சப்ஜா சமாசாரம்!

சப்ஜா சமாசாரம்!
Published on

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

சப்ஜா விதை ஆங்கிலத்தில், 'Basil Seeds' என்று அழைக்கப்படுகின்றது.

சப்ஜா விதை எங்கு கிடைக்கும்?
இந்த சப்ஜா விதை நாட்டு மருந்து கடைகளில் இலகுவாகக் கிடைக்கக் கூடியது.

சப்ஜா விதை எப்படி சாப்பிட வேண்டும்?
சப்ஜா விதைகளை சுமார் ஆறு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். வெதுவெதுப்பான நீர் என்றால், சிறிது நேரம் ஊற வைத்தால் போதுமானது. இரவில் ஊற வைத்து, மறுநாள் காலையில் பயன்படுத்தலாம்.

ஊற வைத்த சப்ஜா விதைகளைப் பார்க்கும்போது ஜவ்வரிசி போன்று இருக்கும். இதனை பால், தண்ணீர், ரோஸ் மில்க், நன்னாரி சர்பத், மில்க் சேக் போன்ற எதில் வேண்டுமானாலும் கலந்து குடிக்கலாம்.

தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவது சிறந்தது. இதனை வெறுமனே சாப்பிடும்போது வயிற்று வலி, ஒவ்வாமை போன்றவை ஏற்படும்.

சப்ஜா விதை நன்மைகள்:

  • உடல் சூட்டினை குறைக்கும்.
  • மலச்சிக்கலை குணப்படுத்தும்.
  • மூல நோய் குணமாகும்.
  • உடல் எடையைக் குறைக்கும்.
  • சர்க்கரையின் அளவை குறைக்கும்.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டியை குணப்படுத்தும்.
  • வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.
  • மஞ்சள் காமாலைக்கு மருந்து.

சப்ஜா விதை தீமைகள் :
பல நன்மைகளைத் தரக்கூடிய சப்ஜா விதையில் சில தீமைகளும் இருக்கவே செய்கின்றது.
சப்ஜா விதையினை தொடர்ச்சியாக அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தும். அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது செரிமான பிரச்னை மற்றும் ரத்தம் உறைதல் போன்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தும். பசியின்மையை ஏற்படுத்தும். இதனால் நாம் சாப்பிடும் உணவின் அளவு குறையும்.

உடலில் சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மை இதற்கு உண்டு. எனவே, சர்க்கரை அளவு குறைவாக உள்ளவர்கள் சப்ஜா விதையை தொடர்ந்து சாப்பிடும்போது இது உடலில் மேலும் சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது.

சப்ஜா விதை யார் சாப்பிடக்கூடாது?
கர்ப்பிணிப் பெண்கள் சப்ஜா விதையினை சாப்பிடும்போது கரு கலைவதற்கான சந்தர்ப்பங்களும் உண்டு. அறுவை சிகிக்சை செய்தவர்களும், செய்ய இருப்பவர்களும் இந்த சப்ஜா விதையினை எடுத்துக்கொள்ளக் கூடாது. இது உடலுக்கு அதிகளவு குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது. அதனால், ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.
சிறு குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் சப்ஜா விதையினைத் தவிர்ப்பது நன்று.
தொகுப்பு :கே.முத்தூஸ், தொண்டி

————–

உடல் ஆரோக்கியத்துடன் வாழ வழிமுறைகள்!

உணவோடு நீரை பருகாதே!
கண்ணில் தூசி கசக்காதே!
கழிக்கும் இரண்டை அடக்காதே!
கண்ட இடத்தில் உமிழாதே!
காதை குத்தி குடையாதே!
கொதிக்க கொதிக்க குடிக்காதே!
நகத்தை நீட்டி வளர்க்காதே!
நாக்கை நீட்டி குதிக்காதே!
பல்லில் குச்சிக் குத்தாதே!
பசிக்காவிட்டால் புசிக்காதே!
வயிறுப் புடைக்க உண்ணாதே!
வாயைத் திறந்து மெல்லாதே!
வில்லின் வடிவில் அமராதே!
வெற்றுத் தரையில் உறங்காதே!
– எம்.இராஜேந்திரன், லால்குடி.

————–

காய்கறி குறள்

* கத்திரி உண்பாரே உண்பார் மற்றெல்லாம் இத்தரையில் பித்தருக்குச் சமமெனக்கொள்.
* காய்கறியைத் திண்ணாதார் வாழ்க்கை எப்போதும் நோய் நொடியில் வீழ்ந்து கெடும்.
* முருங்கைக் காய் ருசித்தாரே ருசித்தார் மற்றேரெல்லாம் வெறுங்கையில் முழம் போடுவார்.
* இரும்பைப்போல் இதயமது வேண்டுமெனில் கரும்பைப் போய் விரும்பிச் சுவை.
* பாகற்காய் கசக்கும் என்பதால் சீண்பதால் சோகத்தில் சேர்ந்து விழும்.
* வாழ்வதனால் ஆய பயனென் கொல் வாழைக்காய் தாழ்வெனவே எண்ணுபவர்.
* கேரட்டைச் சேர்க்காத சமையல் கிணற்றுக்குள் தேரை வாழ்ந்த கதை.
* தள்ளாத வயதிலும் உள்ளே தள்ளுவாய் முள்ளங்கி மூன்றினைத் தான்.
* வெண்டைக்காய் இருக்கையில் சுண்டை எந்நாளும் தொண்டையில் இறங்காது காண்.
* தக்காளி எப்போதும் உட்கொண்டால் தரணியில் எக்காலும் நோயில்லை காண்.
* எலுமிச்சை புளித்தாலும் எடுத்ததை உட்கொள்வீர் எலும்புக்கு வலு சேர்க்குமே.
* வெங்காயம் இல்லா சாம்பார் எஞ்ஞான்றும் தங்காதே நாவில் ருசி.
* பொல்லாத பேரையும் நல்லவர் ஆக்கும் புடலங்காய் போற்றிச் சுவை.
* வள்ளிக்கிழங்கு உண்ணார் வையத்தில் வாழ்ந்தும் வாழாதார் என்பது வழக்கு.
* பூசணியைச் சேர்த்தாரே புண்ணியர் பூவுலகில் புகழோடு வாழ்வார் அவர்.
* காரிருளில் கண் தெரிய வேண்டுமெனில் பாரிலுள்ள கரிசிலாங்கண்ணியைச் சேர்.
* பறித்த வுடன் உண்ணுவீர் பரங்கியை எப்போதும் பலனது வேண்டுமெனில்.
* பீடுநடை போடுதல் வேண்டுமெனில் தினமும் பீட்ருட்டை உணவில் சமை.
* கறிவேப்பிலை, மல்லி, கடுகு சேராதோர் சொறி பிடித்தோடுவார் காண்.
* கொத்தவரை, பீன்ஸ், முட்டைகோஸ் இவையெல்லாம் சத்தேயென சரியாய் உணர்.
* கண் இருந்தும் குருடரே காசினியில் காய் கறியை உண்ணாதவர்.
– ஆர்.சாந்தா, சென்னை

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com