மோனா என்பது ஒரு AI சாதனமாகும். இது தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள நோயாளிகளுக்கு உதவியாக இருந்து, அவர்களின் பராமரிப்பை மேம்படுத்த உதவுகிறது.
கொரோனா காலத்தில் உலகளவில் எல்லா மருத்துவ மனைகளும் நோய்த்தொற்றின் அழுத்தத்தை எதிர்கொண்டன. நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்கவில்லை. அவர்களை சரிவர கண்காணிப்பதற்கு மருத்துவர்கள் இல்லை. திடீரென ஒரு நோய்தொற்று உலகில் பரவினால் மருத்துவமனைகளில் எந்த அளவுக்கு பிரச்சனைகள் இருக்கிறது என்பதை கொரோனா சமயத்தில் நாம் அறிந்து கொண்டோம். இனி இதுபோன்ற நோய்த் தொற்றுகள் வராது என நாம் நினைத்தாலும், உலக மக்கள் தொகையின் தொடர்ச்சியான வளர்ச்சியால், மருத்துவமனைகள் எதிர்காலத்தில் அதிக அழுத்தத்தை சந்திக்க வாய்ப்புள்ளது.
எனவே மருத்துவ சமூகம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தேடி வருகிறது. இதற்கு நல்ல தீர்வை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் மட்டுமே தர முடியும் என பலர் நம்பி வந்த நிலையில், Clinomic Mona என்ற புதிய AI கண்டுபிடிப்பு அதன் தொடக்கமாக அமைந்துள்ளது. குறிப்பாக தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் பயன்படுத்துவதற்காகவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நோயாளிகளின் தரவுகளை சேகரித்து, அதற்கான முடிவைத் தருவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது. இதனால் நோயாளியின் பல கோப்புகளை அலசி ஆராய்ந்து முடிவெடுக்கும் நீண்ட செயல்முறையைத் துரிதப்படுத்தலாம்.
மோனா ஒரு மெய்நிகர் உதவியாளரைப் போல பேசும் தன்மை கொண்டது. இதில் வாய்ஸ் ரெக்கக்கனிஷன் இருப்பதால், மருத்துவர்கள் இந்த சாதனத்தைத் தொடாமலேயே அதன் சேவைகளை எளிதாக அணுக முடியும். மேலும் பல மருத்துவர்கள் ஒரு நோயாளியின் பிரச்சனை என்னவென்பதை இதைப் பயன்படுத்தி அறிந்துகொள்ள முடியும். இந்த அமைப்பு நோயாளி தொடர்பான தகவல்களை ஆவணப்படுத்தி தற்போதைய சிகிச்சைக்கு உதவும் வகையில் அந்தத் தகவலை சரியான நேரத்தில் வழங்குகிறது.
மேலும் இது நீங்கள் எந்தக் கேள்வி கேட்டாலும் பதிலளிக்கக் கூடியதாகவும் இருப்பதால், இதனிடம் எந்த நேரத்திலும் ஒரு கேள்வியைக் கேட்கலாம். கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோயாளியின் உடம்பில் என்ன நடந்தது? போன்றவற்றை மோனாவிடம் கேட்டால், அனைத்தையும் துல்லியமாகச் சொல்லிவிடும். எனவே ஷிப்ட் முடியும் தருணத்தில் புதிதாக வரும் மருத்துவரிடம், முந்தைய ஷிப்டில் இருந்தவர் நோயாளியின் விவரங்களை சொல்ல வேண்டிய அவசியமில்லை. மோனாவிடமே அனைத்தையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
இது பாதுகாப்பான டெலிமெடிசின் பிளாட்பார்ம் மூலம் மருத்துவர்களிடையே ஒத்துழைப்பை எளிதாக்குவதால், உலகில் எங்கிருந்தாலும் மற்ற சுகாதார வல்லுநர்களுடன் மோனாவை இணைத்து ஆலோசனை பெற முடியும். உதாரணமாக வேறொரு மருத்துவமனையில் இருக்கும் ஒரு நோயைப் பற்றிய நிபுணரை நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பினால், நேரடியாக மோனாவை இணைத்து நோயாளி பற்றிய விவரங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்தலாம்.
மருத்துவத்துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தவிருக்கும் இந்த சாதனம், நோயாளிகளுக்கு பலவகையில் பயனுள்ளதாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.