மனிதர்களின் பல வேலைகளை தற்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் எளிதாக்கிக் கொண்டிருக்கும் வேளையில், அது மனிதர்களுக்கான மனநல ஆலோசனை கூட வழங்கி வருகிறது என்ற செய்தி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்பத்துறை மட்டுமல்லாமல், விஞ்ஞானம், மருத்துவம் என பல துறைகளில் தற்போது AI கோலூன்றி வருகிறது. முன்பெல்லாம் நாம் எதையாவது அறிய வேண்டும் என்றால் கூகுளில் தான் முதலில் தேடிப்பார்ப்போம். தற்போது பெரும்பாலானவர்கள் ChatGPT பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம். உடலில் ஏதாவது பாதிப்பு என்றால் கூட, கூகுளில் தேடிப்பார்த்து அதைப் பற்றி நாம் தெரிந்துகொண்ட பிறகுதான் மருத்துவரிடம் செல்வோம். ஆனால் மனிதர்களுக்கு ஏற்படும் மனநலப் பிரச்சனைகளுக்கான ஆலோசனை பெறுவதற்கு கூகுளைத் தாண்டி மக்கள் AI தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
உங்களுக்கு மனசோர்வு அல்லது மன அழுத்தம் போன்ற எந்த மனநல பாதிப்பாக இருந்தாலும், அதை AI-யிடம் தெரிவித்தால், முதலில் நீங்கள் சொல்வதை பொறுமையாகக் கேட்டுக்கொள்கிறது. பின்னர் நீங்கள் கேட்ட கேள்வியை வைத்து, உங்கள் நிலைமையை புரிந்துகொண்டு, அதை எப்படி சரியாகக் கையாளலாம் என்பதற்கான வழிமுறைகளைக் கொடுக்கிறது. ஆலோசனைகளைக் கொடுத்து முடித்ததும், உங்கள் பிரச்சனைகளுக்கான முழுமையான தீர்வு கிடைக்க, ஓர் தொழில்முறை அங்கீகாரம் பெற்ற மனநல மருத்துவரை அணுகுங்கள் என்று எச்சரிக்கையும் செய்கிறது.
இந்தியன் சைக்யாட்ரிக் சொசைட்டி நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் மொத்தமாகவே 9000 மனநல மருத்துவர்கள் மட்டும் தான் இருக்கிறார்களாம். அப்படி பார்த்தால் ஒரு லட்சம் மக்களுக்கு 0.75 மருத்துவர் மட்டுமே இருக்கிறார். அதுமட்டுமின்றி இந்த மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதற்கான செலவும் அதிகமாக இருக்கிறது. இதனால் மனநல மருத்துவத்துறையில் செயற்கை நுண்ணறிவு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
உலகிலேயே இந்தியா தான் தற்கொலை நகரம் எனக் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சுமார் 2.6 லட்சம் மக்கள் தற்கொலை செய்துகொள்வதாக உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது. மேலும் தற்கொலைக்கு முயன்று தோல்வியடைபவர்களின் எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகம். சராசரியாக 70 மில்லியன் மக்கள் இந்தியாவில் உளவியல் ரீதியான பாதிப்புகளை சந்தித்து வருகிறார்கள். தெருவுக்கு தெரு தற்போது அதிகப்படியான மருத்துவமனைகள் இருப்பது போல், எல்லா மக்களும் அணுகக்கூடிய வகையில் மனநல நிபுணர்களின் தேவையும் அதிகமாக இருக்கிறது.
குறிப்பாக தென்னிந்தியாவில் உளவியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதில் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிப்புக்குள்ளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. இந்நிலையில் மனநல பிரச்சினைகள் சார்ந்த விஷயங்களுக்கு AI தொழில்நுட்பம் ஆலோசனை வழங்குவது வரவேற்கத்தக்கது எனலாம்.