இந்தியாவின் ஜிடிபி பங்களிப்பில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டை பொருத்தவரை பல ஆண்டுகளாகவே வாகன உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஒரு மாநிலமாக தொடர்ந்து இருந்து வருகிறது. உலகில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உற்பத்தி ஆலைகளும் தமிழ்நாட்டில் சென்னையில் நிறுவப்பட்டு இருப்பதே இதற்கு முக்கியமான காரணமாகும்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படக்கூடிய 50 சதவீத கார்கள் தமிழ்நாட்டில் இருந்து தான் பிறக்கின்றன என Finshots தளம் வெளியிட்டுள்ள ஒரு தரவு தெரிவிக்கிறது. இவ்வாறு தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கார்களில் பெரும்பாலானவை சென்னை மற்றும் சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் நிறுவப்பட்டிருக்கும் ஆலைகளில் தான் உற்பத்தி ஆகின்றன.
1984 ஆம் ஆண்டு முதன்முறையாக இந்துஸ்தான் மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனம் தன்னுடைய கார் உற்பத்தி ஆலையை சென்னையில் நிறுவியது. தற்போது இந்த ஆலை செயல்பாட்டில் இல்லை.
1993இல் மிட்சுபிசி மோட்டார்ஸ் நிறுவனம் தன்னுடைய உற்பத்தி ஆலையை சென்னையில் அமைத்தது. 1995ஆம் ஆண்டில் ஃபோர்டு நிறுவனமும் 1996 ஆம் ஆண்டில் ஹூண்டாய் நிறுவனமும் தங்களுடைய கார் உற்பத்தி ஆலையை சென்னையில் நிறுவின. இது வரை ஒரு கோடிகளுக்கும் மேற்பட்ட கார்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது ஹூண்டாய் நிறுவனம்.
2007 ஆம் ஆண்டில் பிஎம்டபிள்யூ நிறுவனம் சென்னையில் தன்னுடைய முதல் ஆலையை அமைத்தது. 2010 ஆம் ஆண்டு ரெனால்ட் நிசான் நிறுவனமும் 2012 ஆம் ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சென்னையில் தங்களுடைய முதல் கார் உற்பத்தி ஆலைகளை நிறுவின. 2019 ஆம் ஆண்டு சிட்ரியான் நிறுவனமும், 2024ஆம் ஆண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் சென்னையில் தங்களுடைய உற்பத்தி ஆலைகளை அமைத்தன. சென்னை விமான நிலையம், துறைமுகம் மற்றும் பிற மாநிலங்களுடன் சாலை இணைப்பு என சிறந்த போக்குவரத்து வசதிகளை கொண்டுள்ளது. கார் உற்பத்தி ஏற்றுமதிக்கு சிறந்த நகரமாக சென்னை திகழ்கிறது.
இதுமட்டுமல்ல சென்னை கார் உற்பத்திக்கு தேவையான மற்ற உதிரி பாகங்களும் எளிமையாக கிடைக்கும் ஒரு நகரமாக இருப்பதே பல்வேறு நிறுவனங்களும் முன்வந்து இங்கே தங்களுடைய உற்பத்தி ஆலைகளை அமைக்க முக்கிய காரணம். சிறு, குறு நிறுவனங்களில் தொடங்கி சென்னையில் 4000க்கும் அதிகமான வாகன உதிரிபாக சப்ளை செய்யும் நிறுவனங்கள் செயல்படுகின்றன .
ஒட்டுமொத்தமாக இந்தியாவில் உற்பத்தியாகும் கார்களில் 50 சதவீதம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை. அதேபோல மொத்த சரக்கு வாகனங்களில் 33 சதவீத சரக்கு வாகனங்கள் சென்னையில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன, பயணிகள் வாகனங்களில் 21% வாகனங்கள் சென்னையில் தான் தயாரிக்கப்படுகின்றன . வாகன உதிரி பாகங்களை பொருத்தவரை 35 சதவீத பாகங்களை தமிழ்நாடு தான் உற்பத்தி செய்து மற்ற பகுதிகளுக்கு வழங்குகிறது . மின்சார வாகன உற்பத்தியிலும் சென்னையின் பங்கு 35 சதவீதமாக இருக்கிறது.
குறைந்த ஆற்றல் செலவில் அதிக உற்பத்தி செய்யும் உலகின் டாப் 3 நிறுவனங்களில் ஒன்று தமிழகத்தின் சென்னையில் உள்ள ஜே.கே டயர் நிறுவனம். இங்கு வருடம் ஒன்றுக்கு 4.5 மில்லியன் கார் டயர்களும், 1.2 மில்லியன் டிரக் டயர்களும் உற்பத்தி செய்யப்படுகிறது.
உலகின் டாப் 20 டயர் கம்பெனிகளில் ஒன்று சென்னையில் உள்ள எம்.ஆர்.எப் நிறுவனம். இங்கிருந்து 90 நாடுகளுக்கு டயர்கள் சப்ளை செய்யப்படுகிறது. சென்னையில் இயங்கி வரும் ஃபியட் டயர் கம்பெனி முழுவதும் ஆட்டோமேட்டிக்காக இயங்கும் வேர் ஹவுஸ்யை நிறுவி கையாள்கிறது. இதற்காக "வேர்ல்டு எக்னாமிக் ஃபோரம்" விருது பெற்றது. இந்த விருதைப் பெற்ற ஒரே டயர் நிறுவனம் ஃபியட் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.