0,00 INR

No products in the cart.

​சாளக்ராம ரூபத்தில் சிவபெருமான்!

ஆர்.வி.ராமானுஜம்

டிஷா (ஒரிஸ்ஸா) மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வர், ‘கோயில்களின் நகரம்’ என்று அழைக்கப்படுகிறது. புவனேஸ்வரில் அமைந்த, சிவா விஷ்ணு கோயிலான லிங்கராஜா கோயில் மிகவும் முக்கியமானதாகும். முப்பதாயிரம் சதுர அடிக்கு மேல் பரந்து விரிந்த இந்தக் கோயில் வளாகம், பெயருக்கேற்றபடி மிகப்பெரிய லிங்கம், விமானம் என பல சிறப்புகளைப் பெற்று விளங்குகிறது. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயில், ‘கலிங்க’ (இன்றைய ஒடிஷா அன்றைய கலிங்கம்) கட்டடக் கலையில் எழுப்பப்பட்டுள்ளது. ஆறாம் நூற்றாண்டிலேயே இந்த ஆலயம் இருந்துள்ளது என சிலர் தெரிவிப்பது வியப்பான செய்தி. சந்திரகுல மன்னர் ஜஜதிகேசரி என்பவரால் தொடங்கப்பட்ட இந்த ஆலயப் பணிகள், அவரது புதல்வர் நளத் கெந்தாகேசரி, பேரன் ஆனந்த்கேசரி ஆகியோரால் பல ஆண்டுகளாக நிர்மாணிக்கப்பட்டதாக வரலாறு.

லிங்கராஜா கோயில் சிவனுக்கு உரியது என்றாலும், கருவறையில் உள்ள பீடத்தின் மீதான லிங்கம் சாளக்ராமத்தால் ஆனது என்பதால் இது, சிவா விஷ்ணு ஒருங்கிணைந்த ஹரிஹரத் தலமாகப் போற்றப்படுகிறது. இந்த ஆலயம் எழுப்பப்பட்ட காலகட்டத்தில் விஷ்ணுவின் அம்சமான ஜகந்நாதர் வழிபாடும் வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. இந்தத் தலத்தில் சைவ, வைணவ வழிபாடுகள் சேர்த்தே கடைபிடிக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். இத்தலம், ‘ஏகம்ரா ஷேத்ரம்’ என்று பிரம்ம புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 11ஆம் நூற்றாண்டில் ஜஜதிகேசரி தனது தலைநகரத்தை ஜெய்ப்பூரில் இருந்து, இந்த நகருக்கு மாற்றினார் என்பது வரலாறு.

கிழக்கு திசையில் பிரதான நுழைவாயில் அமைந்துள்ளது. மற்ற வாயில்கள் வடக்கு, தெற்காக உள்ளன. மிகப் பெரிய கோயில் வளாகத்தில் மொத்தம் 108 சன்னிதிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கோயில் மடைப்பள்ளியில் 108 அடுப்புகள் உள்ளதாம். இதில் ஏழு பானைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி நைவேத்திய பிரசாதம் தயாரிக்கிறார்கள். அதிசயம் என்னவென்றால், ஏழாவது பானையில் உள்ள அரிசிதான் முதலில் வெந்து இறக்கப்படுகிறதாம். லிங்கராஜாவிற்கு நான்கு முறையும், ஸ்ரீ விஷ்ணு பகவானுக்கு நான்கு முறையும் என மொத்தம் எட்டு முறை 56 வித உணவுகள் தயாரிக்கப்பட்டு நைவேத்தியம் செய்யப்படுகின்றன.

கருவறைக்கு எதிரில் நான்கு மண்டபங்கள் உள்ளன. அதில் யக்ஞ மண்டபத்தில் பக்தர்கள் சங்கல்பம் செய்து கொண்டு அன்னாபிஷேகம் செய்கின்றனர். கருவறை கதவில் துலமும், சக்கரமும் இடம்பெற்றுள்ளன. முன் மண்டபத்தில் மகாலட்சுமி தனிச் சன்னிதி கொண்டு அருள்பாலிக்கிறாள். ‘ஸ்ரீகோயில்’ என்று அழைக்கப்பெறும் இந்த சன்னிதியில் அன்னதானம் சிறப்பாக நடைபெறுகிறது. கோயில் வளாகத்தில் சித்தி விநாயகர், காசி விஸ்வநாதர், அமர்நாத், ஏகாம்பரேஸ்வரர், கார்த்திகேஸ்வரர், துர்கா, சிவகாளி என்று பல சன்னிதிகள் தனித்தனி விமானங்களோடு அமைந்துள்ளன. புவனேஸ்வரி அம்மன் மிகப்பெரிய சன்னிதியில் பெரிய திருவுருவத்துடன் காட்சி தந்து அருள்பாலிக்கிறார். ‘தாரிணி தேவி’ என்று ஒரிஸ்ஸா மக்களால் வணங்கப்பெறும் (நம்ம ஊர் கன்னிமார்) தேவதையின் சன்னிதானம் அரச மரத்தடியில் அமைந்துள்ளது. கோபுரம், விமானம் இல்லாத சன்னிதி இது ஒன்று மட்டுமே.

கோயிலின் வெளிப்பிராகாரத்தில் சாவித்திரி மற்றும் ஜமராஜா என்று அழைக்கப்படும் எமதர்மனுக்கு தனி சன்னிதி உள்ளது. இங்கு வரும் பக்தர்களிடம் ஒரு நாளுக்கு ஒரு பிடி அரிசி வீதம், ஒரு ஆண்டிற்கு அன்னதானம் தர வசதியாக குறைந்த அளவில் இருந்து, பல மூட்டைகள் வரை அரிசிக்காக உபயம் செய்ய காணிக்கை நன்கொடை கேட்டு அதற்கு உரியவாறு சங்கல்பம் செய்து அதனை உறுதிப்படுத்தி பதிவு செய்து கொள்கின்றனர்.

ஸ்வாமி வழிபாட்டுக்கு விற்கப்படும் பூக்கூடைகளில் வில்வமும், துளசியும் கலந்தே கொடுக்கப்படுகிறது. சிவபெருமான் மற்றும் விஷ்ணு பகவானுக்கு இது அர்ச்சிக்கப்படுகிறது. கோயிலின் மொத்த வளாகத்தையும் தரிசிக்க வசதியாக, கோயிலின் வெளிப்புறம் ஒரு உயர்ந்த மேடையை அமைத்துள்ளனர்.

வருடத்தில் சிவராத்திரி அன்று மிகப்பெரிய அளவில் பக்தர்கள் கூடி பிரார்த்தனை செய்வது, உபவாசம் இருப்பது போன்றவை நடைபெறுகிறது. லிங்கராஜா இந்த நாளில் தர்மத்தை நிலைநாட்ட திருவிளையாடல் செய்ததாகக் கூறப்படுகிறது. பங்குனி மாத அமாவாசைக்குப் பின் வரும் அஷ்டமியான, அசோகாஷ்டமி அன்று லிங்கராஜா தேர்த் திருவிழா நடைபெறுகிறது. லிங்கராஜா ரத யாத்திரை பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரைகள் ஒடிஷா மாநிலத்தின் மிக முக்கியத் திருவிழாக்களாக உள்ளன. ஆவணி மாதத்தில் ஒரு நாள், விவசாயிகள், கோயில் ஊழியர்கள், கோயில் நிலங்களில் விவசாயம் செய்வோர் தங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக மகாநதியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து அதனை சிவபெருமான் சன்னிதியில் சேர்க்கின்றனர்.

லிங்கராஜா கருவறை மீது அமைந்துள்ள விமானத்தின் உச்சியில் வில்வழவு சின்னமும், இருவித அளவுகளில் ஐந்து காவி நிற கொடிகளும் பறந்து மிகத் தொலைவில் இருந்தே பக்தர்களுக்கு அளவில்லா அருளைத் தருகிறது. அரியும், அரனும் ஒன்றே என்பதை எடுத்துக்காட்டும் ஆலயம் இது.

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

கன்னியர் கோயில் ஆடி வெள்ளி திருவிழா!

0
- முத்து.இரத்தினம் புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பச்சைவாழி அம்மன் சமேத மண்ணாதீஸ்வரர் திருக்கோயில். பார்வதி தேவிக்கு உதவிய கன்னியர்களுக்கென்றே உருவான திருக்கோயில் இது என்று சொல்லப்படுகிறது. ‘கன்னியர் கோயில்’ என்றே அழைக்கப்படும் இத்திருக்கோயில்...

சயனக் கோலத்தில் ஸ்ரீ பத்ர மாருதி!

0
- லதானந்த் ஸ்ரீராம பக்த அனுமனை பொதுவாக நின்ற திருக்கோலத்திலோ, சஞ்சீவி மலையைத் தாங்கியபடியோ அல்லது சேவித்த கரங்களுடனோதான் தரிசித்திருப்போம். ஆனால், அனுமன் அபூர்வமாக உறங்குகின்ற திருக்கோலத்தில் மஹாராஷ்ட்ரா மாநிலம், ஔரங்காபாத் அருகே குல்தாபாத்...

அரச மரத்தடியில் அன்னை முப்பாத்தம்மன்!

- தனுஜா ஜெயராமன் தலைநகர் சென்னையில் அமைந்த மிகவும் பழைமை வாய்ந்த அம்மன் கோயில்களில் தியாகராயநகர் அருள்மிகு முப்பாத்தம்மன் திருக்கோயிலும் ஒன்றாகும். வேண்டியவர்க்கு வேண்டியபடி அருளும் ஸ்ரீ முப்பாத்தம்மன் கோயில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன்...

மன அமைதி தரும் சிந்தபள்ளி சாயிபாபா!

0
- வி.ரத்தினா தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில்  அமைதியும் பசுமையும் நிறைந்த ரம்யமான சூழலில் காட்சி தரும் சிந்தபள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது ஷீர்டி பாபா ஆலயம். ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் எழிலோடு அமைந்துள்ள பாபாவின்...

இன்னல் தீர்க்கும் இரண்டாம் காசி!

0
- எம்.அசோக்ராஜா விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் இருந்து சங்கரன்கோவிலுக்கு ஏழாயிரம்பண்ணை வழியாகச் செல்லும் சாலையில், நடுசத்திரம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு அன்னபூரணி சமேத ஸ்ரீ காசிவிஸ்வநாதர் திருக்கோயில். இதை, ‘இந்தியாவின் இரண்டாவது காசி’ என்று...