3D Printing (முப்பரிமாண அச்சிடல்) - பயனும் பயன்பாடும்!

3d printing
3d printing

ணினியில் ஒரு கவிதை எழுதுகிறீங்கள், அதை மீண்டும் படித்துப் பார்த்துச் சில மாற்றங்களைச் செய்கிறீர்கள்; கவிதை நன்றாக வந்திருக்கிறது என்று மன நிறைவு ஏற்பட்டதும், அங்கு ஒரு பொத்தானை அழுத்துகிறீர்கள். மறுகணம், அருகிலுள்ள கருவியில் அந்தக் கவிதை அச்சிடப்பட்டு வெளிவருகிறது.

இப்படிக் கவிதை எழுதி அச்சிடுவதுபோல், ஒரு பேனாவையோ காலணியையோ அச்சிடமுடிந்தால் எப்படி இருக்கும்!

அதாவது, பொருட்கள் தொழிற்சாலையில் யாராலோ தயாரிக்கப்பட்டுக் கடைகளின் வழியாக நமக்கு வந்துசேர்வதற்குப் பதிலாக, நாமே கணினியில் ஒரு பொருளை வடிவமைத்து, வேண்டிய மாற்றங்களைச் செய்து, பின்னர் அதை அச்சிட்டு எடுத்துக்கொள்வது. இது எப்படி சாத்தியமாகிறது? 3D அச்சிடல் (3D Printing) தொழில்நுட்பம் இதற்கு வழிசெய்கிறது.

ன்றைக்குப் பெரும்பாலான அலுவலகங்களிலும் பல வீடுகளிலும் உள்ள அச்சு இயந்திரங்கள் தாளில் இரு பரிமாணத்தில் (2D அல்லது Two Dimensional) அச்சிடுகின்றன. இதோடு இன்னொரு பரிமாணத்தைச் சேர்த்து முப்பரிமாணத்தில் (3D) அச்சிடுவதன்மூலம் நாம் தொட்டுணரக்கூடிய பொருட்களை அச்சிட்டுக்கொள்ளலாம். இதற்கு நாம் 3D அச்சு இயந்திரத்தையும் அதில் பயன்படுத்தக்கூடிய சிறப்பு 'மை'களையும் வாங்கவேண்டியிருக்கும்.

முப்பரிமாண அச்சின் மிகப் பெரிய நன்மை, பொருட்களை நாம் வேண்டிய விதத்தில் வடிவமைத்துக்கொள்ளலாம். சிறிய, பெரிய மாற்றங்களைச் செய்து நமக்கே நமக்கென்று ஒரு பிரதியோ பல பிரதிகளோ அச்சிட்டுக்கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக, உங்களுடைய நண்பர் ஒருவர் வயலின் இசைக் கலைஞர். அவருடைய பிறந்தநாளுக்கு நீங்கள் வயலின் வடிவத்தில் ஒரு மோதிரம் பரிசளிக்கவேண்டும் என்றால், கடைக்கோ இணையத்துக்கோ சென்று அப்படி ஒரு மோதிரம் இருக்கிறதா என்று தேடவேண்டியதில்லை. விருப்பம்போல் நீங்களே அதை வடிவமைக்கலாம், அந்த வயலின் உங்கள் நண்பர் பயன்படுத்தும் வயலினைப்போல் தோன்றும்படி நுணுக்கமான மாற்றங்களைச் செய்து அவரை வியப்பில் ஆழ்த்தலாம்.

இதையும் படியுங்கள்:
இயந்திரமயமாகுமா உலகம்? மனிதனின் வேலைகள் பறிபோகுமா?
3d printing

பொதுவாகப் பொருட்கள் பெரும் எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டால்தான் அவற்றின் விலை குறையும். அதனால், நிறுவனங்கள் தங்களுக்குப் பிடித்த, அல்லது, மக்களுக்குப் பிடித்தவையாகத் தாங்கள் நினைக்கிற பொருட்களைத் தயாரித்துச் சந்தையில் இறக்குகின்றன. மக்கள் அவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவேண்டியிருக்கிறது. அந்தப் பழக்கத்தை முப்பரிமாண அச்சு முற்றிலும் மாற்றியமைத்துவிடும்.

இதில் இன்னும் பல நன்மைகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக, செயற்கைக் கை, கால் போன்றவற்றை ஒருவருடைய குறிப்பிட்ட தேவைகளுக்கேற்ப வடிவமைத்துத் தயாரித்தல், இயந்திரங்களுக்குத் தேவையான உதிரி பாகங்களை உருவாக்குதல், கட்டடங்கள், பெரிய கருவிகள் போன்றவற்றைச் செய்வதற்குமுன்னால் பலவிதமான மாதிரிகளை உருவாக்கி, வாடிக்கையாளர்களுடைய கருத்துகளைப் பெற்றுக்கொண்டு அவற்றை மேம்படுத்துதல் என்று பலவிதங்களில் முப்பரிமாண அச்சு பயன்படுகிறது.

புதிய பொருட்களை வடிவமைப்பதுடன், ஏற்கெனவே உள்ள பொருட்களைப்போன்ற மாதிரிகளைத் தயாரிக்கவும் முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பம் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, உங்கள் அலுவலகத்தில் உள்ள ஒரு சிலை உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றால், அதைப் பல கோணங்களிலிருந்து படம் பிடிப்பதன்மூலம் அதேபோன்ற ஒரு வடிவமைப்பைக் கணினியில் உருவாக்கி, பின்னர் அதை வேண்டிய பொருளில் அச்சிட்டுக்கொள்ளலாம்.

முன்பு ஆராய்ச்சியாளர்களுடைய கருவியாக இருந்த முப்பரிமாண அச்சு இயந்திரங்கள் இப்போது வீடுகளுக்குள்ளும் நுழையத் தொடங்கிவிட்டன. Desktop 3D Printer எனப்படுகிற சிறு முப்பரிமாண அச்சு இயந்திரங்களைப் பயன்படுத்தி அன்றாடப் பயன்பாட்டுக்குரிய பல பொருட்களை அச்சிட்டுக்கொள்ளும் வசதி வந்துவிட்டது. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, நாளைய உலகில் நமக்கு ஒரு கரண்டியோ பொம்மையோ தேவைப்பட்டால் சட்டென்று கடைக்குச் செல்வோமா, அல்லது, ஒரு கிளிக்கில் அதை அச்சிட்டு எடுத்துக்கொள்வோமா என்பது சுவையான கேள்வி!

முப்பரிமாண அச்சின்மூலம் நமக்கு வேண்டிய எண்ணிக்கையில்மட்டும் பொருட்கள் தயாரிக்கப்படுவதால், வீணான குப்பைகள் குறையும் என்கிறார்கள். ஆனால், இந்தத் தொழில்நுட்பத்தின்மூலம் உருவாகக்கூடிய குப்பைகள் எப்படி நீக்கப்படும், அது உலகில் எப்படிப்பட்ட தாக்கத்தை உண்டாக்கும் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். தொலைநோக்கில் பார்க்கும்போது, வளங்குன்றாத் (Sustainable) தொழில்நுட்பம்தான் எல்லாருக்கும் நல்லது என்பதையும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com