மனிதர்களைப் போலவே மூச்சு விடும் ரோபோ.

மனிதர்களைப் போலவே மூச்சு விடும் ரோபோ.

ரோபோ மூச்சு விடும் எனக் கூறியதுமே உங்களுக்கு லேசாக பயம் ஏற்பட்டிருந்தால், அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை. சமீப காலமாக தொழில்நுட்பத் துறையில் வெளிவரும் பெரும்பாலான தகவல்கள் நம்மை ஆச்சரியமடையவே செய்கிறது. 

இந்த வாரம் Yale CEO  உச்சிமாநாட்டில் ஏஐ தொடர்பாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பானது, உங்களின் பயத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வாய்ப்புள்ளது. அதாவது அந்தக் கணக்கெடுப்பில் அவர்களுக்குக் கிடைத்த தகவலின் படி, இன்னும் சில ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமானது மனித குலத்தை முற்றிலுமாக கைப்பற்றும் என 42 சதவீத CEO-க்கள் நம்புகின்றனர். அடுத்த 10 ஆண்டுகளில் மனித குலத்தையே அழிக்கும் ஆற்றல் இந்தத் தொழில் நுட்பத்திலும் இருப்பதாக அவர்கள் கூறியிருக்கின்றனர். 

CEO-க்களே இந்தத் தொழில்நுட்பத்தைப் பற்றி இவ்வளவு அஞ்சுகிறார்கள் என்றால், சாதாரண மனிதர்களாகிய நாம் இதுகுறித்து அச்சப்படுவதில் எந்த தவறுமில்லை. ஆனால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மூச்சு விடும் AI ரோபோ குறித்து நாம் துளிகூட அச்சப்பட வேண்டாம். சொல்லப்போனால் விஞ்ஞானிகள் உருவாக்கிய இந்த அற்புதமான ரோபோவின் நன்மைகளைக் கண்டு நீங்கள் வியந்து போவீர்கள். 

இந்த ரோபோவின் பெயர் ANDI. அமெரிக்காவின் அரிசோனா ஸ்டேட் யுனிவர்சிட்டியுடன் இணைந்து, தெர்மெட்ரிக்ஸ் என்ற நிறுவனம் உருவாக்கிய, உலகின் முதல் மூச்சு விடும் ரோபோ இதுதான். மூச்சு விடுவது மட்டுமின்றி, இந்த ரோபோவுக்கு வியர்க்கும், உடல் நடுக்கத்தையும் வெளிப்படுத்தும். மனித உடலில் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் செயற்கையாக இந்த ரோபோவில் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். 

இந்த ரோபோவை விஞ்ஞானிகள் 'தெர்மல் மேனெகுவின்' என அழைக்கிறார்கள். ஏனென்றால், இந்த ரோபோ மனித உடலில் ஏற்படும் தீவிர வெப்பநிலையின் விளைவுகளை ஆய்வு செய்வதற்காக வடிவமைக்கப்பட்டதாகும். இதை தனித்தனியாக கட்டுப்படுத்த 35 கண்ட்ரோலர்கள் உள்ளது. எனவே இதனால் மனித உடலைப் போலவே வெவ்வேறு வெப்பநிலைகளை ஏற்றுக்கொள்ள முடியும். தீவிரமான வெப்பநிலை மாற்றங்களில் மனிதர்களுடைய உடல் எப்படி எதிர்வினை புரிகிறது என்பதை மனிதர்களை நேரடியாக வெப்பத்தில் வைத்து பரிசோதிக்க முடியாது. எனவே மனிதர்களுக்கு மாற்றாக, இந்த ஆண்டி ரோபோவை, பலதரப்பட்ட வெப்ப சூழ்நிலையில் உட்படுத்தி, மனித உடலில் அது எத்தகைய மாற்றத்தை ஏற்படும் என்பதை நம்மால் அறிய முடியும். எனவே, இந்த ரோபோவால் மட்டுமே வெப்பத்தால் மனித உடலில் ஏற்படும் சில மர்மங்களை அவிழ்க்க முடியும். 

இதைப் பயன்படுத்தி மனித உடலில் வெப்பம் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதைப் புரிந்து கொண்டு, அதை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்பதற்கான தீர்வுகளை நம்மால் வடிவமைக்க முடியும். இதன் காரணமாக விஞ்ஞானிகள் இது மிகவும் முக்கியமான ஆராய்ச்சி என்று கூறுகிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com