
AirRing எனப்படும் புதிய சாதனத்தை பயன்படுத்தி 24 மணி நேரமும் சுத்தமான காற்றை சுவாசிக்கலாம். Biotlab என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த சாதனம், மக்களுக்கு பல வகையில் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பார்ப்பதற்கு ஏதோ சயின்ஸ் ஃபிக்சன் கதையில் பயன்படுத்தும் சாதனம் போல காட்சியளிக்கும் ஏர் ரிங், கழுத்தில் அணியக்கூடிய வகையில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு காற்றை சுத்திகரிக்கும் சாதனமாகும். HEPA, UV கதிர்களைப் பயன்படுத்தி காற்றிலிருக்கும் நச்சுக்களைப் நீக்குகிறது. கழுத்துக்குப் பின்பக்கமாக காற்றை சுத்திகரிக்கும் பகுதியும், கழுத்துக்கு முன் பக்கம் மார்பில் பொருந்தும் படியாக பேட்டரியும், கழுத்தின் பக்கவாட்டிலிருந்து கைகள் போல நீண்டு முகத்திற்கு முன்னாடி காற்றைக் கொண்டு வருவதற்கான பகுதியும் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த பகுதியை மேலும் கீழுமாக நம் வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்.
பின்னால் இருக்கும் யூனிட்டில் ப்லோயர் வழியாக காற்று உள்ளே இழுக்கப்பட்டு, முதலில் Prime Filter-ல் காற்று வடிகட்டப்படும். பின்னர் HEPA எனப்படும் மற்றொரு பில்டரில் காற்று வடிகட்டப்பட்டு, UV கதிர்கள் இருக்கும் பகுதிக்கு செல்லும். அங்கே காற்றில் இருக்கும் நுண்ணுயிரிகள், நச்சுப் பொருட்கள் போன்றவை முற்றிலுமாக அழிக்கப்பட்டு, முகத்திற்கு முன்னே கொண்டு செல்லும் குழாய்களில் பொருத்தப்பட்டிருக்கும் கார்பன் பில்டரில், மீண்டும் ஒருமுறை வடிகட்டப்படும். இப்படியாக முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட காற்றை 24 மணி நேரமும் நாம் சுவாசிக்கும்படி இந்த சாதனம் செயல்படும்.
இந்த சாதனத்தை மொத்தம் நான்கு வகையில் ஒருவர் பயன்படுத்த முடியும். (1) முகக் கவசம் எதுவும் அணியாமல் நேரடியாகவும், (2) சிறிய முகக் கவசம் அணிவது போலவும், (3) முகத்தை முழுமையாக மூடிக் கொள்ளும் கவசமும், இறுதியில் (4) காற்று எங்கேயும் வெளியேறாத படி, வாய் மற்றும் மூக்கிற்கு மட்டும் கொடுக்கப்பட்ட Sealed Mask உபயோகித்து பயன்படுத்தலாம். ஆனால் இதை அணிந்து கொண்டு கழுத்தை திருப்பும்போது, முகத்திற்கு ஏற்றவாறு இந்த சாதனத்தால் வளைந்து கொடுக்க முடியாது. முகத்திற்கு நேராக மட்டுமே இது நிலையாக இருக்கும்.
பார்ப்பதற்கு மாஸ்க் போல இருக்கும் இது உண்மையில் முகமூடி அல்ல. ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தால் அவர் சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும் என்றால் இந்த சாதனத்தை பயன்படுத்தலாமே தவிர, COVID காலத்தில் பயன்படுத்தப்பட்ட மாஸ்க் போன்று இதைப் பயன்படுத்த முடியாது. சுற்றி இருக்கும் காற்றை சுத்திகரித்து நேரடியாக முகத்தில் படச்செய்யும் சாதனம் தான் இது. மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் என இதை நினைக்க வேண்டாம்.
டெல்லி போன்ற காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்களிலோ அல்லது ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்களோ, சுத்தமான காற்றை சுவாசிக்க விரும்பினால் இந்த சாதனத்தை தாராளமாகப் பயன்படுத்தலாம்.