பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 8

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 8

ஒரு அரிசோனன்

சோழர் அரண்மனை, ஜயங்கொண்ட சோழபுரம் 

காளயுக்தி, கார்த்திகை 16 – டிசம்பர் 2, 1018 

ற்று நேரம் வாளாவிருந்த சிவாச்சாரி, தொண்டையைச் செருமிக் கொண்டு மெல்லிய குரலில் விளக்கம் தரத் தொடங்குகிறான்: "ராஜா, போரில் வெற்றி மட்டும் முக்கியமல்ல; அவ்வெற்றியை எப்படி அடைகிறோம் என்பது அதைவிட முக்கியம். வெற்றிகள் பலவிதம்.  அவற்றில் சிறந்தது, போர் புரியாது அடையும் வெற்றிதான். எதிரிகளைக் குழப்பி, அவர்களது படைகளின் மனத்திண்மையையும், கட்டுப்பாட்டையும் இழக்கச்செய்து, போரே நடத்தாமல் பணியச்செய்வதுதான் அது. அதனால் செல்வம் கிட்டும். அப்படிச் செய்வதற்குப் படை நடத்துவோர் சிறந்த போர் வீரராக இருந்தால் மட்டும் போதாது, சிறந்த ராஜதந்திரியாகவும் இருத்தல் அவசியம். 

"உனது பாட்டனார் திரிபுவனச் சக்ரவர்த்தியார் அப்படிப்பட்டவர். உனது தந்தையாரின் சீற்றமும், போரில் எதிரிகளை வேரருக்கும் திறனும் எவரையும் போரிடுமுன் தயங்கவும், சிந்திக்கவும் செய்வதாலேயே, பல மன்னர்கள் அவர் தலைமைதாங்கி வருகிறார் என்றாலே, போரிடத் தயங்குகிறார்கள். 

"அதற்கடுத்தது எதிரிகள் கூட்டுசேர்ந்து வலிமை பெறும் முன்னரே அவர்களின் படைகளை அழித்து, அவர்கள் ஒன்றுசேர்ந்து நம்மைத் தாக்கவிடாது செய்வது. தங்களுக்குத் துணையாக வரும் என்று எதிர்நோக்கும் படைகள் வாராது போனால், போரில் எதிரிகளின் மனத்திண்மை வெகுவாகக் குறைந்துவிடும். 

"எல்லாவற்றிலும் கடைசியானது, முற்றுகை இடுவது. இதனால் உடனடியாக வெற்றி கிட்டாது. எனவே, படைத்தலைவன் பொறுமையிழந்து, மொய்க்கும் எறும்புகளாகத் தனது படை வீரர்களைத் தாக்குதலுக்கு அனுப்புகிறான். அதனால், அவனது படைக்கு எதிரிகளை விட மும்மடங்கு சேதம் விளைகிறது. அதுதான் உனக்கும் ஏற்பட்டது. ஐயாயிரம் பாண்டிய வீரர்களை அழிக்கக் கிட்டத்தட்ட மூன்றுமடங்கு வீரர்களைக் காவு கொடுக்கும் நிலை ஏற்பட்டது!" 

சிவாச்சாரியை இடைமறித்த இராஜாதிராஜன், "சிறிது பொறும், சிவாச்சாரியாரே! நான் எங்கே முற்றுகையிட்டேன்? கோட்டையும் கொத்தளங்களும் அங்கு எங்கிருந்தன? எலிப்பொந்தாகச் சிறிய சுரங்கமும், அதற்குச் செல்லும் வழிகளும்தானே இருந்தன?" என்று சற்று உரத்த குரலில் கேட்கிறான். 

சிவாச்சாரி அவனைப் பார்த்துப் புன்னகைக்கிறான். 

"ராஜா! சற்றுப் பொறு. அரசனுக்கும், படைத்தலைவனுக்கும் நிறையப் பொறுமை இருக்க வேண்டும். சிந்தித்துப் பார். முற்றுகை என்றால், ஒரு கோட்டையும் அதை வலிமைப்படுத்தும் கொத்தளங்களும்தான் என்றா நினைத்தாய்? அல்ல, அல்ல. அந்தப் பாண்டியப் படைத் தலைவன் நிலத்திற்கு அடியில் பதினைந்து தப்படிக்குப் பதினைந்து தப்படி8 அளவில் கட்டியிருந்ததும் ஒரு சிறு கற்கோட்டைதான்! அதனைச் சுற்றிச்சுற்றி எழுப்பப்பட்ட சுரங்கப் பாதைகளும், அவற்றை ஒன்றோடொன்று பிணைத்த சுரங்க அறைகளும், அவன் அமைத்த அரண்களே ஆகும். நன்கு கவனித்துப் பார்த்தால், வலுவாகத் தாக்க இயலாத அளவுக்குச் சுரங்க வழிகளைச் சிறியதாக அமைத்திருந்தது புலப்பட்டிருக்கும்." 

————————-

[8.தப்படி என்பது நடக்கும்போது இருகால்களுக்கும் இடையே உள்ள தூரம்கிட்டத்தட்ட இரண்டரை அடியிலிருந்து மூன்றடி தூரம் என்று எடுத்துக்கொள்ளலாம்.]

தான் பேசுவது இராஜாதிராஜன் மனதில் ஏறுகிறதா என்று உறுதி செய்துகொண்டவன், மேலே தொடர்கிறான்: "நீ அனுப்பிய சோழ வீரர்கள் எறும்புக் கூட்டமாகத்தானே அந்தச் சுரங்கத்திற்குள் நுழைந்தார்கள்? இன்னும் ஒன்று. அங்கிருந்த பாண்டிய வீரர் அனைவரும் சரணடைவது ஒரு தேர்வுரிமையே இல்லை என்பதைப் புரிந்துகொண்டிருந்ததால், தாங்கள் உயிருடன் தப்பப்போவதில்லை என்பதை நன்கு அறிந்திருந்தார்கள். அப்படிப்பட்ட வீரர்கள் மற்ற வீரர்களை விட மிக்க வலிமையானவர்கள். ஆகையால், அவர்களின் எண்ணிக்கையை மற்ற வீரர்களை விட மும்மடங்கு அதிகமாகக் கணிக்க வேண்டும் எனச் சீனப் பேரறிஞர்
சுன் ட்ஸூ9 உரைத்திருக்கிறார். நான் இதுவரை விவரித்ததும் அவரது போர்த்தந்திர நூலிலிருந்து கற்றதே!  எனவே, வெற்றி பெற வேண்டும் என்ற அவசரத்தாலும், பரபரப்பாலும் தேவையின்றி பல்லாயிரக்கணக்கன சோழ வீரர் மரணத்தைத் தழுவ நேரிட்டு விட்டது என்பதை உனக்குச் சொல்லாதுபோனால், நான் ஒரு பொய்யனே ஆவேன்." அதைக் கேட்டதும், இராஜாதிராஜனின் முகம் இறுகுகிறது. 

தான் கூறிய ஒவ்வொரு சொல்லும் அவனது உள்ளத்தில் பழுக்கக் காய்ச்சி எறியப்பட்ட ஈட்டிகளாகத் தாக்குகின்றன என்பது சிவாச்சாரிக்கு நன்கு தெரிகிறது. ஆயினும், அரசன் தன் தவறுகளைத் தெரிந்தறிந்து நீக்கிக்கொண்டால்தான் அவற்றைத் திரும்பச் செய்ய மாட்டான், அதிலிருந்து கற்றுக்கொள்வான் என்று உள்ளதை உள்ளபடி உரைக்கின்றான். 

"நான் எப்படி அந்தப் போரை நடத்தியிருப்பேன் என்று நீ கேட்டாய்.  அதையும் சொல்கிறேன்.  எலிப்பொந்தில் குடியிருக்கும் எலிகள் பூனையைக் காண்பின் வெளிவரா. புகையிட்டோ, நீரைப் பெருகவிட்டு அவற்றை எப்படிக் கொல்வோமோ, அப்படித்தான் பாண்டிய வீரரை அழித்திருப்பேன்!" 

இப்படி சிவாச்சாரி சொன்னதும், அவனை இராஜாதிராஜன் உற்றுநோக்குகிறான். 

"சுரங்கத்தில் உள்ளவர்களுக்குக் காற்று இன்றியமையாத ஒன்று. அக்காற்றைச் செல்ல விடாமல் தடுத்தால், ஒன்று சுரங்கத்திலிருந்து வெளியேறுவர்; அல்லது அங்கேயே மூச்சுத் திணறி இறந்துபோவர். அதற்குமுன் சுரங்கத்திலிருந்து வெளியேறும் வழிகள் எங்கு உள என ஆய்ந்தறிந்து, அங்கு நமது வீரரை நிறுத்தி வெளிவருபவர்களைப் பிடித்திருப்பேன் அல்லது அழித்திருப்பேன். சுரங்கத்திற்குள் சென்றிருக்க மாட்டேன். 

"இதற்கு நிறையப் பொறுமை வேண்டும். ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரை வாடியிருக்குமாம் கொக்கு என்பதைப் போலத்தான் வெற்றிக்காகக் காத்திருந்திருப்பேன்!" என்ற சிவாச்சாரி, "ராஜா!  இறந்த வீரருக்காக உன்னையே நீ வாட்டி வருத்திக்கொள்ளாதே. அது உன்னையும், சோழ நாட்டையும் உருக்கி அழிக்கும் புற்றுநோயாக மாறிவிடும். இதிலிருந்து பாடத்தைக் கற்றுக்கொண்டாலே போதுமானது. முதன்முதலாக இளஞ்சேரனைக் கொன்றதால் நான் கழிவிரக்கம் அடைந்தபோது, என்னை விடுவிப்பதற்காகப் பல சோழ, சேர வீரர் மரணத்தைத் தழுவ வேண்டியிருந்ததே என்று கழிவிரக்கப்பட்டபோது, நீ எனக்குக் கொடுத்த அறிவுரையையே நினைவில் நிறுத்தி, மனதைத் தேற்றுவாயாக!" என்று ஆறுதல் கூறி முடிக்கிறான். 

இராஜாதிராஜனின் விழிகளில் கண்ணீர் ததும்பி நிற்கிறது. அவற்றைச் சுண்டியெறிந்துவிட்டு, "நீர் சொல்வதில் உண்மை நிறைந்துள்ளது சிவாச்சாரியாரே!  அழ அழச் சொல்பவர்தாம் நம் நலம் விரும்பிகளாவர் எனக் காலம் சென்ற அத்தையார் குந்தவைப் பிராட்டியார் சொல்வார்கள். என் கண்களில் நீரை வரவழைத்த நீர் எமது நலம் விரும்பிதான்!" என்று மேலாடையால் கண்களைத் துடைத்துக்கொள்கிறான். 

"இனி இவ்வாறு கழிவிரக்கம் கொள்ளமாட்டேன். நான் செய்யத் துணியாத எவ்வொரு தாக்குதலையும் என் வீரர்களைச் செய்யச் சொல்லமாட்டேன்.  தலைவனாக முன்னிருந்து போரிடுவேன். இது உறுதி!" எனச் சிவாச்சாரியின் கைகளைப் பற்றி உறுதிமொழி கூறுகிறான். அந்த உறுதிமொழியே பிற்காலத்தில் அவனது உயிரைப் பறிக்கும் காரணமாக அமையும் என்று அப்போது தெரிந்திருந்தால்கூட, அந்த உறுதிமொழியைக் கொடுப்பதிலிருந்து பின்வாங்கியிருக்க மாட்டான் அந்தச் சோழகுலத் தோன்றல்! 

 "கடைசியாக இன்னுமொன்றும் கேட்டுவிடுகிறேன். உமது இயற்பெயர் சிவசங்கரனும் அல்ல, நீர் சிவாச்சாரியார் பரம்பரையில் வந்தவரும் அல்லர் என்னும் பேச்சு அவ்வப்போது அடிபடுகிறதே! உமது உண்மைப் பெயர் என்ன?" என்று கிண்டலாக வினவுகிறான். 

——————————-

[9.Chapter 3, Attack by Strategem, Point 4, "The rule is, not to besiege walled cities if it can possibly be avoided."  Point 5, "The general, unable to control his irritation, will launch his men to the assault like swarming ants.  The Art of War (போர்க்கலை) by Sun Tzu,]

"பெயர்! பெயர்!! பெயர்!!!" சிவாச்சாரி, பதிலுக்குக் கிண்டலாகச் சிரிக்கிறான். 

"நாம் கும்பிடும் இறைவனுக்குக் கணக்கற்ற பெயர்கள் உள்ளபோது, நமக்கு ஓரிரு பெயர்கள் இருக்கலாகாதா? உனக்கும் உன் தந்தைக்கும் எத்தனை பெயர்கள் உள? யார் யார் எப்பெயர் சொல்லி அழைக்கிறார்களோ, அவரவர்களுக்கு அப்பெயருள்ளவராக இருந்துவிட்டுப் போவோமே!" 

"மழுப்பாதீர், சிவாச்சாரியாரே! உமக்கு உம் தாய்-தந்தையர் சூட்டிய பெயர் என்ன? அதைச் சொல்லும்!" உரிமையுடன் கேள்வி பிறக்கிறது. 

"என் தந்தையாரின் பெயர் கிருஷ்ணன். எனக்கு இராமன் என்று பெயர் சூட்டினார். கருவூராரிடம் மாணவனாகச் சேர்த்ததும், அவர் அப்பெயரை மாற்றிச் சிவசங்கரன் என்ற பெயரை வழங்கினார். தன்னிடம் சீடராய்ச் சேர்ந்தவருக்குச் சிவபெருமானின் பெயர்களில் ஒன்றைச் சூட்டுவது அவரது பழக்கம். 'தாயிடம் முதலாவதாகப் பிறந்த மனிதன், குருவிடம் மறுபடியும் பிறக்கிறான்; எனவே, அவனுக்கு இரண்டாவது தாயாக நானும் ஒரு பெயரைச் சூட்டி மகிழ்கிறேன்' என்று சொல்லுவார். சிவாச்சாரியர் பரம்பரையில் நான் பிறக்காவிடினும், சிவாகமங்களை முறைப்படி கற்றதால் எனக்குச் சிவாச்சாரிப் பட்டம் வழங்கப்பட்டது. என் குருநாதர் கருவூராரைத் தவிர மற்றவரெல்லாம் – நீ, கோப்பரகேசரியார் உட்பட அனைவரும் எனது பட்டத்தைச் சொல்லியே விளிக்கிறீர்கள்." சிவாச்சாரி குழந்தையைப் போலச் சிரிக்கிறான். 

"என் கல்வி நிறைவு பெற்றவுடன் சிவனே, 'உனக்கு மணமுடிக்கும் வயது வந்துவிட்டது' என்று அவரது மாற்றாந்தாயின் மகளை எனக்கு மணமுடித்து வைத்தார். உனது பாட்டனார் திரிபுவனச் சக்ரவர்த்தியார் என்னைத் திருமந்திர ஓலைநாயகம் ஆக்கிய பின்னர் பலரும் ஓலைநாயகம் எனவும் அழைக்கின்றனர். என்னுள் இருக்கும் சிவத்திற்குத்தான் எத்தனை பெயர்கள்!" என விளக்குகிறான். 

"அது போகட்டும். சிவபெருமானை வணங்கும் பரம்பரையில் வந்த உமக்கும், உமது தந்தைக்கும், திருமாலின் அவதாரமான வைணவப் பெயர்கள் எப்படிச் சூட்டப்பட்டன?  அதையும் விளக்கிவிடுமே!" கண்களைச் சிமிட்டியபடியே இராஜாதிராஜன் வினவுகிறான். 

"என் பூர்வீகத்தை அறியாது விடமாட்டாய் போலிருக்கிறதே!" என்று சிரித்த சிவாச்சாரி, "இராமனும் கிருஷ்ணனும் திருமாலின் அவதாரம் என வைணவர் போற்றினாலும் அவர்கள் இருவரும் சிவபெருமானை வழிபட்டுவந்தனர் என்பதற்கு நிறையச் சான்றுகள் உள.  மகாபாரதத்தில் பாசுபதம் வேண்டிச் சிவபெருமானை வணங்கும்படி அருச்சுனனைக் கண்ணபிரான் பரிந்துரைத்தார். இலங்கையர்கோன் ராவணனை வதம் செய்த இராமபிரான், பிரம்மஹத்திப் பாவம் நீங்கவேண்டிச் சிவலிங்கத்தை நிலைநிறுத்திப் பூசை செய்தார் என இராமாயணம் பறைசாற்றுகின்றதே! சக்கரைப்படை வேண்டிய திருமால், தாமரை மலர்களால் சிவபெருமானை வழிபட்டபோது, ஒரு மலர் குறைகிறதே என்று, தனது விழியை பிடுங்கி மலராக அருச்சனை புரிய முற்பட்டார் என்று புராணமும் பறைசாற்றுகிறதே! சிவபெருமானை வழிபடுவோர் திருமாலையும் ஒரு சிவனடியார் எனக் கருதி, அவர்தம் நாமங்களை ஏற்பது இயல்புதானே!  சிவனடியார்தம் பெருமையைக் கூறுவது அரிதிலும் அரிதல்லவா!" என இராஜாதிராஜனின் ஐயத்தைத் தீர்க்கிறான். 

காலடிச் சத்தம் கேட்கிறது. ஒருவர்பின் ஒருவராக அரசப்பிரதானிகள் உள்ளே நுழைகின்றனர். இறுதியில் இராஜேந்திரன் வருவதைக் கட்டியங்காரன் அரசவைக்கு அறிவிக்கிறான்.  ஈழம் கொண்டான்10 கோப்பரகேசரி இராஜேந்திரன் ஏறுபோல் பீடுநடையுடன் உள்நுழைகிறான். அனைவரையும் கையமர்த்திவிட்டுத் தன் அரியணையில் அமர்ந்துகொள்கிறான். ஆரவாரம் அடங்கியதும் சிவாச்சாரியின் பக்கம் திரும்பித் தலையசைக்கிறான். 

—————————– 

[10.இலங்கைமுழுவதையும் முதன்முதலாக ஒருகுடைக்குக் கீழ் கொணர்ந்ததால், இராஜேந்திரனுக்கு ஈழம் கொண்டான் என்ற பட்டப்பெயரும் உண்டு.]

"கோப்பரகேசரியாரின் விருப்பத்திற்கிணங்க இந்த ரகசிய ஆலோசனைக் கூட்டம் துவங்குகிறது. இங்கு நடப்பதை வெளியில் தெரிவிக்கும் எவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு, அவர்தம் மனைவி மக்கள் கொத்தடிமைகளாகக் குற்றேவல் புரிந்துவர நேரிடும் என்பது கோப்பரகேசரியாரின் ஆணை! இதற்கு விதிவிலக்கே கிடையாது" என்று அறிவித்துவிட்டுச் சிவாச்சாரி அமர்ந்துகொள்கிறான். 

"சேரமான் பாஸ்கர ரவிவர்மன் திறை செலுத்த மறுத்ததோடு, நமது அரசப் பிரதிநிதியான காடவனையும் சிறைப்பிடிக்க ஏற்பாடு செய்துவிட்டானாம். இப்பொழுது காடவனும், அவனது குடும்பமும் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. ஆயினும், காடவன் சிறைப்படவில்லை என்று மட்டும் தெரிகின்றது. சேரமான் இப்படி நடப்பது ஐந்தாண்டுகளுக்கு முன் அவனது மகன் இளஞ்சேரன் செய்ததை ஒத்திருக்கிறது. அவ்வமயம், நமது மருகன் இராஜராஜ நரேந்திரனைக் காப்பாற்ற நமது ஓலைநாயகம் தானாகவே சிறைப்பட்டார். இப்போது காடவன் தப்பியுள்ளான். அவ்வளவே! இச்செய்தியைச் செவிமடுத்ததும் சேதுராயர் தள்ளாத வயதிலும் சிங்கமாகச் சீறியெழுந்து, சேரமானை எதிர்த்துப் போரிடக் கிளம்புவதாக வீரக்குரல் எழுப்பினார். ஆயினும், முதுமையால் தளர்ந்த இதயம், அவரது ஆவேசத்தைத் தாங்கவியலாது களைத்துப் படுக்கையில் தள்ளிவிட்டது." 

தான் சொல்லும் சேதி அவையினர் கருத்தில் பதிய, இராஜேந்திரன் சிறிது அவகாசம் தருகிறான். 

"அவரது பெயரனைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. சேரமானுக்குத் தகுந்த பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்பதே அவரது அவா, குறிக்கோள். அதுதான் அவரது துடிப்பு.  தள்ளாத வயதிலிருக்கும் அவருக்குள்ள துடிப்பு நமக்கு இருக்க வேண்டாமா?  அவருக்கு என்ன மறுமொழியளிப்பது என்பதைப் பற்றி ஆலோசிக்கத்தான் இக்கூட்டம்.  இனி சேரர்கள் மாறாகச் செயல்படாமலிருக்க என்செய்வது என்றும் உங்கள் கருத்துகளைத் தெரிவிப்பீர்களாக!" 

எல்லோரின் கருத்துகளையும் கேட்டு முடித்தவுடன், கடைசியாகச் சிவாச்சாரியின் கருத்தைச் சொல்லுமாறு பணிக்கிறான். 

"சேர நாடு சேரரால் ஆளப்படும் வரை இந்நிலைதான் நீடிக்கும். ஆகவே, ஒரு சோழர்தான் சேர நாட்டை ஆண்டு வர வேண்டும்!" 

சிவாச்சாரியின் இக்கருத்து அனைவரையும் தூக்கிவாரிப்போடுகிறது. 

"விளக்கம் தேவை!" என்று இராஜேந்திரன் கேட்கிறான். 

"சேரமான் நடந்துகொள்வது குழப்பத்தை விளைவிக்கிறது என்று கிட்டத்தட்ட ஏழு திங்கள் முன்னதாகவே சேதியனுப்பிய காடவர், தமது வேலைப்பளுவைக் குறைக்கக் கணக்காயர்களை அனுப்பும்படியும் கேட்டிருந்தார். சரியானவரைத் தேர்ந்தெடுக்க அவகாசம் தேவைப்பட்டதால் என்னால் உடனே கணக்காயர்களை அனுப்ப இயலவில்லை என்பது தாங்கள் அறிந்ததே. மேலோட்டமாகச் செயல்படாமல், மூலகாரணத்தையும் அறிந்து அதைத் தீர்க்க விரும்பினேன். 

"பாண்டிய மன்னர் விக்கிரமன் சேரமானின் விருந்தாளியாகத் தங்கியிருந்ததாகவும், அவர் வணிக வேடத்தில் நடமாடிவருவதாகவும் தகவல் கிட்டியது. இது பஞ்சும் நெருப்பும் இணைவதுபோல உள்ளது என்று கருவூரிலும், கொங்கு மண்டலத்திலுள்ள நமது படைகளை விழிப்பு நிலையில் வைக்கும்படி நமது தண்டநாயகர்களுக்குச் செய்தி அனுப்பினேன்.  சேர நாட்டுக்குச் சில ஒற்றர்களைக் கணக்காயர் வேடத்தில், மற்ற கணக்காயர்களுடன் அனுப்பி வைத்தேன்." எல்லோர் கவனமும் தன்பால் ஈர்க்கப்படுவதைப் பார்த்த சிவாச்சாரி, ஒவ்வொரு சொல்லையும் நிதானமாகச் சொல்லத் துவங்கினான். 

 "அதற்குள் நிலை கைமீறிப் போயிருக்கிறது. ஏமாற்றுவதையும், அவமதிப்பதையும் சேரமானும் அவரது மறைந்த மைந்தரும் கலையாகப் பழகி வந்துள்ளனர். நமது கவனம் அங்கு முழுவதும் செலுத்தப்படாததே இதற்குக் காரணம். 

"திறை செலுத்தவில்லை என்று பலமுறை படையெடுத்துச் செல்வது பொருட்சேதத்தையும், உயிர்ச் சேதத்தையும் விளைவிக்கிறது. சேர நாடு நமது நேரடிக் கண்காணிப்பில் இருப்பது இத்தகைய சேதங்களைத் தவிர்க்கும். சோழ நாட்டு நிலவரித் தீர்வை முறைகளையும், அவற்றைத் திரட்டும் முறைகளையும் அங்கு செயல்படுத்துவதுமே சிறந்த வழியாகும், சேரரை மாறாகச் செயல்படாது தடுக்கும் என்பது எனது கருத்து" என்று முடித்துத் தலைவணங்கிச் சிவாச்சாரி தன் இருக்கையில் அமர்கிறான். 

"கொங்குநாட்டுப் படையைப் போருக்கு ஆயத்தமாக்கும்படி உடனே செய்தி அனுப்புக.  கருவூரிலிருக்கும் படைகள் உடனே சேர நாட்டுக்கு விரையட்டும். இப்பொழுது ஒருவரைப் படைத்தலைவராக அனுப்ப வேண்டும்" என்று இராஜேந்திரன் நிறுத்துகிறான். 

"அரசே! நான் சென்று சேரனை நிர்மூலமாக்குகிறேன். அவனது தலைநகரைச் சின்னாபின்னம் ஆக்குகிறேன்" என்று இராஜதிராஜன் எழுந்து ஆர்ப்பாரிக்கிறான். 

இராஜேந்திரன் கையை உயர்த்துகிறான். 

"தற்பொழுது நீ இங்கிருப்பது மிகவும் தேவையான ஒன்று. ஆளவந்தான் கொங்குநாட்டுப் படைகளுக்குத் தலைமைதாங்கிச் செல்லட்டும். கருவூர்த் தண்டநாயகரே, நீர் இன்றே கிளம்பிக் கருவூர் சென்று, அங்கிருக்கும் படைகளை நடத்திச்செல்வீராக!  ஆளவந்தானும், நீரும் சேரமானின் தலைநகரை – மகோதயபுரம் என்றழைக்கப்படும் முசிரியைக் கைப்பற்றுவீர்களாக! 

"சேர நாட்டுச் செல்வம் நமக்குத் தேவை. ஆகவே, தேவையின்றி எதையும் அழிக்க வேண்டாம்.  பாஸ்கர ரவிவர்மன் அவனது மகன் சென்றவிடத்திற்கே சென்றடைந்தான் என்பதைக் கேட்க யாம் விரும்புகிறோம். ஆட்களை எப்படி நடத்திச்செல்வது, எப்படி நீங்கள் ஒன்றிணைவது என்பது பற்றி ஓலைநாயகத்துடன் கலந்துபேசி முடிவெடுத்து எமக்கு ஒற்றர்வாயிலாகச் சேதி அனுப்புவீர்களாக. எமக்கு ஒவ்வொரு வாரமும் தகவல்கள் வந்தவண்ணம் இருக்க வேண்டும்.  உமது வெற்றிச்சேதி எமக்கு வருங்கால் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் எனத் தகவல் அனுப்புகிறோம். 

"இராஜாதிராஜா! உனக்கு வேறொரு தலையாயப் பணி காத்திருக்கிறது. நீ மதுரைக்குச் சென்று பாண்டிநாட்டில் அமைதியை நிலைநாட்டுவாயாக. அங்கு ஓராண்டு பாண்டிநாட்டில் உன் நேரடி ஆட்சி நடக்கட்டும். இன்னும் ஒரு திங்களுக்குள் கிளம்பு. சேர நாடு சோழ மன்னரால் ஆளப்படவேண்டும் என்று சிவாச்சாரியர் செப்பியது பாண்டிநாட்டுக்கும் பொருத்தமானதே! உனக்குச் சடையவர்மன் சுந்தரசோழ பாண்டியன்11 என்ற பட்டத்தையும் சூட்டி அனுப்புகிறோம். 

"இராஜாதிராஜா, சிவாச்சாரியாரே நீங்கள் இருவர் மட்டும் சற்று இருந்துவிட்டுச் செல்வீராக.  சபை கலையலாம்!" என இராஜேந்திரன் ஆணையிடுகிறான். 

இருவரிடமும் அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத ஒரு திட்டத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்குகிறான். 

தம்பிரான் இல்லு, திருசிவப்பேரூர் 

காளயுக்தி, மார்கழி 8 – டிசம்பர் 24, 1018 

சாரல் தன் மீது தெறிப்பதையும் உணராதவாறு நிலவுமொழி சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறாள். அவள் மனம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் நடந்ததை அசைபோடுகிறது 

———————- 

[11.தன்னுடைய ஒரு மகனை மதுரையில் ஆட்சிசெய்யுமாறு இராஜேந்திரன் அனுப்பினான் என்றும், அவனுக்குச் சடையவர்மன் சுந்தரசோழ பாண்டியன் எனப் பட்டமளித்தான் எனக் கல்வெட்டுகள் கூறுகின்றன.  ஆனால், எந்த மகனுக்கு அப்பட்டத்தை அளித்தான் எனத் தெரியவில்லை.  இராஜாதிராஜன் சிலகாலம் மதுரையிலும், பின்னர் உறையூரிலும் சோழ இளவரசனாக ஆட்சிபுரிந்தான் எனச் செப்பேடுகள் வாயிலாக அறிகிறோம்.]

அந்தத் துயரமான நாளன்று அவள் காடவனின் வருகையை மகிழ்வான ஆவலுடன் வீட்டில் எதிர்நோக்கியிருந்தாள். அவர்களின் இல்லறம் இன்னொரு உயிரைச் சேர்க்கப்போகிறது என்ற இனிமையான செய்தியைத் தன் கணவனிடம் சொல்லத் துடித்துக் கொண்டிருந்தாள். அன்று மதியம்தான் மருத்துவச்சி அவள் நாடியைப் பிடித்துப் பார்த்துவிட்டு, அவள் வாந்திக்கும் தலைசுற்றலுக்குமான காரணத்தைச் சொல்லி, கருவை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்றும் விளக்கிவிட்டுச் சென்றிருந்தாள். 

சந்திரை வீட்டில் அவளுக்குத் துணையாக இருந்தாள். இருவரும் நெருங்கிய தோழியர் ஆகியிருந்தனர். ஆகவே, இந்துமதித் தம்பிராட்டி காடவனையும் நிலவுமொழியையும் தங்கள் இல்லுக்கு நாலைந்துமுறை அழைத்து விருந்து கொடுத்துவிட்டாள். 

இந்துமதி அவளிடம் எந்தவிதமான அரசு ரகசியத்தையோ, ஐயப்படும்படியான கேள்விகளையோ கேட்காதது நிலவுமொழிக்கு மிகவும் நிம்மதியைக் கொடுத்தது. 

சந்திரைக்கு நல்ல குரல்வளம் இருந்தது. அவள் அடிக்கடி இசையுடன் பாடல்களை முணுமுணுப்பதைக் கேட்ட பொன்னம்பல ஓதுவார் அவளுக்குத் தேவாரப் பண்களை இசையுடன் பாடச் சொல்லித்தந்திருந்தார். சிறிது மூக்கொலியுடன் பாடினாலும், கேட்க இனிமையாகவே இருந்தது.  நிலவுமொழியைப்போல அவளும் ஓதுவாரைத் தந்தை முறை சொல்லித்தான் அழைத்து வந்தாள். 

வாசற்பக்கம் குதிரைக் குளம்பொலி கேட்டது. காடவன் குதிரையில் வந்து இறங்கினான்.  அவன் முகத்தில் பதற்றம் தெரிந்தது. அவசரம் அவசரமாக, "நிலா, நிலா!  விரைவில் வா!  நாம் உடனே இங்கிருந்து கிளம்ப வேண்டும்!" என்று உரத்த குரலில் சொல்லிக்கொண்டே வந்தவன், சந்திரையைக் கண்டு அப்படியே திகைத்து நின்றுவிட்டான். தன் திட்டம் யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைத்து வந்தவன், அது சோமசுந்தரத் தம்பிரானின் தங்கை மகளுக்கே தெரிந்துவிட்டதை நினைத்துச் செய்வதறியாது வருந்தினான். 

தன் கணவன் தந்தையாகப்போகும் நற்சேதியைச் சொல்லலாம் என்று எதிர்பார்த்து அவனை வழிமேல் விழிவைத்துக் காத்திருந்த நிலவுமொழிக்குக் காடவனின் அறிவிப்பும், பதற்றமும் படபடப்பைத் தந்தது. அப்படியே உள் திண்ணையில் அமர்ந்தாள். 

சந்திரைக்கும் தர்மசங்கடமாக இருந்தது. 

இந்நிலையில் தான் அங்கிருப்பதை இருவரும் விரும்ப மாட்டார்கள் என நினைத்து, "சேச்சி, நிங்ஙள்ட பர்த்தாகூட நிங்ஙள் இருந்துகொள்ளாம். ஞான் என்ட இல்லுக்குப் போகும்" என்று கிளம்பினாள். 

அவள் இரண்டு எட்டுக்கூட எடுத்து வைத்திருக்க மாட்டாள், அதற்குள் சோமசுந்தரத் தம்பிரான் மூன்று ஆள்காரர்களுடன் அங்கு வந்துவிட்டார். 

தன் மாமனைக் கண்ட சந்திரை அப்படியே நின்றுவிட்டாள். தம்பிரான் தன்னை அழைத்துச்செல்ல வந்திருக்கிறாரா அல்லது நிலவுமொழியின் கணவருடன் அரசு விஷயமாகப் பேச வந்திருக்கிறாரா என்றெண்ணி, "மாமனுக்கு நமஸ்காரம்.  நிங்ஙள் இப்போழ் இவிட எந்தானும் வந்தது?" என வினவினாள். 

"சந்திர, நீ சீக்ரம் இல்லுக்குப் போய்க்கோ. ஞான் பொறகு வந்து நின்னுட பேசிக்கும்" என்று அவளை விரட்டினார். 

அது சந்திரைக்குச் சரியாகப்படவில்லை. இப்பொழுதுதான் நிலவுமொழியைக் காடவன் உடனே கிளம்புமாறு சொல்லிக்கொண்டு வந்தான். தனது மாமனோ தன்னை விரட்டுகிறாரே எனச் சிந்தித்தாள். அவளுக்கு சில அரசுச் செய்திகள் அரசல்புரசலாகக் காதில் விழுந்து கொண்டுதான் இருந்தன.  அது சோழ அரசுக்கு எதிராகத்தான் என்று தெரிந்தாலும், கேட்டும் கேளாமல்தான் இருந்து வந்தாள். 

ஆனால், இப்பொழுது இரண்டையும், இரண்டையும் கூட்டினால் நான்கு என்பதைப் போல அவளுக்குப்பட்டது. தான் இங்கிருந்து செல்வது நிலவுமொழிக்கும், அவளது கணவனுக்கும் நல்லதல்ல என அவளது உள்ளுணர்வு எடுத்துரைத்தது. 

"மாமன் இல்லுக்கும் போறப்போழ் யானும் இல்லுக்கு உடன்வரும். எனிக்கு அவசரம் இல்லா" என்று தம்பிரானுடன் வீட்டுக்குள் நுழைய முற்பட்டாள். 

"சந்திர, நீ மாமனட பேச்சைக் கேட்டால், மதி. போய்க்கோ, போய்க்கோ!" 

தம்பிரான் அவளை விரட்டினார். 

உடன் வந்திருக்கும் ஆள்காரர்கள் பொறுமையின்றித் துடிப்பது சந்திரைக்கு நன்றாகவே தெரிந்தது. அவர்கள் கையிலிருக்கும் சுருள்வாள்களும் அவளது கண்களுக்குத் தப்பவில்லை. 

"மாமனுக்கு ஞான் ஒரு விஷயம் பறையும்.  ஆ சேச்சி இப்போழ் ஒரு சிசுவுக்கு அம்மையாகப் போகிறதாக்கும். ஞான் காலைதான் ஆ விஷயதைக் கேட்டதானு. எனிக்கு நிங்ஙள் பேச்சு, நிங்ஙள் ஆள்காரங்க கையிலிருக்க சுருள்கத்தி – இதெல்லாம் சமாதானமா இல்லா. ஞான் ஆ ஸ்த்ரீய என்ட சொந்த சேச்சியா நினைக்குன்னதானு. ஞான் வடக்குநாதன் சத்யமாச் சொல்லும். நிங்ஙளால் ஆ சேச்சிக்கோ, அவ பர்த்தாவுக்கோ, எந்த ஹானியும் வர ஞான் சம்மதிக்கான் அல்லா!" 

சந்திரை தன் மாமனைப் பார்த்து இரைந்தாள். 

தம்பிரானுக்குத் தூக்கிவாரிப் போட்டது. தான் அவசரப்பட்டுப் பேசியதுதான் தவறாகப் போய்விட்டதோ என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டார். இந்தப் பெண் பிள்ளையால் காடவனைச் சிறைப்பிடித்து வரவேண்டும் என ஆள்காரர்கள் முன்பு சேரமான் இட்ட கட்டளையை நிறைவேற்ற இயலாமல் போய்விடுமோ? 

"சந்திர, நீ சிறிய பெண்குட்டியானு. என்ட காரியங்களில் நீ பிரவேசிச்சு ஏதும் பறைய வேண்டா.  இல்லுக்கு இப்பவே போனா மதி!" என்று மீண்டும் விரட்டினார். 

"மாமனே! நிங்ஙள் பேச்சு எனிக்குச் சம்சயமா இருக்கு. அது எனிக்குச் சம்மதம் இல்லா.  ஞான் இவ்விடத்திலிருந்து போகும் இல்லா. நிங்ஙள் ஆ சோழராஜாவிட ஏதும் சம்சாரிக்கணும்னா என்ட முன்னால வச்சுச் சம்சாரிக்கும்.  ஈ ஆள்காராங் கையில சுருள்கத்தி எந்துக்காணு? ஈ ஆள்காராள இவ்விடத்திலேந்து போகச்சொல், மாமனே!" என்று வீட்டு வாசலில் கைகளை விரித்து வழியை மறைத்தாள் சந்திரை. 

அவள் அதட்டிப் பேசுவதைக் கேட்டால் அவளது அன்னை இந்துமதி தம்பிராட்டியே எதிரில் நின்று அதட்டுவது போலச் சோமசுந்தரத் தம்பிரானுக்கு ஒருகணம் தோன்றியது. ஒருகணம் நிலை தடுமாறினார். 

"அதற்குத் தேவையே இல்லை சந்திரை!" என்ற குரல் அவளைத் திரும்ப வைத்தது. 

உருவிய வாளுடன் காடவன் நின்றான். 

அவன் அருகிலிருந்த மரத்தின் பின்னாலிருந்து மூன்று சோழ வீரர்கள் நாணேற்றிய வில்லுடன் வெளிவந்தனர். அவர்கள் வில்லில் பூட்டிய அம்புகள் மூன்று ஆள்காரர்களையும் குறி பார்த்தன. 

சந்திரை சட்டென்று காடவன் முன்னால் சென்று நின்று கொண்டாள். 

அவளை விலக்கி விட்டு, "தம்பிரானே!  நீர் என்னைப் பார்க்க வந்த செய்தியைச் சொல்லலாம். நீர் என்னைச் சிறைப்பிடிக்கத்தானே வந்துள்ளீர்? சிறைப்படும் வழக்கம் எமக்கில்லை. என் உடலைத்தான் உம்மால் கொண்டு செல்ல இயலும். துணிவிருந்தால் உமது வாளை எடுத்துப் போர் செய்யும்!" அறைகூவினான் காடவன். 

"பெண்குட்டியொட முண்டுக்குப் பின்னே மறைஞ்ஞு நிக்கறது, நிங்ங சோழநாட்டு வீரமானு?" என எகத்தாளமாக ஏசினார் தம்பிரான். 

"நானெங்கே பெண்ணில் பின்னால் நிற்கிறேன்? உம்மைத்தான் வாளெடுத்துப் போரிட அழைக்கிறேனே! அது போகட்டும், விருந்தாளிகளைச் சிறைப்பிடிப்பதுதான் உமது சேரநாட்டுப் பண்பா?"   காடவன் தம்பிரானைப் பார்த்துச் சீறினான். 

"இப்போழ் நீ என்ட இல்லுப் பெண்குட்டி பின்னால் நிற்கும் அல்லே!  அவளட முண்டல்லோ நின்னை இப்போழ் ரக்ஷிக்கதானு?" எனத் தம்பிரான் எள்ளி நகையாடினார். 

"மாமனே! அதிதிகளச் சீத்த பறையரத. அது மஹாப் பாவந்தன்னே. ஈ சோழராஜா நம்மட அதிதி. அதிதியத் தேவனா மதிக்கணம். நிங்ஙள் திரிச்சுப் போகும்" எனச் சந்திரை பெண் புலியாகச் சீறினாள். 

"அம்மா சந்திரை, நான் பார்த்துக்கொள்கிறேன். உன் மாமன் சொல்லியபடி வீட்டுக்குச் செல்.  சண்டை ஆண்கள் விவகாரம். இதில் தலையிடாது இருப்பதே நன்று" என்று கனிவுடன் அவளை வீட்டுக்குப் போகுமாறு கட்டாயப்படுத்தினான் காடவன். 

"நிலா சேச்சி ஒரு குஞ்சுக்குத் அம்மையாகப் போகுன்னதானு. ஈ சமயத்தில ஞான் நிலா சேச்சிக்குத் துணையா இருக்கும்" என்றபடி வீட்டுக்குள் சென்ற சந்திரை, அங்கே நடுங்கிக்கொண்டிருக்கும் நிலவுமொழியைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டாள். 

"சந்திரை, எனக்குப் பயமா இருக்கு. அவருக்கு ஏதாவது ஒண்ணு ஆயிட்டா, என்னால் தாங்க முடியாது" என விசும்பினாள் நிலவுமொழி. சந்திரை அவளை இதமாகத் தட்டிக்கொடுத்தாள். 

"நிங்ஙள் இப்போழ்தே சரணம் அடைஞ்சா நல்லதானு. நூறு ஆள்காரா அஞ்சு நிமிஷத்தில இவிட வந்னுசேரும், கேட்டோ!" என்று மிரட்டிப் பார்த்தார் தம்பிரான். 

"தம்பிரான், உங்கள் இல்லில் நான் உணவுண்டிருக்கிறேன். உண்டி கொடுத்தார், உயிர் கொடுத்தார் எனச் சொல்வர். ஆகவே, உமது உயிரை எடுக்க எனக்கு மனம் வரவில்லை. நீர் தப்பிச் சென்றுவிடும். என் மனைவியுடன் இங்கிருந்து நீங்கிவிடுகிறோம். அதற்குப் பிறகு, நான் தப்பிப்பதும், மாள்வதும் சேர வீரர் கையில் இருக்கும் உம்மிடம் இருக்காது!" 

காடவன் புலியாக உறுமினான். "எனிக்கி சேரமானிட ஆக்ஞைதான் முக்யம்" என்று தன்னுடைய சுருள்கத்தியைச் சுழட்டக் கையெடுத்தார் தம்பிரான். உடனே, அவரது புஜத்தில் ஒரு அம்பு பாயவே, அவரது சுருள்கத்தி கீழே விழுந்தது.  அதைக்கண்ட அவரது ஆள்காரர்கள் தத்தம் கத்தியை உருவினர். 

அடுத்த கணமே, அவர்களின் மார்பைச் சோழ வீரர்களின் அம்புகள் துளைத்தன. அடியற்ற மரமாக மாண்டுக் கீழே வீழ்ந்தனர். தம்பிரான் வலியில் துடித்தார். அவரருகில் சென்று, கையில் தைத்திருந்த அம்பைப் பிடுங்கி எறிந்த காடவன், அவரை மெதுவாக வீட்டுக்குள் இழுத்து வந்தான். 

"என்னை ஷமிக்கணும். ஆள்கார எதிரில் ஞான் நிங்ஙள் பக்கம்னு காட்ட ஏலலே!" எனத் தம்பிரான் வலியுடன் முனகினார். 

"அது எனக்கும் தெரியும். தேவையின்றி உங்களைக் கண்டபடிப் பேச நேரிட்டு விட்டது.  காயத்தில் குருதி பெருகுகிறதே!" என்று அம்பு தைத்த இடத்தை அழுத்திப் பிடித்தான்.  சோழ வீரர்கள் அவரது காயத்திற்குப் பச்சிலை வைத்துக் கட்டினர். சந்திரைக்கு ஒன்றுமே விளங்கவில்லை; குழப்பமாக இருந்தது. 

அதைப் பார்த்த காடவன், விளக்கத் தொடங்கினான்: "முதலில் தம்பிரான் நிலவரி விவரங்களைச் சேரமான் கட்டளையின்படி மறைத்துத்தான் வந்தார். அதைக் கையும் களவுமாகப் பிடிக்கவே, 'திறை செலுத்தாமலிக்கச் சேரமான் முடிவெடுத்ததாகவும், உங்களைச் சிறைப்பிடித்துப் பிணைக்கைதியாக்கி, விடுதலைக்குச் சோழ நாட்டிலிருந்து ஈடு கேட்கத் தீர்மானித்திருப்பதாகவும்' தம்பிரான் விளக்கினார். வாயிலில் இறந்து கிடக்கும் ஆள்காரர் சேரமானின் ஒற்றர்கள். அவர்களுக்காகவே இந்த நாடகம். அதற்காகத்தான் தம்பிரான் சந்திரையைத் தன் இல்லுக்குப் போகச்சொன்னார். நீதான் விஷயத்தைப் பெரிதாக்கிவிட்டாய், சந்திரை! அதனால்தான் தம்பிரான் மீது அம்பு தைக்க நேர்ந்தது. நல்லவேளை, மெதுவாக எய்யப்பட்டதால் ஆழமாகப் பாயவில்லை!" 

"சந்திர, சோழராஜாவையும், அவரட பாரியாளையும் நம்மட இல்லுக்கு ரகசியமாக் கூட்டிப் போய்க்கோ. இவிடம் நடந்த யுத்தத்தில நம்மட ஆள்காரா மரிச்ச சேதியைச் சொல்லான் வேண்டி ஞான் சேரமான் அரமணைக்குப் போகும்" என்று அவர்களைத் தம்பிரான் அனுப்பி வைத்தார் 

தன்னை அவர்கள் இல்லுக்கு அனுப்பிவிட்டுச் சோழர்களுக்கு விவரம் தெரிவிக்கவேண்டிக் காடவன் தொண்டைநாட்டிற்குச் சென்றுவிட்டதால், அன்றிலிருந்து தம்பிரானின் இல்லில் நிலவுமொழி மறைவாக இருந்து வருகிறாள். அவன் எப்பொழுது திரும்பி வந்து தன்னை அழைத்துச் செல்வானோ என ஏங்கிக்கொண்டிருக்கிறாள். 

*** 

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com