தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில், அடிக்கடி புதிய ஸ்மார்ட் சாதனங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் உலக அளவில் பிரசித்தி பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் ஒன்று சந்தைக்கு புதுவரவாக வருகை தந்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை ஆராய்கிறது இந்தப் பதிவு.
இன்றைய இளைஞர்களின் டிஜிட்டல் பயன்பாட்டில் ஸ்மார்ட் வாட்ச்கள் குறிப்பிடத் தகுந்த இடத்தைப் பிடித்துள்ளன. தொலைபேசி அழைப்புகள், குறுந்தகவல்கள் மற்றும் முக்கிய நோட்டிபிகேசன்களை அறிந்து கொள்ள ஸ்மார் வாட்ச் உதவுகிறது. இதுதவிர்த்து உடல்நலன் சார்ந்த சில தகவல்களையும் இது வழங்குவதால், இதன் மீதான மோகம் அதிகரித்துள்ளது.
இன்று அனைவரது கையிலும் ஒரு ஸ்மார்ட்போன் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி. இது மென்மேலும் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதன் காரணத்தால், அவ்வப்போது புதுப்புது மாடல்களில் பல வசதிகளுடன் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின்றன. இதன் வரிசையில் தற்போது ஸ்மார்ட் வாட்ச்களும் பல மாடல்களில் வெளிவந்து வாடிக்கையாளர்களை கவர்கின்றன. இதில் பலரும் விரும்பும் ஒரு பிராண்ட் எனில் அது ஆப்பிள் தான். ஆப்பிள் ஐபோன் இருந்தாலே தனி கெத்து என்ற மனநிலையில் தான் இன்றைய இளைஞர்கள் இருக்கின்றனர்.
ஐபோனுக்கே இப்படி என்றால் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் வைத்திருந்தால் எப்படி இருக்கும்! இளசுகளின் மனநிலையை நன்றாக புரிந்து வைத்துள்ள ஆப்பிள் நிறுவனம், ஸ்மார்ட் வாட்ச்களை பல அம்சங்களுடன் அப்டேட் செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 10 சந்தைக்கு வந்துள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், நமது உடல் நலனை கண்காணிக்கும் சாதனமாக இது பயன்படுகிறது. அதாவது தூக்கமின்மை முதல் இதய நோய் வரையிலான பல நோய்களை கண்டுபிடிக்கும் வகையில் இந்த வாட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:
ஆப்பிள் நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட் வாட்ச்களை காட்டிலும், ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 10-இல் பெரிய ஓஎல்இடி டிஸ்பிளே இருக்கிறது.
ஒரு முறை சார்ஜ் செய்தால் 18 மணி நேரத்திற்கு நீடிக்கும்.
ஸ்மார்ட் வாட்ச் ஓஎஸ் 11 இயங்குதளத்தில் செயல்படும்.
இந்த ஸ்மார்ட் வாட்சில் ஆக்சிலோமீட்டர் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இது தூக்கமின்மையைக் கண்டறிய உதவும்.
கிராஷ் மற்றும் ஃபால் டிடெக்ஷன் போன்ற அம்சங்கள் இதில் இருப்பதால், பயனர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படும் சமயங்களில் தானியங்கு முறையில் இது தானாகவே செயல்படும்.
தீங்கிழைக்கும் சுற்றுப்புறச் சூழலைக் கண்டறிந்து, பயனர்களை அலெர்ட் செய்யும்.
சீரற்ற முறையில் ஒருவரது இதயம் துடித்தால், அதனைக் கண்டறியவும் இந்த வாட்ச் உதவுகிறது.
உடற்பயிற்சிகள் தொடர்பான சில ஆலோசனைகளையும் இது வழங்குகிறது.
விலை: பல கூடுதல் அம்சங்களைக் கொண்ட ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 10-ன் விலை ரூ.46,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை வருகின்ற செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் பயனர்கள் வாங்கிக் கொள்ளலாம்.