ரத ஸப்தமி – வழிபாடும் பலன்களும்!

ரத ஸப்தமி – வழிபாடும் பலன்களும்!
Published on

எஸ்.மாரிமுத்து

சூரிய பகவானின் ஜயந்தி தினத்தையே பக்தர்கள் ரத ஸப்தமி திருநாளாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். உத்ராயண தை அமாவாசைக்குப் பின் வரும் ஏழாவது நாள் (ஸப்தமி திதி – 7.2.2022) ரத ஸப்தமி என்று போற்றப்படுகிறது. தெற்குப் பாதையில் பயணிக்கும் சூரியன், அன்று முதல் வடக்கு திசை நோக்கிப் பயணிப்பதாக ஜோதிட புராண நூல்கள் சொல்கி்ன்றன. அதோடு, சூரியன் தனது வடக்கு நோக்கிய பயண ஆரம்பத்தில், இந்த ஸப்தமி திதியிலிருந்துதான் தனது ஒளிக்கதிர்களின் வெப்பத்தை சிறுகச் சிறுகக் கூட்டுகிறான் என்றும் கூறுகிறது சாஸ்திரம். இதை அறிவியலும் ஒப்புக்கொள்கிறது.

ரத ஸப்தமி நாளில் சூரிய பகவான் பிறந்ததாகக் கருதப்படுவதாலும், அந்த நாளில் சூரியனுக்கு விசேஷமான ஒளி பிறப்பதாலும், அன்றைய தினத்தில் விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானை வழிபட வேண்டும். சூரிய உதயத்துக்கு முன் எழுந்து நீராடி, ஆண்கள் சூரியனுக்கு உகந்த எருக்கன் இலைகள் ஏழு எடுத்து, அதனுடன் சிறிது அட்சதை (பச்சரிசி) விபூதியை தலையின் மீது வைத்து, கிழக்கு திசை நோக்கி நின்று நீராட வேண்டும். பெண்கள், கன்னியர், சுமங்கலிகள் ஏழு எருக்கன் இலைகள், சிறிது மஞ்சள் தூள், அட்சதை வைத்து, மேற்கூறியபடியே நீராட வேண்டும். அப்போது சூரிய ஸ்லோகங்கள் தெரிந்தால் சொல்லலாம். இதனால், சூரியனின் ஏழு வகையான கிரணங்கள் எருக்கன் இலைகள் மூலமாக உடலில் பாய்ந்து, உடல் நலத்தை வலுப்படுத்தும் என்பது ஐதீகம். பிறகு சூரிய நமஸ்காரம் செய்தல் அவசியம்.

ஆயுள், ஆரோக்கியம் தரும் விரதங்கள் ஆண்டில் பல வந்தாலும், அனைத்திலும் சிறந்ததாகச் சொல்லப்படுவது ரத ஸப்தமி விரதமே. மேற்கூறியபடி நீராடுவதால், பகலவனைக் கண்டு பனி மறைவது போல, செய்த பாவங்கள் அனைத்தும் மறைந்து போகும். புண்ணியப் பலன்கள் பெருகும் என்பது ஐதீகம்.

நாராயணன் அம்சமே சூரியன் என்பதால், ரத ஸப்தமி நாளில் பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார். இந்நாளில் சூரியனை நோக்கி,

'ஓம் நமோ ஆதித்யாய
ஆயுள் ஆரோக்யம்
புத்திர் பலம் தேஹிமே சதா!'


என்று சொல்லி வணங்க வேண்டும். அறிவு, ஆற்றல், ஆரோக்கியம், ஆயுள் என யாவற்றிலும் சிறந்து விளங்கும் அனுமனுக்கு அந்த ஆற்றலை குருவாக இருந்து அளித்தவர் சூரிய பகவான். சூரியனை பொங்கல் மற்றும் ரத ஸப்தமி நாளில் மட்டும் வழிபடாமல்; தினமுமே வணங்கினால் வாழ்வில் தீவினை இருள் விலகி, நன்மை ஒளி பரவும் என்பது நிச்சயம்.

ரத ஸப்தமியும்; பீஷ்மாஷ்டமியும் :

கெளரவ சபையில் பாஞ்சாலிக்கு அநீதி இழைக்கப்பட்டபோது, அதைத் தட்டிக் கேட்காமல் இருந்தார் பீஷ்மர். இதனால் ஏற்பட்ட வினை, யுத்தக் களத்தில் அம்புப் படுக்கையில் கிடந்த பீஷ்மரின் மனதை வாட்டி வதைத்தது. அப்போது அங்கே வந்த வியாச முனிவர், எருக்கன் இலைகளின் மகிமையை பீஷ்மருக்கு எடுத்துரைத்து, அவற்றால் பீஷ்மரின் மேனியை அலங்கரிக்க, கொஞ்சம் கொஞ்சமாக மன அமைதி அடைந்தவர், அப்படியே தியானத்தில் ஆழ்ந்து அந்நிலையிலேயே முக்தியும் பெற்றார்.

அதன் பிறகு, 'பீஷ்மருக்கு யார் பித்ருக்கடன் செய்வது?' என்று தர்மர் வருந்தினார். அதையறிந்த வியாசர், ''தர்மரே! வருந்த வேண்டாம்ஒழுக்கம் தவறாத நேர்மையான பிரம்மசாரிக்கும், தூய்மையான துறவிக்கும் பித்ருக்கடன் அவசியமே இல்லை. வருங்காலத்தில் பாரத தேசமே பீஷ்மருக்காக நீர்க்கடன் அளிக்கும். ரத ஸப்தமியன்று எருக்கன் இலைகளை வைத்துகொண்டு குளிக்கும் மக்கள், தங்கள் பாவங்களிலிருந்து விடுபடுவார்கள். இதனால் அவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். மேலும், ரத ஸப்தமிக்கு அடுத்த நாள் அஷ்டமி திதி. இந்த அஷ்டமி திதியை, 'பீஷ்மாஷ்டமி' என்பர். அன்று புனித நீர்நிலைகளுக்குச் சென்று பீஷ்மருக்கு தர்ப்பணமும், முன்னோர்களுக்கான பித்ரு பூஜையும் செய்தால் சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும்' என்று உரைத்தார். ரத ஸப்தமி தினத்தில் திருமலை திருப்பதியில் எம்பெருமான் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு ஸேவை சாதிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com