மனதில் நினைப்பதை சரியாக எழுதிக் காட்டும் AI.

மனதில் நினைப்பதை சரியாக எழுதிக் காட்டும் AI.

டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மற்றவர்கள் மனதில் நினைப்பதை சரியாக எழுதிக்காட்டும்படியான AI தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். 

ஒரு திரைப்படத்தில் நடிகர் விவேக்கிற்கு பிறர் மனதில் நினைப்பதெல்லாம் கேட்கும் சக்தி கிடைக்கும். ஒருவர் மனதில் ஒரு மாதிரியாகவும், வெளியே வேறு மாதிரியாகவும் பேசுகிறார் என்பதை திரைப்படத்தின் வாயிலாக நமக்கு காட்சிப்படுத்தி இருப்பார்கள். இது தற்போது உண்மையாக மாறிவிட்டது. ஆராய்ச்சியாளர் கள் பிறர் மனதில் நினைப்பதை சரியாக கண்டுபிடிக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.  

எதிர்காலத்தில் இந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஒவ்வொருவர் வீட்டிலும் ஏ.ஐ அசிஸ்டென்டாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மிகவும் கடினமான கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் முதல் பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் எழுதித்தருவது வரை Chat bot எனப்படும் AI தொழில்நுட்பம் முன்னேறிவிட்டது. தற்போது அது மனித மூளையை அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கணித்து, எழுத்துப்பூர்வமாக அதை வெளிப்படுத்த தயார் நிலையில் இருக்கிறது.  

ஏற்கனவே மனித மூளையை புரிந்து கொள்ளும்படியாக பல ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. எலான் மஸ்கின் நியூரல் லிங்க் நிறுவனம், மார்க் ஜுகர்பெர்க்கின் பேஸ்புக் நிறுவனம் என, மனித மூளையைப் படிக்கும் ஆராய்ச்சிக்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இந்நிலையில் F-MRI ஸ்கேன் டேட்டாக்களைப் பயன்படுத்தி, பிறர் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை எழுத்தாக மாற்ற முடியும் என டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இந்த ஆராய்ச்சிக் குழுவில் மொத்தம் நான்கு பேர் உள்ளனர். இதில் ஒருவர் இந்தியராவர். 

 இது குறித்து இந்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் அலெக்சாண்டர் கூறுகையில்,"F-MRI ஸ்கேன் பயன்படுத்தி மனித எண்ணங்களை எழுத்துக்களாக கொண்டுவரும் ஆராய்ச்சி 15 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வந்த நிலையில், தற்போது அதன் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. F-MRI ஸ்கேன் பொருத்தப்பட்டவர் மனதில் என்ன நினைத்தாலும் ஏஐ தொழில்நுட்பமானது சரியாக டிகோட் செய்துவிடுகிறது. நியூரான் நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்றவற்றால் பாதிக்கப் பட்டவர்களால் சரியாகப் பேச முடியாது. அவர்கள் நினைப்பதை தெரிந்துகொள்ளவே முதலில் இந்த ஆராய்ச்சி தொடங்கப்பட்டது. இப்போது பல தன்னார்வலர்களையும் இதில் இணைத்து, அவர்கள் மனதில் நினைப்பதை AI கண்டுபிடிக்கிறதா என்பதை ஆராய்ந்து வருகிறோம். 

ஒரு தன்னார்வலர் ஸ்கேனில் இருந்தபோது அவரிடம் வெளியே இருந்த வேறொருவர் "என்னிடம் லைசன்ஸ் இல்லை" என்று கூறியுள்ளார். இதற்கு தன்னார்வலர் எந்த பதிலும் சொல்லாமல் மனதில் எதையோ நினைத்துக் கொண்டார். இதை சரியாக கணித்த ஏஐ, "அவர் இன்னும் வாகன ஓட்ட கற்றுக் கொள்ளவில்லை" என்று அவர் மனதில் நினைத்ததை சரியாக எழுதிக் காட்டியது. இந்த தொழில்நுட்பம் மனித மூளையை படிப்பதற்கான தொடக்கமாக அமையலாம்" என அவர் தெரிவித்தார். 

இந்தத் தொழில்நுட்பம் மட்டும் வெற்றிகரமாக முடிந்து மக்களின் பயன்பாட்டிற்கு வந்தால், இனி மனதில் கூட எதையும் வெளிப்படையாகக் கூறி புலம்ப முடியாது போலவே?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com