யாராவது புதிதாக எதையாவது கண்டுபிடித்துவிட்டால் மகிழ்ச்சியில் "யுரேகா யுரேகா" என்று கூறுவது வழக்கம் என்பதை நாம் அறிவோம். இந்த சொல் எப்படி யாரால் பயன்பாட்டிற்கு வந்தது என்பதைப் பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளுவோம்.
நெம்புகோல் தத்துவத்தை முதன் முதலில் கண்டுபிடித்து அதன் மகத்துவத்தை அறிவித்தவர் கிரேக்க நாட்டைச் சேர்ந்த ஆர்க்கிமிடிஸ். “நிற்பதற்கு ஓர் இடம் மற்றும் நீளமான ஒரு நெம்புகோல் இவை இரண்டையும் கொடுங்கள். இந்த பூமியையே அசைத்துக் காட்டுகிறேன்“ என்ற சொல்லி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர் ஆர்க்கிமிடிஸ்.
கி.மு.3 ஆம் நூற்றாண்டில் கிரேக்க நாட்டிலுள்ள சிராகுஸ் என்ற பகுதியை ஹைரோன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவர் ஒரு சமயம் அரண்மனைப் பொற்கொல்லன் ஒருவனிடம் தங்கத்தைக் கொடுத்து கிரீடம் ஒன்றைச் செய்யுமாறு கூறியிருந்தார். பொற்கொல்லனும் மன்னர் கொடுத்த தங்கத்தை வைத்து கிரீடத்தைச் செய்து, கொண்டு வந்து கொடுத்தான். மன்னரின் மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது. தான் கொடுத்த தங்கத்துடன் வெள்ளியைக் கலந்து கிரீடத்தைச் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. தன்னுடைய இந்த சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள மன்னர் ஆர்க்கிமிடிசின் உதவியை நாடினார். ஆர்க்கிமிடிசும் மன்னரின் சந்தேகத்தை எப்படித் தீர்ப்பது என்று யோசித்தவாறே இருந்தார்.
ஆர்க்கிமிடிஸ் ஒருநாள் நீர்நிரப்பப்பட்ட தொட்டி ஒன்றில் குளிக்க இறங்கினார். அப்போது அவர் உடலானது தண்ணீரில் மூழ்கும் போது தண்ணீரானது தொட்டியில் இருந்து வெளியேறியது. ஆர்க்கிமிடிஸ் தினமும் இப்படித்தான் குளித்துக் கொண்டிருந்தார். ஆனால் என்றும் இல்லாத வகையில் அன்று அவருக்கு ஒரு வித்தியாசமான சிந்தனை தோன்றியது. ஏன் என்ற கேள்வியும் பிறந்தது. தண்ணீரில் மூழ்கும் போது தண்ணீர் தொட்டியிலிருந்து தண்ணீர் வெளியேறியதில் ஏதோ அறிவியல் உண்மை இருப்பதாக ஆர்க்கிமிடிஸின் மனத்தில்பட்டது. உடனே தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தார். ஒரு பொருளானது தண்ணீரில் மூழ்கும் போது அந்த பொருளின் பரிமாண அளவிற்கு ஏற்ப நீரானது வெளியேற்றப்படுகிறது. இந்த உண்மையைக் கண்டுபிடித்ததும் ஆர்க்கிமிடிஸின் மனத்தில் அளவிலாத மகிழ்ச்சி ஏற்பட்டது. மன்னரின் சந்தேகத்திற்றான விடை கிடைத்துவிட்டது என்பதை அறிந்து கொண்டு உடனே அவர் “யுரேகா யுரேகா” என்று உரக்க கத்திக் கொண்டே குளியல் அறையிலிருந்து வெளியே ஓடி வந்தார். யுரேகா என்ற கிரேக்கச் சொல்லுக்கு கண்டுபிடித்துவிட்டேன் என்பது பொருள்.
தங்கத்துடன் வெள்ளி கலப்படம் செய்யப்பட்டிருந்தால் கிரீடத்தின் எடை சற்று கூடியிருக்கும் என்பதைப் புரிந்து கொண்டார். எனவே இந்த வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க கிரீடத்திற்கு சமமான எடை உடைய தங்கக்கட்டி ஒன்றையும் அதே அளவிற்கு வெள்ளிக்கட்டி ஒன்றையும் கொண்டு வருமாறு கூறினார்.
இரண்டையும் தனித்தனியே நீரில் அமிழ்த்தினார். கிரீடத்தில் கலப்படம் ஏதும் இல்லை என்றால் கிரீடத்தை தண்ணீரில் அமிழ்த்தியபோது வெளியேறிய நீரின் அளவும் தங்கக்கட்டியை தண்ணீரில் அமிழ்த்தியபோது வெளியேறிய நீரின் அளவும் சமமாக இருக்க வேண்டும். வெள்ளி கலக்கப்பட்டிருந்தால் கிரீடத்தினால் வெளியேற்றப்பட்ட தண்ணீரின் அளவு தங்கக்கட்டியால் வெளியேற்றப்பட்ட தண்ணீரின் அளவைவிட சற்று கூடியிருக்கும் என்று முடிவு செய்தார். இதை வைத்து சோதித்துப் பார்த்த போது இரண்டிற்கும் வேறுபாடு காணப்பட்டது. மன்னரிடம் ஆர்க்கிமிடிஸ் இதை ஆதாரத்தோடு எடுத்துக் கூறினார்.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஆர்க்கிமிடிஸ் பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். ஆர்க்கிமிடிஸ் கண்டுபிடித்த மற்றொரு அறிவியல் தத்துவம் நெம்புகோல் தத்துவமாகும். இதன் பின்னர் கோளவடிவியலில் தனது கவனத்தைச் செலுத்தி சில புதிய உண்மைகளை நிறுவியிருக்கிறார்.