0,00 INR

No products in the cart.

“அந்த மகானின் கதாபாத்திரத்தை தானே ஏற்று நடிக்க வேண்டும்”

அண்ணாத்தே வந்த பாதை – 3

எஸ்.பி.முத்துராமன்                எழுத்து வடிவம் : எஸ்.சந்திரமெளலி

ஜினி நடிக்க, ’எங்கேயோ கேட்ட குரல்’ சீரியசான படத்தை  இயக்கிக்கொண்டிருந்த அதே சமயத்தில், அதற்கு நேர்மாறாக முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக, பக்கா கமர்ஷியல் படம் ஒன்றையும் இயக்கிக் கொண்டிருந்தேன், அதுதான் கமல் நடித்த ’சகல கலா வல்லவன்’. இரண்டுக்குமே கதை பஞ்சு அருணாசலம்தான்.  இயற்கையாகவே  நடிப்பு, டான்ஸ், ஃபைட்திறமைகள் அமையப் பெற்றவர் கமல். அவைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் எழுதப்பட்ட கதை ’சகல கலா வல்லவன்’.

‘எங்கேயோ கேட்ட குரல்’, முழுக்க முழுக்க ஒரு கிராமத்துக் கதை;
’சகல கலா வல்லவன்’ ஒரு பாதி கிராமத்திலும், மறுபாதி நகரத்திலும் நடக்கும் கதை. ஆக, ’ஒரு  பக்கம் முழுக்க முழுக்க சீரியஸ் ரஜினி, இன்னொரு பக்கம் பக்கா கமர்ஷியல் கமல்’  என்று ஒரே சமயத்தில் இரண்டு நேர் எதிரான அம்சங்கள் கொண்ட படங்களை இயக்கியது ஒரு மாறுபட்ட அனுபவமாகவே இருந்தது.

இரண்டு படங்களும் முடிந்த நிலையில், இரண்டையும் ஒரே நாளில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது. திரையுலகத்தினர் சிலர் “கமல் படம் நன்றாக ஓடிவிடும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், கமல் போன்ற ஒரு  நடிகர் நடிக்க வேண்டிய சீரியஸ் கதபாத்திரத்தில் ரஜினியை நடிக்க வைத்து பஞ்சுவும், முத்துராமனும் ரிஸ்க் எடுத்திருக்கிறார்கள். இப்படி ஒரு விஷப் பரீட்சையில் அவர்கள் இறங்கி இருக்கக் கூடாது” என்று ’எங்கேயோ கேட்ட குரல்’ பற்றி விமர்சனம் செய்தார்கள்.

’ஒன்று வட துருவம் என்றால், இன்னொன்று தென் துருவம்’ என்று அமைந்த இரண்டு வித்தியாசமான படங்களைக் கொடுத்த போதிலும், இரண்டையும் ஏற்றுக்கொண்டார்களே, அந்த ரசிகர்களைத்தான் பாராட்ட வேண்டும். ’சகல கலா வல்லவன்’ இருபத்தைந்து வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.  ’எங்கேயோ கேட்ட குரல்’ படத்தையும் ரசிகர்கள் வெற்றி பெற வைத்தார்கள். படம்  நூறு நாட்கள் ஓடியது.

படத்தின் வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணம் பத்திரிக்கை நண்பர்கள். அவர்கள் எல்லோருமே, படத்தைப் பார்த்த்துவிட்டு, கைத்தட்டிப் பாராட்டியதுடன் இல்லாமல், ரஜினியினுடைய மாறுபட்டப் பாத்திரப் படைப்பையும், நடிப்பையும் வெகுவாகப் பாராட்டி எழுதினார்கள்.  அவர்கள், ”ரஜினியிடமிருந்து  இப்படிப்பட்ட ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை” என்று ஏமாற்றம் தொனிக்க எழுதி இருந்தால், அது ரஜினி ரசிகர்களை இன்னும் பெரிய அளவில் ஏமாற்றமடையச் செய்திருக்கும். படத்தின் வெற்றியைக் கூட அது பாதித்திருக்கக்கூடும். ஆனால், அப்படிச் செய்யாமல், எங்களின் வித்தியாசமான முயற்சியைப் பாராட்டி எழுதியதன் மூலமாக, அது ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பையே மாற்றி, அவரது அமைதியான நடிப்பை ஏற்றுக்கொள்ளும்படிச் செய்துவிட்டார்கள்.

இரண்டு படங்களையும் பார்த்துவிட்டு ஏவி.எம்.குமரன் சொன்ன கருத்து எனக்கு என்றைக்கும் மறக்காது. “இந்த இரண்டு படங்களிலும், டைரக்டரின் பெயரை எடுத்து  விட்டு, திரையிட்டால்,  இரண்டையும் இயக்கியவர் ஒரே டைரக்டர்  என்றால் நம்பவே மாட்டார்கள்” என்று  அவர் சொன்னர்.  ரஜினியே என்னிடம், “இது என் திரை உலக வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய படம்” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இன்று கூட சிலர் என்னிடம், “அது எப்படி சார் ரஜினி, கமல் என்ற தமிழ்த் திரைப்பட உலகின் இரண்டு பெரிய நட்சத்திரங்களை ஒரே சமயத்தில் உங்களால் இயக்க முடிந்தது?” என்று கேட்பதுண்டு. ஆனால், என்னைப் பொறுத்தவரையில் கமல், ரஜினி இருவரும் எனக்கு இரண்டு கண்கள் போல. அவர்களுக்கும் எனக்கும் இடையிலான நட்பு மிகவும் ஆழமானது. ’களத்தூர் கண்ணம்மா’ படத்தில் நடித்த சின்னஞ்சிறு பையனாக கமலை நான் அறிந்தவன். இன்னும் சொல்லப் போனால், ஏவி.எம். ஸ்டூடியோ வளாகத்தில் நான் பார்த்து வளர்ந்த பிள்ளை கமல். ரஜினியை எடுத்துக் கொண்டால்,  ’புவனா ஒரு கேள்விக் குறி’யில் ஆரம்பித்து, தொடர்ந்து பல படங்கள் நாங்கள் இரண்டு பேரும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். எங்களுக்குள்ளே மிகவும் பர்ஃபெக்ட்டான அண்டர்ஸ்டாண்டிங் உண்டு.

இன்னொரு விஷயம், கமல், ரஜினி இரண்டு பேரிடமுமே, அவர்கள் நினைப்பதற்கு மாறாக ஒரு கருத்து எனக்கு இருந்தால், அதை ஒரு  ¨தைரியமாக நான் சொல்லத் தவறமாட்டேன். அவர்களும் ஒரு மூத்த சகோதரன் சொல்லும் ஆலோசனையாகவே அதை எடுத்துக் கொள்ளுவார்களே தவிர, ஒரு போதும் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இதெல்லாம் எங்களுக்கு இடையில் நிலவும் அற்புதமான புரிதலின் பலன்.

ஒரு படத்தின் இயக்குனர், நடிகரை கன்வின்ஸ் பண்ணணும்; நடிகர் சொல்வது சரியென்று தோன்றினால்,  அதற்கு கன்வின்ஸ் ஆகணும். கன்வின்ஸ் பண்ணுவதும், கன்வின்ஸ் ஆவதும் தவறில்லை. படத்தின் வெற்றிக்காக, சரியான காரணத்துக்காக விட்டுக் கொடுக்கலாம். அதாவது கிவ் அண்டு டேக் பாலிசி. ஒரு சில சமயங்களில், சில  காட்சிகளின்போது, “இதை இப்படி வைத்துக் கொள்ளலாமே!” என்று ரஜினி சொல்லுவார். நான் அந்த இடத்தில் அது பொறுத்தமாகவும், ரஜினி ரசிகர்களிடம் வரவேற்பினைப் பெறும் என்றும் கருதினால், உடனே அதன்படி காட்சியை மாற்றியமைக்கத் தயங்கியதில்லை. அப்படி இல்லாத பட்சத்தில், ரஜினி சொல்லுகிற ஐடியாவை ’வேறு ஒரு இடத்தில் பயன்படுத்திக் கொள்ளமுடியுமா’ என்று யோசிப்பேன். அதுவும் சாத்தியமில்லாத பட்சத்தில், அதனைப் பயன்படுத்திக் கொள்ளமுடியாத நிலைமையை அவருக்கு விளக்குவேன். அவரும் அதனை ஏற்றுக்கொள்ளுவார்.

இதுதான் எங்கள் வெற்றிக் கூட்டணியின் ரகசியம்.

’எங்கேயோ கேட்ட குரல்’ படம் வெளியானவுடன், “ரஜினியை வைத்து, இப்படி ஒரு சீரியஸ் படம் எடுக்கும் எண்ணம்  உங்களுக்கு எப்படி சார் வந்தது? ரஜினியை வைத்து இப்படி ஒரு படம் எடுப்பது ’ரிஸ்க்’ என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டதா?” என்றெல்லாம்  பல பத்திரிகையாளர்களும் கேட்டார்கள். அவர்களுக்குச்  சொன்ன பதில் இதுதான்:

“இதுவரை இல்லாத அளவுக்கு அமைதியான கேரக்டரில் ரஜினியை நடிக்க வைத்து  ஒரு படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அதற்கேற்ற வகையில் பஞ்சு அருணாசலம் அவர்கள் கதையை தயார் பண்ணினார். ரஜினியிடம் கதையை சொன்னபோது, மகிழ்ச்சியுடன் “நிச்சயமாக  இப்படி ஒரு படம் பண்ணலாம்” என்று தனது சம்மதத்தைத் தெரிவித்தார்.  முதல் நாள் படிப்பிடிப்பில் தொடங்கி, தன்னுடைய வழக்கமான ஆக்‌ஷன் நடிப்பை ஒதுக்கி வைத்து விட்டு, இந்தப் படத்தின் கேரக்டரில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதன் பலன்தான் படத்தின் “வெற்றி”!

எங்களுக்கு, ”ரஜினியை வைத்து ’எங்கேயோ கேட்ட குரல்’ என்ற ஆக்‌ஷன் இல்லாத சீரியஸ் சப்ஜெக்ட் படம் எடுக்கலாம்” என்ற துணிச்சல் வந்ததற்குக் காரணம் இன்னொரு ரஜினி படம்தான். மகான் ஸ்ரீ ராகவேந்திரர் மீது அளவில்லாத பக்தி கொண்டவர்  ரஜினி என்பதை  நாடே அறியும். அப்படிப்பட்ட ரஜினி, ஒரு நாள் “ராகவேந்திரர் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க வேண்டும்; அந்தப் படத்தில் அந்த மகானின் கதாபாத்திரத்தை தானே ஏற்று நடிக்க வேண்டும்” என்று சொன்னபோது…”சரி! பார்க்கலாம்” என்று கூறி மழுப்பினேன்.

அப்புறம் என்ன நடந்தது?

(அடுத்த வாரம்)

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

சிவாஜி வீட்டுக்குப் பக்கத்தில்…

0
 ஒரு நிருபரின் டைரி - 26 - எஸ். சந்திரமெளலி   நான் கடந்த 1985ஆம் ஆண்டு முதல் 2021 வரை சென்னை தி. நகர் தெற்கு போக் ரோடில் வசித்து வந்தேன்.  சிவாஜிக்கு  ‘செவாலியே’ விருது...

நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கி கதி கலங்க வைத்த நகரம்

0
 உலகக் குடிமகன் -  25   - நா.கண்ணன் ஜப்பான் குறைந்த காலத்தில் மிக உயர்ந்த நாடாக மாறியதற்குக் காரணங்கள் உள்ளன. முதலில் அவர்கள் ஐரோப்பிய வாழ்வியலைக் கடைப்பிடித்தனர். ஐரோப்பிய தரம் வாழ்வில் இருக்க வேண்டும் எனப்பாடுபட்டனர்....

பெயிண்டர் துரை

0
மனதில் நின்ற மனிதர்கள் - 1 மகேஷ் குமார்   நல்ல நெடு நெடுவென ஒடிசலான தேகம். சுமார் 40 வயது இருக்கலாம். சுருள் சுருளாக தலைமுடி. ஏதேதோ பெயிண்ட் துளிகள் தெளித்து, சரியாக சுத்தம் செய்யாமல்...

   குன்றென நிமிர்ந்து…

வித்யா சுப்ரமணியம்    நவம்பர் 1990 கொட்டும் மழையில் ஆட்டோ பிடித்து மைதிலி பேருந்து நிலையத்தில் நுழைந்தபோது பேருந்து ஒன்று புறப்படத் தயாராக இருந்தது. தன் சேலையைப் பற்றிக் கொண்டிருந்த மூன்று வயது மகள் மாயாவை...

சாத்தானின் வக்கீல்

0
ஒரு நிருபரின் டைரி - 25 - எஸ். சந்திரமெளலி   ஆங்கில நியூஸ் சேனல்களில் மூத்த பத்திரிகையாளர்கள் பிரபலங்களுடன் உட்கார்ந்துகொண்டும், நின்றுகொண்டும், நடந்துகொண்டும் உரையாடும் நிகழ்ச்சிகள் பல இருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்தது கரன் தாபருடைய...