Work From Home-ல் அப்படி என்னதான் இருக்கு?

Work From Home-ல் அப்படி என்னதான் இருக்கு?

மூக வலைதளத்தில் வேலை வாய்ப்பு குறித்து பதிவுபோட்ட 48 மணி நேரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்ததால், புதிய தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்ப்ரிங் ஒர்க்-ன் CEO அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

Work From Home எனப்படும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் கலாச்சாரம், கொரோனாவுக்கு பிறகு அதிகரித்துவிட்டது எனலாம். பல IT நிறுவனங்களும் இன்றுவரை ஒர்க் ஃப்ரம் ஹோம் முறையிலேயே நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் ஸ்ப்ரிங் வொர்க் என்ற புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் சிஇஓ-வான கார்த்திக், தங்கள் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவு ஒன்றைப் போட்டார். அவர் பதிவிட்ட இரண்டு நாட்களில் அந்த வேலைக்காக மூன்றாயிரம் விண்ணப்பங்கள் வந்து குவிந்தது. என்னதான் இவ்வளவு பேர் விண்ணப்பித்திருந்தாலும் தற்போதுள்ள வேலை வாய்ப்பின் நிலைமை குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார். 

உலகம் முழுவதுமே ஐடி நிறுவனங்கள் அதிரடி பணிநீக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மெட்டா, அமேசான், டெஸ்லா, கூகுள், ட்விட்டர் போன்ற மிகப்பெரிய டெக் ஜாம்பவான்களும் லட்சக்கணக்கில் பணியாட்களை நீக்கி வருகின்றனர். இந்நிலையில் இவ்வளவு விண்ணப்பங்கள் வருவது அசாதாரணம் என நீங்கள் நினைக்கிறீர்களா என்று அவரிடம் கேட்டபோது, "எங்களுக்கு தொடர்ந்து விண்ணப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இதுவரை 12,000 க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளது" எனத் தெரிவித்தார். இவ்வளவு பேர் அந்த வேலையில் ஆர்வம் காட்டுவதற்கு அப்படி என்ன இருக்கிறது என்ற கேள்வியும் பலருக்கு எழுந்துள்ளது. 

அதற்குக் காரணம் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்ட எல்லா வேலைகளுமே நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்ற வாசகத்துடன் இருந்துள்ளது. இந்த காரணத்தினாலேயே இவ்வளவு விண்ணப்பங்கள் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அனைவரும் கட்டாயம் அலுவலகத்திற்கு வந்துதான் வேலை செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தால், இதில் எத்தனை பேர் உண்மையாகவே விண்ணப்பித்திருப் பார்கள் என்பது தெரியவில்லை. 

ஸ்ப்ரிங் வொர்க் நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்த்தால், தொழில்நுட்பம், தயாரிப்பு, மார்க்கெட்டிங் என எல்லா வேலைகளுமே வீட்டிலிருந்தே வேலை செய்யும் படியாகவே உள்ளது. பணியாட்களின் வொர்க் லைஃப் பேலன்ஸ் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக கடந்த 2020ல் இருந்தே வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறையை பின்பற்றி வருகிறது ஸ்ப்ரிங் வொர்க் நிறுவனம். தற்போது இந்நிறுவனத்தில் 200 பேர் வரை பணியாற்றி வருகிறார்கள். 

குறுகிய காலத்தில் ஒரு வேலைக்கு இவ்வளவு பேர் விண்ணப்பித்திருப்பது, தற்போதுள்ள சூழ்நிலையில் ஐடி துறையில் வேலை தேடுபவர்களுக்கு எவ்வளவு சவால்கள் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com