

செயற்கை நுண்ணறிவு என்பது நவீன உலகின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறி வருகிறது. தானாக ஓடும் கார்கள் முதல், சுயமாக செயல்படும் ரோபோக்கள் வரை இதன் பயன்பாடு அனைத்திலுமே வந்துவிட்டது. ஆனால் இந்த தொழில்நுட்பத்தால் பல ஆபத்துக்கள் உள்ளது என சொல்லப்பட்டு வரும் நிலையில், இவை போர்க்களத்தில் எதுபோன்ற மாற்றங்களைக் கொண்டு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாதுகாப்பான மற்றும் திறமையான ராணுவத்தை அடைய AI நமக்கு உதவுமா? அல்லது அழிவு பாதைக்கான புதிய வாசலைத் திறக்குமா? என பொறுத்திருந்துதான் நாம் பார்க்க வேண்டும்.
ராணுவத்தில் AI-ன் பங்களிப்பு:
ராணுவ நடவடிக்கைகளில் AI தொழில்நுட்பத்தின் முதன்மையான நன்மைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுவது, அதன் வேகமான முடிவெடுக்கும் தன்மைதான். இந்தத் தொழில்நுட்பத்தால் குறுகிய நேரத்தில் அதிகப்படியான தரவை சேகரித்து அதற்கான முடிவை எடுக்க முடியும். இது படைத்தளபதிக்கு ஒரு சூழ்நிலையை விரைவில் புரிந்துகொள்ள நல்ல விழிப்புணர்வை வழங்குகிறது.
மிகவும் ஆபத்தான பணிகளைச் செய்வதற்கு AI மூலம் இயங்கும் ட்ரோன்களைப் பயன்படுத்தலாம். இது ராணுவ வீரர்களுக்கு உள்ள ஆபத்தை குறைக்கிறது.
AI தொழில்நுட்பத்தால் ராணுவ நடவடிக்கைகளில் துல்லியத் தன்மையை மேம்படுத்த முடியும். அதாவது மிகத் துல்லியமாக ஏவுகணைகளை செலுத்த இது பயன்படும். இதனால் தாக்குதல்களில் பொதுமக்களின் உயிரிழப்புகளைக் குறைக்கலாம்.
ராணுவ துறையில் சைவ தாக்குதல்களுக்கு எதிராக AI தொழில்நுட்பத்தால் முக்கிய பங்காற்ற முடியும். இது நிகழ்நேரத்தில் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து முக்கியமான ராணுவ தகவல்கள் மற்றும் உட்கட்டமைப்பை பாதுகாக்கும்.
ராணுவத்தில் AI-ஆல் ஏற்படும் ஆபத்துகள்:
இதில் உள்ள ஆபத்துக்கள் என்று பார்க்கும்போது முதலாவதாக இதைப் பயன்படுத்தி தானாக செயல்படும் ஆயுதங்களை தயாரிக்கலாம். இவற்றால் மனிதர்களின் பங்களிப்பு இல்லாமல் தானாக முடிவெடுத்து தானாக செயல்படும் ஆபத்து இருப்பதால், அதிகப்படியான உயிரிழப்புக்கு வாய்ப்புள்ளது.
ஆயுதங்களின் அதிகரிப்பால் போர் நடவடிக்கைகளும் அதிகரிக்கும். மேம்பட்ட AI தொழில்நுட்ப வளர்ச்சியால், நாடுகளுக்கு இடையே போர் மூல வாய்ப்புள்ளது.
மனிதர்களைத் தாண்டி இயந்திரங்களை நம்புவது எப்போதுமே ஆபத்துதான். அவை தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து செயல்பட தொடங்கினால் ஏற்படும் சேதம் அதிகமாக இருக்கும். இந்த இயந்திரங்களை ஒருவர் ஹேக் செய்து தவறாக பயன்படுத்தும் ஆபத்து உள்ளது.
எனவே போரில் AI தொழில்நுட்பம் பற்றிய விவாதம் மிகவும் சிக்கலானது. மிகவும் முன்னேறிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது அவற்றின் நன்மை தீமைக்கான சமநிலையில் கவனம் தேவைப்படுகிறது. இத்தகைய சிக்கல்களைத் தீர்ப்பதற்கு நாடுகளுக்கு மத்தியே பல சர்வதேச ஒப்பந்தங்களும், ஒழுங்குமுறைகளும் தேவை. போர் நடவடிக்கைகளில் முக்கிய முடிவு எடுக்கும் செயல்முறைகளில் மனிதர்களின் ஈடுபாடு மிகவும் முக்கியமானது. எல்லா நேரங்களிலும் இந்தத் தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்பி விடக்கூடாது.