தலையங்கம்
ஒன்றிய அரசு, சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டிவிட்டது. டீசல் விலை 100 ரூபாயை நெருங்கிவிட்டது. பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து, சமையல் காஸ் சிலிண்டர் விலையையும் மத்திய அரசு அதிரடியாக உயர்த்தி வருகிறது.
நடப்பாண்டில், கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து சமையல் காஸ் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பிப்ரவரி 4ம் தேதி 25 ரூபாய், பிப்ரவரி, மாதம் 3 முறையும் பின்னர் மார்ச், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தற்போது மேலும் 15 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், ஓராண்டில் 300 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது ஒரு சிலிண்டரின் விலை 1000 ரூபாயை நெருங்குகிறது.
கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் சமையல் காஸ் சிலிண்டரின் அடிப்படை விலை ரூ.484.02 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இது, இரண்டே ஆண்டில் இருமடங்காக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு, ஏழை, எளிய, நடுத்தர மக்களை நசுக்கும் வகையில் உள்ளது. சர்வதேச சந்தையின் விலைக்கேற்ப, நம் நாட்டில் எரிபொருட்களின் விலையை, மாற்றி அமைக்கும் நடைமுறை குழித் தோண்டி புதைக்கப்பட்டுவிட்டது. பண்டிகை காலம் நெருங்கும் வேளையில், சமையல் காஸ் பயன்பாடு அதிகரிப்பது வழக்கம். இச்சூழ்நிலையில் விலையை அபரிமிதமாக உயர்த்துவது, இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு சிலிண்டரின் விலை 1000 ரூபாயாக உயர்ந்திருந்தாலும், அப்போது பெரும்பான்மையான தொகை மானியமாக வழங்கப்பட்டு ரூ.500, ரூ.450 என்ற அளவிலேயே மக்களிடமிருந்து சிலிண்டருக்கான தொகையாக பெறப்பட்டது. ஆனால், தற்போதோ மானியமாக வெறும் 25 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுவருகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது எண்ணெய் நிறுவனங்களுக்கு நேரடியாக மானியங்களை வழங்காமல், மக்களுக்கே மானியங்கள் வழங்கப்பட்டது. இந்த நேரடி மானியத் திட்டத்தை, அப்போதைய முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.க. கடுமையாக எதிர்த்தது. இப்படி நேரடியாக மக்களுக்கே மானியம் வழங்குவதன் மூலம், மானியங்களை காங்கிரஸ் ஒழிக்கப்போவதாக, பா.ஜ.க. குற்றஞ்சாட்டியது. ஆனால், இதே பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவுடன், மானியம் கொடுக்கும் திட்டத்தை பெறும் விளம்பரத்துடன் செயல்படுத்தியது. அத்துடன், அதைப் பொதுமக்களின் வங்கிக் கணக்கிலும் செலுத்திவந்தது. தொடக்கத்தில், சுமார் 400 ரூபாய் வரை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட கேஸ் மானியம், இப்போது வெறும் 25 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை மத்திய அரசே தீர்மானித்து வந்தது. கடந்த 2004-ம் ஆண்டு, கச்சா எண்ணெய் விலை உயர்விற்கு ஏற்ப பெட்ரோல், டீசல், கேஸ் விற்பனை விலையை, ’15 நாட்களுக்கு ஒருமுறை’ பெட்ரோலிய நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம் என காங்கிரஸ் அரசு அறிவித்தது. அதனைக் கடுமையாக எதிர்த்தது பா.ஜ.க. ஆனால், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல், டீசல் விலையை, ‘தினசரி’ மாற்றம் செய்துகொள்ளும் அதிகாரத்தைப் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு வழங்கியது. பிறகு, பெட்ரோல், டீசல், கேஸ் விலை ஏறும்போதெல்லாம், மத்திய அரசு பெட்ரோலிய நிறுவனங்களையே கைகாட்டி வருகிறது.
எழும் கேள்வி இந்த எண்ணெய் நிறுவனங்கள் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது? கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில்கூட இவர்கள் அறிவிக்கும் தொடர் விலையேற்றங்களை அரசால் கட்டுப்படுத்த முடியாதா? ஆண்டுதோறும் இந்த எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் லாபத்தைப் பெருக்கி அதை அரசுக்கு அளிக்கிறது.
அதாவது கருணையின்றி இந்த நிறுவனங்கள் சாமானிய இந்தியனிடமிருந்து இப்படி வசூலிக்கும் அதிக பணத்தால் தங்கள் இலாபத்தைப் பெறுக்கி, அதை அரசுக்கு அளிக்கிறது. இந்த முறையை அரசு அங்கிகரிக்கிறது.
அரசின் இந்த திறனற்ற நிர்வாகத்தால் எண்ணற்ற மத்தியத் தர குடும்பங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன.
மாண்புமிகு பிரதமர் அவர்களே…. தயவு செய்து கருணைக் காட்டுங்கள். சாமனிய இந்தியக் குடும்பங்களைக் காப்பாற்றுங்கள்.
செவிடன் காதில் ஊதிய சங்குதான்.
I just paid subscription for one year in the new portal for updating
first time.OK