இந்தியாவில் AI துறையில் 45000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு. சம்பளம் என்ன தெரியுமா?

இந்தியாவில் AI துறையில் 45000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு. சம்பளம் என்ன தெரியுமா?

செயற்கை நுண்ணறிவு (AI) என்பது இயந்திரங்கள் தன்னுடைய அனுபவத்திலிருந்து தானாகவே கற்றுக்கொண்டு, புதிய உள்ளீடுகளுக்கு ஏற்ற வகையில் மனிதனைப் போலவே தன்னிச்சையாக பணிகளை செய்யும் தொழில்நுட்பமாகும். தற்போது நீங்கள் கேள்விப்படும் இணைய சதுரங்க விளையாட்டு முதல் சுயமாக ஓடும் கார்கள் வரை AI தொடுநுட்பம் மூலமாகவே இயங்குகிறது. உலக அளவில் அனைத்து நாடுகளிலும் இதனுடைய முன்னேற்றம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இந்தியாவில் மட்டுமே செயற்கை நுண்ணறிவு தொடர்பாக 45,000 வேலை வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் டேட்டா சயின்டிஸ்ட் மற்றும் மெஷின்லெர்னிங் பொறியாளர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். 

டீம் லீஸ் டிஜிட்டல் என்ற தொழில்நுட்ப பணியாளர் நிறுவனம் இது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மெஷின் லெர்னிங் மற்றும் டேட்டா சயின்டிஸ்ட்களின் தேவை அதிகமாக இருப்பதாகவும், ஸ்கிரிப்டிங் மொழிகளில் நிபுணத்துவம் வாய்ந்த மற்றும் ML மாதிரிகளை உருவாக்கும் திறன் கொண்ட AI நிபுணர்களுக்கான தேவையும் அதிகம் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

டேட்டா மற்றும் ML இன்ஜினியர்களுக்கு ஆண்டுக்கு 14 லட்சம் வரை கிடைக்கும். இதுவே டேட்டா ஆர்க்கிடெக்டுகள் ரூபாய் 12 லட்சம் வரை சம்பாதிக் கலாம். இதேபோன்ற துறைகளில் 8 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளவர்கள் ஆண்டொன்றுக்கு ரூபாய் 25 முதல் 45 லட்சம் வரை சம்பளம் பெற முடியும். 

AI திறன்களை மேம்படுத்துவது தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பிற்கு அத்தியாவசியமாகி வருகிறது. மேலும் AI திறன்களில் முதலீடு செய்வது தனி நபர்களுக்கும் அவர்களின் தொழில் வாழ்க்கைக்கு நீண்டகால பலன்களை அளிக்கும். 37 சதவீத நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு AI மூலம் செயல்படக்கூடிய பொருத்தமான கருவிகளை வழங்க விரும்புகிறார்கள். மேலும் 30 சதவீத நிறுவனங்கள் பணியாளர்களிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வர AI கற்றல் முக்கியம் எனக் கூறுகிறார்கள். 

சுமார் 56 சதவீத நிறுவனங்கள் AI மூலமாக, தங்கள் நிறுவனத்தில் உள்ள விநியோகத் திறமையின்மையால் ஏற்பட்டுள்ள இடைவெளியை நிரப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என தெரியவந்துள்ளது. 

எனவே, இனிவரும் காலங்களில் பெரும்பாலானவர்கள் ஒரே மாதிரியான படிப்பில் கவனம் செலுத்தாமல், கால ஓட்டத்திற்கு ஏற்ப புதிய விஷயங்களை கற்றுக் கொள்வது அவசியமான ஒன்றாகும். புதிய திறன்களை வளர்த்துக் கொள்வது, நம்மை பிறரை விட ஒரு படி முன்னேற்றியே வைத்திருக்கும் என்பதை அறிந்து செயல்படுவோம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com