பொய் சொல்வதைக் கண்டுபிடிக்கும் AI கருவி

பொய் சொல்வதைக் கண்டுபிடிக்கும் AI கருவி

பொதுவாகவே பாட்டி இறந்து விட்டார்கள் எனக் கூறி விடுமுறை எடுக்காத ஆட்களே இங்கு யாரும் இருக்க மாட்டார்கள். ஏதோ ஒரு சமயத்தில் ஏதோ ஒரு பொய் சொல்லி ஒவ்வொருவரும் விடுமுறை எடுத்திருப்போம். ஆனால் இனி அதுபோல யாரும் செய்ய முடியாது. பொய் சொல்வதைக் கண்டுபிடிக்கும் AI கருவி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. 

ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றார் போல, ஏதோ ஒரு துறையானது பெரிய அளவில் உடனடி வளர்ச்சியை அடைந்துவிடும். கணினி, மொபைல், கார் என்று கடந்த காலத்தில் பல்வேறு தொழில்நுட்பங்களை இதற்கு உதாரணமாக நாம் கூறலாம். அதேபோல தான் இந்த 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சியாக செயற்கை நுண்ணறிவைச் சொல்லலாம். 

AI என்றாலே ChatGPT தான் என்ற அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்ட நிலையில், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியை ChatGPT-க்கு முன், ChatGPT-க்கு பின் என்னும் அளவுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை இது ஏற்படுத்தி விட்டது. இதைத் தொடர்ந்து பல AI கருவிகள் உலக சந்தையில் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. 

அலுவலகத்திலும் சரி, பள்ளி, கல்லூரிகளிலும் சரி நமக்கு வேறு ஏதாவது வேலை இருந்தாலும், அல்லது போர் அடிக்கிறது என்பது போல் தோன்றினாலும், உடம்பு சரியில்லை பாட்டி இறந்து விட்டார்கள் என பொய் கூறி விடுமுறை எடுப்பது இயல்பானது தான். ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய AI கருவி மூலமாக ஒருவர் பொய் சொல்வதை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். நாம் பேசுவதை வைத்தே நமக்கு சளி இருக்கிறதா இல்லையா, உடல் நிலை எப்படி இருக்கிறது என்பதெல்லாம் இந்த செயற்கை நுண்ணறிவு சாதனம் கண்டறிந்துவிடுகிறது. 

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ரெனிஷ் யுனிவர்சிட்டி ஆஃப் அப்ளைடு சயின்ஸ் மற்றும் சூரத்தில் உள்ள சர்தார் வல்லபாய் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி ஆய்வாளர்கள் இணைந்து இந்த AI கருவியை உருவாக்கியுள்ளனர். இது எப்படி வேலை செய்கிறது என்பதை கண்டறிய 630 நபர்களின் குரலை ஆய்வு செய்துள்ளனர். அதில் 111 நபர்களுக்கு நிஜமாகவே சளி இருந்துள்ளது. அவர்கள் பேசும் தொனியை வைத்தே அவர்களுக்கு சளி இருக்கிறதா இல்லையா என்பதை AI கருவி மிகத்துல்லியமாக கண்டுபிடித்துள்ளது. 

இதில் கலந்து கொண்டவர்களிடம் மேலும் சில கேள்விகளை கேட்டு அவர்களின் குரலில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை வைத்தே சொல்வது பொய்யா மெய்யா என்பதை கண்டறிந்துள்ளது இந்த AI. இந்த ஆய்வின் முடிவில் கிட்டத்தட்ட 70 சதவீதம் துல்லியத்தன்மையுடன் இந்த கருவி செயல்பட்டுள்ளது. வரும் காலங்களில் இதன் சதவீதத்தை மேலும் அதிகரிக்க சில மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

இதை பொய் சொல்வதைக் கண்டுபிடிப்பதற்கு மட்டுமல்லாமல், மருத்துவர்கள் இல்லாமலேயே ஜலதோஷம் போன்றவற்றை ஒருவர் பேசுவதை வைத்தே எளிமையாக அடையாளம் காணலாம். எதிர்காலங்களில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் அருகே செல்லாமலேயே, இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆரோக்கியத்தை கண்காணிக்க இது உதவும். 

ஏதோ உடம்பு சரியில்லை என்று பொய் சொல்லி லீவ் போட்டு நாங்க ஜாலியா இருக்குறதுக்கும் இப்படி என்டு கார்டு போட்டால் எப்படி? என நெட்டிசன்கள் இணையத்தில் புலம்பி வருகிறார்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com