கடந்த சில மாதங்களுக்கு முன்பு X தளத்தில் பத்திரிகையாளர்கள் நேரடியாக பதிவிடுவதற்காக அழைப்பு விடுத்திருந்தார் எலான் மஸ்க். இதற்காக பத்திரிகையாளர்களுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் உருவாக்கித் தருவதாக அவர் உறுதியளித்திருந்தார்.
எக்ஸ் தளத்தை சிறப்பாக மாற்றும் முயற்சியாக யூடியூப் போலவே தங்கள் தளத்தில் தொடர்ந்து பதிவுகளைப் போடுபவர்கள் வருவாய் ஈட்டும் வாய்ப்புகளை எக்ஸ் தளம் வழங்குகிறது. இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் எளிதாக தங்களின் பதிவுகளை போடும் வகையில், புதிய மாற்றம் ஒன்று தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. அதன்படி இனி எக்ஸ் தளத்தில் பகிரப்படும் செய்திகள் மற்றும் வலைப்பதிவுகள் தலைப்புகள் இன்றி புகைப்படம் மற்றும் டொமைன் பெயரில் மட்டுமே வெளியாகும்படி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதை எதற்காக எக்ஸ் தளம் கொண்டு வந்துள்ளதென்றால், தலைப்புகள் இன்றி பதிவுகளைப் போடுவது மூலம் ஸ்மார்ட்போன் எக்ஸ் செயலியில் அதிக பதிவுகளை திரையில் காட்ட முடியும் என்பது இதன் நோக்கமாகும். மேலும் தலைப்புகளை நீக்குவதால் செய்தி நிறுவனங்கள் அவர்களின் பதிவுகளை பார்க்க பயன்படுத்தும் Click Bait முறையை தவிர்க்க முடியும் என சில மாதங்களுக்கு முன்பு எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.
இத்தகைய பகிர்வுகளில் தலைப்புகள் மட்டுமே நீக்கப்பட்டு இருக்கின்றன என்றும், ஆனால் பயனர்கள் தங்கள் படிக்கும் பதிவில் தங்களுக்கு ஏற்ற வகையில் குறிப்புகளை தங்களின் விருப்பத்திற்கேற்ப போட்டுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனால் தாங்கள் படித்த பதிவை பயனர்களை தங்கள் விருப்பம்போல ஒரு தனி இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.
தற்போது இந்த புதிய மாற்றம் iOS செயலியில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும், எக்ஸ் வலைதள பதிப்பிலும் பயனர்களால் இந்த புதிய மாற்றத்தை பார்க்க முடிகிறது. இந்த புதிய மாற்றத்தால் பத்திரிக்கையாளர்களின் பார்வை எக்ஸ் தளம் மீது திரும்பும் என எலான் மஸ்க் நம்புகிறார்.