
சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில், 2024 ஆம் ஆண்டில் சுமார் 43 சதவீத அலுவலகங்கள் Ai மூலமாக வேலைக்கான நேர்காணலை நடத்துவார்கள் எனத் தெரியவந்துள்ளது. மனிதர்களின் பணிச் சுமையைக் குறைக்க கண்டு பிடிக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம், மனிதர்களுக்கே வேலையில்லாமல் செய்துவிடுமோ என பலருக்கு அஞ்சுகின்றனர்.
நிறுவனத்திற்கான பணியாளர்களை தேர்வு செய்ய நடத்தப்படும் நேர்காணலில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து அமெரிக்காவில் ஒரு ஆய்வு செய்யப்பட்டது. சுமார் 18 முதல் 64 வயதுக்கு உட்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், மொத்தம் 2000க்கும் அதிகமான நபர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வின் முடிவின்படி, வரும் 2024 ஆம் ஆண்டுக்குள் உலகின் 43 சதவீத அலுவலகங்கள் Ai பயன்படுத்தியே நேர்முகத்தேர்வு நடத்துவார்கள் என்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில் பங்கேற்ற நிறுவனங்களில் சுமார் 64% பேர் ஏஐ பயன்படுத்தி இன்டர்வியூ நடத்துவதற்கு ஆதரவாகவும், 21% பேர் இதனால் எந்த விளைவும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும், 14% பேர் இதனால் அதிக பாதிப்புகள் ஏற்படப்போகிறது எனவும் தெரிவித்துள்ளனர். ஏஐ தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தி இரண்டு விதமாக வேலை ஆட்களை தேர்வு செய்யலாம். முதலில் அவர்களின் Resume-ஐ முறையாகப் பரிசீலித்து தேர்வு செய்யப் பயன்படுத்தலாம். இரண்டாவது, நேர்காணலை முழுவதுமாக செயற்கை நுண்ணறிவே எடுப்பதுபோல பயன்படுத்தலாம்.
ஆனால் இந்த முறைகளில் Ai தொழில்நுட்பம் திறம்பட செயல்படும் என உறுதியாகக் கூற முடியாது. என்னதான் இருந்தாலும் அது ஒரு விர்ச்சுவல் முறையில் இயங்கும் இயந்திரம் என்பதால், மனித உணர்வுகளுக்கு இணங்க அதனால் செயல்பட முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் 2024 இல் Ai தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நேர்காணல் செய்வது சரியான முடிவாக இருக்காது என சொல்லப்படுகிறது.
அதே சமயம் தொழில்நுட்பத்தின் உதவியால் பல லட்சக்கணக்கான விண்ணப்பங்களிலிருந்து சரியான நபர்களை வேகமாக தேர்வு செய்ய இதைப் பயன்படுத்தலாம். தற்போது Indeed, Naukri போன்ற இணையதளங்களும் இதைத்தான் செய்து வருகிறது. இந்த தளங்களில் லட்சக்கணக்கான நபர்கள் தனது Resume-களைப் பதிவேற்றம் செய்கிறார்கள். இதிலிருந்து ஒரு நிறுவனத்திற்கு தேவையான நபரை தேர்வு செய்வதற்கு அவர்கள் பயன்படுத்தும் அல்காரிதமே உதவி புரிகிறது.
இந்த தொழில்நுட்பத்தில் பல ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்கிறது. இருப்பினும் 2024ல் இல்லை என்றாலும், தோராயமாக 10 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு பெரும்பாலான இடங்களை ஆட்கொள்ள வாய்ப்புள்ளது. எனவே அதற்கு ஏற்றவாறு நாம் நம்முடைய திறன்களை வளர்த்துக்கொள்வது நல்லது.