வரமா சாபமா என்று தெரியாமலேயே ஏஐ எனப்படும் செய்யறிவு, உலகத்தையே கட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைவதால் வரமாக கருதப்பட்டாலும், மறுபுறம் பணி வாய்ப்பு பறிபோவதும், மோசடிகள் அதிகரிக்கவும் தொடங்கி விட்டன.
எதற்கெடுத்தாலும் ஏதேனும் சாட் ஜிபிடி போன்ற ஒரு ஏஐ உதவியை நாடுபவர்கள், அச்சமயம் சொல்லக்கூடாத 5 விஷயங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்...
1. தனிப்பட்ட விவரங்கள்
ஒருவர் சாட்பாட்டிடம் தகவல்களை கோரும்போது, எதன் பொருட்டும் கேட்பவர் தனது பெயர், முகவரி, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றைக் கண்டிப்பாக கொடுக்கக் கூடாது. ஏனெனில் இவற்றையெல்லாம் கொடுக்கும்போது ஏதேனும் ஒரு வழியில் அவரது அடையாளம் பின் தொடரப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
2. பொருளாதாரம் தொடர்பான விவரங்கள்
ஏஐ செயலிகளில் வங்கிக் கணக்கு எண், கிரெடிட் கார்டு எண், ஆதார் எண் போன்றவற்றை எப்போதும் பகிரக்கூடாது. மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்று தகவல் கோரும்போதும் போலியான எண்களைப் பதிவிட்டுக் கேட்டுக்கொள்ள வேண்டும்.
3. பாஸ்வேர்ட்
பாஸ்வேர்டு இப்படி வைக்கலாமா? அல்லது என்ன வைக்க வேண்டும்? என்று எந்த காரணத்தை கொண்டும் செயற்கை நுண்ணறிவிடம் கேட்கக்கூடாது.
4. ரகசியம்
ஒருவருக்கு மட்டுமே தெரிந்த அல்லது வேறு யாருக்கும் தெரியக்கூடாது என நினைக்கும் ரகசியத்தை சாட் பாட் செயலிகளிடம் பகிரக்கூடாது. அது என்ன மனிதனா என்றால், இல்லைதான். ஆனால், அது நாம் கூறும் தகவல்களை ரகசியமாக வைத்துக்கொள்ளாத இயந்திரம் என்பதால் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
5. கடைசியாக...
நாம் சொல்வது, கேட்பது என அனைத்தும் சாட் பாட் செயலியில் சேமிக்கப்படலாம். அதன் மூலம் அதன் தரத்தைக் கூட்டுவதற்கு என்று கூறப்படலாம். எனவே, நாம் சொல்வது கேட்பது சேமிக்கப்படத்தக்கது அல்ல என்று கருதினால் அதை கேட்காமல், சொல்லாமல் தவிர்ப்பதே நலம்.
தொழில்நுட்பத்தை திறம்பட கையாள்வது என்பது ஒரு தனி கலை. எதிர்வரும் மோசடி அபாயங்கள் மற்றும் ஆபத்திலிருந்து நம்மை காத்துக் கொள்ள ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு முன் எப்படி கையாள வேண்டும் என்பதில் நிபுணத்துவம் பெற்று கையாண்டாலேயே பல்வேறு பிரச்சனைகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.