
என்னுடைய நண்பர் ஒருவர் சிறுதொழில் ஒன்றைத் தொடங்கி நடத்துகிறார். அவருக்கு வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் பலர் உள்ளார்கள். அவர்களுக்குத் தன்னுடைய நிறுவனத்தைப்பற்றித் தெரியப்படுத்துவதற்கும், புதிய வெளிநாட்டு வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கும் அவர் ஓர் இணையத் தளத்தைத் தொடங்கி நடத்த விரும்புகிறார்.
பத்து ஆண்டுகளுக்குமுன்னால் என்னுடைய நண்பருக்கு இப்படி ஓர் ஆசை வந்திருந்தால், அவர் இணையத் தள வடிவமைப்பு நிறுவனம் ஒன்றைத் தேடிச் சென்றிருப்பார். அவர்கள் இவருடைய தேவைகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டு அதன்படி ஓர் இணையத் தளத்தை உருவாக்கித் தந்திருப்பார்கள். இவர் அதைப் பார்த்து வேண்டிய மாற்றங்களைச் சொல்லியிருப்பார். அதன்பிறகு, தளம் இணையத்தில் ஏற்றப்பட்டிருக்கும். இதற்கெல்லாம் சுமார் இரண்டு, மூன்று மாதங்கள் ஆகியிருக்கும்.
ஆனால் இப்போது, என்னுடைய நண்பர் ஒரு சனிக்கிழமை காலை தன்னுடைய இணையத் தளத்துக்கான வேலையைத் தொடங்கினார். அன்று மாலை அவருடைய தளம் இணையத்தில் ஏற்றப்பட்டுவிட்டது. அதாவது, சில மாதங்கள் வேலை சில மணிநேரங்களில் முடிந்துவிட்டது.
இத்தனைக்கும் என்னுடைய நண்பர் மென்பொருளாளர் இல்லை, அவருக்கு இணைய வடிவமைப்பு தெரியாது. சொல்லப்போனால், அவரிடம் ஒரு கணினிகூட இல்லை. ஆனாலும் அவர் தன்னுடைய இணையத் தளத்தைத் தானே உருவாக்கிவிட்டார். எப்படி?