நவீன அப்பார்ட்மெண்டுகளில் மின் தூக்கிகள் எனப்படும் எலிவேட்டர் வசதி கண்டிப்பாக இருக்கும். ஆனால், அதற்கான மின்சார பயன்பாடு மற்றும் மின் கட்டணமும் அதிகம். தற்போது காற்றில் இயங்கும் மின் தூக்கிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் சிறப்புகள் பற்றியும் இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
காற்றினால் இயக்கப்படும் லிஃப்ட்டுகள் தற்போது வியக்கத்தக்க வகையில் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. வீட்டின் ஒரு மூலையில் அதிக இடத்தை ஆக்கிரமிக்காமல் இதைப் பொருத்தமுடியும். 360 டிகிரி காட்சியுடன் வீட்டின் எந்தப் பகுதியையும் தடுக்கப்படாமல் இதை அமைக்கலாம். இது வணிகப் பயன்பாட்டிற்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கும் ஒரு கவர்ச்சிகரமான மற்றும் பயன்மிக்க தேர்வாகும்.
காற்றின் ஆற்றலால் இயங்கும் நியூமேடிக் லிப்ஃடின் நன்மைகள்:
குறைந்தபட்ச இடம்:
நியூ மேட்டிக் லிஃப்ட் ஒரு சிறிய வடிவமைப்பைக் கொண்டுள்ளதால் அதைப் பொருத்துவதற்கு நிறைய இடம் தேவை இல்லை. அதற்கென்று தனியாக இயந்திர அறையோ அல்லது விரிவான இடமோ தேவையில்லை. அவற்றை சிறிய வீடுகளில் சிறிய கட்டடங்களில்கூடப் பொருத்தமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டால் செய்ய எளிதானது:
பாரம்பரிய லிஃப்டுகளுடன் ஒப்பிடுகையில் ஏர் லிஃப்ட் இன்ஸ்டால் செய்வதற்கு மிகவும் எளிதானது. கட்டடத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் செய்யாமல், வெல்டிங், டேப்பிங் அல்லது டக்டிங் வேலைகள் செய்யாமல் மிகவும் விரைவாக அவற்றை இன்ஸ்டால் செய்துவிடலாம்.
ஆற்றல் திறன்:
இந்த ஏர் லிஃப்டுகள் அதிக ஆற்றல் திறன் கொண்டவை. பாரம்பரிய லிஃப்டுகளுக்குத் தேவைப்படுவதுபோல அதிகமான மின்சார சக்தி இதில் விரயம் ஆவதில்லை. இது காற்றால் இயங்குவதால் ஏறும்போது மட்டுமே காற்றழுத்தத்தை உந்துசக்தியாகப் பயன்படுத்துகிறது. இறங்கும்போது ஈர்ப்பு விசையால் இயக்கப்படுவதால் கூடுதல் ஆற்றல் நுகர்வு தேவையில்லை.
வெளிப்படை தன்மையும் அழகியலும்:
பல நியூமேட்டிக் ஏர் லிஃப்டுகள் தெளிவான உருளைக் குழாயுடன் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பயணிக்கும் போது உடைக்க முடியாத பாலிகார்பனேட் கண்ணாடி தொழில்நுட்பத்தின் மூலம் 360 டிகிரி காட்சியை நமக்கு வழங்குகிறது.
இதனால் வீட்டின் அல்லது கட்டடத்தின் உள் அலங்காரத்தை ரசிக்கமுடியும். மிக நவீனமான தோற்றத்தைத் தருகிறது. மேலும், இதில் பயணிக்கும் போது திறந்தவெளியில் பயணிப்பது போல ஓர் உணர்வையும் ஏற்படுத்துகிறது.
குறைந்த பராமரிப்பு:
பாரம்பரிய லிஃப்டுகளில் கேபிள்கள், கனமான எடையுள்ள பொருட்கள் சிக்கலான இயந்திரங்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன. ஆனால், ஏர் லிப்டில் பழுது பார்ப்பதற்கான செலவு, பராமரிப்பு செலவு மிகவும் குறைவாக இருக்கும்.
பாதுகாப்பு அம்சங்கள் :
ஏர்லிஃப்டுகள் மின்சார தடையின்போதும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கான பாதுகாப்பு அமைப்புகளுடன் இது பொருத்தப்படும். உதாரணமாக மின் இழப்பு ஏற்பட்டால் லிஃப்ட் கார் மெதுவாக கீழ்தளத்திற்கு இறங்கி பயணிகளைப் பாதுகாப்பாக வெளியேற்ற கதவுகள் திறக்கப்படும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்தது:
பாரம்பரிய லிஃப்டுகளில் உபயோகிக்கப்படுவதுபோல இயந்திரக் கூறுகள் ஹைட்ராலிக் எண்ணெய்கள் அல்லது பிற லூப்ரிக்கெண்டுகள் இதில் தேவையில்லை. மிகக்குறைவான இயந்திரக் கூறுகளே இதற்குப் போதும். சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஏற்றது. பசுமை கட்டட நடைமுறைகளுடன் நன்றாக ஒத்துப் போகிறது.
அமைதியான செயல்பாடு:
ஏர்லிஃப்டுகளின் செயல்பாடு மிகவும் அமைதியாக இருக்கும். பாரம்பரிய லிஃப்டுகளில் பயன்படுத்தப்படும் சத்தமான மோட்டார்கள் அல்லது இயந்திர பாகங்கள் இதில் இல்லாததே இதற்கு காரணம். அமைதியாக இயங்குவதால் குடியிருப்பு சூழல்களுக்கு பொருத்தமாக சிறந்ததாக அமைகிறது.
பாரம்பரிய லிஃப்ட் நிறுவுவதற்கு அதிக இடம் தேவைப்படும். விலையும் அதிகம். ஆனால் இந்த ஏர்லிஃப்டுகள் விலை மலிவாக, வீடுகள் மற்றும் சிறிய வணிக இடங்களுக்கு பொருத்த ஏற்றவை.