பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 1

பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -மூன்றாம் பாகம்-அத்தியாயம் 1
Published on

ஒரு அரிசோனன்

ரோகணம், இலங்கை – முருகேசனின் வீடு

ராட்சச, தை 1 – ஜனவரி 14, 1016

ட்டமான வெள்ளித் தட்டை முருகேசனின் முன் வைக்கிறாள் வள்ளியம்மை.  கருப்பான, களையான முகத்தில் பளிச்சென்ற சிறிதான மூன்று திருநீற்றுப் பட்டைகளின் நடுவில் பெரிய குங்குமப் பொட்டு மிளிர்கிறது.  மஞ்சள் பூசியதால் மெருகேறியிருக்கிறது அவளது கன்னம்.  மார்புக் கச்சையை மறைத்து கீழாடையை மேலே இழுத்துக் கட்டியிருக்கிறாள்.

அவள் குனிந்து தட்டை வைக்கும் அழகை ரசிக்கிறான் முருகேசன்.  அவனது பார்வையைக் கண்டு வெட்குகிறாள் வள்ளியம்மை.  திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆயினும் இளம் காதலன் போல முருகேசன் தன்னைப் பார்ப்பது குறையாதது அவளுக்கு ஒருபுறம் பெருமையாக இருந்தாலும், இன்னொரு புறம் வெட்கமாகவும் இருக்கிறது. இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகியும் அவனுக்கு அவள்பால் கவர்ச்சி இருப்பது இன்றுபோல என்றும் இருக்க வேண்டும் என்று இறைவி மீனாட்சியை வேண்டிக்கொள்கிறாள்.

தரையில் பலகையில் அமர்ந்திருக்கும் தன் கணவனை நோக்குகிறாள்.

தலையில் அள்ளிமுடிந்த கேசம், காவல் தெய்வம் ஐயனார் மாதிரி பெரிய முறுக்கு மீசை, கருங்காலி மரத்தைக் கடைந்து எடுத்ததைப் போன்ற உடம்பு, நெற்றி முழுவதும் நிறைந்த திருநீற்றுப் பட்டை, பெரிய விழிகள்.  வீரம் ததும்பும் பார்வை.

பாண்டிய மன்னர்களுக்கு பரம்பரை பரம்பரையாக மெய்காப்பாளர்களாக இருந்து அவர்களது விசுவாசமான குடும்பம் என்ற நம்பிக்கையைச் சம்பாதித்ததனால் ஏற்பட்ட வீரச்செருக்கு அவன் முகத்தில் மிளிர்கிறது.  இப்படிப்பட்ட அரச விசுவாசிக்கு மனையாளாக இருக்கிறோம் என்ற பெருமை வள்ளியம்மைக்கும் நிறையவே இருக்கிறது.

அவனது பார்வையைக் கண்டு தலைகுனிந்த அவள் வெள்ளித் தட்டிலிருக்கும் உருவ அமைப்பைக் கண்ணுறுகிறாள்.

நடுவில் ஒரு மீன்; அதற்குப் பாதுகாப்பு போல இரண்டு வாள்கள் அதற்கு இருபக்கமும் ஒன்றின் மீது ஒன்றாக அமைந்திருக்கின்றன. அவன் பாண்டிநாட்டிலிருந்து இலங்கை வரும்பொழுது தன்னுடன் கொண்டு வந்தது அவனுடைய வாள், இந்த வெள்ளித்தட்டு, தனது மனைவியான வள்ளியம்மை – அவ்வளவுதான்.

திருமாறன் பாண்டிய மன்னர் அமரபுஜங்கருடன் இலங்கையிலிருந்து திரும்பிச் சென்றபொழுது, அவனது அண்ணன் தனது புஜத்தில் கட்டியிருந்த ஒரு வெள்ளித் தாயத்தை அவன் புஜத்தில் கட்டிவிட்டுச் சென்றிருந்தான்.

"என்னங்க அத்தான்" முருகேசன் அவளது மாமன் மகன்தான் – நினைவு தெரிந்ததிலிருந்து அத்தான் என்றுதான் அவனை அழைத்து வருகிறாள்.

முறைப்பெண் என்றதால் பிறந்தவுடனேயே அவனுக்குத்தான் இவள் என்று இருவரின் பெற்றோர்களும் முடிவு செய்துவிட்டார்கள். எனவே, திருமணம் ஆன பின்பும் மச்சான் என்று அழைக்காமல் அத்தான் என்றே அழைத்து வருகிறாள்.

"அத்தான், நான் உங்களை ஒன்று கேட்க வேணும். இந்த வெள்ளித் தட்டில் போட்டிருக்கும் ஓவியத்திற்கு என்ன பொருள்?  நானும் இந்த ஆறு ஆண்டுகளாகக் கேட்கவேணுமிண்டுதான் என்று நினைச்சுகிட்டே இருக்கேன்.  ஆனா, ஏதாவது ஒரு காரணத்தால அது மறந்துபோயிடுது!" என்று கேட்டபடியே சோற்றைத் தட்டில் வட்டிக்கிறாள். அதன் மீது புளிக்குழம்பை ஊற்றிவிட்டு, தேங்காய் கலந்த காய்கறிகளைப் பரிமாறுகிறாள்.

"இது எங்க பரம்பரைச் சொத்து வள்ளி!" என்று பெருமிதத்துடன் கூறுகிறான் முருகேசன்.  "களப்பிரரை வென்ற பாண்டிய மன்னர் கடுங்கோன் எனது மூதாதையருக்குப் பரிசளித்தது.  மீன் பாண்டிய மன்னர்களைக் குறிக்கிறது. இரண்டு வாள்களும் பாண்டிய அரசரைக் காக்கும் எங்களது இரு கரங்களே! கடுங்கோன் எங்கள் மூதாதையருக்கு ஆறு வெள்ளித் தட்டுகளைப் பரிசளித்தார். அதில் ஒன்றை என் அண்ணன் திருமாறன் எனக்குக் கொடுத்தார். அதே இலச்சினைதான் எனது தாயத்திலும் இருக்கிறது. ஆனால், இது ஒரே ஒரு தாயத்துதான் எங்கள் குடும்பத்தில் உள்ளது. அதையும் அண்ணன் எனக்குக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்." இதைச் சொல்லும் போது முருகேசனின் கண்கள் பனிக்கின்றன.

"சோழர் சிறையிலேயே பாண்டிய ராசா அமரபுஜங்கர் இறைவனடி சேர்ந்தபோது எங்கள் குலவழக்கப்படி தன் வாளினால் என் அண்ணன் தனது தலையையே கொய்துகொண்ட செய்திதான் உனக்குத் தெரியுமே!  ஆறு ஆண்டுகளாக இந்த ஈழத்தில் நமது பாண்டியர்களின் பரம்பரைப் பொக்கிஷத்தைக் காத்துவருகிறேன். இவற்றுடன் பாண்டி நாட்டுக்குத் திரும்புவோமோ தெரியவில்லை.  நமது கண்மணிகளும் இந்த இலங்கையில் பிறந்துவிட்டார்களே, நம் நாட்டை என்று காண்பார்களோ என்று தினமும் துடித்துக் கொண்டிருக்கிறேன்!" 

அவனது குரல் இலேசாகக் கம்முகிறது.

"கவலைப்படாதீங்க அத்தான்.  நம்ம விக்ரமபாண்டிய ராசா எப்படியும் பாண்டிநாட்டை மீட்டிடுவாரு" என்று அவனுக்கு ஆறுதல் சொல்கிறாள் வள்ளியம்மை.

"சரி, சரி. சாப்பிடுங்க அத்தான்" மேலும் தட்டில் சோற்றை வட்டிக்கிறாள்.

"சொக்கனும், தேவானையும் எங்கே?" என்று மகனையும், மகளையும் பற்றி முருகேசன் விசாரிக்கிறான்.

"அதுங்க வெளியிலே விளையாடிக்கிட்டு இருக்குதுங்க. அப்பவே பசிச்சுதுன்னு நிறையச் சோத்தை தின்னுட்டுத்தான் வெளியிலே போயிருக்குதுங்க" என்று பதில் சொல்கிறாள்.

"சொக்கனுக்கு எழுதப் படிக்கச் சொல்லித் தரணும்" என்று உரக்கச் சொல்கிறான்.

"ஏங்க, உங்களை மாதிரி வாளைச்சுழட்டி ராசாக்களுக்குத் துணையாக இருக்கறவங்க, எழுதப் படிக்கத் தெரிஞ்சு என்னத்தைங்க சாதிக்கணும்?  புலவங்க மாதிரி கவிதையா எழுதப்போறீங்க?" என்று கேட்கிறாள்.

"அட புள்ளே!  எது சொன்னாலும் எதுக்கு எதிர்த்து பேசிப் பழகுறே!  ராசா எது சொன்னாலும் நாங்க அதுக்கு மறுவார்த்தை பேசறோமா? பாண்டியராசா கடுங்கோன் காலத்துலேந்து நாங்க எழுதப் படிக்க கத்துக்கிட்டுதான் வாரோம்.  பாரு, உங்கிட்டப் பேசிப்பேசி எனக்குக்கூட நல்ல தமிழ்ல பேசறது மறந்துபோயிடுது.  நாளைக்கே விக்ரமராசா வந்தா இப்படிப் பேசிப்புடுவேனோன்னு பயமா இருக்குது புள்ளே!  சொன்னா சரீன்னு கேட்டுக்க" என்று செல்லமாகக் கோபிக்கிறான்.

"சரி மகாராசா!  எதுத்துப் பேசலை, ராசா.  சின்னப் பிள்ளையாச்சே, கொஞ்சம் விளையாடித் திரியட்டுமேன்னுதான் பார்க்கறேன். உன் பெண்டாட்டிதானே நானு, எனக்கும் நாலு எழுத்து கத்துக்கொடுத்தா என்ன?" என்று அதே பொய்க்கோபத்துடன் அவனை முறைக்கிறாள் வள்ளியம்மை.

"ஆமாம்.  நீ பெரிய காரைக்கால் அம்மையார், இல்லே ஔவைப் பாட்டி!  உனக்கு எழுதப் படிக்க கத்துக்கொடுத்துட்டுத்தான் முதவேலை பாக்கணும்!  இப்பவே, ஒழுங்கா சமைச்சுப்போட மாட்டேங்கறே.  நாலு எழுத்துப் படிச்சுட்டியானா, நான்தான் ஒனக்குச் சமைச்சுப் போடணும்னு சொல்ல ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுடுவே!"  என்று சாப்பாட்டை முடித்துவிட்டு எழுந்திருக்கிறான் முருகேசன்.

வாயிலில் யாரோ வரும் அரவம் கேட்கிறது.

"முருகேசா… முருகேசா!" என்று அழைத்தபடி உள்ளே வருகிறான் பாண்டிய ஒற்றன் முத்துவீரப்பன்.

 "நல்ல அரிசிச் சோறு மணம் வெளியே எவ்வளவு தூரம் மூக்கைத் துளைக்குது!" அவனது நாக்கு சப்புக்கொட்டுகிறது.

"அண்ணாச்சி.  வந்து சாப்பிட உக்காருங்க.  புளிக்குழம்பும், காய்கறியும் செய்திருக்கேன்.  பசியாறுங்க" என்று அன்புடன் தமிழருக்கே உரித்தான விருந்தோம்பலுடன் வள்ளியம்மை உபசரிக்கிறாள்.

"இருக்கட்டும் தங்கச்சி, பரவாயில்லை," என்று ஒப்புக்குச் சொல்லிவிட்டு சப்பணம் போட்டு அமர்ந்து விடுகிறான், முத்துவீரப்பன்.  

மாடத்திலிருந்து வாழையிலையை எடுத்து வைத்து, சொம்பு நிறையத் தண்ணீர் வைக்கிறாள்.  வெளியில் சென்று கைகழுவிக் கொண்டு திரும்ப உட்காருகிறான் முத்துவீரப்பன்.  நன்றாகச் சாப்பாட்டை ஒருகை பார்த்து விட்டு பெரிதாக ஏப்பம் ஒன்றையும் விட்டபடி எழுந்திருக்கிறான்.

"தங்கச்சி, மகராசியா இரும்மா.  நல்ல சாப்பாடு சாப்பிட்டு மாசக்கணக்காச்சு.  சொக்கனைப் பார்த்து ஒரு வருசம் ஆயிருச்சே. அவன் நல்லா வளர்ந்துட்டாம்மா!  அப்படியே முருகேசன் அச்சுதான். பொண்ணு உன்னையே உரிச்சுவைச்சுக்கிட்டு பொறந்திருக்கா" என்று அவள் பிள்ளைகளை உயர்த்திப் பேசுகிறான்.

"அண்ணாச்சி, மதனி எப்படி இருக்காங்க?  பிள்ளைகள் எல்லாரும் நல்லா இருக்காங்களா?" என்று குசலம் விசாரிக்கிறாள் வள்ளியம்மை.

"மீனாட்சிம்மா, சொக்கையா அருள்ல அவங்க எல்லாரும் நல்லா இருக்காங்க தங்கச்சி.  நாலு மாசம் முன்னால அவங்களை மதுரைல விட்டுட்டுக் கிளம்பினேன்.  அங்கே இங்கே அலைஞ்சுட்டுக் கடைசியா முருகுவைப் பார்க்க வந்திருக்கேன்" என்று பதில் சொல்கிறான்.

"மதுரைக்குப் போனீங்களா அண்ணாச்சி?" 

'மதுரை' என்னும்போதே அவள் குரல் குழைகிறது.  "மீனாட்சி அம்மையையும், சொக்கநாதரையும் தரிசனம் செஞ்சீங்களா?  மதுரை எப்படி இருக்கு?" என்று விசாரிக்கிறாள்.  மதுரை அவள் பிறந்த ஊராயிற்றே!

"தரிசனம் செஞ்சேம்மா. எப்பம்மா நம்ம பாண்டிநாட்டுக்கு விடிவு வரும் அப்படீன்னு அவ சன்னதிலே அழுது தீர்த்தேம்மா! எங்கே பார்த்தாலும் சோழங்க தடபுடல்தாம்மா நடக்குது. மதுரைக் கோட்டையிலேகூட புலிக்கொடிதாம்மா பறக்குது. அதைப் பார்க்கப் பார்க்க வயிறு எரியுதும்மா. அமரபுஜங்க ராசாவோட மதுரையிலே மீன்கொடி இறங்கிப் போச்சும்மா!

"போதாததுக்கு சோழங்க கெடுபிடி வேற தாங்க முடியலை தங்கச்சி. ஒரு ஊருலேந்து இன்னொரு ஊரு போறதுக்கு அவங்க அனுமதிச் சீட்டு இருந்தாத்தான் போக முடியுது. இராவோட ராவா மறைஞ்சுதான் நான் ஒரு இடத்துலேந்து இன்னோரு இடம் போயிட்டு இருக்கேன். நெல்லையிலேதான் இன்னும் மீன்கொடி பறக்குது. அங்கேதான் நாம கொஞ்சம் நல்லா மூச்சுவிட்டுக்க முடியுது" என்று ஆதங்கத்துடன் பதில் சொல்கிறான் முத்துவீரப்பன்.

அதைக் கேட்கக் கேட்க முருகேசனின் மீசை துடிக்கிறது. உடல் முழுவதும் இரத்தம் கொதிக்கிறது. ஒன்றும் பேசாமல் வெளியேறுகிறான் முருகேசன்.

அதைப் புரிந்துகொண்டு, "தங்கச்சி, நீயும் சாப்பிடும்மா. நான் முருகுகிட்ட கொஞ்சம் பேசிட்டு வாரேன்" என்று முருகேசனைப் பின் தொடர்கிறான் முத்துவீரப்பன்.

முருகேசன் சாப்பிட்ட தட்டிலேயே சோற்றைப் போட்டுக்கொண்டு உண்ண அமருகிறாள் வள்ளியம்மை. அரசு விஷயமாகப் பேசத்தான் முத்துவீரப்பன் வந்திருக்கிறான் என்று அவளுக்குத் தெரியும்.  நல்ல சேதியாக இருக்க வேண்டுமே என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டே சாப்பிடுகிறாள்.

இருவரின் காலடி ஒலிகளும் மெல்ல மெல்ல மறைகின்றன.  "ஆத்தா, சொக்கன் என் காத்தாடியைப் பிச்சுட்டாம்மா" சிணுங்கியபடியே உள்ளே வருகிறாள் தேவானை.

***

பழையாறை மாளிகை

ராட்சச, தை 1 – ஜனவரி 14, 1016

மாதப்பிறப்பு சமயத்தில் செய்யவேண்டிய நீத்தார் சடங்கைச் செய்து முடித்துவிட்டு மாளிகைக்குள் வருகிறான் சிவாச்சாரி. புதுப் பானையில் புதிதாக அறுவடையான புத்தரிசியைப் போட்டுப் பொங்கவைக்கும் சர்க்கரைப் பொங்கலின் மணம் அவனது மூக்கைத் துளைக்கிறது. அருள்மொழிநங்கையும், அவனது முதல் மனைவியும் புத்தாடையணிந்து பொங்கல் கொதிப்பதை அருகில் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

நங்கையின் கீழாடைக் கச்சை நுனியைப் பற்றியபடி தளதளவென்று கொதிக்கும் பொங்கலைப் பார்த்தவாறே நிற்கிறான் இரண்டு வயதான அவளது மகன், 'மறையன் அருள்மொழி.'1

இராஜராஜ சோழரின் நினைவாக 'அருள்மொழி' என்றும், தனது பாட்டனாரின் பெயரில் ஒரு பகுதியான 'மறையன்' என்ற பெயரையும் அவனுக்குச் சூட்டியிருக்கிறான் சிவாச்சாரி.

முதல் மனைவியின் அருகில் அவளது பெண் சிவகாமி நின்று கொண்டிருக்கிறாள்.

தன் மனைவியர் இருவரின் உடையமைப்புகளின் வேறுபாட்டைக் கண்ட சிவாச்சாரியனுக்கு உள்ளூர நகைப்பாக இருக்கிறது. முதல் மனைவி வேதியப் பெண்மணியைப்போல உடையணிந்திருக்கிறாள். அருள்மொழிநங்கை மார்புக்கச்சையும், கீழாடையும் அணிந்து இரு தோள்களையும் சுற்றி மார்புக்கச்சைக்கு மேல் ஒரு உத்தரீயத்தை அணிந்திருக்கிறாள்.

————————————————————

[1 இராஜேந்திர சோழ பிரம்மராயருக்கு (கதைப்படி சிவாச்சாரி) மறையன் அருள்மொழி என்ற மகன் இருந்தான் – சோழச் செப்பேடுகள்]

இருவரின் நகைகளும் மாறுபட்டே இருக்கின்றன. நங்கையின் நெற்றியில் சிறியதாக திருநீற்றுக் கோடுகள் மூன்றும், நடுவில் செஞ்சாந்துப் பொட்டும் காணப்படுகிறது.  முதல் மனைவி இரு புருவங்களுக்கு நடுவிலும், நெற்றியின் உச்சியில் வகிடுத் தொடக்கத்திலும் குங்குமத்தை அணிந்து, சிறிய திருநீற்றுப் பூச்சும் தடவியிருக்கிறாள். நங்கையின் முகத்தில் அமைதியான அரசக் களையும், முதல் மனைவியின் முகத்தில் பரபரப்பும் காணப்படுகிறது.

அவன் வரும் காலடி ஒலியைக் கேட்டதும் இருவரும் திரும்பிப் பார்க்கிறார்கள்.

சிவாச்சாரியைக் கண்டதும், குழந்தைகள் இருவரும் அவனை நோக்கி ஓடி வருகிறார்கள்.  அவர்கள் இருவரையும் தூக்கி அணைத்துத் தோளில் ஏற்றிக்கொள்கிறான் அவன்.

சிறிது நேரம் அவர்கள் இருவரிடமும் கொஞ்சிப் பேசிவிட்டுக் கீழே இறக்கிவிடுகிறான்.

பானையிலிருந்து பொங்கல் பொங்கி வழிகின்றது. அனைவரும் பானையை நோக்கிக் கைகூப்பி வணங்குகிறார்கள். சிவாச்சாரி கூடத்திற்குச் சென்று அங்கிருந்த மணையில் அமர்ந்து, அவனது பார்வைக்கு வந்திருக்கும் ஓலைச் சுவடிகளைப் பார்வையிட ஆரம்பிக்கிறான்.

அருகிலிருந்த பெட்டியைத் திறவுகோலால் திறந்து, அதிலிருந்து திருப்பணிக் குழலை எடுத்து, தங்கச்சுருளை எடுக்கிறான். அதை பிரித்துத் தன் முன்னர் இருக்கும் சிறு மணையில் வைக்கிறான். பத்து நிமிடங்கள் அதில் விடுவிடென்று எழுத்தாணியால் எழுதிமுடிக்கிறான். அதன்பின், கவனமாக அச்சுருளைச் சுருட்டி குழலுக்குள் வைத்து, பெட்டியில் வைத்துப் பூட்டுகிறான்.

"அம்மா சாப்பிடக் கூப்பிடறாங்க!" என்றபடி அங்கு வருகிறாள் சிறுமி சிவகாமி.

புன்னகைத்தபடியே அவளுடன் உணவருந்தும் இடத்திற்குச் செல்கிறான்.

"என்ன எழுதினீங்க?  ஏன் உள்ளே வைத்து பூட்டறீங்க?" என்று வினவுகிறாள் சிவகாமி.

"அது விலை மதிக்க முடியாத பொக்கிஷம் அம்மா. மறைந்த சக்ரவர்த்தி அவர்களும் எனது குருநாதர் கருவூராரும் எனக்குத் தந்துசென்ற பணியம்மா!" என்று பெருமிதத்துடன் கூறுகிறான்.

"அவங்க என்ன சொன்னாங்க?  நீங்க அவங்க தந்த பணியைக் கவனமா, முழுக்க முழுக்கச் செய்யறீங்களா?" என்று ஆவலுடன் கேட்கிறாள்.

"முடிந்த மட்டும், கோப்பரகேசரியார் அனுமதிக்கும் வரைக்கும் செய்து வருகிறேன்" என்று சிவாச்சாரி சொன்ன பதில் சிவகாமிக்குத் திருப்தியாக இல்லை.

"அது எப்படி முடிந்தவரைன்னு சொல்றீங்க? குருநாதரும், சக்ரவர்த்திகளும் கொடுத்த பணிக்கு கோப்பரகேசரியாரின் அனுமதி எதுக்கு? நீங்க என்னை ஏதாவது செய்யச்சொன்னா, நான் தட்டாமல் செய்யறேனே! அதேமாதிரி நீங்க பணியாளர்களுக்கு கொடுக்கற வேலையை அம்மாவோ, சின்னம்மாவோ அவங்க அனுமதியோடதான் செய்யணும்னு சொல்றதில்லையே?  அப்படி இருக்க, சக்ரவர்த்திகள் உங்களுக்குக் கொடுத்த பணியை அவரோட மகன் எப்படி மாற்ற முடியும்?" ஐந்து வயது கூட ஆகாத சிவகாமியின் அறிவுக்கூர்மை சிவாச்சாரியை வியக்க வைக்கிறது.

அப்பொழுது அவன் மனத்தில் ஒரு திட்டமும் உருவெடுக்க ஆரம்பிக்கிறது.  தமிழ்த் திருப்பணிக்கு இவளுடைய உதவி பிற்காலத்தில் தேவைப்படும் என்று அவனுக்குத் தோன்றுகிறது.

"அதை எப்படி உனக்குப் புரியும்படி சொல்வது அம்மா?  சக்ரவர்த்திகள் உயிரோட இருந்தவரைக்கும் அவர் சொல்வதைத்தான் செய்துவந்தேன். இப்பொழுது கோப்பரகேசரியாரிடம் பணியாற்றுகிறேன். எனவே அவர் சொல்வதைத்தான் கேட்க வேண்டும்" தன்னால் இயன்ற அளவு அந்தக் குழந்தையின் மனதில் தோன்றும் கேள்விகளுக்கு விடையளிக்கிறான்.

"தன்னோட தந்தை சொன்னதை அவர் ஏன் மாத்தணும்?" சிவகாமியின் குரலில் மழலை இருந்தாலும் அவள் கேள்விகளில் இருக்கும் உண்மைக்கு அவனால் தன் மனதைத் திறந்து விளக்க இயலவில்லை.

"போகப்போக உனக்குத் தெரியும் அம்மா. சாப்பிட்டுவிட்டு விளையாடப் போகிறாயா?" என்று அவளது கேள்விகளின் திசையை மாற்ற முயற்சிக்கிறான் சிவாச்சாரி.

"எனக்கு எழுதப் படிக்க சொல்லித் தரீங்களா? எனக்கு நிறைய ஆசையா இருக்கு" என்று சிவகாமி அறிவித்ததைக் கேட்டபடி அங்கு வந்த அவளது தாய், முகவாயைத் தோளில் இடித்துக்கொள்கிறாள்.

"இவள் பெரிய மனுஷி, எழுதப் படிக்கக் கத்துக்க வேணுமாக்கும்!  வீட்டு வேலை, சமையல், கைவேலைகளைக் கத்துக்க வேணும்னு சொல்லுங்கோ!" என்று தனது கணவனுக்குத் தன் விருப்பத்தை வெளியிடுகிறாள்.

"ஏன் அக்கா அவளது விருப்பத்தைத் தடை செய்கிறீர்கள்?  கலைவாணியே அவள் நாவின் மூலமாக இந்த விருப்பத்தைத் தெரிவித்திருக்கலாம் அல்லவா?" என்று பரிந்து பேசுகிறாள் அங்கு வந்த அருள்மொழிநங்கை.

"பெண் பிள்ளைகளுக்கு எழுத்துப்படிப்பு என்னத்துக்கம்மா? இவள் கவிதை எழுதப்போகிறாளா, இல்லை காவியம் தீட்டப்போகிறாளா? இல்லை அரசுப்பணிதான் இவளைத் தேடி வரப்போகிறதா?  சிவாச்சாரியாரின் மகள்தானே இவள்!"

அவள் குரலில் இருக்கும் உண்மை அருள்மொழிநங்கையின் உள்ளத்தைத் தொடுகிறது.

"அப்படிச் சொல்லாதீர்கள் அக்கா.  இவளது தந்தையார் பிறப்பால் சிவாச்சாரியாராக இருந்தாலும், சோழ நாட்டின் திருமந்திர ஓலைநாயகராக உயரவில்லையா? அது மட்டுமன்றி; எனது பாட்டனாருக்கே தமிழ்த்திருப்பணி ஆலோசகராக என் தந்தையாரால் அமர்த்தப்படவில்லையா? மேலும், பாண்டியர் சேனையை நிர்மூலமாக்கும் பொறிகளை வடிவமைக்க மூலகாரணம் ஆகவில்லையா? பிறப்பால் யார் எப்படி இருந்தாலும், அறிவால் எப்படி வேண்டுமானாலும் உயரலாம் அல்லவா?" என்று எதிர்க்கணை தொடுக்கிறாள்.

அவர்களது சொற்போரில் குறுக்கிடாது ரசிக்கிறான் சிவாச்சாரி.

திருமணம் ஆன புதிதில் அருள்மொழிநங்கையிடம் பேச அவனது முதல் மனைவிக்குத் தயக்கமாக இருந்தாலும், இப்பொழுது அது முற்றிலும் நீங்கி இருக்கிறது. இருவரின் உடைகள் மாறுதலாக இருப்பதைப் போலவே இவர்கள் எந்த விஷயத்தையும் அணுகும் முறையும் வேறாகவே இருக்கிறது.

"என்ன சொன்னாலும் நீ ராஜபரம்பரை, நான் சிவாச்சாரிபரம்பரை.  எனக்கு தீர்க்கமா எதையும் சிந்திக்கப் பார்க்க முடியாதம்மா. உனக்கு குந்தவைப் பிராட்டியார் அத்தைப்பாட்டி.  அவர்கள் நிறைய ராஜாங்க விஷயங்கள் சொல்லிக் கொடுத்திருப்பாங்க" என்று இழுத்தவளை இடைமறித்துப் பேசுகிறாள் அருள்மொழிநங்கை.

"என்ன அக்கா இப்படிப் பேசுகிறீர்கள்? உங்கள் அம்மான் கருவூர்த்தேவர் எனது பாட்டனார் இராஜராஜச் சக்கரவர்த்தி அவர்களின் குருநாதர் இல்லையா! அவரை நினைத்தபடிதானே என் பாட்டனார் சிவலோகம் சென்றார்! அப்படிப்பட்ட கருவூராரின் தங்கை மகளான நீங்கள் உங்களைத் தாழ்த்திக்கொள்வது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது."

"சரிம்மா.  நான் இனிமேல் அப்படிப் பேசலை. உன் மனசு கலங்கினால் என் மனசும் கலங்கிடும். சிவகாமி ஒரு ஔவையாகத்தான் வந்துட்டுப் போகட்டுமே, அதுனால என்ன, அவளோட தாயார்னு நான் பெருமைப்பட்டுக்கறேன்" என்று அருள்மொழிநங்கையை அன்புடன் அணைத்துக் கொண்டவள், சிவாச்சாரி தங்கள் அருகில் நிற்பதைப் பார்த்து விட்டு, "அடாடா, எத்தனை நேரமாய் நீங்க எங்க பேச்சைக் கவனித்துக்கொண்டு நிற்கறேள்!  சாப்பிடக் கூப்பிட்டுட்டு நாங்கபாட்டு பேசிண்டே இருக்கோமே!" என்று உணவு பரிமாற விரைகிறாள்.

"'செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்' என்றுதானே செந்நாப்போதார் சொல்லி இருக்கிறார்! உங்கள் பேச்சைக் கேட்டதில் என் பசியே பறந்துவிட்டது!" என்று அவர்களை நகையாடுகிறான் சிவாச்சாரி.

வெட்கத்தில் இருவருக்கும் முகம் சிவக்கிறது. அதை ரசித்த சிவாச்சாரி, ஆளரவம் கேட்கவே திரும்பிப் பார்க்கிறான்.

அரச தூதுவன் வாயிலில் நின்று கொண்டிருக்கிறான். முக்கியமான அலுவல் இல்லாவிட்டால் பொங்கல் நாளில் வரமாட்டானே என்ற சிந்தனையுடன் சிவாச்சாரி உடனே அவன் அருகில் சென்று, என்னவென்று கண்ணாலேயே வினவுகிறான்.

"கோப்பரகேசரியார் வந்துகொண்டிருக்கிறார், ஓலைநாயகம் அவர்களே!" என்று பணிவுடன் கூறிவிட்டுத் தள்ளி நிற்கிறான்.

அவன் சொல்லி முடிப்பதற்குள் மாளிகை வாயிலில் இராஜேந்திரனின் ரதம் வந்து நிற்கிறது.

"நங்கை, உன் தந்தையார் வருகிறார். உன் அக்காவை இரண்டு மூன்று இலைகள் கூடப் போடச்சொல்லு" என்று உள்பக்கம் திரும்பிச் சொன்ன சிவாச்சாரி, வாசலை நோக்கி விரைகிறான்.

இரதத்திலிருந்து இறங்குகிறான் கோப்பரகேசரி இராஜேந்திரன்.  சிவாச்சாரி அவனுக்கு கைலாகு கொடுத்து வரவேற்கிறான்.

"வர வேண்டும், வர வேண்டும்!  இந்த நல்ல நாளில் தங்கள் வருகையால் நான் மிகவும் கௌரவமடைகிறேன்."

இராஜேந்திரனுக்குப் பிறகு இருபத்திரண்டிலிருந்து இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞனும் இரதத்திலிருந்து இறங்குகிறான்.

அவனுக்கும் இராஜேந்திரனுக்கும் உள்ள உருவ ஒற்றுமையைக் கண்டு சிவாச்சாரி வியக்கிறான்.

***

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com