
இப்போதெல்லாம் எல்லாத் தொலைபேசி விளம்பரங்களிலும் '5G வசதி கொண்டது' என்று அறிவிக்கிறார்கள். தொலைதொடர்புச் சேவை வழங்குநர்கள் தங்களுடைய 5G வலைப்பின்னல்தான் மிகச் சிறந்தது, மிக விரைவானது என்று போட்டி போடுகிறார்கள். அதென்ன 5G?
நாம் சில ஆண்டுகளுக்குமுன்புதான் 2G, 3G, 4G வலைப்பின்னல்களை ஒவ்வொன்றாகத் தாண்டிவந்தோம். அதனால் G என்பது Generation, அதாவது தலைமுறையைக் குறிக்கிறது என்பதும் 5G என்பது ஐந்தாம் தலைமுறைக்கான தொலைதொடர்பு வலைப்பின்னல் என்பதும் எல்லாருக்கும் தெரியும்.
ஆனால், 5G என்பது உண்மையில் என்ன என்பதுதான் யாருக்கும் எளிதில் தெரியாது. சொல்லப்போனால், 5G வசதி உள்ள தொலைபேசி வைத்திருக்கிறவர்கள், அதில் 5G சேவையைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டவர்களால்கூட நான்காம் தலைமுறைக்கும் ஐந்தாம் தலைமுறைக்கும் என்ன வேறுபாடு என்பதைத் துல்லியமாக எடுத்துக்காட்ட இயலாது.
ஏனெனில், 5G தொழில்நுட்பத்தின் நோக்கங்கள், அடுத்த தலைமுறைக்கான கருவிகளை இன்னும் நன்றாக, இன்னும் விரைவாக, பிசிறில்லாமல் இணைத்தல், புதிய பயனர் அனுபவங்களை வழங்குதல், புதிய அனுப்பல் மாதிரிகளுக்கு ஆற்றலளித்தல், புதிய சேவைகளை வழங்குதல். அதனால், நாம் ஏற்கெனவே செய்துகொண்டிருந்த மின்னஞ்சல், அரட்டை, வீடியோ அழைப்புகள், பதிவேற்றம், பதிவிறக்கம் ஆகியவற்றை இது முன்பைவிட நன்றாகச் செய்தாலும், இனி செய்யப்போகிற புதிய விஷயங்களில்தான் இதன் சிறப்பு வெளிப்படும். இந்தப் புதிய விஷயங்கள் முந்தைய தலைமுறை வலைப்பின்னல்களில் சாத்தியமாகியிருக்காது என்பதுதான் விஷயம்.