
சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் துப்பாக்கியைக் காட்டி மர்ம நபர்கள் இன்று அதிகாலையில் ரூ1.32 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்து சென்றதாகச் சொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் அதிகாலையில் டிக்கெட் கவுண்ட்டருக்குள் நுழைந்த மர்ம நபர்கள், துப்பாக்கி முனையில்டிக்கெட் கவுண்டர் ஊழியர் டிக்காராமைக் கட்டிப் போட்டுவிட்டு, பின்னர் அங்கிருந்த ரூ1.32 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்து சென்றதாகச் சொல்லப்பட்டது. இக்கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் எழும்பூர் ரயில்வே டிஎஸ்பி ஸ்ரீகாந்த் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து திருவான்மியூர் ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து விசாரித்தனர். இந்த விசாரணையில் டிக்கெட் கவுண்ட்டர் ஊழியர் டீக்காராம் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களைத் தெரிவித்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது டிக்கெட் கவுண்ட்டர் ஊழியர் டீக்காராமும் அவரது மனைவியும் சேர்ந்து ரூ1.32 லட்சம் பணத்தை கொள்ளையடித்துவிட்டு, மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்ததாக நாடகமாடியது அம்பலமானது. இதனையடுத்து டீக்காராம், அவரது மனைவி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.