சில ஹாலிவுட் க்ரைம் திரைப்படங்களைப் பார்க்கும்போது ஒரு சில காட்சிகள் இதெல்லாம் நடக்கவே நடக்காது என நினைத்திருப்போம். ஆனால் தற்போதைய AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் அனைத்து விதமான கொள்ளை சம்பவத்தையும் செய்துகாட்டி வருகின்றனர்.
பிரபல ஹாலிவுட் திரைப்படமான மிஷன் இம்பாசிபிள் திரைப்படங்களில் ஒருவரின் முகத்தை மாற்றி பணத்தைக் கொள்ளையடிப்பதைப் பார்த்திருப்போம். அப்படியொரு சம்பவம் நிஜத்தில் நடந்துள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தன் நண்பனின் முகத்தை மாற்றி, 5 கோடி ரூபாயை ஒரு நபர் சுருட்டி இருக்கிறார். தற்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பேச்சுதான். இதன் வளர்ச்சியானது தங்க முட்டையிடும் வாத்து போலவே தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மாறியிருக்கிறது. எனவே இதை வைத்து எப்படி லாபம் பார்க்கலாம் என்ற நோக்கிலேயே தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
ஆனால் இதன் கருப்பு பக்கத்தை யாரும் அவ்வளவாக கவனிப்பதில்லை. எந்த அளவுக்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை நன்மைக்காக பயன்படுத்துகிறோமோ, அதே அளவுக்கு தீமைக்காகவும் சிலர் பயன்படுத்துகிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதை பயன்படுத்தி சைபர் கொள்ளையர்கள் அசாத்திய அளவிலான திருட்டு சம்பவங்களை செய்துகாட்டி வருகின்றனர்.
அண்மையில், சீனாவில் ஒருவர் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியாக ஒரு ரயிலையே விபத்துக்குள்ளாக்கி, வெப்சைட்டில் வெளியிட்டு பல்லாயிரக்கணக்கான மக்களை பீதியில் அழுத்தினர். அதேபோல அமெரிக்காவிலும் இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திரைக்கதை எழுதப்படுவதாக கதாசிரியர்கள், எழுத்தாளர்கள் என புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதையெல்லாம் ஓரம் கட்டும் அளவிற்கு, Ai தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய தனது முகத்தை மாற்றி 5 கோடி ரூபாய் பணத்தை ஒருவர் கொள்ளை அடித்துள்ளார். சீனாவின் மங்கோலியாவில் உள்ள ஓர் தொழிலதிபருக்கு புதிய மொபைல் எண்ணிலிருந்து வீடியோ கால் வந்துள்ளது. அதை அவர் எடுத்தபோது எதிரே அவரது நெருங்கிய நண்பரின் முகம் தெரிந்துள்ளது. இதனால் அவரும் பேசத் தொடங்கிய நிலையில், எதிரே இருந்த அந்த நபர்தான் ஒரு ஏலத்தில் இருப்பதாகவும் அதை உடனடியாக எடுக்க 5 கோடி ரூபாய் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதை நம்பிய அந்தத் தொழிலதிபர், நண்பன்தானே என்றெண்ணி சொன்ன வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்பியுள்ளார்.
அதன் பின்னர் அந்த தொழிலதிபர் தனது நண்பனைத் தொடர்பு கொண்டு ஏலத்தை எடுத்து விட்டாயா எனக் கேட்டபோது, அவரது நண்பர் என்ன ஏலம் என்று கேட்டுள்ளார். இதனால் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டு, தனக்கு வீடியோ கால் வந்த மொபைல் நம்பருக்கு மீண்டும் கால் செய்தபோது, நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர்தான், தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரிந்துள்ளது.
இது குறித்து அந்தத் தொழிலதிபர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவரது நண்பர் போலவே போலியான முகத்தையும், போலியான குரலையும் உருவாக்கி வீடியோ கால் மூலம் யாரோ ஒருவர் உங்களை ஏமாற்றி இருக்கிறார் என போலீசார் தெரிவித்தனர்.
எனவே இந்த அளவுக்கு தொழில்நுட்பம் முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், இணையத்தில் எதையும் அவ்வளவு எளிதாக நம்பி விட வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.