
ஒரு திரையரங்கத்துக்குச் செல்கிறீர்கள். அங்கு இலவச இணையம் கிடைக்கும் என்று அறிவித்திருக்கிறார்கள். சும்மா உட்கார்ந்திருக்கிற நேரத்தில் ஏதாவது படிக்கலாம் என்று உங்களுடைய மொபைல் தொலைபேசியைப் பயன்படுத்தி அவர்களுடைய இலவச இணையத்தில் இணைகிறீர்கள்.
அப்போது, உங்கள் மேலாளர் உங்களை அழைக்கிறார், 'எனக்கு அவசரமா ஒரு தகவல் தேவைப்படுது. உடனடியா மின்னஞ்சலைப் பாரு' என்கிறார்.
'சரி, உடனடியாப் பார்த்துப் பதில் அனுப்பறேன்' என்கிறீர்கள் நீங்கள், சட்டென்று உங்களுடைய தொலைபேசியில் இருக்கும் மின்னஞ்சல் சேவையைத் திறக்க முற்படுகிறீர்கள்.
கொஞ்சம் பொறுங்கள். இப்போது உங்கள் தொலைபேசி பொது இணையத்தில் இணைந்துள்ளது. அங்கிருந்தபடி நீங்கள் உங்களுடைய அலுவலக மின்னஞ்சலைப் படித்தாலோ பதில் அனுப்பினாலோ அதை வேறு சிலர் திருட்டுத்தனமாக நோட்டம் பார்க்கக்கூடும். அந்தத் தகவல்களைப் பயன்படுத்தி உங்களுக்கோ உங்களுடைய நிறுவனத்துக்கோ சிக்கலைக் கொண்டுவரக்கூடும்.
அது எப்படி? என்னுடைய தொலைபேசி நேரடியாக என்னுடைய நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையகத்துடன்தானே தொடர்புகொள்கிறது? அதை எப்படிப் பிறர் பார்க்கமுடியும்?