

"எங்கே தங்கம் மலிவாகக் கிடைக்கும்?" என்று கேட்டால், துபாயையோ அல்லது சிங்கப்பூரையோ கைகாட்டுவோம். ஆனால், உண்மையில் நம் காலடியில், பூமித்தாயின் ஆழமான கருவறைக்குள், ஒட்டுமொத்த உலக மக்களையும் கோடீஸ்வரர்களாக மாற்றக்கூடிய அளவிற்குத் தங்கம் குவிந்து கிடக்கிறது என்பது பலருக்கும் தெரியாத உண்மை.
விண்வெளியில் சிறுகோள்களில் தங்கம் இருக்கிறதா என்று தேடிக்கொண்டிருக்கும் நாம், பூமிக்கு உள்ளேயே இருக்கும் இந்தச் செல்வத்தை எப்படி எடுப்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தோம். ஆனால், அந்தப் பூட்டப்பட்ட கதவைத் திறப்பதற்கான சாவியை இப்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டார்கள்.
தங்கம் ஏன் பாதாளத்தில் பதுங்கியது?
பூமி உருவான காலகட்டத்தில், தங்கம் போன்ற கனமான உலோகங்கள் புவியீர்ப்பு விசையின் காரணமாக மையப்பகுதியை நோக்கி ஈர்க்கப்பட்டன. தங்கம் இயல்பாகவே யாருடனும் அவ்வளவு சீக்கிரம் ஒட்டாத, அதாவது வேதிவினை புரியாத ஒரு தனிமை விரும்பியான உலோகம்.
இதனால், அது பாறைகளுடன் கலக்காமல், தனித்து நின்று ஆழத்திற்குச் சென்று தங்கிவிட்டது. இன்று நாம் சுரங்கங்களில் வெட்டி எடுக்கும் தங்கம் எல்லாம், பூமியின் மேல் மட்டத்தில் தற்செயலாகத் தங்கிய மிகச்சிறிய துகள்கள் மட்டுமே. உண்மையான 'பிக் பாஸ்' வீட்டுக்கு அடியில் தான் இருக்கிறார்.
இவ்வளவு ஆழத்தில் இருக்கும் தங்கத்தை மேலே கொண்டு வருவது சாத்தியமே இல்லை என்றுதான் அறிவியல் உலகம் நம்பி வந்தது. ஆனால், மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், சீனா மற்றும் ஐரோப்பிய விஞ்ஞானிகளுடன் இணைந்து ஒரு ஆச்சரியமான விஷயத்தைக் கண்டறிந்துள்ளனர். பூமிக்கு அடியில் சுமார் 50 மைல் ஆழத்தில், எரிமலைக் குழம்புகள் கொதிக்கும் அதீத வெப்பநிலையில் ஒரு ரசாயன மாற்றம் நிகழ்கிறது.
பொதுவாக யாருடனும் சேராத தங்கம், அந்தத் தகிக்கும் வெப்பத்தில் கந்தகம் (Sulfur) நிறைந்த திரவத்துடன் சேரும்போது உருகி, ஒரு புதிய கலவையாக மாறுகிறது. இந்தக் கூட்டணிதான் தங்கத்தை பாறைகளின் இடுக்குகளிலிருந்து விடுவித்து, மெல்ல மெல்ல மேல்நோக்கி நகரச் செய்கிறது. அதாவது, சல்பர் ஒரு வாகனத்தைப் போலச் செயல்பட்டு, ஆழத்தில் இருக்கும் தங்கத்தை 'லிஃப்ட்' கொடுத்து மேலே கொண்டு வருகிறது.
இந்தக் கண்டுபிடிப்பு வெறும் ஏட்டளவில் இல்லாமல், ஆய்வகச் சோதனைகளிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மட்டும் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வந்தால், தங்கச் சுரங்கத் தொழிலின் வரலாறே மாறிவிடும். நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிலான தங்கம் சந்தைக்கு வரும்போது, அதன் மதிப்பு மற்றும் உலகப் பொருளாதாரம் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்கும்.
நிச்சயமாக, நாளைக்கே நம் வீட்டுத் தோட்டத்தில் குழி தோண்டினால் தங்கம் கிடைத்துவிடாது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சுரங்கங்களில் தங்கத்தை எடுப்பதற்கு இன்னும் சில தசாப்தங்கள் ஆகலாம்.