ராக ராஜ பிரம்மம்!

ராக ராஜ பிரம்மம்!
Published on

– 'திருப்புகழ்' மதிவண்ணன்

பிறக்க முக்தி அளிக்கும் அற்புதத் திருத்தலமான திருவாரூரில் தோன்றிய சங்கீத மும்மூர்த்திகளில் தியாகராஜ சுவாமிகள் (1767 – 1848) தென்னிந்திய இசை உலகில் துருவ நட்சத்திரமாகத் துலங்குபவர்.

இந்தியாவின் தென் பகுதியிலே இறை உணர்வையும் இசை ஞானத்தையும் ஒருசேர ஊட்டிய உன்னத ஞானியாக, தியாக பிரம்மம் விளங்குகிறார்.

'ராமாயணம் காட்டும் ராமபிரானை விட, தியாகராஜ கீர்த்தனைகள் போற்றும் ராமபிரான் ஒரு படி மேலே உயர்ந்து விளங்குகிறான்' என்கின்றனர் ஆய்வாளர்கள்.

சைவ வைணவ ஒற்றுமையின் சின்னமாக, 'ராம' நாமம் விளங்குகிறது என்று ஒரு புதிய நோக்கைப் புலப்படுத்துகின்றார் தியாகராஜர்.

'நாராயணாய நம' என்னும் எட்டெழுத்து மந்திரத்தில் ஜீவ அட்சரமாக இரண்டாவது எழுத்தான, 'ரா' என்பது விளங்குகின்றது.

'நம சிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தில், 'ம' என்னும் இரண்டாவது எழுத்தே ஜீவ அட்சரம்.

எனவே, 'ராம' என்ற மந்திரம், சிவ விஷ்ணு ஐக்கிய பாவத்தைத் தோற்றுவிக்கும் மேலான மந்திரம் என, 'எவரகி' என்னும் கீர்த்தனையில் எடுத்துரைக்கிறார் தியாகராஜர்.

திருவாரூரில் பிறந்து, திருவையாற்றில் வளர்ந்த தியாகராஜர், கருவிலேயே திருவுடையவர். நுட்ப புத்தியும், ராம பக்தியும் பெற்ற தியாகராஜர், இளமையிலேயே சமஸ்கிருத ஞானமும், சங்கீத நுட்பமும் கொண்டு விளங்கினார். தாய்மொழியான தெலுங்கில் அவர் இயற்றிய கீர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

மராத்திய அரசு மன்னரான தஞ்சை சரபோஜியார் தியாகராஜரைப் பாராட்டிப் பரிசளிக்க விரும்பி அழைத்தும், அதில் சிறிதும் விருப்பம் இல்லாத தியாகராஜர்,

'நிதி சால சுகமா ராமுநி சந்நிதி சேவ சுகமா' என்று பாட்டிலேயே பதில் தந்தார்.

96 கோடி முறை ராம நாமத்தை உச்சரித்த மகான் தியாகராஜர். கீர்த்தனைகள் மட்டுமல்லாது; இசை நாடகங்களையும் இயற்றியுள்ள தியாகராஜரின் படைப்புகள் உவமைகளிலும், வருணனைகளிலும், நீதி போதனைகளிலும், சொல்லாக்கங்களிலும் சுடர் விட்டுப் பொலிகின்றன.

சமஸ்கிருத இலக்கியங்களில் காளிதாசர் பெற்றுள்ள புகழோடு, தியாகராஜரின் தெலுங்கு மொழிப் பணிகள் ஒப்பிடப்பட்டு பேரறிஞர்களால் புகழப்படுகின்றன.

தமது 80ஆவது வயதில் இறைவனின் திருப்பாதம் ஏகிய தியாகராஜ சுவாமிகளின் சமாதி, திருவையாற்றில் காவேரிக் கரையில் அழகொளிரக் காட்சி தருகிறது. ஆண்டு தோறும் அங்கு இசைக் கலைஞர்கள் ஒன்று கூடி, தியாகபிரம்மத்திற்கு பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி அஞ்சலி செலுத்துவது வழக்கமாக உள்ளது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com