5G பயனர்களுக்குப் பிரச்னை: வேகம் மட்டும் இருந்தால் போதுமா?

5G பயனர்களுக்குப் பிரச்னை: வேகம் மட்டும் இருந்தால் போதுமா?
Published on

ட என்னதான் உலகம் டெக்னாலஜில வேகமா வளர்ந்துகிட்டு வருது, 5G மூலமாக இந்தியாவுல இன்டர்நெட் வேகம் ராக்கெட் மாதிரி இருக்க போகுதுன்னு ஜாலியா இருந்தாலும், இதனால ஒரு முக்கியமான பிரச்சனையும் இருக்குப்பா. 

5G இணையம் தற்போது இந்தியாவின் பல நகரங்களில் கிடைக்கக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது. இனிவரும் காலங்களில் இது மேலும் பல நகரங்களுக்கு விரிவு படுத்தப்படலாம் என்று கூறப்பட்டுள்ள நிலையில், இதனால் ஏற்படும் ஒரு பிரச்னையைப் பற்றி நாம் சிந்திக்கிறோமா இல்லையா எனத் தெரியவில்லை. நீங்கள் நினைப்பது போல் சிட்டு குருவி சாகப் போகிறது, பறவைகளுக்குப் பிரச்சினை வரப்போகிறது என்றெல்லாம் நான் சொல்லப்போவது கிடையாது. அதையும் தாண்டி நாம் அனைவருக்கும் ஏற்படப் போகும் ஒரு பிரச்னையைப் பற்றி சொல்லப் போகிறேன். 

தற்போது 5G மூலமாக, 1Gbps இணைய வேகம் அதன் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான பயனர்கள் 700Mbps வேகம்தான் கிடைக்கிறது என புகார் கூறினாலும், இது சாதாரணமாக நாம் பயன்படுத்தும் இணைய வேகத்தை விட பல மடங்கு அதிகம்தான். 

இந்த வேகம் காரணமாக நம்முடைய மொபைல் டேட்டா கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போக வாய்ப்புள்ளது. நான் சில காலமாக 5G சேவையை பயன்படுத்தி வருகிறேன். மொபைலைத் திறந்த உடனேயே என்னுடைய டேட்டா காலி என்ற அறிவிப்பு வந்துவிடுகிறது. இது நிச்சயமாக 5ஜி பயனர்களுக்கு ஒரு தொல்லையாக அமையப்போகிறது. 

சமீபத்தில் என்னுடைய மொபைல் மூலமாக கார் ஒன்று புக் செய்யும் போது, நான் இருக்கும் இடத்தில் எந்த காரும் இல்லை என்று காட்டியதும் நான் சிறிது நேரம் அந்த செயலியிலேயே தேடிக் கொண்டிருந்தேன். 15 நிமிடம் தான் தேடி இருப்பேன் அதற்குள்ளாக உங்களுடைய மொபைல் டேட்டா தீர்ந்து விட்டது என்று அறிவிப்பு வந்தது. தற்போது நாம் அதிகமாக UPI வழியாகத்தான் பணம் செலுத்துகிறோம். அவ்வாறு பணம் செலுத்து வதற்காக இன்டர்நெட்டை ஆன் செய்தாலும் டேட்டாவை உறிஞ்சி விடுகிறது. நல்லவேளை பர்சில் பணம் இருந்ததால் தப்பித்துவிட்டேன். 

உண்மை என்னவென்றால், மொபைல் டேட்டாவின் தேவை தற்போது மிகவும் அத்தியாவசியமாக மாறிவிட்டது. இனிவரும் காலங்களில் இன்டர்நெட் இல்லாமல் நம்மால் இருக்கவே முடியாது என்ற நிலை ஏற்படலாம். ஆனால் 5G சேவை மூலமாக மொபைல் டேட்டா வேகமாக காலியானால், மீண்டும் மீண்டுமா பணம் செலுத்தி நாம் ரீசார்ஜ் செய்ய முடியும்?. 

5G சேவையின் வேகத்தால், இன்டர்நெட் விரைவாக காலி ஆகிறது என்பதால், ஏதேனும் அவசர பயன்பாட்டிற்கு மட்டுமே அதைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. நாம் சாதாரணமாக இணையத்தில் நேரத்தை கழிக்க 4G அல்லது 3G சேவையே நமக்கு உகந்ததாக இருக்கும் என்பது என் கருத்து. நடுத்தர மக்களிடம் இந்த அதிவேக இணைய சேவை, எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com