

இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் சமூக வலைதளங்களில் இருந்து, பாலிசி கொள்கைகளை மீறியதாகக் கூறி, 27 மில்லியனுக்கும் அதிகமான பதிவுகள் மெட்டா நிறுவனத்தால் நீக்கப்பட்டுள்ளது.
தினம்தோறும் இணையத்தில் கோடிக்கணக்கான பதிவுகள் பதிவேற்றப்படுகிறது. இதில் அதிகப்படியான பதிவுகள் தவறானதாகவும், போலியானதாகவும், மோசமான கருத்துக்களை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது. இப்படி ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான பதிவுகள் இருந்து வரும் நிலையில், இதை அதிரடியாக நீக்கும் பணியில் மெட்டா நிறுவனம் களமிறங்கியுள்ளது.
இதன் முதற்கட்டமாக கடந்த ஜூன் மாதத்தில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட சுமார் 27 மில்லியனுக்கும் அதிகமான பதிவுகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கில் 13 பாலிசிகளின் கீழ் சுமார் 21,000 பதிவுகளும், இன்ஸ்டாகிராமில் 12 பாலிசிகளின் கீழ் சுமார் 6000 பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளது. 2021 IT விதிகளின்படி இதுசார்ந்த அறிக்கையை மெட்டா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. இந்த விதிகளின் கீழ் 5 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட டிஜிட்டல் ஊடகங்கள் இத்தகைய மாதாந்திர அறிவிப்பை வெளியிட வேண்டும். இது பயனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து வதற்காகச் செய்யப்படுகிறது.
இதுகுறித்து மெட்டா நிறுவனம் என்ன தெரிவித்துள்ளதென்றால், "எங்களுடைய பாலிசிகளுக்கு எதிராக இருக்கும் பதிவுகள் மீது நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் எல்லா பதிவுகளின் எண்ணிக்கையையும் அளவிட்டு, அதில் பயனர்களுக்கு இடையூறு விளைவிக்கக்கூடிய, புகைப்படங்கள் வீடியோக்கள் போன்றவற்றை ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்திலிருந்து நீக்குவது குறித்தும் முடிவு எடுக்கப்படும்" என அவர்களின் அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மெட்டா நிறுவனத்தின் இந்த முயற்சி அனைவரது மத்தியிலும் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றுள்ளது. தனது பயனர்கள் மீது மெட்டா நிறுவனம் கொண்டுள்ள அக்கறையை இந்த செயல் காட்டுவதாக பல தெரிவிக்கின்றனர்.