
கணினியில் ஒரு கவிதை எழுதுகிறீங்கள், அதை மீண்டும் படித்துப் பார்த்துச் சில மாற்றங்களைச் செய்கிறீர்கள்; கவிதை நன்றாக வந்திருக்கிறது என்று மன நிறைவு ஏற்பட்டதும், அங்கு ஒரு பொத்தானை அழுத்துகிறீர்கள். மறுகணம், அருகிலுள்ள கருவியில் அந்தக் கவிதை அச்சிடப்பட்டு வெளிவருகிறது.
இப்படிக் கவிதை எழுதி அச்சிடுவதுபோல், ஒரு பேனாவையோ காலணியையோ அச்சிடமுடிந்தால் எப்படி இருக்கும்!
அதாவது, பொருட்கள் தொழிற்சாலையில் யாராலோ தயாரிக்கப்பட்டுக் கடைகளின் வழியாக நமக்கு வந்துசேர்வதற்குப் பதிலாக, நாமே கணினியில் ஒரு பொருளை வடிவமைத்து, வேண்டிய மாற்றங்களைச் செய்து, பின்னர் அதை அச்சிட்டு எடுத்துக்கொள்வது. இது எப்படி சாத்தியமாகிறது? 3D அச்சிடல் (3D Printing) தொழில்நுட்பம் இதற்கு வழிசெய்கிறது.
இன்றைக்குப் பெரும்பாலான அலுவலகங்களிலும் பல வீடுகளிலும் உள்ள அச்சு இயந்திரங்கள் தாளில் இரு பரிமாணத்தில் (2D அல்லது Two Dimensional) அச்சிடுகின்றன. இதோடு இன்னொரு பரிமாணத்தைச் சேர்த்து முப்பரிமாணத்தில் (3D) அச்சிடுவதன்மூலம் நாம் தொட்டுணரக்கூடிய பொருட்களை அச்சிட்டுக்கொள்ளலாம். இதற்கு நாம் 3D அச்சு இயந்திரத்தையும் அதில் பயன்படுத்தக்கூடிய சிறப்பு 'மை'களையும் வாங்கவேண்டியிருக்கும்.
முப்பரிமாண அச்சின் மிகப் பெரிய நன்மை, பொருட்களை நாம் வேண்டிய விதத்தில் வடிவமைத்துக்கொள்ளலாம். சிறிய, பெரிய மாற்றங்களைச் செய்து நமக்கே நமக்கென்று ஒரு பிரதியோ பல பிரதிகளோ அச்சிட்டுக்கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக, உங்களுடைய நண்பர் ஒருவர் வயலின் இசைக் கலைஞர். அவருடைய பிறந்தநாளுக்கு நீங்கள் வயலின் வடிவத்தில் ஒரு மோதிரம் பரிசளிக்கவேண்டும் என்றால், கடைக்கோ இணையத்துக்கோ சென்று அப்படி ஒரு மோதிரம் இருக்கிறதா என்று தேடவேண்டியதில்லை. விருப்பம்போல் நீங்களே அதை வடிவமைக்கலாம், அந்த வயலின் உங்கள் நண்பர் பயன்படுத்தும் வயலினைப்போல் தோன்றும்படி நுணுக்கமான மாற்றங்களைச் செய்து அவரை வியப்பில் ஆழ்த்தலாம்.