகிகிறது. 

சந்திரையின் தாய், "நிங்கள் நம்மட இல்லுக்கு வந்தா என்ட சேட்டனுக்கு கௌரமா இரிக்கும்" என்று நிலவுமொழியையும், அவள் தந்தையையும் தங்கள் வீட்டிற்கு வந்துசெல்லும்படி வேண்டிக்கொள்கிறாள். 

"இன்னொரு சமயம் கட்டாயம் வருகிறோம் அம்மா.  இந்தப் பெண்ணின் கணவர் எங்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால் நாங்கள் இப்பொழுது வர இயலாததற்கு வருந்துகிறோம்" என்று பதில் சொல்கிறார் பொன்னம்பல ஓதுவார். 

அவர்கள் எங்கு தங்கியிருக்கிறார்கள் என்பதைக் கேட்டுவைத்துக்கொள்கிறாள் சந்திரையின் தாய். 

"சந்திரக்குத்தான் இன்னம் பரிணயம் ஆகல்லா. நிங்ஙளுக்கு பரிச்யமான புருஷமார் யாரும் இருந்தா சொல்லணும். எண்ட சேட்டனை அனுப்பி, ஞான் நிங்ஙளை விளிப்பேன். நிங்ஙள் அவசியம் எண்ட இல்லுக்கு நிங்ஙள் பர்த்தாவோட வந்து ஊணு கழிக்கணும்" என்று சந்திரையின் தாய் வேண்டிக்கொள்கிறாள். 

நிலவுமொழிக்குத் தன் தாயின் நினைவு வருகிறது. உயிருடன் இருந்திருந்தால் இவர்கள் வயதுதானே தனது தாய்க்கு இருக்கும் என்று நினைக்கிறாள். அவளது மனம் கனிந்து உருகுகிறது. 

"அம்மா, நான் கட்டாயம் உங்கள் வீட்டிற்கு வருவேன். எனக்கும் சந்திரையை அடிக்கடி பார்க்க வேண்டும் போல இருக்கிறது.  நீங்களும் சந்திரையை எங்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தால் எனக்கும் பொழுது போகும்" என்று நிலவுமொழி கேட்டுக்கொள்கிறாள். 

சந்திரையின் தாயின் முகம் பெரிதாக மலர்கிறது. "நிச்சயம். நிங்ஙள் ஆள்காரங்களை அனுப்பிச்சுக் கொடுத்தால், ஞான் சந்திரயை நிங்கள் இல்லுக்கு அனுப்பி வைக்கும். இனி சந்திர நிங்கள் அனுஜச்சியானு" என்று பற்கள் பளிச்சிடச் சிரிக்கிறாள். 

அவர்கள் கிளம்பும் சமயம் பெரிய, நரைத்த முறுக்கு மீசையுடனும், அள்ளி முடிந்த நரைத்த கொண்டையுடனும், மூன்று ஆள்காரர் உடன்வர ஒரு பெரியவர் வருகிறார். அவரைக் கண்டதும், "இவர்தன்னே எண்ட சேட்டன், சோமசுந்தரத் தம்புரான்" என்று சந்திரையின் தாய் அறிமுகப்படுத்துகிறாள். 

அதேசமயம் நிலவுமொழியை அழைத்துச் செல்ல இரண்டு குதிரைகள் பூட்டிய ரதம் வருகிறது.  அதிலிருந்து காடவன் இறங்குகிறான். காடவனைக் கண்டதும் சோமசுந்தரத் தம்பிரான் கைகூப்பி வணங்குகிறார். 

"தம்பிரானைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி" என்றபடி நிலவுமொழியையும், பொன்னம்பல ஓதுவாரையும் காடவன் அறிமுகம் செய்விக்கிறான். சிறிது நேரம் நலம் விசாரித்த பின் நிலவுமொழியும், ஓதுவாரும் அவருடன் ரதத்தில் ஏறிக் கொள்கின்றனர். ரதம் புறப்படுகிறது. 

சந்திரையைக் கோவிலில் சந்தித்ததைப் பற்றியும், அவள் குடும்பத்தைப் பற்றியும் நிலவுமொழி விவரிக்கிறாள். தனக்கு சந்திரையை மிகவும் பிடித்துவிட்டதைப் பற்றியும் தெரிவித்து விட்டு, "உங்களுக்கு சந்திரையின் அம்மானை முன்னமேயே தெரியுமா?" என்று வினவுகிறாள். 

"ஆம்!" என்று காடவன் சுரத்தில்லாமல் தலையாட்டுகிறான். 

"ஏன் உங்கள் முகம் களையில்லாமல் இருக்கிறது?" 

"இந்த ஆண்டு சேரமான் செலுத்த வேண்டிய திறைப் பணக்கணக்கு இன்னும் சரிவரக் காண்பிக்கப்படவில்லை. சோமசுந்தரத் தம்பிரான்தான் இந்தப் பகுதிக்கு நிலவரி வசூல் செய்யவேண்டிய கணக்காயர். இவர் கணக்கைச் சரியாகக் காட்டாமல் மென்று விழுங்குகிறார். சேரமானிடம் காண்பித்துவிட்டுச் சேதி சொல்கிறேன் என்கிறார். இவரிடம் கண்டிப்பாகப் பேசவோ, இந்த வரவு செலவுக் கணக்குகளிலோ எனக்கு அவ்வளவாக மனம் செல்லவில்லை. 

"சேரமானின் அமைச்சர்களுடன் கலந்து தமிழாசிரியர்கள் எத்தனை பேர் நியமிக்கப்பட வேண்டும், அரச ஏடுகளில் தமிழ் எழுதப்படுகிறதா, அரச அலுவல்கள் நல்ல தூய தமிழில் நடத்தப்படுகிறதா, நம்பூதிரிகளின் வடமொழி ஆதிக்கம் குறைக்கப்படுகிறதா என்று கவனிக்க வேண்டும் என்பதில்தான் மனம் சென்றுகொண்டிருக்கிறது. நிலவரி வேலைப்பளுவைக் குறைக்க எனக்கு உதவியாக ஒரு தலைமைக் கணக்காயரையும், அவருக்குத் துணையாக பத்துப்பதினைந்து உதவிக் கணக்காயர்களையும் அனுப்பி வைக்குமாறு மூன்று மாதம் முன்னரே திருமந்திர ஓலைநாயகத்திற்கு மடல் அனுப்பியுள்ளேன்.  இன்னும் அவரிடமிருந்து எத்தகவலும் வரவில்லை. பொதுவாக செயற்திறனுக்கு மறு உருவமான ஓலைநாயகம், இந்த விஷயத்தில் ஏன் எதுவும் தெரிவிக்காமலிருக்கிறார் என்பதுதான் எனக்குத் தெரியவில்லை!" என்று அலுத்துக் கொள்கிறான் காடவன். 

"தம்பிரானைப் பார்த்தால் நல்ல மனிதராகத்தானே தெரிகிறார்! அவரது தங்கைகூட என்னிடம் மிகவும் அன்பாகத்தானே பழகினார்கள்?" என்று நிலவுமொழி கேட்கிறாள். 

"நீ என் மனைவி என்று அறிந்து கொண்ட உடனேயே அந்தப் பெண்மணி உன் மூலம் தனது அண்ணனின் நெருக்கடியைக் குறைக்க முனைகிறார்கள். நீ இன்னும் சேரநாட்டுப் பெண்களின் திறமையை அறிந்துகொள்ளவில்லை. ஆழ்ந்து சிந்தித்து, விரைவாகச் செயல்படுவதில் அவர்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள். சேர நாட்டில் பெரும்பாலும் சொத்துக்கள் தாய்வழி என்பது உனக்குத் தெரியாதல்லவா! பெரும் சொத்தைக் கட்டிக்காப்பதில் அவர்களுக்கு உள்ள உரிமை நம்நாட்டுப் பெண்களுக்கு இல்லை. ஆகவே, இங்கு பெண்களின் கை சற்று உயர்ந்துதான் இருக்கிறது. நீ போகப்போகப் புரிந்துகொள்வாய்!" என்று காடவன் விளக்குகிறான். 

"சோழ நாட்டில் குந்தவைப் பிராட்டியாருக்கு இல்லாத செல்வாக்கா? சக்கரவர்த்திகள்கூட அவர் சொல்லுக்குத் தலைசாய்ப்பதை நான் நேரில் கண்டிருக்கிறேனே!" என்று வினவுகிறாள் நிலவுமொழி. 

"நிலா, பிராட்டியாரின் செல்வாக்கு திருப்பணி விஷயத்தில்தான்! அரசு நிர்வாகத்தில் அவர்கள் ஒருபொழுதும் தலையிடமாட்டார்கள். நான் எப்படிச் சொல்லி உனக்குப் புரியவைப்பது! இங்கு பெண்களுக்கு உரிமை அதிகம். சோமசுந்தரத் தம்பிரான் இல்லில் கிட்டத்தட்ட நூற்று இருபத்தைந்து பேர் ஒன்றாகக் கூடி வாழ்கிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் தலைவிதான்
நீ பார்த்த பெண்மணி. அந்த வீட்டில் அவர்கள் சொல்லுக்கு எதிராகப் பேசும் திறன் தம்பிரானுக்குக்கூட இல்லை. அது அவர்கள் வீட்டு விஷயம். அரசு விஷயத்தில், அதுவும் நிலவரிக் கணக்கு விஷயத்தில் தம்பிரான் எதையோ மறைக்கிறார் அல்லது மறைக்கும்படி உத்தரவிடப்பட்டிருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது" என்று காடவன் சொன்னதும் நிலவுமொழிக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. 

"நிலா, உன்னைப் பார்த்தவுடனேயே நீ சோழ நாட்டைச் சேர்ந்த செல்வாக்குள்ள ஒரு பெண் என்பதை அந்தப் பெண்மணி அறிந்து கொண்டுவிட்டார்கள். அதனால்தான் தனது மகளின் மூலம் உன்னைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பியிருக்கிறார்கள். நீ கோப்பரகேசரியாருக்கும், மறைந்த சக்ரவர்த்தி அவர்களுக்கும் மிகவும் வேண்டியவள் என்பதை எவ்வளவு சுலபமாகத் தூண்டித் துருவி அறிந்துகொண்டுவிட்டார்கள் பார்த்தாயா!  அது தெரிந்தவுடன் உன் மூலமாக என்னிடம் செல்வாக்கைப் பெற முயற்சி செய்யத் துவங்கியிருக்கிறார்கள்" என்று நிறுத்துகிறான் காடவன். 

நிலவுமொழிக்கு கலக்கமாக இருக்கிறது. தெரியாத்தனமாக புதைமண்ணில் காலை விட்டு விட்டோமோ என்று அஞ்சுகிறாள். 

அவள் முகப் போக்கைக் கவனித்த காடவன், "நிலா, நீ எதைப் பற்றியும் கவலைப்படாதே.  நான் சொன்னதற்காக அவர்களுடன் தொடர்பையும் உடனே துண்டித்துவிடாதே. இதுவும் ஒருவிதமான அரசியல் விளையாட்டுத்தான். உன் மூலம் அவர்கள் என்னிடம் எந்தவிதமான செல்வாக்கை விரும்புகிறார்கள் என்று அறிந்துகொள். அந்தப் பெண் சந்திரை நல்ல பெண் மாதிரித்தான் தெரிகிறாள். ஆகவே அவளை உன் தோழியாக வைத்துக்கொள். 

"ஆனால், தவறிக்கூட நமது அரசு ரகசியங்களைச் சொல்லிவிடாதே!  நாம் எதற்காகச் சேர நாட்டிற்கு வந்திருக்கிறோம், அடுத்து என்ன செய்யப்போகிறோம், எங்கு செல்லப் போகிறோம், நமக்கு யார் யாரிடம் தொடர்பு இருக்கிறது, நமக்கு யாரிடம், எந்தவிதமான செல்வாக்கு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தாதே. சாதாரணமாக ஒரு தோழியுடன் எப்படி நடந்துகொள்வாயோ அப்படிமட்டுமே நடந்துகொள். 

"இங்கு அனைவரும் உன்னை செல்வாக்கு மிகுந்த சோழ நாட்டுப் பெண்ணாகத்தான் நோக்குவார்கள். ஆகவே, உன்னிடம் என்ன இருக்கிறது என்பதை யாருக்கும் வெளிக்காட்டிவிடாதே. உனக்கு எதைச் செய்வதிலோ, சொல்வதிலோ, சந்தேகம் இருந்தால் அதைச் செய்யாதே, சொல்லாதே.  என்னிடம் கலந்துகொள். ஒன்றை மட்டும் நன்கு நினைவில் வைத்துக்கொள். 

"இது சோழ நாடோ, வேங்கை நாடோ அல்ல. இது நமக்குத் திறை செலுத்தும் சேர நாடு. நாம் எப்பொழுதும் விழிப்பாகவும், கவனமாகவும் செயல்பட வேண்டும். நான் சோழ நாட்டு அரசுப் பிரதிநிதி, நீ பிரதிநிதியின் மனைவி; அதை நினைவில் வைத்துக்கொள்" என்று ஆறுதலாகவும், அதே சமயம், அவளை எச்சரிக்கவும் செய்கிறான். 

பொன்னம்பல ஓதுவாரோ, இது எதையும் காதில் வாங்கிக்கொள்ளாது வடக்குநாதனை மனக்கண்முன் நிறுத்தி உருகிக்கொண்டிருக்கிறார். 

தந்தையைக் கண்ணுற்ற நிலவுமொழி, தானும் அவர் மாதிரித் தாமரை இலைத் தண்ணீராக இருந்து விட்டால் எப்படியிருக்கும் என்று நினைத்துப்பார்க்கிறாள். தன் மீது புதுவிதமான பொறுப்பை சிவாச்சாரி சுமத்தியிருப்பதைப் புரிந்துகொள்ளத் தொடங்குகிறாள். 

ரதம் அவர்களது மாளிகையை அடைகிறது. 

சோழர் அரண்மனை, ஜயங்கொண்ட சோழபுரம் 

காளயுக்தி, கார்த்திகை 16 – டிசம்பர் 2, 1018 

கௌளி பலபலவென்று எச்சரிப்பது சிவாச்சாரியின் காதில் விழுகிறது. ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடக்குமுன் இந்தக் கௌளி எதைச் சொல்லி நம்மை எச்சரிக்கிறது என்று வியந்த சிவாச்சாரி, இம்மாதிரி நினைப்பதே தவறு என்று தனக்குள் சொல்லிக்கொள்கிறான். 

இன்று பெரிதாக ஏதோ ஒன்று நடக்கப்போகிறது. அது தனது வாழ்வையே திசை திருப்பப் போகிறது என்று மட்டும் அவனது உள்மனம் எச்சரித்துக்கொண்டே இருக்கிறது. எதையும், நிதானமாகவும், கவனமாகவும் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கிறான். 

"சிவாச்சாரியாரே, ஏன் அனைவருக்கும் மிகவும் முன்னதாகவே வந்துவிட்டீர்?" என்றபடி அங்கு இராஜாதிராஜன் வருகிறான். அவனைக் கண்டதும் சிவாச்சாரியின் முகம் மலர்கிறது. 

அருள்மொழிநங்கையை மணந்த பின்னர், தனக்கும் அவனுக்கும் இடையே நல்ல நட்புப் பிணைப்பு ஏற்பட்டு வருவதை உணர்கிறான். 

இராஜேந்திரன் என்னதான் அவனை நண்பனாக நடத்தினாலும், அவனுடன் சோழப்பேரரசன் என்ற முறையில்தான் சிவாச்சாரியால் பழக முடிகிறது. 

ஆனால், இராஜாதிராஜனோ தன்னைவிடப் பதினான்கு வயது மூத்த சிவாச்சாரியை வயதுக்குரிய மரியாதையுடனும், தமக்கையின் கணவர் என்ற உரிமையுடனும், போர்முறைகளையும் அரச நீதிகளைப் போதித்துவரும் ஆசானாகவும், தந்தையுடன் பகிர முடியாத விவரங்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய தோழனாகவும் – இப்படிப் பலப்பல கோணத்தில் நடத்திவருவது நன்றாகத்தான் உள்ளது. 

"வா, ராஜா! எல்லா ரகசிய ஆலோசனைக் கூட்டத்திற்கும் முன்னமே வருவது எனது வழக்கம்.  கோப்பரகேசரியார் எதைப் பற்றிப் பேசக்கூடும், அதற்கு எவ்வித உள்நோக்கங்கள் இருக்கலாம், அவற்றிற்கு எத்தனை மறுமொழிகள் இருக்கும், ஒவ்வொரு மறுமொழிக்கும் அவர் எப்படிப்பட்ட, எத்தனை விதமான கேள்விகளைத் தொடுக்கலாம் என்று சிந்திக்க அந்த நேரம் உதவும். சுருக்கமாகச் சொன்னால், இக்கூட்டங்களில் கலந்துகொள்வது சதுரங்க விளையாட்டு போலத்தான். மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எனவே, இந்த அமைதியான சூழ்நிலை எனக்கு அஞ்சனமாக உள்ளது" என்று விளக்குகிறான். 

மற்றவர்கள் முன் இராஜாதிராஜனை அரசனுக்குரிய மரியாதையுடன் விளித்தாலும், அவன் கேட்டுக்கொண்டபடி தனிமையில் அவனை சிவாச்சாரி ஒருமையில் அழைத்து வருகிறான். 

"சிவாச்சாரியாரே! எப்பொழுதும் இப்படிச் சோழநாட்டைப் பற்றியும், என் தந்தையின் தேவைகளைப் பற்றியுமே சிந்தனை செய்து வருகிறீரே! எப்பொழுதாவது என் தமக்கையைப் பற்றியோ, உமது மக்களைப் பற்றியோ நீர் சிந்தனை செய்வதுண்டா? போன முறை தமக்கையாரைப் பார்த்துப் பேசியபோது, நீர் அவளுடன் நேராகப் பேசி, மாதக்கணக்காகி விட்டது என வருத்தப்பட்டாள்" என்று இராஜாதிராஜன் புகார் செய்கிறான். 

அவன் குரல் சிறிது கடுமையாக இருப்பினும், கண்களில் குறும்பு தாண்டவமாடுகிறது. 

"எப்பொழுது கருவூரார் என்னைக் கோப்பரகேசரியாருக்குப் பணியாளனாகும்படி பணித்தாரோ, அப்பொழுதே நான் என்னைப் பற்றியும், எனது குடும்பத்தைப் பற்றியும் சிந்திப்பதை விட்டுவிட்டேன் ராஜா!" 

சிவாச்சாரியின் மறுமொழியில் இருப்பது குறும்பா, அன்றி மெய்மையா என்று உணர இயலாது குழம்பியவன், "அது போகட்டும் உம்மிடம் நான் ஒன்று கேட்க வேண்டும் என்று ஓராண்டுக்கும் மேலாக நினைத்தேன். அதற்கு வாய்ப்புக் கிடைக்காமலே போய்விட்டது.  ஆலோசனைக் கூட்டம் தொடங்க இன்னும் அரை நாழிகை இருக்கிறதல்லவா. அதற்குள் என் ஐயத்திற்கு உம்மால் விளக்கம் தர இயலும் என்றுதான் ஓடோடியும் வந்தேன்" என்கிறான். 

சிவாச்சாரி, "என்னால் முடிந்த விளக்கத்தைத் தர என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்" என்றதும், சுற்றுமுற்றும் பார்த்த இராஜாதிராஜன், "கடந்த ஆண்டு இலங்கையில் பதிமூவாயிரம் சோழ வீரர்களைக் காவு கொடுத்துப் பாண்டியரின் பரம்பரைச் சொத்தைக் கைப்பற்றினேன்.  அதற்குக் காரணம், தந்தையார் தோல்வி எனும் சொல்லை என்றும் ஒப்புக்கொள்ளாமல் இருப்பதே.  அன்று நான் வெற்றி பெறாதிருந்தால், இன்று சோழ நாட்டின் பட்டத்து இளவரசனாகியிருக்க மாட்டேன்" என்று இராஜாதிராஜன் சிலகணங்கள் வாளாவிருக்கிறான். 

"இருப்பினும், என் நெஞ்சை அத்தனை வீரர்களின் சாவு இன்னும் அரித்துக்கொண்டுதான் உள்ளது. போரில் வீரர்கள் மாள்வது இயற்கையே! ஆயினும் இத்தனை வீரர்கள் மாள்வதைத் தடுத்திருக்க முடியுமா என்ற கேள்விக்கு விடை கிடைக்காவிடில் என் தலையே வெடித்துவிடும் போலிருக்கிறது. போர் நடந்த இடத்தையும், அங்கிருந்த சுரங்க வழிகளையும் நீர் பின்பு பார்வையிட்டு இருக்கிறீர். நீராக இருந்தால் அப்போரை எப்படி நடத்தியிருப்பீர்? சிறிதும் இனிப்புப் பூச்சுப் பூசாமல் எனக்கு விளக்குவீராக!" என்று மெல்லிய குரலில் கேட்கிறான் இல்லையில்லை, இறைஞ்சுகிறான். 

*** 

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com